5 அம்மாவின் அணுகுமுறை
5 அம்மாவின் அணுகுமுறை
சஞ்சனா மாயவனை பார்க்க, அவர் சங்கடத்துடன் புன்னகைத்தார்.
"அங்கிள், யார் அந்த பொண்ணு?" என்றாள் முகத்தை சுருக்கி.
"எனக்கும் தெரியல மா. தூயவன் அவளை மதி ரூம்ல விட்டுட்டு வரட்டும். நான் அவனை கேக்குறேன்"
"அவர் உங்ககிட்ட அவளை பத்தி எதுவும் சொல்லலயா?"
"இன்னும் இல்ல"
"ஓ..."
அவர்கள் தூயவனுக்காக காத்திருந்தார்கள்.
இதற்கிடையில்,
வெண்மதி மற்றும் பவித்ராவுடன் வெண்மதியின் அறைக்கு வந்தான் தூயவன். அலமாரிக்கு சென்ற வெண்மதி, தன் உடையை கொண்டு வந்து, பவித்ராவிடம் கொடுத்தாள்.
"நீங்க ரொம்ப டயர்டா இருக்கிங்க. போய் ஃபிரஷ் ஆயிட்டு வாங்க" என்றாள் வெண்மதி.
சரி என்று தலையசைத்தாள் பவித்ரா.
"எதாவது வேணும்னா தயங்காம என்னை கேளுங்க"
மறுபடியும் தலையசைத்தாள் பவித்ரா.
"ஃபீல் ஃபிரீ. நாங்க இப்போ வறோம்" என்று தூயவனை பார்த்தாள்.
"கதவை சாத்திக்கோ, பவித்ரா" என்றான் தூயவன்.
பவித்ரா சரி என்று தலையசைத்தாள். கதவை நோக்கி நடந்த அக்காவும் தம்பியும்,
"தேங்க் யூ..." என்று பலவினமாய் கூறிய பவித்ராவை நின்று பார்த்து, புன்னகைத்து விட்டு சென்றார்கள்.
கதவை சாத்தி தாழிட்டு விட்டு குளியலறைக்கு சென்றாள் பவித்ரா.
தரை தளத்தில்...
இங்கும் அங்கும் நடந்தபடி இருந்தார் மாயவன். அமைதியாய் சோபாவில் அமர்ந்துவிட்டார் குணமதி. என்ன விஷயம் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளாமல் அவர் ஒன்றும் பேச விரும்பவில்லை. தன் மகனிடம் இருந்து அவர் கற்றுக் கொண்ட பாடம், அவரை அப்படி எண்ண வைத்தது.
அவர்கள் தூயவனும் வெண்மதியும் வருவதை கண்டார்கள். சோபாவை விட்டு எழுந்து நின்றார் குணமதி.
"தூயா, பவித்ரா யாரு? அவளை உனக்கு எப்படி தெரியும்? நீ அவளை எங்க சந்திச்ச? எதுக்காக அவளை இங்க கூட்டிக்கிட்டு வந்திருக்க?" என்று கேள்விகளை அடிக்கினார் மாயவன்.
அதற்கு தூயவன் ஏதும் பதில் அளிக்கும் முன்,
"எதுக்காக இப்போ நீங்க இப்படி டென்ஷன் ஆகுறீங்க? பொறுமையா கேட்டா அவன் சொல்ல மாட்டானா? முதல்ல அமைதியா உட்காருங்க" என்று அவரை கண்டித்தார் குணமதி.
"இல்ல குணா, நான்..."
"நான் தான் சொல்றேன்ல? உக்காருங்க..." என்று அவரை அதட்டினார் குணமதி.
பெருமூச்சு விட்டு நாற்காலியில் அமர்ந்தார் மாயவன்.
குணமதி அவரை அடக்குவதை பார்த்த வெண்மதி புன்னகை புரிய, சஞ்சனா முகம் சுருக்கினாள். குணமதி தூயவன் முன் தன் குரலை உயர்த்தி அவள் பார்த்ததே இல்லை.
"டாட், அவளோட அப்பாவால தான் நான் இன்னைக்கு உயிரோட இருக்கேன்" என்றான் தூயவன் அமைதியே வடிவாய்.
"நீ என்ன சொல்ற?" என்றார் மாயவன்.
மற்ற மூவரும் கூட அதே நிலையில் தான் இருந்தார்கள்.
