36 பவித்ராவின் உறுதி
36 பவித்ராவின் உறுதி
மாதேஷும் சஞ்சனாவும் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தார்கள். தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை அவர்களால் தாங்க முடியவில்லை.
"டாட், நம்ம இதுக்கு ஏதாவது செஞ்சாகணும். எவ்வளவு தைரியம் இருந்தா அந்த பொம்பளை என்னை கை நீட்டி அடிச்சிருப்பா? இதுவரைக்கும் யாரும் ஏன் மேல கை நீட்ட நினைச்சதில்ல. நீங்க கூட என்னை அடிச்சது இல்ல. இதுக்கு அவ பதில் சொல்லியே ஆகணும்"
மாதேஷ் மாயவனின் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் மாயவன் அவரது அழைப்பை ஏற்காமல் இருந்தது அவருக்கு எரிச்சலை தந்தது.
"இந்த முட்டாளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல" அந்த அழைப்பை எரிச்சலோடு துண்டித்தார்.
"அவரும் கூட கோவமா தான் இருப்பாரு. அவரை அந்த பொம்பளை எப்படி அடிச்சான்னு பார்த்தீங்கல்ல?" என்றாள் இன்னும் கூட வலியில் தெறித்து கொண்டிருந்த தன் கன்னத்தைத் தொட்டவாறு.
அப்பொழுது சந்தோஷ் வருவதை அவர்கள் பார்த்தார்கள்.
"சந்தோஷ், வெண்மதியை கல்யாணம் பண்ணிக்கணும் என்கிற எண்ணத்தை மறந்துடு. நம்ம அவங்களுக்கு ஒரு நல்ல பாடத்தை சொல்லிக் கொடுக்கணும்" என்றார் மாதேஷ்.
"என்ன பாடம் சொல்லிக் கொடுக்கப் போறீங்க?"
"உன் பேர்ல இருக்கிற கம்பெனியோட ஷேர்ஸை என் பேர்ல மாத்திடு. நான் கேட்டா மாயவனும் மறுக்க மாட்டான். மாயவன் கம்பெனியோட சிஇஓவா நான் மாறணும். தூயவனை அந்த கம்பெனியை விட்டு துரத்தி அடிக்கணும். அவங்க நடுரோட்டுக்கு வர்ற வரைக்கும் நான் சும்மா இருக்கப் போறதில்ல"
ஒன்றும் கூறாமல் தன் அறையை நோக்கி நடந்தான் சந்தோஷ்.
"சந்தோஷ், நான் உன்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன்"
சந்தோஷ் நிற்கவில்லை. தன் கைபேசியை கோபமாய் சோபாவின் மீது வீசினார் மாதேஷ்.
சில நிமிடங்களில் கையில் ஒரு பையோடு வந்தான் சந்தோஷ்.
"எங்க போற?" என்றார் மாதேஷ்.
"மாயவன் அங்கிள் வீட்டுக்கு போறேன்"
"என்ன்னனது? உனக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்லயா?" என்றார் கோபமும் ஆத்திரமும் சேர.
"தூயவனை மடக்கி பிடிக்க நீங்க கூட தான் உங்க பொண்ணை அவங்க வீட்டுக்கு அனுப்பி வெச்சீங்க. அதுக்காக நீங்க வெக்க பட்டீங்களா?"
"சந்...தோஷ்..." என்று வெகுண்டார் மாதேஷ்.
"போதும் நிறுத்துங்க. குணமதி ஆன்ட்டி முன்னாடி பேச முடியாம அமைதியா தானே நின்னீங்க? அது தான் உங்களுடைய உண்மையான நிலைமை. உங்களுடைய எந்த ஜம்பமும் சரியான ஆள்கிட்ட பலிக்காது. மாயவன் அங்கிளும், (சஞ்சனாவை சுட்டிக்காட்டி) இந்த முட்டாளும் தான் நீங்க சொல்றதை கேப்பாங்க"
"உன்னோட ஷேர்ஸை என் பேர்ல மாத்தி தரப் போறியா இல்லயா?"
