10 வெளிவந்த உண்மை
10 வெளிவந்த உண்மை
குணமதி தங்கள் அறைக்கு வந்த போது, அங்கு மாயவன் ஏதோ ஒரு கோப்பை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து குணமதி சகஜமாய் புன்னகைக்க, மாயவனோ பதற்றத்துடன் புன்னகைத்தார்.
"பவித்ரா ஏன் தான் இப்படி எல்லாம் செய்றாளோ தெரியல" என்று பெருமூச்சு விட்டார்.
"என்ன... அவ என்ன செஞ்சா?"
"வீடு துடைக்கிறேன்னு சோப்பு தண்ணியில கால வச்சு கீழே விழுந்துட்டா. அவ கால் வீங்கி போச்சு. அவ மனசுல என்ன தான் இருக்குன்னு தெரியல" என்று மீண்டும் பெருமூச்சு விட்டார்.
மீண்டும் தன் கையில் இருந்த கோப்பை பார்வையிட்டார் மாயவன்.
"ஏன் ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க?" என்றார் குணமதி.
"நான் என்ன சொல்லணும்?"
"தூயா எவ்வளவு கோவமா இருக்கான்னு தெரியுமா?"
மாயவன் மென்று விழுங்கினார்.
"அவன் எல்லார் தோலையும் உரிக்க போறான்"
"அவ வீடு தொடச்சா, அதுல என்ன தப்பு இருக்கு?"
தன் கைகளைக் கட்டிக் கொண்டு புருவம் உயர்த்திய குணமதி,
"அவ நம்ம கெஸ்ட். ஞாபகம் இருக்கா? அவளோட அப்பா நம்ம தூயா உயிரை காப்பாத்தி இருக்காரு. ஞாபகம் இருக்கா? நம்ம விருந்தாளியை உபசரிக்கிற விதம் இது தானா? நம்ம அந்த பொண்ணை எப்படி பார்த்துகுறோம் அப்படிங்கறத வச்சு தான் நம்ம அவளுக்கு எவ்வளவு நன்றியோட இருக்கோம்னு தெரியும்"
மாயவன் அமைதியானார்.
"பவித்ரா என்னோட வெளிய வர்ற வரைக்கும், நான் எங்கேயும் போறதில்லன்னு முடிவு பண்ணி இருக்கேன்"
"நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம், குணா?" என்றார் பதற்றத்துடன். ஒருவேளை, அவர் வேலை கொடுத்த விஷயம் அவர்களுக்கு தெரிந்து விட்டதா?
"வீட்ல தனியா உக்காந்துகிட்டு இருந்தா, அவ என்னென்னமோ யோசிக்கிறா" என்று சமாளித்தார் குணமதி.
மாயவனின் பதற்றம் அதிகமானது. அவர் பவித்ராவுக்கு வேலை கொடுத்த விஷயம் தூயவனுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ...! அவர் அப்படி செய்திருக்கக் கூடாது. ஆனால், சஞ்சனா அப்படி செய்யச் சொல்லி அவரை கேட்டபோது அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அது அவருடைய நண்பனின் விருப்பமாய் இருக்கும் போது, அவரால் அதை மீறி பேச முடியாது.
குணமதி அறையை விட்டு வெளியே செல்ல நினைத்தபோது,
"குணா" என்று அவரை நிறுத்தினார் மாயவன்.
"சொல்லுங்க"
"ஒருவேளை, எனக்கும் தூயாவுக்கும் நடுவுல ஒரே ஒருத்தரைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்னா, நீ யாரை தேர்ந்தெடுப்ப? எங்க ரெண்டு பேர்ல யாருக்கு சப்போர்ட் பண்ணுவ?"
உள்ளுக்குள் நகைத்துக் கொண்டார் குணமதி.
"சந்தேகமில்லாம தூயாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்" என்று தன் தோள்களை குலுக்கினார் அவர்.
