34 மாயவனும் சஞ்சனாவும்
34 மாயவனும் சஞ்சனாவும்
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தான் தூயவன். அவனது அறைக்கு செல்வதையே தவிர்த்தாள் பவித்ரா. ஏனென்றால் அவன் படுத்த படுக்கையாய் இருப்பதை அவளால் காண முடியவில்லை. சமையலறையில் குணமதிக்கு உதவுகிறேன் என்ற பெயரில் அங்கேயே பழியய் கிடந்தாள். ஆனால் குணமதி அவளது உதவியை நாடிய போதுஅவளால் தவிர்க்க முடியவில்லை.
"பவித்ரா, இந்த ஜூஸை தூயாகிட்ட கொடுத்துட்டு வரியா?" என்றார்.
அவரை மறுத்து பேசும் தைரியம் இல்லாத பவித்ரா, சரி என்று தலையசைத்தாள். அந்த பழச்சாறை அவரிடம் இருந்து பெற்று, தூயவனின் அறைக்கு வந்தாள். அவள் தன் முதுகுக்கு பின்னால் தலையணைகளை வைத்து அதன் மீது சாய்ந்தபடி அமர்ந்திருந்தான்.
பவித்ராவை பார்த்த அவன் புன்னகை புரிந்தான். செயற்கையான புன்னகையை அணிந்து கொண்டு அவனை நெருங்கினாள் பவித்ரா. அவள் கொண்டு வந்த பழச்சாறை அவனிடம் நீட்டினாள். அதை அவளிடம் இருந்து பெற்று அவளை உறுத்து பார்த்தபடி பருகினான் தூயவன். அவன் அதை குடித்து முடிக்கும் வரை காத்திருந்தாள் பவித்ரா. காலி தம்ளரை அவளிடம் கொடுத்தான் தூயவன். அதை எடுத்துக்கொண்டு அவள் அங்கிருந்து செல்வதற்கு முன்,
"பவித்ரா" என்றான்.
"ஆங்?"
"எனக்கு முதுகு வலிக்குது. என்னை கொஞ்சம் படுக்க வைக்கிறியா?" என்றான்.
காலி தம்ளரை கீழே வைத்துவிட்டு, அவன் முதுகுக்கு பின்னால் இருந்த தலையணைகளை ஒன்றன்பின் ஒன்றாக மெல்ல அகற்றினாள் பவித்ரா. ஒரு கட்டத்தில் அவனால் தனியாக அமர முடியவில்லை. கட்டிலில் அவனுக்கு எதிராக அமர்ந்து கொண்டு அவன் தோளை ஒரு கையால் பற்றிக் கொண்டு மறு கையால் தலையணையை அகற்றினாள். பிறகு மெல்ல அவனை படுக்க வைத்தாள். அவள் எழுந்து நின்றபோது, அவள் கையை பற்றிய தூயவன்,
"தேங்க்ஸ்" என்றான்.
"எனக்கு நீங்க தேங்க்ஸ் சொல்ல வேண்டாம்"
"ஏன்?"
"உங்களுக்கு உதவி செய்யறது என்னோட கடமை"
"ஏன்?"
"நான் உங்களுக்கு இதையெல்லாம் செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்"
"ஏன்?"
"நீங்க தான் எனக்கு எல்லாமே... உங்களால தான் நான் உயிரோட இருக்கேன். நீங்க எனக்கு செஞ்சதை எல்லாம் பார்க்கும்போது நான் உங்களுக்கு செய்யறது ஒண்ணுமே இல்ல"
தூயவன் புன்னகைத்தான்.
"உங்களுக்கு ஏதாவது வேணுமா?"
அவன் ஆம் என்று தலையசைத்தான்.
"என்ன வேணும் சொல்லுங்க?"
"இப்போ இல்ல" என்று புன்னகைத்தான்.
அதைக் கேட்டு வேதனையுடன் புன்னகை புரிந்தாள் பவித்ரா.
"இவ்வளவு அவசரமா எங்க போற? இங்க உட்காரு" என்றான்.
பவித்ராவுக்குள் தடுமாற்றம் ஏற்பட்டது. அவனுடன் அமர்ந்திருப்பது என்பது மிகப்பெரிய சவால். தயக்கத்துடன் நாற்காலியில் அமர்ந்தாள்.
"என்கிட்ட ஏதாவது பேசு"
"எதைப் பத்தி பேசுறது?"
