30 இதயமற்ற சஞ்சனா

30 இதயமற்ற சஞ்சனா 

"அப்படின்னா அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுங்க" என்று கூறி வெண்மதியை பேச்சிழக்க செய்தான் தூயவன்.

அவனை இமைக் கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றாள் வெண்மதி. தன் கைகளை கட்டிக்கொண்டு அவளைப் பார்த்து புன்னகைத்தான் தூயவன்.

"தூ...யா...! இப்போ நீ என்ன சொன்ன?"

"பவித்ராவை இந்த தூயவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுங்கன்னு சொன்னேன்" என்று தெளிவாய் தங்கள் பெயரோடு கூறினான் தூயவன்.

"நீ நிச்சயமாவே நிச்சயமா தான் சொல்றியா?" என்றாள், அவன் கூறியது நிச்சயம் தானா என்று நிச்சயப்படுத்திக்கொள்ள.

"நான் நிச்சயமாவே ரொம்ப ரொம்ப நிச்சயமா சொல்றேன்"

"என்னை கொஞ்சம் கிள்ளு... இப்போ நடக்கிறது எல்லாம் உண்மை தான்னு எனக்கு தெரியணும்" என்றாள் தன் தலையை பிடித்துக் கொண்டு.

"போதும், கா..."

"உனக்கு என்ன ஆச்சு, தூயா? திடீர்னு ஏன் பவித்ராவை கல்யாணம் பண்ணிக்கணும்னு கேக்குற? இந்த எண்ணம் உனக்கு எப்ப வந்தது? ப்ளீஸ் ப்ளீஸ் சொல்லேன்..."

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவ கண்கலங்கினதை பார்த்தப்போ தோணுச்சு" என்றான், அவளது கலங்கிய விழிகளை எண்ணியபடி.

"அவங்க உன்னை விட்டுட்டு போயிடுவாங்கன்னு பயந்துட்டியா?"

மெல்ல கண் இமைத்தான் தூயவன்.

"அப்படின்னா உன்னோட இரும்பு இதயத்துக்குள்ள காதல் புகுந்துடுச்சா?"

பதில் கூறாமல் புன்னகைத்தான்.

"உனக்கு அவங்களை பிடிச்சிருக்கா?"

"நான் உங்களுக்கு பதில் சொல்லுவேன். ஆனா ஒரு கண்டிஷன்"

"என்ன கண்டிஷன்?"

"நான் சொல்றதை கேட்டு நீங்க பொறாமை படக்கூடாது" வெண்மதி வாயை பிளக்க, அவள் முகம் போன போக்கை பார்த்து வாய் விட்டு சிரித்தான் தூயவன்.

"அக்கா, நீங்க, மாம், பவித்ரா மூணு பேரும் வித்தியாசமானவங்க. நீங்க மூணு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கம்பேர் பண்ணிக்க வேண்டிய அவசியம் இல்ல. மூணு பேருமே எனக்கு முக்கியமானவங்க. அதுல எந்த காம்ப்ரமைசும் கிடையாது"

"எதுல காம்பரமைஸ் பண்ணிக்க முடியாதுன்னு சொல்ற?" என்ற கேள்வி வந்தது அவனது அறையின் நுழைவு வாயிலில் இருந்து.

அங்கு குணமதி நின்று கொண்டிருந்தார். அவரை நோக்கி ஓடிய வெண்மதி,

"மாம், நம்ம தூயாவுக்கு ஒன்னு வேணுமாம்"

"என்னது? பாதாம் அல்வாவா?" என்று கிண்டலாய் கேட்டார் அவர்.

"இல்ல மாம். அவனுக்கு பாதாம் அல்வா எல்லாம் பத்தாதாம். அவனுக்கு பாதாம் அல்வா செய்கிற ஆளே வேணுமாம்" என்று சிரித்தாள் வெண்மதி.

அவளை நம்ப முடியாமல் பார்த்த குணமதி,

"நீ என்ன சொல்ற?" என்றார்.

"நம்ம தம்பிக்கு பாதாம் அல்வா செஞ்ச பொண்ணு மேல காதல் வந்துடுச்சு"

"தூ... யா...!" என்று அவரும் வெண்மதி கூறிய விதத்திலேயே கூற,

"சேம் ரியாக்ஷன்..." என்று சிரித்தான் தூயவன்.

அவன் கையைப் பிடித்து இழுத்து அமர வைத்த அவர், அவன் அருகில் அமர்ந்து,

"அவ சொல்றது உண்மையா?" என்றார்.

"ஆமா மாம்... எனக்கு அவளை பிடிச்சிருக்கு"

"மதி, உண்மையிலேயே அவனுக்கு பிடிச்சிருக்காம்"

ஆம் என்று தலையசைத்தாள் வெண்மதி.

