4 யார் அந்த பெண்?

4 யார் அந்த பெண்?

பவித்ராவை மதுரையில் இருந்த தன் வீட்டிற்கு அழைத்து வந்தான் தூயவன். அவர்களை அங்கிருந்து அழைத்துச் செல்ல ஒரு ஹெலிகாப்டர் தயாராய் இருந்தது. அதை கண்ட பவித்ரா, திகைத்து நின்றாள். தன் கையை அவளை நோக்கி நீட்டினான், தூயவன். அவன் கையை பற்றிக்கொண்டு, அந்த ஹெலிகாப்டரில் ஏறினாள் பவித்ரா. அவனது மேலாளரான பாரி பைலட்டுக்கு சைகை செய்ய, அந்த ஹெலிகாப்டர் அவர்களை சுமந்து கொண்டு அங்கிருந்து பறக்கத் துவங்கியது.

ஹெலிகாப்டரில் பயணிப்பது பவித்ராவுக்கு அது தான் முதல் முறை என்றாலும், அவளிடம் பதற்றம் தென்படவில்லை. ஏனென்றால் அவள் அதைவிட பல மடங்கு பதற்றமான சூழ்நிலையில் இருந்து தானே தப்பி வந்திருக்கிறாள்?

வெளிப்புறம் பார்த்தபடி அமர்ந்திருந்த அவளது கண்களில் இருந்து கண்ணீர் பெருகியபடி இருந்தது. அவளுடைய மெல்லிய விம்மல் ஒலி, அந்த ஹெலிகாப்டரில் கேட்ட வண்ணம் இருந்தது.

அங்கு இருந்த தண்ணீர் பாட்டிலை கொடுக்கும்படி பாரியிடம் சைகை செய்தான் தூயவன். அதை அவன் தூயவனிடம் கொடுக்க, அதை பெற்று பவித்ராவிடம் நீட்டிய அவன்,

"தண்ணி குடி" என்றான்.

வேண்டாம் என்று தலையசைத்தாள் பவித்ரா. அவள் கையைப் பிடித்து, அந்த பாட்டிலை அவள் கையில் வைத்தான். அவள் அதை வேண்டாம் என்றும் மறுக்கவுமில்லை, தண்ணீரை குடிக்கவும் இல்லை.

"தூயவா, பவித்ராவுக்கு ஒரு நல்ல விமன்ஸ் ஹாஸ்டலை பாக்கட்டுமா?" என்றான் பாரி மெல்லிய குரலில், அவனுக்கு மட்டுமே கேட்கும்படி.

"ஹாஸ்டலா? எதுக்கு?" என்று முகத்தை சுருக்கினான் தூயவன் அதே மெல்லிய குரலில்.

"அவங்க ஸ்டே பண்றதுக்கு ஒரு இடம் வேணுமில்ல?" என்றான், என்னமோ அது பற்றி தூயவனுக்கு தெரியாது என்பது போல்.

"ஆமா, அவங்க தங்க ஒரு இடம் வேணும் தான். அதை நான் மறுக்கல. ஆனா எனக்கு அவ்வளவு பெரிய வீடு இருக்கும்போது அவங்க எதுக்கு ஹாஸ்டல்ல தங்கணும்?"

"என்ன சொல்ற? நீ அவங்களை உங்க வீட்டுக்கா கூட்டிகிட்டு போக போற?" என்றான் பாரி நம்ப முடியாமல்.

"அதுல என்ன சந்தேகம்?" என்றான்.

"ஆனா..." என்ற அவனை,

"என் வீட்டை விட ஒரு பாதுகாப்பான இடம் இந்த பூமியில இருக்கும்னு எனக்கு தோணல. ஏன்னா, அங்க நானும் அவங்க கூட இருக்கேன்" என்றான்.

"அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல. ஆனா எவ்வளவு காலத்துக்கு நீ அவங்களை பாதுகாத்துக்கிட்டே இருக்க முடியும்?"

"என் வாழ்நாள் முழுக்க...! நான் அவங்களை பாதுகாத்து தான் ஆகணும். அவங்க அப்பாவுக்கு நான் சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கேன்"

அதைக் கேட்ட பாரி, திகைப்பும் குழப்பமும் ஒருசேர அடைந்தான். வாழ்நாள் முழுக்க என்று அவன் கூறியதற்கு என்ன அர்த்தம்? அதை என்ன அர்த்தத்தில் கூறினான் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும், இந்த நேரம், தூயவன் அனைத்தையும் திட்டமிட்டு முடித்து இருப்பான் என்று அவனுக்கு தெரியும்.

