67 முடிந்த கதை...?
67 முடிந்த கதை
தூக்கத்திலிருந்து மெல்ல கண் விழித்த மிதிலா, தான் ஸ்ரீராமின் கரங்களில் அகப்பட்டு இருப்பதை கண்டாள். ஸ்ரீராம் இன்னும் உறங்கிக் கொண்டு தான் இருந்தான். நேற்று நடந்தவை அவள் கண் முன் நிழலாடின. அவள் முகத்தில் மெல்லிய புன்னகை இழையோடியது. ஸ்ரீராம் அவளை காதலிப்பது உண்மை என்றால், அவளது பிரச்சனையை அவன் நிச்சயம் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கை அவளுக்குள் பிறந்தது. இன்று இந்த விஷயத்தை எப்படியும் பேசித் தீர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள் மிதிலா.
கடிகாரத்தை திரும்பி பார்த்தவள், அது 6:10 என்று காட்டியதால் மீண்டும் திரும்பி ஸ்ரீராமை அணைத்துக் கொண்டாள், நிறைய நேரம் இருந்ததால். அப்போது,
"குட்மார்னிங்" என்றான் ரகசியமாக, புன்னகையுடன் ஸ்ரீராம்.
அவனை அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தாள் மிதிலா. அப்படி என்றால் அவன் தூங்கவில்லையா? அவளை சுற்றி வளைத்திருந்த ஸ்ரீராமின் கரம் இறுகியது.
"கண் விழிச்ச உடனே, நான் உன்னை கட்டி பிடிச்சிகிட்டிருக்கிறதை பார்த்து நீ எழுந்து ஓடி போயிடுவேன்னு நினைச்சேன். ஆனா நீ என்னை மறுபடியும் கட்டிப்பிடிச்சு ஆச்சரியப்படுத்திட்ட..." என்றான் அவளை கையும் களவுமாய் பிடித்து விட்ட பெருமிதத்துடன்.
அவன் கையில் இருந்து வெளிவர முடியாது என்பதை உணர்ந்து கொண்ட மிதிலா,
"இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்னு நெனச்சேன். நேத்து ராத்திரி நான் சரியா தூங்கல" என்று சாக்குபோக்கு தேடினாள் மிதிலா.
"அப்படியா? ஆனா ஏன்? நான் தான் உன்னை ஒன்னுமே செய்யலையே... அதோட மட்டும் இல்லாம..." என்னை ஏன் மறுபடியும் கட்டிப்பிடிச்ச என்று நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே என்று அவன் கேட்க முனையும் முன், அவன் பேச்சை துண்டித்து...
"நீங்க செஞ்சீங்க... " என்றாள் மெல்லிய குரலில்.
அமைதியாய் அவளைப் பார்த்தான் ஸ்ரீராம். நான் உன்னைப் ஒன்றுமே செய்யவில்லையே என்று ஸ்ரீராம் கூறியது *உடல்* சம்பந்தப்பட்டது. ஆனால் மிதிலா கூறியது *மனம்* சம்பந்தப்பட்டது.
"நான் என் மனசுல என்னெல்லாம் உனக்காக ஃபீல் பண்ணினேனோ அதைத் தான் சொன்னேன். அதுக்காகத் தான் நான் காத்துகிட்டு இருந்தேன்" என்றான்.
கண்களை மூடி மெல்ல தலையை அசைத்தாள் மிதிலா.
"நான் உன்னை ரொம்ப ஆழமா தொட்டுட்டேனா?" என்றான் புன்னகையுடன்.
ஆமாம் என்று தலையசைத்தாள் அவனை பார்க்காமல்.
"அதுக்கு பிரதிபலனா உன்கிட்ட இருந்து நான் எதையாவது எதிர்பார்க்கலாமா?"
ஆமாம் என்று தலை அசைத்து அவனை திகைக்கச் செய்தாள் மிதிலா.
"சீரியசா தான் சொல்றியா?"
"ரொம்ப சீரியஸா சொல்றேன். நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் இன்னைக்கு ராத்திரி"
"நம்ம இப்பவே பேசலாம். நான் இப்ப குடிச்சிருக்கல..." என்றான் கிண்டலாக.