"இப்போ நம்ம என்ன செய்யறது?"

"மாம் கொஞ்சம் பொறுங்க"

"ஏன்?"

"அவ மனசுல அப்படிப்பட்ட எண்ணம் எல்லாம் எதுவும் இல்ல"

"அதனால என்ன? நம்ம உருவாக்கிட்டா போச்சு..."

"அவளைப் பத்தி உங்களுக்கு தெரியாது, மாம். அவளுக்கு மட்டும் சான்ஸ் கிடைச்சா, ஒரு குட்டி மேடையை உருவாக்கி, அதுல என்னை உட்கார வைச்சி, பூ போட்டு எனக்கு படையல் போட்டு பூஜை பண்ணுவா"

"அப்படின்னா?"

"அவளைப் பொறுத்த வரைக்கும் நான் கடவுள்" என்று பெருமூச்சு விட்டான்.

குணமதியும் வெண்மதியும் வெடித்து சிரித்தார்கள்.

"நீங்க அவகிட்ட இதை பத்தி எதுவும் பேச வேண்டாம். அவளை நான் பார்த்துக்கிறேன்"

"ஓஓஓஓ..." என்றாள் வெண்மதி கிண்டலாய்.

"என் பிள்ளை காதலிக்கிறான்னு என்னால நம்பவே முடிய.ல இன்னைக்கு பூஜைக்கு நான் ஸ்வீட் செஞ்சு வைக்கப் போறேன்"

"உங்க மருமக பொண்ண பாதாம் அல்வா செய்ய சொல்லுங்க" என்று சிரித்தாள் வெண்மதி.

"நல்ல ஐடியா" என்ற குணமதி,

"அது சரி தூயா, உன்னோட காதலை நீ எப்படி உணர்ந்த?"

"மாம், யாரு உணர வச்சதுன்னு கேளுங்க" என்றாள் வெண்மதி.

"யாரு?"

"சஞ்சனா"

"என்ன்னனது?"

"அவ ஃபோன் பண்ணதால தானே பவித்ரா அழுதாங்க...? அது தான் அவ நம்மளை விட்டுப் போயிடுவாளோனு நம்ம தூயவை நினைக்க வச்சது. அது தான் அவனை தன் காதலை உணர வச்சிருக்கு"

"அக்கா, அந்த மானங்கெட்ட பொண்ண பத்தி பேசாதீங்க. அவ மனசுல என்ன நெனச்சுக்கிட்டு இருக்கா?"

"என்ன சொன்னா?" என்றார் குணமதி கவலையோடு.

"அவ பவித்ராவை ரொம்ப தரக்குறைவா பேசிட்டா... அவளோட சப்டரை நான் சீக்கிரமே க்ளோஸ் பண்ணுவேன்"

வெண்மதியும் குணமதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

வெளி பார்வைக்கு சாதாரணமாய் இருந்தாலும் சஞ்சனாவை எண்ணி அவன் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. எவ்வளவு நாளைக்கு அவன் பவித்ராவை பாதுகாத்துக் கொண்டிருக்க முடியும்? மறுபடியும் பவித்ராவுக்கு அவள் ஃபோன் செய்தால் என்னவாகும்!? அது பற்றி அவன் சந்தோஷிடம் பேச நினைத்தான்.

........

தனது ஆள் கொடுத்த கைபேசியில் இருந்து சின்னசாமிக்கு ஃபோன் செய்தாள் சஞ்சனா. அந்த அழைப்பை ஏற்றான் சின்னசாமி.

"வர்ற ஞாயிற்றுக்கிழமை பவித்ரா கோவிலுக்கு போக போறா"

"நீங்க யார் பேசுறது?"

"அது தேவையில்லாத விஷயம். நான் சொல்ற விஷயம் தான் இங்க முக்கியம்"

"நான் எப்படி உங்களை நம்புறது?"

"தாராளமா நீங்க என்னை நம்பலாம். ஏன்னா அந்த பொண்ணு சென்னையை விட்டு போகணும்னு நான் நினைக்கிறேன். அவளை எப்படியாவது இங்கிருந்து கொண்டு போயிடுங்க. அவ கோவிலுக்கு வர்றதை பத்தி எனக்கு என்ன விஷயம் தெரிஞ்சாலும் நான் உங்களுக்கு சொல்றேன்"

"ரொம்ப நன்றி"

அழைப்பை துண்டித்தாள் சஞ்சனா. சின்னசாமி யோசனையில் ஆழ்ந்தான். யார் அந்த பெண்? எதற்காக பவித்ரா சென்னையை விட்டு செல்ல வேண்டும் என்று அவள் நினைக்கிறாள்? பவித்ராவுடன் அவளுக்கு என்ன அப்படி ஒரு பகை இருக்க முடியும்? பவித்ரா இதற்கு முன் சென்னைக்கு வந்ததே இல்லையே...! அப்படி இருக்க இந்த பெண்ணுக்கு பவித்ராவை எப்படி தெரியும்? இந்தப் பெண் வேறு ஏதாவது திட்டம் தீட்டுகிறாளா...? பார்க்கலாம்... ஒருவேளை அவள் கூறியது உண்மையாக இருந்தால், பவித்ராவை கவர்ந்து செல்ல இது அருமையான திட்டமாக அமையும். என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட துவங்கினான் சின்னசாமி.

