17 அவள் விதவை அல்ல

17 அவள் விதவை அல்ல

குணமதியும், வெண்மதியும் சிரிப்பதை நிறுத்தினார்கள்.

"ஏம்மா அவர் உங்ககிட்ட பேசுறது இல்ல?" என்று பவித்ரா கேட்ட கேள்வி அவர்களது சிரிப்பை நிறுத்தியது.

"உங்களுக்கு என்கிட்ட சொல்ல விருப்பமில்லனா..."

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. என் பிள்ளை என்கிட்ட பேசுறதையே நிறுத்திட்டான். என் பொண்ணு அவ வாழ்க்கையையே இழந்துட்டா. இதுக்கு மேல விருப்பப்படறதுக்கும், விருப்பபடாம இருக்குறதுக்கும் என்ன இருக்கு?" என்று வேதனையுடன் கூறிய குணமதி,

"அது பத்து வருஷத்துக்கு முன்னாடி நடந்தது. அன்னைக்கு எங்க கல்யாண நாள். முதல் நாள் நைட்டு அவர் வீட்டுக்கு வரவே இல்ல. கல்யாண நாள் அப்படிங்கறதால, நான் அவர் கூட கோவிலுக்கு போலாம்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். அவரு அன்னைக்கு விடியற்காலையில தான் வீட்டுக்கு வந்தாரு, அதுவும் ஃபுல்லா குடிச்சிட்டு. மாதேஷ் தான் அவரை கூட்டிக்கிட்டு வந்து விட்டாரு. எனக்கு என் புருஷன் மேல அவ்வளவு கோவம். அன்னைக்கு மத்தியானம் வரைக்கும் அவர் எழுந்துக்கவே இல்ல. அவர் தூங்கி எழுந்த போது நான் அவர்கிட்ட பேசல. அது அவரோட ஈகோபை சீண்டி பார்த்துச்சு"

பவித்ரா தன் விழி விரித்தாள்.

"ஆமாம், பவித்ரா, டாட் அப்போ எல்லாம் ரொம்ப ஈகோ பாப்பாரு. மாதேஷ் அங்கிள் கூட சேர்ந்துக்கிட்டு, அம்மாவை ரொம்ப டாமிநேட் பண்ணாரு"

பவித்ரா குணமதியை பார்க்க, அவர் ஆம் என்று தலையசைத்தார்.

"அதோட மட்டுமில்லாம, என்னை விட அவர் ஃபிரண்டு தான் அவருக்கு முக்கியம்னு சொன்னாரு. கல்யாண நாளா அதுவுமா, அப்படிப்பட்ட வார்த்தையை அவர் கிட்ட கேட்டு நான் ரொம்ப காயப்பட்டேன். அவர் என்னை கையாலாகாம உணர வச்சாரு. அவர் மேல அவ்வளவு கோவமா இருந்தேன். அப்போ தான், தூயவனோட ஸ்கூல் பிரின்சிபால் கிட்ட இருந்து எனக்கு ஃபோன் வந்தது. அப்போ தூயா டுவல்த் படிச்சுக்கிட்டு இருந்தான். என்னை ஸ்கூலுக்கு உடனடியா வர சொல்லி கூப்பிட்டாரு பிரின்சிபால். ஸ்கூலுக்கு போனப்போ, தூயா அவனோட கிளாஸ்ல படிச்சுக்கிட்டு இருந்த அவரோட பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தான்னு பிரின்சிபால் சொன்னாரு"

அதைக் கேட்டு பவித்ரா நகம் கடித்தாள்.

"ஆனா, அந்த லெட்டரை எழுதினது தூயா இல்ல. சயின்ஸ் குரூப்ல படிச்சுக்கிட்டு இருந்த வேற ஒரு தூயவன். அந்தப் பையனை யாருக்கும் ரொம்ப தெரியாது போல இருக்கு. தூயவன்ங்கிற பேரு ரொம்ப ரேர் அப்படிங்கிறதால, அதை இவன் கொடுத்ததா அந்த பொண்ணு நினைச்சுகிச்சு. நான் ஏற்கனவே ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்ததால, யோசிக்கிற தன்மையையே இழந்துட்டு இருந்தேன். அவன் ஸ்கூல்ல இன்னொரு தூயவன் இருக்க முடியும்னு என்னால யோசிக்க முடியல. என்னோட வளர்ப்பை அந்த பிரின்ஸ்பால் குறை சொன்ன போது என்னால் அதை தாங்க முடியல. என் பொறுமையை இழந்து, நான் அவனை அறைஞ்சுட்டேன்"

அவரை அதிர்ச்சியோடு பார்த்த பவித்ரா,

"நீங்க அவரை அறைஞ்சீங்களா?" என்றாள் வேதனையோடு.

