66 நான் குடிக்கவில்லை
66 நான் குடிக்கவில்லை
"நான் குடிக்கவில்லை" என்ற ஸ்ரீராமின் வார்த்தைகள் மிதிலாவின் நிலையை தலைகீழாய் புரட்டி போட்டது. சற்று நேரத்திற்கு முன்பு வரை, அவன் குடிக்காமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்த மிதிலாவுக்கு இப்பொழுது உதறல் எடுத்தது. அவள் கொண்டிருந்த தைரியம் அனைத்தும் காற்றில் பறந்தது. அவளுக்கு குப்பென்று வியர்த்துப் போனது. எந்த ஒரு அசைவுமின்றி, அவளிடம் இருந்து மிக முக்கியமான பதிலை எதிர்பார்த்து காத்திருந்த ஸ்ரீராமை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
அவனுடைய தீர்க்கமான பார்வை கூறியது அவன் பொய் கூறவில்லை என்று. அவன் குடிக்கவில்லை. அவன் அவளுக்கு வெகு அருகில் நின்று கொண்டிருக்கிறான். சற்று நேரத்திற்கு முன்பு வீசிய மதுவின் வாடை, இப்பொழுது அவன் மீது வீசவில்லை. தனது கோட்டில் மட்டும் மதுவை தெளித்துக் கொண்டு வந்திருப்பானோ...? தரையில் கிடந்த அவனது கோட்டின் மீது அவள் பார்வை சென்றது. ஆம், அந்தக் கோட்டு அவன் தோளில் இருந்த போது தான் அவன் மீது வாடை வீசியது. அதனால் தான்,
*நான் குடிக்கவில்லை என்று கூறினால் நீ நம்புவாயா என்று கேட்டானோ?*
இவ்வளவு நேரமாக குடித்தது போல் நடித்துக் கொண்டா இருந்தான்? ஏன் அப்படி செய்ய வேண்டும்? அப்படி நடிக்க காரணம் என்ன? அவன் மனதில் இருப்பதை கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்பதற்காகவா? அப்படி என்றால், இவ்வளவு நேரம் அவன் தன் சுய நினைவோடு தான் பேசிக்கொண்டிருந்தானா?
"நீ என்னை காதலிக்கலையா?" என்ற அவன் குரல் மெலிதாய் ஒலித்தது.
சற்று முன்பு அவன் கேட்ட அதே கேள்வியை சிறிய மாற்றத்துடன் கேட்டான் அவன். அந்த மாற்றம் வேண்டுமானால் சிறிதாக இருக்கலாம். ஆனால், அதில் இருந்த அர்த்தம் மிகப்பெரிது. *நீ என்னை காதலிக்கிறல்ல?* என்பதற்கும், *நீ என்னை காதலிக்கலையா?* என்பதற்கும் தான் எவ்வளவு வித்தியாசம்...!
முதல் கேள்வியில் அவள் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் இரண்டாவது கேள்வியிலோ, எதிர்பார்ப்பும் ஏக்கமும் நிறைந்திருந்தது. திருமதி மிதிலா ஸ்ரீராம் அதை புரிந்து கொண்டாள். அவனுடைய கேள்விக்கு அவள் இப்போது பதில் கூறியாக வேண்டும். என்ன பதில் கூறப் போகிறாள்? அவனுக்கு பதில் கூறக்கூடாது என்பதல்ல... இந்த ஒரு இக்கட்டான சூழலை அவள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதே நேரம், அவள் ஸ்ரீராமை ஏமாற்றவும் தயாராக இல்லை. இப்பொழுது அவனுக்கு பதில் கூறாவிட்டால் வேறு எப்போது கூற போகிறாள்? இப்பொழுது கூறாமல் வேறு ஒருநாள் கூறுவதில் என்ன பலன் இருந்துவிடப் போகிறது...?
தன் கண்களை மெல்ல மூடி ஆமாம் என்று தலையசைத்தாள் மிதிலா.
"ஆமாம்... நான் உங்களை காதலிக்கிறேன்" தன் முகத்தில் துளிர்த்த வியர்வையைத் துடைக்காமல் அப்படியே நின்றாள் மிதிலா.
தன்னை சுதாகரித்துக் கொண்டு மெல்ல கண்களைத் திறந்தவளுக்கு எதிரில், தன் கைகளை கட்டிக் கொண்டு அழகான புன்னகையுடன் நின்றிருந்தான் ஸ்ரீராம். இது தான் முதல்முறை, அவன் மிதிலாவை இப்படி பார்ப்பது... பதட்டத்துடனும்... பயத்துடனும்... தவிப்புடனும்... இதற்கு முன், அவனது வல்லமையைக் கண்டு அவள் எப்போதாவது பயந்திருக்கிறாளா? பலமுறை ஸ்ரீராம் கூட அவளை பயமுறுத்த முயற்சி செய்து இருக்கிறான் தான்... ஆனால் யாரிடம் அவன் தன் வேலையை காட்டினான்? மிதிலாவிடமா? அதில் அவன் வெற்றி காண முடிந்ததா? நிச்சயம் இல்லை... தூசு தட்டுவது போல் அவனை அசட்டையாய் கடந்து சென்றாள் மிதிலா.