"அது உங்க கனவுல மட்டும் தான் நடக்கும்"
"அப்படின்னா என்னோட சொத்துல சல்லி காசு கூட உனக்கு கிடைக்காது"
"யாருக்கு வேணும் உங்க சொத்து? எனக்கு தேவையானதை யாரையும் ஏமாத்தாம என்னால சம்பாதிக்க முடியும். நான் உங்கள மாதிரி இல்ல."
"என்ன சொல்ற நீ?"
"இந்த சொத்தை எல்லாம் மாயவன் அங்கிளை ஏமாத்தி தானே சேத்திங்க?"
"யோசிச்சு பேசு, சந்தோஷ்"
"நீங்க செய்யறதை யோசிச்சு செய்யிங்க. தன் பிள்ளைக்காக கட்டின புருஷனையே தூக்கி எறிய தயங்கல குணமதி ஆன்ட்டி. இதுக்கு அப்புறம் உங்களுடைய அகம்பாவம் பிடிச்ச வேலையை எல்லாம் அவங்க பொறுத்துக்கிட்டு இருக்க மாட்டாங்க. உங்க மரியாதையை காப்பாத்திக்கங்க"
அங்கிருந்து வெளியேறினான் சந்தோஷ்.
"நடக்குற எல்லாத்துக்கும் இவன் தான் டாட் காரணம். அந்த வெண்மதி இவனை நல்ல மயக்கி வச்சிருக்கா. அதனால தான் இவன் இப்படி எல்லாம் ஆடிக்கிட்டு இருக்கான்" என்று வெறுப்பை உமிழ்தாள் சஞ்சனா.
"எவ்வளவு நாள் அவன் ஆடுறான்னு நானும் பாக்குறேன்" என்று மீண்டும் மாயவனுக்கு ஃபோன் செய்தார் மாதேஷ். ஆனால் அவர் அந்த அழைப்பை ஏற்கவில்லை.
.........
ஒரு பூங்காவில் அமர்ந்துக்கொண்டு, புல் தரையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார் மாயவன். அவரது கண்கள் கலங்கி இருந்தன. குடும்பம், குழந்தை அனைத்தும் இருந்த போதும் அவர் இன்று அனாதை. ஆனால் அவரது அந்த நிலைமைக்கு வேறு யாரும் காரணமல்ல, அவர் மட்டுமே காரணம். குணமதி அவரை நோக்கி கை உயர்த்துவார் என்பதை அவர் கனவிலும் நினைத்ததில்லை. அவர் பொறுமையின் சிகரமாய் திகழ்ந்தவர். எத்தனையோ முறை அவரது பொறுமைக்கு பங்கம் ஏற்பட்டபோது கூட, அவர் பொறுமையை கைவிட்டது இல்லை. ஆனால் இன்று, அவர் தன் மனதில் அடக்கி வைத்திருந்த கோபத்தை எரிமலை என வெடித்து சிதறவிட்டார். மூன்றாவது மனிதர்களின் முன்னால் தன் குரலைக் கூட உயர்த்தாத அவர், இன்று அவரது கையை உயர்த்தி விட்டார்.
சஞ்சனா இவ்வளவு கீழ்த்தரமான பெண்ணாக இருப்பாள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு சுலபமாய் அவள் தூயவனை குப்பை போல் தூக்கி எறிந்து விட்டாள்! அவளால் தான் தூயவன் இந்த நிலைமைக்கு ஆளானான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் இரக்கமின்றி பேசினாள். என்ன பெண் அவள்...! அவள் தூயவன் மீது கொண்ட காதல் உண்மையானது என்று அவர் நம்பியிருந்தார்...! எவ்வளவு சுலபமாய் அவள் அவரை நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டாள்! இதற்குப் பிறகு அவர் தூயவனின் முகத்தில் எப்படி விழிக்கப் போகிறார்? குணமதியை சமாதானப்படுத்த கூட முடியாத நிலைமைக்கு இன்று அவர் தள்ளப்பட்டு இருக்கிறார். சமாதானப்படுத்த வாய்ப்பு இருக்கிறதா? இருப்பதாய் தோன்றவில்லை. இன்னும் கூட குணமதி கோபத்தில் கொந்தளித்துக் கொண்டு தான் இருப்பார். ஏனென்றால் அவரது இழப்பு அப்படிப்பட்டது. அதில் வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால், அவரது அந்த இழப்புக்கு மூல காரணம் மாயவன் என்பது தான்.
