'7 மணி' பேய்..!!!

அந்த சாமியார் சென்றதும் என் மனம் நிலைகொள்ளவில்லை. இந்த சாமியாரை பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் ததும்பிக்கொண்டிருந்தது. என் டைரியில் அதுவரை நடந்தவற்றை எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது அந்த பெரியவர் வந்தார்.

"என்ன தம்பி... என்ன எழுதுறீங்க???", என்று கேட்டார். "ஐயா... இது என்னோட பழக்கம். எனக்கு சுவாரசியமா ஏதாவது விஷயம் கெடச்சா அத டைரியில எழுதி வச்சுக்குவேன்", என்றேன்.

"அப்டியா தம்பி... அப்டி என்ன சுவாரசியமான விஷயம் உங்களுக்கு கெடச்சுருக்கு??", என்றார். இது தான் சமயம் என்று எண்ணி அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன்.

"ஆமா, நேத்து ராத்திரி இங்க என்ன நடந்துச்சு. அதுக்கு யார் காரணம் ஐயா??", என்று ஆரம்பித்தேன். அவர் முகத்தில் ஒரு கலவரம் தெரிந்தது. "சொல்லுங்க ஐயா... என்ன நடக்குது இங்க???", என்று வினவினேன்.

"தம்பி நேத்து ராத்திரி மட்டும் இல்ல, கிட்டத்தட்ட 3 வருஷமா இங்க இதான் நடக்குது. இது எங்க ஊருக்கு வந்த சாபம். அது இன்னும் கொஞ்ச நாளுக்கு தான். அப்பறம் சரியா போயிரும். ஆதான் சாமி சொல்லீட்டாருல்ல", என்றார். அவர் சொன்னதில் ஒரு நம்பிக்கை தெரிந்தது.

"3 வருஷமாவா???"

"ஆமா தம்பி. இந்த ஊரு முன்னாடி எப்டி இருக்கும் தெரியுமா? எங்க பாத்தாலும் பச்சப்பசேல்ன்னு வயக்காடு. ஓடை நெறையா தண்ணி. மாசம் ஒரு திருவிழான்னு இருந்த ஊரு தம்பி இது. அந்த பாழாப்போன '7 மணி' பேய் வந்ததுல இருந்து எங்க ஊரே தலைகீழா மாறீருச்சு தம்பி.", என்றார் சோகம் தணிந்த குரலில்.

"ஐயா இந்தக்காலத்துல கூட பேய் பிசாசுன்னு எதுவும் இருக்குமா? இத என்ன நம்ப சொல்றீங்களா?", என்றேன் ஒரு கேலிசிரிப்புடன்.

"இப்டி தான் தம்பி நாங்களும் முன்னாடி சாமி சொன்னத நம்பல. அப்பறம் ஒருநாள் சாமி சொன்ன மாதிரி எங்க உழவு மாடுக எல்லாம் ஒரே நாள்ல செத்துருச்சுக. அந்த மாடுக எப்டி செத்துச்சு ஏன் செத்துச்சுன்னு எங்க வைத்தியருக்கு கூட தெரியல. நாங்க அப்பறம் சாமி கிட்ட போய் சொன்னோம் அவரு தான் எங்க மாடுகள காப்பாத்துனாறு. அதுக்கு அப்பறம் அவர் சொன்னதுனால யாரும் 7 மணிக்கி மேல வெளிய போறதே இல்ல", என்றார் பெருமூச்சுடன்.

"என்னது சாமி செத்த மாடுகள காப்பாத்துனாரா?", என்றேன் ஆச்சரியமாக. "ஆமா, ஆனா எல்லா மாடுகளையும் இல்ல. ஒரு சில மாடுகள தான் அவரால காப்பாத்த முடிஞ்சுச்சு.", என்றார்.

"இதெல்லாம் பேய் தான் செஞ்சுச்சுன்னு நம்புறீங்களா??", என்றேன். "பின்ன இல்லையா தம்பி?? இவ்ளோ ஏன், நம்ம வீட்டுக்கு 2 வீடு தள்ளி இருக்கானே அந்த மாடசாமி. அவன் மகன் 10வது வர படிச்ச திமுருல சாமி சொன்னத கேக்காம 7 மணிக்கி மேல வெளிய சுத்தீருக்கான்.", என்று இழுத்தார்.

"அப்பறம் என்ன ஆச்சு???", என்று ஆர்வமாக கேட்டேன். "அப்பறம் என்ன அந்த பேய் அவன வெரட்டீருக்கு. சாமி தான் அவன காப்பாத்தி கூட்டீட்டு வந்தாரு.", என்றார் அவர்.

"அந்த பேய நீங்க பாத்துருக்கீங்களா???", என்றேன். "நான் பாத்தது இல்ல. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்லுவாங்க. ஆனா யாரும் பாத்தது இல்ல", என்றார்.

"அந்த சாமி இங்க வந்து எவ்ளோ நாள் ஆகுது?", என்றேன். "அவரு இங்க வந்து 3 வருஷம் இருக்கும்", என்றார்.

"அது சரி. நீங்க 7 மணிக்கி மேல தானே வெளிய போகக்கூடாது. பகல் நேரத்துல விவசாயத்த பண்ணலாமே", என்று கேட்க அதற்கு அவர், "சாமி தான் சொன்னாரு. இந்த சாபம் தீருற வரைக்கும் விவசாயம் பண்ண முடியாதுன்னு. அதே மாதிரி அந்த பேய் வந்ததுல இருந்து எங்க ஊருக்கு மழையும் இல்ல", என்று வருத்தத்துடன் கூறினார்.

"ஐயா. இந்த ஊர்ல மரமே இல்லயே. இங்க இருந்த மரமெல்லாம் என்ன ஆச்சு??", என்றேன். "அதுவும் அந்த பேயோட வேல தான். ஒரே நாள்ல எங்க ஊர்ல இருந்த மரங்க எல்லாம் காணம்போச்சு தம்பி. இது மட்டுமா நாங்க வேற மரம் நட்டாலும் அது வளந்ததும் அந்த பேய் தூக்கீட்டு போயிருது தம்பி...", என்று கூறிக்கொண்டே எங்கோ சென்றார்.

'என்ன...!! ஒரே நாள்ல எல்லா மரமும் காணாம்போச்சுன்னு சொல்றாரு. பேய் மரத்தையெல்லாமா தூக்கீட்டு போகும்??? அந்த சாமியாரு செத்துப்போன மாடுகள பொழைக்க வச்சுருக்காருன்னு சொல்றாரு. பேய் தொறத்துச்சுன்னு சொல்றாரு. ஒரே மர்மமா இருக்கே. இங்க என்ன தான் நடக்குது. இங்க நடக்குற விஷயத்துக்கும் அந்த சாமியாருக்கும் ஏதோ... இல்ல இல்ல முழுக்க முழுக்க அவர் தான் காரணமா இருக்கணும். இல்லனா அவருக்கு இத பத்தி தெரிஞ்சுருக்கணும். கண்டுபிடிக்கிறேன்', என்று எண்ணிக்கொண்டே நடந்தேன்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top