15 தூயவனின் கேள்வி
15 தூயவனின் கேள்வி
பவித்ராவிடமிருந்து தன் கைபேசியை பெற்றுக்கொண்ட தூயவன்,
"தேங்க்ஸ்" என்றான்.
"அக்கா, நான் கிச்சன்ல அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணட்டுமா?" என்று தூயவனை பார்த்தவாறு கேட்டாள் பவித்ரா.
"தூயா, அவங்க உன்னோட பர்மிஷனை தான் கேக்குறாங்க" என்று சிரிப்பை அடக்கியவாறு கூறினாள் வெண்மதி.
பவித்ராவை பார்த்த தூயவன், சரி என்று புன்னகையோடு தலையசைத்தான். நிம்மதி அடைந்த பவித்ரா, அங்கிருந்து சென்றாள்.
"நான் சொல்லல? அவங்க பயந்து தான் போயிருக்காங்க. பாரு, உன்கிட்ட பர்மிஷன் வாங்காம உன்னோட ரூமை விட்டு போறதுக்கு எவ்வளவு தயங்குறாங்க..." என்று சிரித்தாள்.
"அவ எதார்த்தத்தை புரிஞ்சிகிட்டு இருக்கணும்" என்றான் பெருமை மேலோங்க.
"எதார்த்தம்னு நீ எதை சொல்ற?" என்றாள் அவள் கிண்டலாய்.
"நான் தான் அவளோட ப்ரொடெக்டர். அவளோட வாழ்க்கை முழுக்க நான் தான் அவளை காப்பாத்த போறேன்"
"இதெல்லாம் பாசிபிள்னு நினைக்கிறியா?"
"இல்லையா?" என்றான்.
"அதை உன்னால் செய்ய முடியாது"
"ஏன் செய்ய முடியாது?"
"அவங்களுக்கு இன்னும் கொஞ்ச நாள்ல யாரோடயாவது கல்யாணம் நடந்துடும் தானே?"
அதைக் கேட்டு தூங்கியவன் அதிர்ச்சி அடைந்தான். தன் பார்வையை வேறு பக்கம் திருப்பினான்.
"அவங்க கல்யாணத்துக்கு பிறகு நீ எப்படி அவங்களோட ப்ரொடக்டரா இருக்க முடியும்? அவங்களுக்கு கல்யாணம் ஆகும் போது, உன்னுடைய பொறுப்பு முடிவுக்கு வந்துடும். அதுக்குப் பிறகு அவங்களை புரொடெக்ட் பண்ண வேண்டிய பொறுப்பு அவங்க புருஷனுக்கு போயிடும். நீ அவங்க விஷயத்துல தலையிடுறதை அவங்க புருஷனும் விரும்ப மாட்டான்"
"அவன் யாரு என்னை தடுத்து நிறுத்த? நான் அவங்க அப்பாவுக்கு வாக்கு கொடுத்து இருக்கேன்"
"பவித்ராவுக்கு நீ யாரு, தம்பி? அவங்களுக்கு நீ சொந்தமா? பந்தமா? எந்த அடித்தளத்தை வச்சுக்கிட்டு நீ அவங்களை காலம் முழுக்க ப்ரொடெக்ட் பண்ண முடியும்? அஃப்கோர்ஸ், நீ அவங்க அப்பாவுக்கு சத்தியம் பண்ணி கொடுத்து இருக்க. ஆனா, அவங்களுக்கு கல்யாணம் ஆகும் போது, அந்தப் பொறுப்பை நீ அவங்க புருஷன் கிட்ட கொடுத்து தான் ஆகணும். அது தான் கல்யாணம்"
வெண்மதி கூறுவது தவறில்லை என்பதால், அது அவனை யோசனையில் ஆழ்த்தியது.
"என்ன யோசிக்கிற சின்னத்தம்பி?"
ஒன்றுமில்லை என்று தலையசைத்தான்.
"இது தான் நம்ம சொசைட்டியோட செட்டப். கல்யாணத்துக்கு பிறகு ஒரு பொண்ணோட வாழ்க்கை அவ புருஷனை தான் சார்ந்து இருக்கும். அதனால, பவித்ராவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை தேடி கல்யாணம் பண்ணி வைக்க பாரு. அதுக்குப் பிறகு நீ ஃப்ரீ ஆயிடலாம். அவங்களை அவங்க புருஷன் பாத்துக்குவான்"
அடுத்த வாய் உணவை அவனுக்கு ஊட்டுவதற்காக அவள் நீட்டிய போது, எழுந்து நின்றான் தூயவன்.
