11 பெருவெடிப்பு

11 பெருவெடிப்பு

தூயவனின் கண்களில் இருந்த வெப்பத்தை தாங்க முடியாமல் தலை குனிந்தார் மாயவன். தூயவன் அவரை நோக்கி சென்ற போது அவர் சங்கடத்தில் தவித்தார். பவித்ராவின் கரத்தை பற்றி கொண்டு, அவன் அவளையும் தன்னுடன் இழுத்துச் சென்றதை கவனித்தாள் சஞ்சனா. தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அவரை பார்த்து முறைத்துக் கொண்டு நின்ற தூயவன்,

"இவ வேலைக்காரியா?" என்றான் குத்தீட்டி பார்வையுடன்.

தன் பார்வையை தரையில் பதித்து நின்றார் மாயவன்.

"எப்போதிலிருந்து நீங்களாவே முடிவெடுக்க ஆரம்பிசிங்க, டாட்?" அவன் வார்த்தையில் தீப்பொறி தெறித்தது.

தலை நிமிர்ந்து அவனை ஏறிட்டார் மாயவன்.

"என்னை கடுப்பேத்துற அளவுக்கு ஏதோ செய்யணும்னு உங்களுக்கு திடீர்னு எப்படி தோணுச்சு?" தான் கடுப்பில் இருப்பதை அவருக்கு உணர்த்தினான் தூயவன்.

"நான் அந்த பொண்ணுக்கு வேலை தானே கொடுத்தேன்?"

"அவ என்னோட பொறுப்பு. அவ விஷயத்துல முடிவெடுக்கிறதுக்கு நீங்க யாரு? என்னைக் கேட்காம நீங்க எப்படி முடிவெடுத்தீங்க?"

"முடிவெடுக்கிற உரிமை எனக்கு இல்லையா?"

"இல்ல்ல்லலல... நிச்சயமா இல்ல. ஏன்னா, எப்பவுமே உங்க முடிவு இப்படித்தான் ரொம்ப கேவலமா இருக்கும்"

"நம்ம வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளி முன்னாடி நீ என்னை அவமானப்படுத்துற. அவங்க என்னை எப்படி மதிப்பாங்க?" என்றார் ஏமாற்றத்துடன்

"நீங்க உங்க குடும்பத்தோட மரியாதையை இழந்து ரொம்ப நாள் ஆச்சு, டாட். நீங்க எப்பவாவது அதை நினைச்சு வருத்தப்பட்டது உண்டா? நீங்க மரியாதையா நடந்தா தானே நாங்க உங்களுக்கு மரியாதை கொடுக்க முடியும்?"

சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,அவனுக்கு பதில் அளித்தாள் சஞ்சனா.

"தூயவன், அங்கிள் அந்த பொண்ண சந்தோஷப்படுத்த தான் நினைச்சாரு. அது மட்டும் இல்லாம..." என்று மேலும் ஏதோ கூறப்போனவள், தூயவன் வீசிய ஒரு கோபப்பார்வையை பார்த்து வாயை மூடி கொண்டாள்.

"இந்த விஷயத்துல நீ தலையிடாதே. இது உனக்கு வேண்டாத வேலை. தேவையில்லாம உன் மூக்கை கொண்டு வந்து இங்க நுழைக்காத" என்று தன் தாடையை இறுக்கியபடி கூறினான் தூயவன்.

அவன் சஞ்சனாவிடம் காட்டிய கோபத்தை பார்த்து, கதி கலங்கினாள் பவித்ரா.

"தூயா, அவ நம்ம கெஸ்ட். நீ அவளை இன்சல்ட் பண்ற"

"பவித்ரா என்னோட கெஸ்ட். அவளை வேலைக்காரியா அப்பாயிண்ட் பண்ணும் போது அவளை இன்ஸல்ட் பண்றோமேன்னு உங்களுக்கு கொஞ்சமாவது வருத்தம் இருந்துதா?"

"தூயவன், அங்கிள் எது செஞ்சாலும் உங்க நல்லதுக்கு தானே செய்வாரு" என்று மீண்டும் வெட்கமின்றி உள்ளே நுழைந்தாள் சஞ்சனா.

"எங்க விஷயத்துல தலையிடாதேன்னு சொன்னேன்" என்று சீறினான் தூயவன்.

"தூயா..."

"நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீங்க பதில் சொல்லல, டாட்"

"அவ போட்ட காபி ரொம்ப நல்லா இருந்தது. அதனால அவளுக்கு வேலை கொடுத்தேன். அது இவ்வளவு தப்பா போகும்னு நான் நினைக்கவே இல்ல"

தூயவன் எதுவும் கேட்பதற்கு முன்,

"கொஞ்சம் இருங்க... பவித்ரா உங்களுக்கு காபி போட்டு கொடுத்தாளா?" என்றார் குணமதி

"ஆமாம்"

"எதுக்காக நீங்க அவகிட்ட காபி கேட்டீங்க? நான் கோவிலுக்கு போறதுக்கு முன்னாடி தானே உங்களுக்கு காபி போட்டு கொடுத்தேன்...?"

"சஞ்சனாவுக்கு காபி வேணும்னு சொன்னா. அந்த நேரம் குழந்தைசாமி வீட்ல இல்ல. அதனால பவித்ராவை போட்டுக் கொடுக்க சொல்லி கேட்டா"

அனைவரும் சஞ்சனாவை அருவருப்போடு பார்த்தார்கள்.

"ஆமாம். பவித்ரா காபி போட்டது ரொம்ப நல்லா இருந்தது. அதனால தான் அங்கிள் அவளை அப்பாயிண்ட் பண்ணாரு"

"ஓஹோ, இதுக்காக தான் எங்க கூட பவித்ராவை சகஜமா இருக்க வேண்டாம்னு அவளுக்கு சொல்லிக் கொடுத்தியா?" என்று தன் கண்களை சுருக்கி கேட்டார் குணமதி.

அனைவரும் அவரை அதிர்ச்சியோடு ஏறிட்டார்கள்.

"நீங்க என்ன சொல்றீங்க, மாம்?" என்றாள் வெண்மதி.

"பவித்ராவை கிச்சன்ல தூங்க சொல்லி ஐடியா கொடுத்தது அவ தான்" என்று சஞ்சனாவை பார்த்தபடி கூறினார் குணமதி.

"நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க ஆன்ட்டி"

"நீ பவித்ராவை அவளோட முடிவுல பிடிவாதமா இருக்கச்சொல்லி சொன்ன போது, நான் அங்க தான் இருந்தேன்" என்றார் குணமதி

அனைவரையும் விட அதிகமாய் அதிர்ச்சி அடைந்தது மாயவன் தான். பவித்ராவை சமையலறையில் உறங்கச் சொன்னது சஞ்சனாவா? எதற்காக இந்த பெண் மேலும் மேலும் பிரச்சினை சிக்கல் ஆக்கிக் கொண்டே போகிறாள்?

இந்த பிரச்சனையை தனிமையில் பேசி தீர்க்காமல், அதை குணமதி வேண்டுமென்றே தான் அனைவரின் முன்னிலையிலும் கொண்டு வந்திருக்கிறார் என்பது தெரிந்தால், அவர் மேலும் கூட அதிர்ச்சி அடைவார்.

"நீ என்ன நெனச்ச சஞ்சனா? நீ என் புருஷனை உன் இஷ்டத்துக்கு உங்க அப்பா மாதிரியே டான்ஸ் ஆட வைக்கலாம்னு பாத்தியா?" என்றார் குணமதி.

தன் மீது ஒரு அதிருப்தி பார்வையை வீசிய குணமதியை அதிர்ச்சியுடன் ஏறிட்டார் மாயவன். தூயவனை பார்க்கவே பயந்தாள் சஞ்சனா.

"பவித்ரா நல்லா இருக்கணும்னு தான் சஞ்சனா அப்படி செஞ்சிருப்பா" என்று உளறி கொட்டினார் மாயவன்.

"அதை செய்றதுக்கு அவ யாரு? இந்த வீட்ல இது தான் புகைஞ்சிகிட்டு இருக்கா? இந்த சாத்தியக்கூரை நான் முன்னாடியே யோசிச்சி இருக்கணும். வழக்கமா நீங்க உங்க ஃபிரண்டு சொல்றத கேட்டு தானே ஆடுவீங்க? இது கூட அவர் சொல்லிக் கொடுத்ததா தான் இருக்கணும். ஏன்னா, இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் தனிச்சையா செய்ற அளவுக்கு உங்களுக்கு சாமர்த்தியம் போதாது" என்று கூறரிய பார்வை பார்த்தான்தூயவன்.

அவனுக்கு பதில் அளிக்கும் திராணி இன்றி நின்றார் மாயவன்.

"கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க, டாட்" என்று உச்சக் குரல் எழுப்பி அனைவரையும் திடுக்கிடச் செய்தான் தூயவன்.

