32 பரிட்சை
32 பரிட்சை
தூக்கி வீசப்பட்ட தூயவன் தரையில் உருண்டான். தனக்கு ஏற்பட்ட வலியை பொருட்படுத்தாமல் எழுந்து நின்ற அவன், பவித்ராவை நோக்கி ஓடினான். ஆனால் அவன் சிறிதும் எதிர்பாராத நிலையில் மீண்டும் ஒரு கார் அவன் மீது மோதியது. அவனது தொண்டையில் இருந்து எழுந்த ஒரே சத்தம்,
"பவித்....ரா...!" என்பது தான்.
"என்னங்க..." என்று தன் இதயம் நோக அழுதாள் பவித்ரா.
தன் முதுகு வடத்தில் கூர்மையான வலியை உணர்ந்தான் தூயவன். அது அவனை எழ விடவில்லை. இருந்தும் அவன் எழு முயன்றான். ஆனால் அவனால் அது இயலவில்லை. வலியின் வேதனையால் அவனது கண்கள் சிவந்தன. அவன் உடல் முழுவதும் ஏகப்பட்ட சிராய்ப்புகள் ஏற்பட்டு இரத்தம் கசிந்தது.
பவித்ராவை தன் காருக்குள் தள்ளி அங்கிருந்து கிளம்பி சென்றான் சின்னசாமி.
"பவித்...ரா...." என்று மீண்டும் தன் பல்லை கடித்தவாறு கத்தினான் தூயவன்.
குணமதியும் வெண்மதியும் அவனை நோக்கி ஓடினார்கள். இருவரும் அவனைத் தூக்க முயன்ற போது,
"ஆஆஆஆ..." என்று வலியில் அலறினான் தூயவன், அது இதற்கு முன் எப்பொழுதும் அவன் செய்யாதது. அது அவனது வலியின் தீவிரத்தை காட்டியது. கண்ணீர் சிந்திக்க படி வெண்மதியை ஏறிட்டார் குணமதி.
"பவித்ரா..." வலியில் துடித்தபடி முணுமுணுத்தான் தூயவன்.
"மதி, போலீசுக்கு கால் பண்ணு" என்றார் குணமதி.
"அக்கா, பாரிக்கு கால் பண்ணுங்க" என்றான் தூயவன் வேதனையுடன்.
தன் கைபேசியை எடுத்த வெண்மதி, சில நொடி யோசித்தாள். பாரிகோ, காவலருக்கோ ஃபோன் செய்யாமல் சந்தோஷிற்கு ஃபோன் செய்தாள் வெண்மதி. காவல் அதிகாரியின் அழைப்புக்காக தன் கைபேசியை கையில் வைத்துக்கொண்டு காத்திருந்தான் சந்தோஷ். தனக்கு வெண்மதியிடம் இருந்து அழைப்பு வருவதை பார்த்து அவன் வியப்பில் விழி விரித்தான். இரண்டாவது மணியில் அந்த அழைப்பை ஏற்றான்.
"சந்தோஷ்..."
சந்தோஷின் பெயரை கேட்ட தூயவனின் முகம் அமைதி அடைந்தது. குணமதியோ ஆச்சரியமடைந்தார்.
"என்ன ஆச்சு, மதி?" என்றான் சந்தோஷ்.
"சின்னசாமி பவித்ராவை தூக்கிக்கிட்டு போயிட்டான்"
அவளது தொண்டை அடைப்பதை உணர்ந்த சந்தோஷ் உஷாரானான்.
"எப்போ? எங்கிருந்து?" என்ற கேள்வியை எழுப்பினான் காவல் உயர் அதிகாரிக்கு தெரிவிப்பதற்காக.
"இப்போ தான்... ராஜிவ் நகர் பெருமாள் கோவில்ல இருந்து"
"தூயவன் எங்க?"
"அவனை காரை வச்சி அடிச்சிட்டாங்க. அவன் ரொம்ப மோசமா அடிபட்டு கிடக்கிறான்" என்று அவள் அழ, தன் தலையில் அடித்துக் கொண்டான் சந்தோஷ் தூயவனின் நிலையில் எண்ணி.
"நீ எதுக்கும் கவலைப்படாத. நான்..."
