78 யார் பணம்?
78 யார் பணம்?
ஸ்ரீராமும் மிதிலாவும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி தங்களை மறந்து நின்றார்கள். திடீரென்று ஸ்ரீராமின் அறையின் கதவு தட்டப்பட, இருவரும் திடுக்கிட்டார்கள். ஸ்ரீராம் கதவைத் திறந்தான். அங்கு மிதிலா இருப்பதை பார்த்த குகன் கிண்டலாய் சிரிக்க,
தன் கண்களை சுழற்றினான் ஸ்ரீராம்.
"நான் வேணுமுன்னா போயிட்டு அப்புறம் வரேன்" என்று எகத்தாளமாய் கூறிவிட்டு அவன் அங்கிருந்து செல்வது போல் பாசாங்கு செய்ய,
"வெயிட் " என்று அவனைத் தடுத்தாள் மிதிலா.
"நான் கிளம்பறேன்" என்று அவள் கூற
"பரவாயில்ல மிதிலா, நீங்க ஏதோ முக்கியமான வேலையில இருக்கிற மாதிரி தெரியுது..." என்றான் அங்கிருந்து செல்வது போல் பாசாங்கு செய்து கொண்டு.
ஸ்ரீராம் எதுவும் கூறுவதற்கு முன்,
"ஷட் அப்... அண்ட் கம் இன்" என்று அவனுக்கு உத்தரவிட்டாள் மிதிலா.
"நீங்க சொல்ற மாதிரியே செய்யறேன் மேடம் பாஸ்" என்று தலைவணங்கி கூறினான் குகன்.
அவன் தலையில் லேசாய் ஒரு குட்டு குட்டிவிட்டு அங்கிருந்து சென்றாள் மிதிலா. தன் தலையை தேய்த்தபடி சிரித்தான் குகன். அவள் அங்கிருந்து செல்லும் வரை காத்திருந்து விட்டு உள்ளே நுழைந்தான்.
"எஸ்ஆர்கே, நம்ம கம்பெனியுடைய டிசைன்ஸ், ஆஸ்திரேலியாவில் நடக்கப் போற ரொம்ப பெரிய பேஷன் ஷோவில் கலந்துக்க செலக்ட் ஆகி இருக்கு" என்றான் உற்சாகமாக.
அதைக் கேட்ட ஸ்ரீராமுக்கு குழப்பம் ஏற்பட்டது. ஏனென்றால், அவன் எந்த ஃபேஷன் ஷோவுக்காகவும் எந்த டிசைன்ஸையும் அனுப்பி இருக்கவில்லை.
"ஆனா, நம்ம எந்த டிசைன்ஸையும் அனுப்பலயே... "
"மிதிலா அனுப்பியிருந்தாங்க" என்று சிரித்தான் குகன்.
"மிதிலாவா? எந்த டிசைன்ஸ்ஸை அனுப்பினா?" புரியாமல் கேட்டான் ஸ்ரீராம்.
"எல்லாமே உன்னுடைய டிசைன்ஸ் தான்... உன்னுடைய கப்போர்டில் இருந்ததை பாத்துட்டு அனுப்பிட்டாங்க" என்றான் ஸ்ரீராமின் முகத்தை படித்தபடி.
"இது எப்ப நடந்தது?" என்றான் ஆச்சரியத்துடன்.
"உங்க கல்யாணத்துக்கு அடுத்த நாள்"
"ஆனா, இதைப் பத்தி மிதிலா என்கிட்ட எதுவுமே சொல்லலையே..?"
"இந்த ஃபேஷன் ஷோவுக்கு மட்டும் இல்ல. உலக அளவில் நடக்கிற எல்லா முக்கியமான ஃபேஷன் ஷோ ஆர்கனைசர்க்கும் அனுப்பி இருந்தாங்க... பூவனத்தில் நடந்த அடுத்தடுத்த பிரச்சனைகளால அவங்க அதை உங்ககிட்ட சொல்ல மறந்து போயிருக்கலாம்"
"அவளுக்கு எப்படித் தான் இப்படி எல்லாம் ஐடியா தோணுதோ தெரியல" என்று பெருமையுடன் அதிசயித்தான் ஸ்ரீராம்.