சென்னை

பவித்ராவுடனும் பாரியுடனும் சென்னையில் வந்து இறங்கினான் தூயவன். அவனது கார் ஓட்டுநர் அவர்களுக்காக விமான நிலையத்தில் காத்திருந்தார்.

"நான் உன்னை வீட்ல டிராப் பண்றேன்" என்றான் தூயவன்.

"பரவால்ல தூயவா, நான் போயிக்கிறேன்" என்றான் பாரி.

"வாயை மூடிகிட்டு கார்ல ஏறு" என்று வழக்கம்போல் அவனுக்கு கட்டளையிட்டான் தூயவன். பவித்ராவை நோக்கி திரும்பிய அவன்,

"வா பவித்ரா போகலாம்" என்று தன் கார் கதவை அவளுக்காக திறந்து விட்டான்.

பவித்ரா பின் இருக்கையில் அமர்ந்து கொள்ள, அவளுடன் தானும் அமர்ந்து கொண்டான். முன்னிருக்கையில் பாரி ஓட்டுனருடன் அமர்ந்து கொள்ள, அவர்களது கார் புறப்பட்டது.

"பாரியை அவன் வீட்ல விட்டுவிட்டு போகலாம்" என்றான் ஓட்டுநரிடம் தூயவன்.

"சரிங்க தம்பி" என்றார் ஓட்டுநர், பாரியின் வீட்டை நோக்கி காரை செலுத்தியவாறு.

காரின் கதவில் சாய்ந்தபடி தலை சாய்த்து அமர்ந்திருந்தாள் பவித்ரா. அவளது கண்கள் வெளியே பார்த்த வண்ணம் இருந்த போதும், அதில் இருந்து வழிந்த கண்ணீர் நிற்கவே இல்லை. அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்றே புரியவில்லை தூயவனுக்கு. அவனுக்கு தெரியும், வெறும் வார்த்தைகளால் உடைந்திருந்த மனதை ஒட்ட வைக்க முடியாது என்று.

பாரியை அவனது வீட்டில் இறக்கிவிட்டு, அவர்களது பயணம் தூயவனின் இல்லத்தை நோக்கி தொடங்கியது.

தூயவன் இல்லத்தின் பிரம்மாண்டமான ராட்சத நுழைவு வாயிலை பார்த்த உடனேயே பவித்ராவிற்கு நடுக்கம் பிறந்தது. தூயவன் இல்லம் என்ற எழுத்துக்கள், சலவை கல்லில் பொறிக்கப்பட்டுருந்தது.

"என்னை எங்க கூட்டிகிட்டு வந்திருக்கீங்க?" என்றாள்.

"இது தான் என்னோட வீடு. நீ இங்க நிம்மதியா இருக்கலாம்" என்று அவள் அப்பாவின் மரணத்திற்கு பிறகான முதல் ஆறுதல் வார்த்தைகளை உதிர்த்தான் தூயவன்.

அரண்மனை போன்ற அந்த வீட்டை பார்த்த அவள், மென்று விழுங்கினாள்.ஒரு ஹெலிகாப்டரையே தன் வசம் வைத்திருக்கிறான் என்றால் அவனது இல்லம் இப்படித்தானே இருக்கும்! காரை விட்டு இறங்கவே அவள் தயங்கினால். கார் கதவை திறந்து கொண்டு நின்று,

"இறங்கு பவித்ரா" என்றான் தூயவன்.

அவனைப் பார்த்தபடி அந்த காரை விட்டு இறங்கினாள் பவித்ரா.

"உள்ள வா!" என்று இதமாய் புன்னகை புரிந்தான் தூயவன்.

அந்த புன்னகை, இதுவரை தன் தந்தையை தவிர வேறு எந்த ஆணிடம் இருந்தும் அவள் பெறாத ஒன்று. எத்தனையோ ஆண்கள் அவளை பார்த்து புன்னகைத்திருக்கிறார்கள். அதில் இருந்ததெல்லாம், ஆசை, காமம், பசி இன்னும் என்னென்னவோ... தூயவனை போல் தூய்மையாய் இதுவரை யாரும் அவளை பார்த்து புன்னகைத்ததில்லை. அந்த புன்னகை அவளுக்கு நம்பிக்கையை தந்தது. அவனுடன் உள்ளே சென்றாள்.

அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தான் தூயவன். கதவைத் திறந்தவர், நற்பதைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி. அவனைப் பார்த்து பளிச்சென்று புன்னகை புரிந்தார் அவர். பவித்ராவை பார்த்த அவரது புன்னகை காணாமல் போனது. அவருக்கு எந்த முக்கியத்துவமும் வழங்காமல், உள்ளே சென்றான் தூயவன். அவனை தயக்கத்துடன் பார்த்தபடி அங்கேயே நின்றாள் பவித்ரா.

