24 புரிதலுக்கு அப்பாற்பட்ட...

24 புரிதலுக்கு அப்பாற்பட்ட...

அலுவலகத்திற்கு வந்த தூயவன் தன் அறையை நோக்கி நடந்தான். அங்கு சந்தோஷை கண்ட அவனது கால்கள், சில நொடிகள் நின்றன. அவனைப் பார்த்த சந்தோஷும் நின்றான். தூயவனை பார்த்து புன்னகை புரிந்தான். அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு தன் அறைக்கு சென்றான் தூயவன். தனது அறையில் நுழைவதற்கு முன், பின்னால் திரும்பிப் பார்த்த சந்தோஷ், அவனது தங்கை தூயவனின் அறைக்குள் நுழைவதை பார்த்து எரிச்சல் அடைந்தான்.

தனது அனுமதி இல்லாமல் தன் அறைக்குள் நுழைந்த கஞ்சனாவை பார்த்த தூயவன் கோபத்தில் பல்லை கடித்தான். அவனது முக பாவத்தை ஊன்றி கவனித்தபடி நின்றாள் சஞ்சனா. சந்தோஷுக்கும் வெண்மதிக்கும் இடையில் இருந்த உறவைப் பற்றி தெரிந்த பிறகு, அவன் தன்னிடம் கடுமை காட்ட மாட்டான் என்று நம்பினாள் சஞ்சனா. ஆனால் அவன் தூயவன் ஆயிற்றே...!

"நீ இங்க எதுக்கு வந்த?" என்று சீறினான் 

"உங்களைப் பார்த்து..."

"உங்க அப்பாவோட கேபின் ரிசப்ஷன் பக்கத்துல இருக்கு. போ..."

"அது எனக்கு தெரியும். நான் உங்களை பார்க்கத்தான் வந்தேன். என் அண்ணனும் உங்க அக்காவும்..."

அவளது பேச்சை வெட்டி,

"எங்க அக்கா கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்லிட்டாங்க. கேட்கலயா நீ?"

"ஆமாம்... ஆனா, நம்ம ஏன் அதை நடத்தி வைக்க கூடாது?"

"எங்க அக்காவுக்கு விருப்பம் இல்லாத எதயும் செய்ய நான் தயாரா இல்ல"

"உங்க அக்கா சந்தோஷமா இருக்க வேண்டாமா?"

"அவங்க ஏற்கனவே எங்க கூட சந்தோஷமா தான் இருக்காங்க"

"ஆனா, எங்க அண்ணன் மாதிரி ஒரு நல்லவனை கல்யாணம் பண்ணிக்கிற எல்லா தகுதியும் அவங்களுக்கு இருக்கு. நீங்க மட்டும் என் கூட கொஞ்சம் கோவாப்ரேட் பண்ணா, நிச்சயம் அவங்களை எங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க என்னால முடியும்"

"எங்க அக்கா கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சா, அதை எப்படி செஞ்சு முடிக்கணும்னு எனக்கு தெரியும். எனக்கு யாரோட உதவியும் தேவையில்ல. முதல்ல இங்கிருந்து கிளம்பு"

"நான் என்ன சொல்ல வரேன்னா..."

"ஐ செட், கெட் அவுட்..." அந்த அறை அதிரும்படி குரல் எழுப்பினான்.

"ஒரு பொண்ண இப்படித்தான் நடத்துவீங்களா?" என்ற அவளது கண்ணில் இருந்து கண்ணீர் உருண்டோடியது

"உன்னோட நான்சென்ஸ்க்கு எல்லாம் பதில் சொல்ல எனக்கு டைம் இல்ல"

"ஐ லவ் யூ சோ மச்..."

எரிச்சலுடன் பல்லை கடித்தான் தூயவன்.

