40 திருமணம்

40 திருமணம்

தூயவனின் எதிர்பாராத முத்தத்தால் அதிர்ச்சி அடைந்தாள் பவித்ரா. அவள் தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றும் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை, தூயவனின் பிடி தளர்வாகவே இருந்தபோதிலும். விட்டுக் கொடுப்பதை தவிர வேறு வழியில்லாமல் போனது அவளுக்கு. அரை மயக்க நிலையில் இருந்த அவளது முகத்தை பார்த்தபடி தன்னை விடுவித்துக் கொண்டான் தூயவன். தன் கட்டைவிரலால் அவள் இதழை துடைத்து விட்டான். அது அவளை கண்களை திறக்கச் செய்தது. அவள் அங்கிருந்து ஓடிவிட நினைத்த போது, அவளது கையைப் பிடித்து அவளை அப்படி செய்யவிடாமல் தடுத்தான். அங்கு அமர்ந்திருப்பதை தவிர அவளுக்கு வேறு வழியில்லாமல் போனது. தலை குனிந்தபடிய அமர்ந்தாள்.

"பவித்ரா..." என்று அவன் குழைவான குரலில் அழைக்க, தன் கண்களை இறுக்கமாய் மூடி கொண்டாள் பவித்ரா, அவனை பார்க்கும் தைரியம் இன்றி.

"உன்னை தொடுற உரிமை எனக்கு இல்லன்னு நீ நெனச்சா, இங்க இருந்து போயிடலாம்" என்றான்.

கண்களைப் திறந்த பவித்ரா, அவனைப் பார்க்காமல் மென்று விழுங்கினாள்.

"உன்னை வேற யாரோ ஒருத்தியா என்னால நினைக்க முடியல. நீ என்னுடையவ... என்னோட பவித்ரா...! இங்கிருந்து மட்டுமில்ல, நீ எப்பவுமே என்னை விட்டு போகக் கூடாதுன்னு நினைக்கிறேன். நீ மட்டும் என்கிட்ட திரும்பி வராம போயிருந்தா, நான் என்னை ஒரு உதவாக்கரையா நினைச்சிருப்பேன். ஏன்னா, நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன்"

உணர்ச்சிகளின் கலவையாய் அவனை ஏறிட்டாள் பவித்ரா.

"என்னை மாதிரி ஒருத்தனுக்கு இதெல்லாம் ரொம்ப அதிகம்னு நினைக்கிறியா?" என்றான் தூயவன்.

அவள் இல்லை என்று அவசரமாய் தலையசைத்தாள்.

"உன்னை நான் தொடக்கூடாதா?" என்றான் அவன்.

அதற்கு பதில் அளிக்க முடியாமல் திணறினாள் பவித்ரா. அவள் அதுக்கு என்ன பதில் கூறுவது? நீ என்னை தொடலாம் என்றா?

"உன்னை தொட எனக்கு உரிமை இல்லயா?"

இது உரிமை பத்தின விஷயம் இல்ல. இதுல வேற ஒரு விஷயமும் இருக்குறத நீங்க புரிஞ்சுக்கணும். நீங்க பொறந்து, வளர்ந்தது எல்லாம் சென்னை மாதிரி ஒரு மெட்ரோ சிட்டியில. ஆனா, நான் பிறந்து வளர்ந்தது மதுரையில இருக்கிற ஒரு கிராமத்துல. எங்க குடும்பம் ரொம்ப கட்டுப்பட்டியானது. எனக்கு இதெல்லாம் ரொம்ப அதிகம். உங்களோட இந்த பக்கத்தை என்னால கையால முடியல... "

"எந்த பக்கத்தை?" என்றான் குறு நகையோடு.

"விடுங்க..." என்று பெருமூச்சு விட்டாள் பவித்ரா.

"சரி, உனக்கு அன்கம்ஃபர்டபுலா இருந்தா நான் உன்னை தொட மாட்டேன்"

அவள் சரி என்று மெல்ல தலையசைத்தாள்.

"இந்த டச் மீ நாட் கண்டிஷன் எல்லாம் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் போட மாட்டன்னு நினைக்கிறேன்..."

பவித்ரா வெட்கப் புன்முறுவல் பூத்தாள்.