"ஆனா, இன்னிக்கு ராத்திரி, நான் குடிச்சிட்டு வந்து தான் நான் என்ன ஃபீல் பண்றேன்னு சொல்ல போறேன்" என்றாள் அவளும் கிண்டலாக.
ஸ்ரீராமின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. அவனுடைய பிடியும் தளர்ந்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவன் கரங்களில் இருந்து வெளியே வந்தாள் மிதிலா களுக்கென்று சிரித்தபடி. அவளைப் பார்த்தபடி எழுந்து கட்டிலில் அமர்ந்தான் ஸ்ரீராம்.
"என்னை மாதிரி குடி, மிதிலா. குடிச்ச மாதிரி நடி" என்றான் சீரியசாக.
"முயற்சி பண்றேன்" என்றாள் போர்வையை மடித்தபடி.
"மிதிலாவை நம்ப முடியாது என்ன வேணாலும் செய்வா..."
"ஏன்னா நான் மிஸஸ் மிதிலா ஸ்ரீராம் இல்லையா...!" என்றாள் போர்வையை ஓரமாய் வைத்தபடி.
ஸ்ரீராமின் இதழ்கள் புன்னகையுடன் வளைந்தன.
"எதுக்காக குடிச்ச மாதிரி நடிச்சீங்க?" என்றாள் மிதிலா, அவளுக்கு ஏன் என்று தெரிந்திருந்த போதும்.
"இப்படி எதையாவது கொளுத்தி போட்டா தான் நான் சொல்றதை என் ஒய்ஃப் கேப்பான்னு நினைச்சேன்" அவன் கிண்டலாய் கூற தன் கண்களை சுழற்றினாள் மிதிலா.
"உன்னை கட்டாயப் படுத்தி கூட என்னால பேசியிருக்க முடியும். ஆனா, அப்படி செஞ்சா, நான் கேட்கிற மன்னிப்புக்கு மரியாதை இருந்திருக்காது. ஏற்கனவே ஒரு தடவை உன்னை கட்டாயப்படுத்தினதுக்காக நான் ரொம்ப வருத்தப் படுகிறேன்"
அவனைப் பார்த்து நேசத்துடன் புன்னகைத்தாள் மிதிலா.
"ஆனா, இதுக்கு அப்புறம் உன்னை நான் எதுக்கு வேணும்னாலும் கட்டாயப்படுத்தலாம். நீ தான் என்னை காதலிக்கிறேன்னு ஒத்துக்கிட்டியே" என்றான் கிண்டலாக.
அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் மிதிலா.
"நீ என்னை காதலிக்கும் போது நான் எது செஞ்சாலும் அதை கட்டாயப்படுத்துறதா நீ நினைக்க மாட்ட தானே?" என்று பல் தெரிய சிரித்தான் ஸ்ரீராம்.
தன் கைகளை கட்டிக் கொண்டு அவனைப் பார்த்து கிண்டலாக சிரித்தாள் மிதிலா.
"நினைப்பியா?" என்றான் சோகமாக.
"நினைக்க மாட்டேனா?" என்று அவனை கேள்வி கேட்டாள்.
"நினைக்கலாம் தான்" என்றான் வருத்தமாக.
தன் சிரிப்பை அடக்கியபடி ஆமாம் என்று தலையசைத்துவிட்டு குளியல் அறை நோக்கி சென்றாள் மிதிலா.
ஸ்ரீராமின் காதல் ஒப்புகைக்கு பிறகு, மிதிலாவின் ஒட்டுமொத்த நடவடிக்கையும் மாறிப் போனது. ஸ்ரீராமின் வலிமையான பார்வை தன்னைப் பின்தொடர்ந்த போதெல்லாம் தன் சக்தியை இழந்தாள் மிதிலா. இதற்கு முன்பு கூட சில சமயங்களில் அவள் அதை செய்து தான் இருக்கிறாள். ஆனால், அப்போதிருந்த நிலை முற்றிலும் வேறு. அவளுடைய கண்கள், பார்வை, நடவடிக்கை, அனைத்தும் மாறிப் போனது. ஒரு புது மிதிலாவை கண்டான் ஸ்ரீராம். இந்த மாற்றமடைந்த மிதிலாவை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளுடைய முதலாளியாக அவளை பதட்டப்பட வைக்க முடியாமல் தோற்றுப் போனான் ஸ்ரீராம். ஆனால் ஒரு கணவனாய் அவன் அதை சுலபமாய் செய்துவிட்டான். அதை அவனே கூட எதிர்பார்த்திருக்கவில்லை.
