3 நிகழ்வுகளின் திருப்பங்கள்

3 நிகழ்வுகளின் திருப்பங்கள்

என்பத்தைந்து வயது கிழ மணமகனை பார்த்த தூயவன், அதிர்ச்சிக்கு ஆளானான். இங்கு என்ன நடக்கிறது? அந்த கிழவன் பவித்ராவுக்கு கொள்ளு பாட்டன் போல் இருக்கிறான். இந்த சின்ன பெண்ணை மணந்து கொள்ள அவனுக்கு எப்படி மனம் வந்தது? அதனால் தான், அவளது அப்பா, அவள் இந்த திருமணத்தை செய்து கொள்ள வேண்டாம் என்று நினைத்தார் போலிருக்கிறது. 

அவன் அவளை முடியை பிடித்து இழுப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்தான் தூயவன். எவ்வளவு தைரியம் இருந்தால், ஒரு சிறு பெண்ணை இவ்வளவு மோசமாய் நடத்துவான் அந்த கிழவன்? அவனால் அந்த காட்டுமிராண்டித்தனத்தை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தன் காரை விட்டு இறங்கி, அவர்களை நோக்கி சென்றான்.

"இந்த பெரியசாமி கிட்ட இருந்து ஓடிப் போயிடலாம்னு நெனச்சியா?" என்றான் அந்த கீழான கிழவன், தன்னை சுட்டிக்காட்டி.

"எங்க அப்பாவை விட்டுடுங்க. அவரை அடிக்க வேண்டாம்னு சொல்லுங்க" என்றாள் கண்ணீர் சிந்தியபடி பவித்ரா.

"இங்கிருந்து ஓடி போறதுக்கு முன்னாடி உங்க அப்பனை பத்தி யோசிச்சு இருக்கணும்" என்று அவளை ஓங்கி அறைந்தான் அந்த கிழவன்.

அந்த அடியின் வேகம் தாங்காமல், கீழே விழ போனவளை, தரையில் விழும் முன் தாங்கி பிடித்தான் அங்கு வந்த தூயவன். அவள் கன்னத்தில் பதிந்திருந்த கைவிரல் ரேகைகளை கண்ட அவன், பெரியசாமியை பார்த்து பல்லை கடித்த படி முறைதான்.

"இவன் தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறானா?" என்றான் தூயவன் பவித்ராவிடம்.

அவள் ஆம் என்று தலையசைத்தாள்.

"உனக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவே கிடையாதா? உனக்கு பேத்தி மாதிரி இருக்கிற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க உனக்கு எப்படி மனசு வந்தது? இதையே உன் பொண்ணுக்கு செய்வீயா நீ?" என்று அவனை பார்த்து சீறினான் தூயவன்.

"யாருடா நீ? ஒழுங்கா வந்த வேலையை பார்த்துகிட்டு நடையை கட்டிகிட்டு போய்கிட்டே இரு. இல்லன்னா, இந்த அல்பத்தானமான பொண்ணுக்காக தேவை இல்லாம நீ உயிரை விட்டுடுவே"

"நீ இப்ப செய்யறது தான் டா தேவையில்லாதது. ஜோசியத்தை நம்பிகிட்டு ஒரு சின்ன பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க நினைக்கிறியே, இதெல்லாம் மூடநம்பிக்கைன்னு உனக்கு தெரியலையா?"

"இங்க பாருங்கடா... வந்துட்டாரு பெரியாரோட பேரன், நமக்கு அறிவுரை சொல்ல" என்று சிரித்தான் அந்த கிழவன்.

தன் கண்களை சுருக்கி, தன் சுற்றுப்புறத்தை நோட்டம் விட்டான் தூயவன். சிரிப்பதை நிறுத்திவிட்டு பவித்ராவை கோபத்தோடு எரித்து விடும் பார்வை பார்த்தான் அந்த கிழவன், தூயவனின் அடுத்த வார்த்தைகளை கேட்டு,

"அவங்க அப்பா உன்கிட்ட வாங்குன பணத்துக்கு வட்டியும் முதலும் நான் திரும்பி தரேன்..."

"நீ யாருடா எனக்கு பணம் கொடுக்க? அவளுக்கு நீ என்ன வேணும்? நீ எதுக்கு அவளுக்காக இவ்வளவு பணம் கொடுக்க முன்வர?"

