68 மிதிலாவின் அப்பா
68 மிதிலாவின் அப்பா
ஆனந்த குடில்
சாந்தாவின் முகம் வெளிறிப் போனது தன் முன்னால் நின்று கொண்டிருந்த காமராஜை பார்த்த போது. இவன் ஜெயிலில் இருந்து விடுதலையாகி விட்டானா?
"எப்படி இருக்கீங்க சாந்தாக்கா?" என்றார் காமராஜ்.
"நல்லா இருக்கேன்" என்றார் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு சாந்தா.
"மிதிலா எங்க இருக்கா?"
"எனக்கு தெரியாது"
"நீங்க பொய் சொல்றீங்க. எனக்கு தெரியும், நீங்களும் ஆனந்தன் அண்ணனும் தான் அவளை உங்களோட கூட்டிகிட்டு வந்துட்டீங்க"
"இப்போ அதுக்கு என்ன? உன்னை மாதிரி எங்களையும் அவளை பொறுப்பில்லாம விட்டுட்டு வர சொல்றியா? இப்போ எதுக்கு நீ அவளைப் பத்தி கேட்கிற? நான் எதுக்கு அவளைப் பத்தி உன்கிட்ட சொல்லணும்? அவளை நிம்மதியா இருக்க விட மாட்டியா நீ? அவளுடைய வாழ்க்கையை கெடுத்துடாத. தயவுசெய்து புரிஞ்சுக்கோ"
"இல்ல சாந்தாக்கா... நான் நிச்சயமா அவளுடைய வாழ்க்கையைக் கெடுக்க மாட்டேன். நான் தான் அவளுடைய அப்பான்னு சத்தியமா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்"
"எதுக்காக நீ இப்ப அவளை பார்க்கணும்?"
"ஏன்னா நான் அவளோட அப்பா... என் மகளை பாக்கணும்னு நான் நினைக்க கூடாதா?"
"கூடாது... அவ எங்க மக. அவளுடைய அப்பான்னு சொல்லிக்க உனக்கு என்ன உரிமை இருக்கு?"
"எனக்கு எந்த உரிமையும் இல்ல. என் மகளை வளத்து ஆளாக்கினதுக்காக உங்களுக்கு நான் கடன் பட்டிருக்கேன். அவகிட்ட நான் மன்னிப்பு கேக்கணும். அவ்வளவு தான்"
"நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க? அவ உன்னை மன்னிப்பான்னு நினைக்கிறியா? அவ உன்னை தன் மனசோட அடி ஆழத்திலிருந்து வெறுக்கிறா. உன்னால தானே அவ தன்னுடைய அம்மாவை இழந்தா..." என்று சீறினார் சாந்தா.
"அதுக்காகத் தான் ஒரே ஒரு தடவை அவளைப் பார்த்து என் பக்க நியாயத்தைக் பேசணும்னு நினைக்கிறேன்"
"முடியாது... நான் அப்படி நடக்க விட மாட்டேன். நீ இங்கிருந்து போகலாம்" என்று அவர் முகத்தில் அறைந்து கதவை சாத்தினார் சாந்தா.
அந்த இடத்தை விட்டு அகன்றார் காமராஜ். ஆனால் அவர் தன் மகளை தேடும் முயற்சியை கைவிடவில்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்து, மிதிலா, ஸ்ரீராம் கருணாகரன் என்னும் தொழிலதிபரை மணந்துகொண்ட விஷயத்தையும், அவள் பூவனத்தில் வசித்து வருவதையும் தெரிந்து கொண்டார். மிதிலாவை கண்டுபிடிக்க இந்த தகவல் அவருக்கு போதுமானதாக இருந்தது.
எஸ் ஆர் ஃபேஷன்ஸ்
தன் கை கடிகாரத்தை பார்த்தான் ஸ்ரீராம். அவனையும் மிதிலாவையும் ஐந்து மணிக்கெல்லாம் வீட்டில் இருக்கும்படி நர்மதா கேட்டுக் கொண்டாள் அல்லவா. மணி 4:10 ஆனது. மிதிலாவுக்கு ஃபோன் செய்தான். மிதிலா உடனே எடுத்து பேசினாள்.
