வேறொன்று...

"இந்த மனிதர்களை திருத்த வேறு வழிகள் கிடையாதா???", என்று ஆரம்பித்தார் கடவுள்.

"அதுக்குள்ள வாங்குன அடி மறந்துருச்சா???", என்றேன் கிண்டலாக.

அவரும் சிரித்துக்கொண்டே, "உண்மையில் இவர்கள் மத்தியில் வாழ்வது கடினம் தான். ஒரு நொடியில் நம்மையே அவர்கள் பக்கம் இழுத்துவிடுகின்றனர். இவர்களை இப்படியே விட்டால் பலர் பாதிக்கப்படுவர். இவர்களை என்ன செய்யலாம்???", என்று கேட்டார்.

"ஒரு வழி இருக்கு...", என்றேன்.

"என்ன வழி???", என்றார்.

"விவசாயம்... இந்த ஜனங்கள அவங்க தொழில மறுபடியும் பாக்க வச்சுட்டா போதும்... அப்பறம் இந்த ஊர்ல பேயே இருக்காது...", என்றேன்.

"அது எப்படி சாத்தியம்??? விவசாயம் செய்தால் பேய் போகுமா???", என்றார் ஆச்சரியமாக.

"கொஞ்சம் இருங்க சொல்றேன்", என்று சொல்லி என் பெட்டியில் வைத்திருந்த ஒரு பேப்பரை எடுத்து வந்து நீட்டினேன்.

"என்ன இது???", என்று கேட்டார். "இது அன்னைக்கி மண்ண எடுத்து டெஸ்ட் பண்ண குடுத்தோமே அந்த டெஸ்ட் ரிப்போர்ட். அங்க இருக்க மண்ணுல....", என்று இழுத்தேன்.

"சொல்... மண்ணில் என்ன???", என்றார் ஆவலுடன்.

"அந்த மண்ணுல ஒண்ணுமே இல்லையாம்... அது சாதாரண கரிசல் மண்ணு தானாம்... அதுல பருத்தி நல்லா வெளையுமாம்... ஆனா, அந்த மண்ணுல இருக்க ஈரப்பதத்த வச்சு அந்த மண்ணு கிட்டத்தட்ட 100 - 150 அடி ஆழத்துல இருந்த மண்ணுன்னு ரிப்போர்ட் குடுத்துருக்காங்க", என்றேன்.

"பிறகு ஏன் அந்த மண்ணை அள்ளவேண்டும்???", என்றார் குழப்பத்துடன்.

"நல்லா யோசிச்சு பாருங்க... 100 - 150 அடி ஆழமா தொண்டீருந்தா இந்த ஊரே இல்லாம போயிருக்கும். இங்க மணல் கொல்லையெல்லாம் நடக்கல... வேற ஏதோ ஒண்ணு நடக்குது. அப்டியே மாட்டிக்கிட்டாலும் மணல் கொள்ளைன்னு சொல்லி தப்பிக்க தான் இப்டி எல்லாத்தையும் தெசை திருப்புறாங்க... இந்த மக்கள ஊருக்குள்ள மொடக்கி வச்சுட்டு ஊருக்கு வெளிய என்னமோ செய்றாங்க... அவங்க எந்த நேரத்துலையும் வெளிய வந்துடக்கூடாதுன்னு தான் இந்த மரம் காணாம போறது, பேய் டிராமா எல்லாம்... அநேகமா அந்த சாமியாருக்கு இதெல்லாம் யாரு பண்றானு தெரிஞ்சுருக்கணும்... இல்லாட்டி அந்த சாமியாரே இதுல சம்பத்தப்பட்டுருக்கணும்...", என்றேன்.

"அதற்கும் இந்த மக்கள் விவசாயம் செய்வதற்கும் என்ன சம்மந்தம்???", என்றார்.

"இருக்கு... இப்போ இங்க யாருமே வராதனால தானே தைரியமா தப்பு பண்றாங்க... ஒருவேளை இங்க விவசாயம் நடந்தா... ஒண்ணு இங்க யாரு இதெல்லாம் பண்றாங்கன்னு தெரிஞ்சுரும்... இன்னொன்னு என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சுரும்... இதுல மொதல்ல சொன்னது நடக்க வாய்ப்பு கம்மி... ஏன்னா நாம தினமும் இங்க வரோம் ஆனா ஆள் நடமாட்டம் இல்ல. அதனால ரெண்டாவது சொன்னது நமக்கு தெரிய வாய்ப்பு இருக்கு...", என்றேன்.

கை தட்டினார்... பெருமையுடன் புன்னகைத்தேன்...

அடுத்த வேலை இந்த மக்களை விவசாயம் செய்ய தூண்டுதலே. அதற்கு என்ன செய்வது என்று யோசிக்கலானேன்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top