41 நாடகம்
41 நாடகம்
யாரும் எதிர்பார்க்காத வண்ணம், சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து நின்ற தூயவன், ஸ்டைலாக அந்த நாற்காலியை உதைத்து பின்னால் தள்ளி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தான்.
குணமதியும் வெண்மதியும் வாயை பிளந்து கொண்டு நிற்க, அந்த மண்டபத்தில் இருந்த மக்கள் அனைவரும் நம்பிக்கையின்றி அவனைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். மாயவனும் மாதேஷும் நடப்பது என்ன என்று தெரியாமல் அதிர்ச்சியின் உச்சத்தில் நின்றிருந்தார்கள். அடியோடு ஆட்டம் கண்ட சஞ்சனா, தன்னை அறியாமல் தான் அமர்ந்திருந்த நாற்காலியை விட்டு எழுந்து நின்றாள்.
பவித்ரா தன் சுய நிலையிலேயே இல்லை. ஏதோ மந்திரித்து விட்டவளை போல் தூயவனை பார்த்துக்கொண்டு நின்றாள். அவன் சக்கர நாற்காலியை விட்டு எழுந்து நின்று விட்டான் என்பதையும், அதை உதைத்து தள்ளினான் என்பதையும் அவளால் நம்ப முடியவில்லை.
அங்கிருந்த அனைவரையும் விட அதிகமாய் அதிர்ச்சி அடைந்தது சின்னசாமி தான். உடல் செயலிழந்து விட்ட தூயவனால் ஏதும் செய்ய முடியாது என்று அவன் எண்ணியிருந்தான். அவன் எழுந்து நின்றதை பார்த்த அவன் உஷாரானான். பவித்ராவை காப்பாற்ற மதுரைக்கு வந்திருந்த போது, அவன் அடித்த ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு குத்தும் அவன் நினைவுக்கு வந்தது. மேலும் அந்த திருமண மண்டபம் போலீஸாரால் பாதுகாக்கப்பட்டு கொண்டிருந்ததையும் அவன் கவனித்தான். அதனால் பவித்ராவை கடத்திக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு அமைதியாய் அமர்ந்திருந்தான். யாரும் அவனை அடையாளம் காணும் முன் அங்கிருந்து சென்று விடவும் தயாரானான்.
பவித்ராவை பார்த்து புன்னகை புரிந்தான் தூயவன்.
"பவித்ரா, உன்னால அக்னியை நடந்து வலம் வர முடியாதுன்னு சொன்னா, நான் வேணும்னா உன்னை தூக்கிக்கிட்டு வலம் வரட்டுமா?" என்றான் புன்னகையை கைவிடாத தூயவன்.
பவித்ரா மட்டுமல்ல, அங்கிருந்த அனைவருமே ஆச்சரியத்தின் எல்லைக்கு சென்றார்கள். சற்று முன்பு வரை, சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஒருவன், தன் மனைவியை தூக்கிக்கொண்டு வலம் வருகிறேன் என்று கூறினான் என்றால், அவர்களுக்கு ஏன் ஆச்சரியமாய் இருக்காது? இன்னும் கூட அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வராதவளாய் நின்றாள் பவித்ரா. தூயவன் அவளை நோக்கி நகர்ந்து, அவளை தூக்குவதற்கு முயன்ற போது தான், அவள் தன் சுய உணர்வு பெற்று பின்னால் நகர்ந்தாள்.
"உன்னால நடக்க முடியுமா?" என்றான் முகத்தை சீரியஸாய் வைத்துக் கொண்டு.
மருட்ச்சியோடு தன் சுற்றுப்புறத்தை ஏறிட்ட பவித்ரா, தலை குனிந்து கொண்டாள். அவள் கைவிரல்களை தன் கைவிரல்களோடு பிணைத்துக் கொண்டு அக்னியை வலம் வர துவங்கினான் தூயவன்.