"தூயா, நம்ம அப்புறம் பேசலாம்"

"எப்போ? ஏன் இப்ப மட்டும் நீங்க என்கிட்ட என்ன பேச போறீங்க? நீங்களாவே முடிவெடுத்தப்போ நான் உங்களுக்கு தேவைப்படலயே... இப்ப மட்டும் எதுக்கு அப்புறம் பேசலாம்னு சொல்றீங்க?" சஞ்சனாவை கோபமாய் அவன் பார்க்க அவள் பயத்துடன் தன் நைட் கவுனை இறுக பற்றினாள்.

"நீ இதுக்கு தான் இங்க வந்தியா? உனக்கும் உங்க அப்பாவுக்கும் டீசன்ஸியே கிடையாதா? இதுக்கு தான் உங்க அப்பா உன்னை இங்க அனுப்புனாரா?  எதுக்கு இந்த மாதிரி வேலை எல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்க? எதுக்காக எனக்கும் எங்க அப்பாவுக்கும் நடுவுல பிரச்சனையை ஏற்படுத்திகிட்டு இருக்க? எங்க குடும்பத்துல பிரச்சனை ஏற்படுத்துறது தான் உங்க வேலையா? உன் இன்டென்ஷன் என்ன? ஸ்பீக் அப் டேமிட்..." அவளை கேள்வி கேட்டவாறு, அவளை நோக்கி கோபமாய் நகர்ந்தான் தூயவன். சஞ்சனா பயத்தோடு பின்னோக்கி நகர்ந்தாள்.

"தூயா, ப்ளீஸ் காம் டவுன்..." என்று அவன் தோளில் கை வைத்து அவனை தடுத்து நிறுத்த முயன்றார் மாயவன்.

"பவித்ராவோட அப்பா, உங்க பிள்ளையோட உயிரை காப்பாத்துறதுக்காக தன் உயிரை விட்டாரு. அந்த பொண்ணுக்கு நன்றியோடு இருக்கணும்னு உங்களுக்கு தோணல இல்ல? அவளை கொண்டாடுறதை விட்டுட்டு, அவளை நீங்க வேலைக்காரியா மாத்திக்கிட்டு இருக்கீங்க. நீங்கல்லாம் என்ன மனுஷன்? உங்க குடும்பத்தை விட உங்க ஃபிரண்டு தான் உங்களுக்கு முக்கியமா? இது தான் நீங்க எங்களுக்கு கொடுக்கிற மரியாதையா? இதுக்கு முன்னாடி நீங்க செஞ்ச தப்பை எப்பயும் உணரவே மாட்டீங்களா? திரும்பத் திரும்ப தப்பு செஞ்சிகிட்டே தான் இருப்பீங்களா, டாட்?" என்று நெருப்பை உமிழ்ந்தான் தூயவன்.

"தூயா, நான் உன்னை காயப்படுத்தணும்னு இப்படி எல்லாம் செய்யல"

"ஆனா நீங்க காயம் தான் படுத்தி இருக்கீங்க... ரொம்ப மோசமா என்னை காயப்படுத்தி இருக்கீங்க"

"நான் சொல்றதை கேளு..."

"நீங்க சொல்றதை நான் கேட்பேன்... உங்க ஃபிரண்டோட மகளை இந்த வீட்டை விட்டு வெளியில அனுப்பினா மட்டும்...! அதுக்கப்புறம் நீங்க சொல்றதை நான் கேட்கிறேன். இந்த பொண்ணு மூஞ்ச பாக்க கூட நான் விரும்பல. அவளை இந்த வீட்டை விட்டு அனுப்புங்க. இல்லனா, இது தான் நான் உங்ககிட்ட பேசுற கடைசி தடவையா இருக்கும்"

"தூயா..."

"தட்ஸ் ஃபைனல்..."

சஞ்சனா அவமானமாய் உணர்ந்தாள். இது அவமதிப்பின் உச்சக்கட்டம். அவளை வீட்டை விட்டு வெளியேறக் கூறினான் தூயவன். அவள் முகத்தை பார்க்கக்கூட அவன் விரும்பவில்லை.

பவித்ராவை திரும்பிப் பார்த்தான் தூயவன். அவள் பயத்தோடு மென்று விழுங்கினாள். அவள் சிறிதும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய பிரச்சனை இங்கு நிகழ்ந்து விட்டது. ஆனால் அவளுக்கு ஆச்சரியம் அளிக்கும் வண்ணம், அவளிடம் மென்மையான குரலில் பேசினான் தூயவன்.