.......
சோகமே வடிவாய் அமர்ந்திருந்தார் குணமதி. ஆரஞ்சு பழ சாரை எடுத்துக்கொண்டு அவரிடம் வந்தார்கள் பவித்ராவும் வெண்மதியும்.
"மாம், ப்ளீஸ் ஏதாவது சாப்பிடுங்க" என்றாள் வெண்மதி.
"நான் நிச்சயமா சாப்பிடுவேன். நான் பட்டினி கிடப்பேன்னு நெனச்சியா? நான் ஏன் பட்டினி கிடக்கணும்? எனக்கு எவ்வளவு பொறுப்பு இருக்குன்னு எனக்கு தெரியாதா? என் மகனை குணப்படுத்தணும். அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். இந்த உலகத்துக்கு என்னால அதை செய்ய முடியும்னு காட்டணும். நிச்சயம் நான் செய்வேன். என் பிள்ளை ஊனமான பிள்ளை இல்ல. அவன் சிங்கம்... நம்ம பவித்ரா சொன்ன மாதிரி...!" என்றார்.
வெண்மதி ஆம் என்று தலையசைக்க, பவித்ரா புன்னகை புரிந்தாள்.
அப்பொழுது, அங்கு பையுடன் வந்த சந்தோஷை பார்த்து அவர்கள் திகைத்தார்கள்.
"நான் உள்ள வரலாமா?" என்றான் அவன்.
வெண்மதி குணமதியை பார்க்க, அவர் மெல்ல தலையசைத்தார். உள்ளே வந்த சந்தோஷ் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து சில முத்திரைத்தாள்களை எடுத்தான்.
"மதி, இதுல சைன் பண்ணு" என்று அந்த காகிதங்களை அவளிடம் நீட்டினான்.
அதை அவனிடமிருந்து பெறாமல் முகம் சுருக்கினாள் வெண்மதி.
"இதுல நான் ஏற்கனவே சைன் பண்ணிட்டேன். நீயும் சைன் பண்ணு"
அதை அவனிடமிருந்து பெற்று, படித்துப் பார்த்த வெண்மதி அதிர்ச்சிக்கு உள்ளானாள். அதிர்ச்சியோடு அவனை ஏறிட்டாள்.
"என்னோட எல்லா ஷேர்ஸையும் நான் தூயவன் பேருக்கு மாத்திட்டேன். நீயும் அவர் பேருக்கு மாத்தி கொடு"
வெண்மதியை விட அதிகமாய் அதிர்ச்சி அடைந்தவர் குணமதி தான்.
"தூயவனால தான் நம்ம கம்பெனி இந்த நிலைமைக்கு வந்திருக்கு. அது எனக்கு தெரியும். ஆனா என்னோட அப்பா, அவன்கிட்ட இருந்து சிஇஓ சேரை பறிக்க பிளான் பண்ணிக்கிட்டு இருக்காரு. அதனால தான் நான் என்னுடைய எல்லா ஷேரையும் தூயவன் பேருக்கு மாத்திட்டேன். இப்போ எங்க அப்பாவுடைய ஷேரும் மாயவன் அங்கிளோட ஷேரும் தான் மிச்சம் இருக்கு. மாயவன் அங்கிள் தூயவனுக்கு எதிரா எந்த முட்டாள்தனமும் செய்யமாட்டார்னு நினைக்கிறேன். அப்படியே அவர் செஞ்சாலும், அதைப்பத்தி நம்ம கவலைப்பட வேண்டியது இல்ல. மத்த சின்ன ஷேர் ஹோல்டர் கிட்ட இருந்து வேண்டிய ஷேர்ஸை வாங்கிக்கலாம். அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்"
ஒரே மூச்சில் பேசி முடித்த அவனை, கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் வென்மதியும் குணமதியும்.
