73 வீட்டிலிருந்து வேலை

73 வீட்டிலிருந்து வேலை

தங்களை ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் பார்வையை இலட்சியம் செய்யாமல், மிதிலாவை பின்தொடர்ந்து சென்ற ஸ்ரீராம், கதவை சாத்தி தாழிட்டான்.

"என்னால எப்படி வீட்டிலேயே இருக்க முடியும் மிதிலா?" என்று பெருமூச்சு விட்டான்.

"ஏன்??? ஏன் உங்களால் இருக்க முடியாது?" என்று அவனை திருப்பி கேள்வி கேட்டாள் மிதிலா.

"என்னோட வொர்க் ஷெட்யூலை பத்தி எதுவும் தெரியாத மாதிரி பேசாத"

"நான் உங்க பிஏ. உங்களுடைய ஒர்க் ஷெட்யூல் என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும்"

"அப்புறம் ஏன் பிடிவாதமா இருக்க? இந்த வாரம், நான் ரொம்ப முக்கியமான ரெண்டு மீட்டிங் அட்டென்ட் பண்ண வேண்டி இருக்கு. உனக்கு தெரியாதா?"

"எதுக்காக நீங்க மீட்டிங் அட்டென்ட் பண்ணனும்?" என்று அவள் எதுவுமே தெரியாதது போல் கேட்க,

"என்ன கேள்வி இது?" என்று முகம் சுருக்கினான் ஸ்ரீராம்.

"பதில் சொல்லுங்க"

"மீட்டிங் அட்டென்ட் பண்ணலன்னா நம்ம நல்ல கான்ட்ராக்ட்டை  இழந்துடுவோம்"

"எதுக்காக நமக்கு இந்த காண்ட்ராக்ட் வேணும்?"

 தன் கண்களை சுழற்றினான் ஸ்ரீராம்.

"சொல்லுங்க ஸ்ரீ"

"நம்முடைய கம்பெனியை ஃபர்ஸ்ட் பொசிஷன்ல நிலை நிறுத்த"

"எதுக்காக நம்ம கம்பெனி ஃபர்ஸ்ட் பொசிஷன்ல இருக்கணும்?"

"நம்ம கம்பெனிக்குன்னு ஒரு ரெப்யூடேஷன் இருக்கு"

"நம்ம கம்பெனிக்குன்னு ஒரு ரெப்யூடேஷன் இருக்கு... நம்ம கம்பெனி நம்பர் ஒன் பொசிஷன்ல இருக்கணும்னா, அதுக்கு நீங்க உயிரோட இருக்கணும்"

அவள் கூறியதை கேட்டு வாயடைத்து போனான் ஸ்ரீராம்.

"நான் ஒத்துக்கிறேன். நீங்க இந்த மீட்டிங்கை அட்டென்ட் பண்ணலன்னா, நம்ம கம்பெனி முதலிடத்தில் இருந்து கீழே இறங்கும். ஆனா அதை காப்பாத்த நீங்க இருப்பீங்க. இழந்த எல்லாத்தையும் நம்மால திரும்பி பிடிக்க முடியும். உங்க உயிருக்கு ஆபத்து இருக்கு ஸ்ரீ. சில விஷயங்களை மட்டும் வரும் முன் காப்பது தான் புத்திசாலித்தனம். உங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆயிடுச்சின்னா அதை ஈடு செய்ய முடியாது. உங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆனா நான் என்ன செய்வேன்?"

தன் மனைவியின் நியாயமான கவலை, ஸ்ரீராமின் முகத்தை மிளிரச் செய்தது. அவளுடன் விளையாடலாம் என்று எண்ணி,

"எஸ் ஆர் ஃபேஷன்சுக்கு, எல்லா பிரச்சினைக்கும் தீர்வு காணக்கூடிய ஒரு திறமைசாலியான பாஸ் கிடைப்பாங்க. அவங்க நம்ம கம்பெனியை முதலிடத்துக்கு கொண்டு வருவாங்க... நான் உயிரோடு இருந்தாலும், இல்லனாலும்"

ஸ்ரீராம் சிறிதும் எதிர்பார்க்காத வண்ணம், மிதிலாவிடமிருந்து பட்டென்று ஒரு அறை அவன் கன்னத்தில் விழுந்தது.