"ஏன்? நீ எப்படி கண்மூடித்தனமா அப்படி சொல்ல முடியும்? யாரோட பக்கமும் சாயிறதுக்கு முன்னாடி, முழு விஷயத்தையும் கேட்டு, யார் மேல தப்பு இருக்குன்னு தெரிஞ்சு, அதுக்கு பிறகு தானே நீ முடிவு எடுக்கணும்?"
"நிச்சயமா அப்படித்தான் செய்வேன். அதனால தான் தூயாவுக்கு சப்போர்ட் பண்ணுவேன்னு சொல்றேன்"
"நீ சொல்றதுக்கு என்ன அர்த்தம்? நான் சரியா இருக்க மாட்டேனா?"
"இருக்கலாம். ஆனா, நிச்சயம் தூயவை விட சரியா இருக்க மாட்டீங்க. நீங்க சரியா இருந்தீங்கன்னா, தூயா உங்களுக்கு எதிரா நிக்க மாட்டான். அவன் அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி, இதுக்கு அப்புறமும் சரி, சரியா தான் இருப்பான்" என்று நம்பிக்கையோடு கூறினார் குணமதி.
"தூயா உன்கிட்ட பேசறதே இல்ல. ஆனாலும் நீ அவனுக்கு தான் சப்போர்ட் பண்ற..."
"அவன் என்கிட்ட பேசறது இல்ல... அதுக்காக அவன் தப்பானவன்னு அர்த்தமில்ல. நான் தான் தப்பானவ. அதனால தான் அவன் என்கிட்ட பேசாம இருக்கான். அவன் என்னை எல்லாருக்கும் மேல அதிகமா நேசிச்சான்... என்னை நம்பினான்... ஆனா, நான் அவன் நம்பிக்கையை பாழாக்கிட்டேன். அதனால தான் நான் இன்னைக்கு இந்த தண்டனையை அனுபவிச்சுக்கிட்டு இருக்கேன்" என்று தொண்டை அடைத்தபடி அங்கிருந்து சென்றார் குணமதி.
பேச்சிழந்து நின்றார் மாயவன்.
வெண்மதியின் அறைக்கு வந்தார் குணமதி. அங்கு பவித்ரா அமைதியாய் அமர்ந்திருந்தாள். அவளிடம் பேசவில்லை குணமதி. அவளது மனதை மாற்ற சஞ்சனா எடுத்த முயற்சி, எந்த அளவிற்கு வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் அவருக்கு. அதற்கு பவித்ரா எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார். அதனால் அவளை உற்று கவனித்தார்.
"மதி, தூயா என்ன சொன்னான்?"
"என்னை பவித்ராவை பார்த்துக்க சொன்னான்"
பவித்ராவை கவனிக்கச் சொல்லி வெண்மதிக்கு சைகை காட்டினார் குணமதி.
"இப்போ உங்களுக்கு எப்படி இருக்கு பவித்ரா?" என்றாள் வெண்மதி.
"பரவாயில்லங்க அக்கா..."
"அதை மட்டும் அவளை கேட்காத, மதி. அவ மறுபடியும் மாப்பை எடுத்து வீடு துடைக்க ஆரம்பிச்சிட போறா. அப்புறம் நம்மள தான் உன் தம்பி திட்டுவான்" என்றார் குணமதி கிண்டலாய்.
வெண்மதி வாய்விட்டு சிரிக்க, பவித்ராவிற்கு வெட்கமாகி போனது.
"மதி, பவித்ரா முழுசா ரெடி ஆகிற வரைக்கும், நம்ம ரெண்டு பேரும் எங்கேயும் போக வேண்டாம். என்ன சொல்ற?"
"ஆமா, மாம். நானும் அதைத்தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்"
"ஆனா ஏன் மா?" என்றாள் பவித்ரா.
"நீ தனியா இருந்தா, வேண்டாததை எல்லாம் யோசிச்சுக்கிட்டே இருக்க. உனக்கு அப்படி ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டாம்னு நினைக்கிறேன்"
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லம்மா" என்றாள் பவித்ரா சங்கடத்துடன்.
"மதி, எனக்கு காபி போட்டு கொடுக்கிறியா?"
