ஆதாரம்...

"என்ன பாக்குறீங்க??? இது மட்டும் இல்ல... இன்னும் நெறையா இருக்கு... உங்க சாமிக்கு கையில அடிப்பட்டதுக்கு காரணம் அந்த பேய் இல்ல... நான் தான்...", என்றேன்.

எல்லோரும் அதிர்ந்து நின்றனர். நான் உள்ளே சென்று என்னிடம் இருந்த ஆதாரங்கள் அனைத்தையும் எடுத்து வந்தேன்.

"தெனம் ராத்திரி இங்க கேக்குற சத்தம் பேய் கத்துற சத்தம் இல்ல... இதோ நிக்கிறாரே இந்த சாமியார் இவர் ஊருக்கு வெளியே பண்ற சதியோட சத்தம் தான்... புரியலையா... உங்க விவசாய நெலத்துல இந்த ஆளு எதையோ பதுக்கி வச்சுருக்காரு... அந்த பதுக்களுக்கு நடக்குற வேலைல கேக்குற சத்தம் தான் அது...", என்றேன்.

அப்பொழுது அந்த சாமியாருக்கு உதறல் எடுத்திருக்க வேண்டும்.

"இத பாருங்க...", என்று அந்த ஓவியத்தை அவர்கள் முன் வீசினேன்.

"இது பேச்சிமுத்து சொன்ன அடையாளத்த வச்சு வரஞ்சது... இது யாருன்னு தெரியுதா???", என்றேன்.

அனைவரும் திருதிருவென விழித்தனர்.

"என்னய்யா முழிக்கிறீங்க??? கண்ணு முன்னாடி நிக்கிறாரு இன்னுமா தெரியல???", என்றேன்.

அவர்கள் அந்த ஓவியத்தையும் சாமியாரையும் மாறி மாறி பார்த்தனர். "இல்ல தம்பி இது எங்க சாமி இல்ல", என்றனர் அந்த அப்பாவி மக்கள்.

"அட பாவிகளா... இன்னுமாடா இந்த சாமியார நம்புறீங்க??? அந்த ஆளே தப்ப ஒத்துக்கிட்டாலும் நீங்க ஒத்துக்க மாட்டீங்க போலயே...", என்றேன்.

"சரி உங்க வழிக்கே வரேன்... இந்த ஊர்ல இந்த தலவிரி கோலத்துல இருக்காது ஒன்னு உங்க சாமி... இன்னொன்னு அந்த கோயில்ல இருக்க நடராஜர்... அதாவது அந்த சிவன்... இப்ப சொல்லுங்க இந்த படத்துல இருக்காது உங்க சாமி தான்னு ஒத்துக்குறீங்களா???", என்றேன் நக்கலாக.

"எங்க சாமி நல்லவரு... அவரு அப்டியெல்லாம் செய்ய மாட்டாரு... எங்கள காப்பாத்த வந்த கடவுள் அவரு...", என்றார் ஒருவர்.

"அப்ப அந்த சிவன் தான் உங்கள ஏமாத்த பேயா வரார்ன்னு சொல்றீங்களா???", என்றேன்.

"இருக்கலாம்... அந்த கடவுள் கூட எங்கள ஏமாத்தலாம்... ஆனா எங்க சாமி எங்கள ஏமாத்த மாட்டாரு...", என்றார் இன்னொருவர்.

நான் சலிப்புடன் கடவுள் பக்கம் திரும்பி 'பாத்தீங்களா... இவங்களுக்காக வருத்தப்பட்டீங்களே... இது தேவையா உங்களுக்கு???', என்பது போல பாவனை செய்தேன்.

இப்பொழுது அந்த சாமியார் முகத்தில் ஒரு தைரியம் நிறைந்த சிரிப்பு தெரிந்தது. அந்த சிரிப்பு, 'உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது... எவ்வளவு மெனக்கெட்டாலும் என்னை கேட்டவன் என்று உன்னால் நிரூபிக்க முடியாது... போடா போ...', என்பது போல இருந்தது.

அந்த மக்களின் பேச்சிலிருந்தே அவர்கள் அந்த சாமியார் மீது வைத்திருந்த (மடத்தனமான) நம்பிக்கையும், அந்த கடவுளே வந்து கூறினாலும், ஏன் இந்த சாமியாரே மனம் மாறி உண்மையை கூறினாலும் இவர்களை மாற்ற முடியாது என்பதும் புரிந்தது.

நான் ஒரு முடிவிற்கு வந்தேன். என் முடிவை நினைத்து சிறிதாக சிரித்தேன். அந்த சிரிப்பு அந்த சாமியாரை ஏதோ செய்திருக்க வேண்டும். அவர் முகம் மாறுவதை உணர்ந்தேன்.

'சீக்கிரமே நீ என்கிட்ட மாட்டுவ சாமி', என்று எண்ணிக்கொண்டு உள்ளே சென்றேன்.

சிறிது நேரம் புலம்பிவிட்டு அந்த சாமியாரை அழைத்துக்கொண்டு அவர்களும் கலைந்து சென்றனர்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top