அவன் மீது வேர்விட்ட பார்வையோடு அவனை பின்தொடர்ந்தாள் பவித்ரா. அப்பொழுது, அவன் அவளிடம் ஏமாற்றுவது குறித்து கேட்ட கேள்வி அவளுக்கு நினைவுக்கு வந்தது. இதைப் பற்றித்தான் தூயவன் அவளிடம் பேசினானா? தன்னுடைய இயலாமையை குறித்து அவன் தன்னை ஏமாற்றிக் கொண்டிருப்பதைப் பற்றித்தான் அவன் பேசினானா? அவன் தன்னை ஏமாற்றியதற்காக அவன் மீது கோபப்படுவதா? அல்லது, அவன் உடல் நலம் நன்றாக இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைவதா?
குணமதியும் மாயவனும் தங்கள் அதிர்ச்சியில் இருந்து வெளிவர முடியாமல் நின்றார்கள். அங்கிருந்த அனைவரிலும் அதிர்ச்சி அடையாத ஒரே ஒருவன் சந்தோஷ் மட்டும் தான். அவன் முகத்தில் தவழ்ந்த புன்னகையை கவனித்தள் வெண்மதி. அது அவளை மேலும் அதிர்ச்சி அடையச் செய்தது. அவளைப் பார்த்த சந்தோஷ், அவள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று புரிந்து கொண்டு, மென்மையான புன்னகையை உதிர்த்தான்.
"நான் உன்னை தூக்கிக்கிட்டு தான் அக்கினியை வலம் வரணுமன்னு நீ கேட்க மாட்டேன்னு நினைக்கிறேன்" என்றான் கிண்டலாய், தூயவன் கூறியதை சற்று மாற்றி கூறி.
இரண்டு தம்பதியினரும் அக்கினியை வலம் வந்து பெற்றோரிடம் ஆசி பெற்றார்கள்.
"இதெல்லாம் என்ன தூயா?" என்றார் குணமதி.
"நம்ம அதைப்பத்தி அப்புறம் பேசலாம், மாம். இப்போ நம்ம விருந்தாளிங்களை உபசரிக்க பாருங்க"
"விருந்தாளியா?" என்று முகம் சுருக்கினார் குணமதி.
"ஆமாம்" என்ற தூயவன், சந்தோஷை பார்க்க, அவன் தலையசைத்து, மாதேஷையும் சஞ்சனாவையும் மேடைக்கு வரச் சொல்லி அழைத்தான்.
உண்மையில் அது ஒரு சாக்கு. சஞ்சனாவை கடுப்பேற்ற வேண்டும் என்று எண்ணினான் தூயவன். அதனால் தான் அவளை மேடைக்கு வரச் சொல்லி அழைக்க செய்தான்.
"டாட், நீங்களும் சஞ்சனாவும் ஸ்டேஜ்க்கு வாங்க" என்றான் சந்தோஷ்.
அனைவரது கண்களும் அவர்களை நோக்கி திரும்பியது. அதனால், மேடைக்கு செல்வதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போனது. போலியான புன்னகையுடன் அவர்கள் மேடைக்கு சென்றார்கள்.
அங்கிருந்து சென்றுவிடலாம் என்று நினைத்த சின்னசாமி, ஒரு குறிப்பிட்ட நபரை மேடையில் பார்த்து அப்படியே நின்றான்... சஞ்சனா. தன் கைபேசியை எடுத்து, அதில் அவன் சேமித்து வைத்திருந்த அவளது புகைப்படத்தை தேடினான். பவித்ரா கோவிலுக்கு வர போவதை தனக்கு அறிவித்த அதே பெண் தான் அவள் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டான். தனக்கு அருகில் நின்றிருந்த ஒருவனை கூப்பிட்டு,
"ஸ்டேஜ்ல நிக்குதே, அந்த பொண்ணு யாரு?" என்றான்.
"யாரை கேக்குறீங்க?"
"அதோ, அந்த எல்லோ கலர் டிரஸ் போட்டிருக்கே, அந்த பொண்ணு தான்"
"அவ மாப்பிள்ளையோட தங்கச்சி"
"மாப்பிள்ளையோட தங்கச்சியா?"
