மிஸ்டர்.கடவுள்
"விடுங்க தம்பி. அவரு இப்பிடி தான் போகணும்ன்னு இருந்துருக்கு. அதான் போயிட்டாரு. கவலப்படாதீங்க", என்றார் ஒருவர்.
"விதிய யாரால மாத்தமுடியும். போகணும்னு இருந்தா போய் தான் ஆகணும்", என்றார் இன்னொருவர்.
"கடவுளோட ஆசை இதுதான்னா யாரால அத தடுக்கமுடியும்", என்றார் இன்னொருவர்.
"நம்ம கையில என்ன இருக்கு. எல்லாம் அந்த ஆண்டவன் கையில தான் இருக்கு. இதுக்குப்போயி கவலப்படலாமா தம்பி???", என்றார் வேறொருவர்.
இப்படி பலரும் பல காரணங்கள் கூறினர். இதில் அவர்கள் குற்றம் சொன்னது கடவுளை மட்டுமே.
இழப்பை பொறுக்க முடியாமலும், கோபத்தை அடக்க முடியாமலும் எழுந்து பேச ஆரம்பித்தேன், "இப்டி தான் போகணும்னு இருந்துச்சா??? விதியா??? போயிருக்க மாட்டாரு... இந்நேரம் நம்ம கூட சகஜமா பேசிக்கிட்டு இருந்துருப்பாரு. நீங்க மனசு வச்சுருந்தா... நம்ம கையில இருந்துச்சு அவரோட உயிர்.
அவரு சாகல. நாம தான் கொன்னுட்டோம். அதான் உண்ம. யோவ்... கடவுள் ஆசைப்பட்டு அவரு உயிர எடுத்துருந்தா அது கடவுளே இல்லையா... என்னப்பொருத்த வர அந்த ஆளு தான் உண்மையான பேய். அந்த ஆளுக்கு ஏன் மாசாமாசம் திருவிழா??? அந்த ஆளுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய கோயில்??? பேசாம இத போட்டீட்டு இதோ இருக்காரே இந்த மகான்... உங்க சாமியார்... அவர் தானே உங்கள எல்லாம் காப்பாத்துறாரு... அவருக்கு கோயில் கட்டி கும்புடுங்க...", என்றேன்.
"இந்த ஊர்ல என்ன நடக்குதுன்னு கண்டுபிடிக்காம நான் இந்த ஊர விட்டு போக மாட்டேன். அது மட்டும் நிச்சயம். யோவ் கடவுளே... நீ மட்டும் என் முன்னாடி வந்த... அப்பறம் இருக்கு உனக்கு...", என்று கோயில் வாசலில் நின்று கடவுளை திட்டிவிட்டு அங்கேயே அமர்ந்தேன்.
அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர். கோவிலில் இருந்து யாரோ என்னை அழைப்பது போல ஒரு உணர்வு. முதலில் பிரம்மையாக இருக்கும் என்று எண்ணிய நான், மறுபடியும் அந்தக்குரல் கேட்டு உள்ளே சென்றேன்.
கோவிலையே சுற்றி வந்தும் யாரும் என் கண்ணுக்கு தென்படவில்லை. இறுதியாக கருவரைக்குச்சென்றேன். அங்கே இதுவரை பார்த்திராத ஒரு வினோத வெளிச்சம்.
கண்கள் ஒரு நிமிடம் கூசிப்போயின. இராமநாராயணன் படங்களில் வருவது போல திடீரென ஒரு 35-40 வயது மதிக்கத்தக்க ஒருவர் என் முன்னே தோன்றினார். அதே அலங்காரங்களுடன்.
ஆச்சரியம் தான். ஆனாலும், "யார் நீங்க???", என்றேன் அலட்ச்சியமாக. "நான் தான் கடவுள்", என்றார் அவர். கேலிச்சிரிப்புடன், "ஏற்கனவே இங்க ஒரு பேய், காவல் தெய்வம்ன்ற பேர்ல ஒரு சாமியாரு இருக்குங்க... இது பத்தாதுன்னு நீங்க வேற...", என்றேன்.
"உண்மையில் நான் கடவுள் தான்", என்றார். ஏற்கனவே கடவுள் மேல் வெறுப்பில் இருந்த நான், "யாருக்கு கடவுள்??? இப்ப எதுக்கு இங்க வந்தீங்க???", என்று பொரிந்துதள்ளினேன்.
"நீ தானே கூப்பிட்டாய்... அதான் வந்தேன். ஆமாம் உனக்கு ஏன் என் மீது இவ்வளவு வெறுப்பு???", என்றார் அவர். "நல்லா கேட்டுக்கோங்க... நீங்க எனக்கு கடவுள் இல்ல. என்னைப்பொருத்தவர நீங்க கடவுளே இல்ல", என்றேன்.
"ஏன் அப்படி சொல்கிறாய்??? அந்த கிழவரின் மரணத்தாலா???", என்றார். "அது மரணம் இல்ல... கொல...", என்றேன்.
"அவன் ஆயுள் முடிந்தது. இறந்தான். அது அவனது கர்மப்பலன்", என்றார். "யோவ்... என்னய்யா கர்மப்பலன்... காப்பாத்த முடியும்ன்னு ஒரு வழியையும் காட்டீட்டு, காப்பாத்த விடாம கட்டியும் போட வைக்கிற... நீ என்ன விதமான கடவுள்யா???", என்றேன்.
"அது தான் விதி...", என்றார். "சரி உன் வழிக்கே வர்றேன்... இந்த ஊருல என்ன நடக்குதுன்னு நான் கண்டுபிடிச்சு அத சரி பண்ணப்போறேன். நீங்க அதுவரைக்கும் உங்களோட எந்த சக்தியையும் பயன்படுத்தாம, நீங்க யாருன்னு யாருக்கும் சொல்லாம, கோவப்படாம, இங்க நடக்குற எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு போக முடியும்னு எனக்கு நிரூபிச்சுக்காட்டுங்க. அப்ப நான் உங்க மேல இருக்க அபிப்ராயத்த மாத்திக்குறேன். கவலப்படாதீங்க மரியாதைக்கி கொறையே இருக்காது", என்றேன்.
"சரி... நான் தயார்", என்று கூறி சராசரி மனிதனைப் போல உடைக்கு மாறினார். "வெல்கம் மிஸ்டர்.கடவுளே...", என்றேன் சிரித்துக்கொண்டே.
அவரும் சிரித்துக்கொண்டே என் வணக்கத்தை ஏற்றுக்கொண்டார்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top