மர்ம இரவு

சோர்வு நீங்க உறங்கிய நான் கண்விழிக்கையில் மணி சரியாக மாலை 5.00. வானம் செந்தூர நிறத்தில் காட்சியளித்துக் கொண்டிருந்தது. கதிரவன் மறைந்து பூரண சந்திரனுக்கு வழிவிட்டுக் கொண்டிருந்தான்.

நான் எழுந்து சோம்பல் முறித்துக்கொண்டு வெளியே வந்தேன். சில்லென்ற தென்றல் வீசிக்கொண்டிருந்தது. இந்த ஊரில் தென்றல் கூட வீசுமா என்ற ஆச்சரியம் ஒருநொடி என்னுள் தோன்றி மறைந்தது.

அந்த மண் வீட்டின் திண்ணையில் உட்கார்ந்தேன். ஆங்காங்கே சில கிராமவாசிகளும் கட்டில்களிலும், தரையிலும் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். நான் எனது டைரியில் அன்று நடந்தவற்றை பற்றி எழுதிக்கொண்டிருந்தேன்.

மாலை மறைந்து இரவு முழுமையாக வந்திருந்தது. அப்போது மணி 7.00. திடீரென சொல்லிவைத்தாற்போல அனைவரும் ஒன்றாக எழுந்து தங்கள் வீட்டினுள் சென்று விளக்கை அணைத்துவிட்டனர்.

எனக்கு இடமளித்த முதியவரும் அரக்கப்பறக்க ஓடி வந்து, "தம்பி, வாங்க உள்ள போயிருவோம். மணி 7:00 ஆச்சு", என்றார். ஒன்றும் புரியாதவனாய் அவர் முகத்தை பார்த்தேன். அவர் முகத்தில் ஒரு கலவரம் தெரிந்தது. "உள்ள வாங்க தம்பி. எல்லாத்தையும் காலைல பேசிக்கலாம்", என்றார்.

நானும் அவர் பேச்சிற்கு மரியாதை கொடுத்து உள்ளே சென்றேன். அவர் கதவை அடைத்துவிட்டு விளக்கையும் அணைத்துவிட்டு தலை வரை போர்த்திக்கொண்டு உறங்க ஆரம்பித்தார்.

அப்போது தான் தூங்கி எழுந்திருந்த காரணத்தினாலும், இவர்களிடையே ஏற்பட்டிருந்த கலவரத்தின் பின்னணி என்ன என்ற குழப்பத்தினாலும் எனக்கு தூக்கம் வரவில்லை.

திடீரென ஏதோ ஒரு அகோரமான குரல் கேட்டது. காற்றும் ஏதோ சூறாவளி போல சுழன்று அடித்தது. திகிலடைந்த நான் ஜன்னல் வழியாக யாரென்று பார்க்கலாம் என்று எண்ணி எழுந்தேன். அந்த முதியவர் என் கையை பிடித்து, "வேணாம் தம்பி. போகாதீங்க. அது ரொம்ப ஆபத்து. அது உங்கள ஏதாச்சும் பண்ணிடும். பேசாம தூங்குங்க தம்பி", என்றார்.

"என்னங்க ஐயா... யார் அது??? இங்க என்ன நடக்குது??? நீங்க ஏன் பயப்படுறீங்க", என்றேன் படபடப்புடன். "அமைதியா இருங்க தம்பி. எல்லாத்தையும் காலைல சொல்றேன். இப்ப தூங்குங்க", என்றாவர் மறுபடியும் தலை வரை போர்த்திக் கொண்டார்.

'இங்க ஏதோ இருக்கு. அநேகமா எனக்கு தேவையான கதை இங்க இருக்குன்னு தோணுது. இது என்னவா இருக்கும். ஏன் இங்க எல்லாரும் 7 மணிக்கு மேல வீட்டுக்குள்ளயே அடஞ்சு கெடக்காங்க. கண்டுபிடிக்கிறேன்.....'

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top