"ஆமாம்"
அதை கேட்ட சின்னசாமிக்கு கோபம் எல்லையை கடந்தது.
அப்படி என்றால், தூயவனின் குடும்பத்தை சேர்ந்த அந்தப் பெண், தன்னை பிடித்துக் கொடுப்பதற்காக வேண்டுமென்றே என்னை சென்னைக்கு வரவழைத்தாளா? இதுவும் தூயவனின் திட்டமாக தான் இருக்க வேண்டும். பவித்ராவை பாதுகாக்க, அவன் தான் இந்த பெண்ணை பயன்படுத்தி தன்னைக்கு வரவழைத்து இருக்க வேண்டும். இதற்கெல்லாம் அவன் பதில் சொல்லியே தீர வேண்டும். உள்ளுக்குள் கொதித்த படி அங்கிருந்து சென்றான் சின்னசாமி.
ஆத்திரமும் பொறாமையும் கலந்த ஒரு பார்வையை, சஞ்சனா தன் மீது வீசிக்கொண்டிருப்பதை கவனிக்கவே செய்தாள் பவித்ரா. ஆனால் தூயவன் அதற்கு எந்த முக்கியத்துவமும் வழங்கவில்லை... தனது ஊனத்தை குறை கூறிய அந்த பெண்ணை அவன் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
"மாம், எனக்கு இந்த கல்யாண மண்டபத்தை சுத்தி ஓடணும் போல தோணுது... பத்து நாளா ஒரே இடத்துல உட்கார்ந்து இருந்து உடம்பெல்லாம் வலிக்குது" என்றான் தன் கையை முறுக்கியபடி.
"அப்படி செய்யணும்னு தோணுச்சுன்னா, தாராளமா செய்ங்க, மச்சான்" என்றான் சந்தோஷ்.
"நிச்சயமா செய்வேன். ஆனா, நான் என் பொண்டாட்டியை விட்டுட்டு ஓடி போறேன்னு பாக்குறவங்க தப்பா நினைச்சிடுவாங்களே... எந்த முட்டாளும் அப்படி நினைக்கக் கூடாது. என் பொண்டாட்டியை கல்யாணம் பண்ணிக்க நான் எவ்வளவு பாடுபட்டேன்னு எனக்கு தானே தெரியும்..." என்று பவித்ராவின் தோள்களை சுற்றி வளைத்து, அவளை பக்கவாட்டில் இறுக்கமாய் அணைத்துக் கொண்டான், பவித்ராவின் விழிகளை பெரிதாக்கி.
"ஓடணும்னு தோணுச்சுன்னா, தனியா ஏன் ஓடுறீங்க, மச்சான்? பவித்ராவோட கையை உங்க கையோட கோர்த்துக்கிட்டு ஓட வேண்டியது தானே?" என்றான் சந்தோஷ்.
"நீ என்ன சொல்ற பவித்ரா? ரெண்டு பேரும் ஓடலாமா?" என்றான் தூயவன்.
அவனை நிமிர்ந்து பார்க்காமல், தலை குனிந்தபடியே நின்றிருந்தாள் பவித்ரா. சஞ்சனா மென்று விழுங்குவதை பார்த்து விஷம புன்னகை வீசினான் தூயவன்.
"நாங்க கிளம்பறோம்" என்றார் மாதேஷ், எரிச்சலை காட்டிக் கொள்ளாமல்.
சரி என்று தலையசைத்தான் சந்தோஷ். அது அவருக்கு ஏமாற்றத்தை தந்தது. இன்னும் சற்று நேரம் தங்களை இருக்கச் சொல்லி சந்தோஷ் கேட்பான் என்று எதிர்பார்த்தார் அவர். ஆனால் அப்படி நடக்கவில்லை. அங்கிருந்து சென்ற அவரை, பின்தொடர்ந்து சென்றாள் சஞ்சனா.