"வாட் த ஹெல்... " என்றான் ஸ்ரீராம்

"வாயை மூடுங்க... இதுக்காகத் தான் என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிட்டீங்களா? எவ்வளவு தைரியம் இருந்தா நீங்க இப்படி எல்லாம் பேசுவீங்க? நீங்க என்ன நினைக்கிறீங்க, உங்க சிஇஓ சேர்ல அலட்டலா  உட்காந்து, உங்க சாம்ராஜ்யத்தை நான் சந்தோஷமா ஆளுவேன்னு நினைச்சிங்களா?" என்ற போது அவள் கண்கள் கலங்கியது.

ஸ்ரீராம் அவளை அணைக்க முயல, அவனை பிடித்து தள்ள முயன்றாள் மிதிலா. அவனுக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்காமல் இறுக்கமாய் அணைத்துக் கொண்டு,

"ஐ அம் சாரி... ஐ அம் சாரி" என்றான்.

"நீங்களும் உங்க சாரியும்" என்று அவனை அணைத்துக் கொண்டாள் மிதிலா.

அவள் உச்சந்தலையில் முத்தமிட்டு,

"இப்ப நான் என்ன செய்யணும்? வீட்ல இருக்கணும்... அவ்வளவு தானே? சரி இருக்கேன்."

அவள் சரி என்று தலையசைத்தாள்.

"அந்த ஷூட்டர் பிடிபடும் வரைக்கும் நான் வீட்டை விட்டு எங்கேயும் போகமாட்டேன்"

"இன்னொரு தடவை இப்படி எல்லாம் பேசாதீங்க"

"நிச்சயம் பேசமாட்டேன்... பேசி அடி வாங்க மாட்டேன்" என்று அவன் சிரிக்க, களுக்கென்று சிரித்த மிதிலா, அழுத்தமாய் அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

அவள் அங்கிருந்து செல்ல எத்தனித் தபோது அவள் கையை பற்றி தன்னை நோக்கி இழுத்தான்.

"நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க? நான் எதுக்காக வீட்ல இருக்க ஒத்துக்கிட்டேன்? உனக்காகத் தான். நான் வீட்ல இருக்கணும்னா, நீ என் கூட இருக்கணும் மிஸஸ் ஸ்ரீராம்" என்றான்.

"நான் உங்க கூட தான் இருக்கப் போறேன் மிஸ்டர் ஸ்ரீராம். உங்களுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்." என்று அவன் கன்னத்தைக் கிள்ளினாள்.

அவன் சரி என்று தலை அசைத்தான். அப்போது ஸ்ரீராமின் கைபேசி ஒலிக்க, மீண்டும் அவன் கன்னத்தில் முத்தமிட்டு ஓடிச் சென்றாள் மிதிலா, ஸ்ரீராமை புன்னகைக்க வைத்து. புன்னகை மாறாமல் வந்த அழைப்பை ஏற்றான். அந்த அழைப்பு தாமஸிடம் இருந்து வந்தது.

"சொல்லுங்க தாமஸ். காமராஜ் எப்படி இருக்காரு?"

"ஐ அம் சாரி, எஸ்ஆர்கே. நான் அவரை மிஸ் பண்ணிட்டேன்" என்றான் வருத்தத்துடன் தாமஸ்.

"என்ன்னன? எப்படி இவ்வளவு பொறுப்பில்லாம இருக்கீங்க?" என்று எரிந்து விழுந்தான் ஸ்ரீராம்.

