74 ஏன்?

73 ஏன்?

தனது பண்ணை வீட்டில் தாக்குதல் நடத்தியவனை கொன்றது யார் என்று ஒன்றும் புரியவில்லை ஸ்ரீராமுக்கு. அதே நேரம், இறந்தவன் தாக்குதல் நடத்தியவனாக இருக்கக்கூடும் என்பதையும் அவன் முழுமனதாய் நம்பவில்லை. ஒருவேளை அது காவல்துறையினரை திசை திருப்புவதற்கான திட்டமாகவும் இருக்கலாம் என்று எண்ணினான் அவன்.

"அவன் எப்படி சார் இறந்தான்?" என்றான் ஸ்ரீராம்.

"அவனுடைய எதிரிங்க யாராவது கொன்னுருக்கலாம்" என்றார் இன்ஸ்பெக்டர்.

"ஓஹோ"

"அவனோட உடம்பு பல முறை கத்தியால குத்தப்பட்டு இருக்கு. அவன் யார் கூடவாவது சண்டை போட்டிருக்கலாம்னு நாங்க சந்தேகப்படுறோம்"

"அது யாருன்னு உங்களுக்கு ஏதாவது தெரியுமா இன்ஸ்பெக்டர்?"

"அவனைப் பத்தி அக்கம்பக்கத்தில் விசாரிச்சோம். ஆனா யாருக்கும் எதுவுமே தெரியல. நீங்க கொஞ்சம் மார்ச்சுவரி வரைக்கும் வர முடியுமா? ஒருவேளை உங்களுக்கு அவனை அடையாளம் தெரிஞ்சா, எங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்"

"நிச்சயம் வறேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்க இருப்பேன்" என்று அழைப்பை துண்டித்தான் ஸ்ரீராம்.

"எங்க போறீங்க நீங்க? வீட்டை விட்டு எங்கேயும் போக மாட்டேன்னு சொன்னீங்க இல்ல...?" என்றாள் அப்போது தான் அறைக்குள் நுழைந்த  மிதிலா.

"நம்ம ஃபார்ம் ஹவுசில் அட்டாக் பண்ண ஷூட்டர் இறந்துட்டான்"

"நிஜமாவா?" என்றாள் மிதிலா விழி விரிய.

"ஆமாம். அவனை யாரோ கொலை செஞ்சிட்டாங்களாம்"

"கொலையா? யார் பண்ணது?" என்றாள் அதிர்ச்சியுடன்.

"யாருன்னு தெரியல. அவனை அடையாளம் காட்ட என்னை மார்ச்சுவரிக்கு வர சொன்னாரு இன்ஸ்பெக்டர்"

"அவன் தான் ஷூட்டர்னு  போலீசுக்கு எப்படி தெரிஞ்சது?"

"அவனுடைய கன்னும் நம்ம வீட்டுல இருந்து எடுத்த புல்லட்ஸும் மேட்ச் ஆகுதாம்"

"ஓஹோ"

"நான் உடனே ஜிஹெச்க்கு போகணும் சீக்கிரம் வந்துடுவேன்"

"அந்த ஷூட்டர் இறந்துட்டான் தான்... ஆனா, இதுக்கு பின்னால இருக்கிறது யாருன்னு நமக்கு தெரியல. அதுவும், அட்டாக் பண்ணது  ஒரே ஒரு ஷூட்டர் தான்னு நம்மளால முடிவு செய்ய முடியாது. இது நம்மளை டைவர்ட் பண்ணி, உங்களை வெளிய வர வைக்க நடத்துற ஒரு டிராமாவா கூட இருக்கலாம், இல்லையா?" என்றாள் பதட்டத்துடன்.

"இருக்கலாம்... நிறைய பாஸிபிலிடீஸ் இருக்கு. போலீஸ் இன்வெஸ்டிகேட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவங்க எல்லாத்தையும் சீக்கிரமாவே கண்டுபிடிச்சுடுவாங்க. டோன்ட் ஒரி" என்று அவள் தோளைத் தட்டிக் கொடுத்தான் ஸ்ரீராம்.

