2 யார் அவள்?
2 யார் அவள்?
அவளது கண்ணீர் நிறைந்த வார்த்தைகளை கேட்டு வருத்தம் அடைந்தான் தூயவன். மூன்று நாட்களாக அவள் ஒன்றுமே சாப்பிடவில்லையா? ஏன் சாப்பிடவில்லை? மூன்று நாட்களாக ஒன்றும் சாப்பிடாமல் எப்படி இருக்க முடியும்? அவள் அந்த மூன்று நாட்களில் பட்டினியால் எவ்வளவு துன்பப்பட்டு இருக்க வேண்டும்...? சமையல் அறையின் உள்ளே நுழைந்த அவன், ஒரு தட்டை எடுத்து, அங்கு ஹாட் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த பிரியாணியை வைத்து அதை அவளிடம் கொடுக்க , அவனை வியப்போடு பார்த்தாள் அந்தப் பெண்.
"இதை சாப்பிடு" என்றான்.
அந்த தட்டை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு, தரையில் அமர்ந்து சாப்பிட துவங்கிய அவள், அவன் கூறிய வார்த்தையை கேட்டு சாப்பிடுவதை நிறுத்தினாள்.
"உன் கண்ணை துடைச்சுக்கோ"
தன் புறங்கையால் கண்ணீரைத் துடைத்துவிட்டு, மீண்டும் அவள் சாப்பிட்டாள். அவள் முன்னாள் ஒரு குவளை தண்ணீரை வைத்துவிட்டு, அவளை தொந்தரவு செய்யாமல் சாப்பிட விட்டு காத்திருந்தான். சாப்பிட்டு முடித்து எழுந்து நின்ற அவள், அந்த தட்டை கழுவி சமையலறை மேடையின் மீது வைத்தாள்.
"யார் நீ? உன் பேர் என்ன? எதுக்காக இங்க வந்த?" என்றான் தூயவன்.
"என் பேர் பவித்ரா. நான் என்னை துரத்துறவங்க கிட்ட இருந்து தப்பிச்சு வரும் போது, தெரியாம இங்க வந்துட்டேன்"
"துரத்துறாங்களா? யாரு?"
மீண்டும் அவள் மோசமாய் அழத் துவங்கினாள்.
"எதுக்காக அழற?"
"எனக்கு இந்த கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்ல" என்று அழுதாள்.
அவள் இருக்கும் நிலை என்னவென்று அவனுக்கு ஓரளவு புரிந்தது.
"ஓ... கல்யாணம் பிடிக்கலன்னு உங்க குடும்பத்துக்கு தெரியாம வீட்டை விட்டு ஓடி வந்துட்டியா?"
"இல்ல, என்னை வேற எங்கேயாவது ஓடிப் போய் நல்லபடியா வாழ சொன்னதே எங்க அப்பா தான்"
"என்ன்னனது? என்ன சொல்ற?" என்று அவன் வியந்தான்.
அவள் ஆம் என்று தலையசைத்தாள்.
"எங்க அம்மாவுக்கு கேன்சர் வந்துடுச்சு. எங்க அப்பா அவங்க ட்ரீட்மென்ட்காக ஒருத்தர்கிட்ட பணம் கடன் வாங்கினார். ட்ரீட்மென்ட் பலன் அளிக்காம எங்க அம்மா போன வருஷம் இறந்து போயிட்டாங்க. அவங்க கிட்ட கடன் வாங்கின பணத்தை எங்க அப்பாவால திருப்பி கொடுக்க முடியல. அந்த கடன் வட்டியோட சேர்ந்து போச்சு. எங்க அப்பா எங்க வீட்டை கூட அவங்களுக்கு எழுதி கொடுத்த தயாராக இருந்தாரு. ஆனா அவங்க அதை ஏத்துக்கல"
"ஏன் ஏத்துக்கல?"
"அவங்களுக்கு வீடு வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதுக்கு பதில், என்னை அவருக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்லி கேட்டாங்க"
தன் புருவத்தை வியப்போடு உயர்த்தினான் தூயவன்.