"எதையாவது பேசு. இந்த ரூம்ல உட்கார்ந்து ரொம்ப போர் அடிக்குது. அக்கா சந்தோஷ் கூட ஃபோன் பேசறதுல ரொம்ப பிஸி ஆயிட்டாங்க. மாம் எனக்கு ஹெல்த்தி ஃபுட் ப்ரிப்பேர் பண்ணிக்கிட்டு இருக்காங்க. நீ மட்டும் தான் எனக்காக இருக்க. அதனால நீ ஏதாவது பேசு"
"என்ன பேசறதுன்னு எனக்கு தெரியலையே"
"சரி பாதாம் அல்வா எப்படி செய்யணும்னு சொல்லு" என்ற அவனை விசித்திரமாய் பார்த்து,
"பாதாம் அல்வாவா?" என்றாள்.
ஆம் என்று தலையசைத்தான் தூயவன்.
"பாதாமை நைட் ஃபுல்லா ஊற வைச்சி அடுத்த நாள் தோல் உரிச்சி எடுத்து வச்சுக்கணும். அப்புறம் அதை அரைச்சு..." என்று நிறுத்தியவள்,
"உங்களுக்கு அது வேணும்னா நான் செஞ்சு கொடுக்குறேனே" என்றாள்.
அதைக் கேட்டு புன்னகைத்த அவன்,
"சரி நீ போ" என்றான்.
விட்டால் போதும் என்று அங்கிருந்து ஓடிப் போனாள் பவித்ரா. புன்னகையோடு கண்களை மூடினான் தூயவன்.
......
தூயவனின் மருத்துவ விவரங்கள் அடங்கிய கோப்பை குணமதியுடன் பார்த்துக் கொண்டிருந்தார் மாயவன்.
"நம்ம தூயாவை அமெரிக்காவுக்கு கூட்டிட்டு போகணும். அங்க ட்ரீட்மென்ட் எல்லாம் ரொம்ப அட்வான்ஸ் லெவல்ல இருக்குமாம்" என்றார் குணமதி.
"டாக்டர் என்ன சொன்னாருன்னு நீ மறந்துட்டியா?" என்றார் மாயவன்.
"எதை சொல்றீங்க?"
"அவனுக்கு ட்ரீட்மென்ட்டை விட அன்பும் அரவணைப்பும் தான் முக்கியம்னு சொன்னார் இல்ல?"
"ஆமாம், அதனால என்ன? அவன் மேல அன்பையும் அரவணைப்பையும் காட்டத்தான் நம்ம இருக்கோமே..."
"அது போதும்னு எனக்கு தோணல"
"என்ன செய்யணும்னு சொல்றீங்க?"
"தூயா தன்னுடைய நம்பிக்கையை இழந்திருக்கான். அவனோட நம்பிக்கையை திரும்பிக் கொடுக்கிற அளவுக்கு அவனுக்கு அன்பு காட்ட ஆள் வேணும். அவன் எவ்வளவு மனசுடஞ்சி போயிருக்கான்னு நீ பாக்கலையா? அவன் தன்னோட நம்பிக்கையை இழந்துட்டான். அதை திரும்ப அடைய நம்மளுடைய அன்பு போதாது"
"என்ன சொல்ல வரீங்க?"
"நம்ம அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்"
அதைக் கேட்டு அதிர்ந்தார் குணமதி.
"என்னது? கல்யாணமா? இந்த நிலைமையிலயா? நிச்சயம் தூய அதுக்கு ஒத்துக்க மாட்டான்"
"ஆமாம், ஒத்துக்க மாட்டான் தான். நம்ம தான் அவனை சம்மதிக்க வைக்கணும்"
குணமதி யோசனையில் ஆழ்ந்தார்
"சஞ்சனா அவனை காதலிக்கிறாள்னு நமக்கு தெரியும். இதுவரைக்கும் அதை தூயா உணர்ந்தது இல்ல. அவளோட காதலை அவன் புரிஞ்சுக்கிற நேரம் இது தான். அவனோட ஊனத்தை பெருசு படுத்தாம, அவள் அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவளோட காதல் எப்படிப்பட்டதுன்னு அவன் தெரிஞ்சிக்குவான். நீ என்ன சொல்ற?"