"நான் அவரைத் தான் ஃபாலோ பண்ணிக்கிட்டு இருந்தேன். அவர் ஜெயில்ல இருந்து வந்த நாளிலிருந்து  மிதிலா மேடமை ஃபாலோ பண்ணிக்கிட்டு இருந்தாரு."

"என்ன??? அவர் மிதிலாவை ஃபாலோ பண்ணாரா?"

"ஆமாம். ஆனா, அவர் அவங்ககிட்ட நெருங்க முயற்சி பண்ணவேயில்ல. நான் அமைதியா அவரை வாட்ச் பண்ணிக்கிட்டு இருந்தேன். நீங்க உங்க ஃபார்ம் ஹவுஸ்ல இருந்த போது நாங்களும் அங்க தான் இருந்தோம். நான் அவரை கவனிச்சிக்கிட்டு இருந்த நேரம், அவர் உங்க வீட்டை கவனிச்சிக்கிட்டு இருந்தார். உங்களை யாரோ அட்டாக் பண்ணப்போ, துப்பாக்கி சுடப்பட்ட திசையை நோக்கி அவர் ஓடினார். நானும் அவரை ஃபாலோ பண்ண முயற்சி பண்னேன். ஆனா, என்னால முடியல. அவர் எங்கே போனாருன்னே தெரியல"

அதைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றான் ஸ்ரீராம். காமராஜ் அவர்களை பின் தொடர்ந்து கொண்டிருந்தாரா? மிதிலாவை பார்ப்பதற்காக அவர் அதை செய்திருக்கக் கூடும். ஆனால் அவர் எங்கு சென்றார்? தாமஸ் அவரை பின்தொடர்ந்த விஷயம் அவருக்கு தெரிந்து விட்டதோ? கலவரப்பட்டான் ஸ்ரீராம். காமராஜ் எப்படிப்பட்டவர் என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. அவருடைய உண்மையான எண்ணம் என்ன என்பதும் அவனுக்கு புரியவில்லை. அவன் நிம்மதி இழந்தான்.

மிதிலா உணவு தட்டை எடுத்து வருவதைப் பார்த்து, தன்னை சுதாகரித்துக் கொண்டு புன்னகை புரிந்தான்.

"வாங்க சாப்பிடலாம்" என்று சோபாவிற்கு முன்னால் இருந்த டீப்பாயின் மீது அமர்ந்தாள் மிதிலா.

அவன் சோபாவின் மீது அமர்ந்து, அவளைத் தனக்கு ஊட்டி விடச் சொல்லி கேட்கலாம் என்று எண்ணினான். அதற்கு முன் மிதிலாவே,

"நான் உங்களுக்கு ஊட்டி விடுறேன்" என்றாள்.

சரி என்று குறு நகையுடன் தலையசைத்தான் ஸ்ரீராம். மிதிலா ஊட்டிவிட துவங்கினாள். ஸ்ரீராம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் என்றாலும், அவனது மனம் காமராஜை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது. அவன் வேறு ஏதோ நினைவில் இருக்கிறான் என்பது புரிந்திருந்தது மிதிலாவுக்கு. அவன் தாக்குதலைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பதாய் அவள் எண்ணிக் கொண்டாள்.

"என்ன யோசிச்சு கிட்டு இருக்கீங்க ஸ்ரீ?"

"நம்ம மீட்டிங் எல்லாத்தையும் போஸ்ட் போன் பண்ணுறதை பத்தி யோசிக்கிறேன்"

"குகாவும், பராவும் அதை பார்த்துக்குவாங்க. நீங்க அவங்களை கைட் பண்ணா மட்டும் போதும்"

"என்னோட ப்ரோக்ராம்ஸையும் மீட்டிங்ஸையும் ரீஷெட்யூல் பண்ற பொறுப்பை மட்டும் நீ ஏத்துக்கோ "

"அதை என்கிட்ட விடுங்க. நான் பார்த்துக்கிறேன்"

அவன் சாப்பிட்டு முடித்த பின் தட்டுடன் எழுந்து நின்றாள் மிதிலா.

