29 தூயவனின் வேண்டுதல்
29 தூயவனின் வேண்டுதல்
பவித்ராவின் கையில் இருந்த வளையல்களை பார்த்து மகிழ்ச்சிக்கு ஆட்பட்டான் தூயவன். இதுவரை அவன் பல வெற்றிகளை சுவைத்திருக்கிறான். ஆனால் ஏனோ இந்த வெற்றியை கொண்டாட வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. பவித்ராவை தூக்கிக்கொண்டு காற்றில் வட்டமிட வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. தனது விசித்திரமான எண்ணத்தை எண்ணி உள்ளுர நகைத்துக் கொண்டான்.
"நான் உங்கள ஹர்ட் பண்ணி இருந்தா, ஐயம் சாரி" என்றாள் அவள்.
"நான் வாங்கிக் கொடுத்த வளையலை நீ போட்டுக்கிட்டதால, அதையெல்லாம் நான் உன்னை மன்னிச்சிட்டேன்" என்று சிரித்தான்.
திருப்தியான புன்னகையை உதிர்த்துவிட்டு அவனுக்கு பக்கத்தில் அமர்ந்து சாப்பிட துவங்கினாள் பவித்ரா. அவளை அவ்வப்போது பார்த்தபடி சாப்பிட்டான் தூயவன். குணமதியும் வெண்மதியும் பொருள் பொதிந்த பார்வை பார்த்துக் கொண்டார்கள்.
"பவித்ரா..." என்று ராமு ஏதோ கூற முயன்ற போது,
"வாயை மூடிக்கிட்டு சாப்பிடு, அவளையும் சாப்பிட விடு" என்றான் தூயவன்.
சாப்பிட்டு முடித்துவிட்டு தான் சோபாவின் மீது வைத்திருந்த தனது மடிக்கணினி பையை எடுத்துக்கொண்டு அலுவலகம் செல்ல தயாரானான் தூயவன். பவித்ராவிடம் விடை பெற்று செல்லலாம் என்று அவளுக்காக காத்திருந்தான். அவள் உணவு மேஜையின் மீது இருந்த பாத்திரங்களை சமையலறையில் வைக்க சென்றிருந்தாள். அவள் சமையலறையை விட்டு வெளியே வந்த போது, தூயவன் அவளைப் பார்த்து
*இங்கே வா* என்பது போல் தலையசைத்தான்.
பவித்ரா அவனை நோக்கி சென்றாள்.
"நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என்றான் ஊடுருவும் பார்வையோடு.
"என்ன்னனது?"
"இப்ப இல்ல"என்றான் கள்ள புன்னகையோடு.
பவித்ராவுக்கு சங்கடமாய் போனது. அவள் முக பாவத்தை பார்த்து சிரித்தான் தூயவன்.
அப்பொழுது அவர்கள் வீட்டின் லேண்ட் லைன் தொலைபேசி சப்தமிட்டது. அந்தப் பக்கம் சென்ற குழந்தைசாமி அந்த அழைப்பை ஏற்றார்.
"ஹலோ"
"....."
"ஒரு நிமிஷம்..." ரிசிவரின் ஒரு முனையை மூடிக்கொண்டு,
"பவித்ரா அம்மா, உங்களுக்கு தான் ஃபோன்" என்று அவர் கூற, அது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
"எனக்கு ஃபோனா? ஆனா எப்படி? என்னோட ஃபிரெண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ்க்கு நான் எங்க இருக்கேன்னு தெரியாதே" என்று கூறியபடி லேண்ட் லைனை நோக்கி சென்றாள்.
"ஹலோ யார் பேசுறீங்க?"
"சஞ்சனா"
பேசுவது யார் என்பதை தெரிந்து கொண்ட அவளது முகம் மாறியது.
"சொல்லுங்க" என்றாள்.
"உன்னை பத்தி நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க? தூயவன் மாதிரி ஒரு கோடீஸ்வரனை அவன் வீட்டில் இருந்தா, வளச்சி பிடிச்சிடலாம்னு நினைக்கிறியா?"
அந்த தாக்குதலை எதிர்பார்க்காத பவித்ராவின் கண்கள் கலங்கியது.
