1 விதி
1 விதி
மதுரை
தனது கைபேசி கம்பெனியின் புதிய கைபேசிகளின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மதுரைக்கு வந்திருந்த தூயவன், ஹெலிகாப்டரில் இருந்து அலட்டலாய் இறங்கினான். உண்மையை கூறப்போனால், அவன் அலட்டிக் கொள்ளவே இல்லை. அவனது உடல் மொழி, பார்ப்பவரை அப்படி எண்ண வைத்தது. நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் கொண்ட அவனது உடல் மொழி அத்தகையது.
அந்த நிகழ்ச்சி மதுரையின் திறந்தவெளி மைதானம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரம்மாண்டமான ஏற்பாடுகள் முடிந்த நிலையில், நிகழ்ச்சி துவங்க தயாராக இருந்தது அந்த மிகப்பெரிய மேடை. அந்த மேடையில் செய்யப்பட்டிருந்த விளக்கு அலங்காரங்கள் அங்கு வந்திருந்தவர்களை வாயை பிளக்க செய்தது. அறிமுகம் செய்யபட இருந்த கைபேசியின் நிறங்களுக்கு ஏற்ப, அந்த மேடையின் விளக்குகளின் வண்ணம் மாறிக் கொண்டே இருந்தது. அப்படி ஒரு கோலாகல கைபேசி அறிமுக நிகழ்ச்சியை இதற்கு முன் மதுரை நகரம் கண்டதில்லை.
நிகழ்ச்சி ஆரம்பமானது முதல், முன் வரிசையில் அமர்ந்து அந்த நிகழ்ச்சியை பார்வையிட தொடங்கினான் தூயவன்.
இந்தியாவின் பிரசித்தி பெற்ற மாடல்கள் அவனது நிறுவனத்தின் புதிய கைபேசிகளை தங்கள் கையில் ஏந்திய வண்ணம், ஒய்யார நடை நடந்து, அவற்றை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்கள்.
அந்த மாடல்கள் அனைவரும் சிகப்பு நிற உடைகளையே அணிந்து இருந்தார்கள். ஏனென்றால், அது தூயவனுக்கு பிடித்த நிறம். அது தான் அவனுக்கு பிடித்த நிறம் என்பதே பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. ஏனென்றால், அவனது அலுவலக மற்றும் வீட்டின் அறைகள் வெறும் கருப்பும் வெள்ளையுமாகத் தான் காட்சி அளிக்கும்.
அவனுக்கு பிடித்த நிறம் சிவப்பாக இருந்தாலும் கூட, அந்த மாடல்கள் அந்த சிகப்பு நிறத்தை அணிந்து வந்தாலும் கூட, அவர்கள் யாரும் அவனது கருத்தை கவர்ந்ததாய் தெரியவில்லை. ஒரு சாதாரண பார்வையாளர் போலத் தான் அவன் அந்த நிகழ்ச்சியை பார்வையிட்டுக் கொண்டிருந்தான். உயிர்களை இல்லாத, செயற்கையான புன்னகையை தாங்கிய அந்த மாடல்களின் முகங்களை பார்க்கவே அவனுக்கு வெறுப்பாய் இருந்தது.
அப்போது அந்த மேடையின் பின்புறத்தில் சலசலப்பு கேட்டது. ஒரு இளம் பெண் பரபரவென அந்த மேடையின் மீது ஓடி வந்தாள். அந்த மேடையையும், அதன் முன்பு கூடி இருந்த மக்களையும் பார்த்த அவளது முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. அவளை பார்த்த உடனே நமக்கு புரிந்து போனது, அவள் மாடல் அல்ல என்பது. மற்றவர்கள் அணிந்திருந்ததைப் போல அவள் சிகப்பு நிற உடை அணிந்திருக்கவில்லை. அவள் முகத்தில் ஒரு மாடலை போன்ற பாவனையும் இல்லை, மாடல் போன்ற அலங்காரமும் இல்ல. அவள் எப்பொழுது வேண்டுமானாலும் அழுது விடுவது போல் இருந்தாள். பயம் அவள் முகத்தில் குடி கொண்டிருந்தது. யார் அந்த பெண்? அவள் எதற்கு அந்த மேடையின் மீது வந்தாள்?
ஒரு அன்னிய பெண்ணை தன் நிகழ்ச்சி மேடையில் கண்ட தூயவன், தன் இருக்கையை விட்டு எழுந்து நின்றான். யார் இவள்? எதற்காக அவள் மேடைக்கு வந்திருக்கிறாள்? ஒருவேளை அவனது நிகழ்ச்சியை கெடுப்பதற்காக இங்கு வந்தவளாய் இருப்பாளோ? அவனது எதிரிகள் தான், எப்பொழுது அவன் கீழே விழுவான் என்று ஆர்வமாய் காத்திருக்கிறார்களே...!
