72 மிதிலாவின் முடிவு
72 மிதிலாவின் முடிவு
மிதிலாவை பாதுகாப்பாய் அணைத்தபடி தரையில் விழுந்து கிடந்தான் ஸ்ரீராம். தாக்குதல் நின்றுவிட்டது என்று நிச்சயமாய் தெரியும் வரை அவன் அப்படியே இருந்தான். அவன் அங்கிருந்து எழ முயன்ற பொழுது அவனை இறுக்கமாய் பற்றிக் கொண்டாள் மிதிலா.
"போகாதீங்க ஸ்ரீ, ப்ளீஸ்... " என்றாள் கெஞ்சலாக.
"நான் எங்கேயும் போகல
என்னுடைய மொபைலை தான் எடுக்க போறேன். அப்ப தானே நான் போலீசுக்கு கால் பண்ண முடியும்?"
"மறுபடியும் அவங்க சுட்டா என்ன செய்றது?"
"என்னோட ஃபோன் பெட் மேல தான் இருக்கு"
இங்கும் அங்கும் பார்த்தவள், ஸ்விட்ச் போர்டு இருக்கும் திசையை கண்டுகொண்டாள்.
"இருங்க... " என கூறிவிட்டு, ஸ்விட்ச் போர்டை நோக்கி மெல்ல தவழ்ந்து சென்று விளக்கை அணைத்தாள்.
கட்டிலில் தாவிய ஸ்ரீராம், தனது கைபேசியை எடுத்து, போலீசுக்கு ஃபோன் செய்தான்.
"நான் ஸ்ரீராம் கருணாகரன் பேசுறேன்"
"சொல்லுங்க எஸ்ஆர்கே... " என்றார் அவனை நன்கறிந்த அசிஸ்டன்ட் கமிஷனர்.
"நான் என்னோட ஃபார்ம் ஹவுஸ்க்கு என் வைஃப் கூட வந்திருந்தேன். எங்களை யாரோ அட்டக் பண்றாங்க"
"அட்டாக் பண்றாங்கன்னா...??? "
"என்னை ஷூட் பண்ண ட்ரை பண்ணாங்க"
"ஷூட் பண்ணாங்களா??? நான் உங்க வீட்டுக்கு போலீசை உடனே அனுப்புறேன். இதைப் பத்தி நீங்கள் கவலைப்பட வேண்டாம் நான் பார்த்துக்கிறேன்."
அழைப்பை துண்டித்த அசிஸ்டன்ட் கமிஷனர், ஸ்ரீராமின் பண்ணை வீட்டுக்கு அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தொடர்புகொண்டு விஷயத்தைக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
அதேநேரம், ஸ்ரீராமின் பண்ணை வீட்டின் காவலாளிகள், சுடப்பட்ட திசையை கணித்துக் கொண்டு, அந்த திசையை நோக்கி ஓடினர். ஒருவன் துப்பாக்கியுடன் காரில் ஏறி தப்பிச் செல்வதை பார்த்துவிட்டு திரும்பி வந்தனர் அவர்கள்.
ஸ்ரீராமிடம் நேரில் சென்று விஷயத்தைக் கூறாமல் தொலைபேசி வாயிலாக அவனை தொடர்பு கொண்டனர். கதவைத் தட்டினால், முதல் மாடியில் இருக்கும் ஸ்ரீராம், தன்னை தாக்கியவர்கள் தான் கதவைத் தட்டுவதாக எண்ணிக் கொள்ளலாம் அல்லவா... அழைப்பை ஏற்றான் ஸ்ரீராம்.
"சார் உங்களை சுட்டவன் காரில் ஏறி தப்பிச்சு போயிட்டான்"
"நீங்க அந்த கார் நம்பரை பார்த்தீங்களா?"