"ஆமாம், டாட்" என்று மதுரையில் நடந்தவற்றை அவர்களிடம் விளக்கி கூறினான் தூயவன்.
*உன் சாவு என் கையில தான்* என்ற சின்னசாமியின் பழி தீர்க்கும் வார்த்தைகளை மட்டும் அவர்களிடம் அவன் கூறவில்லை. அதை கூறி, அவர்களை பதற்றம் அடைய செய்ய அவன் விரும்பவில்லை.
"அவங்க அவ்வளவு இதயம் இல்லாதவங்களா? எப்படி ஒரு சின்ன பொண்ணை போய் ஒரு கிழவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க அவங்களுக்கு மனசு வந்தது?"
"ஆமாம், அவங்க இதயம் இல்லாதவங்களா தான் இருக்கணும்" என்றார் குணமதி.
"நீ பவித்ராவை இங்க கூட்டிக்கிட்டு வந்தது ரொம்ப நல்லதா போச்சு. அவளுக்கு தேவையான வசதியை நம்ம செஞ்சு கொடுக்கலாம்" என்றார் மாயவன்.
"ஆமாம் அங்கிள், சென்னைல நல்ல உமன்ஸ் ஹாஸ்டல் நிறைய இருக்கு. நம்ம அவளுக்கு ஒரு நல்ல உமன் ஹாஸ்டலை தேடி கண்டுபிடிக்கலாம்" என்றாள் சஞ்சனா, பாரி கூறியது போலவே. ஆனால் இருவர் கூறியதற்கும் இடையே மிகுந்த வித்தியாசம் இருந்தது.
சஞ்சனாவை பார்த்து முகம் சுருக்கினான் தூயவன். மாயவனோ சங்கடத்திற்கு ஆளானார். இந்த முறை, விஷயத்தை தன் கையில் எடுத்தார் குணமதி.
"பவித்ரா விஷயத்துல எந்த முடிவையும் எடுக்கிற உரிமை தூயாவுக்கு மட்டும் தான் இருக்கு. அவளுக்கு என்ன செய்யணும்னு அவனுக்கு தெரியும்" என்று நேரடியாக கூறி, இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று சஞ்சனாவிற்கு உணர்த்தினார் குணமதி.
"பவித்ரா நம்ம வீட்ல தான் இருக்கப் போறா. அது தான் என்னுடைய இறுதியான முடிவு. அதுல உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னு நினைக்கிறேன்...!" என்றான் தூயவன்.
எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல் தலையசைத்தார் மாயவன். அது சஞ்சனாவுக்கு ஏமாற்றத்தை தந்தது. எதற்காக இந்த மனிதன் அவர்கள் பேசும் அனைத்திற்கும் தலையாட்டி கொண்டிருக்கிறார்? ஏனோ அவளுக்கு பவித்ராவை பிடிக்கவில்லை, அவள் தன் அந்தஸ்துக்கு சமமாக இல்லை என்ற போதும்...!
"காரணம் என்னவா வேணா இருந்துட்டு போகட்டும். தெரிஞ்சோ, தெரியாமலோ, அவங்க அப்பா என்னை காப்பாத்த அவர் உயிரை கொடுத்திருக்காரு. பவித்ரா என்னுடைய பொறுப்பு." என்றான் தூயவன் உறுதியாக.
தூயவனின் உயிரைக் காக்க பவித்ராவின் தந்தை தன் உயிரை கொடுத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி இருக்கும் பொழுது, அவளை எப்படி ஒரு மகளிர் விடுதியில் சேர்க்க வேண்டும் என்று அவன் நினைப்பான்? அப்படி அவளை சேர்த்து விட்டால், அவனுடைய பொறுப்பு முடிந்து விடுமா? அவளுடைய எதிர்காலம் இவனது பொறுப்பு அல்லவா? அவளுடைய தந்தையின் இழப்பை ஈடு செய்ய வேண்டிய கடமை அவனுக்கு இருக்கிறது, அது அவனால் முடியாது என்ற போதிலும், அவன் அதை செய்து தான் தீர வேண்டும். அப்படி இருக்கும் பொழுது, தன் பொறுப்பை ஈடு செய்ய அவளை ஒரு விடுதியில் சேர்த்து விட்டால் மட்டும் போதுமா? அவள் இழந்தது அவளது தந்தையை ஆயிற்றே...!