"நானும் உங்க கூட வர்றேன். ப்ளீஸ் என்னையும் கூட்டிகிட்டு போங்க"

"நான் மார்ச்சுவரிக்கு போறேன். நீ அந்த மாதிரி இடத்துக்கெல்லாம் வரவேண்டாம். உன்னை மாதிரி இளகின மனசு இருக்கிறவங்க வந்து போற இடம் இல்ல அது"

"ஜாக்கிரதையா போயிட்டு வருவீங்க இல்ல?" என்றாள் கவலையுடன்.

"ஜாக்கிரதையா போயிட்டு வர்றேன்"

சரி என்று தலையசைத்தாள் மிதிலா. கடகடவென உடை மாற்றிக் கொண்டு கிளம்பினான் ஸ்ரீராம். அவனுடைய கண்கள் என்னவோ சாலையின் மீது தான் இருந்தது. ஆனால் அவனது மனம், சமீபத்திய நிகழ்வுகளில் சுழன்று கொண்டிருந்தது. அவன் சாக வேண்டும் என்று நினைப்பது யார்? அவ்வளவு வஞ்சக நெஞ்சம் படைத்தவர் யார் இருக்கிறார்? அவர்களுடைய குறி அவன் மட்டும் தானா அல்லது மிதிலாவுமா? மிதிலாவின் அப்பா என்ன ஆனார்? எங்கு போனார்? ஒருவேளை கொலை செய்யப்பட்டது அவராக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது ஸ்ரீராமுக்கு. அதனால் தான் மிதிலா தன்னுடன் வர வேண்டாம் என்று நினைத்தான் ஸ்ரீராம். என்ன தான் மிதிலாவுக்கு அவளுடைய அப்பாவின் மீது கோபம் இருந்தாலும், இப்படி பல முறை கத்தியால் குத்தப்பட்டு அவர் இறந்து  கிடப்பதை பார்த்தால் அவள் உடைந்து தான் போவாள். ஒருவேளை அப்படி கூட இருக்குமோ என்று எண்ணிய போது ஸ்ரீராமுக்கே கூட நடுக்கம் ஏற்பட்டது.

அரசு மருத்துவமனையை வந்தடைந்தான் ஸ்ரீராம். பிணவறையின் வெளியே அவனுக்காக காத்திருந்தார் இன்ஸ்பெக்டர். காரை நிறுத்திவிட்டு அவரிடம் வந்தான் ஸ்ரீராம்.

"வரிங்களா சார்?"

சரி என்று தலையசைத்து அவரைப் பின் தொடர்ந்தான் ஸ்ரீராம். வெள்ளை நிற காடா துணியில் ஒரு உடல் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. மெல்ல அதன் அருகில் வந்த ஸ்ரீராம் நிம்மதி பெருமூச்சு விட்டான். அது காமராஜ் இல்லை. அந்த மனிதனை இதற்கு முன் அவன் பார்த்ததே இல்லை.

"உங்களால இவனை அடையாளம் தெரிஞ்சுக்க முடியுதா, சார்?" எனக் கேட்டார் இன்ஸ்பெக்டர்.

"இல்ல சார். நான் இவரை பார்த்ததே இல்ல"

"இதை பாருங்க சார்" என்று  மடித்து வைக்கப்பட்ட ஒரு காகிதத்தை அவனிடம் கொடுத்தார் இன்ஸ்பெக்டர்.

அதை திறந்து பார்த்த ஸ்ரீராமின் புருவங்கள் உயர்ந்தது. அதில் அவனுடைய வீட்டு முகவரி, அலுவலக முகவரி, பண்ணை வீட்டின் முகவரி, மற்றும் அவன் குடும்பத்தை சேர்ந்த அனைவரது கைபேசி, மற்றும்  தொலைபேசி எண்களும் அதில் இருந்தன.

