20 பிரிந்தவர் கூடல்...
20 பிரிந்தவர் கூடல்...
பவித்ராவின் மருண்ட விழிகளை பார்த்த தூயவன் தன்னை சமாளித்துக் கொண்டான்.
"என்ன நம்பு. நான் எல்லா பிரச்சனையையும் தீத்துடுவேன். சந்தோஷோட காதல் உண்மையானதா இருந்தா, நான் நிச்சயம் அக்காவை அவருக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன். இதையெல்லாம் நினைச்சு நீ கவலைப்படாத. புரிஞ்சுதா?" என்றான் தன் தலையை லேசாய் அசைத்தவாறு.
சரி என்று தலையசைத்தாள் பவித்ரா. அவளை வெண்மதியின் பக்கத்தில் அமர வைத்து,
"நடக்குறதுக்கு எல்லாம் நீ தான் காரணம்னு நினைக்காத. நீ இங்க இருக்கணும்ங்குறது விதி. நீ எங்க வாழ்க்கையோட ஒரு அங்கம். அதனால் தான் நான் உன்னை இங்கே கூட்டிகிட்டு வந்திருக்கேன்"
பவித்ரா வெண்மதியை பார்க்க, அவள் ஆம் என்று தலையசைப்புடன் ஆமோதித்தாள்.
"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, கா? பவித்ரா ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர்" என்று பேச்சை மாற்றினான் தூயவன்.
"நெஜமாவா?" என்றாள் வெண்மதி வியப்புடன்.
ஆம் என்று தலையசைத்தாள் பவித்ரா.
"அவ ஏன் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆனான்னு காரணத்தை சொன்னா நீங்க இன்னும் ஆச்சரியப்படுவீங்க" என்று சிரித்தான்.
"என்ன காரணம்?"
"அவளுக்கு கம்ப்யூட்டர்னா ரொம்ப பிடிக்குமாம். அதை ஆபரேட் பண்ணணும்னு ஆசைப்பட்டு கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆனாளாம்"
அதை நம்ப முடியாத வெண்மதி வாயை பிளந்தாள். லேசான வெட்கத்துடன் புன்னகைத்தாள் பவித்ரா.
அப்பொழுது குழந்தைசாமி தூயவனை தேடிக் கொண்டு அங்கு வந்தார். அவரைப் பார்த்த தூயவன்,
"சொல்லுங்க, குழந்தை அண்ணா" என்றான்.
"இதை உங்ககிட்ட குடுக்க சொல்லி ஒருத்தர் கொடுத்துட்டு போனாரு" என்று ஒரு வண்ண காகிதத்தால் சுற்றப்பட்ட ஒரு பெரிய டப்பாவை அவனிடம் கொடுத்தார் குழந்தைசாமி.
அதை தூயவன் பெற்றுக் கொண்டவுடன் அங்கிருந்து சென்றார் குழந்தைசாமி. பவித்ராவிடம் வந்த தூயவன், அந்த டப்பாவை அவளிடம் கொடுத்தான். அவனை குழப்பத்துடன் ஏறிட்டாள் பவித்ரா.
"இது உனக்காக தான்" என்றான் அவன்.
"நீங்க தான் எனக்கு தேவையான டிரெஸ்ஸை எல்லாம் ஏற்கனவே வாங்கி கொடுத்திருக்கீங்களே... எனக்கு அதுவே போதும்"
அந்த டப்பாவை அவள் மடியில் வைத்தான் தூயவன். அதை கவனமாய் பிடித்துக் கொண்டாள் பவித்ரா.
"இது டிரஸ் இல்ல..."
தன் கையில் இருந்த டப்பாவையும் பிறகு தூயவனையும் பார்த்தாள் பவித்ரா.
"அதை ஓபன் பண்ணி பாரு"
அந்த டப்பாவை திறந்து, அதனுள் இருந்த பொருளை பார்த்தவள் திகைத்து நின்றாள். தன்னை உணர்ச்சி பெருக்குடன் ஏறிட்ட அவளை பார்த்து புன்னகை புரிந்தான் தூயவன். அவளது கண்கள் கலங்கின. அது ஒரு ஆப்பிள் லேப்டாப். நடுங்கும் கைகளுடன் அதை தொட்டுப் பார்த்தாள் பவித்ரா.
"இதுல இவ்வளவு உணர்ச்சிவசப் படுறதுக்கு ஒன்னும் இல்ல" என்றான் புன்னகையுடன்.
தன் கைகளால் முகத்தை மூடி அழுதாள் பவித்ரா, அக்கா தம்பி இருவரையும் பதற்றம் அடையச் செய்து.
"பவித்ரா, என்ன ஆச்சு? எதுக்காக இப்படி அழறீங்க?" என்றாள் வெண்மதி.