"இல்ல சார். கார் பக்கவாட்டில் நின்னுக்கிட்டிருந்தது"
"சரி. இன்னும் கொஞ்சம் நேரத்துல போலீஸ் வந்துடுவாங்க. அவங்க வந்த உடனே, எனக்கு மறுபடி கால் பண்ணுங்க"
"சரிங்க சார்"
அழைப்பை துண்டித்து விட்டு கட்டிலில் அமர்ந்தான் ஸ்ரீராம். ஓடிச் சென்று அவன் அருகில் அமர்ந்து அவனை அணைத்துக் கொண்டாள் மிதிலா. அவள் பயந்திருந்தாள் என்று கூறத் தேவையில்லை. பயப்படாமல் என்ன செய்வாள்? அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பி இருக்கிறார்களே... அவள் உடலில் இருந்த சிறு நடுக்கத்தை உணர்ந்தான் ஸ்ரீராம்.
"சாரி மிதிலா... உன்னை நான் இங்க கூட்டிகிட்டு வந்து இருக்கக் கூடாது"
"அவங்க சுட்ட போது நீங்க ஜன்னல் பக்கத்தில் நின்னுக்கிட்டு இருந்ததை பார்த்து நான் ரொம்ப பயந்துட்டேன். நல்ல வேளை, உங்களுக்கு ஒன்னும் ஆகல. கடவுள் உங்களைக் காப்பாத்திட்டார். உங்களுக்கு மட்டும் அடி பட்டிருந்தா, அந்த வலியை நான் எப்படி தாங்கி இருப்பேன்னு எனக்கு தெரியல..."
மென்மையாய் சிரித்த ஸ்ரீராம், அவள் தலையை வருடியபடி,
"எனக்கு அடிபட்டா உனக்கு ஏன் வலிக்க போகுது?" என்றான்.
"பின்ன... உங்களுக்கு அடிபட்டா எனக்கு வலிக்காதா? நீங்க என்னோட ஹஸ்பண்ட். அதை மறந்துடாதீங்க..."
"நான் அதை மறக்கல. ஆனா, எல்லா ஒய்ஃபும் உன்னை மாதிரி ஹஸ்பன்டோட வலியை ஃபீல் பண்றது இல்ல"
"நம்மளை கொல்ல ட்ரை பண்ணது யாரா இருக்கும்?"
"எனக்கும் தெரியல... போலீஸ் வரட்டும். பாக்கலாம்"
"நீங்க ஜாக்கிரதையா இருக்கணும். எங்கயும் தனியா போகாதீங்க. போலிஸ்கிட்ட கேட்டு ப்ரொடக்ஷன் வாங்குங்க..."
"சரி " அவள் கூறியது எதையும் மறுக்கவில்லை அவன். அவள் அவன் மீது கொண்டிருந்த அக்கறை அவனுக்கு சந்தோஷத்தை தான் தந்தது.
அவனுக்கு மேலும் திகைப்பை தரும் வண்ணம், அவனது முகத்தை முத்த மழையால் நினைத்து விட்டாள் மிதிலா. கண்களை மூடி அந்த தருணத்தில் உளமாற மகிழ்ந்தான் ஸ்ரீராம். மீண்டும் அவனை மிதிலா அணைத்துக் கொள்ள, அவனும் அவளை அணைத்துக் கொண்டான்.
"ரிலாக்ஸ் மிதிலா... எனக்கு ஒன்னும் ஆகாது..."
மேலும் அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள்.
"தைரியமா இரு"
அவள் சரி என்று தலையசைத்தாள்.
"சரி, நீ இங்க இரு நான் போய் பார்த்துட்டு வரேன்"
"வேண்டாம்"
"போலீஸ் வந்திருப்பாங்க... லெட் மீ செக்..."