"நீயும் இதை செய்யணும்னு விரும்பின தானே?"
"ஆமாம். ஆனா, என்னுடைய பழைய டிசைன்ஸ் இதுக்கு போதுமானதா இருக்கும்னு நான் நினைக்கல"
"ஏன்னா, நீ செய்ற வேலையில நீ என்னைக்குமே திருப்தி அடைஞ்சதே இல்ல. உன்னுடைய டிசைன்ஸ் உலகத்தரம் வாய்ந்ததா இருக்கும்னு உனக்கு தோணல"
ஆமாம் என்று தலையசைத்தான் ஸ்ரீராம்.
"இந்த டீலை பத்தி மிதிலாவுக்கு தெரியுமா?" என்றான் ஆர்வமாக
"தெரியாது. இப்ப தான் இமெயில் வந்தது"
"சரி அவகிட்ட எதுவும் சொல்லாத. அந்த ஈமெயிலை என்னுடைய பர்சனல் ஐடிக்கு அனுப்பிட்டு, கம்பெனி ஐடில இருந்து டெலிட் பண்ணிடு"
"டன்..." அங்கிருந்து சென்றான் குகன்.
குகன் தனக்கு அனுப்பிய மின்னஞ்சலை படித்துப் பார்த்தான் ஸ்ரீராம். அவர்களுக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய வாய்ப்பு. அது நிச்சயம் எஸ்ஆர் ஃபேஷன்சை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை. அவர்களுடைய நிறுவனம் உலக அரங்கில் ஜொலிக்கப் போகிறது. என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து விட்டு மிதிலாவுக்கு ஃபோன் செய்தான்.
"சொல்லுங்க ஸ்ரீ" என்றாள் கணினியில் தான் செய்து கொண்டிருந்த வேலையை தொடர்ந்தபடி.
"நம்ம, சாயங்காலம் ஒரு பார்ட்டிக்கு போறோம். உன்னுடைய வேலையை அஞ்சு மணிக்கே முடிச்சுக்கோ"
"என்ன பார்ட்டி?" என்றாள் தன் விரல்களை தட்டச்சு பலகையில் இருந்து எடுத்துவிட்டு.
"அது சர்ப்ரைஸ்" என்று அழைப்பை துண்டித்தான் ஸ்ரீராம்.
அவன் அழைப்பை துண்டித்த சத்தத்தை கேட்டு திருதிருவென விழித்தாள் மிதிலா. எந்த பார்ட்டிக்கு தன்னை அழைத்துச் செல்லப் போகிறான் ஸ்ரீராம்? சரி பார்த்துக் கொள்ளலாம் என்று வேலையை தொடர்ந்தாள்.
குகனை தன் அறைக்கு அழைத்தான் ஸ்ரீராம். சில விநாடிகளில் அவன் முன் நின்றான் குகன்.
"சொல்லு எஸ்ஆர்கே "
"நீ செஞ்சு முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு" என்றான் கட்டளையிடும் குரலில்.
"என்ன வேலை?"
அவனிடம் ஒரு காகிதத்தை நீட்டினான் ஸ்ரீராம்.
"இதை படிச்சி பார்த்துட்டு, அதுபடி எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணிடு"
அதை வாங்கி படித்த குகனின் கண்கள் புன்னகையுடன் விரிந்தன.
"தேவைப்பட்டா, பரத், லட்சுமனை ஹெல்ப்புக்கு கூப்பிட்டுக்கோ"
"ஓகே"
அங்கிருந்து புத்துணர்ச்சியுடன் சென்றான் குகன்.
மாலை
மிதிலாவிiன் அறையின் கதவை தட்டினான் ஸ்ரீராம். அதே நேரம் தனது கணினியை ஸ்விட்ச் ஆப் செய்தாள் மிதிலா.
"வந்துட்டேன், வந்துட்டேன்..." என்றாள் தனது கைப்பையை எடுத்தபடி.
"வா" என்று அவள் கையைப் பிடித்து பார்க்கிங் லாட்டை நோக்கி அழைத்துச்சென்றான் ஸ்ரீராம்.
அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.
"என்ன பார்ட்டி?" என்றாள் மிதிலா ஆர்வமாக.