அவள் தன்னை ஓரக்கண்ணால் கள்ள பார்வை பார்த்ததை கண்டான் ஸ்ரீராம். இப்படியெல்லாம் அவள் தன்னை ஓரப்பார்வை பார்ப்பாள் என்று அவன் கனவில் கூட நினைத்திருக்கவில்லை. அவன் அவளைப் பார்க்காத போது, அவனை அவள் பார்ப்பதும், அவன் அவளைப் பார்க்கும் போது, அவனை பார்க்காதவள் போல எங்கோ பார்ப்பதும், கொள்ளை அழகு.
இருவரும் அலுவலகம் செல்ல தயாராகி உணவு மேஜைக்கு வந்து அமர்ந்தார்கள்.
"ராமு, நீயும் மிதிலாவும் சரியா அஞ்சு மணிக்கு வீட்டுக்கு வந்துடுங்க" என்றாள் நர்மதா.
ஸ்ரீராமும், மிதிலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"என்னக்கா விஷயம்?"
"இன்னைக்கு சாயங்காலம் பாட்டி நம்ம வீட்டுல ஒரு பூஜை ஏற்பாடு பண்ணியிருக்காங்க"
"என்ன பூஜை கா?"
"நம்ம வீட்டுல நடக்கக் கூடாதது எல்லாம் நடந்துடுச்சு. இதுக்கு எல்லாம் கண் திருஷ்டி தான் காரணம். அந்த திருஷ்டியை எல்லாம் உடனே கழிச்சாகணும். அதுக்கு தான் ஒரு பூஜை செய்யப் போறோம்."
தன் கண்களை சுழற்றினான் அதிலெல்லாம் சிறிதும் நம்பிக்கை இல்லாத ஸ்ரீராம்.
"மிதிலாவுக்காகவாவுது வா ராமு" என்று கெஞ்சினாள் நர்மதா.
"சரி வறோம்"
"பரத்தையும் லக்ஷ்மணனையும் கூட்டிட்டு வா"
"சரி"
சாப்பிட்டு முடித்து விட்டு அலுவலகம் நோக்கிக் கிளம்பினார்கள் இருவரும்.
எஸ் ஆர் ஃபேஷன்ஸ்
ஸ்ரீராம், மற்றும் மிதிலாவுக்காக ப்ரொஜெக்டர் ரூமில் காத்திருந்தான் குகன். தங்களது நிறுவனத்தின் கிளையை இன்னும் ஒரு மாநிலத்தில் விரிவுபடுத்துவது என்று தீர்மானித்திருந்தான் ஸ்ரீராம். அந்த கிளைக்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். நேரில் சென்று இடத்தை பார்வையிடுவதற்கு முன், அந்த இடத்திற்கான புகைப்படங்களை ஸ்ரீராமுக்கு மிதிலாவிற்கும் காட்டுவதற்காகத் தான் அவன் காத்திருந்தான்.
அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் மிதிலா. தான் அணிந்திருந்த கோட்டை கழட்டி நாற்காலியின் மீது போட்டுவிட்டு, தான் அணிந்திருந்த சட்டையின் கையை, முழங்கை வரை மடித்து விட்டுக்கொண்டு, தான் அணிந்திருந்த டையை தளர்த்திக் கொண்டான் ஸ்ரீராம்.
