உருவம்...

வழக்கம் போல அன்று நடந்த அனைத்தையும் என் டைரியில் எழுதி வைத்துக்கொண்டேன். குறிப்பாக மரங்கள் காணாமல் போனது, செத்துப்பிழைத்த மாடுகள், பேயிடம் மாட்டி தப்பித்த மாடசாமியின் மகன் என சிலவற்றை முக்கிய குறிப்புகளாக குறித்திருந்தேன்.

இவர்கள் நம்புவது போல பேய் உண்மையாகவே இருந்தால் எப்படி இருக்கும்? அதன் உருவம் எப்படி இருக்கும்? அதன் குணங்கள் என்னவாக இருக்கும்? இதையெல்லாம் நினைக்கையில் மாடசாமியின் மகன் ஞாபகம் வந்தது.

அவனை அந்த பேய் துரத்தியதாக சொன்னார்களே. அப்படியானால் அவன் அந்த பேயை பார்த்திருக்கவேண்டும். அவனிடம் பேசினால் ஏதாவது விஷயம் தெரியவரும் என்று தோன்றியது.

அவன் வீட்டிற்கு சென்றேன். அவனுக்கு வயது ஒரு 18 அல்லது 19 இருக்கும். கருப்பான தோற்றம். கிராமத்து மக்களுக்கே உரிய எண்ணெய் குளித்த தலை. "வாங்கண்ணே", என்று அவன் அழைத்த மொழி காதிற்கு இனிமையாக இருந்தது.

அவன் வீட்டினுள் சென்றேன். "உன் பேரு என்ன??", என்றேன். "என் பேரு பேச்சிமுத்து", என்றான். "உன்ன அந்த பேய் தொறத்துச்சுன்னு சொல்றாங்களே... உண்மையா???", என்றேன். "ஆமாண்ணே... உண்ம தான்...", என்றான் ஒருவித பயத்துடன்.

"அன்னைக்கி என்ன நடந்துச்சுன்னு எனக்கு கொஞ்சம் சொல்றியா???", என்றேன் ஆர்வமாக.

'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தில் நாகேஷ், பாலையாவிற்கு ஒரு 'திகில்' கதை சொல்லும் காட்சி இடம்பெற்றிருக்கும். அதே பாணியில் பேச்சிமுத்து எனக்கு கதை சொல்ல ஆரம்பித்தான்.

"அன்னைக்கி நான் யார் சொல்றதையும் கேக்காம, ஒரு 7.15 இருக்கும், அப்ப தனியா ஊர் எல்லைல இருக்க கோயில் பக்கம் நடந்தேன். என் பின்னாடி யாரோ வர்ற மாதிரி இருந்துச்சு. நான் ரொம்ப பயந்துட்டேன். திரும்பி பாத்தேன், ஆனா யாரும் இல்ல.

மறுபடியும் நடந்தேன். அப்ப என்னோட நிழல் பக்கத்துல இன்னொரு நிழல் தெரிஞ்சுச்சு. நான் திரும்பி பாத்தேன். அங்க ஒரு உருவம் நின்னுச்சு. தலவிரி கோலத்துல நின்னுச்சு. நல்ல ஒயரம். அந்த நெலா வெளிச்சத்துல என்னால அந்த பேயோட மொகம் சரியா தெரியல.

நான் ஓட ஆரம்பிச்சேன். ஆனா என்னால ஓட முடியல. யாரோ என்ன பின்னாடி பிடிச்சு இழுக்குற மாதிரி இருந்துச்சு. வேகமா ஓடுனேன். அது என்ன ஓட விடாம இழுத்துச்சு.

அது கண்ணு எனக்கு இப்ப தெரிஞ்சுச்சு. அந்த கண்ணு கொடூரமா இருந்துச்சு. எனக்கு மயக்கமே வந்துருச்சு. கீழ விழுந்துட்டேன். அப்ப தான் சாமி வந்து என்ன காப்பாத்துனாரு.

அன்னைக்கி இருந்து நான் 7 மணிக்கி மேல வெளிய போறதே இல்ல", என்று முடித்தான்.

நான் மனதிற்குள் ஒரு கணக்கு போட்டுவிட்டு அவனிடம், "அந்த உருவத்த உன்னால அடையாளம் சொல்ல முடியுமா????? அதாவது அந்த உருவத்த வரஞ்சா உன்னால அடையாளம் சொல்ல முடியுமா?????", என்றேன்.

"அண்ணே அதோட உருவத்த என்னால அடையாளம் சொல்ல முடியும். ஆனா அதோட மொகத்த நான் பாக்கல. கண்ணு மட்டும் நல்ல ஞாபகம் இருக்கு", என்றான்.

சரி என்று அவனிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top