46 பதிலடி
46 பதிலடி
பழச்சாறுடன் தங்கள் அறைக்கு வந்த பவித்ரா, அதை தூயவனிடம் வழங்கினாள். அதை அவளிடம் இருந்து பெற்ற அதே நேரம், அவள் கையைப் பிடித்து இழுத்து தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டான். அவளது தோள்களை சுற்றி வளைத்த படி,
"தேங்க்யூ ஸ்வீட் ஹார்ட்" என்றான்.
அந்த பழச்சாறை ஒரு வாய் பருகிவிட்டு, அதை அவளிடம் நீட்ட, அவள் வேண்டாம் என்று தலையசைத்தாள்.
"ஏன்? நான் குடிச்சதை நீ குடிக்க மாட்டியா?"
"நீங்க அர்த்தமில்லாமல் பேசுறீங்க"
"இப்ப நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்?"
"நம்ம எல்லாத்தையும் ஷேர் பண்ணியாச்சு. ஆனா நம்ம என்னமோ புது காதலர்கள் மாதிரி பேசுறீங்க"
"அப்புறம் ஏன் இதை சாப்பிட மாட்டேங்கிற?"
"எனக்கு வேண்டாம். நீங்க சாப்பிடுங்க"
அதை அருகில் இருந்த மேஜையின் மீது வைத்து விட்டான்.
"ஏன் அதை குடிக்காம வச்சுட்டீங்க?"
"எனக்கு வேண்டாம்"
"ஏன்?"
"நீ அதை குடிக்கலையே"
"என்னங்க..."
"நீ என்னோட பெட்டர் ஹாஃப். அப்படின்னா எல்லாத்துலயும் பாதி பாதி"
அந்த டம்ளரை எடுத்து அதில் இரண்டு வாய் பருகி விட்டு அவனிடம் கொடுத்தாள்.
"தட்ஸ் மை கேர்ள்"
அவளிடம் இருந்து அதை பெற்று பருகினான்.
"பவி, எல்லாத்துக்கும் தயங்குறதை நிறுத்து. இது உன் குடும்பம். நான் உன் புருஷன். எதுக்காகவும் தயங்க வேண்டிய அவசியம் இல்ல. புரிஞ்சுதா?"
அவள் புன்னகை புரிந்தாள். அப்பொழுது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. கதவை சென்று திறந்தாள் பவித்ரா. அங்கு சஞ்சனா நின்று கொண்டிருப்பதை பார்த்து கதவிலிருந்து கைகளை எடுக்காமல், அவளுக்கு வழி கொடுக்காமல் அப்படியே நின்றாள்.
"நீ என்னை தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க" என்றான் சஞ்சனா முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு.
அதற்கு பவித்ரா பதிலும் அளிக்கவில்லை, தன் கைகளை கதவின் மீது இருந்து அகற்றவும் இல்லை. ஒன்றும் புரியாத தூயவன் முகத்தை சுருக்கியபடி எழுந்து நின்றான்.
"உங்களுக்கு புதுசா கல்யாணம் ஆகி இருக்கு. அதனால உனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். அந்த சந்தோஷம் என்னால கெட்டுட வேண்டாம்னு தான், நான் இங்கு தங்கி இருக்கிறதால இன்செக்யூரா ஃபீல் பண்ணாதேன்னு சொன்னேன். ஆனா நீ என்னை புரிஞ்சுக்காம என்கிட்ட ரொம்ப ரூடா பேசிட்ட"
வியப்பில் புருவம் உயர்த்தினான் தூயவன். பவித்ரா ரூடாக பேசினாளா?
"இப்போ என்ன சொல்ல வரீங்க?" என்றாள் பவித்ரா உறுதியான முகபாவத்தோடு. அது தூயவனை மேலும் வியப்படையச் செய்தது. இவர்களுக்கு இடையில் என்ன ஆனது? எதற்காக அதைப்பற்றி பவித்ரா அவனிடம் ஒன்றுமே கூறவில்லை? அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
"பவித்ரா உன் ரூமுக்கு வந்து நிக்கிறவங்க உன் எதிரியாவே இருந்தாலும் உள்ள வர சொல்லி கூப்பிடுறது தான் முறை" என்றாள் சஞ்சனா.
"என் எதிரி, என் முகத்துக்கு நேரா நின்னு சண்டை போட தைரியம் இருக்கிறவளா இருந்தா, நல்லவ முகமூடியை போட்டு ஏமாத்துறவளா இல்லாம இருந்தா, நான் நிச்சயமா உள்ள கூப்பிடுவேன்..."