"உள்ள வா, பவித்ரா" என்று அவளை வரவேற்றான்.

சமையல் அறையை விட்டு வெளியே வந்த ஒருவரை,

"குழந்தை அண்ணா, போய் அக்காவை கூட்டிக்கிட்டு வாங்க" என்றான் தூயவன்.

"சரிங்க தம்பி" என்ற படி மேல்மாடிக்கு ஓடினார் குழந்தை என்னும் குழந்தைசாமி.

அவர்களுக்கு கதவை திறந்து விட்ட அந்த பெண்மணி, அவர்களை பார்த்துக்கொண்டு அமைதியாய் நின்றார். அவர் வேறு யாருமல்ல, தூயவனின் அம்மா குணமதி. தூயவன் அவருடன் கடந்த பத்து வருடங்களாய் பேசுவதில்லை. தங்களுக்குள் நிலைமையை சீராக்க, குணமதி எவ்வளவு முயன்றும் ஒன்றும் வேலை செய்யவில்லை. அவ்வளவு எளிதாய் பனிந்து விடக் கூடியவன் அல்ல தூயவன். அவனது அம்மா எவ்வளவு முயன்ற போதும், அவரிடம் பேசுவதில்லை என்று அவன் நின்ற நிலையில் பிடிவாதமாய் இருக்கிறான்.

பவித்ராவை உள்வாங்கியபடி நின்றார் குணமதி. அவளது வீங்கி சிவந்த கண்களும், சோகம் நிறைந்த முகமும் அவர் மனதை ஏதோ செய்தது.

தூயவனின் அக்காவான வெண்மதி புன்னகையுடன் படி இறங்கி வந்தாள். அவளை பார்த்தவுடன் தூயவனும் பிரகாசமாய் புன்னகைத்தான். அதை பவித்ரா கவனிக்கவே செய்தாள். அவள் அந்த இரு பெண்மணிகளுக்கும் இடையில் தூயவன் காட்டிய வித்தியாசத்தை உணர்ந்தாள்.

"எப்படி இருக்கிங்க, கா?"

"நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?" என்ற அவள், பவித்ராவை பார்த்து புருவம் உயர்த்தி, மீண்டும் தூயவனை பார்த்தாள்.

"இவங்க பவித்ரா. இனிமே நம்ம கூட தான் இருக்க போறாங்க"

"ஹாய் பவித்ரா" என்றாள் வெண்மதி.

"வணக்கங்க..." என்றாள் பவித்ரா தயங்கியபடி.

"மாம், குழந்தை அண்ணன்கிட்ட சொல்லி அவங்களுக்கு கெஸ்ட் ரூமை ரெடி பண்ண சொல்லுங்க" என்றாள் வெண்மதி, குணமதியிடம்.

அதை கேட்ட பவித்ரா, திகைத்தாள்.  மாம்? இந்த பெண்மணி தூயவனின் அம்மாவா? அப்படி என்றால் ஏன் அவன் அவருடன் பேசவில்லை?

"ஓ... தாராளமா.." என்றார் குணமதி, எந்த மறுப்பும் கூறாமல்.

அவர் குழந்தைசாமியை கூப்பிட முனைந்தபோது,

"அக்கா, பவித்ரா உங்க கூட, உங்க ரூம்ல இருக்கணும்னு நான் விரும்புறேன்" என்றான் தூயவன் ஒரு கூரிய பார்வையுடன்.

வெண்மதி எதுவும் கூறுவதற்கு முன்,

"நான் கூட அதே தான் நெனச்சேன். தனியா இருந்தா, அந்த பொண்ணுக்கு கபோர்ட்டபிளா இருக்காது இல்ல?" என்றார் குணமதி முந்திக்கொண்டு.

ஆம் என்று தலை அசைத்தாள் வெண்மதி.

குணமதிக்கு எந்த முக்கியத்துவமும் வழங்காமல்,

"அக்கா, அதுல உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காதுன்னு நினைக்கிறேன்" என்றான் தூயவன்.

"எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல"

"ரொம்ப தேங்க்ஸ் கா"

அப்பொழுது தூயவனின் தந்தை மாயவன் உள்ளே நுழைந்தார்.

"தூயா, நீ எப்ப வந்த?" என்றார்.

"இப்ப தான் டாட் வந்தேன்"

அவர் ஏதோ கூற போக, அங்கு நின்ற பவித்ராவை பார்த்து,

"யார் இந்த பொண்ணு?" என்றார்

"அவங்க நம்ம தூயாவோட கெஸ்ட்" என்றார் குணமதி.

"தூயாவோட கெஸ்ட்டா?"