வெற்றி புன்னகை சிந்தினான் தூயவன்.
திருமணத்திற்கு வந்த விருந்தாளிகள் ஒவ்வொருவராக கிளம்ப துவங்கினார்கள். தூயவனிடம் வந்து குணமதி, அவனை பார்த்துக்கொண்டு நின்றார். அது தூயவனை புன்னகைக்க செய்தது.
"இப்போ உங்களுக்கு என்ன தெரியணும், மாம்?"
"இதெல்லாம் என்ன தூயா?"
"சின்ன நாடகம்"
"ஆனா, ஏன்?"
"நம்ம வாழ்க்கையை காம்ப்ளிகேட் பண்ணிக்கிட்டு இருந்த சில விஷயங்களை சிம்பிலிஃபை பண்ண நினைச்சேன்"
"நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியல"
"தப்பான எண்ணத்தை மனசுல சுமந்துகிட்டு இருந்த சில பேரோட எண்ணத்தை மாத்தி அமைக்க நினைச்சேன்"
"எதை மாத்த நினைச்ச?"
"நீங்க எவ்வளவு ஸ்ட்ராங்கானவங்க, உங்களால தைரியமான முடிவை எடுக்க முடியும், உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்கர ஒரே காரணத்துக்காக நீங்க யாரையும் பொறுத்துப் போக வேண்டிய அவசியம் இல்ல... அப்படிங்கறதை புரிய வைக்க நினைச்சேன்" என்றான் மாயவனை பார்த்தவாறு, அவர் குற்ற உணர்ச்சியோடு தலை தாழ்ந்தார்.
"அதே நேரம், நான் சந்தோஷை டெஸ்ட் பண்ண நினைச்சேன். அவர் அக்கா மேல வச்சிருக்கிற அன்பு உண்மையானது தானா இல்லையான்னு. அதனால தான் என்னோட நாடகத்தைப் பத்தி அவர் கிட்ட மட்டும் சொன்னேன். ஒரு வேலை, அவர் அதைப்பத்தி அவங்க அப்பாகிட்டையும் தங்கச்சி கிட்டையும் சொல்லாம இருக்காறான்னு தெரிஞ்சுக்க நினைச்சேன். ஆனா அவர் உண்மையிலேயே என் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் தான். ஏன்னா, அவர் என்னோட நாடகத்தைப் பத்தி யார்கிட்டயும் சொல்லல. எனக்கு கொடுத்த வார்த்தையை அவர் காப்பாத்தினார்"
மென்மையாய் சிரித்தான் சந்தோஷ்.
"அப்படின்னா இதைப் பத்தி உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?" என்றாள் வெண்மதி.
அவனது புன்னகை விரிவடைந்தது.
"அதை பத்தி என்கிட்ட கூட சொல்லணும்னு உங்களுக்கு தோணலயா?" என்றாள்.
"தூயவன் இதைப் பத்தி என்கிட்ட மட்டும் ஏன் சொன்னார்னு நான் யோசிச்சிப் பார்த்தேன். ஏன்னா, அதை அவர் என்கிட்ட சொல்லாம கூட செஞ்சிருக்க முடியும். அதனால நான் உஷார் ஆனேன். அவர் இந்த நாடகத்துல் என்னை மட்டும் உட்படுத்தி இருக்கிறார்ன்னா, அதுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். அது என்னை சோதிச்சி பாக்குறதுக்காக இருக்கும். இல்லன்னா, என் மேல வச்ச நம்பிக்கைக்காக இருக்கும். எது எப்படி இருந்தாலும், நான் இதை வெளியில் சொல்லாம இருக்கணும்னு முடிவுக்கு வந்தேன்"
"அவ்வளவு தானா?" என்றார் குணமதி பவித்ராவை பார்த்தவாறு.
"இன்னும் நான் முக்கியமான ரெண்டு பாயிண்ட்டை சொல்லல" என்று சிரித்தான் தூயவன்.