"பவித்ரா, ப்ளீஸ், அழுகையை நிறுத்து" என்றான் தூயவன்.
அவள் கண் தன் கன்னங்களை துடைத்துக் கொண்டாள். அங்கிருந்த டிஷ்யூ பேப்பரை எடுத்து அதை அவளிடம் நீட்டினான். அவனிடமிருந்து அதை அவள் பெற்றுக் கொண்டாள் பவித்ரா.
"இதுல அழறதுக்கு என்ன இருக்கு, பவித்ரா? நீ இந்த லேப்டாப்பை பார்த்த உடனே ரொம்ப சந்தோஷப்படுவேன்னு நினச்சேன்"
"இதெல்லாம் எனக்கு ரொம்ப டூ மச். என் வாழ்க்கையில எனக்கு லேப்டாப் எல்லாம் கிடைக்கும்னு நான் கனவுல கூட நினைச்சதில்ல, அதுவும் இவ்வளவு காஸ்ட்லியான ஒன்னு. இது என்னோட கனவு. நான் சம்பாதிக்க ஆரம்பிச்சதுக்கு பிறகு ஒன்னு வாங்கணும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். அப்ப கூட நான் இவ்வளவு காஸ்ட்லியான ஒன்னை நிச்சயம் வாங்கி இருக்க மாட்டேன்"
வெண்மதிக்கு எதையோ தன் கண்களால் உணர்த்தினான் தூயவன். அவள் சரி என்று தலையசைத்து பவித்ராவின் மனதை திசை திருப்பும் முயன்றாள்.
"அதை எல்லாம் விடுங்க, பவித்ரா. இதையெல்லாம் கேக்கும் போது, உங்களைப் பத்தி எங்களுக்கு தெரியாத விஷயம் நிறைய இருக்கும் போல இருக்கே... உங்க குடும்பத்தை பத்தி எங்களுக்கு சொல்லுங்களேன்" என்றாள்.
பவித்ராவின் முகம் பளிச்சென்று மாறியதை அவர்கள் உணர்ந்தார்கள். புன்னகையுடன் நிமிர்ந்து அமர்ந்தாள்.
"எங்களோடது நடுத்தர குடும்பம். எங்க குடும்பத்திலேயே காலேஜுக்கு போன முதல் பொண்ணு நான் தான். இன்னும் கூட எங்க குடும்பத்தை சேர்ந்த ஆம்பள பசங்க கூட இன்ஜினியரிங் படிக்கல"
"நிஜமாவா?" என்று திகைத்தாள் வெண்மதி.
"ஆமாம். எங்க அப்பாவுக்கு சொந்தமா ஒரு ஸ்வீட் ஷாப் இருந்தது. அது ரொம்ப பெரிய கடையா இல்லனாலும், எங்க அப்பாவோட கைபக்குவத்துக்கு மதுரையில பெரிய டிமாண்ட் இருந்தது"
"வாவ், பரவாயில்லையே..."
"ஆமாம், எங்க அப்பா எப்பவும் லாபத்தை மனசுல வச்சு ஸ்வீட் செஞ்சதே இல்ல. செல்ஃப் சேடிஸ்பேக்ஷன்காக தான் அவர் வேலை செஞ்சாரு. அதனால தான் மத்த கடை முதலாளிகளை மாதிரி அவரால் நிறைய பணம் சம்பாதிக்க முடியல. எங்க அப்பா என்னை ஒரு இளவரசி மாதிரி நடத்துனாரு. என்னோட எல்லா ஆசைகளையும் நிறைவேத்தி வச்சாரு. அதனால தான் நான் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்கணும்னு கேட்டப்போ அவர் அதை தடுக்கல. எனக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கி கொடுக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டாரு. எனக்காக கொஞ்சம் கொஞ்சமா பணம் கூட சேர்த்து வச்சாரு. ஆனா என்னோட ஆசையை அவரால பூர்த்தி செய்ய முடியல. என்னோட பிறந்தநாளுக்கு அதை கிஃப்ட்டா கொடுக்கணும்னு ஆசைப்பட்டாரு"
"சோ நைஸ்... அப்படி ஒரு அப்பா கிடைச்சதுக்கு நீங்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் பவித்ரா" என்றாள் அப்படி ஒரு அப்பாவை பெறாத வெண்மதி.
வேதனையுடன் புன்னகைத்தாள் பவித்ரா.
"நானும் எங்க அப்பாவும் எப்பவுமே ஒரு டீம். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து எங்க அம்மாவை ரொம்ப கிண்டல் பண்ணுவோம். அவங்களை கலாட்டா பண்றதும், வெறுப்பேத்துறதும் தான் எங்களுக்கு முழு பொழுதுபோக்கு"
"அப்படியா? அவங்களுக்கு கோபம் வராதா?"
