12 சிங்கமும் சிறுநரியும்...
12 சிங்கமும் சிறுநரியும்...
தன்னை பார்த்து முறைத்துக் கொண்டிருந்த சஞ்சனாவை ஏறிட்ட மாயவன்,
"ஐ அம் சாரி, மா" என்றார் வருத்தத்துடன்.
"சாரியா? உங்க பையன் என்னை இந்த வீட்டை விட்டு வெளியில போக சொல்லிட்டாரு. உங்க சாரி எல்லாத்தையும் சரி கட்டிடுமா?" என்றாள் கோபமாய்.
"உனக்கு தூயவனை பத்தி தெரியாது. அவனுக்கு பிடிவாதம் அதிகம். அவன் முடிவு பண்ணிட்டா அவன் மனசை எக்காரணத்துக்காகவும் மாத்திக்க மாட்டான்"
"அப்படின்னா என்னை எப்படி நீங்க அவருக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறீங்க?" என்றாள் எரிச்சலுடன்.
அந்தக் கேள்விக்கு தன்னிடம் பதில் இல்லாததால் மாயவன் அமைதியானார்.
"ஓகே, எதை எப்படி செய்யணும்னு எனக்கு தெரியும்" என்றவள் தன் அறையை நோக்கி சென்றாள்.
இயலாமையுடன் நின்றார் மாயவன். இங்கு அவருடைய நிலைமையே சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஆனால் இந்தப் பெண்ணோ, அவர் தூயவனை அவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறாள்.
...........
பவித்ராவுடன் வெண்மதியின் அறைக்கு வந்தான் தூயவன். குணமதியும் பெண்மதியும் அவர்களை பின்தொடர்ந்தார்கள்.
"ஃப்ரீயா இரு" என்றான் தூயவன்.
சரி என்று தலையசைத்த பவித்ரா,
"என்னை மன்னிச்சிடுங்க. என்னால தான் நீங்க உங்க அப்பாகிட்ட சண்டை போட வேண்டியதா போச்சு" என்றாள் வருத்தத்துடன்.
"உன் நெஞ்ச தொட்டு சொல்லு, நான் உன்னாலயா எங்க அப்பாகிட்ட சண்டை போட்டேன்?" என்றான்.
பதில் கூறாமல் தலைக்கவிழ்ந்து கொண்டாள் பவித்ரா.
"நான் உன்கிட்ட என்னமோ கேட்டேனே" என்று தலைத்தாழ்த்தி அவளை பார்த்தான்
"நான் மட்டும் இங்க வராம இருந்திருந்தா..." என்று அவள் மேலும் ஏதோ கூறப்போக, அவள் பேச்சை தடுத்து,
"இப்படி நடந்திருந்தா, இப்படி நடக்காம போயிருந்தா, அப்படின்னு நீ எதைப் பத்தியும் யோசிக்க வேண்டிய அவசியம் இல்ல. நடந்ததை மாத்த முடியாது. நடந்தது எதுக்கும் நீ காரணமில்ல. உன்னை குழப்பிக்காத. நீ இங்க, எங்க கூட இருக்கணும் அப்படிங்கறது விதி. அவ்வளவு தான்" என்றான் உறுதியாக.
வெண்மதியுடன் குணமதி வருவதை பார்த்த பவித்ரா,
அவரிடம் சென்று,
"அம்மா ஐ அம் சாரி" என்று அவர் கரங்களை பற்றினாள்.
"எதுக்காக சாரி?" என்றார் குணமதி.
"அப்பாவை நீங்க எதுத்து நிக்க வேண்டியதா போச்சு"
"அவர் செஞ்சது தப்பு. அதனால அவரை நான் எதிர்த்தேன். தூயாகிட்ட பேசாம, அவர் இந்த முடிவை எடுத்திருக்கக் கூடாது. ஏன்னா, இந்த விஷயத்துல முடிவெடுக்கிற உரிமை அவருக்கு கிடையாது"
"ஆனா..."
"உனக்கு ஒரு விஷயம் புரியல. இதுக்காக வருத்தப்படுறதை விட்டுட்டு, கிச்சன்ல தூங்குனதுக்காகத் தான் நீ வருத்தப்படணும். அது எங்களை காயப்படுத்தும்னு உனக்கு தோணலையா?" என்றார் புன்னகையுடன்.
"சாரி, மா" என்றாள் முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு.