"மிதிலா, வேலையை முடிச்சுகிட்டு கெளம்பு. நம்ம வீட்டுக்கு போகணும்"
"சரி"
அவன் நாற்காலியின் மீது போட்டு வைத்திருந்த கோட்டை எடுத்து அணிந்து கொண்டு, தனது அறையை விட்டு வெளியே வந்தான் ஸ்ரீராம். வரவேற்பில் அவனுக்காக காத்திருந்தாள் மிதிலா.
"நீ இங்க வெயிட் பண்ணு. நான் காரை எடுத்துகிட்டு வரேன்"
"நானும் உங்க கூட வர்றேன்" என்று அவனுடன் பார்க்கிங் லாட்டை நோக்கி நடந்தாள் மிதிலா.
காரை பூவனம் நோக்கி கிளப்பினான் ஸ்ரீராம். அவன் வழக்கத்திற்கு மாறாய் இருந்ததை உணர்ந்தாள் மிதிலா. அவனுடைய முகபாவம் கூறியது, அவன் எதையோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறான் என்று. வழிநெடுக அவன் எதுவும் பேசவே இல்லை.
அவர்கள் வந்ததைப் பார்த்தவுடன் நிம்மதி பெருமூச்சுவிட்டாள் நர்மதா. பூஜை துவங்கும் முன்பு அவர்கள் சரியான நேரத்திற்கு வந்து விட்டதால்.
"முகம் கழுவிட்டு வந்துடறேன் கா" என்று தன் அறையை நோக்கி ஓடினாள் மிதிலா.
"நீயும் கிளம்பி வா ராமு" என்றாள் நர்மதா.
சரி என்று தலையசைத்துவிட்டு மிதிலாவை பின்தொடர்ந்து சென்றான் ஸ்ரீராம். மிதிலா குளியலறையிலிருந்து வரும் வரை காத்திருந்து விட்டு தானும் குளிக்க சென்றான். அவன் குளித்துவிட்டு வெளியே வந்த போது, முழுதும் தயாரான நிலையில் இருந்தாள் மிதிலா. மஞ்சளும் சிவப்பும் கலந்த புடவையில், மல்லிகைப் பூச்சூடி தமிழ் கலாச்சாரத்தின் சாயல் மாறாமல் இருந்தாள் மிதிலா. குளியல் அறையின் வாசலில் நின்று அவளை ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீராமை பார்த்து புன்னகைத்து விட்டு அலமாரிக்கு சென்று எதையோ தேடினாள்.
"மிதிலா..." ஸ்ரீராம் அவளை அழைக்க திரும்பிப் பார்த்தாள்.
என்ன? என்பது போல் தன் புருவத்தை உயர்த்தி அவனைப் பார்க்க,
"இந்த புடவையில் நீ ரொம்ப ஹாட்டா இருக்க" என்றான்.
தன் விழிவிரிய அவனைப் பார்த்துவிட்டு, மீண்டும் தனது பணியைத் தொடர்ந்தாள்.
"நாளைக்கும் புடவையே கட்டிக்கோ" என்றான்.
"கண்டிப்பா கட்டிக்கிறேன்... நீங்க இதை போட்டுக்கிட்டா" ஒரு ஷர்வாணியை எடுத்து கட்டிலின் மீது வைத்தாள். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான் ஸ்ரீராம்.
"இது உங்களுக்குத் தான். இதை போட்டுக்கங்க."
"இதைப் போட்டுக்க சொல்றதுக்கு பதிலா என்னை நீ மர்டர் பண்ணிடு" என்றான் அலுப்புடன்.
அதைக்கேட்டு கலகலவென்று சிரித்தாள் மிதிலா.
"இதை போட்டுப் பார்த்தா தான் தெரியும்"
"எது?"
"ஷர்வானியை போட்டுக்குறதுக்கு பதில் சாவறதே மேல்னு"
"உங்க கம்பெனியோட பிரைஸ் வின்னிங் டிசைன் இது... அதை பத்தி நீங்களே இப்படி சொன்னா எப்படி?"
"அக்க்க்கா...." என்று முணுமுணுத்தான் ஸ்ரீராம் அவனுக்கு தெரியும், நர்மதா தான் மிதிலாவிடம் இதை கொடுத்து அவனை போடச்சொல்லி கேட்டிருக்க வேண்டும்.
"நான் கீழ போறேன்" என்று சிரித்தபடி அங்கிருந்து சென்றாள் மிதிலா.