"அதை சீக்கிரம் நீயே தெரிஞ்சுக்குவ" என்றான் சாலையை பார்த்தபடி.
முகத்தை கோணலாகிக் கொண்டு நேராக அமர்ந்தாள் மிதிலா. சிரித்தபடி காரை செலுத்தினான் ஸ்ரீராம்.
அவர்கள் வீட்டுக்கு வந்த போது, எங்கோ செல்வதற்கு அனைவருமே தயாரான நிலையில் இருந்தார்கள்.
"ஊரி... நீ எங்கேயாவது போறியா?" என்றாள் மிதிலா.
"ஆமாம், நாங்க எல்லாரும் ஒரு பார்ட்டிக்கு போறோம்"
"என்ன பார்ட்டி?"
"லக்கியோட ஃப்ரண்ட் பார்ட்டி"
"லக்கியோட ஃப்ரெண்டா? எந்த ஃப்ரெண்ட்?" என்றாள் மிதிலா. ஏனென்றால், லட்சுமணின் அனைத்து நண்பர்களையும் அவளுக்கும் தெரியும்.
மேலும் அவள் எதுவும் கேட்கும் முன்,
"போலாம் ஊர்மிளா, நேரமாகுது" என்று தனது புடவையை சரி செய்தபடி அங்கு வந்தார் புஷ்பா.
"மிதிலா, நாங்க ஒரு பார்ட்டிக்கு போறோம். நம்ம அப்புறம் பார்க்கலாம்" ஊர்மிளாவை இழுத்துச் சென்றார்.
"பார்ட்டிக்கு லக்கி வரலையா?"
"ஆஃபீஸ்ல இருந்து நேரா வந்துடுறேன்னு சொல்லிட்டான்" கூறியவாறே புஷ்பாவுடன் நடந்தாள் ஊர்மிளா.
ஆச்சரியமாய் இருந்தது மிதிலாவுக்கு. இதைப் பற்றி லக்ஷ்மன் அவளிடம் ஒன்றுமே கூறவில்லை. அதைப் பற்றி யோசித்தபடி தனது அறைக்கு வந்தவள் பீரோவிலிருந்து ஒரு கருப்பு நிற டிசைனர் புடவையை எடுத்து கட்டிலின் மீது வைத்தாள். குளியலறையிலிருந்து வெளியே வந்த ஸ்ரீராம் அந்த புடவையைப் பார்த்து,
"குட் செலக்ஷன்... இந்த ஸாரி உனக்கு ரொம்ப நல்லா இருக்கும்" என்றான்
"தேங்க்யூ" என்று கூறியபடி அந்த புடவையை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்றாள் மிதிலா.
ஸ்ரீராமும், மிதிலாவின் புடவைக்கு பொருத்தமாக கருப்பு நிற சூட் அணிந்து கொண்டான். சில நிமிடங்களில் தயாராகி வந்தாள் மிதிலா. மிக அழகாய் இருந்த மிதிலாவை பார்த்து தன்வசம் இழந்தான் ஸ்ரீராம். தன்னை மறந்தவனாய் அவளை நோக்கி நகர்ந்தான். அவன் தன்னை நோக்கி வருவதை பார்த்து புரியாமல் பின்னால் நகர்ந்தாள் மிதிலா. அவள் இடையை அவன் சுற்றி வளைத்த போது அவளுக்கு காரணம் புரிந்தது. அவளை நோக்கி குனிந்தவனின் வாயை கையால் மூடினாள். அவள் கையை கீழே இறக்கிய படி,
"யூ லுக் பியூட்டிஃபுல்..." என்றான் இரகசியமாக.
"ரியலி?"
அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு,
"உனக்கு சந்தேகம் இருந்தா இன்னைக்கு பார்ட்டியில் உனக்கு பதில் கிடைக்கும்" என்றான்.
"பார்ட்டியிலயா எப்படி?"
"எல்லாருடைய கண்ணும் உன் மேல தான் இருக்கப் போகுது... நடக்குதா இல்லையா பாரு"
"பாக்கலாம். இப்போ என்னை ரெடியாக விடுங்க"
"ஏய்..."
"ம்ம்ம்?"