ஆம் என்று தலையசைத்தார் குணமதி.

"என்னோட சொந்த பிரச்சனையால, நான் அன்னைக்கு முட்டாள்தனமா நடந்துக்கிட்டேன்"

"இதுல ரொம்ப பரிதாபமான விஷயம் என்னன்னா, எங்க அம்மாவை ஸ்கூலுக்கு கூப்பிட சொல்லி பிரின்சிபால் கிட்ட சொன்னதே தூயா தான்" என்றாள் வெண்மதி வருத்தத்தோடு.

பவித்ரா புருவம் உயர்த்தினாள்.

"அம்மா அவனுக்கு சப்போர்ட் பண்ணுவாங்கன்னு, அவன் அந்த அளவுக்கு அவங்க மேல நம்பிக்கை வச்சிருந்தான். ஏன்னா, அம்மா தான் அவனை நல்லா புரிஞ்சு வச்சிருக்காங்கன்னு அவன் நம்பிகிட்டு இருந்தான். ஆனா அம்மா எல்லாரும் முன்னாடியும் அவனை அறைஞ்சிட்டாங்க. தூயா அழுததை அன்னைக்கு தான் நான் முதல் தடவை பார்த்தேன்"

"அந்த லெட்டரை அவர் எழுதலன்னு அவரால நிரூபிக்க முடியலயா?" என்றாள் பாவமாக.

"அந்த உண்மை அன்னைக்கே வெளிய வந்துடுச்சு. அந்த லெட்டரை எழுதின உண்மையான தூயவனை ஸ்டுடென்ட்ஸ் பிடிச்சு பிரின்ஸ்பால் கிட்ட கொண்டு போய் நிறுத்திட்டாங்க. வீட்டுக்கு வந்ததுக்கு பிறகு, தன்னுடைய ரூமுக்கு போய் தூயா  கதவை சாத்திக்கிட்டான். அம்மா எவ்வளவு தட்டினாலும் அவன் கதவை திறக்கவே இல்ல. அவங்க எவ்வளவோ கெஞ்சினாலும் அவன் மனசு இறங்கவே இல்ல. அத்தோட அவன் அம்மா கிட்ட பேசுறதையே நிறுத்திட்டான். அவனைப் பொறுத்த வரைக்கும், அதை அவன் ரொம்ப பெரிய ஒரு ஏமாற்றமா நினைச்சான். அவன் அம்மா மேலே அன்பை விட,  நம்பிக்கை தான் ரொம்ப அதிகமா வச்சிருந்தான். அவங்க அவனை நம்பலங்குறத அவனால தாங்க முடியல. அதோட கிளம்பி லண்டனுக்கு போனவன் தான், மாஸ்டர்ஸ் முடிக்கிற வரைக்கும் திரும்பி வரவே இல்ல. எங்க பிசினஸை லண்டனிலேயே ஆரம்பிக்கலாம்னு கூட அவனுக்கு விருப்பம் இருந்தது. இந்தியாவுக்கு வர்ற எண்ணம் அவனுக்கு சுத்தமா இல்ல. அப்போ தான் எனக்கு கல்யாணம் நிச்சயமாச்சு. என் கல்யாணத்துக்காக இந்தியாவுக்கு வந்தான்"

தன் திருமணம் நடந்த முறையையும், அன்று நிகழ்ந்த தூயவனின் பெருவெடிப்பையும் பற்றி அவளிடம் கூறினாள் வெண்மதி.

அவர்களுக்காக மனம் வருந்தினாள் பவித்ரா. இவர்கள் அனைவரும் நல்லவர்கள். ஒருவர் மீது ஒருவர் அலாதியான அன்பு வைத்திருக்கிறார்கள். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், சூழ்நிலை அவர்களுக்கு எதிராய் வேலை செய்திருக்கிறது. குணமதிக்கும் தூயவனுக்கும் இடையில் இருக்கும் மனக்கசப்பை எப்படி போக்குவது என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அதை செய்ய  வேண்டும் என்று அவள் விரும்பினாள். எல்லாவற்றிற்கும் மேலாக, வெண்மதி கூறிய அவளது திருமண நிகழ்வு குறித்து ஏதோ ஒன்று தவறாய் தெரிந்தது. அவள் ஆழமான யோசனையில் மூழ்கிப் போனாள்.

