ஆவியா... பேயா...
கோவிலின் அருகில் ஒரு குடில் இருப்பதை பார்த்தோம். 'அநேகமா நான் தேடிவந்தது இங்க தான் இருக்கணும்', என்று எண்ணிக்கொண்டு குடிலை நோக்கி சென்றோம். அது அந்த சாமியாரின் குடில் தான்.
அங்கே அவரிடம் ஆசீர்வாதம் பெற வரிசையில் நின்றனர். நாங்களும் நின்றோம்.
"எதற்காக இந்த வரிசை???", என்று கேட்டார் கடவுள். "இவ்ளோ நேரம் சாமி எறங்கி ஏமாத்துனத பாத்தீங்கள்ள. இப்ப சாமி பெற சொல்லி ஏமாத்துறத பாருங்க", என்றேன்.
அங்கே சாமியார் மக்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தார். எங்கள் முறையும் வந்தது. நாங்கள் அவர் முன் சென்று அமர்ந்தோம்.
"வாருங்கள்... உங்கள் கோபம் தனிந்ததா??? இல்லை இன்னும் தனியவில்லையா???", என்று கேட்டார் சாமியார்.
"அட அந்த ஊர கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாதுன்னு எனக்கு புரிஞ்சுருச்சு. அப்பறம் நான் மட்டும் கோபப்பட்டு என்ன நடக்கப்போகுது", என்றேன்.
"சரி... இப்பொழுது நீங்கள் இங்கே வந்ததன் காரணம் என்ன???", என்று கேட்டார்.
"இல்ல... இந்த ஊரப்பத்தி கதை எழுத தான் நான் வந்தேன். ஆனா இந்த ஊர்ல ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்க. நீங்க சரியா சொல்லுவீங்கன்னு நம்பி உங்கள பாக்க வந்திருக்கேன்", என்றேன்.
"ம்ம்... அந்த ஊரில் ஒரு பேய் நடமாடுகிறது", என்று ஆரம்பித்தார்.
"ஆவியா??? இல்ல பேயா சாமி???", என்றேன் குறுக்கிட்டு.
"பேய் தான். அந்த ஊரின் ஏதோ ஒரு பகுதியில் பல வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த அது, மரணமடைந்து இந்த ஊரினுள் சுற்றுகிறது. அதன் அட்டகாசங்கள் இந்த 3 வருடங்களாக தான் அதிகமாகியுள்ளது", என்றார்.
"அது எப்டி செத்துச்சு சாமி??? யாரும் கொன்னுட்டங்களா???", என்று கேட்டேன்.
"இயற்கையான மரணம் தான்", என்றார்.
"அது ஏன் சாமி உங்கள மட்டும் அந்த பேய் ஒன்னும் பண்ணல???", என்று கேட்டேன்.
"என் மந்திர சக்திகள் என்னை காக்கும்", என்றார்.
"சரி சாமி கை சரி ஆய்டுச்சா???", என்றேன்.
"இப்பொழுது பரவாயில்லை", என்றார்.
பிறகு யோசித்துவிட்டு, "என் கையில் அடி பட்டது உங்களுக்கு எப்படி தெரியும்???", என்று கேட்டார் படபடப்புடன்.
"ஊர்ல பேசிக்கிட்டாங்க. என்ன காப்பாத்துறப்ப உங்கள பேய் அடிச்சுருச்சுன்னு சொன்னாங்க", என்று கூறி கிளம்பினோம்.
"இந்த மனிதர் உண்மையாகவே மந்திரம் தெரிந்தவரா???", என்று கேட்டார் கடவுள்.
"நீங்க வேற... இந்த ஆளு போலி சாமியார்...", என்றேன்.
"உன்னை காப்பாற்ற உயிரையே பணையம் வைத்துள்ளார். அவரைப்போய் இப்படி சொல்கிறாயே", என்றார்.
"இந்த ஆளு என்ன காப்பாத்துனாரா??? எல்லாம் பொய். அன்னைக்கி நான் மயங்கி விழுந்தப்ப மணி 11 இல்லன்னா 12 இருக்கும். இந்த ஆளு என்ன வீட்ல கொண்டுவந்து விட்டது 2.30 மணிக்கு. இந்த 12 - 2.30 என்னமோ நடந்துருக்கு. அது என்னன்னு என்னால யூகிக்க முடியுது", என்றேன்.
"பிறகு ஏன் அவரிடம் அவ்வளவு கேள்வி கேட்டாய்???", என்று கேட்டார்.
"போலி சாமியார்ன்னு கண்பார்ம் பண்ண தான்", என்றேன்.
"எப்படி???", என்றார் குழப்பத்துடன்.
"இயற்கையா ஆயுள் முடிஞ்சு சாகுரவங்க பேயா அலைய மாட்டாங்க. அரைகுறை ஆயுளோட போனவங்க தான் பேயா அலைவாங்க. அதுவும் ஆசைகள் இருந்து சாகுரவங்க பேயாவும், ஆசைகள் இல்லாம சாகுரவங்க ஆவியாவும் சுத்துவாங்க.
ஆவிகளால சுதந்திரமா எங்க வேணாலும் சுத்த முடியும். ஆனா பேய்களால ஒரு குறிப்பிட்ட எல்லைய தாண்டி போக முடியாது. ஆவிக மனுஷங்களுக்கு நல்லது செய்யும். பேய் கெட்ட வேலைகள செய்யும். அந்த ஆளுக்கு ஆவி பேய்க்கே வித்யாசம் தெரியல.
அந்த ஆளு சொன்னது உண்மைன்னா ஏன் பேய் அந்த ஆள அடிக்கணும். இன்னொன்னு ஊர்ல யாரும் அந்த ஆளுக்கு அடி பட்டது பத்தி சொல்லல. நானே தான் போட்டு வாங்குனேன்", என்று கூறி கண்ணடித்தேன்.
"அவனை விட நீ பெரிய கேடி தான்...", என்றார் கேலியாக.
நான் எதிர்பார்த்தது கிடைத்த மகிழ்ச்சியில் ஊருக்கு கிளம்பினோம்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top