என்னமோ நடக்குது...

"வாங்க மிஸ்டர்.கடவுள் இந்த ஊர சுத்திப்பாக்கலாம்", என்றேன். அவரும் கிளம்பினார். இருவரும் ஊர் எல்லை பக்கம் நடந்தோம்.

"இந்த கிராமவாசிகளின் தொழில் என்ன???", என்று கேட்டார் அவர். "இதுக்கு முன்னாடி விவசாயம். இப்போதைக்கு உங்களுக்கு பூஜை பண்றது", என்றேன் கிண்டலாக.

"விளையாடாதே", என்றார். "உண்மையா தான் சொல்றேன். இப்ப இவங்க விவசாயம் பண்றது இல்ல. வெட்டியா இருக்கது தான் இவங்களோட முழுநேர வேலை இப்ப", என்றேன்.

"ஏன் விவசாயத்தை விட்டுவிட்டனர்???", என்றார். "ஆமா எல்லாம் உங்களால தான் மிஸ்டர்.கடவுளே", என்றேன்.

"என்னாலா??? நான் என்ன செய்தேன்???", என்றார் குழப்பத்துடன். "இந்த ஊர்ல மழை வந்து 3 வருஷம் ஆச்சு. அதுக்கு காரணம் நீங்கதானே...", என்றேன்.

"ஏனப்பா நீயே இந்த ஊரை சுற்றிப்பார். இங்கே எங்காவது ஒரு மரம் கண்ணுக்கு தென்படுகிறதா??? வெயிலுக்கு ஒதுங்கக்கூட இங்கே நிழல் இல்லை. நீ படித்த இளைஞன் தானே. மரம் இருந்தால் மழைக்கு பஞ்சமில்லை என்று படித்ததில்லையா நீ???", என்று கேட்டார்.

"நான் படிச்சிருக்கேன். ஆனா இந்த ஊர் ஜனங்களுக்கு தெரியணும். மரம் வளத்தா பேய் தூக்கீட்டு போகுது. மழையே இல்ல அதுக்கு சாமி தான் காரணம். சாபம் தான் காரணம்னு சொல்லிக்கிட்டு விவசாயத்த 3 வருஷமா கெடப்புல போட்டுட்டாங்க", என்றேன்.

"பேய் பிசாசை எல்லாம் நம்பும் அளவிற்கு முட்டாள்களா இந்த மக்கள்???", என்று கேட்டார். "நான் கூட தான் முன்னாடி நம்பல. இப்ப கடவுள் நீங்களே இருக்கப்ப பேய் இருக்காதான்னு ஒரு சந்தேகம் இருக்கு எனக்கு", என்றேன் சிரித்துக்கொண்டே.

"பேய் மரத்தை தூக்குமா???", என்றார். "அத கண்டுபிடிக்க தான் இப்ப இங்க வந்துருக்கோம்", என்றேன்.

"இங்கே மரமே இல்லையே. பிறகு எப்படி கண்டுபிடிப்பாய்???", என்று கேட்டார். "மரம் இல்ல. ஆனா அந்த பேய்க்கு உருவம் இருக்குல்ல", என்றேன்.

அவர் முகத்தை பார்க்கும்பொழுதே குழப்பத்துடன் இருக்கிறார் என்று புரிந்தது. "உருவத்தோட இருக்க எல்லா பொருளுக்கும் ஒரு கணம் இருக்கும். அப்டீன்னா அந்த பேய் இங்க மரத்த தூக்குறப்ப அதோட கால் தடம் இங்க பதிஞ்சுருக்கும். மரத்த தூக்கி நடக்குறப்போ இன்னும் அந்த தடம் ஆழமா பதிஞ்சுருக்கும். அதே மாதிரி அந்த பேய் வேற ஏதாவது தடையத்த விட்டுட்டு போயிருக்கவும் வாய்ப்பிருக்கு. அத தான் நாம இப்ப தேடப்போறோம்", என்றேன்.

அவரும் புரிந்தது போல் தலையாட்டி என்னுடன் நடந்தார். அந்த இடம் எங்கும் மரங்கள் இருந்ததற்கு அடையாளங்கள் பல இருந்தன.

நான் மண்ணில் அமர்ந்து ஆராய ஆரம்பித்தேன். எங்கும் மரத்தூள் சிந்திக்கிடந்தது. பாதியாக நின்ற மரங்களை தொட்டுப்பார்த்தேன். எனக்கு கிடைத்த சில மரத்துண்டுகளை பத்திரப்படுத்திக்கொண்டேன்.

"இதையெல்லாம் பார்த்தால் பேய் தூக்கிப்போனது போல இல்லையே", என்றார் அவர் ஒரு மரத்தை தடவிக்கொண்டு. "இந்த மரத்தையெல்லாம் வெட்டி எடுத்துருக்காங்க. ஆனா ஏன்னு தெரியல... சரி வாங்க வயல் பக்கம் போவோம். அங்க கொஞ்சம் வேலை இருக்கு", என்று சொல்லி அந்த இடத்தை சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு புறப்பட்டோம்.

பல நாட்களாக பயன்படாமல் கிடந்த நிலம். கருவேலமரங்களாலும், புற்றுகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அருகே சென்று மண்ணை கையில் எடுத்து பார்த்தேன். சரியான கரிசல் மண். பருத்தி விதைத்தால் நல்ல வருமானம் கிடைக்கும். பல நாட்கள் பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் ஈரம் காயாமல் இருந்ததை உணர்ந்தேன்.

"இங்க ஏதோ தப்பு நடக்குது", என்றேன். "என்ன சொல்கிறாய்???", என்றார் அவர். "நான் வந்தப்ப இந்த வயல்ல வந்து நிண்டேன். அப்ப இருந்த உயரம் இப்ப இந்த நெலத்துல இல்ல", என்றேன்.

அந்த மண்ணை கொஞ்சம் அள்ளிக்கொண்டு, "இங்க வேற ஏதோ பெரிய விஷயம் நடக்குது. அத கண்டுபிடிக்கணும்", என்று கூறி நடந்தேன்.

இங்கே நடப்பது அவருக்கு தெரிந்தது தான். இருந்தாலும் அவரது சக்தியை பயன்படுத்தாமல் இருப்பதால் அடுத்து நான் என்ன செய்யப்போகிறேன் என்று அவருக்கு தெரியாது. அதுவும் நல்லது தான்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top