......

மறுநாள் அலுவலகம்

ஃபிரான்ஸுக்கு செல்ல வேண்டிய விஷயம் குறித்த கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தான் சந்தோஷ். தனது அறைக்குள் தூயவன் நுழைவதை பார்த்து வியப்படைந்தான் அவன்.  இதற்கு முன் எப்பொழுதும் தூயவன் அவனது அறைக்கு வந்ததே இல்லை. அதுவும் அவனது அனுமதி பெறாமல். அவனது முகத்தை பார்த்த உடனேயே ஏதோ தவறாக நடந்திருப்பதை அவன் உணர்ந்தான்.

"என்ன ஆச்சு தூயவன்? ஏதாவது பிரச்சனையா?"

"உங்க தங்கச்சி இருக்கும் போது எப்படி எந்த பிரச்சனையும் இல்லாம இருக்கும்?" என்றான் சற்று கோபமாய்.

"அவ என்ன செஞ்சா?"

"உங்க கிட்ட சொல்லவே ரொம்ப கஷ்டமா இருக்கு. அவ ரொம்ப எல்லை மீறி போய்கிட்டு இருக்கா. அவ லிமிட் என்னன்னு அவளுக்கு கொஞ்சம் சொல்லி புரிய வைங்க. உங்க ஒருத்தருக்காக தான் நான் அந்த பொண்ணை பொறுத்துக்கிட்டு போறேன். எப்போ நான் என்னோட பொறுமையை இழப்பேன்னு எனக்கு தெரியல. நான் ஏதாவது செஞ்சுட்டா தயவு செய்து வருத்தப்படாதீங்க... எனக்கு பிடிக்காததையும் என்னை செய்ய வைக்காதீங்க..."

"அவ என்ன செஞ்சான்னு சொல்லிட்டு அப்புறம் திட்டுங்களேன்"

"பவித்ராவுக்கு ஃபோன் பண்ணி தகாத வார்த்தைகள் எல்லாம் பேசி அவளை இன்சல்ட் பண்ணிட்டா"

"என்னது...?" அதிர்ந்தான் சந்தோஷ்.

"எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு சந்தோஷ். அவ என் பொறுமையை ரொம்ப சோதிக்கிறா. பவித்ரா கிட்ட பேசுற உரிமையை அவளுக்கு யார் கொடுத்தது? என்னை விட்டுப் போக சொல்லி பவித்ரா கிட்ட சொல்றதுக்கு அவ யாரு?"

"உங்களை விட்டுப் போக சொன்னாளா?"

"ஆமாம்... என்னை விட்டுப் போக சொல்லி பவித்ரா கிட்ட சொல்றா"

"ஆனா ஏன்?"

"இந்த கேள்வியை நீங்க என்கிட்ட கேட்கிறதை விட உங்க தங்கச்சி கிட்ட கேளுங்க. பவித்ராவோட கண்ணுல கண்ணீர்  வர உங்க தங்கச்சி காரணமா இருந்தா, நான் அவளை பொறுத்துக்க மாட்டேன்..." என்று எச்சரித்தான் தூயவன்.

அவனது அறையின் கதவில் கை வைத்து அதை திறக்க தூயவன் முயன்ற போது,

"நீங்க பவித்ராவை காதலிக்கிறீங்களா?" என்று சந்தோஷ் கேட்டதை கேட்டு நின்றான்.

அவனை உறுதியோடு ஏறிட்ட தூயவன்,

"ஆமாம், நான் அவளை காதலிக்கிறேன்" என்றான் எந்த தயக்கமும் இன்றி. அவன் எதற்காக தயங்க வேண்டும்? அது அவனது வாழ்க்கை.

சந்தோஷ் திகைத்து நின்றான்

"நீங்க பவித்ராவை காதலிக்கிற விஷயம் மதிக்கு தெரியுமா?"

"தெரியும்..." அவனது அறையை விட்டு வெளியேறினான் தூயவன்.