ஒரே தாவலில் மேடையின் மீது ஏறிய அவன், அந்த பெண்ணை நோக்கி கோபமாய் நடந்தான். அவன் தன்னை நோக்கி வேகமாய் வருவதை கண்ட அவள் பின்னோக்கி நகர்ந்தாள். அவளது மருண்ட விழிகளும், நடுங்கும் மெல்லிய உதடுகளும் அவளது பதற்றத்தை எடுத்துரைத்தன. அவள் அருகில் வந்த அவன், எட்டி அவள் கையை பிடிக்க முயன்றான். அவன் கருத்தை உணர்ந்த அவள், அவன் அவ்வாறு செய்யும் முன், அவன் கையை தட்டி விட்டு, மேடையை விட்டு இறங்கி, வந்த வழியே ஓட்டமாய் ஓடினாள்.
அவள் ஓடுவதை பார்த்த அவன்,
"ஹே யூ... அவளைப் பிடிங்க..." என்று தன் ஆட்களுக்கு கட்டளையிட்டான்.
அவனது பாதுகாவலர்கள் அவளை துரத்தி சென்றார்கள். கொப்பளிக்கும் கோபத்துடன் தன் மேலாளரான பாரியை பார்த்த அவன்,
"அவளைத் தேடி கண்டுபிடிங்க. அவ யாருன்னு எனக்கு தெரியணும்" என்றான்.
"சரிங்க சார்" என்ற பாரி, அங்கிருந்து விரைந்தான்.
தன்னை சிலர் துரத்தி வருவதை கண்ட அந்த பெண், குறிக்கோள் இன்றி ஓடிக்கொண்டிருந்தாள். தான் ஒளிந்து கொள்ள ஏதாவது ஒரு இடம் கிடைக்கிறதா என்பதை இங்கும் அங்கும் தேடியபடி பார்க்கிங் லாட்டிற்குள் நுழைந்தாள். அங்கு நின்றிருந்த கார்களின் பின்னால் மறைந்து மறைந்து மெல்ல நகர்ந்த அவள், அங்கு ஒருவர் தன் காரின் கதவை திறந்து வைத்துக்கொண்டு கைபேசியில் பேசிக் கொண்டிருப்பதை கண்டாள். அது எட்டு பேர் அமரக்கூடிய ஒரு வெள்ளை நிற எஸ்யுவி கார். குனிந்த படி அந்தக் காரை நோக்கி சென்ற அவள், அந்த காரின் கதவை மெல்ல திறக்க முயன்றாள். ஆனால் அது அவளால் முடியவில்லை. அது சென்டர்லாக் செய்யப்பட்டிருந்தது. அதனால் சுற்றிகொண்டு வந்து, ஓட்டுநர் இருக்கையின் வழியாக ஏறி, பின் சீட்டுகளை தாண்டி, உள்ளே சென்று கடைசி இருக்கையின் இடையில் இருந்த இடத்தில், கீழே மறைந்து அமர்ந்து கொண்டாள். தான் தப்பிவிட்டோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
கைபேசியில் பேசிக் கொண்டிருந்த அந்த காரின் ஓட்டுனர், தன் முதலாளி தன் காரை நோக்கி வேகமாய் வருவதை பார்த்து, அழைப்பை துண்டித்து விட்டு, காரை ஸ்டார்ட் செய்ய நினைத்தான். ஆனால் அந்த முதலாளியின் அதிகார குரல் அவனை தடுத்தது.
"வெயிட்..."
மென்று விழுங்கியபடி நின்றார் அந்த கார் ஓட்டுநர். அந்த முதலாளியின் குரலை நாம் இதற்கு முன் கேட்டது போல் தெரிகிறது. சற்று நேரத்திற்கு முன், தன் மேலாளரிடம், தன் நிகழ்ச்சியை கெடுத்த அந்தப் பெண்ணை தேடி கண்டுபிடிக்க சொல்லி கட்டளையிட்ட அதே தூயவனின் குரல் தான் அது. ஆம், அது துயவனின் கார் தான். அவனிடமிருந்து தப்பிய அந்த பெண், அவன் காரில் தான் ஒளிந்து கொண்டிருக்கிறாள்.