"உங்களுக்கு முன்னாடி இருக்கிற அன்பை நீங்க புரிஞ்சுக்கலனா, உங்களுக்கு வேணும்னு நினைக்கும் போது உங்களுக்கு அது கிடைக்காது. நீங்க உங்க அக்காவுடைய வாழ்க்கையை பாழாக்குறிங்க. அவங்க உங்களால தான் எங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்க தயாரா இல்ல. உங்களுக்காக அவங்க தன்னோட சந்தோஷத்தை கூட தியாகம் பண்ண தயாரா இருக்காங்க. ஆனா நீங்க அவங்க சந்தோஷத்தை பத்தி யோசிக்கக்கூட தயாரா இல்ல. நீங்க மட்டும் சரின்னு சொன்னா, அத்தனை பிரச்சனையும் முடிஞ்சிடும். நீங்க எங்க அப்பாவை பத்தி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல. நம்ம கல்யாணத்துக்கு பிறகு எந்த விஷயத்திலும் அவர் தலையிடாம உங்க சுதந்திரத்தில் தலையிடாம, நான் பார்த்துக்கிறேன். என்னை நம்புங்க. ஆஃபீஸ் விஷயத்துல கூட அவரை தலையிடாம என்னால் செய்ய முடியும்."

அப்போது, கதவை திறந்துகொண்டு உள்ளே வந்த சந்தோஷின் பக்கம் அவர்களது பார்வை திரும்பியது.

"நீ இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" என்றான் அவன்

"என்னை தூயவனுக்கு புரிய வைக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்"

"என் கூட வா" 

"அண்ணா, ப்ளீஸ் இந்த விஷயத்துல நீ தலையிடாத. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு தான் நான் போராடிட்டு இருக்கேன்"

"நீ வாயை மூடிகிட்டு சும்மா இரு. ஏற்கனவே இருக்கிற பிரச்சனையை மேல மேல சிக்கலாகாத"

"அண்ணா, என்னை அவர்கிட்ட பேச விடு"

"எக்ஸ்கியூஸ்  அஸ்..."அவளது கையைப் பிடித்து அங்கிருந்து இழுத்துச் சென்றான் சந்தோஷ்.

"தூயவன், என்னுடைய காதல் எவ்வளவு ஆழமானதுன்னு நீங்க சீக்கிரமே தெரிஞ்சிக்குவீங்க. என்னோட காதலை அவமதிச்சதுக்காக நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க. அது நடக்கலன்னா நான் என் பெயரை மாத்திக்கிறேன்" என்றபடி அவனுடன் நடந்தாள் சஞ்சனா.

அவளை இழுத்துக் கொண்டு சந்தோஷ் வெளியே வந்த போது, அங்கு மாயவனும் மாதேஷும் நின்றிருந்தார்கள். மாதேஷை நோக்கி ஓடிச் சென்ற சஞ்சனா, அவரை கட்டிக் கொண்டு அழுதாள்.

"நான் அவரை ரொம்ப காதலிக்கிறேன், டாட். ஆனா அவர் என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாரு. என்னோட தப்பு இதுல என்ன இருக்கு?  அவரை ஆழமா காதலிச்சது என்னோட தப்பா? அவர் இல்லாமல் என்னால் வாழவே முடியாது?"

"மாயா, தயவு செய்து என் பொண்ணோட வாழ்க்கையை காப்பாத்து" என்றார் மாதேஷ் உணர்ச்சிவசப்பட்டு.

"டாட், அவளை வீட்டுக்கு கூட்டிகிட்டு போங்க" என்றான் சந்தோஷ்.

"நான் தூயவன் கிட்ட பேசணும்" என்றார் மாதேஷ்.

"தூயவன்கிட்ட நான் பேசுறேன். நீங்க கிளம்புங்க" என்றான் சந்தோஷ்.

மாதேஷ் சரி என்று தலையசைக்க, சஞ்சனா அவனை நன்றியோடு ஏறிட்டாள். அவர்கள் அந்த இடம் விட்டு சென்றார்கள்.

"அவனுக்கு சொல்லி புரியவை சந்தோஷ்" என்ற மாயவன், தன் அறைக்குச் சென்றார்.

தூயவனின் அறையின் கதவை தட்டினான் சந்தோஷ். பல்லை கடித்தவாறு கோபத்தோடு கதவை திறந்த தூயவன், சந்தோஷ் நின்றிருந்ததை பார்த்து அவனுக்கு எதிர்ப்புறம் திரும்பி நின்றான். அவன் ஒருவேளை சஞ்சனாவை எதிர்பார்த்து இருந்திருக்கலாம்.

"நீங்க உங்க தங்கச்சியை பத்தி பேச வந்திருந்தா..."

"நிச்சயமா இல்ல. அவளோட நடத்தைக்காக மன்னிப்பு கேட்க தான் வந்தேன்" என்றான் சந்தோஷ்.