"பவித்ரா, எல்லாத்தையும் விட முக்கியமா நீ ஒரு விஷயத்தை தான் யோசிக்கணும். உங்க அப்பா உயிரை விடுறதுக்கு முன்னாடி, உனக்கு ஒரு உறவை ஏற்படுத்தி கொடுத்துட்டு தான் போயிருக்காரு (தூயவனை பார்த்த அவர்) நீ எங்க வந்து சேரணுமோ அங்க தான் வந்து சேர்ந்திருக்க. அதை பத்தி மட்டும் யோசி"
"என் கூட இருக்கறதுக்கு ரொம்ப தேங்க்ஸ், அம்மா"
"நீயும் எங்க கூடவே இரு. வேற எங்கேயும் போகாத" என்று சிரித்தார்.
சரி என்று புன்னகையோடு தலையசைத்தாள் பவித்ரா. அந்த புன்னகை தூயவனின் முகத்திலும் புன்னகையை அழைத்து வந்தது.
"உனக்கு வேலை வேணும்னா தூயா உனக்கு வேலை அரேஞ்ச் பண்ணுவான். அவன் யாருன்னு உனக்கு தெரியுமா? எதை வேணும்னாலும் சாதிக்க கூடிய சக்தி படைச்சவன் அவன். அவனால முடியாதது எதுவுமே இல்ல" என்றாள் வெண்மதி தூயவனை ஓரக்கண்ணால் பார்த்தவாறு. அவளுக்கு தெரியும், இப்படிப்பட்ட புகழ்ச்சி உரையெல்லாம் அவனுக்கு பிடிக்காது என்று.
அவள் நினைத்தது போலவே, அவன் முகத்தை சுருக்கி,
"அக்கா, போதும் விடுறீங்களா?" என்றான் சலிப்போடு.
"எங்களுக்கு தெரியாம எதுவும் செய்யாத பவித்ரா" என்றார் குணமதி.
சரி என்று தலையசைத்தாள் பவித்ரா.
"உனக்கு குளிர் எடுத்தா, மதிகிட்ட சொல்லி, ஏசியோட டெம்பரேச்சரை குறைக்க சொல்லு. கிச்சனுக்கு போகாத" என்றார் கிண்டலாய்.
பவித்ரா சோகமாய் உதடு சுழிக்க, தூயவனும் வெண்மதியும் சிரித்தார்கள். சூழ்நிலை இலகுவாகிவிட்டதை உணர்ந்தான் தூயவன். அவனது அம்மாவும் அக்காவும் அதை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். அவனுக்கு அது நிம்மதி அளித்தது.
தன் மகனின் முகத்தில் மென்மையான புன்னகை தவழ்வதை கண்டார் குணமதி. அவன் கிட்டத்தட்ட வெண்மதியை தவிர மற்ற யாருடனும் இணைந்து சிரிப்பதையே நிறுத்தி விட்டிருந்தான். வெகு நாட்களுக்கு பிறகு, அவனது புன்னகையை பார்த்த அவர், அதை வரமாய் எண்ணினார்.
"படுத்து தூங்கு பவித்ரா. குட் நைட்" என்றான் தூயவன்
பவித்ரா சரி என்று தலையசைக்க, அங்கிருந்து நடந்த தூயவன், கதவருகே வந்தவுடன், நின்று, பின்னால் திரும்பி,
"அக்கா அவங்களுக்கு நான் ரொம்ப தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லுங்க. அவங்க தான் நடந்ததை என் கவனத்துக்கு கொண்டு வந்தாங்க" என்று வெண்மதியை பார்த்து கூறிய அவன், குணமதியை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
சட்டென கண் கலங்கிவிட்ட குணமதியை பார்த்து புன்னகை புரிந்தாள் வெண்மதி.
"மதி, அவன் எனக்கு தேங்க்ஸ் சொன்னான்" என்றார்
கண்ணீருக்கு இடையில் புன்னகையுடன்.
"ஆமாம்" என்று புன்னகைத்தாள் வெண்மதி.
"அவன் என்னை பார்த்தான்" என்ற அவருக்கு தொண்டையை அடைத்தது.
மீண்டும் வெண்மதி ஆம் என்று தலையசைத்தாள்.
"என் பிள்ளை என்கிட்ட ஒரு நாள் பேசுவான்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு" என்றார் உணர்ச்சிவசப்பட்டு.