பூஜை ஆரம்பமானது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பூஜையில் பங்கெடுத்துக் கொண்டார்கள். யாருக்கும் எந்த சாக்கும் சொல்லி பூஜையை தட்டிக்கழிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
எல்லாரையும் விட அதிகமாய், ஷர்வானியை அணிந்துகொண்டு, தரையில் அமர படாத பாடு பட்டான் ஸ்ரீராம். அதன் இறுக்கமான காற்சட்டை அவன் உயிரை வாங்கியது. அவனால் சிறிது நேரமே தாக்கு பிடிக்க முடிந்தது,
"மிதிலா..." என்று ரகசியமாய் அவன் அருகில் அமர்ந்திருந்த மிதிலாவை அழைத்தான்.
மிதிலா மெல்ல தன் கண்களைத் திறந்து அவனைப் பார்க்க,
"நான் இப்ப வரேன்" என்றான்.
"எங்க போறீங்க?" என்றாள் மெல்லிய குரலில்.
"இதை கிழிச்சுப் போட்டுட்டு வர போறேன்" என்றான் அவன் காலை நீட்டி.
சரி என்று தலையசைத்தாள் தனது சிரிப்பை அடக்கிக்கொண்டு மிதிலா.
தனது அறைக்கு வந்த ஸ்ரீராம், தான் அணிந்திருந்த காற்சட்டையை கழட்டி தரையில் எறிந்து விட்டு கட்டிலில் அமர்ந்தான். தனது கைப்பேசியை எடுத்து ஏதாவது அழைப்பு வந்திருக்கிறதா என்று பார்வையிட்டான். தாமஸ் இடமிருந்து நான்கு மிஸ்டு கால்கள் வந்திருந்ததை பார்த்து முகம் சுருக்கினான். அவன் தாமஸுக்கு ஃபோன் செய்ய நினைத்த போது, அவனே ஸ்ரீராமுக்கு மீண்டும் ஃபோன் செய்தான்.
"சொல்லுங்க தாமஸ் "
"மிதிலா மேடத்தோட அப்பா உங்க வீட்டுக்கு தான் வராரு"
"என்னது...???? என்றபடி கட்டிலை விட்டு அதிர்ந்து எழுந்தான் ஸ்ரீராம்
"ஆமாம் சார். அவர் உங்க மெயின் கேட்டில் நிக்கிறாரு"
"சரி" என்று அழைப்பைத் துண்டித்து தனது கைபேசியை கட்டிலின் மீது எறிந்தான் ஸ்ரீராம்.
தான் அணிந்திருந்த கால்சட்டை தரையில் கிடப்பதை பார்த்து எரிச்சலுடன் கண்களை சுழற்றினான். அவசரமாய் அதை எடுத்து அணிந்துகொண்டு, கீழ் தளம் நோக்கி ஓடினான்.
கீழ்த்தளம் வந்த அவனது கண்கள் மிதிலாவை தேடின. அவள் வரவேற்பறையில் எங்கும் இல்லை. பூஜை முடிந்து விட்டது போல் தெரிகிறது.
"அக்கா, மிதிலா எங்கே?" என்றான்.
"பிரசாதம் கொண்டு வர கிச்சனுக்கு போனாங்க"
நிம்மதி பெருமூச்சு விட்டு வெளியே ஓடினான் ஸ்ரீராம்.
அதேநேரம் சமையலறையில்,
"அண்ணி..." என்று மிதிலாவை அழைத்தான் சுப்பிரமணி.
"சொல்லுங்க சுப்பு"
"உங்களை பார்க்க யாரோ காத்திருக்கிறதா செக்யூரிட்டி சொன்னாரு"
"என்னை பார்க்கவா? யாரு?"
"உங்க அப்பாவுடைய ஃப்ரண்டாம்"
"என் அப்பாவுடைய ஃப்ரண்டா?" என்று முணுமுணுத்த மிதிலா,
"சரி நான் அப்புறம் போய் பார்த்துக்கிறேன்" என்று பிரசாதத்தை எடுத்துக் கொண்டு நர்மதாவை நோக்கிச் சென்றாள்.
......
செக்யூரிட்டி அறையின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த காமராஜை பார்த்து நின்றான் ஸ்ரீராம். அவனை நோக்கி வந்த காமராஜ்,
"நான் மிதிலாவுடைய அப்பாவுக்கு ஃப்ரண்ட்" என்று பொய் கூறினார்.
