49 பிடி வாரண்ட்
49 பிடி வாரண்ட்
வெறும் கையால் சூடான பாத்திரத்தை தொட்டுவிட்ட சஞ்சனா,
"அய்ய்ய்யோ" என்றாள்.
அவள் கையைப் பிடித்து இழுத்து, குழாயை திறந்து, ஓடும் தண்ணீரில் வைத்து, அதில் உப்பு தடவி விட்ட குணமதி,
"உனக்கு கொப்பளம் வராது" என்றார்.
"இவ்வளவு தானா?" என்றாள் சஞ்சனா.
"ஆமாம், அவ்வளவு தான். வேற என்ன?"
"அப்படின்னா நீங்க என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக மாட்டீங்களா?"
"என்னது ஹாஸ்பிடலா? இந்த சின்ன காயத்துக்காகவா?"
"சின்ன காயமா? எனக்கு எரியுது…"
"எல்லாம் சரியாயிடும். என் கையை பாரு" என்று தன் கையை அவளிடம் காட்டினார். அதில் இரண்டு மூன்று தழும்புகள் இருந்தன.
"எல்லாத்தையும் கொண்டு போய் டேபிள்ல வைக்கலாம்" என்று கூறிவிட்டு உணவு மேஜையை நோக்கி சென்றார் குணமதி.
மனதிற்குள் வெந்தபடி அவரை பின்தொடர்ந்தாள் சஞ்சனா.
அனைவரையும் சாப்பிட வரச் சொல்லி அழைத்தார் குணமதி. சந்தோஷும் வெண்மதியும் ஒன்றாய் வந்தார்கள்.
தூயவனோடு வந்த பவித்ராவை ஆத்திரத்தோடு ஏறிட்ட சஞ்சனாவும் அவர்களுடன் அமர்ந்து கொண்டாள். அதற்கு முக்கியத்துவம் வழங்காமல் பவித்ராவின் கையை பிடித்து தன் அருகில் அமர்த்திக் கொண்டான் தூயவன்.
"மாம், எல்லா வேலையும் நீங்க தனியாவா செஞ்சீங்க?" என்றாள் வெண்மதி.
சஞ்சனாவுக்கு ஆர்வமானது. இப்பொழுது குணமதி அனைவர் முன்னிலையிலும் அவளை பாராட்டப் போகிறார். ஆனால், அவளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வண்ணம், அனைவரிடமும் உண்மையை கூறினார் குணமதி.
"அத பத்தி மட்டும் கேட்காதே, மதி. நம்ம குடும்பத்துக்கு குழந்தைசாமியும் அவங்க தம்பிகளும் எவ்வளவு முக்கியமானவங்கன்னு நான் இன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன்" என்றார் சலிப்புடன்.
"ஏன் ஆன்ட்டி, சஞ்சனா உங்களுக்கு ஹெல்ப் பண்ணலயா?" என்றான் சந்தோஷ். புன்னகையோடு அவனை ஏறிட்டாள் சஞ்சனா.
"அட போங்க மாப்பிள்ள, அவளுக்கு பாத்திரம் கழுவ கூட தெரியல. இவ கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் என்ன தான் செய்யப் போறாளோ... ஒன்னு மட்டும் நிச்சயம், அவங்க மாமியார் வீட்ல ஒவ்வொரு நாளும் உங்களையும் உங்க அப்பாவையும் திட்டி தீக்க போறாங்க" என்றார் கவலையாக.
அவர்கள் பேச்சுக்கு எந்த மதிப்பும் அளிக்காமல், பவித்ராவின் காதில் ஏதோ ரகசியமாய் கூறினான் தூயவன். அதை கேட்ட பவித்ரா, விழி விரித்து வேண்டாம் என்பது போல் தலையசைத்தாள். தூயவன் தன் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டான்.