"சில சமயங்கள்ல அவங்க கோவப்பட்டு இருக்காங்க. ஆனா பெரும்பாலும் எங்களை ரசிச்சுக்கிட்டே இருப்பாங்க"
"வாவ்... இது ரொம்ப யூனிக்கா இருக்கு. இல்ல தூயா?"
ஆமாம் என்று தலையசைத்தான் தூயவன்.
"எங்க அம்மா தனக்குன்னு எதையுமே ஆசைபட்டதில்ல. எங்க சந்தோஷத்தை தவிர வேற எதையும் அவங்க பெரிசா நினச்சது இல்ல. நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விதமா அவங்களுக்கு கேன்சர் வந்துடுச்சு. அதை நாங்க கண்டுபிடிச்சப்போ, ஃபோர்த் ஸ்டேஜோட ஆரம்ப கட்டத்துல இருந்தாங்க. அவங்களை காப்பாத்த, எங்க அப்பா அவரால் ஆன எல்லா முயற்சியும் செஞ்சாரு. எங்களோட எல்லா சேமிப்பையும் எங்க அம்மாவோட ட்ரீட்மென்ட்காக நாங்க செலவழிச்சிட்டோம். எங்க கடை போனதை பத்தி கூட எங்க அப்பா கவலைப்படல. எங்க அம்மாவை காப்பாத்தினா போதும் நினைச்சாரு. அவர் மனசுல வேற எதுவுமே இல்ல. அப்போ தான் பெரியசாமிகிட்ட எங்க அம்மாவுக்காக கடன் வாங்கினாரு"
"ஓ, அவன் தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க முயற்சி பண்ணதா?"
பவித்ரா தலையசைத்தாள்.
"எங்களால எங்க அம்மாவை காப்பாத்த முடியல. கொஞ்சம் கொஞ்சமா எங்க அம்மா எங்க கண்ணு முன்னாடி செத்துகிட்டு இருந்ததை நாங்க பார்த்தோம். எங்களால எதுவுமே செய்ய முடியல. நமக்கு பிடிச்சவங்களோட சாவை கண்ணு முன்னாடி பாக்குற மாதிரி கொடுமை இந்த உலகத்துலயே கிடையாது. (அவளுக்கு தொண்டையை அடைத்தது) கேன்சர் ஒரு மோசமான வியாதி. அது எங்க அம்மாவை உயிரோடு தின்னுடுச்சு. அவங்க இறந்ததுக்கு பிறகு நாங்க ரொம்ப மோசமான காலகட்டத்தை ஃபேஸ் பண்ணோம். எங்க அப்பா எந்த நேரமும் எதையோ பறிகொடுத்த மாதிரியே இருந்தாரு. அவரால வேலைக்கு போக முடியல. எங்க அம்மா இல்லாத கொடுமையை என்னால தாங்கவே முடியல. ஆனா திரும்பி வரவே மாட்டாங்க அப்படிங்கிற ஒருத்தரை நினைச்சி அழறதால எந்த பிரயோஜனமும் இல்லையே...! அவங்க உயிரோட இருந்தப்போ அவங்களை கொண்டாட நாங்க தவறிட்டோம். அவங்க எப்படிப்பட்ட பொக்கிஷம்னு நாங்க உணரல. அவங்களை கிண்டல் பண்ணோம், வெறுப்பேத்தினோம், அவங்களைப் பார்த்து சிரிச்சோம்... அவங்க இறந்ததுக்கு பிறகு, விதி எங்களை கையாலாகாதவங்களா மாத்தி, எங்களை பார்த்து சிரிச்சு வேடிக்கை பாத்தது" தன் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை பவித்ராவால்.
அவளது மனதைப் பிழியும் வார்த்தைகளைக் கேட்டு தூயவனும் வெண்மதியும் உணர்ச்சிவசப்பட்டார்கள்.
"எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சா, அவங்களை அப்படியெல்லாம் கிண்டல் பண்ணதுக்காக அவங்க கிட்ட ஒரே ஒரு தடவை மன்னிப்பு கேட்கணும்... அவங்களை எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு அவங்க கிட்ட சொல்லணும்... அவங்க எனக்கு எவ்வளவு முக்கியம்னு அவங்களுக்கு தெரியப்படுத்தணும்" தொண்டை அடைக்க கூறினாள் பவித்ரா.
வெண்மதியால் தன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. தன் கலங்கிய கண்களை மறைக்க தூயவன் பெரும் பாடு பட்டான்.
