எல்லாம் அவன் செயல்...

கண்ணை மூடியதும் உயிர் என்னை விட்டு வெளியேறுவதாக உணர்ந்தேன். கால்கள் ஓய்ந்தன. உடல் உணர்ச்சியை இழந்துகொண்டிருந்தது. கண் இருண்டது. காதில் என் இதயத்துடிப்பு மெல்ல குறையும் சத்தம் மட்டுமே கேட்டது.

இறுதியில் உயிரிழந்து கீழே விழுந்தேன். என்னை ஏதோ ஒரு கை தாங்கி பிடித்து. கண்கள் சோர்வாக இருந்தன. இருந்தாலும், கண் விழித்துப்பார்த்தேன். கண் கூசும் அளவிலான வெளிச்சம். அந்த வெளிச்சத்தின் நடுவில் கடவுள் நின்றார். என்னை தங்கிப்பிடித்தவர் அவர் தான்.

"என்னால முடிஞ்சா அளவுக்கு போராடுனேன்... ஆனாலும் முடியல... என்ன மன்னிச்சுறுங்க கடவுளே... உங்களையும் கஷ்டப்பட வச்சுட்டேன்... இப்போ என்னால எதுவும் பண்ண முடியல... நான் செத்துட்டேன்...", என்றேன் கண்ணில் நீருடன்.

"நீ இன்னும் சாகவில்லை... உயிருடன் தான் இருக்கிறாய்... நீ இந்த மண்ணில் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது...", என்றார் கடவுள்.

அப்பொழுது தான் புரிந்தது நான் இன்னும் சாகவில்லை என்று. இப்பொழுது ஏதோ புது பலம் வந்தது போல இருந்தது. ஒருவேளை கடவுள் இப்பொழுது கடவுளாக இருப்பதனால் கூட இருக்கலாம்.

யாரோ அலறும் சத்தம் கேட்டது. யாரென்று சுற்றிப் பார்த்தேன். யாரும் இல்லை. ஆனால் அலறல் மிக அருகில் கேட்பது போல இருந்தது.

யாராக இருக்கும்... மேலே பார்த்தால் ஒரு ஆச்சரியம். அந்த சாமியார் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தார். அந்த அலறலுக்கு சொந்தக்காரர் அவர் தான்.

"என்ன சாமி... மேல என்ன பண்றீங்க??? கீழ வாங்க...", என்றேன் நக்கலாக.

"என்ன கீழ எறக்கி விடுங்க... நான் யாருன்னு தெரியாம இப்டி பண்றீங்க... கீழ எறங்கி வந்தா என்ன ஆகும்னு எனக்கே தெரியாது...", என்று மிரட்டினார்.

"யோவ்... உன்ன மரத்துல கட்டி தொங்க விட்டுருக்கோம்னு நெனச்சியா??? அந்தரத்துல தொங்குற... இன்னுமா உன் கொழுப்பு அடங்கல??? இன்னும் இவரு யாருன்னு தெரியலையா??? இவரு தான் கடவுள்... நீ சொன்னியே என்னோட கூட்டாளி... கிழட்டு கூட்டாளி... அவரு வேற யாரும் இல்லை கடவுள் தான்...", என்றேன்.

"என்னய்யா மெரட்டுறீங்களா??? இப்டி தொங்கவிட்டு நீங்க சொன்னா நான் நம்பீருவேனா...", என்றார் திமிராக.

"மிஸ்டர்.கடவுளே... இந்த ஆளு இப்டி கேட்டா எதுவும் சொல்ல மாட்டாரு... கொஞ்சம் நம்ம இராம.நாராயணன் படத்துல வர மாதிரி ஏதாச்சும் படம் காட்ட முடியுமா???", என்றேன் நக்கலாக.

நான் சொன்ன மாத்திரத்தில் அந்த சாமியார் அந்தரத்தில் ஏதோ சுழல் காற்றில் சிக்கிய காகிதம் போல சுழன்றார்.

"ஐயோ... என்ன விட்டுருங்க... நான் எல்லா உண்மையையும் சொல்லீருறேன்... ஐயோ... கடவுளே...", என்று கத்தி கதறினார்.

"மிஸ்டர்.கடவுள்... போதுமே... நிப்பாட்டிக்கலாம்...", என்றேன்.

சுழல்வது நின்றது.

"சொல்லுங்க சாமியாரே... எல்லா உண்மையும் சொல்லுங்க...", என்றேன்.

"நான் சாமியாரே இல்ல...", என்று கூறி தாடியையும் ஜடாமுடியையும் எடுத்தார்.

"அடப்பாவி... உன்ன எங்கயோ பாத்துருக்கேனே...", என்றேன்.

"ஆமா சார்... ஒரு தடவ உங்க கதைக்காக ஒரு திருட்டு கும்பல் கிட்ட பேட்டி எடுத்தீங்களே...", என்று இழுத்தான்.

"ஆமா... அங்க கூட எல்லாரும் உன்ன போட்டு ஒதச்சாங்க நான் வந்து வெளக்கி விட்டேனே... உன் பேரு கூட... புலி... புலி தானே...", என்றேன்.

"ஆமா சார்... புலி தான்...", என்றான்.

"நீ எங்க இங்க??? நீ எதுக்குமே ஒதவாத ஆளுன்னு தான் உன்ன போட்டு பொரட்டி எடுத்தங்க... நீயாடா இந்த ஊர இப்டி மாத்துன???", என்றேன்.