அவரைப் பார்க்க பாவமாய் இருந்தது பவித்ராவுக்கு. தூயவன் அவரிடம் பேசுவதில்லை என்றாலும் அவனை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார் குணமதி. தன் மகனிடம் பேச வேண்டும் என்று அவர் ஏங்கித் தவிப்பது நன்றாகவே தெரிந்தது. அதோடு நின்றுவிடாமல், அதற்கான சாத்திய கூறுகளை செயல்படுத்தவும் அவர் முயன்று கொண்டிருந்தார். தன் கணவனை விட்டு தன் மகனுக்காக நின்றார். அவர்களுக்கிடையில் அப்படி என்ன நிகழ்ந்திருக்கும்? எதற்காக அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதில்லை? அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது பவித்ராவுக்கு. அவளுக்கு உறைவிடம் அளித்த அந்த குடும்பத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினாள் அவள். ஆனால் அவர்களுடைய சொந்த பிரச்சனையைப் பற்றி அவர்களிடம் எப்படி கேட்பது என்று அவள் தயங்கினாள். அவள் அவர்கள் குடும்பத்திற்குள் வந்து இரண்டு நாட்கள் தானே ஆகிறது? அவர்கள் குடும்ப விஷயத்தில் எப்படி அவள் மூக்கை நுழைக்க முடியும்? அவளுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், அவர்களது பிரச்சனை என்னவென்று அவள் தெரிந்து கொள்வாள். ஒருவேளை அவளுக்கு அதிர்ஷ்டம் கூடுதலாக இருந்தால், அவர்களுடைய பிரச்சினையை தீர்த்து வைக்கும் வாய்ப்பு கூட அவளுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அது சற்று பேராசையாகவே அவளுக்கு தெரிந்தது. பத்து வருடங்களுக்கும் மேலாக அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதில்லை. மாயவனும், வெண்மதியும் கூட அந்த விஷயத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை போலிருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது, சமீபத்தில் அவர்கள் வாழ்க்கைக்குள் வந்த அவளால் பெரிதாய் என்ன செய்துவிட முடியும் என்ற தயக்கம் அவள் மனதில் இருக்கத்தான் செய்தது. ஆனாலும், சிறிய ஊசி, பெரிய கிழிசலை தைத்து விடுவது இல்லையா? என்ற நம்பிக்கையும் அவள் மனதில் இருந்தது. எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்று யாரால் தான் கணித்து விட முடியும்?
மறுபுறம்,
மாதேஷுக்கு ஃபோன் செய்தாள் சஞ்சனா. தூக்கத்தில் இருந்து எழுந்த அவர், கடிகாரத்தை பார்க்க மணி 11 என்று காட்டியது. தனக்கு யார் ஃபோன் செய்வது என்று எரிச்சலுடன் அவர் பார்க்க, தன் மகளின் பெயரை பார்த்து திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தார்.
"சஞ்சு, எதுக்காக இவ்வளவு லேட்டா எனக்கு ஃபோன் பண்ற? அங்க ஒன்னும் பிரச்சனை இல்லயே? எல்லாம் சரியா தானே இருக்கு?" என்றார் ஏதோ தவறு நடந்திருக்க கூடுமோ என்பதை உணர்ந்த மாதேஷ்.
"இங்க எதுவுமே சரியா இல்ல, டாட். தூயவன் என்னை வீட்டை விட்டு துரத்திட்டான்" என்று கூச்சலிட்டாள்
"என்ன்னனது? அவனுக்கு எவ்வளவு தைரியம்?" என்று பல்லை கடித்தார் மாதேஷ்.
"அவனுக்கு தைரியம் இருக்குன்னு நமக்கு தான் தெரியுமே..."
"மாயா என்ன செய்றான்?"
"ஊஞ்சல் மாதிரி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் போயிட்டு வந்துகிட்டு இருக்காரு அந்த முதுகெலும்பு இல்லாத மனுஷன். வாயை மூடிகிட்டு அவர் பிள்ளை சொன்னதை எல்லாம் கேட்டுகிட்டு தத்தி மாதிரி நின்னாரு. நாளைக்கு காலைல அவங்க எப்படியும் என்னை விட்டுவிட்டு அனுப்பிடுவாங்க"
"மாயா ஒண்ணுமே சொல்லலையா? இது எப்படி நடந்தது? எதுக்காக அப்படி ஒரு முடிவை தூயவன் எடுத்தான்?"
"அந்த லோ கிளாஸ் பொண்ணை நான் கிச்சன்ல தூங்க சொன்னேன் அப்படிங்கற ஒரே ஒரு சாதாரண காரணத்துக்காக இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கான்" என்றாள்.
"அதுல கோபப்பட என்ன இருக்கு? அவ ஒரு லோ கிளாஸ் பொண்ணு தானே?"
"அது தான் டாட் எனக்கும் புரியல. அவன் என்னமோ அவ வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதை மாதிரி அவளை தலையில தூக்கி வைச்சிகிட்டு ஆடுறான்"
"நாளைக்கு காலையில நான் மாயாகிட்ட பேசுறேன்"
"அவர்கிட்ட ஃபோன்ல பேசுறதெல்லாம் வேலைக்கு ஆகாது. நீங்க நேர்ல வந்து இந்த பிரச்சனையை முடிச்சி வையுங்க"
மாதேஷ் அமைதியானார்.