ப்லிஸ்(Bliss)மொபைல் கம்பெனி

அந்த நிறுவனத்தின் அனைத்து பங்குதாரர்களும் மிகப்பெரிய கான்ஃபரன்ஸ் ஹாலில் கூடியிருந்தார்கள். அதன் சிஇஓ தூயவனுக்காக அவர்கள் காத்திருந்தார்கள். மாயவன், மாதேஷ், சந்தோஷ் ஆகியவரும் அதில் இருந்தார்கள். வெளிநாட்டு தொழில்நுட்பத்தை தங்கள் நிறுவனத்தில் கொண்டு வருவது குறித்து ஒரு முடிவு எடுப்பதற்கான கூட்டம் அது. வழக்கம் போலவே, சந்தோஷ் தன் அப்பாவின் பக்கத்தில் அமராமல் அவருக்கு எதிரில் அமர்ந்திருந்தான்.

அன்று தூயவன் என்ன முடிவு எடுக்கப் போகிறான் என்பது குறித்து மாதேஷ் மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டார். ஆனால் சந்தோஷ் விருப்பமின்றி காணப்பட்டான். அந்த வியாபார ஒப்பந்தத்தின்படி, அவர்கள் ஒரு திறமைசாலியான நபரை ஃபிரான்ஸுக்கு அனுப்ப வேண்டும். தூயவன் ஃபிரான்ஸுக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினார் மாதேஷ். அவன் அங்கு சென்று விட்டால், இங்கிருக்கும் பொறுப்பை சந்தோஷ் ஏற்றுக்கொள்வான். தன் மகனை அந்த நிறுவனத்தின் சிஇஓ நாற்காலியில் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அது அவருடைய கனவு.

தூயவன் அந்த நிறுவனத்தின் பொறுப்பை ஏற்பான் என்பது அவர் சிறிதும் எதிர்பாராத ஒன்று. அந்த விஷயத்திலும், மாயவனனை தன் விருப்பத்திற்கு நடக்கச் செய்ய முடியும் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால் வெண்மதியின் திருமணத்திற்கு பிறகு அனைத்தும் தலைகீழாய் மாறி போனது. சினம் கொண்ட சிங்கம் போல் அவர்களை சுற்றி வந்தான் தூயவன். அவனது விருப்பத்திற்கு எதிராய் பேசும் தைரியம் ஒருவருக்கும் இருக்கவில்லை, முக்கியமாய் மாயவனுக்கு. வெண்மதியின் திருமணத்திற்காக தூயவன் இந்தியா வந்த போது, அவனுக்கு இந்தியாவில் இருக்க வேண்டும் என்ற விருப்பமில்லை. ஆனால் வெண்மதியின் திருமண முறிவு ஏற்பட்ட பிறகு, அவனுக்கு இந்தியாவை விட்டு செல்லவும் விருப்பமில்லை, தன் அக்காவை தனியாக விட்டுச் செல்லவும் விரும்பவில்லை.

அந்த நிறுவனத்தின் சிஇஓ நாற்காலியில் அமர தூயவனுக்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. அவன் தானே அதன் நேரடி வாரிசு...! அது மாதேஷ் சிறிதும் எதிர்பாராதது. முதன்முறையாக, அவரிடம் கலந்து ஆலோசிக்காமல் தூயவனை அந்த நிறுவனத்தின் முதலாளியாக்கி அவருக்கு ஏமாற்றம் அளித்தார் மாயவன். அதன் பிறகு அந்த நிறுவனத்தில் நிகழ்ந்தவை எல்லாம் வரலாறு...! அந்த நிறுவனம் ஒட்டுமொத்தமாய் தூயவனின் கட்டுப்பாட்டிற்கு சென்றது.

அன்றும் வழக்கம் போலவே, புயல் போல் அந்த கான்ஃபரன்ஸ் ஹாலில் நுழைந்தான் தூயவன். அவனது மேலாளரான பாரி அவனை பின்தொடர்ந்து வந்தான். நேரத்தை வீணாக்காமல்  கூட்டத்தை துவங்கினான் தூயவன்.