"உங்க வீட்ல தாக்குதல் நடத்தியது இவனா இருக்குமோன்னு எங்களுக்கு சந்தேகம் வர வச்சது இது தான் சார். இவன்கிட்ட இருந்து எடுத்த கன்னும் உங்க வீட்டுல கிடைச்ச புல்லட்சும் மேட்ச் ஆகுதுன்னு நான் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லியிருந்தேன். இவனை உங்களுக்கு தெரியாதுன்னு சொல்றீங்க. அப்படின்னா உங்களை கொல்ல சொல்லி வேற யாரோ தான் இவனை அனுப்பி இருக்கணும். இந்த தாக்குதலுக்கான காரணத்தை ரொம்ப சீக்கிரம் நாங்க கண்டுபிடிச்சிடுவோம் சார்"

"தேங்க்யூ இன்ஸ்பெக்டர். நீங்க எப்ப வேணும்னாலும் என்னை கூப்பிடலாம்"

"நிச்சயமா... நீங்களும் கல்பிரிட் யாருன்னு கண்டு பிடிக்கிற வரைக்கும் ஜாக்கிரதையா இருங்க."

"ஓகே சார்"

அவருடன் சம்பிரதாயமாய் கைகுலுக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் ஸ்ரீராம். ஸ்ரீராம் வீடு வந்து சேர்ந்த பொழுது அவனுக்கு குகனிடம் இருந்து அழைப்பு வந்தது. காரை விட்டு கீழே இறங்கியபடி அந்த அழைப்பை ஏற்றான் ஸ்ரீராம்.

"சொல்லு குகா"

"நீயும் மிதிலாவும் எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கோம். நான் இப்ப தான் ஜி ஹெச் போயிட்டு வரேன். அந்த ஷூட்டரை ஐடென்டிஃபை பண்ண என்னை இன்ஸ்பெக்டர் வரச் சொல்லி இருந்தார்"

"பண்ண முடிஞ்சுதா?"

"இல்ல. அவன் யாருன்னு எனக்கு தெரியல"

" ஓ... "

"நீ எதுக்கு எனக்கு கால் பண்ண?"

"சில ஃபைல்சில் உன்னுடைய சிக்னேச்சர் தேவைப்படுது. நீ ஆஃபீசுக்கு வர வேண்டாம். நான் வந்து உன்கிட்ட ஸைன் வாங்கிக்கிறேன்"

"வேண்டாம். நானும் மிதிலாவும் மத்தியானத்துக்கு மேல ஆஃபீஸுக்கு வறோம்"

"நீ வீட்டை விட்டு வெளியே வந்தா, மிதிலாகிட்ட அடி வாங்க வேண்டி வரலாம், ஜாக்கிரதையாக இரு" என்று கிண்டல் செய்தான் குகன்.

அதைக் கேட்டு தன் கன்னத்தை தடவியபடி புன்னகை புரிந்தான் ஸ்ரீராம், அந்த சரித்திர நிகழ்வு ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது என்பதை எண்ணி.

"நாங்க உன்னை ஆஃபீஸ்ல பார்க்கிறோம்" என்று அழைப்பை துண்டித்துவிட்டு உள்ளே நுழைந்தான் ஸ்ரீராம்.

வரவேற்பறையில் அனைவருடனும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள் மிதிலா. அவனைப் பார்த்தவுடன் அவனை நோக்கி ஓடிவந்தாள். தன் கையை காட்டி அவளை தடுத்தான் ஸ்ரீராம்.

"தூரமா நில்லு மிதிலா. நான் மார்ச்சுவரிக்கு போயிட்டு வரேன். நான் போய் குளிச்சுட்டு வரேன்"

அவனை கேள்வி கேட்டபடி பின்தொடர்ந்தாள் மிதிலா.

"என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க"

"அந்த ஷூட்டர்கிட்ட நம்மளை பத்தின எல்லா டீடெயில்ஸும் இருந்தது"

"போலீஸ் என்ன சொன்னாங்க?"

"இதுக்கு பின்னாடி யார் இருக்கிறதுன்னு சீக்கிரமா கண்டுபிடிச்சிடுவோம்னு சொன்னாங்க"

"ம்ம்ம்"

"சாப்பிட்டுட்டு ஆஃபீஸுக்கு போயிட்டு வரலாம் ரெடியாயிரு"

"எதுக்கு?"

"முக்கியமான சில ஃபைல்ல சைன் பண்ண வேண்டி இருக்கு"

சரி என்று தலையசைத்தாள் மிதிலா.