"நான் மிதிலாவுடைய ஹஸ்பண்ட். நீங்க இங்க வர போறீங்கன்னு என்னுடைய மாமனார் எதுவும் சொல்லலையே...!" என்றான் அவர் முகபாவத்தை படித்தபடி.
"அது... வந்து..." என்று அவர் தடுமாற,
"நீங்க யாருன்னு எனக்கு தெரியும்" என்றான் ஸ்ரீராம்.
"அப்படிங்களா? ஆனா, ஆனந்தன் என்னைப் பத்தி உங்ககிட்ட எதுவும் சொல்லலைன்னு சொன்னீங்களே?"
"மிஸ்டர் காமராஜ், நீங்க மிதிலாவை பெத்த அப்பா. நீங்க மிதிலாவுடைய அம்மாவை கொன்னதுக்காக ஜெயில்ல இருந்துட்டு, இன்னைக்கு காலைல தான் ரிலீஸானீங்க."
அதைக் கேட்ட காமராஜ் அதிர்ந்தார். மிதிலாவின் மாமியார் வீட்டில் இருக்கும் யாருக்கும் தன்னைப் பற்றி தெரியாது என்று அவர் எண்ணியிருந்தார்.
"நடந்தது ஒரு விபத்து" என்றார் காமராஜ்.
"இருக்கலாம்... ஆனா, அந்த விபத்து நடக்க நீங்க தானே காரணம்?"
காமராஜின் கண்கள் கலங்கின.
"உங்களால மிதிலா எப்படிப்பட்ட மனோ வியாதிக்கு ஆளாகி இருக்கான்னு உங்களுக்கு தெரியுமா? நெருப்பைப் பார்த்து பயப்படுற மோசமான மனோவியாதி அவளுக்கு இருக்கு. நெருப்பைப் பார்த்தாலே அவ மயங்கி விழுந்துடுறா"
"நான் இப்போ அந்த பழைய காமராஜ் இல்ல. நான் மொத்தமா மாறிட்டேன்"
"இருக்கலாம்... மிதிலாவும் அந்த பழைய மிதிலா இல்ல. நீங்க அதை புரிஞ்சுக்கணும்"
"என் மகள் என்னை அடியோட வெறுக்கிறாள்னு நீங்க நேரடியாவே என்கிட்ட சொல்லலாம்" என்றார் வருத்தத்துடன்.
"அது அவளுடைய தப்பு இல்ல. அவள் உங்களை வெறுக்க நீங்க தான் காரணம்"
"ஒரே ஒரு தடவை என்னை அவளை சந்திக்க விடுங்க. எனக்கு இந்த உலகத்தில என் மகளை விட்டா வேற யாருமே இல்ல." என்று கரங்களைக் கூப்பி கெஞ்சினார் காமராஜ்.
"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. என்னால இப்போ உங்களுக்கு எந்த வாக்குறுதியும் கொடுக்க முடியாது. மிதிலாவுடைய முடிவு என்னவா இருக்கும்னு என்னால உறுதியா சொல்ல முடியல"
"பெரிய மனசு பண்ணி எனக்கு உதவி செய்யுங்க"
"தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க. என்னோட மனைவியும் அவளுடைய உணர்வுகளும் தான் எனக்கு எல்லாத்தையும் விட முக்கியம். அவளுக்கு உங்களை சந்திக்க விருப்பம் இல்லைன்னா என்னால எதுவுமே செய்ய முடியாது"
"என் மகளோட உணர்வுகளை மதிக்கிற புருஷன் அவளுக்கு கிடைச்சிருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷம். ஒருநாள் என்னுடைய மகள் என்னை மன்னிப்பாள்னு நான் நம்புறேன்" தன் கண்ணீரை துடைத்தபடி அங்கிருந்து சென்றார் காமராஜ்.
அவரைப் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றான் ஸ்ரீராம். தன் மனைவியின் மரணத்திற்கு காரணமாய் இருந்த மனிதன், தனது தவறுக்காக இப்பொழுது வருந்துகிறார். அதனால் என்ன பயன்?
