27 தகவல் தெரிவிக்கப்பட்டது
வெண்மதி பவித்ராவின் அறைக்கு செல்ல முயன்றாள். அவள் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினார் குணமதி. அவரை குழப்பத்துடன் வெண்மதி பார்க்க, வேண்டாம் என்று தலையசைத்தார் குணமதி. அங்கிருந்து அவர்கள் சற்று தூரம் வந்த பிறகு,
"என்னை எதுக்காக மாம் கூட்டிக்கிட்டு வந்துட்டீங்க?"
"நீ என்ன செய்ய நினைச்ச?"
"பவித்ராவுக்கு புரிய வைக்க நெனச்சேன்"
"ஏன்?"
"ஏன்னா என்ன அர்த்தம்? தூயா எவ்வளவு அப்செட்டா இருந்தான்னு நீங்க பாக்கலையா?"
"அதனால?"
"அவனுக்கு நம்ம ஹெல்ப் பண்ணலாம் மாம்"
"அவனுக்கு நம்ம ஹெல்ப் தேவை இல்ல. இந்த விஷயத்தை அவன் ஸ்டைலயே அவன் ஹேண்டில் பண்ணட்டும். அவன் சொந்த விஷயத்தில் நம்ம மூக்கை நுழைக்க வேண்டாம்"
"சொந்த விஷயமா?" என்றாள் வியப்போடு.
"இல்லன்னு சொல்லுவியா நீ?" என்று அவளை திருப்பி கேள்வி கேட்டார் குணமதி.
வெண்மதி யோசனையில் ஆழ்ந்தாள்.
"உன் தம்பி அவகிட்ட என்னமோ சொல்லணும்னு நினைக்கிறான்" என்று சிரித்தார்
"அது எனக்கு புரியுது. ஆனா பவித்ரா தான் புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க"
"அதை அவளுக்கு புரிய வைக்க வேண்டியது அவன் கடமை. எவ்வளவு நாளைக்கு நம்ம அவனுக்கு உதவி செஞ்சுக்கிட்டே இருக்க முடியும்? எல்லாத்துக்கும் மேல, பவித்ராவுக்கு அவன் மனசுல இருக்கிறது புரியலன்னு நான் நம்பல"
"என்ன மாம் சொல்றீங்க?" என்றாள் ஆச்சரியமாய்.
"அவளுக்கு புரியுது. அதனால தான் அவன் கொடுத்த வளையலை அவ வாங்கிக்கல"
"அப்படியா சொல்றீங்க?"
"ஆமாம். அவ தன்னோட லிமிட்ல இருக்கணும்னு நினைக்கிறா. ஏன்னா, தூயாவுக்கு தான் தகுதியானவ இல்லன்னு அவ நினைக்கிறா" என்றார் வருத்தமாய்.
"நீங்க சொல்றது உண்மையா இருக்குமா?"
"நிச்சயம் உண்மையா இருக்கும்"
"அப்படின்னா தூயாவுக்கு ஹெல்ப் பண்ண வேண்டியது நம்ம கடமை இல்லயா மாம்?" என்றாள் பாவமாய்.
"வெளிப்படையா செய்ய வேண்டாம்"
"அப்போ எப்படி செய்யறது?"
"அமைதியா இரு. தேவைப்பட்டா மட்டும் செய்யலாம்"
சரி என்று தலைசைத்தாள் வெண்மதி.
"அவங்களை டின்னர் சாப்பிட வர சொல்லு. நம்ம அவங்க ரெண்டு பேரோட எக்ஸ்பிரஷன்சையும் கவனிக்கலாம். அதுக்கு பிறகு முடிவு பண்ணிக்கலாம்"
"இது நல்ல ஐடியா" என்று சிரித்தாள் வெண்மதி.
"உன் தம்பி வாழ்க்கையை பவித்ராவோட செட்டில் பண்ணனும்னு நீ ரொம்ப ஆசையா இருக்க. உன்னை பத்தி நீ யோசிச்சி பார்த்தியா?" என்ற தரமான கேள்வியை எழுப்பினார் குணமதி.