"பவித்ரா, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம்ம தொடாமலேயே முத்தம் கொடுக்க முடியும்..." என்று அவன் கூறியதை கேட்டு அவள் விழி விரித்தாள்.

"கையால தான தொடக்கூடாதுன்னு நீ சொன்ன?"

அதைக் கேட்டு அவள் வாயை பிளக்க, வாய்விட்டு சிரித்தான் தூயவன். அவனை பிடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடிப் போனாள் பவித்ரா. அவள் கதவின் அருகே சென்ற போது,

"பவித்ரா, இப்போ நீ என்னை தொட்டுட்ட..." என்றான் தூயவன்.

திடுக்கிட்டு அவனை நோக்கிய திரும்பிய அவள், மருண்ட பார்வை பார்த்துவிட்டு, அங்கிருந்து ஓடிப் போனாள். மீண்டும் பலமாய் சிரித்தான் தூயவன்.

.........

திருமண வேலைகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒருபுறம் சந்தஷும், மறுபுறம் பாரியும் வரிந்து கட்டிக்கொண்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அதை திருமண ஏற்பாட்டாளர்களிடம் விட்டுவிட்ட போதிலும், அவர்கள் தங்களை முழுமையாய் அதில் விருப்பத்தோடு ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

.......

சந்தோஷ் வெண்மதியை திருமணம் செய்து கொள்ளப் போகிறான் என்ற விஷயத்தை கேள்விப்பட்ட மாதேஷ், மிகவும் ஏமாற்றமடைந்தார். போதாத குறைக்கு, அவரது கைபேசி அழைப்பை மாயவன் ஏற்கவே இல்லை. அது அவரை மேலும் எரிச்சல் ஊட்டியது. மாயவனை, குணவதி அந்த அளவிற்கு அவமானப்படுத்திய பின், அவர் நேராக தன் வீட்டிற்கு வந்து நிரந்தரமாய் அங்கு குடியேறிவிடுவார் என்று எதிர்பார்த்து இருந்தார் மாதேஷ். ஆனால் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அவரது எதிர்பார்ப்பை முதல் முறையாய் பொய்யாக்கினார் மாயவன்.

அவரை விடவும் அதிக எரிச்சலோடு இருந்தது சஞ்சனா தான். அவளது திட்டம் ஒரேடியாய் படுத்துவிட்டது. தூயவனை வளைத்துப் பிடிக்க அவள் எடுத்த அனைத்து முயற்சிகளும் வீணாகிவிட்டது. இறுதியில், அவன் ஊனமடைந்து படித்த படுக்கையாகவும் ஆகிவிட்டான். இப்பொழுது அவள் தனக்கேற்ற அழகான ஒருவனை தேடிப் பிடிக்க வேண்டும். அவளது தந்தையுடன் இணைந்து பார்ட்டிகளுக்கு செல்ல வேண்டும். அப்பொழுது தான் அவளுக்கு ஏற்ற ஒருவனை அவள் கண்டுபிடிக்க முடியும். தன் பொன்னான நாட்களை அவள் அணாவசியமாய் தூயவனுக்கு பின்னால் சுற்றி அலைந்து வீணாக்கி விட்டாள்.  அந்த நேரத்தை அவள் வேறொருவனுக்காக செலவு செய்திருந்தால், இந்நேரம் அவன் அவளுக்கு அடிமையாக இருப்பான், என்று அலுத்துக் கொண்டாள் சஞ்சனா.

தங்கள் வீட்டிற்கு வந்த சந்தஷை, தந்தையும் மகளும் விசித்திரமாய் பார்த்தார்கள். தன்னை மறந்து சோபாவை விட்டு எழுந்து நின்றார் மாதேஷ். ஏனென்றால் அவர் அங்கு சந்தோஷை எதிர்பார்க்கவில்லை. அதுவும், அவனது திருமணம் வெண்மதியுடன் நிச்சயமாகி இருக்கும் அந்த வேளையில் அவர் நிச்சயமாய் அவனை எதிர்பார்க்கவில்லை. அவன் என்ன காரணத்திற்காக அங்கு வந்திருக்கிறான் என்று தெரிந்து கொள்ள அவனையே பார்த்துக் கொண்டு நின்றார் மாதேஷ். சந்தோஷ் தன் திருமணத்திற்க்கு தன்னை அழைக்கத்தான் வந்திருப்பான் என்பதை சிறிதும் நம்பாத அவர், அவன் அங்கு வந்ததற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

"என்ன நீ இங்க வந்திருக்க?"