அவருக்காக பரிதாப பட்டார் குணமதி. ஆனால் அதே நேரம், சஞ்சனா உண்மையில் யார் என்பதை மாயவனுக்கு புரிய வைக்க வேண்டிய சரியான தருணம் அது தான் என்பதையும் அவர் உணர்ந்தார்.
"என்ன மாதிரி ஐடியாவை குடுத்து இருக்கீங்க" என்றார் குதூகலமாய்.
"என் பிள்ளை நல்லா இருக்கணும்னு தான் நானும் நினைக்கிறேன்"
உள்ளுற நகர்த்துக்கொண்டார் குணமதி.
"தூயாவை பாக்க இன்னைக்கு சாயங்காலம் மாது வரான்"
"அப்படின்னா, தூயாவுக்கு முன்னாடியே அவர் என்ன நினைக்கிறார்னு கேட்டுடலாம். அப்ப தான், தூயவுக்கும் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறதை தவிர வேறு வழி இருக்காம போகும்"
நிம்மதியுடன் தலையசைத்தார் மாயவன். உள்ளுற அவரைப் பார்த்து கைகொட்டி எக்களித்த குணமதி, தன் அப்பாவி கணவனை எண்ணி பரிதாபமும் கொண்டார். பாவம் அவர், இன்னும் மனிதர்களை புரிந்து கொள்ளவில்லை.
மாலை
மாயவனும் குணமதியும் எதிர்பாராத விதமாய், மாதேஷ் தன் குடும்பத்தாருடன் அங்கு வந்தார். அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றார் மாயவன். வெண்மதியை பார்த்து புன்னகை புரிந்தான் சந்தோஷ். அவளும் அவனது புன்னகைக்கு மதிப்பளித்து புன்னகைத்தாள்.
"தூயவன் எப்படி இருக்கான்?" என்றார் மாதேஷ்.
"இருக்கான்" என்றார் மாயவன்.
"ஆக்சிடென்ட்க்கு பிறகு நாங்க அவனை மீட் பண்ணல. அதனால பாத்துட்டு போகலாம்னு வந்தோம்" என்றார் மாதேஷ்.
"ப்ளீஸ், வாங்க" என்று அவனது அறைக்கு அவர்களை அழைத்துச் சென்றார் மாயவன்.
பவித்ராவை அழைத்தார் வெண்மதி. அவள் சமையல் அறையில் இருந்து ஓடி வந்தாள்.
"நீ அவங்களுக்கு கொஞ்சம் காபி கொண்டு வரியா?" என்றார் குணமதி.
"நான் கொண்டு வரேன்" என்றாள் வெண்மதி.
"இல்ல மதி, நீ தூயா ரூமுக்கு போ. பவித்ரா கொண்டு வருவா" என்றார்.
தன் கண்களை சுருக்கி வெண்மதி அவரைப் பார்க்க, தன் கண்களை மெல்ல மூடித் திறந்தார் குணமதி. வெண்மதி அவர்களை பின்தொடர்ந்து சென்றாள்.
அவர்களுக்கு காபி கலந்து கொண்டு வர சமையலறைக்கு சென்றாள் lபவித்ரா.
தூயவனின் அறைக்குள் மாயவனுடன் நுழைந்தார்கள் மாதேஷ் குடும்பத்தினர். தன் வலது கையை மடித்து நெற்றியில் வைத்தபடி படுக்கையில் படுத்திருந்தான் தூயவன். அவர்கள் வருவதைப் பார்த்த தூயவன், சந்தோஷை பார்த்து புன்னகை புரிந்தான். நான்கு நாட்களாய் மழிக்கப்படாமல் இருந்த அவனது தாடி, அவனது கவலைக்கிடமான நிலையை காட்டியது. அவன் எழுந்து அமர முயன்று,
"ஸ்ஸ்ஸ்... " என்று தன் இடுப்பை பிடித்துக் கொண்டு வலியில் தவித்தான்.
மாயவன் அவனுக்கு அமருவதற்கு உதவினார். அவனுக்கு பின்னால் சில தலையணைகளை வைத்து அவனை சாய்ந்து கொள்ளச் செய்தான் சந்தோஷ். கட்டிலின் முனையில் மாதேஷ் அமர்ந்து கொள்ள, சோபாவில் அமர்ந்து கொண்டாள் சஞ்சனா.
"எப்படி இருக்கீங்க தூயவன்?" என்றான் சந்தோஷ்.