"இதோ இப்ப கொண்டு வரேன்" என்று அவள் அங்கிருந்து செல்ல, அவளை பின்தொடர்ந்தார் குணமதி, பவித்ராவை தனியாக விட்டு.
குணமதி எதிர்பார்த்தது போலவே, சில நிமிடங்களில் அவளது அறைக்குள் நுழைந்தாள் சஞ்சனா. சத்தம் செய்யாமல் அங்கு வந்த குணமதி, சுவரில் சாய்ந்து நின்று அவர்கள் பேசுவதை கேட்கலானார்.
"என்ன முடிவு பண்ணியிருக்க, பவித்ரா?" என்றாள் சஞ்சனா.
"எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல"
அதைக் கேட்டு எரிச்சல் அடைந்த சஞ்சனா,
"என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. சொல்லட்டுமா?" என்றாள்.
சரி என்று பவித்ரா தலையசைக்க, அவளது திட்டத்தை கூறினாள் சஞ்சனா. அது குணமதியை பொல்லாத கோபத்திற்கு ஆளாக்கியது. ஆனால் அதே நேரம், அவருக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. சஞ்சனா வலிய சென்று சிங்கத்தின் வாயில் தன் தலையை வைக்கிறாள். சத்தம் செய்யாமல் அந்த இடம் விட்டு நகர்ந்தார், அந்த திட்டத்தை பவித்ரா செயல்படுத்தும் வரை காத்திருக்க முடிவு செய்து.
இரவு உணவை சாப்பிட்டு முடித்த பிறகு, அனைவரும் தத்தம் அறைகளுக்கு சென்றார்கள். வெண்மதி உறங்குவதற்காக காத்திருந்தாள் பவித்ரா. மறுபுறம் மாயவன் உறங்குவதற்காக குணமதி காத்திருந்தார்.
வெண்மதி உறங்கிவிட்டாள் என்று நிச்சயப்படுத்திக் கொண்டு, ஒரு தலையணையையும் போர்வையையும் எடுத்துக்கொண்டு சமையலறைக்கு சென்றாள் பவித்ரா. போர்வையை தரையில் விரித்து, அதில் படுத்துக் கொண்டாள். அதைத்தான் செய்யச் சொல்லி சஞ்சனா அவளுக்கு உபதேசம் செய்திருந்தாள். குழப்பத்தின் உச்சத்தில் இருந்த பவித்ரா, சஞ்சனாவின் உள்நோக்கம் என்ன என்பதை அறியாமல், அவள் கூறியதை செய்து கொண்டிருந்தாள். தன்னை ஒருவர் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை பவித்ரா கவனிக்கவில்லை.
முதல் மாடியில் தன் கைபேசியுடன் நின்றிருந்த குணமதி, தூயவனின் அறைக்கு சென்றார். அவன் இன்னும் உறங்கவில்லை என்று அவருக்கு தெரியும். அவனது அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
அவன் அறையின் கதவை தட்டினார். கதவை திறந்த தூயவன், குணமதியை கூரிய பார்வை பார்த்தான். வெகு நாட்களுக்குப் பிறகு தன் அறையின் வாசலில் நின்றிருந்த தன் அம்மாவை பார்த்து அவன் குழம்பினான். அவனுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று புரியவில்லை. அவன் மீண்டும் கதவை சாத்தி விட நினைத்தபோது, கைபேசியை காதில் வைத்துக் கொண்டு பேசினார் குணமதி.
"மதி, ஒருத்தரோட பொறுப்பை ஏத்துக்கிட்டா மட்டும் போதாது. நம்மளோட எல்லா சென்சையும் அந்த நபர் மேல வச்சு அந்த பொண்ணு... ஐ மீன், பவித்ரா உண்மையிலேயே நல்லா தான் இருக்காளான்னு தெரிஞ்சுக்கணும். அவளோட பொறுப்பை வேற ஒருத்தர்கிட்ட விட்டுட்டு நம்ம அக்கடான்னு உட்கார்ந்து இருக்கிறதை விட, அந்த பொறுப்பை நம்ம கையில எடுத்துக்கறது தான் புத்திசாலித்தனம்" என்று தூயவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி கூறினார்.