"நான் இப்ப வரேன்" என்று கூறி விட்டு சமையல் அறையை நோக்கிச் சென்றாள்.

தங்கள் மீது நிகழ்ந்த தாக்குதலை எண்ணியபடி கட்டிலில் படுத்தான் ஸ்ரீராம். அதை செய்தது யாராக இருக்கக் கூடும்? அவனைக் கொல்லும் அளவிற்கு தைரியம் வாய்ந்த எதிரி அவனுக்கு இருக்கிறார்களா?

மீண்டும் அவனுக்கு ஒரு கைப்பேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பு குகனிடம் இருந்து வந்தது.

"சொல்லு குகா"

"லயா, நேத்து இந்தியாவை விட்டு கிளம்பி போயிட்டா. வேலாயுதம் இப்போதைக்கு ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகிறதா தெரியல. மிஸஸ் சக்கரவர்த்தி அவ ஹஸ்பன்ட் கூட  மும்பை போயிருக்கா"

"லயா, இந்தியாவைவிட்டு போறதுக்கு முன்னாடி இதை ஏற்பாடு செஞ்சுட்டு போயிருக்கலாம். ஜெயில்ல இருந்தபடியே இதை செய்யுற அளவுக்கு வேலாயுதம்கிட்ட பணம் இருக்கு. மிஸஸ் சக்கரவர்த்தி இதை மும்பையில் இருந்தே செஞ்சிருக்கலாம்..."

"ஆமாம் இவங்க மூணு பேரு மேலேயும் சந்தேகப்பட நிறைய பாஸிபிலிடீஸ் இருக்கு"

"அவங்களை கண்காணி. வேலாயுததோட பையன் எங்க இருக்கான்னு தெரிஞ்சுக்கோ"

"ஆனா எனக்கு என்னமோ அவங்ககிட்ட இருந்து நமக்கு எந்த க்ளுவும் கிடைக்கும்னு தோனல. ஏன்னா, இந்த வேலையை அவங்க செஞ்சிருந்தா, மாட்டிக்க கூடாதுன்னு ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பாங்க."

"போலீஸ் எப்படி இதை கண்டுபிடிக்க போறாங்கன்னு எனக்கும் ஒன்னும் புரியல. பாக்கலாம்"

அழைப்பை துண்டித்தான் ஸ்ரீராம். அவன் எவ்வளவோ முயன்ற போதும் எந்த புள்ளிகளும் இணையவில்லை. அவனுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. அப்பொழுது கதவை சாத்திக்கொண்டு உள்ளே வந்தாள் மிதிலா. அவன் அருகில் வந்து அமர்ந்தவள்,

"எல்லாம் சரியாயிடும் கவலைப்படாதீங்க. நீங்க வீட்டிலேயே இருங்க. நம்மளை அட்டாக் பண்ணது யாருன்னு சீக்கிரமாவே போலீஸ் யாருன்னு கண்டு பிடிச்சு அரெஸ்ட் பண்ணுவாங்க"

"போலீஸ், அட்டாக் பண்ணவங்களை பிடிச்சிட்டா நான் ரிலாக்ஸ் ஆகிடுவேன்"

"நீங்க நம்மளை பத்தி கவலைப் படுறீங்களா?"

"என்னால எதையுமே கெஸ் பண்ண முடியல. ஏன்னா, நம்மள அட்டாக் பண்ணவங்களுடைய இண்டென்ஷன் என்னன்னு தெரியல"

"நம்ம வீட்டுல எல்லாரையும் நான் ஜாக்கிரதையாக இருக்க சொல்லி இருக்கேன். நீங்க கவலைப்படாதீங்க"

"சரி. ஏற்கனவே ரொம்ப லேட் ஆயிடுச்சு நீ படுத்து தூங்கு"

இருவரும் படுத்தார்கள். மிதிலா உடனே உறங்கி போனாள். ஆனால் ஸ்ரீராமுக்கு தூக்கம் வரவில்லை. அவர்களை சுற்றியிருக்கும் ஆபத்து விலகும் வரை அவனுக்கு நிம்மதியான தூக்கம் இருக்கப் போவதில்லை.