"அவரோட ஜாதகத்துல ஏதோ பெரிய பிரச்சனை இருக்காம். அவங்க குடும்ப ஜோசியர், சித்திரை நட்சத்திரம், கன்னி ராசியில் பிறந்த, சிறப்பம்சம் உள்ள பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவர் ரொம்ப நாள் வாழ்வாருன்னு சொன்னாராம்."
"சிறப்பம்சம்னா? என்ன சிறப்பம்சம்?"
"அந்த பொண்ணு சித்திரை மாச மத்தியில பிறந்தவளா இருக்கணுமாம். நான், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரத்துல, சித்திரை மாச மத்தியில தான் பிறந்தேன்"
"ஓ..."
"எனக்கு மாப்பிள்ளை பார்க்க எங்க அப்பா அதே ஜோசியர்கிட்ட தெரியாம போயிட்டாரு. அவங்க அப்படி ஒரு பொண்ணைத் தான் தேடிக்கிட்டு இருக்காங்கன்னு அவருக்கு தெரியாது" என்று கண்ணீர் சிந்திய படி கூறிய அவளை, பரிதாபமாய் பார்த்தான் அவன்.
"எனக்கு அவரை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்ல. இரண்டாவது பொண்டாட்டியா போறதுல எனக்கு சுத்தமா விருப்பம் இல்ல" என்ற அவளை,
"என்ன்னனது? இரண்டாவது பொண்டாட்டியா?" என்றான்.
"ஆமாம்... அது மட்டுமில்ல, அவர் எங்க அப்பாவை விட வயசானவரு"
"என்ன சொல்ற நீ?"
"அதனால தான் எங்க அப்பா அந்த கல்யாணத்துல இருந்து என்னை ஓடிப் போக சொல்லிட்டாரு. எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சுகிட்டு, அவங்க என்னை ரெண்டு நாளா சாப்பாடு போடாம, ஒரு ரூம்ல போட்டு பூட்டி வச்சிருந்தாங்க. கல்யாணத்துக்கு சம்மதிக்கிற மாதிரி சம்மதிச்சி, என்னை எங்க அப்பா தப்பிக்க வச்சுட்டாரு"
அந்தப் பெண்ணை பார்க்கவே பாவமாய் இருந்தது அவனுக்கு.
"உங்க வீடு எங்க இருக்கு?"
"மதுரை வீரன் நகர்"
"சரி, நாளைக்கு நான் உன்னை அங்க கூட்டிகிட்டு போய் உங்க அப்பாகிட்ட விட்டுட்டு வரேன்"
அவள் சரி என்று தலையசைத்தாள்.
"கொஞ்ச நேரம் படுத்து தூங்கு. நீ பார்க்க ரொம்ப டயர்டா இருக்க"
"ரொம்ப நன்றிங்க" என்று, அங்கு தரையில் அவள் படுத்துக்கொள்ள முயன்ற போது,
"இங்க இல்ல. பக்கத்து ரூம், கெஸ்ட் ரூம் தான். அங்க போய் படுத்துக்கோ. கதவை தாழ்பாள் போட்டுக்கோ" என்றான்.
அவள் சரி என்று தலையசைக்க, அவளை விருந்தினர் அறைக்கு அழைத்து வந்தான். அந்த அறையின் பிரம்மாண்டத்தை கண்டு அவள் விக்கித்து நின்றாள்.
"ரெஸ்ட் எடுத்துக்கோ" என்று அந்த அறையை விட்டு சென்றான் தூயவன்.
அவள் கூறியதெல்லாம் உண்மையாக இருக்கும் என்று தூயவன் முழுதாய் நம்பவில்லை. அதனால் தான் அடுத்த நாள் அவனே கொண்டு சென்று அவளை அவள் வீட்டில் விடுகிறேன் என்று கூறினான். யாரையும் கண் மூடி தனமாய் நம்ப அவன் தயாராக இல்லை. ஆனால் அதே நேரம் அந்த பெண்ணின் கண்ணீரை நம்பாமல் இருக்கவும் அவனால் முடியவில்லை. ஏனென்றால் அது பொய் கண்ணீராய் இருக்கும் என்று அவனுக்கு தோன்றவில்லை. எது எப்படி இருந்தாலும் நாளை அவளது வீட்டுக்குச் சென்று, அவள் கூறுவது உண்மையா பொய்யா என்று தெரிந்து கொள்ள எண்ணினான் அவன்.