"வெல்... ஒரு முக்கியமான விஷயத்தை ஃபைனலைஸ் பண்ண நம்ம எல்லாரும் இங்க கூடியிருக்கோம். இதுவரைக்கும் நம்ம கம்பெனிக்கு கிடைக்காத ஒரு பெரிய டீல் கிடைச்சிருக்கு. இதை ஹேண்டில் பண்ண, திறமைசாலியான ஒருத்தரை நம்ம தேர்ந்தெடுக்கணும். அதனால..."

அவன் மேலே எதுவும் கூறுவதற்கு முன்,

"ஒரு நிமிஷம் தூயவன்" என்று எழுந்து நின்றான் சந்தோஷ்.

அனைவரது பார்வையும் அவன் பக்கம் திரும்பியது. தூயவன் அவனை திடமாய் ஏறிட்டான்.

"நான் சுத்தி வளச்சி பேச விரும்பல. இந்த கம்பெனியோட சிஇஓவா நீங்க என்ன முடிவு பண்ணி இருக்கீங்கன்னு எனக்கு தெரியாது. நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த நினைக்கிறேன். இந்த ப்ராஜெக்ட்டை நான் ஹேண்டில் பண்ண விரும்புறேன். என்னோட திறமையில உங்களுக்கு எந்த சந்தேகமும் இருக்காதுன்னு நினைக்கிறேன். ஒருவேளை இருந்தா, என்னோட ஹிஸ்டரி ரெக்கார்டை நீங்க செக் பண்ணி பார்க்கலாம்"

தூயவன் தன் கைகளை கட்டிக்கொண்டு அவனைப் பார்த்துக் கொண்டு நிற்க, மாதேஷ் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளானார்.

"உங்க திறமையில எனக்கு எந்த சந்தேகமும் இல்ல, சந்தோஷ்"

"தேங்க்ஸ்"

"இந்த டீலை நீங்க ஹேண்டில் பண்ணனும்னா, அதுக்கு என்னென்ன செய்யணும்னு உங்களுக்கு தெரியுமா?"

"இதைப்பத்தி எதுவுமே தெரியாம நான் இதுல இறங்கல. இந்த ப்ராஜெக்ட்டோட ஒர்த் ஐநூறு கோடி. இந்த ப்ராஜெக்ட்டை முடிக்கிறதுக்கான டைம் ரெண்டு வருஷம். இதை யார் ஹேண்டில் பண்றாங்களோ அவங்க ரெண்டு வருஷத்துக்கு ஃபிரான்சில் தங்கணும்"

"இந்த கண்டிஷன்ஸ் எல்லாத்துக்கும் நீங்க தயார்னா, தாராளமா நீங்க இந்த ப்ராஜெக்ட்டை எடுத்து செய்யலாம். ஆனா ஒரு விஷயத்தை நீங்க மறக்கக்கூடாது. இந்த ப்ராஜெக்ட்டை ஹேண்டில் பண்ண ஆரம்பிச்சதுக்கு பிறகு, உங்களால பேக் ஆஃப் ஆக முடியாது. எடுத்தா எடுத்தது தான்"

"நிச்சயம் பேக் ஆஃப் ஆக மாட்டேன்"

"வெல்... ட்ரைனிங் ஸ்டார்ட் பண்ணுங்க. இந்த ப்ராஜெக்ட்டுக்கு நீங்க செய்ய வேண்டிய  இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கு. நீங்க ஃபிரெஞ்சு கத்துக்கணும். ஃபிரெஞ்சு தெரியாம உங்களால அங்க மேனேஜ் பண்ண முடியாது.

"அவசர அவசரமா ஃபிரான்ஸ்க்கு போய், ஃபிரெஞ்சு தெரியாம கஷ்டப்பட்ட அனுபவம் எனக்கு இருக்கு. ( என்று மாதேஷை பார்த்த அவன்) நான் கோர்ஸ்ல ஜாயின் பண்ணிட்டேன்னு நினைச்சுக்கோங்க" என்றான்.