 மறுநாள்

வீட்டிலிருந்தே வேலை செய்வது என்று முடிவெடுத்து விட்ட போதிலும், காலையில் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தாள் மிதிலா. அவளைத் தேடி கொண்டு வந்தான் ஸ்ரீராம். அவள் சாம்பாரை கையில் ஊற்றி ருசி பார்த்துக் கொண்டிருந்தாள்.

"பர்ஃபெக்ட்டா இருக்கு பிரியா" என்றாள்.

தன் கைகளை கட்டிக் கொண்டு நின்ற ஸ்ரீராமை பார்த்தாள் பிரியா. அவள் தன் முழங்கையால் மிதிலாவை இடித்து அங்கே பார் என்று சைகை செய்தாள்.

"உங்களுக்கு ஏதாவது வேணுமா?" என்றாள் மிதிலா ஸ்ரீராமிடம் .

"இது தான் நீ வீட்டிலிருந்து வேலை செய்யுற லட்சணமா?"

"நான் இப்ப வரேன் பிரியா" என்று கூறிவிட்டு, ஸ்ரீராமை தன்னுடன் வருமாறு சைகை செய்தாள் மிதிலா.

அவளை பின்தொடர்ந்து வந்தான் ஸ்ரீராம். அவனது மடிக்கணினியின் அடியில் வைத்திருந்த சில தாள்களை எடுத்து அவனிடம் நீட்டினாள். அதில் அவனுடைய மாற்றி எழுதப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை பார்த்து அசந்து போனான்.

"நீங்க தூங்கிட்டு இருந்தப்பவே இதை நான் முடிச்சிட்டேன்" என்றாள் மிதிலா.

அவன் வெகு தாமதமாய் தூங்கியதால் காலை எழுந்திருக்க சிறிது நேரம் ஆகிவிட்டது. இந்த நேரத்தில் மிதிலா இதை முடித்து விட்டிருக்கிறாள்.

"இதை முடிக்க எனக்கு ஒரு மணி நேரம் ஆச்சு. வேலை முடிஞ்சிடுச்சுன்னு பிரியாவுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நெனச்சேன்"

"நீ என்கூடவே இருக்கேன்னு சொல்லியிருக்க. அதை மறந்துடாத"

"நான் மறக்கல... வாங்க போய் சாப்பிடலாம்"

"இப்போ தான் மாத்திரை போட்டேன் கொஞ்ச நேரம் கழிச்சி தான் சாப்பிடுவேன்"

"மாத்திரை சாப்பிடுறதை ஸ்டாப் பண்ணுங்க ஸ்ரீ"

"நான் என்ன செய்யறது? எனக்கு யோகா சொல்லிக் கொடுக்காம, என் ஒய்ஃப்,  அவளை மட்டும் ஃபிட்டா வச்சிக்கிறா" என்றான் கிண்டலாக.

 தன் கண்களை சுழற்றி சிரித்தாள் மிதிலா.

இருவரும் இணைந்து வீட்டில் வேலை செய்யத் துவங்கினார்கள். வேலை செய்ய ஆரம்பித்தவுடன்,  வேலையில் முழுவதுமாய் மூழ்கிப் போனாள் மிதிலா வழக்கம் போல. வேலை செய்யாமல், அவளை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த அந்த பாவப்பட்ட மனிதனைப் பற்றி அவள் கவலை கொள்வதாய் இல்லை.

அவள் கையிலிருந்த கோப்பை பிடுங்கினான் ஸ்ரீராம்.

"அதை என்கிட்ட கொடுங்க ஸ்ரீ"

"என்ன அவ்வளவு சீரியஸா வேலை செய்யுற? எதிர்ல ஒருத்தன் இருக்கான்னு நினைப்பே இல்லையா உனக்கு?" 