"காரணம் என்னவா இருந்த உனக்கு என்ன? உனக்கு எவ்வளவு பணம் கொடுக்கணும்னு சொல்லு. உனக்கு தேவை பணம் தானே? அதை இப்பவே சிங்கிள் பேமெண்ட்ல கொடுத்துட்டு போறேன்"

"நீ போன மாசம் வந்திருந்தா, நீ கொடுத்த பணத்தை நான் வாங்கி இருப்பேன். ஆனா இப்போ எல்லாம் மாறிடுச்சு. எனக்கு பணம் வேண்டாம். அந்த பொண்ணு தான் வேணும். இன்னைக்கு எங்களுக்கு கல்யாணம். இணைக்கு ராத்திரியே முதலிரவு. அதுக்கப்புறம் நான் நூறு வயசுக்கு மேல சந்தோஷமா வாழ்வேன்" என்றான் அந்த கிழவன்.

"இது சுத்த பைத்தியக்காரத்தனம்" என்றான் தூயவன் அருவருப்போடு.

பவித்ராவின் பக்கம் திரும்பிய பெரியசாமி,

"இவனுக்காகத்தான் கல்யாணம் வேண்டாம்னு என்கிட்ட இருந்து ஓடி போனியா? இவன் தான் உன்னோட ஆளா? அவன் கூட படுக்குறதுக்கு தான் ஓடுனியா?" என்றான் வெட்கமில்லாமல்.

"ச்சி..." என்றாள் அவள் அருவருப்போடு.

"வார்த்தையை அளந்து பேசு. மரியாதையா இந்த கன்றாவியை எல்லாம் நிறுத்திடு. இல்லன்னா, நான் போலீசை கூப்பிடுவேன்" என்றான் தூயவன்.

"போலீசா? இந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷன் நம்பர் உன்கிட்ட இருக்கா? இல்ல நான் கொடுக்கட்டுமா?" என்றான் பெரியசாமி எகத்தாளமாய்.

அதை கேட்டு, அவனது ஆட்கள் வெடித்து சிரித்தார்கள்.

"டேய்... அவளை தூக்கிக்கிட்டு வாங்கடா" என்ற பெரியசாமி, அங்கிருந்து நடக்கத் தொடங்கினான்.

அவனது ஆட்கள் பவித்ராவை நோக்கி நகர்ந்தார்கள், தங்கள் தலைவனின் கட்டளையை நிறைவேற்ற. அவள் தூயவனின் பின்னால் ஒளிந்து நின்று, அவன் கோட்டை பயத்துடன் இறுக்கமாய் பற்றி கொண்டு,

"சார், என்னையும், எங்க அப்பாவையும் எப்படியாவது காப்பாத்துங்க. அவங்க அவரை கொன்னுடுவாங்க" கெஞ்சினாள்.

பவித்ரா தூயவனின் உதவியை நாடுவதை கண்ட பெரியசாமிக்கு ஆத்திரம் பீறிட்டு எழுந்தது. பவித்ராவை நோக்கி நடந்த அவன், அவள் தலைமுடியை பற்றுவதற்காக தன் கையை நீட்டினான். அடுத்த நொடி, அவன் வயிற்றில் ஓங்கி எட்டி உதைத்தான் தூயவன். அந்த கிழவன் காட்டு கத்தல் கத்தியபடி தரையில் உருண்டு விழுந்தான். அவனை நோக்கி சென்ற தூயவன், அவன் கழுத்தில் காலை வைத்தான்.

"ஆமாண்டா, உன்னை மாதிரி கிழ மாடு, ஒரு சின்ன பொண்ணோட வாழ்க்கையை கெடுக்கிறதை தட்டி கேக்க,  பெரியாருடைய பேரனா தான் இருக்கணும்னா, நான் பெரியாரோட பேரன் தான். நீ உயிரோட இருந்தா தானே அவளை கல்யாணம் பண்ணிக்குவ? நான் உன்னை கொன்னுட்டா அவ நிம்மதியா இருப்பா இல்ல?" என்றான்.

பெரியசாமிக்கு கிலி பிடித்தது. அவன் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதே நூறு வருடம் வாழ வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் இந்த மனிதன் அதற்கு விடமாட்டான் போலிருக்கிறது.

பெரியசாமியின் ஆட்கள் தூயவனை நோக்கி படையெடுத்தார்கள். அதை கண்ட தூயவனின் பாதுகாவலர்கள் களத்தில் குதித்தார்கள். நாலு கால் பாய்ச்சலில் ஓடிவந்த அவர்கள், பெரியசாமியின் ஆட்கள் தூயவனை தாக்குவதற்கு முன், அவர்களை பந்தாடினார்கள். அந்த இடமே போர்க்களம் போல் மாறியது.