மதிய உணவின் போது எல்லோரிடமும் விஷயத்தை கூறினான் ஸ்ரீராம். சாப்பிட்டு முடித்த பின் அலுவலகம் செல்ல தயாராகி வந்தாள் மிதிலா. அலுவலகம் செல்லும் வழியில் இதைப் பற்றி பேசியபடி இருந்தார்கள் இருவரும்.

அலுவலகம் வந்து சேர்ந்தவுடன், வாசலில் மிதிலாவை இறக்கி விட்டு காரை பார்க் செய்யச் சென்றான் ஸ்ரீராம். ஸ்ரீராம் காரை பார்க் செய்த போது, ரியர் வியூ கண்ணாடியின் வழியாக தன்னை யாரோ கவனித்துக் கொண்டிருப்பதை கண்டான். அது யார் என்று அவனுக்கு தெரிந்தது. அது அவனுடைய மாமனார் தான்.

காரை விட்டு கீழே இறங்கிய ஸ்ரீராம், காரில் சாய்ந்தபடி கைகளை கட்டிக் கொண்டு நின்றான். தூணுக்கு பின்னால் இருந்து வெளியே வந்தார் காமராஜ்.

"எதுக்காக எங்களை ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கீங்க?" என்றான் கடினமான குரலில்.

"எனக்கு உங்களுடைய உதவி வேணும்" என்றார் காமராஜ்.

"என்ன உதவி?"

"தயவு செய்து முடியாதுன்னு மட்டும் சொல்லாதீங்க" என்றார் கெஞ்சலாக.

"என்ன விஷயம்னு சரியா தெரியாம என்னால வாக்கு கொடுக்க முடியாது" என்றான் உறுதியாக ஸ்ரீராம்.

"அதை உங்களால மட்டும் தான் செய்ய முடியும்"

 தன் கண்களை சுருக்கி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான் ஸ்ரீராம்.

"அப்படின்னா நான் நிச்சயம் உதவுறேன்"

தன்னுடைய பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய நகைப் பெட்டியை எடுத்து ஸ்ரீராமை நோக்கி நீட்டினார் காமராஜ்.

"இதை மிதிலாகிட்ட கொடுத்துடுங்க"

அவர் கையில் இருந்து அதை பெற்றுக் கொள்ளாமல், அந்த நகை பெட்டியை பார்த்துவிட்டு அவர் முகத்தை பார்த்தான் ஸ்ரீராம்.

"நீங்க என்னை சந்தேகப்பட தேவையில்ல. கடந்த பத்து வருஷமா ஜெயில்ல நான் சம்பாதிச்ச பணத்தில் தான் இதை வாங்கினேன்" என்றார் மெல்லிய குரலில்.

"மிதிலா இதை ஏத்துக்க மாட்டா" என்று பெருமூச்சு விட்டான் ஸ்ரீராம்.

"அதுக்காகத் தானே உங்களுடைய உதவியை நான் கேக்குறேன்... ஒரு அப்பாவா நான் இது வரைக்கும் அவளுக்கு எதுவுமே செய்யல. இந்த சின்ன திருப்தியையாவது எனக்கு கொடுங்க" என்று கெஞ்சினார் காமராஜ்.

"மிதிலாகிட்ட என்னை பொய் சொல்ல சொல்றீங்களா?" என்று அவர் வாயை அடக்க முயன்றான் ஸ்ரீராம்.

அதைக்கேட்டு மெல்லிய புன்னகை பூத்தார் காமராஜ்.

"நிச்சயமா இல்ல... எப்படிப்பட்ட சூழ்நிலையையும் மாத்திக் காட்டக் கூடியவர் ஸ்ரீராம் கருணாகரன்னு கேள்விப்பட்டேன். இதுக்கும் ஏதாவது ஒரு ஐடியாவை யோசிச்சு அவகிட்ட கொடுங்களேன்"

அதை கேட்ட ஸ்ரீராம் வியப்பில் ஆழ்ந்தான். அவர் கூறுவதை எல்லாம் பார்க்கும் போது அவனைப் பற்றி காமராஜ் நன்கு விசாரித்திருக்கிறார் என்று புரிந்தது. சில நொடி யோசித்தவன் சரி என்று தலை அசைத்தான்.