"அவன் சொல்றது சரி. பவித்ரா நம்ம பொறுப்பு" என்றார் குணமதி.
"வாங்க, கா போகலாம்" என்றான் தூயவன் வெண்மதியிடம்.
அவர்கள் மீண்டும் வெண்மதியின் அறையை நோக்கி நடந்தார்கள்.
"அங்கிள், எதுக்காக தூயவன் இப்படி நினைக்கிறாரு? உண்மையை சொல்லப்போனா..." என்று சஞ்சனா ஏதோ சொல்ல முயல,
"அவன் சொன்னதை நீ சரியா கேட்கலன்னு நினைக்கிறேன். அவன் காரணம் என்னவா வேணும்னாலும் இருக்கட்டும் அப்படின்னு சொன்னான். அப்படின்னா, அதைப்பத்தி மேற்கொண்டு பேச எதுவும் இல்லன்னு அர்த்தம்" என்றார் குணமதி
"அவ தன்னோட ஒப்பீனியனை தானே சொல்றா?" என்றார் மாயவன்.
அவரைப் பார்த்து முறைத்தார் குணமதி. பெருமூச்சு விட்டு தன் அறையை நோக்கி நடந்தார் மாயவன். குணமதி சமையலறைக்குச் செல்ல, தூயவனையும் பவித்ராவையும் பற்றி யோசித்தபடி நின்றாள் சஞ்சனா.
சஞ்சனாவின் தந்தை மாதேஷும், தூயவனின் தந்தை மாயவனும் நண்பர்கள் மட்டுமல்ல, வியாபாரக் கூட்டாளிகளும் கூட! மாதேஷ் மிகச்சிறந்த வியாபார நுணுக்கங்களை பெற்றிருந்தார். அவர்களது வியாபாரத்தை அவர் மூளையை கொண்டு பல தடவை காத்திருக்கிறார். எல்லோரும் தன் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். மாயவனையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் தான் அவர் எப்பொழுதும் வைத்திருந்தார். மாயவன் அது பற்றி எப்போதும் கவலைப்பட்டதே இல்லை. மாயவனை தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த மாதேஷ், தனது ஆளுமையை எப்பொழுதும் தூயவனிடம் காட்ட வேண்டும் என்று நினைத்ததில்லை. அவனிடமிருந்து அவர் தள்ளியே இருந்தார். தூயவன் மாதேஷை தூக்கி சாப்பிட்டு விடும் அளவிற்கு திறமை மிக்கவனாய் இருந்தது தான் அதற்கு காரணம்! அவன் அவர்களது வியாபாரத்தில் அடி எடுத்து வைத்த பிறகு, மாதேஷின் அடக்கி ஆளும் திறன் குறித்து, வெளிப்படையாகவே தனது வெறுப்பையும் அதிருப்தியையும் தூயவன் காட்டினான்.
இப்பொழுது அவரது மகளான சஞ்சனா, தூயவனை மணந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாள். அதற்காகத்தான் அவள் இப்பொழுது அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறாள். அது மாயவனுக்கும் தெரியும். குணமதியும் கூட அதை ஓரளவு ஊகித்து தான் வைத்திருந்தார். இந்த விஷயத்தில் தன் மகனின் விருப்பத்தை தெரிந்து கொள்ளும் வரை, அதைப்பற்றி பேசுவதில்லை என்று அவர் முடிவெடுத்திருந்தார்.
..........
தூயவனும் வெண்மதியும் மீண்டும் வெண்மதியின் அறைக்கு வந்தார்கள். அந்த அறையின் கதவு இன்னும் சாத்தப்பட்டே இருந்தது. வெண்மதி கதவை தட்ட நினைத்தபோது, அவள் கையைப் பிடித்து அவளை தடுத்தான் தூயவன். அவனை கேள்விக்குறியோடு பார்த்தாள் வெண்மதி.
"அக்கா, பவித்ராவோட நிலைமை என்னன்னு இப்போ உங்களுக்கு தெளிவா புரிஞ்சிருக்கும்"
அவள் ஆம் என்று தலையசைத்தாள்.
"அவ தனியா இருக்கா. அவளுக்கு யாருமே இல்ல..."
அவன் பேச்சை தடுத்து,
"அவளுக்கு தான் நம்ம இருக்கோமே" என்றாள் வெண்மதி.