"நானும் உங்க கூட வர்றேன்"
"சொல்றதை கேளு, மிதிலா"
"முடியாது. நான் உங்களை தனியா போக விடமாட்டேன்"
"சரி, நீயும் என்கூட வா"
ஒரு போர்வையை எடுத்து, அவர்கள் நடந்த பாதையில் இருந்த கண்ணாடி துகள்களை சுத்தப்படுத்திக் கொண்டுவந்தாள் மிதிலா. இருவரும் கவனத்துடன் கால் வைத்து அந்த அறையை விட்டு வெளியே வந்தார்கள். அப்பொழுது ஒரு போலிஸ் ஜீப் அவர்கள் பங்களாவை நோக்கி வந்தது.
"போலீஸ் வந்தாச்சு. இனிமே பயப்பட வேண்டிய தேவையில்ல" என்று அவளை சமாதானப்படுத்தினான் ஸ்ரீராம்.
போலீசார் அந்த பண்ணை வீட்டை சுற்றி வளைத்துக் கொண்டனர். அந்த வீடு போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்தது. விளக்குகளை ஒளிர விட்டு போலீசாரை உள்ளே நுழைய விட்டான் ஸ்ரீராம். போலீசாருக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்துக் கொண்டிருந்தான் அவன். மிதிலாவோ அவனை விட்டு சிறிதும் விலகாமல் அவனுடனேயே அலைந்து கொண்டிருந்தாள்.
தங்கள் பணியை போலீசார் முடித்துக் கொண்ட பின், அங்கிருந்து மிதிலாவுடன் கிளம்பினான் ஸ்ரீராம். வழக்கமாய் அவன் பண்ணை வீட்டிற்கு வரும் வழியை பயன்படுத்தாமல் வேறு ஒரு பாதையைப் பயன்படுத்தினான். அது வழக்கமாய் செல்லும் பாதையை விட ஐந்து கிலோமீட்டர்கள் அதிகமாய் இருந்த போதிலும் அதைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. சற்று கவனமாக இருப்பது நல்லது என்று நினைத்தான் அவன். அதனால் அவன் எப்பொழுதும் வழக்கமாய் செய்யும் பணிகளை மாற்றி செய்வது என்று முடிவெடுத்தான். அவனுடைய தினசரி நடவடிக்கைகளை கவனித்து, அவனை தாக்க நினைப்பவர், ஏமார்ந்து போகட்டும் என்பது அவனுடைய எண்ணம்.
காரை ஓட்டிய வண்ணம், ப்ளூடூத் மூலம் அங்கு நடந்தவற்றை குகனுக்கு கூறினான் ஸ்ரீராம்.
"என்ன சொல்ற எஸ் ஆர் கே? யாரு இந்த வேலையை செஞ்சது?"
"இப்போதைக்கு எனக்கு எதுவும் தெரியாது..."
"நான் என்ன செய்யணும்?"
"லயா இந்தியாவை விட்டு போனாளா இல்லையான்னு பாரு... வேலாயுதம் ஜெயில்ல இருந்து எப்போ ரிலீஸ் ஆகப் போறார்னு தெரிஞ்சுக்கோ..."
"அப்படியே மிஸஸ் சக்கரவர்த்தியையும் செக் பண்ணிடுறேன்..."
"என்ன சொல்ற நீ? அவங்களுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"
"நம்ம ஆஃபீசுக்கு ஒரு கான்ஃபரன்ஸ்க்கு வந்த போது, மிதிலா அந்த பொம்பளையை என்கவுண்டர் பண்ணிட்டாங்க..." என்று சிரித்தான் குகன்.
"என்ன்ன்னனது? அப்படி என்ன செஞ்சா?" என்றான் ஸ்ரீராம் ஓரக்கண்ணால் மிதிலாவை பார்த்தபடி.
அன்று நடந்தவற்றை ஸ்ரீராமிடம் கூறினான் குகன். திருமதி சக்கரவர்த்தி, மிதிலாவை அவமானப்படுத்த நினைத்ததை கேட்ட போது அவனுக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. ஆனால், மிதிலா கொடுத்த பதிலடியை கேட்டு அவன் புளங்காகிதம் அடைந்தான்.