"ரொம்ப ரொம்ப நன்றி" என்று கூறியபடி அந்த டப்பாவை அவனிடம் கொடுத்தார் காமராஜ்.

"நீங்க மிதிலாவுடைய அப்பா.  உங்களால தான் அவ எனக்கு கிடைச்சா என்கிற உண்மையை ஏத்துகிட்டு தான் ஆகணும். அதனால தான் உங்களுக்கு நான் உதவ நினைக்கிறேன்"

"ரொம்ப நன்றி மாப்பிள்ளை... என் மகளுக்கு ஒரு நல்ல அப்பா கிடைக்காம போயிருக்கலாம். ஆனா, கடவுள் அவளுக்கு ஒரு நல்ல புருஷனை கொடுத்திருக்கார். அவளை கவசமாய் இருந்து பாதுகாக்கிறதுக்கு ரொம்ப நன்றி" என்று காமராஜ்  உணர்ச்சி வசப்பட, தானும் உணர்ச்சிவசப்படாமல் இருக்க படாத பாடு பட்டான் ஸ்ரீராம்.

"நீங்க எங்க தங்கி இருக்கீங்க? நீங்க சேர்த்து வச்ச பணத்தை எல்லாம் உங்க மகளுக்கு கொடுத்துட்டா, உங்க செலவுக்கு என்ன செய்வீங்க?" என்று அக்கறையுடன் தான் கேட்டான் ஸ்ரீராம். ஆனால் அந்த அக்கறையை காட்டிக்கொள்ளவில்லை.

"ஒரு சின்ன குடோனில் எனக்கு செக்யூரிட்டி வேலை கிடைச்சிருக்கு. நான் தங்கவும் அங்கேயே இடம் கொடுத்திருக்காங்க. அது போதும் எனக்கு"

"அந்த அட்ரஸை எனக்கு கொடுங்க" காமராஜை கண்காணித்த தான் அந்த முகவரியை கேட்டான் ஸ்ரீராம்.

"மடிப்பாக்கம் காந்தி பார்க் பின்னாடி தான் அந்த குடோன் இருக்கு. அதோட சரியான அட்ரஸ் எனக்கு தெரியல. ஓனர்கிட்ட கேட்டு உங்களுக்கு நான் சொல்றேன்"

"உங்களுக்கு வேணும்னா நான் நல்ல வேலை வாங்கி தறேன்"

"வேண்டாம் மாப்பிள்ளை. என் ஒருத்தனுக்கு இதுவே அதிகம்"

சரி என்று தலையசைத்தான் ஸ்ரீராம்.

"நான் சாயங்காலம் ஆறு மணிக்கு வேலையில இருக்கணும். நான் கிளம்பறேன்"

"சரி. உங்களுக்கு ஏதாவது வேணும்னா என்னை தயங்காம கேக்கலாம்"

சரி என்று மெல்லிய புன்னகையுடன் தலையசைத்தார் காமராஜ். அவர் கொடுத்த நகை பெட்டியை தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்தான் ஸ்ரீராம். ஒருவேளை, அவர் கொலை செய்திருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் அவனுக்கு இருந்தது. ஆனால் காமராஜின் வெகு இயல்பான நடவடிக்கை அந்த சந்தேகத்தை அழித்தது. தனது அறைக்கு வந்த ஸ்ரீராம் காலம் தாழ்த்தாமல் தாமஸுக்கு ஃபோன் செய்தான்.

"சொல்லுங்க எஸ் ஆர் கே"

"மடிப்பாக்கம் காந்தி பார்க் பின்னாடி இருக்கிற குடோனில் தான் காமராஜ் வேலை செய்றார். அவர் மேல ஒரு கண் வையுங்க"

"உங்களுக்கு எப்படி சார் தெரிஞ்சது?"

"இப்போ தான் அவர் என்னை வந்து பாத்துட்டு போறாரு"

"என்ன சார் சொன்னாரு?"

"ஒன்னுமில்ல... அவர் மகளை பார்க்க வந்தாரு"

அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடலைப் பற்றி அவனிடம் ஒன்றும் கூறவில்லை ஸ்ரீராம்.