ஒரு காலை தரையில் அழுத்திக் கொண்டு, ஒரு காலை தொங்கவிட்டபடி மேஜையின் மீது அமர்ந்துகொண்டான் அவன். ஒவ்வொரு புகைப்படமாய் காட்டியபடி, அந்த இடத்தை பற்றி விவரிக்கத் துவங்கினான் குகன். ஆனால் மிதிலா அவன் கூறிய எதையும் கவனிக்கவில்லை. ஸ்ரீராம் வெகு சகஜமாய் இருப்பதை அவள் இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறாள். கோட்டு அணியாமல், வெள்ளை சட்டையின் கையை சுருட்டி விட்டுக்கொண்டும், டையை தளர்த்தி விட்டுக் கொண்டும் இருந்த ஸ்ரீராம் வெகு வசீகரமாய் இருந்தான். அவன் அணிந்திருந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை விட அவன் கை அதிகம் மின்னியது. அவனது முன் நெற்றியில் லேசாக களைந்து விழுந்த குழல் கற்றை அவனை மேலும் கவர்ச்சியாக காட்டியது. அவன் எப்பொழுதும் இப்படித் தான் இருப்பானா, அல்லது, அவன் இப்படி இருப்பதை இன்று தான் அவள் கவனிக்கிறளா? அவளுக்கு புரியவில்லை. எப்படி இத்தனை நாள் அவள் அவனை கவனிக்காமல் இருந்தாள்? இல்லை.. அவன் இவ்வளவு சகஜமாய் இதற்கு முன் எப்போதும் இருந்ததில்லை. அவன் கோட்டை மாட்டிக்கொண்டு எப்போதும் சிடுசிடுவென்று தானே இருப்பான்...! திடீரென்று ஸ்ரீராம் எப்படி இவ்வளவு கவர்ச்சியாய் இருக்கிறான் என்று தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தாள் மிதிலா. அந்த மும்முரத்தில், குகன் கூறிக் கொண்டிருந்ததை அவள் கவனிக்கத் தவறினாள். அவளிடம் குகன் ஏதோ கேட்க, அது அவளுக்கு கேட்கவில்லை. ஸ்ரீராம் தன் விரலை அவள் முகத்தின் அருகே சொடுக்கிய போது தான் அவள் சுயநினைவு பெற்றாள். திடுக்கிட்டு ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தாள் மிதிலா.
"என்ன யோசனை மிதிலா?" என்றான் சீரியஸாக.
"நான்... வந்து... " என்று தடுமாறினாள்.
அவள் பதில் கூற திணறுவதை பார்த்த குகன் புன்னகைத்தான்.
"உங்களுக்கு இந்த சைட் பிடிச்சிருக்கா?" என்றான் குகன்.
"சைட்டா?" என்றாள் வெறித்த பார்வையுடன்.
"குகா, நீ மறுபடியும் அந்த ஃபோட்டோஸை காட்டி அவளுக்கு சொல்றது நல்லதுன்னு நினைக்கிறேன்" என்றான் ஸ்ரீராம் இதழோரம் தவழ்ந்த புன்னகையுடன்.
சரி என்று தலையசைத்த குகன், ஒவ்வொரு புகைப்படமாய் மீண்டும் அவளுக்கு காட்டத் துவங்கினான். இந்த முறை, அனைத்தையும் கூர்ந்து கவனித்தாள் மிதிலா. ஒரு புகைப்படத்தில், *பிரைவேட் ஏரியா. வெளியாட்களுக்கு அனுமதி இல்லை* என்று பலகையில் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
"அது என்ன போர்டு குகா?" என்றான் ஸ்ரீராம்.
"அந்த கம்பெனியோட முக்கியமான யூனிட்டா இருக்கும்னு நினைக்கிறேன்" என்றான் குகன்.
"நான் அதுக்குள்ள போகலாமா?" என்றான் ஸ்ரீராம்.
"நிச்சயமா போகலாம். நீ தானே அதோட ஓனர்"
"நான் ஓனர்ங்குறதால அந்த *பிரைவேட் ஏரியாவுல* போக எனக்கு எல்லா ரைட்ஸும் இருக்குன்னு சொல்றியா?" என்றான் சிரித்து விடாமல்.
முகத்தை சுருக்கி ஆமாம் என தலையசைத்தான் குகன், இது என்ன கேள்வி? என்பதைப் போல.
ஆனால் மிதிலாவோ இருப்புக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தாள். முதல் நாள் இரவு அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடலை மனதில் வைத்து ஸ்ரீராம் பேசிய இரட்டை அர்த்தம் அவளுக்கு புரிந்து போனது.
*தூக்கத்துல, உன்னோட பிரைவேட் ஏரியாவில என் கைபட்ட தப்பா நினைச்சுக்காத* என்று அவன் கூறினான் அல்லவா?
தனது பதட்டத்தை மறைக்க, தலை குனிந்தபடி அமர்ந்திருந்தாள் மிதிலா. மிதிலாவை அப்படிப் பார்த்த குகனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் அவள் மொத்தமாய் மாறிப் போயிருக்கிறாள்?