"கிஸ் ப்ரூஃப் லிப்ஸ்டிக் போட்டுக்கோ... எனக்கு அது யூஸ்ஃபுல்லா இருக்கும். நீ இந்த ஸாரில ரொம்ப ஹாட்டா இருக்க. நான் என்னுடைய கண்ட்ரோலை எப்ப வேணா இழக்கலாம்..."
"நம்ம பார்ட்டிக்கு போறோமா, இல்ல வேற எங்கயாவது போறோமா?"
"நிச்சயமா பார்ட்டிக்கு தான் போறோம். யாருக்கு தெரியும்... என்னோட மூடு கார்ல கூட மாறலாம்"
அவன் தோளில் விளையாட்டாய் ஒரு அடி போட்டுவிட்டு, தயாரானாள் மிதிலா.
அவர்கள் வீட்டை விட்டு கிளம்பினார்கள். மிதிலாவுக்கு குழப்பம் ஏற்பட்டது, அவர்களுடைய கார் மீண்டும் அலுவலகத்தின் வழியில் பயணித்த போது.
"நம்ம பார்ட்டிக்கு போறோம்னு சொன்னிங்க. ஆனா, மறுபடி ஏன் ஆஃபீஸுக்கு போறீங்க?"
"பார்ட்டிக்கு முன்னாடி, ஒரு டீலை சைன் பண்ணிடலாம்"
"ஓ... ஓகே..." என்றாள் எந்த சந்தேகமும் இன்றி.
எஸ் ஆர் ஃபேஷன்ஸ்
அலுவலகத்தில் நுழைந்த மிதிலா, தங்கள் ஒட்டு மொத்த குடும்பமும், அலுவலக ஊழியர்களுடன் அங்கு இருந்ததை பார்த்து திகைத்து நின்றாள். அவளுக்குப் பிடித்த சாக்லெட் கேக் அங்கு வைக்கப்பட்டு இருந்தது.
"இதெல்லாம் என்ன ஸ்ரீ?" என்றாள்.
அவளை கையை பிடித்து அந்த கேக்கின் அருகே அழைத்து சென்று, கத்தியை அவள் கையில் கொடுத்தான்.
"எனக்கு எதுவும் புரியல... இங்க என்ன நடக்குது?"
ஸ்ரீராம், குகனை பார்க்க, அவன் அங்கு வைக்கப்பட்டிருந்த ப்ரொஜெக்டரை ஆன் செய்தான். அவர்களுடைய நிறுவனத்திற்கு வந்த, அஸ்திரேலிய ஃபேஷன் ஷோ ஒருங்கிணைப்பாளர் களால் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் அதில் ஒளிர்ந்தது.
நம்ப முடியாமல் ஸ்ரீராமை பார்த்தாள் மிதிலா.
"இந்த டீல் நமக்கு கிடைச்சிடுச்சா?" என்றாள் குதூகலமாக.
"ஆமாம். உன்னால தான் இந்த ஆப்பர்சூனிட்டி நமக்கு கிடைச்சிருக்கு. அதனால உன்னை ஹானர் பண்ணனும்னு நெனச்சேன்" அந்த கேக்கை வெட்டுமாறு ஜாடை காட்டினான்.
அவன் கையில் இருந்த கத்தியை பெற்றுக்கொள்ளாமல், அவன் கையைப் பிடித்து, அவனுடன் இணைந்து கேக்கை வெட்டினாள் மிதிலா. முதல் துண்டை ஸ்ரீராமுக்கு ஊட்டி விட்டாள். அவளிடம் ஒரு உறையை நீட்டினான் ஸ்ரீராம். என்ன இது? என்பது போல், அவனையும் அந்த உறையையும் மாறி மாறி பார்த்தாள் மிதிலா.
"திறந்து பாரு" என்றான்.
அதில் இருந்தது அவளுடைய பாஸ்போர்ட்.
"நம்ம ஆஸ்திரேலியா போறோம்" என்றான்.
அங்கிருந்தவர்களின் கரவொலி விண்ணை பிளந்தது. ஒவ்வொருவரும் மிதிலாவுக்கு புகழாரம் சூட்டினார்கள். அந்த பார்ட்டி இனிமையாய் முடிந்தது.
ஸ்ரீராமுடன் வீடு திரும்பினாள் மிதிலா.