"இதுக்காகத்தான் அக்கா உங்களை ஏத்துக்க மாட்டேங்கிறாங்க" என்றான் வெறுப்போடு.

"எனக்கு தெரியும். மதிக்கு சஞ்சனாவை பிடிக்காது"

"எங்க வீட்ல தங்கி இருந்தப்போ, அவ எக்கச்சக்க பிரச்சனையை ஏற்படுத்தினா. அப்புறம் எப்படி எங்க அக்காவுக்கு அவளை பிடிக்கும்? எங்க அக்கா மேல தப்புன்னு நீங்க சொல்லுவீங்களா?"

"நான் நிச்சயம் மதி மேல தப்பு இருக்குன்னு சொல்ல மாட்டேன். ஏன்னா யார் மேல தப்புன்னு எனக்கு நல்லாவே தெரியும்"

"அப்படி இருக்கும் போது நான் எப்படி எங்க அக்காவை உங்களுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுப்பேன்? உங்க தங்கச்சி அவங்களை நிம்மதியா வாழ விடுவான்னு நினைக்கிறீங்களா?"

"இல்ல, வாழ விடமாட்டா. ஆனா நீங்க எல்லாரும் எதுக்காக என்னை விட்டுட்டு என் தங்கச்சியை பத்தி கவலை படுறீங்க?" என்றான் அமைதியாக.

"ஏன்னா, அவ உங்க வாழ்க்கையோட ஒரு அங்கம்"

"இருக்கலாம், ஆனா அவ கூட யார் இருக்க போறது?"

"நீங்க சொல்றதுக்கு என்ன அர்த்தம்? நீங்க ஃபிரான்ஸ்க்கு போக போறீங்க. அதுக்கப்புறம் அக்கா அவங்க கூட தானே இருந்தாகணும்?"

"நீங்க என்னை பத்தி என்ன நினைக்கிறீங்க தூயவன்? எதுக்காக நான் ஃபிரான்ஸ் டீலை வலிய வந்து ஏத்துக்கிட்டேன்? என்னோட திறமையை காட்டவா? நிச்சயம் இல்ல. மதியை என்னோட கூட்டிகிட்டு போறதுக்காக தான்... என் குடும்பத்தை விட்டு ரொம்ப தூரம் அவளை கூட்டிகிட்டு போகணும்னு நினைக்கிறேன்"

அதைக் கேட்டு புருவம் உயர்த்தினான் தூயவன்.

"மதியை நான் எங்க அப்பா தங்கச்சி கூடவும் விடமாட்டேன். உங்க அம்மா அப்பாகிட்டையும் விட மாட்டேன். அவ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா, அவ என் கூட தான் இருப்பா. அவள் என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பாள்னு எனக்கு நம்பிக்கை இருக்கு"

"ஒருவேளை உங்க அப்பா அக்காவை உங்க கூட அனுப்ப ஒத்துக்கலனா என்ன செய்வீங்க?"

"அவரோட பர்மிஷனை யார் இங்க எதிர்பார்த்துகிட்டு இருக்கா? என் பொண்டாட்டி கூட நான் இருக்கிறதுக்கு எனக்கு யாரோட பர்மிஷனும் தேவையில்ல"

தூயவனின் முகத்தில் மெல்லிய புன்னகை படர்ந்தது.

"ஐ ப்ராமிஸ். மதி என் கூட சந்தோஷமா இருப்பா"

தூயவன் யோசனையில் ஆழ்ந்தான்.

"எங்க கல்யாணத்துக்கு பிறகு, என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க சொல்லி நான் உங்களை கட்டாயப்படுத்துவேன்னு நினைக்காதீங்க. ஏன்னா, உங்களை கட்டாயப்படுத்தி கல்யாணம் வேணா பண்ணி வைக்க முடியுமே தவிர, அவ கூட சந்தோஷமா வாழ்ந்து தான் ஆகணும்னு உங்களை யாராலும் கட்டாயப்படுத்த முடியாது, இல்லயா?" என்றான் மெல்லிய புன்னகையோடு.