"அட சாப்பிடாம ஏன் எழுந்த?"
"எனக்கு போதும், கா"
"இப்பவே போய் பவித்ராவுக்கு மாப்பிள்ளை தேட போறியா?" என்றாள் கிண்டலாய்.
அவளை பார்த்து முறைத்தான் தூயவன்.
"உன்னோட மொக்கை முறைப்புக்கு எல்லாம் பயப்பட நான் ஒன்னும் பவித்ரா இல்ல, தம்பி...! உன்னோட முறைப்பு என்னை ஒன்னும் பண்ணாதுன்னு எனக்கு தெரியும்" என்றபடி சிரித்துக்கொண்டே எழுந்து நின்ற வெண்மதி,
அங்கிருந்து நடக்க துவங்க,
"அக்கா" என்று தூயவன் அழைத்தது கேட்டு நின்றாள்.
பின்னால் திரும்பிய அவள், தன் புருவம் உயர்த்தினாள்.
"நான் கொடுத்த வார்த்தையை என்னோட கடைசி மூச்சு வரைக்கும் காப்பாத்தணும்னு நினைக்கிறேன். என் வாழ்க்கை முழுக்க நான் அவளை காப்பாத்தணும்னா நான் என்ன செய்யணும்?"
அவனுக்கு பதில் அளிக்க ஒரு கணம் கூட யோசிக்கவில்லை வெண்மதி.
"நீயே அவங்களை கல்யாணம் பண்ணிக்கோ. சிம்பிள்..."
பளிச் என்ற சிரிப்புடன் அங்கிருந்து சென்றாள் வெண்மதி. அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றான் தூயவன். அவன் மனதில் சுழலும் எண்ணம் என்ன என்பதை நம்மால் கூற முடியவில்லை.
இதற்கிடையில்...
கொந்தளிப்புடன் அமர்ந்திருந்த சஞ்சனாவை, அவ்வப்போது பார்த்தபடி காரை ஓட்டி சென்றார் மாதேஷ். தன் வாழ்க்கையில் அவர் அப்படிப்பட்ட ஒரு அவமானத்தை எப்பொழுதும் சந்தித்ததில்லை, அதுவும் தன் மகளுக்கு முன்னால்! அவளை பொறுத்தவரை அவர் தான் ஹீரோ. ஆனால் தூயவன் அவரை ஜீரோவாக்கி விட்டான். தூயவனை தன் மருமகனாக்கிக் கொள்ள முடியும் என்ற தன் நம்பிக்கையை கிட்டத்தட்ட அடியோடு இழந்து விட்டிருந்தார் மாதேஷ். என்ன ஒரு கோபம்...! அவருக்கும் தூயவனுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைகளை சீர் செய்ய வழியே இல்லை என்பது போல் தெரிகிறது. தன் அக்காவின் வாழ்க்கையை மாதேஷ் கெடுத்து விட்டதாய் நினைக்கிறான் தூயவன். அவன் அப்படி நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை. மாயவனை மட்டுமின்றி அவரது குடும்பத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்க நினைத்தார் மாதேஷ். அதனால் தான் தீரஜ்ஜை வெண்மதிக்கு திருமணம் முடிக்க எண்ணினார். தீரஜ் வேறு யாரும் அல்ல, மாதேஷின் தம்பி மகன். வெண்மதியின் மூலமாக அவர்கள் குடும்பத்தை தன் காலடியில் வைத்துக் கொள்ள முடியும் என்று நினைத்தார் மாதேஷ். ஆனால் அனைத்தும் வீணாய் போனது.
அன்று நடந்தவைகளை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை சஞ்சனாவால்.
அன்று...