இவற்றையெல்லாம் யோசித்தபடி தன் அறைக்கு வந்தான் தூயவன். விளக்கை அணைத்துவிட்டு படுக்க போனவன், வெளியில் இருந்து ஏதோ ஆரவாரம் கேட்க தன் காதுகளை கூராக்கி கொண்டு நின்றான். ஜன்னல் அருகே சென்று திறைச்சீலையை விலக்கி, வெளியே என்ன நடக்கிறது என்பதை கவனித்தான். அவன் இருந்த மாளிகையின் எதிர், எதிர் திசையில் இருந்து ஓடி வந்த சிலர் அவன் வீட்டின் முன்பு கூடினார்கள்.
"அவ எங்க போனான்னு தெரியல" என்றான் ஒருவன்.
"அவ அந்த பார்க்கிங் லாட்டுக்குள்ள போனதை நான் பார்த்தேன். அங்க இருந்த எல்லா வண்டியையும் நம்ம சோதிச்சி பார்த்தோம். அங்க அவ இல்ல. அந்த இடத்தை விட்டு அவ வெளியில வரவே இல்ல. அந்த கம்பெனி முதலாளியோட வீடு இது தான். அவனோட காரை மட்டும் தான் நம்ம சோதிச்சி பார்க்கல. அவ இங்கயும் இல்லன்னா வேற எங்க போயிருப்பா?"
"நம்ம ஒரே இடத்துல நின்னு நேரத்தை வீணாக்கக்கூடாது"
"சரி, சில பேர் இங்க நிக்கலாம். மத்தவங்க பழைய இடத்துக்கு போய் தேடிப் பார்க்கலாம்"
"அவ இல்லாம நம்ம வெறுங்கையோட திரும்பி போக முடியாது. எப்படியும் அவளை தேடி கண்டுபிடிச்சே ஆகணும்"
அவர்கள் இரண்டு குழுவாய் பிரிந்து, ஒரு குழு அந்த இடம் விட்டு சென்றது, மற்ற குழுவினர் அவன் வீட்டை நோட்டமிட்டபடி இருந்தார்கள்.
அவர்கள் யாரைப் பற்றி பேசுகிறார்கள் என்று புரிந்து கொள்ள தூயவனுக்கு சிரமம் இருக்கவில்லை. அவர்கள் பவித்ராவை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த விஷயத்தில் இருந்த வீரியத்தை உணர்ந்தான் அவன். வந்தவர்களின் தோற்றமே ஆபத்தானதாய் தெரிந்தது. அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று பொறுப்புடன் அவளது தந்தையிடம் ஒப்படைக்க வேண்டியது அவனது கடமை. தேவைப்பட்டால், அவர்கள் மதுரையை விட்டு செல்லவும் அவன் உதவ தயாராக இருந்தான். அவன் கட்டிலில் படுத்த பிறகும் கூட, காலடி ஓசை இப்படியும் அப்படியும் ஓடிக்கொண்டிருப்பதை அவன் கேட்டான். அவர்கள் பவித்ராவை தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவனுக்கு தெள்ளத்தெளிவாய் புரிந்தது.
மறுநாள் காலை
வரவேற்பறையின் கதவை தட்டினான் தூயவன். பவித்ரா கதவை திறந்து அவனை பார்த்து புன்னகை புரிந்தாள்.
"நிம்மதியா தூங்குனியா?" என்றான்
"தூங்கினேங்க. உங்க உதவிக்கு ரொம்ப நன்றி. என்னை எங்க வீட்ல கொண்டு போய் விட்டுடுறீங்களா?" என்றாள் கெஞ்சலாக.