"நான் எப்படி இருக்கேன்னு நீங்க தான் பாக்குறீங்களே!" என்று பெருமூச்சு விட்டான் தூயவன்.
"நீங்க என்ன செய்யறதா இருக்கீங்க?" என்றார் மாதேஷ்.
தூயவனின் சிகிச்சை பற்றி அவர் கேட்கிறார் என்று மாயவனுக்கு புரிந்தது.
"நாங்க அவனை அமெரிக்காவுக்கு கூட்டிட்டு போலாம்னு முடிவு பண்ணி இருக்கோம். அவன் குணமாக இருபது சதவீதம் வாய்ப்பு இருக்கிறதா டாக்டர் சொல்றாரு" என்றார் நம்பிக்கையுடன்.
வேதனை நிறைந்த சிரிப்பு ஒன்றை உதிர்த்தான் தூயவன்.
"நம்பிக்கையை கைவிடாதிங்க தூயவன். நீங்க சீக்கிரமாவே குணமாயிடுவீங்க. நாங்க உங்களை பழையபடி நிச்சயம் பார்ப்போம்" என்றான் சந்தோஷ்.
அவன் நம்பிக்கை இல்லாமல் புன்னகைக்க, அது வெண்மதிக்கு கவலையை தந்தது எவ்வளவு தன்னம்பிக்கையோடு இருந்தவன் அவன்... இன்று தனது ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்திருக்கிறான். அவனுக்காக வருந்தினாள் வெண்மதி.
"டாக்டர் எங்களை வேற ஒரு விஷயமும் செய்ய சொல்லி இருக்காரு" என்று மெல்ல ஆரம்பித்தார் மாயவன்.
அனைவரும் அவரை ஏறிட்டார்கள், தூயவன் உட்பட. அதே நேரம் அவர்களுக்கு காப்பியுடன் அந்த அறைக்குள் நுழைந்தாள் பவித்ரா. அதை அவர்களுக்கு வழங்கும் படி சைகை செய்தார் குணமதி. விருந்தாளிகளுக்கு அந்த காப்பியை வழங்கினாள் பவித்ரா.
"டாக்டர் என்ன சொன்னாரு?" என்றார் மாதேஷ்
"தூயாவுக்கு அன்பும் அக்கறையும் தேவைன்னு சொன்னாரு"
அவரை எரிச்சலோடு ஏறிட்டான் தூயவன்.
"நாங்க அவனுக்குன்னு ஒருத்தர் வேணும்னு நினைக்கிறோம்" என்று அவர் கூற, தன் முகத்தை சுருக்கினான் தூயவன்.
"அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க இது தான் சரியான நேரம்னு நாங்க நினைக்கிறோம்"
தூயவனின் அதிர்ச்சிக்கு அளவே இல்லை. அவனைப் பார்க்காமல் தவிர்க்கவே முடியவில்லை பவித்ராவால்.
"சஞ்சனா தூயவனை எவ்வளவு ஆழமா காதலிக்கிறாள்னு நமக்கு தெரியும். அவ அன்பையும் அரவணைப்பையும் அவனுக்கு காட்டி நிச்சயம் அவனை குணப்படுத்துவாள்னு எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றார் மாயவன்.
மாதேஷ் சஞ்சனாவை பார்க்க, அவர்கள் இருவரையும் அமைதியாய் பார்த்துக் கொண்டு நின்றான் சந்தோஷ். சஞ்சனாவின் முகத்தில் அதிகப்படியான அதிர்ச்சி தெரிந்தது.
"தூயவன் அமெரிக்காவுக்கு போகும் போது, சஞ்சனாவும் அவன் கூட இருந்தா நல்லா இருக்கும்னு எனக்கு தோணுது"
"எக்ஸ்கியூஸ் மீ அங்கிள்..." என்று எழுந்து நின்றாள் சஞ்சனா.
அனைவரும் அவளை நோக்கி திரும்பினார்கள்.
"என்னை பத்தி நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? நான் உங்க பையனுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்குறதுக்கு தான் இங்க இருக்கேனா? நான் ஒன்னும் நர்ஸ் இல்ல. எனக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு. என்னை என் புருஷன் கூட பார்க்கும்போது பொண்ணுங்க என்னை பார்த்து பொறாமை படணும். இவனை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா அது நடக்குமா?"
மாயவன் அதிர்ச்சியில் உறைந்தார். இப்படி எல்லாம் பேசுவது சஞ்சனாவா?