தீரஜ் ஒரு குடிகாரன். எந்த அளவிற்கு என்றால், தனது சொந்த திருமணத்திற்கே தள்ளாட்டத்துடன் வரும் அளவிற்கு ஒரு மோசமான குடிகாரன். மது வாடையுடனும், ரத்த சிவப்பான கண்களுடனும் மேடைக்கு வந்து தன் பக்கத்தில் அமர்ந்த அவனை பார்த்த வெண்மதி திகில் அடைந்தாள். மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட மாப்பிள்ளையை எழுந்து நிற்கச் சொன்னார் புரோகிதர். தள்ளாட்டத்துடன் எழுந்து நின்றான் தீரஜ். வெண்மதியின் கழுத்தில் இரண்டு முடிச்சு போட்ட பிறகு அவனால் நிற்க முடியாமல் கீழே விழுந்தான். அதுவும் ஹோம குண்டத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்புக்கு மிக அருகில்...! அவன் தோளில் கிடந்த துண்டு ஹோமத்தில் விழுந்து பஸ்பமானது. அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தபடி எழுந்து நின்றாள் வெண்மதி. அவனது உறவினர்கள் மணமகன் அறைக்கு அவனை தூக்கிச் சென்றார்கள். மாதேஷை தவிப்போடு பார்த்துக் கொண்டு நின்ற மாயவனை முறைத்தார் குணமதி.
"என்ன கண்றாவி டாட் இதெல்லாம்?" என்று கோபத்தில் கத்தினான் தூயவன்.
"அவனோடை ஃபிரண்ட்ஸ் அவனை குடிக்க வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன். அவன் நல்ல பையன் தான்" சூழ்நிலையை சமாளிக்க முயன்றார் மாதேஷ்
தூயவனின் கரத்தைப் பற்றி அவனை கூட்டத்திலிருந்து அழைத்துச் செல்ல முயன்றார் மாயவன். அவரது கையை உதறினான் தூயவன்.
"தூயா, எல்லாரும் நம்மளைத் தான் பார்த்துக்கிட்டு இருக்காங்க"
"மாப்பிள்ளை குடி போதையில கீழ விழுந்தப்போ கூட எல்லாரும் பாத்துக்கிட்டு தான் இருந்தாங்க, டாட்" எரிந்து விழுந்தான் தூயவன்.
"கண்ட்ரோல் யுவர்செல்ஃப், தூயா"
"எப்படி இந்த மாதிரி ஒரு மாப்பிள்ளையை அக்காவுக்கு தேடி கண்டுபிடிச்சீங்க? இந்த குடிகாரனை விட்டா உங்களுக்கு வேற யாரும் கிடைக்கலயா? அவ்வளவு என்ன அவசரம் உங்களுக்கு? ஒழுங்கா விசாரிக்காம எப்படி இந்த கல்யாணத்தை ஏற்பாடு செஞ்சீங்க?"
"மாப்பிள்ளை, மாதேஷ் அண்ணனோட தம்பி பிள்ளையாச்சே... அப்படி இருக்கும் போது, அவர் எப்படி விசாரிப்பாரு?" என்றார் குணமதி, தூயவன் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்ட போதிலும்.
"நம்ம அப்புறமா பேசலாம்" என்று சுற்றுப்புறத்தை சங்கடத்துடன் பார்த்தபடி கூறினார் மாயவன்.
"எப்ப பேசுறது? அக்காவை பாருங்க. மேடையில தனியா நின்னுகிட்டு இருக்காங்க. அவங்க குடிகார புருஷன் திரும்பி வந்து கல்யாண சடங்கை எல்லாம் முடிக்க காத்துகிட்டு இருக்காங்க"
கோப கொந்தளிப்புடன் தன்னை முறைத்துக் கொண்டு நின்ற குணமதியை ஏறிட்டார் மாயவன். தன் உதவாக்கரை கணவனையும், அவரது திமிர் பிடித்த நண்பனையும் ஓங்கி அறைய வேண்டும் என்று தோன்றியது அவருக்கு. தன் கோபத்தை கண்ணீரோடு சேர்த்து கையாலாகாமல் விழுங்கினார்.
வெண்மதியை நோக்கி சென்றான் தூயவன். அவள் கழுத்தில் இருந்த மாலையை அவன் அவிழ்க்க நினைத்த போது, அவன் கையைப் பிடித்து அவனை தடுத்து நிறுத்தினாள் வெண்மதி. அவளை கோபமாய் ஏறிட்டான் தூயவன்.
"தூயா, ப்ளீஸ்..."