"உங்க நம்பிக்கையை சம்பாதிக்க நான் இதையெல்லாம் செய்யல. இந்த வகையில நம்பிக்கையை சம்பாதிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும். நான் எதுக்காக ஃபிரான்ஸ்க்கு போக விரும்பினேன்னு தூயவனுக்கு நல்லா தெரியும். மதியை எங்க குடும்பத்துக்கிட்ட இருந்து தூரமா கூட்டிகிட்டுப் போகத்தான் நான் ஃபிரான்ஸ் போக விரும்பினேன். அதுக்காக தான் வலிய அந்த ப்ராஜெக்ட்டை நான் எடுத்துக்கிட்டேன். ஆனா, அதுக்கு முன்னாடி விரும்பத்தகாத நிறைய விஷயங்கள் நடந்துடுச்சு. நான் இன்னும் பத்து நாள்ல ஃபிரான்ஸ் போயாகணும். மத்த எல்லாத்தையும் நான் உங்ககிட்ட விட்டுடுறேன்"
வெண்மதியின் கண்களில் இருந்து கண்ணீர் உருண்டோடியது.
"ப்ளீஸ், ஸைன் பண்ணு மதி. எனக்காக இல்ல, உன் தம்பிக்காக"
அதில் கையெழுத்திட்டு அவனிடம் கொடுத்தாள் வெண்மதி.
அதைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றான் சந்தோஷ். தன் கண்களை துடைத்தபடி அங்கிருந்து சென்றாள் வெண்மதி.
"அவரைப் பார்த்தா நல்லவரா தெரியிறார்" என்றாள் பவித்ரா.
ஆம் என்று தலையசைத்தார் குணமதி.
"பவித்ரா, தூயா தனியா இருக்கான். அவனுக்கு ஏதாவது வேணுமான்னு கொஞ்சம் கேளு. கிச்சன்ல கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சுட்டு வரேன்"
சரி என்று தலையசைத்தாள் பவித்ரா. வெண்மதியும் குணமதியும் ஆழ்ந்த கவலையில் இருப்பது அவளுக்கு தெரியும். அவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள சற்று நேரம் எடுத்து கொள்ளட்டும். பவித்ராவும் தூயவனிடம் தான் திருமணத்திற்கு ஒப்புக் கொண்ட காரணத்தை கூற வேண்டும் என்று நினைத்தாள். அதனால் அவனது அறைக்குச் சென்றாள்.
அவள் தயக்கத்துடன் வருவதை பார்த்தான் தூயவன். அவனுக்கு முன்னால் வந்து நின்ற அவள், தன் வளையலை நிரடியபடி நிற்பதை பார்த்து புன்னகைத்தான் தூயவன்.
"என்னை மன்னிச்சிடுங்க. நான் அவங்க வாயை மூடத்தான் அப்படி சொன்னேன்" என்றாள் மெல்லிய குரலில்.
"நீ எதைப் பத்தி பேசுற பவித்ரா?" என்றான் தூயவன் வேண்டுமென்றே, அவள் எதைப் பற்றி பேசுகிறாள் என்று புரிந்தும் கூட.
"நான்... உங்களை... கல்யாணம் பண்ணிக்கிறேன்ன... சொல்லி இருக்க கூடாது..."
"அப்படின்னா நீ அதை மனசார சொல்லலயா?" என்றான் ஏமாற்றத்துடன்.
திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள் பவித்ரா. அவன் ஏன் இப்படி கேட்கிறான்...!
"அதுவும் சரி தான்... சுயமா எழுந்து உட்காரக்கூட முடியாத என்னை கல்யாணம் பண்ணிக்க யார் விரும்புவா?" சஞ்சனா கூறியதை திரும்ப கூறினான்.
பவித்ரா இல்லை என்று அவசரமாய் தலையசைத்தாள்.
"விடு, பவித்ரா. உனக்கும் வாழ்க்கை இருக்கு. நீயும் திடகாத்திரமா இருக்கிற ஒருத்தனை தானே கல்யாணம் பண்ணிக்கணும்னு விரும்புவ?" என்றான் சோகமாய்.
"இல்ல... ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு" என்றாள் தொண்டை அடைக்க.