"தட்ஸ் கிரேட்! ஆல் த பெஸ்ட்"

அந்த கான்ஃபரன்சை முடித்துக் கொண்டான் தூயவன். ஃபிரான்சுக்கு செல்ல வேண்டும் என்ற சந்தோஷின் முடிவினால் கடும் கோபத்தில் இருந்தார் மாதேஷ். அவனை உடனடியாக தடுத்து நிறுத்த நினைத்தார். தன் பக்கத்தில் இருந்த மாயவனை பார்த்து,

"மாயா, நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றார்.

அவர்களை கடந்து சென்ற தூயவனின் காதில் அது விழுந்தது.

"சொல்லு மாது"

"உங்க குடும்பத்துல இருக்கிற எல்லாரும் என் மேல கோவமா இருக்காங்கன்னு எனக்கு தெரியும். எதையும் நான் தெரிச்சி செய்யலனாலும், நான் செஞ்ச தப்புக்காக ரொம்ப வருத்தப்படுறேன். அதை எப்படியாவது சரி கட்டணும்னு விரும்புறேன்"

மாயவன் அவரை ஆர்வத்தோடு பார்க்க, தூயவன் முகம் சுருக்கினான். என்ன செய்து அவர் இவற்றையெல்லாம் சரி கட்டி விட முடியும்?

"சந்தோஷை வெண்மதிக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க நான் தயாரா இருக்கேன்"

மாயவனுக்கு மகிழ்ச்சி மேலோங்க, தூயவன் திகைத்து நின்றான். அவனுக்கு மாதேஷை பற்றி நன்றாக தெரியும். தனக்கு லாபம் இல்லாத எதையும் அவர் செய்ய மாட்டார். இந்த முடிவிற்கு பின்னால் இருக்கும் நோக்கம் என்ன? எதற்காக ஒரு விதவைக்கு தன் மகனை அவர் மணம் முடிக்க நினைக்கிறார்? அவன் யோசனையில் ஆழ்ந்தான். அதேநேரம், அவனுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஏனென்றால், சந்தோஷ் அவனது தந்தையை போல் இல்லை. அவனது அப்பாவையும் தங்கையையும் போல அவன் நாகரிகம் தெரியாதவன் அல்ல. வெண்மதியின் திருமணத்திற்கு முன்பு வரை, வெண்மதிக்கும் சந்தோஷுக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தது. அவளது திருமணத்திற்கு பிறகு அனைத்தும் தலைகீழாய் மாறியது. வெண்மதியிடம் பேசுவதற்கு சந்தோஷ் எவ்வளவோ முயன்றும், அவனது அழைப்பை வெண்மதி ஏற்க வில்லை. அவனை சந்திக்கவும் மறுத்துவிட்டாள். அது தூயவனுக்கும் தெரியும்.

தூயவனின் மனம், நிம்மதி இழந்தது. இந்த விஷயம் சந்தோஷ் பற்றியது அல்ல, மாதேஷ் பற்றியது. சந்தோஷ் வெண்மதியை திருமணம் செய்து கொண்டால், மாதேஷ் பலம் பெற்று விடுவார். தங்கள் நிறுவனத்தையும் குடும்பத்தையும் ஆள நினைப்பார். அதன் பிறகு, அவன் எந்த முடிவையும் சுதந்திரமாய் எடுக்க முடியாது. அவனது முடிவு, அவனது அக்காவை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, சந்தோஷ் வெண்மதியை திருமணம் செய்து கொண்டால், அவன் சந்தோஷை ஃபிரான்ஸுக்கு அனுப்ப முடியாது. அவனுக்கு பதிலாக தூயவன் செல்ல வேண்டி இருக்கும். அவன் பவித்ராவை பற்றி நினைத்தான். இப்பொழுது அவன் பவித்ராவை என்ன செய்யப் போகிறான்? எது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், அவன் எடுத்துக் கொண்ட பொறுப்பை அவன் கைவிடுவதாய் இல்லை.

மாயவன் இல்லம்

வீட்டிற்கு வந்த தூயவன்,

"குழந்தை அண்ணா, எனக்கு காபி கொண்டு வாங்க" என்றபடி தன் அறைக்கு விரைந்தான்.

அவனிடம் தெரிந்த வித்தியாசத்தை கவனித்தாள் பவித்ரா. காலை அலுவலகம் புறப்படும் போது அவன் மிகவும் துறுதுறுப்பாய் காணப்பட்டானே...! ஏன் அவனிடம் இப்பொழுது ஒரு பதற்றம் தெரிகிறது?