அவர்களை கவனித்த குணமதி,
"என்ன விஷயம் பவித்ரா? உனக்கும் உன் புருஷனுக்கும் நடுவுல ஏதோ இன்ட்ரஸ்டிங்கான பேச்சு போய்கிட்டு இருக்கு போல இருக்கே" என்றார்.
பவித்ரா இல்லை என்று அவசரமாய் தலையசைக்க,
"ஆமாம், மாம். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான விஷயம் தான். எனக்கு பவித்ரா தான் சொன்னா" என்றான் தூயவன்.
அவனை பதற்றத்தோடு ஏறிட்டாள் பவித்ரா.
"அது என்ன?" என்றான் சந்தோஷ்.
"அது ஒரு கதை" என்றான் தூயவன்.
"கதையா? என்ன கதை?"
"அது மாமியார், மருமகள் கதை" என்றான் தூயவன் சீரியஸாக.
"ஏங்க, தயவுசெஞ்சி சும்மா இருங்க" என்றாள் பவித்ரா மெல்லிய குரலில்.
"அவங்க என்ன சொல்றாங்க?" என்றாள் வெண்மதி.
"நான் உங்ககிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்றா"
"ஏன் பவித்ரா?" என்றாள் வெண்மதி கவலையாக.
"அது எல்லார் முன்னாடியும் சொல்ற கதை இல்லக்கா" என்றான் வேண்டுமென்றே.
"அது மாமியார், மருமக கதைன்னு சொன்னிங்களே... அப்புறம் என்ன பிரச்சனை?" என்றான் சந்தோஷ்.
"ஆமாம், ஆனாலும் அது சென்சார் பண்ற கதை தான்"
"சென்சார் பண்ற கதையா?" என்றாள் வெண்மதி வியப்போடு.
"ஆமாம்" என்று தூயவன் கூற,
"அப்படின்னா நம்ம அதைப்பத்தி சீக்ரெட்டா பேசிக்கலாம்" என்று கண்ணடித்தான் சந்தோஷ்.
"நீ தூயாவோட சென்சார் பண்ணக்கூடிய விஷயத்தை எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டியா?" என்றார் குணமதி கிண்டலாய்.
"நல்ல இம்ப்ரூவ்மெண்ட்" என்று சிரித்தாள் வெண்மதி.
தன் உள் உதட்டை சங்கடமாய் கடித்தாள் பவித்ரா.
"அக்கா, சென்சார் பண்ற விஷயத்தை எல்லாம் அவ புருஷன் கிட்ட பேசாம வேற யார்கிட்ட பேசுவா? நான் சொல்றது சரி தானே பவி?" என்று அவளை நோக்கி சாய்ந்த வண்ணம் கேட்டான் தூயவன்.
"அதை விடுங்க. நீங்களும் எங்க கூட சேர்ந்து சாப்பிடுங்க மா" என்று பேச்சை மாற்றினாள் பவித்ரா.
"ஆமாம் மாம். நீங்களும் எங்க கூட உட்காருங்க. நீங்க எங்களுக்காக வேலை செய்றத பாத்தா உங்க மருமகளோட இதயம் ரொம்ப வலிக்குதாம். ஆனா அவ சொன்ன கதைல இருந்த மாமியார் உங்களை மாதிரி இல்ல. அவங்க ரொம்ப மோசமான பொம்பளை" என்று மீண்டும் அந்த கதைக்கே வந்து சேர்ந்தான் தூயவன்.
எரிச்சலோடு கண்களை மூடினாள் பவித்ரா.
"அப்படியா?" என்றார் குணமதி.
"ஆமாம் மாம். அவங்க என்ன செஞ்சாங்கன்னு சொன்னா நம்ப மாட்டீங்க" என்று அவன் பவித்ராவை பார்த்து,
"ஒரு பொம்பளைக்கு தன் பிள்ளை சந்தோஷமா இருக்கிறது பிடிக்கல அப்படிங்கறத என்னால கூட நம்ப முடியல"
"அய்யய்யோ, அவங்க அப்படிப்பட்ட பொம்பளையா?" என்றார் குணமதி.