"பவித்ரா நான் உன்கிட்ட ஒரு விஷயம் தான் சொல்ல நினைக்கிறேன். இப்ப நம்ம உறவுக்காரங்களா ஆயிட்டோம். நமக்குள்ள சமூகமான நிலைமை இருக்கிறது ரொம்ப முக்கியம்"
"முதல்ல உங்க அண்ணன் கிட்ட சமூகமான உறவை ஏற்படுத்திக்க முயற்சி பண்ணுங்க. அவரே உங்களை ஏத்துக்க தயாரா இல்லாதப்போ நான் ஏன் உங்களை பத்தி கவலைப்படணும்?"
"இது நல்ல மேனர்ஸ் இல்ல"
"உங்கள பாக்க கூட விரும்பாத ஒருத்தரை உங்க உறவை ஏத்துக்க சொல்லி ஃபோர்ஸ் பண்றது மட்டும் நல்ல மேனர்சா?"
பவித்ராவின் தொடர்ச்சியான, தடுமாற்றம் இல்லாத அதிரடியான பதில்களை கேட்டு சிலையென மாறியிருந்த தூயவனை ஏறிட்டாள் சஞ்சனா.
அப்பொழுது அங்கு வந்த சந்தோஷ்,
"சஞ்சனா நீ இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" என்றான் கோபமாய்.
"ஒன்னும் இல்ல..."
"வாயை மூடு. இங்க வந்து உடனே உன் வேலையை ஆரம்பிச்சுட்டியா?"
"அண்ணா, நான் பவித்ராகிட்ட மன்னிப்பு தான் கேட்க வந்தேன்"
தன் இரு கரங்களையும் குவித்து,
"நீ வாயை மூடிக்கிட்டு இருந்தாலே போதும். நீ என் கூட இருக்கத்தானே இங்க வந்த? அதை விட்டுட்டு எதுக்கு வேண்டாத வேலை எல்லாம் செஞ்சு கிட்டு இருக்க?"
அவள் கையை பற்றி தன்னுடன் தரதரவென இழுத்துச் சென்றான்.
அவளை இழுத்துச் செல்வதை மாயவனும் குணமதியும் பார்த்தார்கள். விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ள அவர்களை பின்தொடர்ந்தார் குணமதி. ஆனால் மாயவன் செல்லவில்லை. ஏனென்றால் சஞ்சனா என்ன செய்வாள் என்று அவருக்கு தெரியும்.
அதே நேரம்...
கதவை சாத்தி தாழிட்டு விட்டு திரும்பிய பவித்ரா, தன்னையே மலைப்போடு பார்த்துக் கொண்டிருந்த தூயவனை பார்த்து புன்னகைத்தாள்.
"ஏய், உனக்கு இப்படியெல்லாம் கூட பேச தெரியுமா?" என்று அவன் கேட்க, தன் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டாள் பவித்ரா.
"நான் உன்னை ரொம்ப அப்பாவி பொண்ணு நெனச்சேனே..."
பவித்ரா அவனிடம் எதுவும் கூறுவதற்கு முன், மீண்டும் அவர்களது அறையின் கதவு தட்டப்பட்டது. இப்பொழுது யார் கதவை தட்டுவது என்பது போல் பவித்ராவை ஏறிட்ட தூயவன், ஓடிச் சென்று கதவை திறந்தான். இந்த முறை அங்கு வந்தவர் குணமதி.
"என்ன ஆச்சு, மாம்?"
"பவித்ரா, இதெல்லாம் உண்மையா?" என்றார் குணமதி.
"என்ன, மாம்?" என்றான் தூயவன்
"நீ சஞ்சனாவை இன்சல்ட் பண்ணியா?"
"மாம்" என்று தூயவன் அவருக்கு பதில் கூற நினைத்தபோது,
"தூயா, தயவு செஞ்சி நீ இதுல தலையிடாம இரு. என்னை அவ கிட்ட பேச விடு"
"அம்மா, அவங்க என்னை இன்செக்யூடா ஃபீல் பண்ண வைக்க முயற்சி பண்ணாங்க. நான் அதுக்கு அவங்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கல. நான் அவ்வளவு தான் செஞ்சேன்"
"அவ்வளவு தானா?"
"அம்மா, முன்னாடி நடந்த பிரச்சனையின் போது நான் எந்த விஷயத்துலயும் தலையிடாம இருந்தேன். ஏன்னா, அப்போ நான் இந்த குடும்பத்துக்கு மூனாவது மனுஷி. ஆனா இனிமே அப்படி என்னால அமைதியா இருக்க முடியாது"
திகைப்புடன் நின்றிருந்த தூயவனை அதே திகைப்புடன் ஏறிட்டார் குணமதி.
"உனக்கு அவ்வளவு தைரியம் இருக்கா?"
"இது தைரியம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லம்மா. என் உரிமை சம்பந்தப்பட்ட விஷயம்"
தொப்பென்று கட்டிலில் அமர்ந்தார் குணமதி. அவர் அருகில் பதற்றத்துடன் அமர்ந்தாள் பவித்ரா.