"அந்த டிசைன்ஸை அனுப்பனணும்னு உனக்கு எப்படி தோணுச்சு?" என்றான் ஸ்ரீராம்.
"அந்த டிசைன்ஸ் ரொம்ப நல்லா இருந்தது. வேர்ல்ட் லெவல் ஃபேஷன் ஷோ ஆர்கனைசர் பத்தி குகன் ஒரு தடவை என்கிட்ட சொன்னது ஞாபகம் வந்தது. உங்க டிசைன்ஸ் நிச்சயம் செலக்ட் ஆகும்னு நம்பிக்கை இருந்தது. அதனால அனுப்பினேன்"
"அதெல்லாம் நான் காலேஜ் டேஸ்ல டிசைன் பண்ணது. அதையெல்லாம் நான் மறந்தே போயிட்டேன்..."
"நான் உங்க கூட ஆஸ்திரேலியா வரணும்ங்குறது அவசியமா?"
"நிச்சயமா... நம்ம வரணும்ங்குறது ஸ்டீஃபனுடைய விருப்பம். நமக்கு அவர் ட்ரீட் கொடுக்கணும்னு நினைக்கிறார். அவர்கிட்ட நம்ம *நோ* சொல்ல முடியாது. ஆஸ்திரேலியா போகும் போது, ஸ்டீஃபன்க்காக ஆக்லண்ட் போயிட்டு வரலாம்"
சரி என்று தலையசைத்தாள் மிதிலா. அங்கும் கூட அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது என்பதை எண்ணி சிரித்தான் ஸ்ரீராம்
அவள் கையைப் பிடித்து இழுத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டான்.
"என்னுடைய டிசைன்ஸ்க்கு இவ்வளவு பெரிய மரியாதை கிடைக்கும்னு நான் நினைச்சதே இல்ல"
"உங்களுக்கும், உங்களுடைய டிசைன்ஸும் நிச்சயம் மரியாதை கிடைக்கணும்" என்றாள் மிதிலா.
"அப்படின்னா உனக்கும் தான் கிடைக்கணும். நீ தான் சரியா தேர்ந்தெடுத்து அதை அனுப்பி வச்ச"
"நீங்க எனக்கு மரியாதை கொடுத்தா எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல" என்று சிரித்தாள்.
அவளை குண்டுக்கட்டாகத் தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.
"என்ன வேலை இது?" என்றாள் மிதிலா.
"உனக்கு மரியாதை செய்யப் போறேன்"
"இது தான் மரியாதையா?"
"நீ இந்த பிளாக் ஸாரில ஹாட்டா இருக்கேன்னு நான் சொன்னேன்ல? ஜனங்களுக்கு முன்னாடி நான் என்னுடைய கண்ட்ரோலை இழக்காம இருந்ததுக்காக நீ சந்தோஷப்படு"
"நீங்களும் இந்த பிளாக் சூட்டில் ஸ்மோக்கிங் ஹாட்டா இருக்கீங்க..."
"நெஜமாவா? ஆனா, நீ என்னை ஒரு தடவை கூட பார்ட்டில திரும்பி பார்க்கவே இல்லையே?"
"யார் சொன்னது? நான் என்ன, உங்களை மாதிரி வச்ச கண் வாங்காம சைட் அடிப்பேன்னு நினைச்சிங்களா?"
"மாட்டியா?"
மாட்டேன் என்று தலையசைத்தாள்.
"நான் உங்களை சைட் அடிப்பேன் ஆனா அது யாருக்கும் தெரியாது. உங்களை மாதிரி கண்ணாலயே ஆளை முழுங்க மாட்டேன்... ஆனா என் கண்ணு உங்க மேல தான் இருக்கும்"
"உன்கிட்ட நான் கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கும் போல இருக்கே... உன்கிட்ட இவ்வளவு ஸ்பெஷல் டேலண்ட் இருக்கும்னு எனக்கு தெரியாம போச்சு" அவன் கூற வாய்விட்டு சிரித்தாள் மிதிலா.