தூயவனின் ஆட்கள் ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் முறையாக பயிற்சி பெற்றவர்கள். எந்த சிரமமும் இன்றி, தங்கள் உடலில் ஒரு கீறல் கூட விழாமல் பெரியசாமியின் ஆட்களை அவர்கள் ஒரு கை பார்த்தார்கள். அது அவர்களை மேலும் கோபப்படுத்தியது. அந்த சண்டையில் தூயவன் கலந்து கொள்ளவில்லை. அவன் பவித்ராவையும், ஏற்கனவே காயம்பட்டிருந்த அவளது தந்தையையும் பாதுகாவல் செய்து கொண்டு எச்சரிக்கையாய் நின்றான்.

"நீங்க இந்த இடத்தை விட்டு வர தயாரா இருந்தா, உங்களுக்கு நான் ஹெல்ப் பண்றேன்" என்றான் அவளது தந்தையிடம்.

அவர் பவித்ராவை பார்க்க,

"ஆமாம் பா. நம்ம இங்க வாழவே முடியாது. அவங்க நம்மளை வாழ விட மாட்டாங்க. நம்ம வேற எங்கயாவது போயிடலாம்" என்று கெஞ்சினாள்.

"என் கூட சென்னைக்கு வந்துடுங்க. அங்க உங்களுக்கு தேவையான எல்லா ஏற்பாட்டையும் நான் செஞ்சு தரேன். இங்க இருக்காதீங்க. இவங்களை பார்த்தாலே காட்டுமிராண்டித்தனமா இருக்காங்க" என்றான் தூயவன்.

சரி என்று தலையசைத்தார் பவித்ராவின் தந்தை. நிம்மதி பெருமூச்சு விட்டான் தூயவன். சந்தோஷ கண்ணீருடன் தன் தந்தையை அணைத்துக் கொண்டாள் பவித்ரா.

"என் மக தாங்க எனக்கு எல்லாமே. நான் அவளுக்காகத்தான் உயிரோட இருக்கேன். அவ என்னால தான் இவ்வளவு பெரிய பிரச்சனைல மாட்டிக்கிட்டா. என் பொண்டாட்டியை காப்பாத்த நான் பணம் கடன் வாங்கினேன். அவளை என்னால் காப்பாத்தவும் முடியல, பணத்தை திருப்பிக் கொடுக்கவும் முடியல. நாங்க இந்த இடத்தை விட்டு வெளியேற உதவி பண்ணீங்கன்னா, நான் சாகுற வரைக்கும் உங்களுக்கு நன்றியோட இருப்பேன்!"

"நீங்க கவலைப்படாதீங்க. இந்த இடத்துல இருந்து உங்களை கூட்டிக்கிட்டு போக வேண்டியது என்னோட பொறுப்பு" என்று அவர் கையை பிடித்து, தான் கூறிய வார்த்தைகள் உண்மை என்பதை பறை சாற்றினான்.

ஆனால் வாழ்க்கை எப்பொழுதும் நமக்கு சாதகமாகவே இருந்து விடுவதில்லை. அது எப்பொழுதும் நாம் வேண்டுவதை மட்டுமே கொடுப்பதில்லை. மாறாக, நாம் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் கொண்டு நம்மை நிறுத்தி விட்டு வேடிக்கை பார்க்கிறது. இங்கு தூயவன் பவித்ராவை ஓர் அசத்திய சூழ்நிலையில் சந்தித்தான். அவளது உண்மை நிலைமையை தெரிந்து கொள்வதற்கு முன், அவள் மீது கடும் கோபத்தில் இருந்தான். ஆனால் இப்பொழுது, அவனே அந்தப் பெண்ணை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று தவிக்கிறான். அவளை தன்னுடன் சென்னைக்கு அழைத்துச் செல்லவும் அவன் தயாராக இருக்கிறான். நிகழ்வுகள் எவ்வளவு வேகமாய் மாறிக்கொண்டே வருகிறது என்று நீங்கள் நினைத்தால், ஒரு நிமிடம் பொறுக்கவும்! இன்னும் அது ஏற்படுத்த இருக்கும் மாற்றங்கள் நிறைவடையவில்லை.