பெருமூச்சு விட்டு திரும்பிய ஸ்ரீராம் அதிர்ச்சியில் உறைந்தான், பேயறைந்தது போல் நின்றிருந்த மிதிலாவை பார்த்து. வந்திருந்தது காமராஜ் என்பதையும், அவன் காமராஜுடன் பேசிக் கொண்டிருந்ததைக் அவள் கேட்டு விட்டாள் என்பதையும் அவள் முகத்தைப் பார்த்தவுடன் புரிந்து கொண்டான் ஸ்ரீராம்.
"மிதிலா..." இரண்டு அடியில் அவளை அடைந்தான் ஸ்ரீராம்.
"உங்களுக்கு என்னோட கடந்தகாலம் தெரியுமா?" என்றாள் நம்ப முடியாமல்.
தெரியும் என்று தலையசைத்தான் ஸ்ரீராம்.
"எப்படி..???? உங்களுக்கு அவரை எப்படி தெரியும்?" என்றாள் தடுமாற்றத்துடன்.
"நம்ம அப்பறமா பேசலாம்" என்றான் அவள் தோளை தொட்டு.
"உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றாள் மீண்டும்.
"நம்ம ஆஃபீஸ்ல நடந்த ஃபையர் ஆக்சிடென்ட் அப்போ, நீ மயங்கி விழுந்த. அன்னைக்கு உன்னை நான் தான் வீட்ல டிராப் பண்ணினேன். டாக்டர் கொடுக்க சொன்ன மாத்திரையை உனக்கு கொடுக்க நான் மறந்துட்டேன். அதை கொடுக்க நான் உன் வீட்டுக்கு வந்தேன். அப்போ நீயும் உங்க அம்மாவும் பேசினதை கேட்டேன். அப்போ தான், யுவராஜோட அம்மா கல்யாணத்துக்கு மறுப்பு தெரிவிச்சதையும், உங்க அப்பாவை பத்தியும், உங்க அம்மாவுக்கு நடந்த ஆக்சிடென்ட் பத்தியும், எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன்"
"அன்னைக்கே உங்களுக்கு எல்லாம் தெரியுமா?"
"தெரியும்"
"அப்படின்னா, இந்த பெரிய உண்மையை மறைச்சு நான் கல்யாணம் பண்ணிக்க தயாரா இல்லைங்குறதும் உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே..."
தெரியும் என்று தலையசைத்தான்.
"அதனால தான் என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிட்டீங்களா?"
"ஆமாம்... உங்க அம்மா, உன்கிட்ட சத்தியம் வாங்கி உன்னை கட்டி போட்டுட்டாங்க. உண்மையை மறைச்சி, குற்ற உணர்ச்சியோட கல்யாணம் பண்ணிக்க நீ தயாரா இல்ல. அதனால, அந்த குற்றஉணர்ச்சியை மறக்க வச்சி உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நெனச்சேன்."
நம்ப முடியாமல் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் மிதிலா. அவன் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டதற்குப் பின் இப்படி ஒரு காரணம் இருக்கிறதா?
"எனக்கு குற்றவுணர்ச்சி இருக்கக் கூடாதுன்னு உங்களை நீங்க தப்பானவரா காட்டிக்கிட்டீங்களா?"
"என்னை தப்பானவனா கட்டிக்கிட்டது ஒரு பெரிய விஷயமே இல்ல. ஏன்னா, உனக்கு உண்மையை புரிய வைக்க முடியும்னு எனக்கு நம்பிக்கை இருந்தது"
"நம்ம கல்யாணத்துக்கு பிறகு என்கிட்ட நீங்க இதை சொல்லி இருக்கலாமே...??? "
"சொல்லனுணும்னு தான் நினைச்சேன். நீ அதை எப்படி எடுத்துக்குவேன்னு எனக்கு தெரியல. நீ என்னை எந்த அளவுக்கு புரிஞ்சுகிட்டேன்னு எனக்கு நிச்சயமா தெரியல..."
அப்பொழுது அவர்களை அழைத்தாள் நர்மதா. அவள் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு,
"போகலாம் வா" என்று உள்ளே செல்ல நினைத்த அவன் கையை பிடித்து நிறுத்தினாள் மிதிலா. புன்னகையுடன் அவளை பார்த்த ஸ்ரீராம் எதிர்பாராத விதமாய், அவனைக் கட்டிபிடித்துக் கொண்டு அழுதாள் மிதிலா.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top