"நிச்சயம் கூட்டிக்கிட்டு போறேன். அதுக்கு முன்னாடி, முதல்ல வந்து சாப்பிடு. நான் உன்னை அழைச்சுக்கிட்டு போறேன்"
அவள் சரி என்று தலை அசைத்தாள்.
அப்பொழுது அவனுக்கு தன் மேலாளர் பாரியிடமிருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்ற அவன்,
"பாரி, நான் சொன்ன ஏற்பாடை எல்லாம் செஞ்சிட்டியா?" என்றான்.
"எல்லாமே ரெடியா இருக்கு சார், உங்க ஹெலிகாப்டரும்..." என்றான்.
"நம்ம இன்னும் ஆஃப் அன் ஹவர்ல இங்கிருந்து கிளம்பணும்"
"நாங்க ரெடியா இருக்கோம், சார்"
அழைப்பை துண்டித்தான் தூயவன். பவித்ராவுடன் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு, எழுந்து நின்றான்.
"நம்ம போகலாமா?"
அவள் சரி என்று தலையசைத்து அவனுடன் ஆர்வத்துடன் கிளம்பினாள். அவர்கள் காரில் அமர்ந்தார்கள். மேலும் இரண்டு கார்கள் அவர்களை பின்தொடர்ந்து வந்தது.
"உங்க வீடு எங்க இருக்குன்னு சொல்லு"
தன் வீட்டுக்கு வழிகாட்ட துவங்கினாள் பவித்ரா. தூயவனுடைய ஆட்கள் அவனது காரை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள். நாற்பது நிமிட பயணத்திற்கு பிறகு, ஒரு நெருக்கமான இடத்திற்கு அவர்கள் வந்தார்கள். பவித்ராவை கேள்வியோடு பார்த்தான் தூயவன்.
"அடுத்த வீதி" என்றாள்.
அடுத்து வீதியில் அவர்களது கார் நுழைந்த போது, பவித்ரா திகில் அடைந்தாள். சில பேர் சேர்ந்து, அவளது அப்பாவை ரத்தம் ஒழுக அடித்து துவைத்துக் கொண்டிருந்தார்கள். நாற்காலி போட்டு அமர்ந்திருந்த ஒருவன், அவர்கள் அடிப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்.
"எங்க அவ? சொல்லு..." என்று ஒருவன் அவரை அடித்தான்.
"அப்ப்ப்ப்பா..." என்று கத்தினாள் பவித்ரா.
அவளை பேரதிர்ச்சியோடு ஏறிட்டான் தூயவன். அவர் தான் பவித்ராவின் அப்பாவா? காரை விட்டு கீழே இறங்கிய அவள், அவரை நோக்கி ஓடினாள்.
"இதோ, அவ வந்துட்டா..." என்றான் ஒருவன்.
அவர்களில் ஒருவன், அவள் தலை முடியை பிடித்து, நாற்காலியில் அமர்ந்திருந்தவனை நோக்கி அவளை இழுத்துச் சென்றான்.
"எங்க அப்பாவை விட்டுடுங்க" கதறிய படி சென்றாள் அவள்.
அவளை முடியை பிடித்து இழுத்துச் சென்றவன்,
"இந்தாப்பா, உன்னோட வருங்கால பொண்டாட்டி" என்று அந்த நாற்காலியில் அமர்ந்திருந்தவனிடம் அவளை பிடித்து தள்ளினான்.
பேய் சிரிப்பு சிரித்தபடி அவள் கையை பிடித்த அவன்,
"என்னை கல்யாணம் பண்ணிக்காம இங்கிருந்து தப்பிச்சிட முடியும்னு நெனச்சியா?" என்றான்.
அந்த காட்சியை கண்ட தூயவன் விக்கித்துப் போனான். இவன் தான் பவித்ராவை திருமணம் செய்து கொள்ள நினைப்பவனா? கோபத்தில் பல்லை நரநரவென கடித்தான். ஏனென்றால், அந்த மனிதனுக்கு வயது எழுபத்தி ஐந்துக்கும் மேல்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top