என்று மேலே பேச போனவனை தடுத்து,
"சந்தோஷ், நீங்க மட்டும் பவித்ராவை திரும்ப கூட்டிகிட்டு வந்துட்டா, நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றாள்.
நிம்மதியோடு தன் தலையை தரையில் கிடத்தினான் தூயவன். வெண்மதிக்காக நிச்சயம் சந்தோஷ் பவித்ராவை திரும்பக் கொண்டு வருவான் என்று அவனுக்கு நம்பிக்கை இருந்தது.
அங்கிருந்து சிலர் தூயவனை காரில் ஏற்ற அவர்களுக்கு உதவினார்கள்.
மறுபுறம் வெண்மதி கூறியதை கேட்ட சந்தோஷ், சிலை என நின்றான். அழைப்பு துண்டிக்கப்படும் சத்தம் அவனுக்கு கேட்டது. அது அவனை சுயநினைவுக்கு இட்டு வந்தது. வெகு நாட்களாய் அவன் எதை வெண்மதியிடம் இருந்து கேட்க காத்திருந்தானோ, அதை இன்று அவள் கூறிவிட்டாள். ஆனால் அது, அதைப்பற்றி யோசிப்பதற்கான நேரம் அல்ல. அவள் கூறியதை செய்து முடித்த பிறகு தான் அதைப்பற்றி அவன் மகிழ்ச்சி அடைய முடியும். காவல் உயர் அதிகாரிக்கு ஃபோன் செய்தான்.
"சார், அவங்க பவித்ராவை ராஜீவ் நகர் பெருமாள் கோவிலிலிருந்து கடத்திட்டாங்க"
"நான் இம்மீடியட் ஆக்சன் எடுக்கிறேன்"
அழைப்பை துண்டித்து விட்டு, காவல்துறையினருக்கு உத்தரவுகளை பிறப்பித்தார் அந்த அதிகாரி.
மீண்டும் வெண்மதிக்கு ஃபோன் செய்தான் சந்தோஷ். அவள் அந்த அழைப்பை ஏற்றாள். அவள் எதுவும் கேட்பதற்கு முன்,
"மதி, லைப் ஹாஸ்பிடலுக்கு தூயவனை கூட்டிக்கிட்டு போ. அது தான் கோவிலுக்கு ரொம்ப பக்கத்துல இருக்கு. அங்க இருக்கிற டாக்டர்கிட்ட நான் பேசுறேன்"
"தேங்க்ஸ்" என்று கூறிவிட்டு லைஃப் மருத்துவமனையை நோக்கி காரை செலுத்தினாள் வெண்மதி.
பின் இருக்கையில் முனங்களுடன் கிடந்தான் தூயவன். அவனைப் பார்த்து கண்ணீர் வடித்தபடி இருந்தார் குணமதி. சந்தோஷ் கூறியது போலவே அந்த மருத்துவமனைக்கு அவர்கள் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வந்தடைந்தார்கள். அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் அவர்களுக்காக காத்திருந்தார்கள். சந்தோஷ் கூறியது போலவே அந்த மருத்துவர்களிடம் அவன் பேசி விட்டிருந்தான் போலிருக்கிறது. தூயவன் அறுவை சிகிச்சை அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டான்.
அந்த அறையின் வெளியே பதற்றத்துடன் அமர்ந்திருந்தார்கள் வெண்மதியும் குணமதியும். ஒருபுறம் தூயவன் அறுவை சிகிச்சை அருகில் இருக்கிறான். மறுபுறம் பவித்ரா கடத்தப்பட்டு விட்டாள். அவர்கள் கையாலாகத நிலையை உணர்ந்தார்கள். மாயவனிடமிருந்து அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது என்று அவர்களுக்கு தெரியும். சந்தோஷ் என்ன செய்யப் போகிறான் என்றும் தெரியவில்லை. இந்த ஒரு சந்தர்ப்பத்தை தான் சந்தோஷுக்கு வழங்க காத்திருந்தாள் வெண்மதி. ஒருவேளை அவன் பவித்ராவை திரும்ப அழைத்து வந்து விட்டால், அவன் அவள் வைத்த பரிட்சையில் தேறி விடுவான்.