"நம்மளுடைய டீமை அனுப்பி, அந்த சைட்டை அனலைஸ் பண்ணு. கிளியர் ரிப்போர்ட் கிடைச்சதுக்கு பிறகு அந்த சைட்டை ஃபைனலைஸ் பண்ணலாம்." என்றான் ஸ்ரீராம்.
"ஓகே எஸ் ஆர் கே"
ப்ரொஜெக்டரை அனைத்து விட்டு அங்கிருந்து சென்றான் குகன். நாற்காலியை விட்டு எழுந்து நின்ற மிதிலா அங்கிருந்து கிளம்ப முற்பட்ட போது, ஸ்ரீராமின் கேள்வியைக் கேட்டு நின்றாள்.
"இதுக்கு அப்புறம் நான் கோட்டு போட வேண்டாம்னு நினைக்கிறேன். நீ என்ன சொல்ற?"
திருதிருவென விழித்தாள் மிதிலா.
"என்னுடைய கோட்டை கழட்டிட்டா, உன்னுடைய மொத்த கவனமும் எனக்கு கிடைக்கும்னு இவ்வளவு நாள் எனக்கு தெரியாம போச்சு" என்றான் கள்ள புன்னகையுடன்.
அவனுக்கு பதில் கூறாமல் அங்கிருந்து அவள் மீண்டும் கிளம்ப நினைத்த போது,
"பிரைவேட் ஏரியாவை பத்தி குகன் சொன்னதை கேட்டியா?" என்றான்.
வார்த்தை வராமல் நின்றாள் மிதிலா.
"ஓனருக்கு எல்லா ரைட்ஸும் இருக்காம்"
அவனைப் பிடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து ஓட்டம் எடுத்தாள் மிதிலா. அதை எதிர்பார்த்தவனைப் போல், புன்னகையுடன் நின்றான் ஸ்ரீராம். பாவம் அவள், இப்போதைக்கு அவள் தப்பித்துக் கொண்டாளே தவிர, அது எப்போதும் சாத்தியம் இல்லை என்பதை அவள் மறந்து விட்டாள்.
சிரித்தபடி தன் அறைக்கு சென்றான் ஸ்ரீராம், மிதிலாவை என்ன சாக்கு சொல்லி தன் அறைக்கு அழைப்பது என்று யோசித்தபடி. அப்பொழுது அவனது கைபேசி ஒலித்தது. அதே புன்னகையுடன் தன் கைப்பேசியை எடுத்து பார்த்த ஸ்ரீராமின் புன்னகை மறைந்தது. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை செய்ய சொல்லி ஸ்ரீராமால் நியமிக்கப்பட்டிருந்த தாமஸிடமிருந்து அந்த அழைப்பு வந்தது.
"சொல்லுங்க தாமஸ் "
"சார், மிதிலா மேடம் அப்பா ஜெயிலிலிருந்து இன்னைக்கு காலையில ரிலீஸ் ஆயிட்டாரு"
"என்னது...???? ஆனா அவருக்கு ரிலீஸ் டேட் அடுத்த மாசம் தானே?"
"ஜெயில்ல ஒழுக்கமா நடந்துகிட்ட காரணமா அவரை இன்னைக்கே ரிலீஸ் பண்ணிட்டாங்க"
"ஓ..."
"அவர் இப்போ வில்லிவாக்கத்தில் இருக்காரு"
மிதிலாவின் அப்பா ஏன் வில்லிவாக்கம் சென்றிருக்கிறார் என்று புரிந்தது ஸ்ரீராமுக்கு. மிதிலாவை பார்ப்பதற்குத் தான் அவர் அங்கு சென்றிருக்க வேண்டும். அவர் நிச்சயம் மிதிலாவை சந்திக்க முயல்வார். அப்படி நடக்க விடக்கூடாது. மிதிலா தன் அப்பாவை எந்த அளவிற்கு வெறுக்கிறாள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அவரை பார்த்தால் மிதிலாவுக்கு மீண்டும் பழைய நினைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. காமராஜ் மிதிலாவை நெருங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான் ஸ்ரீராம். முடிந்துவிட்டது என்று மிதிலா நினைத்துக் கொண்டிருக்கும் கதையை தொடர அவனுக்கு விருப்பமில்லை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top