சாபம்...

ஓரிடத்தில் கூட்டமாக இருந்ததை கண்டு அங்கே சென்றோம்.

'ஆகா நான் எதிர்பாத்தது இதான். இதுக்கு இவரு என்ன காரணம் சொல்றாருன்னு பாக்குறேன்', என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.

"ஆமாம், என்ன நடக்கிறது இங்கே???", என்று கேட்டார் கடவுள். "இதுவா... இதுக்கு பேர் தான் சாமி ஆடுறது", என்றேன்.

"அப்படியென்றால் என்ன???", என்று கேட்டார். "அதாவது... மனுஷங்க மேல சாமி வந்து எறங்கி குறி சொல்லுமாம். அதுக்கு பேரு தான் சாமி ஆடுறது", என்றேன் சிரித்துக்கொண்டே.

"அது சரி சாமி... ஒரே நேரத்துல எப்டி 10-15பேர் மேல எறங்குறீங்க??? அதுவும் மேளம் அடிச்சா தான் வருவேன்னு அடம் பிடிக்கிறீங்களாமே...", என்று கேட்டேன் கிண்டலாக.

"இது என்ன முட்டாள்தனம். இந்த மனிதர்கள் மீது நாங்கள் யாரும் இறங்குவதில்லை. தங்களை தாங்களே கடவுளாக பாவிதித்துக்கொண்டு இவர்கள் செய்யும் செயல்களுக்கு நானா பொறுப்பு???", என்றார் ஆத்திரமாக.

"சரி கோவப்படாம வாங்க... நாமளும் குறி கேப்போம்", என்று அவரையும் அழைத்து சென்றேன்.

அங்கே ஒரு பெண் சாமி ஆடிக்கொண்டிருந்தார். அவர் முன் சென்று அமர்ந்தோம். அந்தப்பெண் கடவுளை பார்த்து, "நீ பெரிய பாவம் பண்ணீருக்க... உன்ன பிடிச்ச பாவம் உன்ன சும்மா விடாது... 6 மாசத்துக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 100 பேருக்கு வீட்டுல சாப்பாடு போடு... வர்ற ஆடி அமாவாசைக்கு என் கோயில்ல தீ மீதி... அப்ப தான் உன் பாவத்தோட உக்கிரம் குறையும்", என்று கூறி அவருக்கு விபூதி பட்டை இட்டு அனுப்பினார். எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

"நாங்க பக்கத்து ஊரு. அந்த ஊர் நெலம எல்லாத்துக்கும் தெரியும். அதுக்கு என்ன பரிகாரம் பண்ணனும்னு சொல்லுங்க", என்றேன்.

"அந்த சாபம் தீராது. இவனோட பாவம் தான் அந்த ஊரையே படுத்துது. இவன் நான் சொன்னத எல்லாம் செஞ்சா அந்த ஊரு மாற வாய்ப்பு இருக்கு...", என்றார் அந்தப்பெண்.

சிரிப்பை அடக்கிக்கொண்டு எழுந்து வந்தேன். கொஞ்ச தூரம் வந்த பிறகு விழுந்து விழுந்து சிரித்தேன். "ஏன் சிரிக்கிறாய்???", என்று கேட்டார்.

"அந்த அம்மா உங்கள பாத்து சொன்னத நெனச்சா என்னால சிரிக்காம இருக்க முடியல. உங்க பாவம் தான் அந்த ஊரையே ஆட்டிப்படைக்குதாம். கடவுளே பாவின்னு சொல்லீட்டாங்களே", என்று கூறி சிரித்தேன்.

"உண்மையிலேயே நான் பாவம் செய்தவனா??? என்னால் தான் இந்த ஊர் இப்படி இருக்கிறதா??? அந்தப்பெண்மணி சொன்னதை செய்தால் அந்த ஊர் மாறிவிடுமா??? நான் வேண்டுமானால் அந்தப் பெண் சொன்னதை இன்றே செய்யத்தொடங்கட்டுமா???", என்று கேட்டார்.

'ஆகா... கடவுளையே ஏமாத்துற உலகம்டா இது', என்று எண்ணிக்கொண்டு, "பாத்தீங்களா... உங்களையே நம்ப வச்சுட்டாங்க... நம்ம நாட்டுல நடிகர்கள் ரொம்ப அதிகம்... எல்லாருமே திறமையான நடிகர்கள்... ஒரு நிமிஷம் உங்களையே யோசிக்க வச்சாங்க பாத்தீங்களா... இப்டி தன் நம்ம மக்களும் நம்பி ஏமாந்து போறாங்க... யார நம்புறதுன்னு தெரியாம யார்யாரையே நம்பி இப்ப ஒரு கிராமமே இந்த நெலமைல இருக்கு...", என்று கூறி புன்னகைத்தேன். இம்முறை காயத்துடன்.

"நீங்க ஏதோ கேட்ட மாதிரி வழிய வந்து கோவில் கட்டி பூஜை பண்றது. பாலாபிஷேகம் தேனாபிஷேகம்னு பண்ணி பாலையும் தேனையும் வீணாக்குறது. ஆனா, அதுக்காக ஏங்குற மக்களுக்கு அத குடுக்க மனசு வராது. தீ மிதிக்கிறேன் அலகு குத்துறேன்னு நம்ம உடம்பையும் வருத்திக்கிட்டு மத்தவங்களையும் வருத்திக்கிட்டு. அப்பறம் வந்து சாமி எனக்கு அது குடுக்கல இது குடுக்கலன்னு பொலம்புறது. இதுவே நம்ம ஜனங்களுக்கு வழக்கமா போச்சு", என்றேன் கோபமாக.

"நான் தான் முட்டாள்தனமாக படைத்துவிட்டேன். உன்னைப்போன்ற படித்த இளைஞர்கள் இவர்களுக்கு புரியவைக்கலாமே", என்று கேட்டார்.

"எங்க??? ஏதாச்சும் பேசுனாலே கைய கால கட்டி ஓரத்துல தூக்கி போட்டுடுறாங்க. அதையும் தாண்டி பேசுனா சாமி குத்தம், பாவம், நீங்க இன்னைக்கி இருந்துட்டு நாளைக்கி போயிருவீங்க நாங்க தானே அனுபவிக்கணும் அப்டி இப்டின்னு சொல்லி வாய அடைச்சுடுறாங்க. இவங்க யாரும் சொன்னா புரிஞ்சுக்க மாட்டாங்க. பட்டா தான் திருந்துவங்க. இந்த கிராமத்த மட்டும் சரி பண்ணீட்டா அப்பறம் பாருங்க", என்று சொல்லி அவரை அழைத்துக்கொண்டு தேடுதல் படலத்தை தொடர்ந்தேன்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top