பவித்ராவை சமாதானப்படுத்தும் நோக்கில், அவள் தலையை தொட்டு வருடினாள் வெண்மதி. தன் முகத்தை துடைத்துக்கொண்டாள் பவித்ரா. அந்த உணர்ச்சிமிகு சூழ்நிலையை எதிர்கொள்ள முடியாத தூயவன் அங்கிருந்து செல்ல நினைத்தான். ஆனால் அவன் சிறிதும் எதிர்பாராத வண்ணம், அவன் கையைப் பிடித்து நிறுத்தினாள் பவித்ரா, அவனைப் திகைப்புக்கு உள்ளாக்கி. அவள் கையையும் பிறகு அவள் முகத்தையும் ஏறிட்டான் தூயவன்.
"என்னை உங்க குடும்பத்துல ஒருத்தியா நினைக்கிறதா சொன்னிங்க. அது உண்மைனா நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்னு நினைக்கிறேன்"
அவளது பலவீன நிலையை பார்த்த அவன் மென்று விழுங்கினான்.
"இன்னைக்கு நான் படுற இதே கஷ்டத்தையும் வேதனையையும் நீங்க படக்கூடாது. சில விஷயங்களை எல்லாம் இழந்தா இழந்தது தான். எவ்வளவு கதறி அழுதாலும், நம்மால சரி பண்ண முடியாத சில விஷயங்களும் இருக்கு"
அவள் என்ன சொல்ல நினைக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட அவன், அதிர்ச்சி அடைந்தான். அவன் எதை புரிந்து கொள்ள வேண்டுமென்று அவள் நினைக்கிறாள் என்பதும் அவனுக்கு புரிந்தது.
"ஒருத்தரை இழக்குற வரைக்கும் நமக்கு அவங்களோட அருமை தெரியாது. எப்ப வேணா என்ன வேணா நடக்கலாம். அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு யாருக்கும் தெரியாது. இந்த வாழ்க்கை நிலையில்லாதது. தயவு செஞ்சு அம்மா கிட்ட பேசுங்க. நீங்க அவங்க கிட்ட பேசுறது இல்ல அப்படிங்கிறதால, உங்களுக்கு அவங்க மேல பாசம் இல்லன்னு அர்த்தம் இல்ல. நம்ம எல்லாருமே மனுஷங்க தான். எல்லாருமே தப்பு செய்வோம். நீங்க ஏற்கனவே பத்து வருஷமா அவங்களை தண்டிச்சிட்டீங்க. அது போதும். இப்போ உங்களுக்கு இருக்கிற சந்தர்ப்பத்தை தயவு செய்து பயன்படுத்திக்கோங்க. இல்லனா, ஒரு நாள் என்னை மாதிரி நீங்களும் அழ வேண்டி வரும்" அவன் கையை விட்டாள் பவித்ரா.
அவளை அணைத்துக் கொண்டு அழுதாள் வெண்மதி. தன் மன பாரத்தை மறைக்க முடியாத தூயவன், அங்கிருந்து வெளியே வந்தான். அங்கு, அவனது அம்மா கண்ணீர் சிந்திய படி நின்றிருந்ததை பார்த்து அவன் கால்கள் நகர மறுத்தன. அவனது கண்கள் கலங்கின. அவன் அவருடன் பேசுகிறானோ பேசவில்லையோ, ஆனால் அவரை இழப்பதை பற்றி அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவனுக்கு அவனது அம்மா வேண்டும்.
"தூயா..." என்று உடைந்த குரலில் குணமதி கெஞ்சலாய் அழைக்க, அதை எதிர்கொள்ள முடியாத தூயவன், எதைப் பற்றியும் யோசிக்காமல் இரண்டு எட்டில் அவரை அடைந்து, அவரை அணைத்துக் கொண்டான், அவரை வெடித்து அழ செய்து.
"என்னை மன்னிச்சிடு, தூயா. உன்னை நான் ரொம்ப காயப்படுத்திட்டேன். நான் ஒரு நல்ல அம்மாவா இருக்க தவறிவிட்டேன். ஐ அம் சாரி"
கலங்கிய தன் கண்களை மெல்ல இமைத்த அவன்,
"என்னையும் மன்னிச்சிடுங்க..." என்று அவர் கண்களை துடைத்து விட்டான்.
மீண்டும் அவனை அணைத்துக் கொண்டார் குணமதி. இந்த முறை, ஆனந்த கண்ணீருடன். அவர்களை நோக்கி ஓடிவந்த வெண்மதியும் அவர்களை அணைத்துக் கொண்டாள்.
பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று கூடிவிட்டதை கண்ட பவித்ரா, கலங்கிய கண்களுடன் புன்னகை புரிந்தாள். அவளைப் பார்த்த தூயவன்,
"தேங்க்ஸ்..." என்றான்.
பவித்ராவின் மனம் நிம்மதியடைந்தது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top