பவித்ராவின் அப்பா, தன் கரங்களை கூப்பி, தூயவனுக்கு நன்றி தெரிவித்தார். அப்பொழுது அவரது முகம் அதிர்ச்சியோடு மாறியது. பெரியசாமி தூயவனை நோக்கி பெரிய கத்தியோடு ஓடி வருவதை பார்த்து. பெரியசாமிக்கு எதிர்புறம் நின்று கொண்டிருந்த தூயவன்,  பெரியசாமி வருவதை கவனிக்கவில்லை. எதைப் பற்றியும் யோசிக்காத பவித்திராவின் தந்தை, தூயவனை பிடித்து தள்ளினார். அடுத்த நொடி, தூயவன் மீது இறக்க வேண்டிய கத்தியை, அவர் வயிற்றில் ஆழமாய் இறக்கி  முதுகின் வழியே வெளியற்றினான் பெரியசாமி. தன்னைக் காப்பாற்ற, அவர் தன் உயிரையே கொடுத்ததை கண்ட தூயவன் திகைத்து நின்றான்.

"அப்ப்ப்பா..." என்று இதயமே வெடித்து விடும் அளவிற்கு கதறினாள் பவித்ரா. அருவி எனப் பொழியும் கண்களுடன் அவருக்கு முன்னால் முழங்காலிட்டு அமர்ந்தாள்.

கோபத்தோடு மீண்டும் பெரியசாமியை எட்டி உதைத்தான் தூயவன். கீழே விழுந்து மூர்ச்சையானான் பெரியசாமி. அவனுடைய மகனான சின்னசாமி, அவனிடம் ஓடி வந்து, அவனை உலுக்கி எழுப்ப முயன்றான். ஆனால் அவனிடம் எந்த அசைவும் தென்படவில்லை.

மெல்ல தன் கையை அசைத்து, தூயவனை தன்னிடம் வருமாறு கேட்டார் பவித்ராவின் அப்பா. அவரிடம் ஓடி சென்றான் தூயவன், தனது மேலாளரை அழைத்தவாறு,

"பாரி, சீக்கிரமா வா, இவரை ஹாஸ்பிடலுக்கு கூட்டிகிட்டு போகணும்..."

"கவலைப்படாதீங்க சார். நான் உங்களை ஆஸ்பிட்டலுக்கு கூட்டிக்கிட்டு போறேன்" என்று தனது பாதுகாவலர்களிடம் அவரை தூக்கும்படி சைகை செய்தான். 

"என்னை காப்பாத்த உங்க நேரத்தை விரயமாக்காதிங்க. என் மகளை மட்டும் எப்படியாவது காப்பாத்துங்க. அது போதும் எனக்கு"  என்று பவித்ராவின் கையை பிடித்து அவனிடம் நீட்டினார்.

எதைப் பற்றியும் யோசிக்காத தூயவன், அவள் கையை பற்றிக் கொண்டான்.

"நன்றி!" என்றபடி தன் கரங்களை குவித்த பவித்ராவின் தந்தையின் கரங்கள், அடுத்த நொடி தரையில் சரிந்தன.

"அப்ப்ப்பா..."என்று மீண்டும் கதறினாள் பவித்ரா.

பெரியசாமியின் ஆட்கள் அவரை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்கள். பெரியசாமியின் மகனான சின்னசாமி, காரில் ஏறுவதற்கு முன்பு நின்று, தூயவனை பார்த்து முறைத்தபடி,

"உன்னோட சாவு என் கையில தான். அது நடக்குதா இல்லையா பாரு" என்று ஊளையிட்டு சென்றான்.

"அப்ப்ப்பா...!" என்ற பவித்ராவின் தொண்டை அடைத்தது.

அங்கிருந்த ஒரு வயதான பெரியவர்,

"இங்கிருந்து போயிடு பாப்பா. அவனுங்க ரொம்ப மோசமானவங்க. உங்க அப்பாவோட இறுதி சடங்க நாங்க செய்றோம். இந்த தம்பியோட இங்கிருந்து போயிடு" என்றார்.

தன் அப்பாவின் உயிரற்ற உடலின் மீது விழுந்து அழுதாள் பவித்ரா.

"வா போகலாம்" என்று அவளை தன்னுடன் இழுத்தபடி நடக்கத் தொடங்கினான் தூயவன்.

தன் அப்பாவின் உயிரற்ற உடலை திரும்பி திரும்பி பார்த்தபடி, அழுது கொண்டே அங்கிருந்து அவனுடன் ஓடினாள், அவனது நடையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத பவித்ரா...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top