வெண்மதி சிரிப்பதை நிறுத்தினாள்.
"உனக்கும் சந்தோஷை பிடிச்சிருக்குன்னு எனக்கு தெரியும். எதுக்காக நீ தயங்குற?"
"மாதேஷ் அங்கிளோட மகனையும், சஞ்சனாவோட அண்ணனையும் ஏத்துக்க நீங்க தயாரா?" என்ற கேள்வியை பதிலாய் எழுப்பினாள் வெண்மதி.
"அவன் உங்க அப்பா மாதிரி இருக்காத வரைக்கும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல"
"சந்தோஷ், டாட் மாதிரி இருக்க மாட்டாருன்னு நினைக்கிறீங்களா?"
"உங்க அப்பாவை மாதிரி யாராலயும் இருக்க முடியாது. அவர் ஒரு மாஸ்டர் பீஸ்" என்று வேதனையுடன் புன்னகைத்தார்.
"ஒருவேளை சந்தோஷ் மாறிட்டா என்னம்மா செய்யறது?"
"எனக்கு என்னமோ அவன் மாற மாட்டான்னு தோணுது" என்றார் குணமதி உறுதியோடு.
"எப்படி சொல்றீங்க?"
"உன் கல்யாணத்துக்கு பிறகு அவனோட மனசை மாத்திக்க அவனுக்கு நிறைய சந்தர்ப்பங்கள் இருந்தது. ஆனா அவன் மாத்திக்கல. நீ அவன் அப்பாவை வெளுத்து வாங்கும் போது கூட அவங்க அப்பாவை சப்போர்ட் பண்ணனும்னு அவன் நினைக்கல. இதைவிட வேற என்ன வேணும்?"
"நம்மளை நம்ப வைக்கறதுக்காக அவங்க எல்லாரும் சேர்ந்து நடத்தின நாடகமாக இருந்தா என்ன செய்றது?"
"எனக்கு மாதேஷை நல்லா தெரியும். எல்லா இடத்திலுமே தான் எவ்வளவு பவர்ஃபுல்லான ஆளுன்னு காமிக்கத்தான் அவர் விரும்புவாரு. நாடகத்துக்காக கூட தான் அவமானப்படற மாதிரி எல்லாம் அவர் நிச்சயம் காட்டிக்க மாட்டார். அதையெல்லாம் அவரால தாங்கவே முடியாது. அதுவும், நிச்சயமா என் முன்னாடியும் தூயா முன்னாடியும் வாய்ப்பே கிடையாது" என்று உறுதியாய் கூறினார். அது வெண்மதியை யோசனையில் ஆழ்த்தியது.
"நீ சந்தோஷ்கிட்ட என்ன எதிர்பார்க்கிற?"
"ஜஸ்ட் செக்யூரிட்டி... அதுக்கு மேல வேற எதுவும் இல்ல. அவர் எனக்கு தன்னை நிரூபிச்சி காட்டணும். அவ்வளவு தான்"
அதைக் கேட்டு புன்னகைத்த குணமதி,
"இதையே தான் நான் தூயாவும் செய்யணும்னு நினைக்கிறேன். தன்னை அவனே நிரூபிச்சு காட்டட்டும், அவனோட ஸ்டைல்ல...! யாருக்கு தெரியும், ஒருவேளை பவித்ரா கூட அவன் கிட்ட அதையே எதிர்பார்க்கலாம் இல்லயா?"
ஆம் என்று தலையசைத்தாள் வெண்மதி.
குழந்தை சாமியை அழைத்தார்.
"சொல்லுங்கம்மா"
"தூயாவையும் பவித்ராவையும் சாப்பிட வர சொல்லுங்க"
"சரிங்கம்மா" என்று அவர்களை அழைக்கச் சென்றார் குழந்தைசாமி.
அடுத்து சில நிமிடங்களில் உணவு மேசைக்கு வந்து சேர்ந்தாள் பவித்ரா. தனக்கு பக்கத்தில் அவளை அமர வைத்துக் கொண்டாள் வெண்மதி. அவர்களுக்கு பரிமாறினார் குணமதி.