"எதுக்காக அமைதியாயிட்டீங்க? ஏதாவது சொல்லுங்க, டாட்"
"நான் தூயவனை சங்கடப்படுத்த வேண்டாம்னு நினைக்கிறேன். அவன் என்னை நேர்ல பார்த்தா, தன்னோட நடத்தைக்காக ரொம்ப வருத்தப்படுவான்" என்று சமாளிக்க முயன்றார் மாதேஷ்.
"என்னை அவமானப்படுத்தினதுக்காக அவன் வருத்தப்படட்டும். எங்க கல்யாணத்தைப் பத்தி மாயவன் அங்கிள்கிட்ட பேசுங்க. இது தான் அதை பேசி முடிக்க வேண்டிய நேரம். அந்த பொண்ணை இந்த வீட்டை விட்டு துரத்தி அடிச்சிட்டு, தூயவனை எனக்கு சொந்தமாக்குங்க "
பெருமூச்சு விட்டார் ராஜீவ்.
"சரி, நாளைக்கு காலைல நான் அங்க வந்து, தூயவன்கிட்ட பேசி பிரச்சனையை தீர்க்க பாக்குறேன்"
"ம்ம்ம்..."
அவர்கள் அழைப்பை துண்டித்துக் கொண்டார்கள். மாதேஷ் யோசனையில் ஆழ்ந்தார். தூயவனை கையாள்வது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை என்று அவருக்கு தெரியும். அவர்களது நிறுவனத்திற்குள் தூயவன் காலடி எடுத்து வைத்த பிறகு, அவன் மாயவனை ஒட்டுமொத்தமாய் ஒதுக்கி விட்டான். எந்த ஒரு விஷயத்திலும் தலையிடுவதையே மாயவன் நிறுத்திக் கொண்டார். அல்லது, தூயவன் அவரை தலையிட அனுமதிக்கவில்லை என்றும் கூறலாம். தூயவனை போன்ற ஒரு ஆபத்தான மனிதனை இதுவரை மாதேஷ் பார்த்ததில்லை. அவருடைய மாயாஜாலங்கள் எல்லாம் மாயவனிடம் எடுபட்டதை போல, தூயவனிடம் எடுபடவே இல்லை.
மாயவன் வெகுளியான மனிதர். அவர் தன் நண்பன் மாதேஷ் மீது கள்ளம் கபடமற்ற அன்பு வைத்திருந்தார். அந்த விஷயத்தில் மாதேஷையும் குறை கூறி விட முடியாது. அவர்களது நட்பில் எந்த களங்கமும் இல்லை. ஆனால் அவர் மாயவதை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, தான் கூறுவதை மட்டுமே அவர் கேட்க வேண்டும் என்று, தன் இஷ்டத்திற்கு ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தார். மாயவனோ கண்மூடித்தனமாய் தன் குடும்பத்தை விட நண்பன் தான் முக்கியம் என்று, அவர் பாட்டுக்கு செவிமடுத்து கொண்டிருந்தார். அந்த ஒரு பிரச்சனை, மாயவனின் குடும்பத்தில் பல பிரச்சனைக்கு காரணமாய் அமைந்தது.
தூயவன் அவர்களது நிறுவனத்திற்குள் நுழையும் வரை, அனைத்துமே மாதேஷின் விருப்பப்படி தான் நடந்து கொண்டிருந்தது. ஆனால் எல்லாமும் ஒரே மாதிரி கடைசி வரை இருந்து விடுவதில்லை. ஒரு ராட்சசன் போல் அந்த நிறுவனத்திற்குள் நுழைந்தான் தூயவன். மாதேஷும் அவரது மகன் சந்தோஷும் அந்த நிறுவனத்தின் அங்கங்களாக இருந்த போதிலும், தூயவனின் திறமைக்கு முன்னால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்களது நிறுவனத்துடன் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்களும், ஒப்பந்தக்காரர்களும் அந்த நிறுவனத்தை, தூயவனுக்கு முன், தூயவனுக்கு பின் என்று பிரித்துக் கூறும் அளவிற்கு அவன் புகழ்பெற்றான்.
நிறுவனம் சம்பந்தமாக கூட, தன்னிடம் நின்று பேசுவதற்கு தூயவன் மாதேஷுக்கு வாய்ப்பளிக்கவில்லை. ஆனால் இன்று, மாதேஷ் அவன் சொந்த விஷயத்தைப் பற்றி அவனிடம் பேச தயாராகிக் கொண்டிருக்கிறார். அதன் விளைவு எப்படி இருக்கப் போகிறதோ...! மாதேஷை எந்த அளவிற்கு மரியாதையுடன் நமது நாயகன் நடத்தப் போகிறானோ ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top