அவர் மீது ஒரு பொருள் பொதிந்த பார்வை வீசினான் தூயவன். அதற்கு பொருள், நாம் அதைப்பற்றி பிறகு பேசலாம் என்பதாகும். அதைப் புரிந்து கொண்ட மாயவன் தலையசைத்தார்.

அதே நேரம்...

"ஹாய்" என்ற குரல் கேட்டு திரும்பினான் தூயவன்.

ஒரு பெண் மடிப்படியில் இருந்து கீழே இறங்கி அவர்களை நோக்கி வந்து,

"எப்படி இருக்கீங்க?" என்றாள்.

"ம்ம்ம்... நீ இங்க எப்ப வந்த?" என்றான்.

"நேத்து வந்தேன்"

"நேத்தா?" என்று முகம் சுருக்கினான் தூயவன். ஏனென்றால் அந்த பெண்ணின் வீடும் சென்னை நகரத்தில் தான் இருந்தது. அவள் அடிக்கடி அங்கு வருபவள் தான் என்றாலும், எப்பொழுதும் அங்கு தங்கியதில்லை. அவள், மாயவனின் வியாபார கூட்டாளி மற்றும் நெருங்கிய  நண்பனான மாதேஷின் மகள் சஞ்சனா.

"அவளுக்கு வீட்ல இருந்து போரடிக்குது போல இருக்கு... அதனால தான் இங்க வந்திருக்கா" என்றார் மாயவன்.

"ஓ..."

சஞ்சனா, பவித்ராவை பார்த்த பிறகும், அவளுக்கு எந்த முக்கியத்துவமும் வழங்கவில்லை. அவள் யார் என்று தெரிந்து கொள்ளவும் அவள் விரும்பவில்லை. ஏனென்றால் அவளுக்கு தெரியும், அவள் நிச்சயம் தூயவனுக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்பட்டவளாக இருக்க முடியாது என்று. பவித்ராவின் எளிமையை பார்த்து அவள் அந்த முடிவுக்கு வந்திருந்தாள். ஆனால் தூயவனின் அடுத்த வார்த்தைகள் அவளுக்கு குழப்பத்தை அளித்தது.

"அக்கா, பவித்ராவுக்கு நீங்க உங்க டிரஸ்ஸை கொடுக்குறீங்களா? இல்ல, நான் போய் வாங்கிகிட்டு வரட்டுமா?"

இந்த பெண்ணின் உடையை பற்றி தூயவன் ஏன் பேசுகிறான் என்று சஞ்சனாவுக்கு புரியவில்லை. யார் இந்த பெண்? இந்த பெண்ணை அழைத்து வந்தது தூயவனா? ஆம் என்றால், எதற்காக?

"நான் குடுக்குறேன். என்கிட்ட நிறைய டிரஸ் இருக்கு" என்றாள் வெண்மதி.

"நிறைய ட்ரெஸ் தேவையில்ல கா. இன்னைக்கு மட்டும் குடுங்க. நாளைக்கு நான் அவங்களுக்கு புது டிரஸ் வாங்கிட்டு வரேன்" என்றான்.

வெண்மதி மட்டுமல்ல, அங்கிருந்த அனைவருமே குழம்பினார்கள். பவித்ராவோ சங்கடமடைந்தாள். அவள் எனக்கு புதிய உடைகள் வேண்டாம் என்று கூறவேண்டும் என்று தான் நினைத்தாள். ஆனால் அந்த உயர் மட்ட மக்களின் முன் பேசவே அவளுக்கு பயமாய் இருந்தது.

"நான் பவித்ராவை என்னோட ரூமுக்கு கூட்டிக்கிட்டு போகட்டுமா?" என்றாள் வெண்மதி.

"வா பவித்ரா" என்று அவளை வெண்மதியின் அறையை நோக்கி தானே அழைத்துச் சென்றான் தூயவன். அது அனைவரையும் மேலும் குழப்பியது.

பவித்ராவும் வெண்மதியும் தூயவனை பின்தொடர்ந்து வெண்மதியின் அறைக்கு சென்றார்கள்.

தூயவனே அந்த பெண்ணை வெண்மதியின் அறைக்கு அழைத்துச் செல்கிறானா? வெண்மதி அல்லாத வேறு ஒருவருக்கு தூயவன் முக்கியத்துவம் வழங்குவது இதுதான் முதல் முறை. அவன் இப்படிப்பட்ட ஒரு முக்கியத்துவத்தை தன் அம்மாவிற்கு கூட கொடுத்ததில்லை. மாயவன், குணமதி மற்றும் சஞ்சனா மூவரும் குழப்பத்தோடு நின்றார்கள். அவர்கள் மனதில் இருந்த ஒரே கேள்வி, யார் அந்த பெண்? என்பது தான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top