"நீங்க அவன் கூட வாழ போறீங்களா கா? தன்னோட சொந்த கல்யாணத்துக்கே தள்ளாடிக்கிட்டு வந்திருக்கான். அவன் எப்படி ஒரு நல்ல புருஷனா இருப்பான்? அடிப்படை நாகரீகம் கூட தெரியாத ஒருத்தன் எப்படிக்கா நல்ல மனுஷனா கூட இருக்க முடியும்?"
"வார்த்தையை அளந்து பேசு, தூயவன்" என்றார் தீரஜின் தந்தை.
அவரை நோக்கி கோபமாய் திரும்பினான் தூயவன். அவனது கோபத்தை பார்த்த அவர், பின்னோக்கி நகர்ந்தார். அவன் கோபத்தின் கடவுள் போல் நெருப்பு கோளமாய் எரிந்து கொண்டிருந்தான்.
"நான் வார்த்தையை அளந்து பேசணுமா? உங்க பிள்ளைக்கு எதை எப்படி அளந்து செய்யணும்னு நீங்க சொல்லிக் கொடுத்து வளர்த்திருந்தா, இந்த பிரச்சனை எல்லாம் வந்திருக்காது"
"அவனோட ஃப்ரெண்ட்ஸ் அவனை ஃபோர்ஸ் பண்ணி குடிக்க வச்சிருப்பாங்க"
"அவங்க ஃபோர்ஸ் பண்ணாங்க, உங்க பிள்ளை வேண்டாம்னு சொல்லாம வாங்கி குடிச்சிட்டானா? அப்ப தினம் தினம் அவன் ஃபிரண்டுங்க ஃபோர்ஸ் பண்ணா அவன் குடிச்சிகிட்டு தான் இருப்பானா?"
"தூயவன், நாங்க பெரியவங்க பேசிக்கிறோம்" என்றார் மாதேஷ்.
"போங்கய்யா நீங்களும் உங்க பேச்சும்..." சீறினான் தூயவன், அங்கிருந்த ஒரு பூ தட்டை எட்டி உதைத்து.
"எவனாவது என்னை தடுத்து நிறுத்தினீங்க, சாகடிச்சிடுவேன்" கர்ஜித்தான் தூயவன்.
வெண்மதியை நோக்கி திரும்பிய அவன், அவள் கழுத்தில் இருந்த மாலையை அவிழ்த்து வீசி எறிந்தான். இந்த முறை அவனைத் தடுக்கவில்லை வெண்மதி. அவனது கோபத்தை பார்த்த அவளே பயந்து நடுங்கினாள். அவள் கையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து நடக்க தொடங்கினான் தூயவன்.
"தூயா..." அவன் வழியை மறித்தார் மாயவன், தன் கைகளை விரித்தபடி.
"தூயா, அவ வாழ்க்கையை கெடுத்துடாத"
"ஏற்கனவே நீங்க அவங்க வாழ்க்கையை கெடுத்துட்டீங்க. உங்களுக்கு இருக்கிற கொஞ்சநஞ்ச மரியாதையையும் இப்போ என்னை கெடுக்க வைக்காதீங்க" அவரைப் பிடித்து தள்ளிவிட்டு, அங்கிருந்து நடந்தான் தூயவன். அவர் சிறிதும் எதிர்பார்க்காத வண்ணம், அவர்களை பின்தொடர்ந்தார் குணமதி.
அவனது கோபத்தைக் கண்ட சஞ்சனா ஒடுங்கி நின்றாள். வெண்மதியின் திருமணத்திற்காக லண்டனிலிருந்து அப்பொழுது தான் திரும்பி வந்திருந்த தூயவனால் அவள் வெகுவாய் கவரப்பட்டிருந்தாள். அவன் அவ்வளவு கவர்ச்சிகரமாய் இருப்பான் என்று அவளுக்கு தெரியாது. ஏனென்றால், லண்டனுக்கு செல்லும் முன் அவன் வெகு எளிமையாய் இருந்தவன். அப்போது அவன் பண்ணிரண்டாம் வகுப்பு தான் படித்துக்கொண்டு இருந்தன். சில வருடங்களுக்குப் பிறகு அவனை வெண்மதியின் திருமணத்தில் தான் சந்தித்தாள் சஞ்சனா. அதுவும் ஒரு மோசமான சூழ்நிலையில், தன் அக்காவுக்காக அவன் அனைவரிடமும் சண்டையிட்ட போது...!
இன்று...