"ஆமா... என்ன மதிக்காதவங்களுக்கு நான் யாருன்னு காட்டணும்னு முடிவு பண்ணேன். இந்த நெலத்துல இருந்து ஜெயிலுக்கு ஒரு சொரங்கப்பாத போட்டேன். அதுக்கு இந்த ஊர் ஜனங்க எடைஞ்சலா இருக்கக்கூடாதுன்னு தான் இந்த பேய் நாடகம்...", என்றான்.

"ஏன்டா... எல்லாரும் ஜெயில்ல இருந்து வெளிய வர சொரங்கப்பாத தோண்டுவாங்க... ஆனா நீ உள்ள போக தோண்டீருக்கியே...", என்றேன்.

"உள்ள இருக்க சில பெரிய தீவிரவாதிகள வெளிய தப்பிக்க வச்சு அவங்க கூட்டத்தோட தொடர்பு ஏற்படுத்திக்கிட்டேன். அதே மாதிரி திருடுற பொருள் எல்லாத்தையும் ஜெயில்ல தான் வச்சுருக்கேன்...", என்றான்.

"செம்ம மூளைடா உனக்கு...", என்று கூறி கை தட்டினேன்.

"இவனை என்ன செய்யப்போகிறாய்??? ஊர் மக்களிடம் இவனை ஒப்படைத்து உண்மையை சொல்ல வைக்கலாமா???", என்றார் கடவுள்.

"இல்ல இவன போலீஸ்ல ஒப்படச்சுறுவோம்... உண்மைய நீங்களோ இல்ல இவனோ வந்து சொன்னாகூட அத நம்புற மனநிலைல அவங்க இல்ல...", என்றேன்.

"வேறு என்ன செய்யப்போகிறாய்... இவர்களை இப்படியே விட்டுவிடப் போகிறாயா???", என்றார் அவர்.

"அதுக்கு நான் வேற ஒரு ஐடியா வச்சுருக்கேன்...", என்று கூறி இரவோடு இரவாக அந்த சாமியாரை போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு அந்த நிலத்தை நான் பொறுப்பேற்று சரி செய்வதாக சொல்லி அனுமதி பெற்றேன்.

காலை விடியும் முன் நானும் கடவுளும் எரிந்த வீட்டின் வாசலை அடைந்தோம். மக்கள் எங்களை சுற்றி சூழ்ந்தனர். நான் கண்ணீருடன் பேச ஆரம்பித்தேன்.

"எல்லாரும் என்ன மன்னிச்சுறுங்க... நான் தப்பு பண்ணீட்டேன்... அந்த சாமியார் உண்மையிலேயே தெய்வம்... அவரு தான் இந்த ஊர காப்பாத்துன சாமி...", என்றேன்.

நான் பேசுவதை பார்த்து கடவுள் ஒரு நிமிடம் திகைத்து நின்றார்.

"இப்பவாச்சும் எங்க சாமிய புரிஞ்சுக்கிட்டீங்களே...", என்றார் ஒருவர்.

"ஆமா... அவரோட உயிரக்குடுத்து இந்த ஊர காப்பாத்தியிருக்காரே...", என்றேன் கண்ணீருடன்.

"என்ன சொல்றீங்க தம்பி... சாமியாருக்கு என்ன ஆச்சு???", என்றனர் கலக்கத்துடன்.

"ராத்திரி அந்த பேய் எங்கள கொல்லப்பாத்துச்சு... வீட்டோட எரிக்க பாத்துச்சு... நாங்க தப்பிச்சு ஓடுனோம்... அதோட சத்தியால எங்கள புதைகுழிக்குள்ள எறக்கீருச்சு... அப்ப சாமியார் வந்து அந்த பேயோட போராடி எங்கள காப்பாத்துனாரு. அந்த சண்டைல சாமியார் அந்த பேயோட சேந்து சாம்பலாயிட்டாரு... அந்த சாம்பல் உங்க வயல்ல எல்லாம் கலந்துருச்சு.

கடைசியா சாமி என்ன பாத்து... தம்பி நான் இந்த மண்ணுல வாழுறேன்... விவசாயம் பண்ணி என்ன காப்பாத்துங்க... நான் உங்க கூடவே இருப்பேன்னு சொன்னாரு...", என்றேன் அழுகையுடன்.

"ஐயோ சாமி எங்கள காப்பாத்த உங்க உயிர குடுத்துட்டீங்களே... என்னங்கடா பாத்துக்கிட்டு நிக்கிறீங்க... எல்லாரும் வாங்கடா விவசாயம் பண்ண போவோம்... இதுதான் நம்ம சாமியோட கடைசி ஆசை... அத நாம நிறைவேத்தனும்...", என்றார் ஒருவர்.

அவர் பேச்சை கேட்டு பலர் ஏர் கலப்பையை தூக்கிக்கொண்டு கிளம்பினர்.

நான் கண்ணை துடைத்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தேன்.

"அருமையான நடிப்பு...", என்று கூறி கை தட்டினார் கடவுள்.

"இனிமே பாருங்க... அங்க சொரங்கப்பாதை இருந்த அடையாளமே இருக்காது... விவசாயம் நல்லா நடக்கும்...", என்று கூறினேன்.

"அப்பறம்... நீங்க நிம்மதியா உங்க இடத்துக்கு போகலாம் கடவுளே...", என்றேன்.

"நீ என்ன செய்யப்போகிறாய்???", என்றார் அவர்.

"அடுத்த ஊருக்கு கெளம்ப வேண்டியது தான்...", என்று கூறி கண்ணடித்தேன். "நானும் உன்னுடன் வரலாமா???", என்றார்.

இருவரும் கை கோர்த்தோம்...

எங்கள் பயணம் (மறுபடியும்) தொடங்கியது...

இப்பொழுது 'என்னுடன் GOD...'

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top