"நான் எதுக்கு டாட் இங்க வருவேன்?"

"டாட்டா? இன்னும் அது உனக்கு ஞாபகம் இருக்கா?"

"ஏன் ஞாபகம் இல்லாம?  நான் உங்களை மாதிரி இல்லயே..." என்றான் சந்தோஷ்.

"எதுக்காக இங்க வந்திருக்க?"

"நான் வெண்மதியை கல்யாணம் பண்ணிக்க போறேன்"

"நீ ரொம்ப லேட். எனக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியும்"

"என் கல்யாணத்துக்கு உங்களை கூப்பிடத்தான் நான் வந்தேன்" என்று அவன் கூறிய வார்த்தைகள் மாதேஷின் புருவத்தை மேலே உயரச் செய்தது.

"நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல எவ்வளவோ முரண்பாடுகள் இருக்கு. ஆனாலும், என்னோட கல்யாணத்துல நீங்க இருக்கணும்னு நான் விரும்புறேன்"

"நான் உன் கல்யாணத்துக்கு வருவேன்னு நீ நினைக்கிறியா?"

"தெரியாது, ஆனா, உங்களை கூப்பிட வேண்டியது என்னோட கடமை. என் கல்யாணத்துக்கு வர்றதும் வராம போறதும் உங்க விருப்பம். வாங்க, வராம போங்க. ஆனா, நான் என்ன செய்யணுமோ அதை செஞ்சு முடிச்சிட்டேன். ஏன்னா, எதிர்காலத்தில் யாரும் என்னை குறை சொல்லக் கூடாதுல..."

"ஒரு பிள்ளையோட கல்யாணத்துக்கு, அவனோட அப்பாவை இப்படித்தான் கூப்பிடுவாங்களா?"

"நான் என் கல்யாணத்துக்கு உங்களை கூப்பிட்டேன். அதுக்காக சந்தோஷ படுங்க"

"என்னை உன் கல்யாணத்துக்கு கூப்பிட்டது தெரிஞ்சா உன்னோட நொண்டி மச்சான் கோவப்பட மாட்டானா?"

அவர் தூயவனை நொண்டி என்று கூறியது அவனுக்கு அறவே பிடிக்கவில்லை.

"உங்களை கூப்பிட சொன்னது தூயவன் தான்..." என்றான் கோபமாய்.

"நொண்டி ஆனதுக்கு பிறகு தான் அவனுக்கு மூளை வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கு போல இருக்கு..." என்று நையாண்டி செய்தாள் சஞ்சனா.

"இன்னொரு தடவை அப்படி சொன்னா, உன் பல்லை உடைத்து விடுவேன். தூயவனோட இந்த நிலைமைக்கு காரணமே நீதான்னு தெரிஞ்சு, எப்படி கொஞ்சம் கூட உறுத்தலே இல்லாம இப்படி எல்லாம் உன்னால பேச முடியுது? உன்னை மாதிரி இரக்கமில்லாத ஒரு பொண்ணை நான் பார்த்ததே இல்ல"

"என்னை மட்டும் அவன் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிருந்தா, அவனுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதுக்கு அவனுக்கு இந்த தண்டனை தேவை தான்"

"நான் உங்களை கூப்பிடணும்னு நெனச்சேன். அதை செஞ்சுட்டேன். என் கல்யாணத்துக்கு வர்றதும் வராததும் உங்க விருப்பம்" என்று அங்கிருந்து வெளியேறினான் சந்தோஷ்.

........

போலீசாரிடமிருந்து தப்பிச் சென்ற சின்னசாமியால் சென்னை மாநகரை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. ஆனால் அதே நேரம், பவித்ராவிற்கு திருமணம் நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொண்ட பின், அவனால் சும்மா இருக்க முடியவில்லை. திருமணத்தைப் பற்றியும், அது தொடர்பான மற்றவர்கள் பற்றிய விவரங்களையும் சேகரிக்க துவங்கினான். மாறுவேடத்தில் திருமணத்திற்கு சென்று, முடிந்தால் பவித்ராவை கடத்துவது, இல்லாவிட்டால் கல்யாணத்தை நிறுத்துவது என்ற எண்ணத்தோடு திருமணத்திற்கு வரத் தயாரானான்.