"ஆமாம் மாம். அவங்க மருமககிட்ட எதுக்காக சண்டை போட்டாங்கன்னு தெரியுமா?"
"எதுக்காக சண்டை போட்டாங்க?"
"தன் பிள்ளையை மடக்கினதுக்காக"
"மடக்கினதுக்காகவா? யார் கூட சண்டை போட்டாங்க?"
"தன் மருமகள் கூட தான்"
"ஏங்க, தயவு செஞ்சி நிறுத்துங்க" என்றாள் பவித்ரா கெஞ்சலாக.
"ஏன் பவித்ரா? பாரு எல்லாரும் எவ்வளவு இன்ட்ரெஸ்ட்டா நம்ம சொல்றதை கேட்டுக்கிட்டு இருக்காங்க" என்று தன் கண்களை அவர்கள் மீது ஓட விட்டான்.
முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு நேராய் அமர்ந்தாள் பவித்ரா.
"நீ என் நீ அப்செட் ஆயிட்டியா?" என்ற அவனை பார்த்து முறைத்தாள் பவித்ரா.
"சாரி, எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. என் பொண்டாட்டிக்கு என் மேல கோபம் வந்துடுச்சு" என்றான் தூயவன்.
"ஏங்க, தயவு செஞ்சி நிறுத்துங்க" என்று மீண்டும் கெஞ்சினாள் பவித்ரா.
"எதுக்காக அவளை தொந்தரவு பண்ற?" என்றார் குணமதி.
"மாம், ஒரு இன்ட்ரஸ்டிங்கான கதையை உங்களுக்கு சொல்லலாம்னு நினைச்சேன்."
"நிச்சயமாஅந்த கதையில ஏதோ இருக்கு. அதனால தான் தூயா பவித்ராவை இப்படி டீஸ் பண்றான்" என்றாள் வெண்மதி.
ஆம் என்று தலையசைத்தான் தூயவன்.
"அக்கா அவர் அந்த கதையை சொன்னா, உங்களுக்கு கூட அண்ணா முன்னாடி அதை கேட்க சங்கடமா இருக்கும்" என்றாள் பவித்ரா.
அது சந்தோஷின் ஆர்வத்தை தூண்டியது.
"அப்படியா? அப்ப நம்ம அதை பத்தி நிச்சயம் அப்பறமா பேசலாம்"
"ஓ எஸ்... நான் உங்களுக்கு சொல்றேன். நீங்க அக்காவுக்கு சொல்லுங்க"
"சொல்லிட்டா போச்சு" என்றான் சந்தோஷ்.
"அப்படின்னா எனக்கு யார் அந்த கதையை சொல்லுவா?" என்றார் குணமதி.
"உங்களுக்கு உங்க மருமக சொல்லுவா" என்றான்.
அவர்களது இந்த கொஞ்சலான பேச்சை எல்லாம் பொறுக்க முடியாத சஞ்சனா தன் கையை கழுவிக்கொண்டு அந்த இடத்தை விட்டு சென்றாள்.
"மாம், என்னை மடக்குனதுக்காக நீங்களும் பவித்ரா கிட்ட சண்டை போடுவீங்களா?" என்றான் தூயவன்.
"என்னது? பவித்ரா உன்னை மறக்குறதா? தூயா, நீ தான் பவித்ராவை மடக்கினேன்னு மறந்துடாத" என்று கூறிவிட்டு சிரித்தாள் வெண்மதி.
அவள் கூறுவது சரி என்பது போல் தலையசைத்த பவித்ரா,
"நான் ஒன்னும் உங்களை மடக்க மாட்டேன்" என்றாள்.
"பவி, நீ சொன்ன கதைல கூட அந்த மருமக வேணும்னு தன்னோட புருஷனை மடக்கல. ஆனா பொன்னம்மா அத்தை, அப்படித்தானே நினைச்சுக்கிட்டாங்க?"