"உன்னை பத்தி எனக்கு தெரியாதா? எவ்வளவு புத்திசாலித்தனமா நீ தூயவனோட மனசுல நல்லவ அப்படிங்கற எண்ணத்தை பதிய வச்சிட்ட. நீ இவ்வளவு கீழ் தரமான பொண்ணா இருப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. உன்னோட மதிப்பு என்னன்னு தெரிஞ்சுக்கோ. தூயவன் கிட்ட இருந்து விலகி இரு. தூயவன் எனக்குத்தான் சொந்தம்"
பவித்ராவும், சஞ்சனாவும் ஒரே நேரத்தில் திடுக்கிட்டார்கள்,
"ஷ....ட் அ....ப்..." என்ற தூயவனின் குரலைக் கேட்டு.
பவித்ரா பின்னால் திரும்பி பார்க்க, தன் கையில் கார்டுலெஸ் ஃபோனுடன் அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு நின்றிருந்தான் தூயவன். பவித்ராவை நோக்கி நகர்ந்த அவன், அவள் கையில் இருந்த லேண்ட் லைன் ரிசீவரை பிடுங்கி எறிந்துவிட்டு,
"பவித்ராகிட்ட பேசுறதுக்கு நீ யாரு? உன்னை பத்தி நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க? அவகிட்ட இவ்வளவு கீழ்த்தரமா பேசினா என்னை வளச்சு பிடிச்சுட முடியும்னு நீ நினைச்சியா? அவளைப் பத்தி உனக்கு என்ன தெரியும்?" உறுமினான்.
சஞ்சனா திகைத்து நின்றாள். அவள் பேசுவதை அவன் கேட்பான் என்று அவள் நினைக்கவில்லை
"நான் சொல்றதை கேளுங்க தூயவன்... நீங்க அப்படி என்ன அவகிட்ட பாத்துட்டீங்க?"
"உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. மரியாதையா கால கட் பண்ணு. இல்லன்னா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" என்று அவன் அழைப்பை துண்டிக்க போக,
"சத்தியமா சொல்றேன், எப்பாடு பட்டாவது உங்களை நான் அடஞ்சே தீருவேன். உங்களுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் என்னோட முயற்சி தொடர்ந்துகிட்டு தான். இருக்கும். வேற யாரையும் உங்களை கல்யாணம் பண்ணிக்க விட மாட்டேன். உங்களைத் தொடுற உரிமை எனக்கு மட்டும் தான் இருக்கு"
"போடிங்க..." என்று பல்லை கடித்த படி அழைப்பை துண்டித்து விட்டு, கார்டு லெஸ் ஃபோனை தரையில் எறிந்தான். அது சுக்கு நூறாய் சிதறியது.
பவித்ரா கலங்கிய கண்களோடு நின்றிருப்பதை கண்ட தூயவன், அவளை நோக்கி சென்றான். அவள் அங்கிருந்து செல்ல முயன்ற போது, அவள் கையை பிடித்து நிறுத்தினான். அவனை ஏரெடுத்தும் பார்க்காமல் தன் கையை அவன் பிடியிலிருந்து விடுவிக்க அவள் முயன்றாள்.
"பவித்ரா, என்னை பாரு"
அவள் பார்க்கவில்லை.
"பாருன்னு சொல்றேன்ல..." என்று உரத்த குரலில் கூறியபடி, அவளை தன்னை நோக்கி திருப்பினான்.
அவளது கலங்கிய கண்களை பார்த்தபோது, யாரோ அவனது இதயத்தை பிசைவது போல் இருந்தது.
அவளது மேற்கரங்களை கோபமாய் பற்றி,
"ஒரு மானங்கெட்ட பொண்ணு பேசினாங்குறதுக்காக நீ என்கிட்ட பேசாம இருப்பியா? ஏன் பவித்ரா?"
"அவங்க என்ன நினைக்கிறாங்கன்னா..."
"அவளும், அவள் நினைப்பும்...! இங்க பாரு, அவ சொன்னத எல்லாம் போட்டு உன் மனசை குழப்பிக்கிட்டு இருக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத. புரிஞ்சுதா?" எச்சரித்தான் அவன்.
வெண்மதியும் குணமதியும் அவர்களை நோக்கி ஓடி வந்தார்கள்.
"மாம், அவகிட்ட சொல்லுங்க, இந்த வீட்டை விட்டு போகணும்னு நினைச்சாலும், என்கிட்ட பேசாம இருக்கணும்னு நினைச்சாலும் நான் பொல்லாதவனா மாறிடுவேன்" சீறினான் தூயவன்.
மெல்ல தன் கண்களை இமைத்த படி தலையசைத்தார் குணமதி. தன் அறைக்கு சென்று கதவை சாத்தி தாழிட்டுக் கொண்டான். சோகமாய் நின்றாள் பவித்ரா
"அவ பேசுனத எல்லாம் நீ உன் மனசுல வச்சுக்க வேண்டிய அவசியம் இல்ல" என்றார் குணமதி.