.........

திருமண சடங்குகள் முடிவடைந்தன. தூயவன் கூறியது போலவே, அவன் பவித்ராவை விட்டு விலகி இருந்தது அவளுக்கு நிம்மதியை தந்தது. அவளை எண்ணி உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான் தூயவன். திருமணத்திற்கு பிறகு அந்தப் பெண் என்ன தான் செய்யப் போகிறாள் என்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவனுக்குள் எழுந்தது. 

திருமண நாள்

வெண்மதியும் பவித்ராவும் திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்கள். சக்கர நாற்காலியில் அமர வைத்து  தூயவனை திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தான் சந்தோஷ். திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்த பிறகு, அவன் பொறுப்பை, தான் வாங்கிக் கொண்டான் பாரி.

அனைவருக்கும் முன்னதாக திருமண மண்டபத்திற்கு வந்துவிட்டார் மாயவன். தூயவன் அவரைப் பார்த்து லேசாய் தலையசைத்தான். ஆனால் குணமதியோ, அவர் இருந்த பக்கம் கூட திரும்பவில்லை. மாயவன் என்ற ஒருவர் அங்கு இல்லவே இல்லை என்பது போல் நடந்து கொண்டார் அவர். வந்த விருந்தினர்களை உபசரிப்பதில் முனைந்தார் அவர். அவர் சிறிதும் எதிர்பாராத வண்ணம், வந்த விருந்தினர்களை உபசரிப்பதில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார் மாயவன், தங்களுக்கு இருந்த பிரச்சனையை வெளியில் காட்டிக் கொள்ளாமல்.

மெல்ல மெல்ல திருமண மண்டபம் நிறைய துவங்கியது. சின்னசாமியும் மாறுவேடத்தில் அங்கு வந்திருந்து அனைவரையும் விழிப்போடு கவனித்துக் கொண்டிருந்தான்.

இரண்டு மேடைகள் தயாராய் இருந்தன. அதில் மணமகன்கள் வந்து அமர்ந்தார்கள். தூயவன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தான். மாதேஷும் சஞ்சனாவும் திருமண மண்டபத்திற்குள் நுழைந்த போது, அவன் சந்தோஷை ஏறிட்டான். அவர்கள் இருவரும் இரண்டாவது வரிசையில் அமர்ந்து கொண்டார்கள்.

மணமகள்கள் அழைக்கப்பட்டார்கள். தூயவனுக்கு அருகில் ஒரு நாற்காலியில் அமர வைக்கப்பட்டாள் பவித்ரா. அவனுக்கு தாலி கட்டுவதில் சிரமம் இருக்க வேண்டாம் என்று, அந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மணமகன்களிடம் திருமாங்கல்யங்கள் நீட்டப்பட்டன. சந்தோஷ் வெண்மதியின் கழுத்திலும், தூயவன் பவித்ராவின் கழுத்திலும் திருமாங்கல்யத்தை கட்டினார்கள். இருவரும் தத்தம் மனைவிகளின் நெற்றியில் குங்குமத்தை வைத்து நிரப்பினார்கள்.

அக்னியை வலம் வரும்படி அவர்களை கேட்டுக் கொண்டார் பண்டிதர். வெண்மதியுடன் எழுந்து நின்றான் சந்தோஷ். தூயவனை பரிதாபத்துடன் ஏறிட்டாள் வெண்மதி. திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் அனைவரும் தூயவனுக்காக வருத்தப்பட்டார்கள். அவனது சக்கர நாற்காலியை தள்ளியபடி அக்கினியை வலம் வரும் முடிவுடன் அவனை நெருங்கினாள் பவித்ரா. ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம், சக்கர நாற்காலியை விட்டு எழுந்து நின்ற தூயவன், அதை ஸ்டைலாய் தன் காலால் எட்டி உதைத்து பின்னால் தள்ளினான்... அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி அளித்து...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top