அப்போது முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு வந்தான் தூயவன். அவனது கண்கள் பவித்ராவின் மீது தான் இருந்தது. ஆனால் அவளோ, தலை குனிந்து அமர்ந்திருந்தாள். அவர்கள் இருவரையும் வேறு இருவர் நோட்டமிட்டு கொண்டிருந்தார்கள் என்று கூற தேவையில்லை. பவித்ராவிற்கு எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டான் தூயவன்
"தூயா, ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்றார் குணமதி.
தூயவன் பவித்ராவை பார்க்க, அவள் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்துவிட்டு மீண்டும் தலை தாழ்த்திக் கொண்டாள். பதில் கூறாமல் சாப்பிட்டான் தூயவன். அது பவித்ராவுக்கு கவலையை தந்தது.
"அவனுக்கு ஏதோ ஆஃபீஸ் டென்ஷன்னு நினைக்கிறேன்" என்றாள் வெண்மதி.
அதற்கும் தூயவன் பதில் அளிக்கவில்லை.
"மாம், மல்லி மசாலா சூப்பரா இருக்கு" என்றாள் வெண்மதி.
"அப்படியா?" என்றார் குணமதி.
"ஆமாம், உங்களுக்கு சந்தேகம் இருந்தா, பவித்ராவை கேளுங்க" என்றாள்.
ஆம் என்று புன்னகையோடு தலையசைத்தாள் பவித்ரா.
"என்ன இருந்தாலும் உன்னோட பாதம் அல்வா அளவுக்கு இருக்காது. நான் சொல்றது சரி தானே தூயா?" என்றார் குணமதி.
சாப்பிடுவதை சற்று நிறுத்திவிட்டு, அவர்களுக்கு பதில் அளிக்காமல் மீண்டும் சாப்பிட்டான் தூயவன்.
"தூயாவுக்கு நீங்க செஞ்ச பாதாம் அல்வா ரொம்ப பிடிச்சிருந்தது தெரியுமா?" என்றாள் வெண்மதி.
பவித்ரா சங்கடத்துடன் புன்னகைத்தாள்.
"அம்மா விசு எனக்கு கால் பண்ணி இருந்தான்" என்றாள் வெண்மதி தூயவனின் முகத்தை கவனித்தவாறு.
சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான் தூயவன்.
"நெஜமாவா? உன்னோட மெசேஜ்க்கு அவன் அவ்வளவு சீக்கிரம் ரெஸ்பான்ஸ் பண்ணிட்டானா?" என்றார் குணமதி ஆவலுடன்.
"ஏன் பண்ண மாட்டான்? விஷயம் அப்படிப்பட்டது.. நான் சொல்றது சரி தானே?" என்றாள்.
ஆமாம் என்று குணமதி தலையசைக்க, அவர்களை பார்த்து முறைத்தான் தூயவன். ஆனால் அவர்களோ அவனைப் பார்க்கக்கூட இல்லை.
"அவன் என்ன சொன்னான்?" என்றார் குணமதி.
"விஷயத்தை கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டான். இங்க வரணும்னு ரொம்ப ஆர்வமா இருக்கான்"
"அப்போ ராமுவோட சங்கதி என்ன?"
"இந்த நேரம் அவன் சென்னைக்கு கிளம்பி இருக்கணும்" என்று சிரித்த வெண்மதி,
"பவித்ரா..." என்றாள்.
"ம்ம்ம்?" தன் தலையை உயர்த்தினாள் பவித்ரா.
"விசுவும் ராமுவும் எங்க கசின்ஸ்"
"ஓ..."
"அவங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்ல பசங்க. அவங்க எனக்கு கசின் தான்னாலும், என்னை சொந்த அக்கா மாதிரி நடத்துவாங்க. எங்களை அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..."
"ஓ..."
"உனக்கும் அவங்களை பிடிக்கும்"
கண்களை சுருக்கினான் தூயவன்.