"நான் அவரை வளச்சு பிடிக்க நினைக்கிறேன்னு அவங்க சொல்றாங்க மா" என்றாள் வேதனையுடன்.
குணமதியும் வெண்மதியும் ஒருவரை ஒருவர் வெறுப்போடு பார்த்துக் கொண்டார்கள்.
"இந்த பொண்ணு ஏன் இவ்வளவு கீழ்த்தரமா நடந்துக்குது? ஏன் அவ தூயவனை நிம்மதியாக இருக்க விடமாட்டேங்குறா? அவனை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி அப்படி என்ன சதிக்க முடியும்னு நினைக்கிறா?"
மென்று விழுங்கினாள் வெண்மதி. அவளுக்கு தெரியாதா? சஞ்சனா எவ்வளவு கீழ்த்தரமானவள் என்று! தனது சுயநலத்திற்காக உடன் பிறந்த அண்ணனின் சந்தோஷத்தையே கெடுத்தவள் ஆயிற்றே அவள்...! அவள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் அவள் தூயவனின் வாழ்க்கையில் மிகப்பெரிய தலைவலியாய் உருவெடுப்பாள்.
"தூயா ரொம்ப அப்செட்டா இருக்கான் மாம்" என்றாள் வெண்மதி பவித்ராவை பார்த்தபடி.
"ஏன் இருக்க மாட்டான்? இந்த சஞ்சனா அவனை இந்த மாதிரி தொந்தரவு செஞ்சுக்கிட்டே இருந்தா அவன் எப்படி நிம்மதியா இருப்பான்? இப்ப தான் அவன் கொஞ்சம் கொஞ்சமா சிரிச்சு சந்தோஷமா இருக்க ஆரம்பிச்சான். அந்த சந்தோஷம் என் பிள்ளை வாழ்க்கையில் நிலைக்காதா? ஏன் தான் கடவுள் அவனை இப்படி எல்லாம் சோதிக்கிறாரோ..."
அவருக்காகவும் தூயவனுக்காகவும் வருந்தினாள் பவித்ரா.
"இங்க பாரு பவித்ரா, நீ யாரை மதிக்கணும்னு ஒரு தெளிவான முடிவுக்கு வா"
"மதிக்கிறதா?"
"ஆமாம் நீ எங்களை மதிக்கிறதா இருந்தா, அந்த பொண்ணு பேசின பேச்சை எல்லாம் மனசுல ஏத்திக்காத. நீ அவளை மதிக்கிறதா இருந்தா, உன் இஷ்டத்துக்கு நீ என்ன வேணா செஞ்சுக்கோ" என்றார் விரக்தியுடன்.
"அம்மா ப்ளீஸ், அப்படியெல்லாம் பேசாதீங்க. நான் உங்களை ஹர்ட் பண்ணணும்னு நினைக்கல"
"நாங்க வேற என்ன நினைக்கிறது, பவித்ரா? தூயா அந்த பொண்ண எந்த அளவுக்கு வெறுக்கிறான்னு நீ பாக்கலையா? நீ எங்களை விட அந்த பொண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது அதை எப்படி அவனால பொறுத்துக்க முடியும்?"
"நான் அவரை சமாதானப்படுத்துறேன் மா"
"எங்களால அதை செய்ய முடியும்னு எனக்கு தோணல. உன்னால முடிஞ்சா நீ முயற்சி பண்ணி பாரு"
சரி என்று தலையசைத்துவிட்டு தூயவனின் அறையை நோக்கி சென்றாள் பவித்ரா. அம்மாவும் மகளும் என்ன நடக்கப் போகிறதோ என்று பதட்டத்தோடு நின்றார்கள்.
..........
மறுபுறம் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தாள் சஞ்சனா. அவளுக்கு பவித்ராவை ஏதாவது செய்து தீர வேண்டும் என்று தோன்றியது. மதுரைக்கு சென்றிருந்த தனது ஆளுக்கு ஃபோன் செய்தாள்.
"நீ இப்போ எங்க இருக்க?"
"சென்னைக்கு வந்துகிட்டு இருக்கேன் மேடம்"
"சீக்கிரம் வந்து தொலை" என்று எரிச்சலோடு அழைப்பை துண்டித்தாள்.
