சந்நியாசி
காலையும் விடிந்தது. இரவு தூங்க வெகுநேரம் ஆனமையால் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த என்னை, முதியவரின் பரபரப்பால் கீழே விழுந்த பாத்திரத்தின் சத்தம் எழுப்பியது.
எழுந்த நான் ஒரு நிமிடம் சுற்றி பார்த்துவிட்டு, முன்னிறவு என்ன நடந்தது என்று ஒருமுறை நினைத்துப் பார்த்துக்கொண்டேன். பின் அந்த பெரியவரிடம், "ஐயா... என்ன காலைலயே இவ்ளோ பரபரப்பா கெளம்பிக்கிட்டு இருக்கீங்க", என்றேன்.
"நீங்களும் வாங்க தம்பி. எல்லாத்தையும் போற வழில சொல்றேன்", என்றார் அவர். நானும் எழுந்து முகத்தை கழுவிக்கொண்டு அவர் நீட்டிய துண்டில் துடைத்துவிட்டு அவருடன் நடந்தேன்.
அவர் நடந்த பாதையில் நானும் செல்ல, அங்கே ஒற்றை ஆலமரம் விழுதுகளை பரப்பி ஆடம்பரமாக நின்றது. பார்க்கும்பொழுதே மிகவும் பழமையான மரம் என்று புரிந்தது. அநேகமாக அவ்வூர் பஞ்சாயத்து நடக்கும் இடம் அதுவாகத்தான் இருக்கும்.
எங்களுக்கு முன்னரே அங்கே அந்த ஊர் மக்கள் கூட்டமாக குழுமியிருந்தனர். நானும் அந்த முதியவரும் அந்த கூட்டத்தில் சென்று ஐக்கியமானோம்.
மரத்தடியில் யாருக்காக காத்திருக்கின்றனர்?????
பொறுமையிழந்து நான், "ஐயா... ஏன் எல்லாரும் இங்க உக்காந்துருக்கீங்க?? நாம இங்க வந்து 1மணி நேரம் ஆகுது. அப்டி யாருக்காக இங்க காத்துருக்கீங்க??", என்றேன்.
"தம்பி நாங்க இங்க காத்துருக்கது எங்க கொலசாமிக்கு. எங்க ஊர காக்குற காவல் தெய்வத்துக்கு. இப்ப வருவாரு பாருங்க எங்க சாமி", என்றார் அந்த பெரியவர்.
'என்னடா இது. சாமி, தெய்வம் என்று சொல்கிறார். வருவார் என்றும் சொல்கிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லையே. வரப்போவது சாமியா ஆசாமியா????? பொறுத்திருந்து பார்ப்போம்', என்று மனதில் நினைத்துக்கொண்டு காத்திருந்தேன்.
திடீரென்று எல்லோரும் எழுந்தனர். நானும் எழுந்தேன். எல்லோரும் 'வந்தவரை' வணங்கினர். யார் இவர்???
காவி உடை. தலை முதல் கால் வரை ருத்திராட்ச மாலை. ஒரு கையில் கமண்டலமும், மற்றொரு கையில் தண்டமும் வைத்திருந்தார். முகமெல்லாம் முடி. தாடி தரையை தோடுமளவு வளர்ந்திருந்தது. நெற்றியில் பட்டை போட்டிருந்தார்.
சந்நியாசி போல தெரிந்தாலும், அவரது தோற்றத்தில் ஏதோ ஒரு குறை இருப்பது போல உணர்ந்தேன். அவரை எங்கோ பார்த்தது போல ஒரு ஞாபகம் வேறு வந்து வந்து போனது. யாராக இருக்கும்??? சிந்தித்துக்கொண்டே அவர் என்ன பேசுகிறார் என்று கேட்க ஆவலானேன்.
அவர் நேரே நடந்து அந்த ஆலமரத்தை நோக்கி சென்றார். அங்கே அவருக்கென அமைக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தார்.
அவர் அமர்ந்ததும் மக்கள் அனைவரும் அமர்ந்தனர். அவர் பேச ஆரம்பித்தார். "என்ன மக்களே... அனைவரும் நலமா???", என்றார். "நீங்க இருக்கப்ப எங்களுக்கு என்ன சாமி கொற வரப்போகுது", என்றார் ஒருவர். "மிக்க மகிழ்ச்சி", என்று தாடியை வருடிக்கொண்டே சொன்னார் அந்த சந்நியாசி.
"யாரும் 7 மணிக்கு மேல் வெளியே வருவதில்லையே??", என்று வினவினார் அவர். "இல்ல சாமி. உங்க வார்த்தைக்கி கட்டுப்பட்டு யாரும் 7 மணிக்கி மேல தலையை கூட வெளிய காட்டுறது இல்ல," என்றார் இன்னொருவர்.
"எங்களுக்கு எப்ப சாமி இதுல இருந்து விடுதலை கெடைக்கும்??", என்று ஏக்கத்துடன் கேட்டார் ஒரு கிராமவாசி. "கூடிய விரைவில் நன்மை பிறக்கும். இருள் நீங்கி வெளிச்சம் வரும் நேரம் தொலைவில் இல்லை.", என்று தத்துவ மழை பொழிந்தார் அந்த தாடியார்.
"நீங்க உங்க சத்தியால எங்கள காப்பாத்த கூடாதா சாமி?", என்றார் எனக்கு அடைக்கலம் அளித்த பெரியவர். "நான் காப்பாற்றினால் பிறகு இறைவனின் சக்தி அறியாமல் போவீர்கள். எல்லாம் அவன் செயல். காத்திருங்கள்.", என்று கூறிவிட்டு அவர்களை ஆசிர்வதித்துவிட்டு புறப்பட்டார் அவர்.
'ஆக, இந்த கிராமமே 7 மணிக்குமேல் முடங்கிக்கிடப்பதற்கு இந்த தாடி ஆசாமியும் ஒரு காரணம்', என்பது புரிந்தது.
ஆனால் உண்மையில் யார் இந்த சாமியார்? இவருக்கும் இந்த ஊருக்கும் என்ன சம்மந்தம்? இவ்வூர் இப்படி இருக்க காரணம் என்ன? இரவில் வருவது யார்?
"தம்பி நீங்க கெளம்புங்க இன்னும் 1 மணி நேரத்துல உங்களுக்கு பஸ் வந்துரும்", என்று சொல்லி சிந்தனையில் இருந்த என்னை எழுப்பினார் அந்த முதியவர். "இல்ல ஐயா... எனக்கு இங்க இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு. நான் உங்க கூட தங்குறது உங்களுக்கு தொந்தரவு இல்லையே??", என்றேன். "அட தாராளமா தங்குங்க தம்பி. எத்தன நாள் வேணாலும் தங்கிக்கோங்க", என்று ஒப்புதல் அளித்தார்.
'இனிமே தான் எனக்கு இங்க வேலை அதிகம்', என்று எண்ணிக்கொண்டே நடக்க ஆரம்பித்தேன்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top