என்ன சத்தம் இந்த நேரம்??...

இப்படியே 3 மாதங்கள் ஓடின. நாங்கள் நாட்டுவைத்த மரங்கள் கொஞ்சம் வளர்ந்து நின்றன. தினமும் நாங்கள் வயலில் வேலை செய்வதை இந்த மக்கள் கண்டனர். ஆனாலும் எங்களை தவிர யாரும் அந்த நிலத்தில் கால் வைக்க முன்வரவில்லை.

நாங்கள் வயலில் விவசாயம் செய்யக்கூடாது, மரங்கள் வளர்க்கக்கூடாது என்று பலர் கூறினார்.

"தம்பி... நீங்க வெளியூர்... இன்னைக்கி இருப்பீங்க, நாளைக்கி வேற ஊருக்கு போயிருவீங்க... ஆனா இங்க இருந்து கடைசி வர கஷ்டப்பட போறது நாங்க தான். தயவு செஞ்சு விவசாயம் பண்ணாதீங்க... மரம் வளக்காதீங்க... அப்பறம் அந்த பேய் இங்கயே தங்கீரும்...", என்றார் ஒருவர்.

"இப்ப மட்டும் என்ன 5 வருஷத்துக்கு ஒரு தடவ வர அரசியல்வாதி மாதிரியா வருது??? 7 மணி ஆனா தெனம் கரெக்ட்டா வந்துருது... இதுக்கு பயந்து நீங்க வேணா வீட்ல ஒழிஞ்சுக்கலாம்... என்னால அப்டி இருக்க முடியாது... அந்த பேய் இங்கயே தங்குனாலும் சரி... நான் விவசாயம் பண்ணுவேன். எத்தன தடவ மரத்த எடுத்துட்டு போனாலும் சரி... மரம் நடுவேன்... உங்களால முடிஞ்சத பாத்துக்கோங்க...", என்றேன்.

"ஆ... அப்பறம்... உங்க ஊர் எல்லைல நீங்க பாக்காத சில விஷயம் இருக்கு அத காட்றேன்... அத பாத்துட்டாவது இங்க நடக்குறதுக்கு காரணம் பேய் இல்ல மனுஷன் தான்னு நம்புங்க...", என்று சொல்லி அன்று நான் எடுத்த புகைப்படங்களை காட்டினேன்.

"இங்க பாருங்க... மரத்த பேய் தூக்கீட்டு போகல... வெட்டி எடுத்துருக்காங்க...", என்றேன்.

"தம்பி அந்த பேய் ரொம்ப பயங்கரமானது... அது கை கத்தி மாதிரி இருக்கும்... அதனால தான் மரம் அப்டி வெட்டுன மாதிரி தெரியுது...", என்றார் ஒருவர்.

"யோவ்... அந்த பேய நீ பாத்தியா???", என்றேன் கடுப்புடன்.

"இல்ல...", என்றார். "அப்பறம் எப்டி தெரியும் அது கை பத்தியும் கால் பத்தியும்??? நீ அந்த பேய்க்கு உதவி பண்றியா??? நான் பாத்துருக்கேன். இன்னொன்னு சொல்றேன்... நல்லா கேட்டுக்கோங்க... அந்த பேய பத்தி ஆஹா ஓஹோன்னு பெருசா பேசாதீங்க... உங்கள எல்லாம் யாராலயும் திருத்தவே முடியாது...", என்றேன்.

பேசியவர் மிரட்சியுடன் மௌனமானார்...

"உங்கள எல்லாம் ஈசியா ஏமாத்த முடியும்ன்னு தெரிஞ்ச எவனோ ஒருத்தன் பண்ற வேலை தான் இதெல்லாம். அவன கண்டுபிடிக்காம விடமாட்டேன்", என்றேன்.

அன்று முதல் எங்களை 'விவசாயம் செய்யாதே... மரம் வளர்க்காதே...', என்று கூற யாரும் முன்வரவில்லை.

சில நாட்களாக பேயின் வரவில் இருந்த ஆரவாரமும் பரபரப்பும் குறைந்து இருந்தது. இது எனக்கு சந்தேகமாகவே இருந்தது.

என் எண்ணங்கள் அந்த பேய்க்கு எப்படி தான் தெரிந்ததோ... அன்று இரவு அதன் ஆரவாரம் அதிகமாக இருந்தது. அதாவது அந்த கொடூரமான சத்தம் இன்னும் அதிகமாக இருந்தது.

எனக்கு தெரியும் அந்த ஊரில் யாரு இன்று இரவு தூங்க மாட்டார்கள். பயத்தின் உச்சியில் இருப்பார்கள் என்று. கடவுளால் உறங்க முடியவில்லை. எதற்கு இந்த ஆரவாரம்???

இதை பற்றி எண்ணிக்கொண்டே எப்படியோ உறங்கினோம்.

அந்த ஆரவாரம் ஏற்படுத்திய அவலம் மறுநாள் காலையில் தான் தெரிந்தது.

ஆம்... விவசாய நிலங்கள் பாழாய் கிடந்தன. நானும் கடவுளும் உழுது பதப்படுத்தியிருந்த நிலம் வீணாகிக்கிடந்தது... அது மட்டும் இல்லாமல் வளர்த்திருந்த மரங்களும் வெட்டப்பட்டு இருந்தன.

அப்போது தான் எனக்கு புரிந்தது... மரம் அருப்படும் சத்தமும், மண் தோண்டும் இயந்திரத்தின் சத்தமும் நேற்று அகோரமாக கேட்டது என்று. நேற்று மட்டுமில்லை... 3 வருடங்களாக இதுவே நடந்து வருகிறது என்பது புரிந்தது.

இத்தனை நாள் இல்லாத அளவிற்கு நேற்று சத்தம் அதிகமாக இருந்ததனால் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று உணர்ந்தேன்.

கடவுள் கண்கலங்கி நின்றதை பார்த்தேன். இது ஒவ்வொரு விவசாயியின் சுபாவம் தான். தன் நிலம் வீணாவதை எந்த ஒரு விவசாயியும் விரும்பமாட்டான். அந்த கவலையில் தான் அவர் கண்ணீர் விட்டார் என்பது எனக்கு புரிந்தது.

சுற்றி பார்த்தேன்... அந்த மக்கள் எங்களை ஏளனமாக சிரித்து நின்றனர். 'பாழாய் கிடப்பது நம் நிலம்... நாம் விடவேண்டிய கண்ணீரை யாரோ விடுகிறார்கள்', என்பதை உணராத இந்த மக்களின் அறியாமையை நினைத்தா... கடவுளின் நிலையை நினைத்தா... நான் உழுது பதமாக்கிய இந்த நிலத்தை நினைத்தா... நட்டு வளர்த்த மரங்களை நினைத்தா... எதை நினைத்து என்றே தெரியாமல் என் கண்களிலும் கண்ணீர் கசிந்தது.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top