அவன் கூறியதைப் பற்றி யோசித்தபடி தன் நாற்காலியில் அமர்ந்தான் சந்தோஷ். ஒருபுறம் தூயவன் பவித்ராவை காதலிக்கிறான். மறுபுறம் தூயவனை அடைந்து தீர வேண்டும் என்று தீவிரம் காட்டுகிறாள் சஞ்சனா. தனக்கு பிடித்ததை தன்னுடையதாக்கிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வான் தூயவன். அவனுக்கு மிகப்பெரிய தலைவலியாய் சஞ்சனா இருப்பாள் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த பிரச்சனையை எவ்வளவு சீக்கிரம் தீர்க்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தீர்ப்பது நல்லது என்று எண்ணி நான் சந்தோஷ்.

மாலை

வீட்டிற்கு வந்த சந்தோஷ், சஞ்சனாவின் அறைக்குச் சென்று அவளை தேடினான். ஆனால் அவள் அவள் அறையில் இல்லை. குளியலறையில் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டது. சோபாவில் அமர்ந்து அவளுக்காக காத்திருந்தான். அவளது அறையில் தன் கண்களை ஓட விட்டான். அவளது கைபேசி சார்ஜருடன் இணைக்கப்பட்டிருந்தது. அங்கு சந்தேகத்திற்கு இடமாய் ஒன்றும் இல்லை. அப்பொழுது ஒரு கைபேசியின்  வைப்ரேஷனை உணர்ந்த அவன், முகத்தை சுருக்கினான். அவன் அமர்ந்திருந்த சோபாவின் இடுக்கில், ஒரு பேசிக் மாடல் கைப்பேசி இருந்தது. இது என்ன ஃபோன் என்பது போல் முகத்தை சுருக்கி அதை வெளியில் எடுத்தான். சஞ்சனா இப்படிப்பட்ட கைபேசியை உபயோகப்படுத்த மாட்டாளே...! அவள் வைத்திருப்பதெல்லாம் லேட்டஸ்ட் மாடல் ஃபோன்களை தான். அந்த கைபேசி ஒரு இன்கமிங் காலுடன் வைப்ரேட் ஆனது. அந்த எண் புதிதாய் இருந்தது. அந்த அழைப்பை சந்தோஷ் ஏற்றான். ஆனால் அவன் பேசவில்லை.

"மேடம் நான் சின்னசாமி பேசுறேன்..." சந்தோஷுக்கு தூக்கி வாரி போட்டது சின்ன சாமியா?

"பவித்ராவை பத்தி எனக்கு விஷயத்தை சொல்றேன்னு சொன்னீங்க. நாங்க சென்னைக்கு வந்துட்டோம். ஞாயிற்றுக்கிழமை பவித்ரா எந்த கோவிலுக்கு வர போறான்னு எங்களுக்கு சொல்லுங்க. அந்த கோவிலை நாங்க ஒரு தடவை பார்க்கணும். அப்போ தான் நாங்க சரியா பிளான் பண்ண முடியும். அவ எப்ப கோவிலுக்கு வரான்னு சரியான டைம்மையும் சொல்ல ட்ரை பண்ணுங்க"

அதை கேட்ட சந்தோஷ் திகில் அடைந்தான். சஞ்சனா இந்த அளவிற்கா கீழ்த்தரமாய்  சென்றிருக்கிறாள்? இதைப் பற்றி தூயவனுக்கு தெரிந்தால் என்ன ஆகும்? அவன் நிச்சயம் சஞ்சனாவை கொன்று விடுவான். அதற்குப் பிறகு அவன் வெண்மதியை திருமணம் செய்து கொள்வது என்பது கனவிலும் நடக்காது.

எதற்காக சஞ்சனா இவ்வளவு கீழ்த்தரமாய் நடந்து கொள்கிறாள்? எப்படி இந்த விஷயத்தில் அவள் ஈடுபட்டாள்? இந்த விஷயத்தில் அவள் ஈடுபட்டாளா, அல்லது, பவித்ராவை கடத்திக் கொண்டு செல்ல வேண்டும் என்று சின்னசாமிக்கு யோசனை கூறியதே  அவள் தானா? அவள் செய்தாலும் செய்வாள். அவளுக்கு அந்த துணிவு இருக்கிறது. இதன் விளைவுகளைப் பற்றி அவள் யோசித்தாளா? பெரியசாமி பவித்ராவை திருமணம் செய்து கொள்வான். அவள் என்பத்தி ஐந்து வயது கிழவனின் மனைவியாவாள். சஞ்சனா இவ்வளவு இதயமற்றவளா? தன் தங்கையை எண்ணி வெக்கப்பட்டான் சந்தோஷ். அந்த கைபேசியை எடுத்துக் கொண்டு அமைதியாய் அங்கிருந்து வெளியேறினான்.

தொடரும்...








Bạn đang đọc truyện trên: AzTruyen.Top