"நீ அவனை காதலிக்கிறியே..."
"காதலிச்சேன்... அவன் ஃபிட் அண்ட் ஃபைனா இருந்தப்போ... தன்னிச்சையா உட்கார கூட முடியாத ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க யார் விரும்புவா?
அதிர்ச்சியாக மட்டுமல்ல, அவமானமாகவும் உணர்ந்தார் மாயவன்.
"ஏய்...!" என்று பவித்ராவை நோக்கி சொடுக்கு போட்டாள் சஞ்சனா.
அவளை நோக்கி திடுக்கிட்டு திரும்பினாள் பவித்ரா.
"இவ இந்த வீட்டு வேலைக்காரியா இருக்ககூட தயாரா இருந்த இந்த பொண்ணு. ஆனா இவ கூட அவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க மாட்டா" என்று மாயவனை பார்த்த அவள்,
"நான் அவனை கல்யாணம் பண்ணிக்க விரும்புவேன்னு நீங்க எப்படி எதிர்பார்த்திங்க? தூயவன் பவித்ராவை காப்பாத்தினான்... அவளுக்கு இருக்க இடம் கொடுத்தான்... அவளோட ஸ்டேட்டஸ் என்னன்னு நமக்கு நல்லாவே தெரியும். ஆனா இப்போ, அவ கூட அவனை கல்யாணம் பண்ணிக்க மாட்டா" என்று மீண்டும் பவித்ராவை நோக்கி திரும்பிய அவள்,
"சொல்லு பவித்ரா... ஒரு பொண்ணு எப்படிப்பட்டவனை கல்யாணம் பண்ணிக்க விரும்புவாள்னு இவங்களுக்கெல்லாம் புரியிற மாதிரி சொல்லு" என்று எக்களித்தாள், எல்லா பெண்களும் தன்னைப் போலவே தான் இருப்பார்கள் என்ற தப்பான கணக்கோடு.
மாயவனின் வாயை மூடுவதற்காக தான் சஞ்சனா அதை கூறினாள். ஆனால் அவள் சிறிதும் எதிர்பார்க்காத வண்ணம்,
"எந்த பொண்ணுமே, தன்னோட புருஷன் தன்னை அரணா இருந்து பாதுகாக்கணும்னு நினைப்பா, தன்னை மதிக்கணும்னு நினைப்பா, சரி சமமா நடத்தணும்னு நினைப்பா. அந்த எல்லா குணத்தையும் சேர்த்து நான் பார்த்த ஒரே மனுஷன் தூயவர் மட்டும் தான்...!"
"ஓ அப்படியா? அப்போ நீயே ( என்பதை அழுத்தி ) அவனை கல்யாணம் பண்ணிக்கோ" என்றாள் சஞ்சனா.
"நான் அவரை கல்யாணம் பண்ணிக்குவேன்... அவர் (என்பதை அழுத்தி) என்னை மாதிரி லோ கிளாஸ் பொண்ண கல்யாணம் பண்ணிக்க தயாராக இருந்தா...! ஏன்னா, அவர் தன்னுடைய நம்பிக்கையை இழந்திருக்கலாம். அதுக்காக அவருடைய தரம் தாழ்ந்துட்டதா அர்த்தமல்ல. சிங்கத்தோட கால் பழுதுபட்டாலும், அதோட சீற்றம் குறையாது. சிங்கம் சிங்கம் தான்...!" என்றாள் அவளது கண்களை நேராய் பார்த்தவாறு
தன் உடலின் மொத்த ரத்த ஓட்டமும் புத்துணர்ச்சி பெற்று விட்டதாய் உணர்ந்தான் தூயவன். திணறடிக்கும் மகிழ்ச்சியில் திளைத்தான் அவன். தன்னை ஒருவர் உயர்த்திப் பிடிப்பது என்பதே பெருமிதம். அதையும், தனக்கு பிடித்த பவித்ரா செய்தது பெருமிதத்திலும் பெருமிதம்.
பவித்ராவை பேயறைந்ததைப் போல் பார்த்துக் கொண்டு நின்றாள் சஞ்சனா. தான் கொண்டு வந்த காப்பி ட்ரேவை நெஞ்சோடு அணைத்தக்கொண்டு தலை குனிந்தபடி அங்கிருந்து சென்றாள் பவித்ரா.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top