"பரவாயில்ல. எனக்காக நீ வருத்தப்படவும் வேண்டாம், என்னை கல்யாணம் பண்ணிக்கவும் வேண்டாம். எல்லாமே நம்ம விதிப்படி தான் நடக்கும். நான் கடைசி வரைக்கும் இப்படியே இருக்கணும்னு அப்படிங்கறது என்னோட விதி போல இருக்கு. டாக்டர் சொன்ன மாதிரி, எனக்கு அன்பும் அரவணைப்பும் கிடைக்கவே கிடைக்காது போல இருக்கு" என்றான் வேறு எங்கோ பார்த்தபடி.
"நான் அந்த அர்த்தத்துல சொல்லல"
"நீ எந்த அர்த்தத்துல சொல்லி இருந்தாலும் அது என் வாழ்க்கையில என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகுது? இல்லைன்னா இல்லைன்னு தானே அர்த்தம்? அதுக்கு ஒரே ஒரு அர்த்தம் தான். நான் ரிஜக்டட் பீஸ். அவ்வளவு தான்"
"போதும் நிறுத்துங்க. இப்படி எல்லாம் பேசாதீங்க"
அவளை அமைதியாய் பார்த்தான் தூயவன்.
"நான் சொன்னது உண்மை. இன்னைக்கு நீங்க இப்படி இருக்கீங்க அப்படிங்குறதுக்காக நீங்க ஊனமானவர்னு அர்த்தம் இல்ல. உங்களுக்கு எல்லா விதத்திலும் தகுதியான ஒரு பொண்ணு உங்களுக்கு கிடைப்பா. ஆனா, அந்தப் தகுதியான பொண்ணு நான்னு நான் நினைக்கல"
"எல்லா தகுதியும் இருக்கிற பொண்ணை நான் எங்க போய் தேடுறது பவித்ரா? நீ பார்த்தல்ல அந்த பொண்ணு என்னை எப்படி அவமானப்படுத்தினா...? நேத்து வரைக்கும் அவ என் பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தான்னு சொன்னா யாராவது நம்புவாங்களா? அப்படி இருக்கும் போது, என்னை யார் கல்யாணம் பண்ணிக்குவா? அப்படியே யாராவது என்னை கல்யாணம் பண்ணிக்க முன் வந்தாலும், அவங்க என் பணத்துக்காக தான் என்னை கல்யாணம் பண்ணிக்குவாங்க. விடு, உன்னால என் வலியை உணர முடியாது" என்றான் வேதனையோடு.
"நான் அந்த அர்த்தத்துல சொல்லல என்னை நம்புங்க"
"ஒரு விஷயம் தான் என்னை ரொம்ப காயப்படுத்துது, பவித்ரா. எங்க அம்மா, அக்காவுக்கு பிறகு நீ தான் என்னை புரிஞ்சுகிட்ட ஒரே பொண்ணுன்னு நான் நெனச்சேன். ஆனா நீயும் என்னை ரிஜெக்ட் பண்ணிட்ட... பரவாயில்ல"
மீண்டும் அவன் ஏதோ சொல்ல நினைத்தபோது, அவனை தன் கையை காட்டி நிறுத்திய பவித்ரா.
"நீங்க என்னை நம்பினாலும் நம்பலனாலும் நான் அந்த அர்த்தத்துல சொல்லல. இப்ப சொல்றேன் கேளுங்க... உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க எந்த ஆட்சேபனையும் இல்லனா, நான் முழு மனசோட உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்"
"வேண்டாம், பவித்ரா. நீ என் மேல பரிதாபம் எல்லாம் பட வேண்டாம்"
"இல்ல, நான் உங்க மேல பரிதாப படல. ஏன்னா நீங்க யாருன்னு எனக்கு தெரியும்" என்றாள் கண்களை துடைத்தவாறு.
"நீ நிஜமாதான் சொல்றியா?"
"சத்தியமா சொல்றேன்"
"உன்னை நான் நம்பலாமா?"
"நான் என் வார்த்தையை எப்பவும் மாத்த மாட்டேன். நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்... உங்களைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" என்றாள் பவித்ரா. அது தூயவனை புன்னகைக்கு செய்தது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top