தன் நினைவுகளில் இருந்து வெளியே வந்தாள் சஞ்சனா, மாதேஷ் காரின் பிரேக்கை அழுத்தி நிறுத்திய போது. அவர்கள் தங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டிருந்ததை கண்ட சஞ்சனா, காரை விட்டு கீழே இறங்கி வீட்டிற்குள் ஓடினாள். அவளை இயலாமையுடன் பின்தொடர்ந்தார் மாதேஷ். தன் அறைக்குச் சென்று, அவள் வாய்விட்டு அழுதாள். அவள் அழுத சத்தம் அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது.
அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்த அவளது அண்ணன் சந்தோஷ், அவள் அழும் குரல் கேட்டு வெளியே வந்தான். மாதேஷை பார்த்த உடனேயே என்ன நடந்திருக்க கூடும் என்பதை அவனால் ஓரளவு ஊகிக்க முடிந்தது. சோபாவில் சாய்ந்து அமர்ந்து, மோட்டுவலையை முறைத்து பார்த்தபடி அமர்ந்திருந்தார் மாதேஷ். அங்கு வந்து அவருக்கு எதிரில் அமர்ந்து கொண்டான் சந்தோஷ். அவனது இருப்பை உணர்ந்த மாதேஷ், தான் இருந்த நிலையிலேயே இருந்தபடி,
"தூயவன் என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டான்... ஒரு சாதாரண பொண்ணுக்காக என்னை இன்சல்ட் பண்ணிட்டான்" என்றார்.
"அவன் உங்களை இன்சல்ட் பண்றது ஒன்னும் புதுசு இல்லயே" என்றான் முகத்தில் எந்த பாவமும் இன்றி சந்தோஷ்.
"என்னை அவங்க வீட்டை விட்டு வெளியே போக சொன்னான். உன் தங்கச்சியையும் அந்த வீட்டை விட்டு துரத்திட்டான்" என்றபடி நேராய் எழுந்து அமர்ந்தார்.
"அவன் அப்படி செய்ற அளவுக்கு இவ ஏதாவது செஞ்சிருப்பா" என்ற அவனை ஏமாற்றத்துடன் பார்த்தார் மாதேஷ்.
"அவன் மதுரையில இருந்து திரும்பி வந்தப்போ அவ அங்க தானே இருந்தா? அப்போ அவன் அவளை வீட்டை விட்டு வெளியில அனுப்பணும்னு நினைக்கலையே..."
மாதேஷ் கையை பிசைந்தார்.
"நம்ம அவன் விஷயத்துல தலையிடுறதை நிறுத்தணும், டாட்"
"சஞ்சனாவுக்கு அவனை பிடிச்சிருக்கு..."
"எனக்கு கூட தான் ஆலியா பட்டை பிடிச்சது. ஆனா, நான் யாரு??? நான் அவளை விரும்பினா, என்னால அவளை கல்யாணம் பண்ணிக்க முடியுமா? முடியாது தானே?"
அவனை அதிர்ச்சியோடு பார்த்தார் மாதேஷ்.
"தூயவனும் அப்படித்தான்" என்றபடி அந்த இடத்தை விட்டு சென்றான் சந்தோஷ்.
ஆனால் அவனுக்கு தெரியாது, தூயவனை அடைய வேறொரு திட்டத்தை சஞ்சனா வைத்திருந்தாள் என்று.
தன் அறையை நோக்கி நடந்த சந்தோஷ், சஞ்சனா தன்னை நோக்கி ஓடி வருவதை பார்த்தான். அவனை அணைத்துக் கொண்டு அவள் அழுதாள்.
"ஐ அம் சாரி அண்ணா. நான் உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன். எனக்கு காதல் தோல்வி எவ்வளவு வலியை தரும்னு தெரியாது. அதனால தான், என்னோட ஓவர் பொசசிவ்நஸ்ஸால, உன்னோட காதலை நான் முறிச்சுட்டேன். உன் மேல இருந்த அளவுக்கு அதிகமாக அன்பால தான், நீ வேற ஒருத்தரை காதலிக்கிறதை என்னால தாங்கிக்க முடியல. ஐ அம் சாரி. என்னால தான் நீ வெண்மதியை கல்யாணம் பண்ணிக்க முடியாம போச்சு..." என்று அவள் அழ, சந்தோஷ் சிலை போல் நின்றான். தீராத அதிர்ச்சி அடைந்தார் மாதேஷ்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top