சின்னசாமி ஒருவன் தான் பவித்ராவை தூயவனின் வாழ்க்கையில் இருந்து வெளியேற்ற இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு. ஆனால், சின்னசாமியால் கடுமையான காவலை மீறி நிச்சயம் தூயவனின் வீட்டிற்குள் நுழைய முடியாது. அவன் வீட்டில் இருந்து பவித்ராவை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும். அதற்கு வேறு யுக்தியை கையாள வேண்டும் என்று யோசித்தவள் தன் கைபேசியை எடுத்து மாயவனுக்கு ஃபோன் செய்தாள். அவர் அந்த அழைப்பை ஏற்றார்.
"அந்தப் பொண்ணை உங்க வீட்ல இருந்து விரட்டி அடிக்காம நீங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க?"
"இதுல நான் செய்யறதுக்கு ஒண்ணுமே இல்ல. எல்லாம் என் கை மீறிப் போயிடுச்சு"
"அப்படியெல்லாம் நீங்க சொல்லிட்டு எஸ்கேப் ஆக முடியாது. உங்களால எதுவும் செய்ய முடியலன்னா நான் சொல்றதை நீங்க செய்யுங்க"
"இந்த விஷயத்துல நான் என்ன செய்ய முடியும்?"
"உங்க பொண்டாட்டி பொண்ணு கூட அந்த குப்பைகாரியை எங்கேயாவது அனுப்பி வையுங்க. அது போதும்"
"நான் எப்படி அவங்களை வெளியே அனுப்ப முடியும்? அவங்களுக்கு எதிரா நான் ஏதாவது செஞ்சேன்னு தெரிஞ்சா அவங்க என்னை கொன்னுடுவாங்க"
சஞ்சனா எரிச்சலின் உச்சிக்கு சென்றாள்.
"ஆனா, நான் குணா ஒரு ஐயர் கிட்ட பேசிகிட்டு இருந்ததை கேட்டேன். பவித்ராவோட அப்பாவுக்கு காரியம் பண்றத பத்தி பேசிக்கிட்டு இருந்தா. அதை அவங்க கோவிலில் பண்ண போறாங்களாம்"
"எப்போ அது?"
"வர்ற ஞாயிற்றுக்கிழமை... தூயா நிச்சயம் கோவிலுக்கு வரமாட்டான். அவனுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்ல"
"அது போதும். மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன்" என்று அழைப்பை துண்டித்த, சஞ்சனா,
"என்னால என்ன செய்ய முடியும்னு நான் இப்போ உனக்கு காட்றேன்" என்றாள் ஆவேசமாக.
........
தூயவனின் அறையின் கதவை தட்டினாள் பவித்ரா. கதவை திறந்த தூயவன், கதவை தட்டிய நபரை பார்த்து கத்து நினைத்தபோது அவளை பார்த்து, அமைதியானான்.
"உள்ள வா" என்றான் மென்மையான குரலில்.
உள்ளே வந்த பவித்ரா,
"நான் இங்கிருந்து போகணும்னு நினைக்க மாட்டேன்" என்றாள் மெல்லிய குரலில்.
தன் கைகளை கட்டிக் கொண்டு நின்றான் தூயவன்.
"நீங்க அதுக்காக கோவப்படாதீங்க"
"ம்ம்ம்..."
"அவ்வளவு தான்..."
"அவ்வளவு தானா?" என்றான் தன் கைகளை விரித்து.
"நான் வேற என்ன செய்யணும்?"
"நான் உன்கிட்ட பேச வந்தப்போ எதுக்காக மூஞ்சிய திருப்பிக்கிட்ட? நீ அப்சட்டா இருந்தா என்கிட்ட பேச மாட்டியா?"
"உங்ககிட்ட அப்சட்டா இருக்க நான் யாரு...? நீங்க எங்க, நான் எங்க..! நான் தங்க இடம் கொடுத்திருக்கீங்க. எனக்குன்னு ஒரு குடும்பத்தை கொடுத்திருக்கீங்க. எங்க அப்பா என்னை பார்த்துக்கிட்டதை விட அதிகமா நீங்க என்னை பார்த்துக்கிறீங்க. நான் உங்ககிட்ட கோப படவே மாட்டேன். ஏன்னா..."
மேலே பேசப் போனவளை, தன் ஆள்காட்டி விரலை அவள் உதட்டில் வைத்து தடுத்து நிறுத்த, தன் விழிகளை படபடத்தாள் பவித்ரா.
"என்னை கடவுள் கிடவுள்னு ஏதாவது சொன்னா, நான் பொறுத்துக்க மாட்டேன் புரிஞ்சுதா?" என்றான்.