"நம்ம ஆபீஸ்ல இருக்கோம்னு நினைச்சுக்கோங்க. இது ரொமான்ஸ் பண்ற இடமில்ல. என்னுடைய வேலையை முடிக்க விடுங்க"

"ரொம்ப பர்டிகுளரா இருக்காத"

"எப்போதிலிருந்து ஸ்ரீராம் கருணாகரன் பர்டிகுளரா இல்லாமல் போனாரு?"

"ஒரு மாயக்காரி என்னை மயக்கின பிறகு"

"நான் மாயக்காரியா?"

"ஆமாம்... பாரு என்னை கண்டுக்காம எப்படி நீ பாட்டுக்கு வேலை செய்யுறன்னு..."

"நீங்க செஞ்ச சபதத்தை மறந்துட்டீங்களா?"

"ஒரு முத்தம் என்னுடைய சபதத்தை உடைக்காது" என்று தன் இதழை அவள் இதழோடு உறவாட விட்டான் ஸ்ரீராம்.

முடிவுகளை எடுப்பதில் கைதேர்ந்தவன் என்று பெயர் எடுத்தவன் ஸ்ரீராம் கருணாகரன். அவனுடைய முடிவுகள் எப்போதும் தவறாய் போனதே இல்லை. ஆனால் இப்பொழுது, மிதிலாவை முத்தமிடலாம் என்று அவன் எடுத்த முடிவு தவறோ என்று தோன்றியது அவனுக்கு. அவனால் அதை நிறுத்தவும் முடியவில்லை, தொடரவும் முடியவில்லை...! அவன் செய்த சபதத்தை உடைக்கச் சொல்லி அவன் மனம் பரபரத்தது.

எதிர்பாராத விதமாக, அவனுடைய கைப்பேசி அழைத்து, அவன் மனதை கலைத்தது. மிதிலா திடுக்கிட்டு பின்வாங்க, பெருமூச்சுவிட்டான் ஸ்ரீராம். அவனுடைய கைபேசி *இன்ஸ்பெக்டர்* என்று காட்டியது. அந்த அழைப்பை உடனடியாய் ஏற்றான் ஸ்ரீராம்.

"சொல்லுங்க இன்ஸ்பெக்டர்"

"சார், ரெட் ஹில்ஸ் பக்கத்துல, ஒரு கிரிமினல் இன்னிக்கு கொலை செய்யப்பட்டு இருக்கான்"

கொலை செய்யப்பட்டானா? ஸ்ரீராமை பதட்டம் கவ்விக்கொண்டது. ஒருவேளை அது காமராஜாக இருக்குமோ?

"அதைப் பத்தி என்கிட்ட ஏன் சொல்றீங்க?" என்றான் பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல்.

"அவனுடைய பேண்ட் பாக்கெட்ல ஒரு சீட்டு இருந்தது. அதுல உங்களைப் பத்தியும் உங்கள் குடும்பத்தைப் பத்தியும் எல்லா விவரமும் எழுதி இருந்தது"

 ஸ்ரீராமின் பதற்றம் மேலும் அதிகரித்தது. காமராஜ் தங்களை பின்தொடர்ந்து கொண்டிருந்தார் என்று தாமஸ் கூறியிருந்தான் அல்லவா?

இன்ஸ்பெக்டர் அடுத்து கூறிய வார்த்தைகள் அவனை சாந்தப் படுத்தியது.

"அவன்கிட்ட இருந்து நாங்க எடுத்த கன்னும், உங்க ஃபார்ம் ஹவுஸ்ல சூட்டப்பட்ட புல்லட்சும் மேட்ச் ஆகுது"

அப்படி என்றால் கொல்லப்பட்டது அவன் வீட்டில் தாக்குதல் நடத்தியவனா? யார் அவனைக் கொன்றது? ஒன்றும் புரியவில்லை ஸ்ரீராமுக்கு.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top