"பவித்ரா, உன்னை இங்க கூட்டிக்கிட்டு வந்தது நான் தான். நான் தான் உனக்கு பொறுப்பு. உங்க அப்பா என்கிட்ட என்ன கேட்டார்னு உனக்கு நல்லாவே தெரியும். உண்மையிலேயே நீ உங்க அப்பாவை மதிக்கிறவளா இருந்தா, என்னைத் தவிர வேற யார் என்ன சொன்னாலும் அதை பத்தி கவலை படாதே. உன் சம்பந்தப்பட்ட விஷயத்துல யார் முடிவெடுத்தாலும் தயவு செய்து அதை என்கிட்ட இருந்து மறைக்காத புரிஞ்சுதா?"

அவள் சரி என்று தலையசைத்தாள்.

"ப்ராமிஸ் மீ...!" தன் கையை அவளை நோக்கி நீட்டினான்.

குணமதியும், வெண்மதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவன் கையின் மீது தன் கையை வைத்து சத்தியம் செய்தாள் பவித்ரா. அவள் கையை பற்றி,

"தேங்க்ஸ்" என்றான்.

"மதி, பவித்ரா தனக்கு ஒரு வேலை வேணும்னு விரும்புறான்னு நான் நினைக்கிறேன்" என்றார் குணமதி வெண்மதியிடம் கூறுவது போல.

அவர் கூறியது தூயவன் காதில் விழுந்தது.

"உனக்கு மரியாதையான ஒரு வேலையை நான் ஏற்பாடு பண்றேன். வேலைக்காரியா இல்ல. நீ வேலைக்காரி இல்ல. நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் நீ வேலைக்காரியா இருக்கவும் முடியாது"

பவித்ரா மட்டுமல்ல, அனைவருமே திகைத்து தான் போனார்கள்! அவன் கூறியதன் அர்த்தம் என்ன? அதற்கு அவன் மட்டும் தான் பதில் கூற முடியும்!

"நீ என்னை நம்புற இல்ல?" என்று அவன் பவித்ராவை கேட்க,

"உங்களைத் தவிர நான் வேற யாரங்க நம்ப போறேன்?" என்றாள் பவித்ரா தயக்கம் இன்றி.

"ஃபைன்... குழப்பத்துக்கு இடம் கொடுக்காத. மத்தவங்க உன்னை குழப்ப பாப்பாங்க எல்லாரையும் தூக்கி போடு" என்று மாயவனை ஏறிட்டான்.

மாயவனும் சஞ்சனாவும் புழுவைப் போல் தெளிந்தார்கள்.

குணமதியும் வெண்மதியும் வியப்போடு தூயவனையே பார்த்துக் கொண்டு நின்றார்கள். இவ்வளவு நாள் அவர்களுக்கு தெரியாது, அவர்களது தூயா இவ்வளவு தன்மையாய் பேசக்கூடியவன் என்று. சஞ்சனாவுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. அவளால் இதை தாங்கவே முடியவில்லை.

"நீ அக்கா கூட, அவங்க ரூம்ல இருப்ப தானே?"

ஆம் என்று தலையசைத்தாள் பவித்ரா.

"அக்காவோட ரூம் இல்லாத வேற எங்கையாவது நீ தூங்குறதை நான் பார்த்தா, அதுக்கு அப்புறம் என்னை குறை சொல்லாத. நான் உன்னை என் ரூமுக்கு கூட்டிட்டு போய், என் கண் முன்னாடியே வச்சிக்குவேன்" என்று கண்டிப்பாக, ஆனால் மென்மையாய் கூறினான்.

குணமதி புருவம் உயர்த்த, வெண்மதி உதடு கடித்தாள். மாயவனோ, சஞ்சனாவின் அதிர்ச்சியடைந்த முக பாவத்தை கையாலாகாமல் பார்த்துக் கொண்டு நின்றார். பவித்ராவும் பேச்சு இழந்து சிலையாகவே மாறிப் போயிருந்தாள். அவன் பூரண உணர்வோடு தான் பேசுகிறானா என்று அவர்களுக்கு புரியவில்லை.

பவித்ராவின் கையை பிடித்து, அவளை தன்னுடன் அழைத்துக் கொண்டு நடந்தான் தூயவன், ஆத்திரத்தின் எல்லையில் நின்று கொண்டிருந்த சஞ்சனாவின் மீது ஒரு அருவருப்பான பார்வையை வீசி எறிந்து. 

தொடரும்...







 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top