தலை உயர்த்தி அவனை பார்த்தாள் பவித்ரா.
"சஞ்சனா என் மேல வச்சிருந்த காதல் எந்த அளவுக்கு ஆழமானதுன்னு நீங்க எல்லாரும் தெரிஞ்சுக்க நினைச்சேன். நான் ஊனமானா, அவள் நிச்சயம் என்னை கல்யாணம் பண்ணிக்க விரும்ப மாட்டாள்னு எனக்கு தெரியும். ஆனா, நான் அதை சொன்னா, அப்பா நிச்சயம் நம்பி இருக்க மாட்டார். அதனால உண்மையை அவர் அனுபவிச்சு தெரிஞ்சுக்கட்டும்னு தான் நான் இப்படி நடிச்சேன்"
"ரெண்டு காரணம் இருக்குன்னு சொன்னியே?"
"ஆமாம், இதோ, இது தான் முக்கியமான காரணம்" என்றான் பவித்ராவை பார்த்தவாறு.
"அவ மனசுல என்னை கடவுள் மாதிரி அவ உருவகப்படுத்தி வச்சுக்கிட்டா. நானும், உணர்வும் உணர்ச்சியும் இருக்கிற சாதாரண மனுஷன் தான்னு அவளுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல. அவளோ, என்னை உட்கார வைச்சி பூஜை பண்ண ரெடியா இருந்தா. இந்த பொண்ணை மடக்கி பிடிக்கத்தான் நான் முக்கியமா இந்த டிராமாவை நடத்தினேன்" என்று அவன் கூற, சங்கடத்தில் ஆழ்ந்தாள் பவித்ரா.
"பவித்ராவை ஏமாத்தினதுக்காக அவங்க உங்ககிட்ட அப்செட்டா இருக்காங்கன்னு நினைக்கிறேன்" என்றான் சந்தோஷ்.
"அப்படியா பவித்ரா? நீ உண்மையிலேயே என் மேல அப்செட்டாவா இருக்க?" என்றான் புன்னகையோடு.
அவனுக்கு பதில் சொல்லாமல் தலை தாழ்த்தினாள் பவித்ரா.
"வாங்க வீட்டுக்கு போகலாம்" என்றார் குணமதி.
தான் எங்கு செல்ல வேண்டும் என்று தெரிந்து கொள்ள சந்தோஷை ஏறிட்டாள் வெண்மதி.
"நான் இன்னும் ரெண்டு நாள்ல ஃபிரான்ஸ் போகணும். அதனால ரெண்டு நாளும் நம்ம உங்க வீட்டிலேயே தங்கலாம்" என்றான் சந்தோஷ்.
சந்தோஷமாய் தலையசைத்த வெண்மதி முன்னே நடந்தாள். தன் வேக நடையின் வேகத்தை குறைத்த சந்தோஷ்,
"மச்சான், நீங்க உங்க பொண்டாட்டியை எப்படி சமாளிக்க போறீங்கன்னு எனக்கு தெரியல. ரொம்ப கஷ்டமா இருக்கும்னு நினைக்கிறேன்" என்றான் சந்தோஷ் கிண்டலாய். அது பவித்ராவின் காதிலும் விழுந்தது
"அவளை எப்படி சமாதானப்படுத்தணும்னு எனக்கு தெரியும். அதே நேரம், நான் அவ அப்செட்டா இருந்தா, என்ன செய்வேன்னு அவளுக்கும் தெரியும்" என்றான்.
அதிர்ச்சியில் விழி விரித்த பவித்ரா, தன் இமைகளை படபடத்தாள்.
அவளை நோக்கி குனிந்த தூயவன்,
"நான் சொல்றது சரி தானே?" என்றான்.
முகத்தை சுளுக்கென்று வைத்துக் கொண்டு, வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் பவித்ரா. தூயவன் தன் உதட்டை சுழிக்க, வாய்விட்டு சிரித்தபடி அங்கிருந்து சென்றான் சந்தோஷ்
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top