"மாம், அவங்கள பத்தி பவித்ராவுக்கு சொல்லுங்க"
"ஆமாம் பவித்ரா, அவங்க எங்க வீட்டுக்கு வந்தாலே எங்க வீடு கலகலன்னு மாறிடும்"
"உங்க தங்கச்சியை பத்தியும் சொல்லுங்க" என்றான் தூயவன் எரிச்சலோடு.
சில நொடி திகைத்த குணமதி வெண்மதியை பார்த்து புன்னகை புரிந்தார்.
"அவ என்னை மாதிரி கலகலன்னு இல்லனாலும், அவளுக்கு பெண் குழந்தைன்னா ரொம்ப பிடிக்கும்" என்றார் பவித்ராவை பார்த்தவாறு.
கண்களை சுழற்றினான் தூயவன்.
"அப்புறம் மாம்... " என்று வெண்மதி ஏதோ கூறப்போக, அவள் பேச்சை வெட்டி,
"அக்கா, அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாம் பண்ணிட்டீங்களா?" என்றான்.
"என்ன அரேஞ்ச்மென்ட்ஸ்?"
"நீங்க தானே சொன்னீங்க, ஞாயிற்றுக்கிழமை நம்ம கோவிலுக்கு போகணும்னு?"
"நீ (என்பதை அழுத்தி) எங்க கூட வர போறியா?" என்றாள் வெண்மதி தன் புருவம் உயர்த்தி.
"நான் வர வேண்டாமா?"
"நான் அப்படி சொல்லல. வழக்கமா நீ கோவிலுக்கு வர விரும்ப மாட்டியே அதுக்காக தான் கேட்டேன்."
"நான் ஒன்னும் சாமி கும்பிட கோவிலுக்கு வரல. அங்க உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் தேவைப்படும். அதுக்காக தான் வரணும்னு நினைக்கிறேன்"
"அவன் சொல்றது சரி தான், மதி. நமக்கு அங்க ஒருத்தர் தேவை" என்றார் குணமதி.
ஆம் என்று தலையசைத்தாள் வெண்மதி.
"மாம், ராமு வேலை தேடிக்கிட்டு இருக்கான்னு நினைக்கிறேன்" என்று மீண்டும் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தாள் வெண்மதி.
"அவன் தான் ஏற்கனவே வேலை செஞ்சுகிட்டு இருக்கானே?" என்றார் குணமதி.
"அவனுக்கு ஹோட்டல் சாப்பாடு பிடிக்கலையாம்"
"அக்கா, ஒரு மனுஷன்னா, இருக்கிற இடத்துக்கு தகுந்த மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிட்டு போக தெரியணும். அவனுக்கு அம்மா கைல செஞ்ச சாப்பாடு சாப்பிடணும்னா வீட்டிலேயே உட்கார்ந்துக்கிட்டு இருக்க வேண்டியது தானே? எதுக்கு அதெல்லாம் விட்டுட்டு வெளியில போய் வேலை தேடிக்கிட்டு இருக்கணும்?" என்றான் தூயவன் கோபமாய்.
"இல்லையே.. அவனுக்கு இன்னொரு ஆப்ஷனும் இருக்கே... அவன் சென்னைக்கு வந்தா அவங்க பெரியம்மா கையில சாப்பாடு கிடைக்கும் இல்ல?" என்றார் குணமதி.
"அதையே தான் நான் அவனும் யோசிச்சுக்கிட்டு இருக்கான்" என்றாள் வெண்மதி.
"நெஜமாவா? பாரு, என் ராமு எப்பவுமே என்னை அவங்க அம்மாவுக்கு சமமா தான் நினைப்பான்" என்றார்.
"மாம், அவனை எல்லாத்துக்கும் என்கரேஜ் பண்றதை நிறுத்துங்க. சாப்பாட்டை விட ஒரு மனுஷன் வேலையில தான் அதிக கவனம் செலுத்தணும். அவன் சரியான சோத்து மூட்டை" என்றான் தூயவன் எரிச்சலோடு.