இதற்கிடையில்,
சுங்க சாவடியில் போலீசார் வாகனங்களை பரிசோதித்துக் கொண்டிருப்பதை பார்த்த சின்னசாமி காரை நிறுத்துமாறு பணித்தான். காவல்துறை அதிகாரியின் உத்தரவின் பெயரில் அனைத்து சுங்கச்சாவடிகளும் காவலர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்திருந்தது.
"காரை திருப்பு..." என்றான் சின்னசாமி.
அவனது ஓட்டுநர் காரை திறப்ப முயன்றதை கண்ட போலீசார் அவனது காரின் டயரை துப்பாக்கியால் சுட்டார்கள். அந்த கார் தாறுமாறாய் ஓடி ஒரு மரத்தில் மோதி நின்றது. நிலைமையை புரிந்து கொண்டுவிட்ட ஓட்டுநர், காவலர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, அந்த காரை அப்படியே விட்டுவிட்டு அதில் இருந்து இறங்கி ஓடினான்.
"டேய் வெள்ளைசாமி" என்று கத்தினான் சின்னசாமி.
ஆனால் வெள்ளைச்சாமி நிற்கவில்லை. எதையோ யோசித்த சின்னசாமி, தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து பவித்ராவை குத்துவதற்காக ஓங்கினான். எக்காரணத்தைக் கொண்டும் அவளை விட்டு விட அவன் தயாராக இல்லை. அவள் அவனைப் பிடித்து தள்ளிவிட்டு காரை விட்டு கீழே இறங்கி ஓடினாள். காவலர்கள் தங்கள் காரை நெருங்குவதை பார்த்த சின்னசாமி, காரை விட்டு இறங்கி ஓட முயன்றான். காவலர்கள் அவனை துரத்திக் கொண்டு ஓடிய அதே நேரம், பவித்ரா காவலர்களிடம் வந்து சேர்ந்தாள்.
அடுத்து சில நிமிடங்களுக்குள் பவித்ரா சந்தோஷிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
லைஃப் மருத்துவமனை
தன் கையை பிசைந்தபடி அமர்ந்திருந்தாள் வெண்மதி. அவளது தோளைத் தொட்ட குணமதி
"தூயாவுக்கு ஒன்னும் ஆகாது. கவலைப்படாதே" என்றார்.
"பவித்ரா?"
என்ன பதில் கூறுவது என்று குணமதிக்கு தெரியவில்லை. தூயவனுக்கு சந்தோஷின் மீது இருந்த அளவிற்கான நம்பிக்கை அவருக்கு இருக்கவில்லை.
"கடவுளை நம்பு" என்று தன் தலையை உயர்த்தியவரின் முகபாவம் சந்தோஷமாய் மாறியது.
"பவித்ரா" என்று அவர் இதழ்கள் முணுமுணுத்தன.
அந்த திசை நோக்கி திரும்பிய வெண்மதி, பவித்ரா சந்தோஷுடன் வருவதை கண்டாள். அவர்களை நோக்கி ஓடிச் சென்ற பவித்ரா,
"அம்மா, அவர் எப்படி இருக்காரு? அவருக்கு ஒன்னும் இல்லையே?" என்றாள்.
"நீ தான் திரும்ப வந்துட்டியே... அவனுக்கு ஒன்னும் ஆகாது" என்று அவளை அணைத்துக் கொண்டார் குணமதி.
தனது வார்த்தையை காப்பாற்றி விட்ட அந்த ஒருவன் மீது வெண்மதியின் பார்வை குவிந்திருந்ததை கவனித்தார் குணமதி.
"தூயவன் எப்படி இருக்கார்?" என்றான் சந்தோஷ்
"ஆபரேஷன் தியேட்டர்ல இருக்கான்" என்றாள் வெண்மதி.
"அவருக்கு ஒன்னும் ஆகாது"
அப்பொழுது அறுவை சிகிச்சை அறையில் இருந்து ஒரு மருத்துவர் வெளியே வந்தார்.
"டாக்டர் தூயவன் எப்படி இருக்காரு?" என்றான் சந்தோஷ்.
"பவித்ரா யாரு?" என்றார் மருத்துவர் அவர் கேள்விக்கு பதில் அளிக்காமல்.