"உங்க அப்பாவும் தங்கச்சியும் இதை புரிஞ்சுகிட்டா ரொம்ப நிம்மதியா இருக்கும்"

"ஒருநாள் அவங்களும் புரிஞ்சிக்குவாங்க"

"எனக்கு அந்த நம்பிக்கை இல்ல"

பெருமூச்சுவிட்ட சந்தோஷ் கதவை நோக்கி நடந்தான். கதவின் கைப்பிடியை பிடித்தவாறு நின்ற அவன், தூயவனை நோக்கி திரும்பி,

"என் பொண்டாட்டி கூட மட்டும் இல்ல, என் மச்சான் கூடவும் நெருக்கமா இருக்கணும்னு தான் நான் விரும்புறேன்" என்று அன்பான புன்னகை ஒன்றை அவன் மீது வீசினான் சந்தோஷ். அது தூயவனை திணறச் செய்தது.

"காதல், மனுஷனை கற்பனை உலகத்துல வாழ வைக்குது, இல்ல?" என்று சந்தோஷ் கேட்ட கேள்விக்கு தூயவனால் பதில் அளிக்க முடியவில்லை.

அதில் அவனுக்கு எந்த அனுபவமும் இல்லாத போது அவனால் எப்படி பதில் கூற முடியும்? மனிதனின் மனதிற்குள் எழும் காதல் என்னும் விசித்திரமான உணர்வை பற்றி அவனுக்குத்தான் எதுவும் தெரியாதே...!

"எக்காரணத்தை கொண்டும் நான் உங்களை சங்கட படுத்த மாட்டேன். ஏன்னா, மதிக்கு நீங்க எவ்வளவு முக்கியம்னு எனக்கு தெரியும்"

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. ஆனா நீங்க ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். நீங்க  உங்களை நம்பகமானவர்னு நிரூபிக்கணும்னு அக்கா விரும்புறாங்க. அதுவரைக்கும் அவங்க உங்களை ஏத்துக்க மாட்டாங்க"

புன்னகை புரிந்த சந்தோஷ்,

"இவ்வளவு அழகான ஒரு க்ளூ கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. இது தான் என்னோட இலக்கை நோக்கி போக எனக்கு உதவப் போகுது" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் சந்தோஷ்.

அவனைப் பற்றி யோசித்தபடி தன் நாற்காலியில் அமர்ந்தான் தூயவன். அவனுக்கு மனம் இலகுவாய் இருந்தது. வெண்மதியின் மீது சந்தோஷ் கொண்ட காதல் உண்மையானதாய் அவனுக்கு தோன்றியது. அதனால் தான் வெண்மதியுடனான தனது வாழ்க்கையை பற்றிய கற்பனை உலகில் அவன் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான். தன்னுடனும் ஓர் நல்ல நட்புறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். அவன் அளித்த உத்தரவாதம் தூயவனுக்கு பிடித்திருந்தது. அவன் முகத்தில் மெல்லிய புன்னகை படர்ந்தது. அவன் கிட்டத்தட்ட சஞ்சனாவை மறந்து போனான்.

இந்த அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையில் தான் எவ்வளவு வித்தியாசம்...! இருவருமே காதலிக்கிறேன் என்கிறார்கள். ஒருவன் உண்மையிலேயே உண்மையாய் காதலிக்கிறான். அடுத்தவளோ, தான் உண்மையாய் காதலிப்பதாய் நினைத்துக் கொண்டிருக்கிறாள். ஒருவன் ஆழ்கடல் போல் அமைதியாய் இருக்கிறான். அவனது தங்கையோ, கடற்கரைப் போல் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறாள். அவர்களுக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ தெரியவில்லை.

மாலை/ தூயவன் இல்லம்

குணமதியுடனும் வெண்மதியுடனும் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள் பவித்ரா. எதையோ யோசித்த வெண்மதி,

"பவித்ரா, உங்க அப்பா ஸ்வீட் ஷாப் வச்சிருந்தாருன்னு சொன்னீங்களே உங்களுக்கு ஸ்வீட் எல்லாம் செய்ய தெரியுமா? அவர்கிட்ட நீங்க ஏதாவது கத்துக்கிட்டீங்களா?" என்றாள்

ஆமாம் என்று தலையசைத்தாள் பவித்ரா.

"நிஜமாவா?"

"ஆமாம். நான் எப்பவுமே எங்க அப்பா கூட தான் இருப்பேன். எதையுமே கத்துக்கணும்னு கத்துக்கல. ஆனா ஸ்வீட் செய்யறதுல எனக்கு வேண்டிய அனுபவம் இருக்கு. எந்த கஷ்டமும் இல்லாம என்னால செய்ய முடியும்"

"நெஜமாவா? பரவாயில்லையே..."