தன் அம்மா கூற வருவது என்ன என்பதை புரிந்து கொள்ள முடியாத தூயவன், முகத்தை சுருக்கினான். ஆனாலும் அதைப்பற்றி அவரிடம் நேரடியாக கேட்க அவன் விரும்பவில்லை. அதனால், பவித்ரா நன்றாக இருக்கிறாளா என்பதை தெரிந்து கொள்ள வெண்மதியின் அறையை நோக்கி நடந்தான். குணமதி அவனை பின் தொடர்ந்து செல்லவில்லை. பவித்ரா வெண்மதியின் அறையில் இல்லாததை கண்டு, அவளைத் தேடிக் கொண்டு அவன் மீண்டும் வருவான் என்று அவருக்கு தெரியும்.
வெண்மதியின் அறைக்கு வந்த தூயவன், கதவைத் தட்ட கையை உயர்த்தினான். ஆனால் கதவு திறந்து இருந்ததை பார்த்து, அதை மெல்ல திறந்து உள்ளே எட்டிப் பார்த்தான். அங்கு பவித்ரா இருக்கவில்லை. வெண்மதி நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்த அவன், பவித்ரா குளியலறையில் இருக்கிறாளா என்று தேடினான். குளியலறையின் கதவு வெளிப்புறம் தாழிடப்பட்டிருந்தது. தூயவன் துணுக்குற்றான். பவித்ரா எங்கே சென்றாள்? தன் வீட்டை விட்டு சென்று விட்டாளா? ஏன் அப்படி செய்தாள்? வெண்மதியின் அறையை விட்டு வெளியே வந்து அவளை தேடினான்.
அவன் வரவேற்பறைக்கு வந்த போது, அங்கு குணமதி குழந்தைசாமியுடன் நின்றிருப்பதை கண்டான்.
"பவித்ரா எங்க?" என்றான் அவன் குழந்தை சாமியிடம்.
"அவங்க சமையல் கட்டுல இருக்காங்க" என்றார் குழந்தை.
"என்னது சமையல் கட்டுலயா?" தூயவன் சமையல் அறைக்கு செல்ல முயன்ற போது,
"குழந்தை, பவித்ரா உங்ககிட்ட என்ன சொன்னான்னு அவன்கிட்ட சொல்லுங்க" என்றார் குணமதி.
தன் முகத்தை திருப்பி கேள்விக்குறியுடன் குழந்தையை பார்த்தான் தூயவன். சில அடிகளை எடுத்து அவரை அணுகிய அவன்,
"அவ என்ன சொன்னா?" என்றான்.
குணமதியை தயக்கத்துடன் ஏறிட்டார் குழந்தைசாமி. சொல்லுங்கள் என்பது போல் அவர் சைகை காட்டினார்.
"சொல்லுங்கன்னு சொல்றேன்ல?" என்று பல்லை கடித்துக் கொண்டு கோபமாய் கேட்டான் தூயவன்.
"அவங்களுக்கு வேலை கிடைச்சிருக்குன்னு சொன்னாங்க"
"வேலையா? என்ன வேலை?"
"சமையல்... சமையல்காரி வேலை"
"என்ன்ன்னனனது...?"
"அவளுக்கு அந்த வேலையை கொடுத்தது யாருன்னு அவன்கிட்ட சொல்லுங்க, குழந்தை" என்றார் குணமதி.
*உங்கள் பிரச்சினையில் என்னை ஏன் பாடாய்படுத்துகிறீர்கள்?* என்பது போல் அவரை கெஞ்சலாய் பார்த்தார் குழந்தைசாமி.
"அவளை யாரு சமையல்காரியா அப்பாயிண்ட் பண்ணதுன்னு சொல்லுங்க" என்றான் தூயவன்.