அவள் ஒன்றும் கூறாமல் பேந்த பேந்த விழித்துக் கொண்டு நின்றாள். அப்பொழுது தான் நான் செய்தது என்ன என்பதை உணர்ந்து தன் விரலை அவள் வாயிலிருந்து எடுத்தான் தூயவன். இருவரும் சிறிது நேரத்திற்கு வேறெங்கோ பார்த்துக் கொண்டு நின்றார்கள். முதலில் தன்னை சுதாகரித்துக் கொண்டது தூயவன் தான்.
"பவித்ரா, உனக்கு தெரியும்ல,
எனக்கு அந்த பொண்ணை சுத்தமா பிடிக்காது"
அவள் ஆம் என்று தலையசைத்தாள்.
"அந்த மாதிரி ஒரு அரோகன்ட்டான கேரக்டரை யாருக்கு பிடிக்கும்? அவ என்னையே மிரட்டுகிறா. அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்...! எவ்வளவு நாளைக்குத்தான் நான் அவளை பொறுத்துக்கிட்டு போகணுமோ தெரியல" என்றான் பல்லை கடித்தபடி.
"உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னா அவங்க அமைதியாயிடுவாங்கன்னு நினைக்கிறேன்"
தூயவனின் முகம் மலராய் மலர்ந்தது. ஆனால் அவள் கூறிய அடுத்த வார்த்தைகளை கேட்டு அது வாடியது.
"உங்களுக்கும், உங்க குடும்பத் தகுதிக்கும் ஏத்த மாதிரி ஒரு நல்ல பொண்ணா தேடி கல்யாணம் பண்ணிக்கோங்க" என்று புன்னகைத்தபடி அவனது அறையை விட்டு வெளியேறினாள் பவித்ரா.
அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றான் தூயவன். அவளுக்கு அவனை மணந்து கொள்ளும் எண்ணம் துளியும் இல்லை என்பது தெள்ளத்தெளிவாய் விளங்கியது. அவள் அவன் மீது வைத்திருக்கும் மரியாதை எக்குத்தப்பாய் எகிறிக் கொண்டிருந்தது.
முதன்முறையாக தூயவனின் மனதில் ஏதோ ஒரு நெருடல் ஏற்பட்டது. அவள் கண்ணில் கண்ணீரை பார்த்தவுடன் அவனுக்கு ஏன் அவ்வளவு கோபம் வந்தது? அவளது கண்ணீர் ஏன் அவனை அவ்வளவு தூரம் பாதித்தது? அவள் அவன் வீட்டை விட்டு போனால் இவனுக்கு என்ன? அதை ஏன் அவனால் தாங்க முடியவில்லை? அவளது அப்பாவிற்கு அவன் செய்து கொடுத்த சத்தியம் மட்டும் தான் அதற்கு காரணமா? அல்லது அதையும் தாண்டி ஏதாவது இருக்கிறதா?
அப்பொழுது அவனது அறைக்கு வந்தாள் வெண்மதி. அவளை பார்த்து புன்னகை புரிந்தான் தூயவன்.
"கூல் ஆயிட்ட போல இருக்கு?" என்றாள்.
ஆமாம் என்று தலையசைத்தான்.
"என்ன தூயா, இப்பல்லாம் நீ செய்யாத வேலையெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்க?"
"என்ன சொல்றீங்க?"
"நீ பவித்ராவுக்கு ரொம்ப கீழ்ப்படிஞ்சி நடக்கிறதா தெரியலையா?"
"கீழ்ப்படிஞ்சி நடக்கிறனா?"
"பின்ன என்ன? உனக்கும் அம்மாவுக்கும் நடுவுல இருந்த பெரிய பிரச்சினையை அவங்க தீர்த்து வச்சாங்க. இப்பவும் நீ அவ்வளவு கோவமா இருந்த, அவங்க உன்னை சாந்தப்படுத்திட்டாங்க ஆனா நாங்க சொல்லி எல்லாம் நீ கேட்டதே இல்லையே..."
"எனக்கு புரியுறபடி விஷயத்தை எடுத்து சொல்ற திறமை உங்களுக்கு இல்ல. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?" என்றான் கிண்டலாய்.
"அப்படியா? அப்போ பவித்ராவை எப்பவும் நம்ம கூடவே வச்சிக்க வழி தேட வேண்டியது தான். அவங்க மூலமா எல்லாத்தையும் நாங்க சாதிச்சுக்குறோம்..."
"அப்படின்னா, பவித்ராவை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுங்க" என்றான், வெண்மதியை பேச்சிழக்க செய்து...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top