"என்ன ஆச்சு மா?"
"எனக்கு இப்போ எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுமா??"
"ஏன் மா?"
"சஞ்சனா இங்க வந்தப்போ நானும் மதியும் ரொம்ப கவலைப்பட்டோம். ஏன்னா அவ நிச்சயம் உன்னை ஏதாவது டார்ச்சர் பண்ணுவான்னு நினைச்சோம். நல்ல வேலை நீ அவளுக்கு நல்லா திருப்பி கொடுத்துட்ட"
"உங்களுக்கு என் மேல எந்த வருத்தமும் இல்லையே?"
"எனக்கு என்ன வருத்தம் இருக்கப் போகுது? உண்மையை சொல்லப் போனா, எனக்கு இது தான் வேணும். இப்படித்தான் தைரியமா தன் பிரச்சனைகளை ஃபேஸ் பண்ணணும்"
"மாம், அவ உரிமையை பத்தி பேசுறா. ஜாக்கிரதையா இருங்க. அவ உங்ககிட்ட கூட அவ உரிமைக்காக சண்டை போட்டாலும் போடுவா" என்று சிரித்தான் தூயவன்.
"அப்படின்னா நீ தான் அதிக ஜாக்கிரதையா இருக்கணும். ஏன்னா உரிமைன்னு வரும் போது, முதலிடத்தில் வர்றவன் நீ தான். ஏதாவது ஏடாகூடமாக பண்ணி வச்ச, அவ என்னை மாதிரி பொறுத்துப் போக மாட்டா. ஞாபகத்துல வச்சுக்கோ"
"மாம், நான் ஒன்னும் உங்க புருஷன் மாதிரி கிடையாது. அதை நீங்க ஞாபகத்துல வச்சுக்கோங்க" என்றான்.
"அவரை மாதிரி இருந்தா நானே உன்னை கொன்னுடுவேண்டா" என்றார்.
"நல்ல காலம், நான் தப்பிச்சுக்கிட்டேன்" என்று சிரித்தான் தூயவன்.
"நீ தப்பிக்கல. நல்லா வசமா மாட்டிகிட்ட" என்றார் பவித்ராவை பார்த்தபடி.
"அப்படியா சொல்றீங்க?"
"ஆமா" என்றார் குணமதி.
"அது சரி, பவித்ரா சஞ்சனா கிட்ட பேசின விஷயம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?"
"தேவையில்லாத விஷயத்துல மூக்க நுழைச்சதுக்காக சந்தோஷ் அவளை திட்டிகிட்டு இருக்காரு"
"ஓ...அவ எதுக்கு இங்க வந்திருக்கா?"
"பவித்ராவை சீண்டிப் பாக்கவும், உங்களுக்குள்ள பிரச்சனையை ஏற்படுத்தவும் தான்"
"பவித்ரா என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?"
"இப்போ இருக்கிற மாதிரி தைரியமா இருந்தா போதும்"
"பவி, அம்மா என்ன சொன்னாங்கன்னு கேட்டல்ல?"
பவித்ரா புன்னகையோடு தலையசைத்தாள்.
"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றபடி அங்கிருந்து சென்றார் குணமதி.
அவர் செல்லும் வரை காத்திருந்த தூயவன், கண்களை சுருக்கி,
"நீ அவ்வளவு தைரியசாலியா?" என்றான் அவளை நோக்கி சென்ற படி.
"இல்லையா?" என்றபடி பின்னால் நகர்ந்தாள் பவித்ரா.
அவள் கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தான் தூயவன். அவனைப் பிடித்து தள்ளிவிட்டு வெளியே ஓடினாள் பவித்ரா. எதையோ யோசித்த தூயவன், அவளை துரத்திக் கொண்டு வெளியே வந்தான். அங்கு மாயவனை பார்த்த பவித்ரா, சட்டென்று நின்று, மெல்ல நடந்து சென்றாள். ஆனால் அப்படி சட்டென்று தூயவனால் நிற்க முடியவில்லை. ஏனென்றால் அவனது வேகம், பவித்ராவை விட அதிகமாக இருந்தது. அதே நேரம், அவன் மாயவன் அங்கிருந்ததை பார்க்கவும் இல்லை.
பவித்ராவை நெருங்கிய அவன், பின்னால் இருந்து அவள் இடையை சுற்றி வளைத்து, அப்படியே தூக்கிக் கொண்டு தன் அறையை நோக்கி நடந்தான்.
"என்னங்க, அப்பா பாக்குறாரு" என்றாள் மெல்லிய குரலில்.
சில நொடி திகைத்த தூயவன், தன்னை சமாளித்துக் கொண்டு, பின்னால் திரும்பி அவரைப் பார்த்து விட்டு,
"அதுக்கு என்ன இப்போ?" என்று மேலும் நடந்தான்.