அனைவரும் பவித்ராவை பார்த்தார்கள்.
"அவர் அவங்க பேரை தான் சொல்லிக்கிட்டு இருக்காரு. நாங்க அவருக்கு அனஸ்தீஷியா கொடுத்தோம். ஆனா அது வேலை செய்ய மாட்டேங்குது. அவரோட மைண்டும் பாடியும் கோவாடினேட் பண்ணல"
"இப்போ என்ன செய்யறது டாக்டர்?" என்றான் சந்தோஷ்.
பவித்ராவை பார்த்த மருத்துவர்,
"நீங்க எங்க கூட வாங்க" என்றார்.
அவள் குணமதியை பார்க்க, செல் என்பது போல் அவர் சைகை செய்தார். மருத்துவருடன் உள்ளே விரைந்தாள் பவித்ரா. அவர்களை சந்தஷும் பின் தொடர்ந்து சென்றான். அறுவை சிகிச்சை அறையில் கட்டிலில் கிடந்த தூயவனை பார்த்து தன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை பவித்ராவால். மெல்ல அவனுக்கு அருகில் சென்றாள். அவன் அவளது பெயரை உச்சரித்துக் கொண்டிருப்பதை அவளால் கேட்க முடிந்தது.
"அவரை கூப்பிடுங்க" என்றார் மருத்துவர்.
"என்னங்க" என்று அவன் கரத்தை மெல்ல பற்றினாள் பவித்ரா.
மெல்ல கண்களைத் திறந்த தூயவனின் முகத்தில் மெல்லிய புன்னகை இழையோடியது.
"பவித்ரா" என்று புன்னகையோடு கூறிய அவன், மெல்ல கண்களை மூடினான்.
அந்த காட்சியை கண்ட சந்தோஷ் திகைப்படைந்தான். தூயவனின் காதல் அவன் எண்ணியதை விட ஆழமானதாய் இருக்கிறது. அப்படிப்பட்ட காதலை காப்பாற்றும் சந்தர்ப்பம் தனக்கு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான் சந்தோஷ்.
"நீங்க வெளியில வெயிட் பண்ணுங்க, மேடம்" என்றார் மருத்துவர்.
தூயவனை திரும்பத் திரும்ப பார்த்தபடி அங்கிருந்து சென்றாள் பவித்ரா.
"நல்ல காலம் நீ திரும்ப வந்துட்ட" என்றார் குணமதி.
அவளை பின்தொடர்ந்து வந்த சந்தோஷின் மீது வெண்மதியின் பார்வை இருந்தது.
"தூயவன் நல்லா இருப்பாரு. பவித்ராவை பார்த்த பிறகு தான் அவரு அன்கான்ஷியஸ் ஆனார். அவரோட மனசையும் புத்தியையும் பவித்ரா கம்ப்ளீட்டா ஆக்குபை பண்ணியிருக்காங்க" என்றான் சந்தோஷ்.
"என்னால தான் அவருக்கு இந்த நிலைமை" என்று உணர்ச்சிவசப்பட்டு அழுத பவித்ராவை ஏறிட்டாள் வெண்மதி.
"தூயவன் அப்படி நினைப்பார்னு எனக்கு தோணல. அவர் எது செஞ்சாலும் முழு மனசோட தான் செய்வார். அந்த உண்மையை நம்ம ஒத்துக்காம போக முடியாது" என்றான் சந்தோஷ் வெண்மதியை பார்த்தவாறு. தன் கண்களால் அவனுக்கு ஏதோ குறிப்பால் உணர்த்தினாள் வெண்மதி. அதை கண்ட சந்தோஷ் முகம் சுருக்கினான்.
"இருங்க நான் உங்களுக்கு காபி வந்துகிட்டு வரேன்" என்றான் சந்தோஷ்.
"இத்தனை பேருக்கு நீங்க தனியா எப்படி கொண்டு வருவீங்க? இருங்க நானும் வரேன்" என்றாள் வெண்மதி.
அவர்கள் இருவரும் கேன்டினை நோக்கி நடந்தார்கள்.
"நீ சொல்றது உண்மையா? தூயவன் பவித்ராவை காதலிக்கிற விஷயம் அவங்களுக்கு தெரியாதா?"