தூயவன் மிகவும் கோபமாய் காணப்பட்டான். அவனது நடையின் வேகமே, அவனது கோபத்தின் அளவை பறைசாற்றியது. அந்த ஓட்டுநர் சிறிதும் எதிர்பார்க்காத வகையில், தானே அந்த காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரை கிளப்பிக் கொண்டு சென்றான் தூயவன்.
அவன் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான். நடைபெற்ற நிகழ்ச்சி குறித்து அவனிடம் பல திட்டங்கள் இருந்தன. ஆனால், ஒரு பெண்ணால் அனைத்தும் கெட்டு குட்டி சுவர் ஆகிவிட்டது. யார் அந்த பெண்? எங்கிருந்து வந்தாள் என்றும் தெரியவில்லை, எங்கு சென்றாள் என்றும் தெரியவில்லை, என்று எண்ணியபடி காரை செலுத்திக் கொண்டு சென்றான்.
மதுரையில் இருந்த அவனுக்கு சொந்தமான பங்களாவை நோக்கி காரை செலுத்தினான் தூயவன். பங்களாவின் முன் காரை நிறுத்திவிட்டு, சாவியை கூட எடுக்காமல் வீட்டினுள் சென்றான்.
காரில் ஒளிந்திருந்த அந்த பெண், மெல்ல வெளியே எட்டிப் பார்த்தாள். அவள் வந்த கார், ஒரு மிகப்பெரிய பங்களாவின் முன்னாள் நிற்பதை கண்டாள். இங்கும் அங்கும் எச்சரிக்கையாய் பார்த்தபடி மெல்ல அந்த வீட்டினுள் நுழைந்தாள். சில வேலையாட்கள் அங்குமிங்கும் இருந்தார்கள். அந்த பங்களாவின் விசாலமான மிகப்பெரிய வரவேற்பு அறையில் இருந்த தூண்களின் பின்னால் ஒளிந்து, தன்னை யாராவது பார்கிறார்களா என்பதை கவனித்தாள். யாரோ ஒருவன் கையில் தட்டுடன் மாடிக்கு செல்வதை கண்ட அவள், அருகில் இருந்த அறைக்கு சென்று ஒளிந்து கொண்டாள்.
தூயவன் ஒன்றும் சாப்பிடவும் இல்லை, உறங்கவும் இல்லை. அந்த நிகழ்ச்சியின் தோல்வியை அவனால் தாங்க முடியவில்லை. அறையை விட்டு வெளியே வந்த அவன், முதல் மாடியில் இருந்த மிகப்பெரிய வராண்டாவில் இப்படியும் அப்படியும் உலவிக்கொண்டிருந்தான்.
அப்பொழுது ஒரு நிழல், சமையலறையை நோக்கி நகர்வதை கண்டான் அவன். அங்கு பணியாளர்கள் ஒருவரும் இல்லை. அவனுக்கு நிச்சயம் தெரியும், அங்கு செல்வது நிச்சயம் அவன் வீட்டைச் சேர்ந்த பணியாளர் இல்லை என்று. ஒன்றும் சத்தம் செய்யாமல், மெல்ல படி இறங்கி தரைதளம் வந்த அவன், தன்னை தயார் செய்துகொண்டு சமையலறைக்கு சென்றான். அந்த நபர் மீது பாய்ந்து விடும் நோக்கில் மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தான்.
தன் முன்னால் பார்த்த காட்சியை கண்டு அவன் திகைத்தான். அவனது நிகழ்ச்சி தோல்வி அடைய காரணமாக இருந்த அதே பெண், கட்டுக்கடங்காமல் தன் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்த படி, அங்கு வைக்கப்பட்டிருந்த இட்லிகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அந்தப் பெண்ணின் நிலையை கண்டு, அவன் மனம் இளகியது. அவன் மனதில் தேக்கி வைத்திருந்த கோபம் காற்றில் பறந்தது. அவன் மெல்ல உள்ளே நுழைய, அது அவளது கவனத்தை அவன் பக்கம் திருப்பியது. அவனை கண்ட அவள் முகத்தில் அதிர்ச்சி பிறந்தது. அன்று மாலை, மேடையில் பார்த்த அதே நபர் தான் அவன் என்பது அவளுக்கு புரிந்து போனது. தன்னை சமாளித்துக் கொண்ட அவள் கூறிய வார்த்தைகள் அவனை அடியோடு அசைத்தது
"சாப்பிட்டு மூன்று நாள் ஆச்சுங்க... ரொம்ப பசிக்குதுங்க...!' என்று பரிதாபமாய் அவள் கூறியது, அவன் மனதை கலங்கசெய்தது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top