"நீங்க இப்படி என்னை தூக்கிக்கிட்டு போறதை அவர் பார்த்தா என்ன நினைப்பாரு?"
"இப்படிப்பட்ட இனிமையான விஷயங்களை எல்லாம் செய்யாம விட்டோமேன்னு வருத்தப்படுவாரு"
தங்கள் அறைக்குள் வந்து, காலால் கதவை உதைத்து அதை மூடினான். அவன் தன் அறைக்கு சென்று சேரும் வரை அவனையே பார்த்துக் கொண்டு நின்றார் மாயவன்.
அங்கு வந்த சஞ்சனா,
"உங்க புள்ள தன் பொண்டாட்டியோட சந்தோஷமா இருக்கிறதை பார்த்து சந்தோஷமா இருக்கிங்க போல..." என்றாள்.
பதில் கூறாமல் அவளை பார்த்துக் கொண்டு நின்றார் மாயவன்.
"நீங்க ஒரு உதவாக்கரை. என் திட்டம் உங்களால தான் ஃபிளாப் ஆச்சு. தூயவனும் அவங்க கூட கோவிலுக்கு போறான்னு என்கிட்ட நீங்க சொல்லி இருந்தா, நான் சின்னசாமியை கோவிலுக்கு அனுப்பி இருக்கவே மாட்டேன். பவித்ராவை சென்னையை விட்டு அனுப்ப எப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிது... உங்களால தான் எல்லாமே வீணா போச்சு"
"ஆனாலும் தூயவனை கல்யாணம் பண்ணிக்க உனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தேன். நீ ஏன் அதை ஏத்துக்கல? உன் காதல் உண்மையானதா இருந்தா, எதுக்காக நீ அவனை அவமானப்படுத்தின?"
"நீங்க சொல்றதுக்கு என்ன அர்த்தம்? படுத்த படுக்கையா கிடக்கிற ஒருத்தனை நான் கல்யாணம் பண்ணிக்கணுமா?"
"அவன் படுத்த படுக்கையா இருக்கல"
"அங்க தான் அவன் ஜெயிச்சுட்டான். தான் ஊனமானதா நடிச்சு என்னை முட்டாள் ஆக்கிட்டான்"
"அவனுக்கு உன்னை பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு... அவன் என்னை மாதிரி இல்ல. அது சரி எதுக்காக இப்ப இங்க வந்திருக்க?"
"அதை சீக்கிரமே நீங்க தெரிஞ்சுக்கவீங்க" என்று அங்கிருந்து சென்றாள்.
தன் கைபேசியை எடுத்து மாதேஷுக்கு ஃபோன் செய்தார். அந்த அழைப்பை ஏற்ற மாதேஷ்,
"இப்ப தான் உனக்கு என் ஞாபகம் வந்துதா?" என்றார்.
"எங்க வீட்டுக்கு வா"
"உன் வீட்டுக்கா? எதுக்கு? ஏதாவது சீரியசான விஷயமா?"
"ஆமாம். நான் உன்கிட்ட பேசணும்"
"சரி நான் வரேன்"
"இப்பவே வா"
"சரி" என்று அழைப்பை துண்டித்தார்.
மாயவன் வரவேற்பறையில் இங்கும் அங்கும் உலவி கொண்டிருப்பதை கண்ட குணமதி அவர் யாருக்காகவோ காத்திருப்பதை புரிந்து கொண்டார். சமையலறைக்குச் சென்ற அவர், தன் காதுகளை கூர்மைப்படுத்திக் கொண்டு தன் பணியை தொடர்ந்தார்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு அழைப்பு மணியின் ஓசை கேட்டது. சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்த அவர், மாயவன் கதவை திறப்பதை பார்த்தார். மாதேஷ் உள்ளே நுழைவதை பார்த்த அவரது கண்கள் நெருப்பை கக்கின. எவ்வளவு தைரியம் இவர்களுக்கு மீண்டும் மாயவன் தன் முட்டாள் தனத்தை ஆரம்பித்து விட்டாரா? தங்களைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்? இதற்காகத்தான் அவர்கள் இந்த வீட்டில் நுழைய அவருக்கு அனுமதி அளித்தார்க ளா? எப்பொழுதும் அவருக்கு புத்தி என்பதே ஏற்படாதா? எதற்காக மீண்டும் இந்த மானம் கெட்டவனை அவர் இங்கு அழைத்தார்?
"எதுக்காக என்னை இங்க வர சொன்ன? நீ என்கிட்ட என்ன பேசணும்?" என்றார் மாதேஷ்.
குணமதி வரவேற்பறைக்கு செல்ல நினைத்தபோது, மாயவன் கூறியதை கேட்டு மலைத்து போனார்.
"உன் பொண்ணை கூட்டிகிட்டு இங்கிருந்து போ"
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top