அதைக் கேட்டு மகிழ்ச்சி புன்னகை பூத்தான் தூயவன்.
"தேங்க்ஸ் கா. நான் உங்ககிட்ட இதை தான் எதிர்பார்த்தேன்" என்றான்.
"அவளை நான் கவனிச்சிக்குறேன்" என்றாள் வெண்மதி.
"இந்த சோகத்திலிருந்து அவ வெளியில வரணும். அதுக்காக தான் அவ உங்க கூட தங்கணும்னு நான் நினைச்சேன். அவ தனியா இருந்தா அது நடக்கவே நடக்காது. திரும்பத் திரும்ப நடந்ததையே தான் நினைச்சுக்கிட்டு இருப்பா"
"நீ சொல்றது எனக்கு புரியுது"
"அதே நேரம், நீங்களும் தனியா இருக்க வேண்டாம்னு நான் நினைக்கிறேன்" என்றான் பொருளோடு.
"நான் நல்லா தான் இருக்கேன்" என்றாள் வெண்மதி.
"அக்கா, நான் உங்க தம்பி. அதை மறந்துடாதீங்க. உங்களால என்கிட்ட பொய் சொல்ல முடியாது" என்றான் தூயவன்.
தலை குனிந்து கொண்டாள் வெண்மதி.
"அதனால தான் நீங்களும் என் கூட ஆஃபீசுக்கு வாங்கன்னு சொன்னேன். ஆனா, நீங்க தான் அதை அவாய்ட் பண்ணிக்கிட்டே இருக்கீங்க"
"நான் உங்கூட ஆஃபீசுக்கு வந்திருந்தா, பவித்ராவை யார் பார்த்துக்கறது?" என்றாள் முகத்தை சீரியஸாய் வைத்துக் கொண்டு.
"ஓஹோ... பவித்ராவை இன்னைக்கு பார்த்துக்கத் தான், நீங்க ஒரு வருஷமா ஆஃபீசுக்கு வராம இருந்தீங்களா?" என்றான் கிண்டலாக.
அவனுக்கு பதில் கூறாமல், சிரித்தபடி கதவை தட்டினாள் வெண்மதி. கதவை திறந்தாள் பவித்ரா. அவள் முகம் கூறியது, அவள் மீண்டும் அழுதிருக்கிறாள் என்று.
வெண்மதி அவளது தோளை தொட, தன் கரங்களால் முகத்தை மூடிக்கொண்டு தாங்க முடியாமல் மீண்டும் அழுதாள் பவித்ரா. அவளைப் பார்க்கவே பாவமாய் இருந்தது தூயவனுக்கு.
"பவித்ரா ப்ளீஸ் அழாதீங்க. உங்களுக்கு நாங்க இருக்கோம்" என்று அவளை சமாதானப்படுத்த முயன்றாள் வெண்மதி, தூயவனை பார்த்தபடி.
*அவளை கட்டி அணைத்துக்கொள்* என்பது போல் அவன் சைகை செய்ய, அவளை அணைத்துக் கொண்டாள் வெண்மதி. அவள் ஏதோ கூற முயல, *அவளை ஒன்றும் கூறாதே* என்று தன் ஆள்காட்டி விரலை உதட்டின் மீது வைத்து அமைதியாய் இருக்கும்படி அவளுக்கு செய்கை செய்தான் தூயவன். இரண்டு நிமிடம் கழித்து தன் அழுகையை நிறுத்தினாள் பவித்ரா, தூயவன் எதிர்பார்த்தது போலவே...!
வெண்மதியிடம் இருந்து ஓரடி பின்னால் நகர்ந்து, தன் முகத்தை துடைத்துக் கொண்டு,
"என்னை மன்னிச்சிடுங்க" என்றாள் பவித்ரா.
"திரும்பி வரவே மாட்டாங்கன்னு தெரிஞ்ச பிறகு, அழுது எந்த பிரயோஜனமும் இல்ல பவித்ரா" என்றாள் வெண்மதி உணர்ச்சிவசப்பட்டு.
அவள் தோளை தொட்டான் தூயவன். அவனை பார்த்து வலி நிறைந்த புன்னகை உதிர்த்தாள் வெண்மதி.
அப்பொழுது தட்டில் சாப்பாடு போட்டு எடுத்துக்கொண்டு வந்தார் குணமதி.