"ஓஹோ"

"அவரை வாட்ச் பண்ணுங்க"

"கிளம்பிட்டேன் சார்"

அழைப்பைத் துண்டித்து விட்டு தான் கையெழுத்திட வேண்டிய கோப்புகளில் கையொப்பமிட துவங்கினான் ஸ்ரீராம். சிறிது நேரம் கழித்து, கதவைத் திறக்கும் சத்தம் கேட்டு தலையை உயர்த்தினான். உள்ளே நுழைந்தாள் மிதிலா.

"முடிச்சிட்டீங்களா?"

"முடிச்சாச்சு" என்று எழுந்து நின்று

"கிளம்பலாம்" என்றான்.

"அதான் ஆஃபீஸுக்கு வந்துட்டோமே... வந்ததுக்கு கொஞ்சம் நேரம் வேலை பார்த்துட்டு போகலாமே"

"மீதி வேலையை குகன் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டான். நம்ம போகலாம்"

பூவனம்

ஸ்ரீராமுடன் உள்ளே நுழைந்த மிதிலா,

"நீங்க போங்க நான் உங்களுக்கு காபி கொண்டுவறேன்" என்றாள்.

சரி என்று தலையசைத்துவிட்டு, படியேற துவங்கினான் ஸ்ரீராம். அப்போது அவனுக்கு தாமஸிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்தது. தன் அறைக்குள் நுழைந்த படி அழைப்பை ஏற்றான் ஸ்ரீராம்.

"சொல்லுங்க தாமஸ் "

"மடிப்பாக்கம் காந்தி பார்க் பக்கத்துல எந்த குடோனும் இல்ல சார்." என்றான் தாமஸ், ப்ளூடூத்தில் பேசியபடி தனது இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டு.

"ஆர் யூ ஷ்யூர்?"  நிதானமாய் கேட்டான் ஸ்ரீராம். அவனுக்கு இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஒருவாறு அவன் இதை எதிர்பார்த்திருந்தான்.

"ஆமாம் எஸ்ஆர்கே" என்று கூறி சிக்னலில் வண்டியை நிறுத்தினான் தாமஸ்.

அப்போது ஒரு விஷயம் அவன் கவனத்தை ஈர்த்தது. சில பேர் சேர்ந்து ஒருவரை அடித்துக் கொண்டிருந்தார்கள். நல்லவேளை, அங்கு போலீஸ் வந்து சேர்ந்துவிட்டது.

"லைன்ல இருக்கீங்களா தாமஸ்?" என்றான் ஸ்ரீராம்.

"இருக்கேன் எஸ்ஆர்கே"

"அவரைக் கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க"

"நிச்சயம் செய்யறேன்"

 அழைப்பைத் துண்டிக்க போனவன்,

"ஒரு நிமிஷம் எஸ்ஆர்கே" என்றான் பதற்றத்துடன்.

"சொல்லுங்க"

"பிக்பாக்கெட் அடிச்சதுக்காக போலீஸ் காமராஜை அரெஸ்ட் பண்றாங்க"

"என்ன்ன்னனது...? பிக்பாக்கெட் அடிச்சதுக்காகவா?"

"ஆமாம் எஸ்ஆர்கே. இதோ என்னோட என் கண்ணு முன்னாடி தான் அரஸ்ட் பண்றாங்க"

"எந்த ஸ்டேஷனுக்கு கொண்டு போறாங்கன்னு கேட்டு தெரிஞ்சுக்கோங்க"

"இதோ போறேன்" போலிஸ் ஜிப்பை பின்தொடர்ந்து சென்றான் தாமஸ்.

அழைப்பை துண்டித்து விட்டு குழப்பத்துடன் யோசனையில் ஆழ்ந்தான் ஸ்ரீராம். இப்பொழுது தான் மிதிலாவிடம் கொடுக்குமாறு ஒரு நகை பெட்டியை கொடுத்தார் காமராஜ். அவருக்கு பணத்தேவை இருந்தால் எதற்காக இந்த நகையை வாங்கினார்? தான் வலிய வந்து உதவுகிறேன் என்று கூறிய போதும் அதை அவர் மறுத்து விட்டாரே, ஏன்? அவன் எவ்வளவு முயன்ற போதும் சில புள்ளிகள் இணையவே இல்லை.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top