"இதைப் பத்தி நீ ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல?"
"நீ அந்த சீனை நேரடியாவே பாக்கணும்னு நான் ரொம்ப ஆசைப்பட்டேன். உங்க வீட்டில, லயாவால அடுத்தடுத்து நடந்த பிரச்சனைகளால, அதை உன்கிட்ட சொல்ல சந்தர்ப்பமே கிடைக்கல"
"சரி, நான் சொன்னதை செய்"
"நான் அதை ஆரம்பிச்சுட்டேன்னு நெனச்சுக்கோ"அழைப்பை துண்டித்தான் குகன்.
மிதிலாவை பார்த்து சிநேகமாய் புன்னகைத்தான் ஸ்ரீராம்.
"குகாகிட்ட என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க?"
"எல்லாம் என் ஒய்ஃபை பத்தி தான்"
"என்னைப் பத்தியா?"
"நீ தானே என்னோட ஒய்ஃப்?" என்று சிரித்தான் ஸ்ரீராம்.
"என்னைப் பத்தி என்ன சொன்னார் குகன்?"
"மிஸஸ் சக்கரவர்த்தியை நீ எப்படி ஜூஸ் பிழிஞ்சேன்னு சொன்னான்" என்றான், மிதிலா அசடு வழிவாள் என்று எண்ணி அவளை கிண்டல் செய்யும் நோக்கில். ஆனால் அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்கினாள் மிதிலா.
"அவளோட ஹஸ்பண்ட் கூட இருந்தார்னு தான் அவளை நான் முழுசா போக விட்டேன்... இல்லன்னா..."என்று பல்லைக் கடித்தாள் மிதிலா.
"இல்லன்னா?" என்று தன் புருவத்தை உயர்த்தி அவளை பார்த்து விட்டு, பிறகு சாலையை பார்த்தான் ஸ்ரீராம்.
"என் புருஷன் மேல கண்ணு வைச்சதுக்காக அவளை நான் மொட்டை அடிச்சி விட்டிருப்பேன்" என்றாள் கோபமாக.
அதிர்ச்சியில் ஸ்ரீராமின் விழிகள் விரிந்தன. மொட்டை அடிப்பதா? இவள் உண்மையிலேயே மிதிலா தானா? அவள் இவ்வளவு கோபக்காரி என்பது அவனுக்கு தெரியாது... அவளுடைய பேச்சு, அவனை வாயடைக்க செய்தாலும், மறுபுறம் அவனுக்கு சந்தோஷமாகவும் இருந்தது.
அவர்கள் பூவனம் வந்தடைந்தார்கள். யாரிடமும் ஒன்றும் கூறாமல் நேராக தங்கள் அறைக்கு சென்றான் ஸ்ரீராம். அவன் யாரிடமும் ஒன்றும் கூறாமல் போனது ஒன்றும் ஆச்சரியம் அல்ல. அவன் எப்போதுமே அப்படித் தான். ஆனால் அவன் எதிர்பாராத வண்ணம், அனைவரிடமும் நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறிவிட்டாள் மிதிலா.
அவர்கள் உள்ளே வருவதை பார்த்த ஊர்மிளா, மிதிலாவை கிண்டல் செய்ய தயாரானாள்.
"உங்க *சீக்ரெட் டேட்* எப்படி போச்சு?" என்றாள் அவளது லேசாய் தோளில் இடித்தபடி
"அதைப் பத்தி மட்டும் கேட்காதே ஊரி... நாங்க உயிரோட இருக்கோம். அதுவே ரொம்ப பெருசு..." என்றாள் மிதிலா.
"என்ன ஆச்சு மிதிலா?" என்றாள் நர்மதா பதட்டத்துடன்.
"எங்களைக் கொல்ல யாரோ முயற்சி பண்ணாங்க கா" என்றாள் பயத்துடன்.
"என்ன சொல்ற நீ? இது விளையாடுற விஷயம் இல்ல, மிதிலா" என்றான் லட்சுமன்.