அதற்கு மேல் பொறுக்க முடியாத பவித்ரா, அவளாகவே அந்த கதையை ஒரே மூச்சில் கூறி முடித்தாள். அவளை தொந்தரவு செய்யாமல் அனைவரும் தங்கள் சிரிப்பை அடக்கியபடி அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
தூயவனை பார்த்த பவித்ரா,
"இப்ப உங்களுக்கு சந்தோஷமா?" என்றாள்.
அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு கொல் என்று சிரித்தார்கள்.
"செம இன்ட்ரஸ்டிங்கான கதை" என்று சிரித்தான் சந்தோஷ்.
"அது சரி, இந்த கதையை நீங்க எதுக்காக சொன்னீங்க?" என்றாள் வெண்மதி.
"அவ மாமியார், அவங்க பொன்னம்மா அத்தை மாதிரி இல்லன்னு அவளுக்கு ரொம்ப சந்தோஷம்" என்றான் தூயவன்.
பவித்ராவை பார்த்து சிநேகமாய் புன்னகைத்தார் குணமதி.
"ரொம்ப சந்தோஷப்படாத, பவி. எல்லா மாமியாரும் ஆரம்பத்தில் நல்லவங்களா தான் இருப்பாங்க. நான் சொல்றது சரி தானே மாம்?" என்றான் தூயவன்.
தன் கையில் இருந்த கரண்டியை உயர்த்தி, உதைப்பேன் என்பது போல் கையசைத்தார் குணமதி. அதை கண்டு சிரித்தான் தூயவன்.
அப்பொழுது அவனது கைபேசி ஒலித்தது. அவர்களிடமிருந்து சற்று தூரமாய் வந்து, அந்த அழைப்பை ஏற்றான் தூயவன். அந்த அழைப்பு அசிஸ்டன்ட் கமிஷனர் நவ்ஷாத்திடமிருந்து வந்தது.
"சொல்லுங்க சார்"
"நாங்க சின்னசாமி இருந்த இடத்தை ரவுண்டு பண்ணிட்டோம். ஆனா, அவன் அங்க இல்ல. அவனோட ஃபோன் மட்டும் தான் கிடைச்சிது. அவன் எங்க சார் போனான்னு தெரியல"
"நீங்க அங்க போக போறீங்கன்னு ஒருவேளை அவனுக்கு முன்னாடியே தெரிந்சிருக்குமோ?" என்றான் தூயவன்.
"வாய்ப்பே இல்ல. நான் கமிஷனர் கிட்ட பர்மிஷன் வாங்கிக்கிட்டு, நேரா அங்க தான் போனேன். என் கூட வந்தவங்களுக்கு கூட நாங்க எங்க போறோம்னு தெரியாது"
"அவன் ஃபோன்ல உங்களுக்கு ஏதாவது விஷயம் கிடைச்சுதா சார்?"
"எங்க டீம் அதை செக் பண்ணிக்கிட்டு இருக்காங்க. நீங்க ஜாக்கிரதையா இருங்க. உங்க வைஃபை வீட்டை விட்டு வெளியில அனுப்பாதீங்க"
"நான் பார்த்துக்கிறேன் சார்"
"நாங்க சீக்கிரமே சின்னசாமியை பிடிச்சிடுவோம், அவனோட போன் மூலமா. அதுவரைக்கும் நீங்க ஜாக்கிரதையா இருங்க"
"சரிங்க சார்" என்று அழைப்பை துண்டித்து விட்டு பின்னால் திரும்பிய அவன், தனக்கு பின்னால் சந்தோஷ் நிற்பதை கண்டான்.
"ஏதாவது பிரச்சனையா?" என்றான்.
"ஆமாம். சின்னசாமி சென்னையில தான் இருக்கான். அவன் ஏதோ பிளான் பண்றான்னு தோணுது"
"போலீஸ் என்ன சொன்னாங்க?"