குழந்தைசாமி வீட்டில் இல்லை என்று பவித்ராவுக்கு தெரியும். அதனால் சமையல் அறைக்கு விரைந்து, எதையோ தீவிரமாய் யோசித்தபடி பாலை சூடேற்றினாள். காபியை கலந்து எடுத்துச் சென்று, தூயவனின் அறையின் கதவை தட்டினாள்.  

"உள்ள..." என்று கூறிய தூயவன் அங்கு குழந்தை சாமிக்கு பதிலாக பவித்ரா நின்றிருப்பதை பார்த்து வாங்க என்ற வார்த்தையை அப்படியே முழுங்கினான். அவளைப் பார்த்தவுடன் அவன் பதற்றம் பறந்து சென்றது.

வெளியில் இருந்தபடியே அந்த குவளையை அவனிடம் நீட்டினாள். தன் கையை கட்டிக் கொண்டு நின்றான் தூயவன்.

"உள்ளன்னு சொன்னிங்க. ஆனா வான்னு சொல்லலயே" என்றாள்.

அதைக் கேட்டு சிரித்த தூயவன்,

"உள்ளே வாங்க மேடம்" என்றான்.

உள்ளே வந்த பவித்ரா,

"குழந்தை அண்ணன் வீட்ல இல்ல. மார்க்கெட்டுக்கு போயிருக்காரு. அதனால தான் நான் காபி கொண்டு வந்தேன்" என்றாள் தயங்கியபடி.

"நீ இங்க ஏன் வந்தேன்னு நான் காரணம் கேட்டேனா?" என்றான் அவள் கையில் இருந்த குவளையை பெற்றபடி.

அவள் அங்கிருந்து செல்ல திரும்பிய போது, தூயவன் கூறியதை கேட்டு நின்றாள். 

"என் கூட ஃபிரான்ஸ்க்கு வரியா?"

திடுக்கிட்டு அவனை நோக்கி திரும்பினாள் பவித்ரா. அவள் முகத்தை படித்த படி காப்பியை பருகினான் தூயவன்.

"ரெண்டு வருஷத்துக்கு நான் ஃபிரான்சுக்கு போக வேண்டி இருக்கு. இந்த மாதிரி நல்ல காபி ஃபிரான்ஸ்ல கிடைக்காது. நீ என் கூட இருந்தா அது எனக்கு கிடைக்கும். என்ன சொல்ற?" என்றான் சீரியஸாக.

ஒருவேளை அவளுடைய இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால், தூயவன் எதை உணர்த்த நினைக்கிறான் என்று புரிந்திருக்கும்.  ஆனால் அவள் பவித்ரா. அவள் வேறு ஒரு விஷயத்திற்காக கவலைப்பட்டாள்.

"நீங்க ஃபிரான்ஸுக்கு போறீங்களா?"

ஆம் என்று தலையசைத்த அவன், மீண்டும் காப்பியை பருகினான். அவள் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தாள். அவள் தன் எதிர்காலத்தைப் பற்றி வருத்தப்படுவதாய் எண்ணினான் தூயவன்.

"நீங்க ஃபிரான்சுக்கு போறதா இருந்தா, நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்ல நினைக்கிறேன்"

தூயவனை ஆர்வம் ஆட்க்கொண்டது.

"என்ன சொல்லு"

"வெண்மதி அக்கா, விடோவும் இல்ல, கல்யாணம் ஆனவங்களும் இல்ல" என்றாள்.

"என்ன்னனது?" என்றான் அதிர்ச்சியோடு.

"ஆமாம், தீரஜ் அவங்க கழுத்துல மூணு முடிச்சு போடவே இல்ல. மூணாவது முடிச்சை போடுறதுக்கு முன்னாடியே அவர் கீழே விழுந்துட்டாரு. இந்து கல்யாண விதிப்படி, மூனு முடிச்சு போட்டா மட்டும் தான் அவங்க புருஷன் பொண்டாட்டி. அவங்களோட கல்யாணம் முழுமை அடையவே இல்ல. அப்படி இருக்கும் போது அக்கா எப்படி விதவையா இருக்க முடியும்?" என்று அவசர அவசரமாய் கண்கள் படபடக்க கேள்வி எழுப்பிய அவளை, பார்த்தபடி பேச்சிழந்து நின்றான் தூயவன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top