"இது விளையாடுற விஷயம் இல்லன்னு எனக்கும் தெரியும். நான் விளையாடவும் இல்ல" என்றாள் மிதிலா சீரியசாக.
"நெஜமாத் தான் சொல்றியா?" என்று அதிர்ச்சியாய் கேட்டான் லக்ஷ்மன்.
"ஆமாம்... போலீஸ் வந்து எல்லாத்தையும் விசாரிச்சுட்டு போயிருக்காங்க. நம்ம வீட்டுக்கும் அவங்க பாதுகாப்பு கொடுக்க போறாங்க"
"யார் அந்த வேலையை செஞ்சது?"
"தெரியல "
"எந்த ஒரு க்ளுவும் இல்லாம, யார் செஞ்சதுன்னு நம்ம எப்படி கண்டுபிடிக்க முடியும்?"
"அதை ஸ்ரீ செய்வாரு" என்றாள் நம்பிக்கையுடன் மிதிலா.
"நல்ல காலம் உங்களுக்கு எதுவும் ஆகல" என்றாள் ஊர்மிளா நடுக்கத்துடன்.
புஷ்பாவும் பாட்டியும் பரிதவித்துப் போனார்கள். நர்மதாவோ அழவே தொடங்கிவிட்டாள்.
"நீங்க அழாதீங்க கா. இதை யார் செஞ்சதுன்னு சீக்கிரமாவே ஸ்ரீ கண்டுபிடிச்சிடுவார்"
"விளைவுகளை நினைச்சுப் பார்க்கவே ரொம்ப பயமா இருக்கு மிதிலா" என்றாள் நர்மதா.
"நர்மதா சொல்றதும் சரி தானே மிதிலா?" என்றார் பாட்டி கலக்கத்துடன்.
"நீங்க கவலைப்படாதீங்க பாட்டி. இன்னும் கொஞ்ச நாளைக்கு ஸ்ரீ வீட்டை விட்டு எங்கேயும் போக மாட்டாரு" என்ற மிதிலா, திடுக்கிட்டாள்,
"என்ன்ன்ன்னனனது???? " என்று உரக்க ஒலித்த ஸ்ரீராமின் குரலைக் கேட்டு.
மாடிப்படியில் அதிர்ச்சியுடன் நின்றிருந்த ஸ்ரீராமை அவர்கள் அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள். அவன் மிதிலாவை நோக்கி வந்த பொழுது அனைவரும் பதட்டம் ஆனார்கள். தன்னைக் கேட்காமல் முடிவெடுத்ததற்காக அவன் மிதிலாவை கடிந்து கொள்ளப் போகிறான் என்று அவர்களுக்குள் பயம் எழுந்தது.
"என்ன பேசுற நீ மிதிலா? எப்படி நான் வீட்டுல இருக்க முடியும்?"
"நீங்க இருந்து தான் ஆகணும். நீங்க என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? எதுக்காக நான் எல்லார்கிட்டயும் எல்லாத்தையும் சொல்லிக்கிட்டு இருக்கேன்??? உங்கள வீட்ல இருக்க வைக்கத் தான். நீங்க வீட்டை விட்டு காலை எடுத்து வெளியில் வச்சீங்க... நான் உங்ககிட்ட பேசவே மாட்டேன்... அதை மறந்துடாதீங்க..."
அதற்கு மேல் அங்கு நிற்காமல் அங்கிருந்து நடந்தாள் மிதிலா, ஸ்ரீராமின் வாயை அடைக்க செய்துவிட்டு. அங்கிருந்த மற்றவர்களும் திகைத்து நின்றார்கள். மிதிலா அவனிடம் பேசியதற்காக அல்ல... அவள் பேசியதைக் கேட்டுக்கொண்டு ஒன்றும் கூறாமல் ஸ்ரீராம் நின்றதற்காக...
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top