"நம்மளை ஜாக்கிரதையா இருக்க சொன்னாங்க, முக்கியமா பவித்ராவை..." என்று வெண்மதியுடனும் குணமதியுடனும் எதையோ வெட்கத்தோடு பேசிக் கொண்டிருந்த பவித்ராவை ஏறிட்டான். அவர்கள் அவளை கிண்டல் செய்து கொண்டிருந்தது அவனுக்கு தெரிந்தது.
"நான் நாளைக்கு நைட் இந்தியாவை விட்டு கிளம்பணும். நான் வேணும்னா..." என்று அவன் மேலே எதுவும் கூறுவதற்கு முன்,
"நீங்க அதைப்பத்தி கவலைப்படாதீங்க. நீங்க கிளம்புங்க. இந்த ஃபிரெஞ்சு டீல் நமக்கு ரொம்ப முக்கியம். நம்ம அதை குழப்பிக்க வேண்டாம்" என்றான்.
"சின்னசாமி ரொம்ப ஆபத்தானவன். அவனை குறைச்சி எடை போட்டுடாதீங்க. அவன் பவித்ராவை கடத்திக்கிட்டு போக தான் சென்னைக்கு வந்தான். அவனுக்கு ரொம்ப தைரியம் இருக்குன்னு எனக்கு தோணுது"
"நீங்க சொல்றது உண்மை தான். நானே அதை நிறைய தடவை பார்த்திருக்கேன். இதைப்பத்தி இப்போதைக்கு யார்கிட்டயும் சொல்லாதீங்க" என்றான் தூயவன்.
சரி என்று தலையசைத்தான் சந்தோஷ்.அவர்கள் மீண்டும் உணவு மேஜைக்கு வந்து மற்றவர்களுடன் அமர்ந்து கொண்டார்கள்.
தூயவனின் மனம் நிம்மதி இழந்தது. போலீசின் பிடியிலிருந்து சின்னசாமி நழுவி விட்டான் என்ற உண்மை அவன் மனதை தொல்லை படுத்தியது. இப்பொழுது சின்னசாமியிடம் கைபேசி கூட இல்லை. அதனால், அவன் எங்கு இருக்கிறான் என்றும் கண்டுபிடிக்க முடியாது. ஏன் அவன் இன்னும் சென்னையில் இருக்கிறான் என்றும் புரியவில்லை.
மாலை
அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்தார்கள் யாரோ அழைப்பு மணியை அழுத்த, கதவை திறந்தான் தூயவன். அசிஸ்டன்ட் கமிஷனர் நவ்ஷாத் அங்கு நின்றிருந்தார்.
"என்ன சார் இங்க வந்திருக்கீங்க?"
"நாங்க சின்னசாமியோட ஃபோனை செக் பண்ணோம். அதுல எங்களுக்கு சில இன்ஃபர்மேஷன் கிடைச்சது. அவனுக்கு சென்னையில யாரோ ஹெல்ப் பண்றாங்க. அவங்ககிட்ட இருந்து தான் அவனுக்கு வேண்டிய இன்பர்மேஷன் போயிருக்கணும்னு நாங்க சந்தேகப்படுறோம்"
"யாரு சார் அது?"
"நாங்க அது யாருன்னு டிரேஸ் பண்ணோம். அந்த நபர் இப்போ உங்க வீட்ல தான் இருக்காங்க"
"என்ன சார் சொல்றீங்க?" என்று அதிர்ந்தான் தூயவன்.
"ஆமாம் சார். அவங்க பேர் சஞ்சனா. அவங்க தான் நீங்க போன கோவிலோட லொகேஷனை சின்னசாமிக்கு அனுப்புனது. அவங்களை அரெஸ்ட் பண்ண தான் நாங்க இங்க வந்திருக்கோம். இதோ அரஸ்ட் வாரண்ட்" என்றார்.
சந்தோஷ் மட்டுமல்ல, அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top