"அவனுக்கு சோறு போட ஆள் இருக்கும் போது அவன் எதுக்காக சோத்துக்கு ஏங்கணும்?" என்று கேள்வி எழுப்பினார் குணமதி.
"இப்போ பவித்ராவும் இங்க இருக்காங்க. நீங்க வேணும்னா பாருங்க பவித்ரா, உங்க ஸ்வீட்டுக்காக அவன் உயிரை விடப்போறான்" என்றாள் வெண்மதி.
பவித்ரா புன்னகை புரிந்தாள்.
"பவித்ரா நான் உங்ககிட்ட ஒன்னு கேட்க போறேன்"
அவள் என்ன கேட்கப் போகிறாள் என்று பார்க்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் தூயவன். கேளுங்கள் என்பது போல் தலையசைத்தாள் பவித்ரா.
"என் கசின் வந்ததுக்கு பிறகு நீங்க அவனுக்கு நிறைய ஸ்வீட் செஞ்சு குடுங்க. ஏன்னா, அவனும் உங்களை மாதிரியே ரொம்ப ஸ்வீட்டானவன்"
பவித்ரா சரி என்று தலையசைத்தாள்.
"ராமுவும் நம்ம கம்பெனியிலேயே சேர்ந்துட்டா நல்லா இருக்கும்னு எனக்கு தோணுது. என்ன மாம் சொல்றீங்க?" என்றாள்.
குணமதி அவசரமாய் தலையசைத்தார்.
"அது ரொம்ப நல்ல ஐடியா"
"ஆமாம் தானே?"
முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு எழுந்து நின்ற தூயவன், ஒன்றும் கூறாமல் பவித்ராவின் மீது ஒரு பார்வையை வீசி விட்டு சென்றான்.
குணமதியும் வெண்மதியும் ஒரு வெற்றி பார்வையை பரிமாறிக் கொண்டார்கள்.
பவித்ராவுக்காக தன் மனதில் ஏதோ விசித்திரமாய் உணர துவங்கினான் தூயவன். அது என்ன என்பதில் அவனுக்கு தெளிவு இல்லாவிட்டாலும், ஒரு விஷயத்தில் அவனுக்கு ஆணித்தரமான தெளிவு இருந்தது. அவள் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்வதில் அவனுக்கு விருப்பம் இல்லை. ஆனால் அதே நேரம், அவளை மணந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்கு இல்லை. ஏனென்றால் அவனுடைய உணர்வைப் பற்றி அவனுக்கே தெளிவில்லை.
......
மறுபக்கம் தூயவனின் வாழ்க்கையில் இருந்து பவித்ராவை விலக்கி வைக்க வேண்டும் என்று முழு மூச்சாய் செயல்பட்டுக் கொண்டிருந்தாள் சஞ்சனா, தூயவன் பவித்ராவை காதலிக்கிறேன் என்று கூறாவிட்டாலும்...! அதை செயல்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்ய அவள் தயாராக இருந்தாள். விளைவுகளைப் பற்றி எல்லாம் அவள் யோசிக்க தயாராக இல்லை. அவளது ஒரே நோக்கம், பவித்ராவை தூயவனின் வாழ்க்கையில் இருந்து விரட்டி அடிப்பது. அவ்வளவு தான். பெரியசாமி அவளை கவர்ந்து சென்று விட்டால், அவளை தூயவன் மறந்து விடுவான் என்று தப்பு கணக்கு போட்டாள் சஞ்சனா. பவித்ரா இருக்கும் இடத்தை பெரியசாமிக்கு தெரியப்படுத்த ஒருவனை நியமித்திருந்தாள். அவனுடைய தகவலுக்காக தான் அவள் காத்திருந்தாள்.
இதோ அவளது கைபேசி ஒரு குறுந்தகவலை சுமந்து வந்து குரல் எழுப்புகிறது. அந்த தகவலை திறந்து படித்த அவளது முகம் பிரகாசம் அடைந்தது.
*பெரியசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது*
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top