மரணயோகம்
மறுநாள் மாலை 6.00 இருக்கும். நான் அந்த ஊர் கோவிலிலிருந்தேன். அப்போது பேச்சிமுத்து வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்தான். முகத்தில் பதற்றத்துடன்.
"என்ன ஆச்சு????? ஏன் இப்டி ஓடி வர?????", என்றேன்
வந்தவன் மூச்சிரைக்க, "அண்ணே நீங்க தங்கீருக்கீங்களே அந்த வீட்டு தாத்தா... தாத்தா...", என்று இழுத்தான். "என்ன ஆச்சு அவருக்கு?????", என்றேன் படபடப்புடன்.
"அவருக்கு ரொம்ப முடியல. நெஞ்சு வலியில துடிக்கிறாரு...", என்றான்.
இதைக்கேட்டதும் எனக்கு இருப்பு கொள்ளவில்லை. கண்ணில் நீர் எப்படி வந்தது என்று கூட தெரியாமல் அவர் வீட்டிற்கு சென்றேன்.
ஊரே அங்கே தான் இருந்தது. நான் உள்ளே சென்றேன். மரண வேதனையில் இருந்தார் பெரியவர். எனக்கும் அவருக்கும் எந்த உறவும் இல்லை. ஆனால் ஏதோ ஒரு இணைப்பு இருப்பது போல தோன்றியது.
அவர் அருகில் சென்று அமர்ந்தேன். வைத்தியர், "டவுன் ஆஸ்பத்திரிக்கி கூட்டீட்டு போனா காப்பாத்த வாய்ப்பிருக்கு. ஆனா...", என்று இழுத்தார்.
"அப்ப கூட்டீட்டு போகலாமே", என்று கண்ணை துடைத்துக்கொண்டு ஏதோ ஒரு உற்சாகத்தில் எழுந்தேன். "அது முடியாது தம்பி", என்றார் வைத்தியர். "இப்ப தானே காப்பாத்தலாம்ன்னு.....", என்று இழுத்தேன்.
"ஆமா தம்பி. சொன்னேன். ஆனா இந்த ஊர் வழக்கப்படி இவர காப்பாத்த முடியாது", என்றார். "ஏன்?????", என்றேன் புரியாதவனாய்.
"மணி 7 ஆகிவிட்டது. இனி இந்த ஊரைவிட்டு யாரும் வெளியே போகக்கூடாது. இந்த உயிர் போகவேண்டும் என்று இருந்தால் போய் தான் ஆகாவேண்டும்", என்று கூறிக்கொண்டே அந்த சாமியார் உள்ளே நுழைந்தார்.
"தத்துவம் பேசுற நேரம் இல்ல சாமி இது. அவர் உயிர் போய்க்கிட்டு இருக்கு. தயாவுசெஞ்சு தடுக்காதீங்க", என்றேன்.
"தம்பி... இது ஆண்டவனின் சித்தம்", என்றார்.
ஆவேசம் கொண்டவனாய், "யோவ்... என்னய்யா பேசிக்கிட்டு இருக்கீங்க??? காப்பாத்த முடியும்னு தெரிஞ்சும் காப்பாத்தாம விட்டுட்டா உங்க கடவுள் சந்தோசப்படுவாரா????? அது பாவம்யா... அத சந்தோசமா ஏத்துக்கிட்ட அது கடவுளே இல்ல", என்றேன்.
"மண்ணில் பிறந்த அனைவரும் ஒருநாள் சாகத்தான் போகிறோம். இந்த ஒரு உயிருக்காக மற்ற உயிர்களை பலிகொடுக்க வேண்டாம்", என்றார்.
அங்கே கிடந்த கத்தியை எடுத்து அந்த சாமியார் கழுத்தில் வைத்தேன், "உங்க வழிலயே வரேன். நீங்களும் ஒருநாள் சாகப்போறவர் தானே. இந்த உயிர காப்பாத்த உங்க உயிர் போனா தப்பில்ல. கெளம்புங்க", என்றேன். எனக்கு அப்போது எப்படி அந்த தைரியம் வந்தது என்று தெரியாது.
ஆனால் அந்த மக்கள் ஆவேசப்பட்டு என்னை அந்த குடிசையில் ஒரு மூலையில் கட்டிவிட்டனர். "நீங்க ரொம்ப பாவம் பண்றீங்க. அந்த சாமியார நம்பாதீங்க", என்று எவ்வளவோ சொல்லியும் யாரும் கேட்கவில்லை. வைத்தியர், கட்டுண்ட நான், உயிருக்கு போராடும் அந்த முதியவர், மற்றும் சிலர் அன்று அந்த வீட்டில் தங்கினர். மற்றவர் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.
கதவுகள் அடைக்கப்பட்டன. கண்ணீருடன் அந்த பெரியவரை பார்த்துக்கொண்டு இருந்தேன். இரவெல்லாம் உறக்கமில்லை. அந்த பேயின் அலறல் சத்தம் கேட்டது. "ஏய்... பேயே... இன்னும் எத்தன நாள் தான் இந்த மக்கள ஏமாத்தப்போற??? இன்னும் இங்க எத்தனபேர் உயிர எடுக்கப்போற???", என்று சோகத்தில் என்னென்னவோ உளறிக்கொண்டிருந்தேன்.
அதிகாலை 4.30 மணி இருக்கும். சூரிய உதயத்தின் முதல் கட்டமாக மெல்லிய வெளிச்சம் தோன்றியது. என் கண் முன் அந்த முதியவர் மரணதேவனால் அழைத்துச்செல்லப்பட்டார். நா வறண்டு கண்கள் சோர்வுற்ற நிலையில் என்னால் அவர் முகத்தை பார்க்க மட்டுமே முடிந்தது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top