"உங்களுக்கு நான் ஏதாவது செஞ்சு கொடுக்கவா?"

"உங்களுக்கு பாதாம் அல்வா செய்ய தெரியுமா?

"தெரியும்" என்று ஆர்வத்துடன் தலையசைத்தாள் பவித்ரா.

"அதை செஞ்சு கொடுக்கிறீங்களா?"

"அது உங்களுக்கு பிடிக்குமா?"

"அது தூயாவுக்கு பிடிக்கும். நான் எல்லா ஸ்வீட்டையும் சாப்பிடுவேன்" என்று சிரித்தாள் வெண்மதி.

சிரித்தபடி எழுந்து நின்றாள் பவித்ரா.

"நீங்க போங்க. நான் இப்ப வரேன்" என்றாள் வெண்மதி.

சரி என்று தலையசைத்த பவித்ரா, சமையலறை நோக்கி சென்றாள். அவளுடன் செல்ல முனைந்த குணமதியை கண்ணைக் காட்டி பொறுங்கள் என்றாள் வெண்மதி.

"என்ன."

"நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்று ரகசியமாய் கூறினாள் வெண்மதி.

"சொல்லு" 

"நீங்க தூயவை பத்தி என்ன நினைக்கிறீங்க?"

குணமதி முகம் சுருக்கினார்.

"நான் அவனைப் பத்தி என்ன நினைக்கிறது?"

"பவித்ராவோட புருஷனைப் பத்தி நம்ம பேசும் போது அவன் முகம் ஏன் மாறுச்சி?"

"ஏன்?" என்றார் புன்னகையோடு.

"ஏன்னு உங்களுக்கு தெரியாதா?"

"நான் நினைக்கிறது சரியா தப்பான்னு எனக்கு தெரியல"

"எதைப் பத்தி?"

"தூயா பவித்ராவை விரும்புறான்னு நினைக்கிறியா?"

ஆம் என்று தலையசைத்த அவள்,

"ஆனா அவன் இன்னும் அதை உணரலன்னு நினைக்கிறேன்" என்றாள். 

"எனக்கும் அப்படித்தான் தோணுது"

"அவனுக்கு அவங்களை பிடிச்சிருந்தா என்ன செய்வீங்க?"

"இதுல யோசிக்க என்ன இருக்கு உடனே ஒத்துக்குவேன்"

"நிஜமாவா"

"வேற என்ன? தூய கூட நம்ம சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிற இந்த மாதிரி மருமக நமக்கு எங்கே கிடைப்பா?"

"எனக்கும் தூயாவோட ஃபீலிங்ஸ்ல சந்தேகம் இருக்கு. அவன் பவித்ரா மேல வச்சிருக்கறது வெறும் பரிதாபமும் அக்கறையும் மட்டும் இல்ல. ஆனா அந்த மடையனுக்கு இன்னும் அது புரியல" என்று சிரித்தாள்.

"ஆனா பவித்ராவுக்கு அப்படிப்பட்ட எந்த எண்ணமும் அவன் மேல இல்ல. அவளுக்கு மரியாதை மட்டும் தான் இருக்கு"

"அவங்க ரொம்ப நல்ல பொண்ணு. அதனால தான் அதுக்கு மேலே எதையும் அவங்க யோசிக்க மாட்டேங்கிறாங்க"

"உன் மட சாம்பிராணி தம்பிக்கு நம்ம அதை புரிய வச்சா என்ன/"

"நெஜமாவே அதை செய்ய நீங்க தயாரா?"

"பவித்ராவுக்காக அதை செய்ய நான் தயார். அவனை என்கிட்ட பேச வச்சதே அவ தானே...!" என்றார் நன்றியுடன்.

"உங்க பிள்ளை பிசினஸ்ன்னு வந்தா பெரிய ஹீரோ. ஆனா ஃபீலிங்ஸ் எமோஷன்ஸ்னு வரும் போது அவன் ஒரு ஜீரோ"

"நீ சொல்றதும் சரி தான்..."

"இன்னிக்கு அவன் வரட்டும்..."

"ஐயோ பாவம்! என் பிள்ளை என்ன ஆகப்போறானோ!!" என்று சிரித்தார் குணமதி.

தொடரும்...


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top