"பெரிய ஐயா"
அவரை கோபமாய் பிடித்து தள்ளிவிட்டு சமையல் அறையை நோக்கி சென்றான் தூயவன். குழந்தைசாமியை அங்கிருந்து செல்லுமாறு சைகை செய்தார் குணமதி. ஒரு பெரிய பிரச்சனை தீர்க்கப்பட இருக்கும் போது, அவர் அங்கு இருக்க வேண்டாம் என்று எண்ணினார் குணமதி.
சமையலறைக்கு வந்த தூயவன், மீன்விளக்கை எரியவிட்டான். அது பவித்ராவின் தூக்கத்திற்கு பங்கம் விளைவித்தது. அவன் ஒரு அரக்கன் போல் தன் விழிகளை விரித்து நின்றான். திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் பவித்ரா.
"நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க, பவித்ரா?"
பதில் கூறாமல் மென்று விழுங்கியபடி எழுந்து நின்றாள் பவித்ரா. ஓர் எட்டில் அவளை அனுகிய அவன், அவள் தோள்களை பற்றி,
"நான் உன்கிட்ட தான் கேட்டுக்கிட்டு இருக்கேன்" என்று அந்த வீடே அதிரும்படி கூச்சலிட்டான்.
அது உறங்கிக் கொண்டிருந்த அனைவரையும் எழுப்பி விட்டது. அனைவரும் தரைதளம் நோக்கி ஓடி வந்தார்கள்.
"என...க்கு ரொம்ப குளி...ரா இருந்தது. அதனால தா...ன் நான் இங்க வந்...தேன்..." என்று தட்டுதடுமாறி கூறினாள் பவித்ரா.
"குளிரா இருந்ததுன்னு இங்க வந்தியா?" என்று கேட்ட அவனது கண்கள், பார்க்கவே பயமுறுத்தும் விதத்தில் இருந்தது.
வேதனையோடு கண்களை மூடினாள் பவித்ரா. அவள் கையைப் பிடித்து, சமையல் அறையை விட்டு அவளை வெளியே இழுத்துக் கொண்டு வந்தான் தூயவன்.
அதே நேரம் மாயவன், வெண்மதி மற்றும் சஞ்சனா மூவரும் வரவேற்பறைக்கு வந்தார்கள். தூயவனின் கோபத்தைக் கண்ட சஞ்சனா நடுக்கம் கொண்டாள்.
"என்ன ஆச்சு தூயா? எதுக்காக அவங்களை இப்படி இழுத்துகிட்டு வர?" என்றாள் வெண்மதி.
"இவ கிச்சன்ல, தரையில படுத்துகிட்டு இருக்கா, கா..."
"ஏன் பவித்ரா?" என்று அதிர்ச்சியோடு கேள்வி எழுப்பினாள் வெண்மதி, அவளுக்கு ஒன்றும் புரியாததால்.
"உங்க ரூம் ரொம்ப குளிரா இருந்துதாம்..."
"ஆனா..."
அவளை மேற்கொண்டு பேசவிடாமல் தன் கையை காட்டி நிறுத்திய அவன்,
"அது உண்மை இல்ல" என்றான் கோபமாய்.
அவனை அதிர்ச்சியோடு ஏறிட்டாள் பவித்ரா. மாயவன் சங்கடத்தில் நெளிய, சஞ்சனாவுக்கு பயம் தொற்றிக் கொண்டது.
"அப்போ எது உண்மை?" என்றாள் வெண்மதி.
"நம்ம குடும்பத்துல ஒருத்தர் அவளுக்கு வேலை போட்டு கொடுத்திருக்காங்க"
"வேலையா?" என்று முகம் சுருக்கினாள் வெண்மதி.
மகிழ்ச்சி இன்மையோடு பவித்ராவை பார்த்து தலையசைத்தான் தூயவன். அவள் தலை குனிந்து கொண்டாள். மென்று விழுங்கிய மாயவன், குணமதியை ஏறிட்டார், அவரது உதவியை நாடி. ஆனால் அவரோ அவர் பக்கம் திரும்பி பார்க்கவும் தயாராக இல்லை.
தன் கையை பிசைந்தவாறு தலை தாழ்த்தினார் மாயவன், தூயவனின் வெப்ப பார்வையை தாங்க மாட்டாமல்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top