"எங்களுக்கு நிச்சயமா தெரியல. அவனை ஏத்துக்க அவங்க தயங்குறாங்கன்னு நினைக்கிறேன்"
"என்ன தயக்கம்?"
"ஸ்டேட்டஸ் டிஃபரன்ஸ்... இன்னும் நிறைய..." என்று பெருமூச்சு விட்டாள் வெண்மதி.
அதைக் கேட்டு வியந்த சந்தோஷ்,
"சீக்கிரமே அவங்க தூயவனை ஏத்துக்குவாங்க" என்றான்.
"நாங்களும் அப்படித்தான் நம்புறோம்"
அவர்கள் காபி குவளைகளுடன் வந்தார்கள். அதில் ஒன்றை பவித்ராவிடம் கொடுத்தான் சந்தோஷ்.
"எனக்கு ஒன்னும் வேண்டாம்" என்று மறுத்தாள் பவித்ரா.
"ஒன்னும் கவலைப்படாதிங்க பவித்ரா. உங்க தூயவருக்கு ஒன்னும் ஆகாது. நீங்க பலவீனமா இருக்குறத பாத்தா அவர் வருத்தப்பட மாட்டாரா?" என்றான் சந்தோஷ்.
அவன் கொடுத்த குவளையை வாங்கி காப்பியை பருகினாள் பவித்ரா. குணமதியும் வென்மதியும் அவளை புன்னகையோடு பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
ஆறு மணி நேரம் கழித்து, அறுவை சிகிச்சை அறையில் இருந்து வெளியே வந்தார் மருத்துவர். அனைவரும் அவரை நோக்கி சென்றார்கள்.
"அவரு நல்லா இருக்காரு. ஆனா..." என்று நிறுத்தினார்.
"ஆனா?" என்று அனைவரும் ஒரே குரலில் கேட்க,
"அவரோட முதுகெலும்பு ரொம்ப மோசமா சேதமடஞ்சிருக்கு. நாங்க ஸ்டீல் பிளேட் வச்சி ஆபரேஷன் பண்ணி இருக்கோம். அதனால தான் இவ்வளவு டைம் எடுத்துச்சு. நாங்க எங்களால முடிஞ்ச அளவுக்கு எல்லா முயற்சியும் செஞ்சோம். ஆனா அவரோட இடுப்புக்கு கீழே எந்த உணர்ச்சியும் இல்ல. இதுக்கு அப்புறம் அவரால நடக்க முடியாது" என்றார் மருத்துவர் சோகமாய்.
வெண்மதியும் குணமதியும் அதிர்ச்சியோடு நிற்க, வெடித்து அழுதாள் பவித்ரா.
"இதுக்கு ட்ரீட்மென்ட் கிடையாதா டாக்டர்?" என்றாள் வெண்மதி.
"இதுக்கு அட்வான்ஸ் லெவல் ட்ரீட்மென்ட் வேணும். அது அமெரிக்காவில் தான் கிடைக்கும். அதோட மட்டும் இல்லாம, அவருக்கு கவனிப்பும் அன்பும் அவசியம். ட்ரீட்மெண்ட்டுக்கு மேல, அது தான் அவரை குணப்படுத்தும். தயவுசெஞ்சு அவர் முன்னாடி அழாதீங்க. அது அவருடைய தன்னம்பிக்கையை குறைக்கும்" என்று கூறிவிட்டு சென்றார் மருத்துவர்
அனைவரும் நொறுங்கிப் போனார்கள். இந்த சூழ்நிலையை அவர்களால் எதிர்கொள்ளவே முடியவில்லை. தூயவனின் அந்த நிலை அவர்களை அடித்து போட்டு விட்டது.
"டாக்டர் சொன்னது ஞாபகம் இருக்கட்டும். அவருக்கு அன்பும் அரவணைப்பும் தான் ரொம்ப முக்கியம். தயவுசெய்து அவர் முன்னாடி யாரும் அழாதீங்க." என்றான் சந்தோஷ்.
தன் கண்ணீரை முதலில் துடைத்துக் கொண்டவள் பவித்ரா தான். அது சந்தோஷை புன்னகைக்க செய்தது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top