மறுநாள்
அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தாள் மிதிலா. ஸ்ரீராம் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது மிதிலாவின் கைப்பேசி கூச்சல்லிட, சார்ஜரின் வாயிலிருந்து அதை உருவி எடுத்தாள். அந்த அழைப்பு தன் அப்பாவிடம் இருந்து வந்ததைப் பார்த்தவுடன் அவள் முகம் மலர்ந்தது.
"அப்பா, எப்படிப்பா இருக்கீங்க?" என்றாள் ஆர்வமாக.
அவளுடைய கேள்விக்கு பதிலளிக்காமல்,
"உன்கிட்ட கொஞ்சம் பேசணும் மிதிலா. இப்போ நீ ஃப்ரீயா இருக்கியா?" என்றார்.
"என்னப்பா விஷயம்? ஏதாவது சீரியஸான விஷயமா பா?" என்றாள் தனது பதட்டத்தை காட்டிக்கொள்ளாமல்.
"சீரியஸா, இல்லையான்னு எனக்குத் தெரியல"
"எனக்கு நீங்க சொல்றது புரியல, பா"
"உன் கல்யாணத்தப்போ எனக்கு பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதை சரிக்கட்ட கடன் வாங்கலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். அப்போ பிருந்தாவோட வீட்டுக்காரர், அவங்க தங்கச்சியோட கல்யாணத்துக்காக சேர்த்து வைசிருந்த பணத்தை என்கிட்ட கொடுத்தாரு"
"அப்படியா?" மிதிலாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஏனென்றால், அவள் அக்காவின் கணவன் சதீஷ் அவ்வளவு தாராள மனப்பான்மை கொண்டவன் அல்ல.
"ஆமாம். ஆனா அது உண்மையில்ல"
"அப்படின்னா?" என்றாள் ஒன்றும் புரிந்து கொள்ள முடியாமல்.
"அது அவருடைய பணம் இல்ல"
"வேற யாருடையது பா?"
"ஸ்ரீராமுடையது"
"என்னது...????" என்று அதிர்ந்தாள் மிதிலா.
அவர்களுடைய திருமண செலவுகளுக்காக தன் தந்தைக்கு பணம் கொடுத்தது ஸ்ரீராமா?
"ஆமா மிதிலா. எனக்கு பணத் தேவை இருந்ததை எப்படியோ தெரிஞ்சுக்கிட்டு சதீஷ் மூலமா எனக்கு ஹெல்ப் பண்ணியிருக்கார் ஸ்ரீராம்"
மிதிலாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தன் குடும்ப கஷ்டத்தை பற்றி கூட தெரிந்து கொண்டு அவன் உதவியிருக்க கூடும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை அல்லவா? ஒரு புறம் தன்னை மிரட்டி திருமணதிற்கு பணிய வைத்துவிட்டு, மறுபுறம் சத்தமில்லாமல் தன் தந்தைக்கு உதவியிருக்கிறான்.
"உங்களுக்கு எப்படி தெரிஞ்சது பா?"
"நான் உங்க அம்மாவுடைய நகைகளை எல்லாம் அடகு வச்சு, சதீஷ்க்கு பணத்தை திருப்பிக் கொடுக்கலாம்னு நினைச்சேன். அப்போ தான் சதீஷ் எங்கிட்ட உண்மையை சொன்னார். அந்த பணத்தை ஸ்ரீராம்கிட்ட திருப்பிக் கொடுக்கணும். இன்னைக்கு ஆஃபீஸுக்கு வரட்டுமா மா?"
வீட்டிற்கு வந்து அதை ஸ்ரீராமிடம் கொடுக்க அவருக்கு தயக்கமாக இருந்தது. மிதிலாவின் மாமியார் வீட்டில் இருப்பவர்களுக்கு அதை பற்றி தெரிந்தால், மிதிலா சங்கடப்பட நேரிடும் என்று நினைத்தார் அவர்.
"நான் அவர்கிட்ட கேட்டுட்டு உங்ககிட்ட சொல்றேன் பா" என்ற போது அவள் தொண்டையை அடைத்தது.
"அவருக்கு நான் நன்றியும் சொல்லணும்"
"ம்ம்ம்"
ஆனந்தன் மட்டுமல்ல மிதிலாவும் கூட அவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். ஆனந்தன் அழைப்பைத் துண்டிக்க, தன் கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள் மிதிலா.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top