"என்ன, மாம் இது?" என்றாள் வெண்மதி.
"எனக்கு நிச்சயமா தெரியும், பவித்ரா எதுவும் சாப்பிட்டு இருக்க மாட்டா" என்ற குணமதி, பவித்ராவின் கையை பிடித்து கட்டிலின் மீது அமர வைத்தார்.
"எனக்கு... எனக்கு எதுவும் வேண்டாம் அம்மா..." என்றாள் பவித்ரா, மெல்லிய குரலில், கீழே குனிந்தவாறு.
அவள் தன்னை அம்மா என்று கூப்பிட்டதை கேட்ட குணமதி நெகிழ்ந்தார். அக்காவும் தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"நீ இப்போ இருக்கிற நிலைமை என்னன்னு எனக்கு நல்லாவே புரியுது. ஆனா நீ ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கணும். அழுகையால எதையும் மாத்திட முடியாது. அது உன்னோட உடம்பை தான் வீக்காக்கும். அதுக்கு மேல ஒன்னும் நடக்காது"
தன் உதடு கடித்து அழுதாள் பவித்ரா.
"உங்க அப்பாவோட இழப்பு ஈடு செய்ய முடியாதது தான். உங்க அப்பா தன்னுடைய வாழ்க்கையை எதுக்காக தியாகம் பண்ணாரு?"
அவரை அமைதியான பார்வையோடு ஏறிட்டாள் பவித்ரா. தூயவனும் வெண்மதியும் கூட அவர் என்ன கூற போகிறார் என்பதை கவனித்தார்கள்.
"நீ(என்பதை அழுத்தி) வாழணும்னு தான். நீ வாழ தான் அவர் தன் உயிரையும் கொடுக்க துணிஞ்சார். தூயவனால உன்னை காப்பாத்த முடியும்னு அவர் தெரிஞ்சுக்கிட்ட போது, உன்னுடைய பொறுப்பை அவன்கிட்ட கொடுத்துட்டு, தன் உயிரை முழு மனசோட விட்டுட்டாரு. நீ தூயவனோட சந்தோஷமா பாதுகாப்பா இருப்பேன்னு அவர் நம்புனாரு. எந்த ஒரு அப்பாவும் தன் மகளோட கையை பிடிச்சி அவ்வளவு சுலபமா ஒருத்தன்கிட்ட கொடுத்துட மாட்டார். ஆனா உங்க அப்பா கொடுத்தாரு. அவர் வச்சிருந்த நம்பிக்கையை நீ காப்பாத்தணும் இல்லையா? அவரோட எதிர்பார்ப்பு பூர்த்தியாக வேண்டாமா?"
"அப்பா..." என்று அவள் ஏதோ கூற முயன்றாள்.
"உங்க அப்பா உன்னை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டாரு. அவர் உன் கூட தான் இருப்பார். நீ நல்லா சாப்பிடணும், சந்தோஷமா இருக்கணும், நிம்மதியா தூங்கணும்னு எதிர்பார்ப்போட உன்னை பார்த்துக்கிட்டு இருப்பார். அவரோட ஆத்மா சாந்தி அடையிறது உன்கிட்ட தான்டா இருக்கு. உன்னை தவிர அந்த நிம்மதியை அவருக்கு வேற யாராலும் கொடுக்க முடியாது"
பவித்ரா மட்டும் அல்ல தூயவனும் வெண்மதியும் கூட உணர்ச்சிவசப்பட்டார்கள்.
"இதை சாப்பிடு. நீ என்னை அம்மான்னு கூப்பிட்ட. என்னை உன் அம்மாவா நெனச்சுக்கோ. சாப்பிடு" என்று அவள் கண்ணீரை துடைத்து விட்டார்.
பவித்ராவிடமிருந்து ஒரு விம்மல் எழுந்தது. அது அவளுடைய தந்தைக்காக இல்லை என்பது குணமதிக்கு தெரியும். அவளுக்கு உணவை ஊட்டி விட துவங்கினார். அதை பவித்திராமல் மறுக்க முடியவில்லை. அழுதபடி சாப்பிட்டாள். தூயவனுக்கு தன் அம்மாவின் அணுகுமுறை மகிழ்ச்சியையும், திருப்தியையும் தந்தது, அவரிடம் அவன் பேசுவதில்லை என்ற போதிலும்...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top