ஆனால் இன்று, அவள் பதட்டமாய் இருக்கிறாள்... உணர்வுகளாலும், உணர்ச்சிகளாலும், தன் கணவன் உதிர்த்த வார்த்தைகளாலும். பணத்தாலும், வல்லமையாலும் கட்டுப்படுத்த முடியாதவள் மிதிலா. ஆனால் அவளை அன்பால் சுலபமாக கட்டுப்படுத்திவிடலாம். அதை புரிந்து கொண்ட வல்லமையாளன் தான் இன்று அவள் முன் காதலை இரந்து நிற்கிறான், தனது அகம்பாவத்தையும், அகந்தையையும் விட்டொழித்து.
"ஆனா, ஸ்ரீ... " என்று அவள் ஏதோ கூற முயற்சிக்க, அவள் உதட்டில் தன் ஆள்காட்டி விரலை வைத்து அவளை பேச விடாமல் தடுத்தான் ஸ்ரீராம்.
"ஷ்ஷ்ஷ்.... நான் இப்போ எந்த ஆனா ஆவன்னாவையும் கேட்க தயாரா இல்ல. இந்த நொடியை அப்படியே என்னை ரசிக்க விடு மிதிலா. இது அப்படியே ப்யூரா இருக்கட்டும்"
மிதிலா ஏமாற்றம் அடைந்தாள். அவள் உதட்டில் இருந்து தன் விரலை எடுத்த அவன், மீண்டும் தன் கைகளை கட்டிக் கொண்டு அவளை பார்த்துக் கொண்டு நின்றான்.
"நீங்க போய் சாப்பிடுங்க" என்று தடுமாறினாள் மிதிலா.
"நீ எனக்கு வாக்கு கொடுத்து இருக்க" என்றான் புன்னகை மாறாமல்.
"வாக்கா?"
நீ எனக்கு ஊட்டி விடுறேன்னு சொன்ன இல்ல?"
இது, அவள் உடலில் இறங்கிய மற்றும் ஒரு மின்னல். ஊட்டி விடுவதா? உண்மையிலேயே அவன் குடித்து இருந்தால் அவள் சுலபமாய் அதைச் செய்திருப்பாள். ஏனென்றால், நாளை காலை அவனுக்கு எதுவும் நினைவில் இருந்திருக்காது. ஆனால் இப்பொழுது அவன் சுயநினைவோடு இருக்கிறான். எப்படி அவள் அதை செய்வது?
"உன்னுடைய வாக்கை நீ காப்பாத்த போறது இல்லையா?" என்ற அவன் குரல் மென்மையாக அதே நேரம் உறுதியாக ஒலித்தது.
மெல்ல தன் கண்களை இமைத்தாள் மிதிலா.
"உனக்கு ஏன் இப்படி வேர்க்குது?"
அவள் முகத்தை துடைக்க தன் கைகளை நீட்டினான் ஸ்ரீராம். மிதிலா தன் முகத்தை பின்னால் இழுத்ததை பற்றி கவலைப்படாமல், அவள் கன்னத்தை துடைத்து விட்டான். அப்பொழுது, அவளது நடுங்கும் இதழ்களில் அவன் விரல் பட, கண்ணை மூடினாள் மிதிலா.
"எனக்கு பசிக்குது" என்றான் குழைவான குரலில்.
திடுக்கிட்டு கண் திறந்தாள் மிதிலா.
"ஊட்டி விடு" என்றான் அவள் இதழ்களை பார்த்தபடி, துள்ளும் புன்னகையுடன்.
இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், பொதுவாய் பெண்கள் தங்கள் வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல் உணர்வார்கள். ஆனால் மிதிலாவின் வயிற்றில் வேடந்தாங்கலின் பறவை கூட்டமே சிறகடித்து பறந்தது. ஸ்ரீராம் இப்படி தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டே இருந்தால், அவளும் தான் பாவம் என்ன செய்வாள்?
"நீங்க ஃப்ரெஷ் ஆக போறது இல்லையா?" என்றாள் சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.
"ஏன்? நான் அழுக்கா இருக்கேனா? இல்ல என் மேல சாராய நெடி வீசுதா?" என்றான் கிண்டலாக.
அவனுக்கு பதில் கூறாமல் நின்றாள் மிதிலா. அவன் கிண்டல் செய்வதற்காகவே கேள்வி கேட்கும் போது, அவள் பதில் கூற என்ன இருக்கிறது?
"நான் ஃபைவ் மினிட்ஸ்ல வரேன்"
நேரத்தை வீணாக்காமல், முகம் கழுவ பரபரவென குளியலறையை நோக்கி சென்றான் ஸ்ரீராம். கட்டிலில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்று கொண்டிருந்தாள் மிதிலா. வாழ்க்கை சில நொடிகளில் மொத்தமாய் மாறிப் போவதை அவள் பலமுறை கேட்டிருக்கிறாள். ஆனால் தன் வாழ்க்கையில், தனக்கு அப்படிப்பட்ட அனுபவம் ஸ்ரீராம் மூலமாக ஏற்படும் என்பதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
குளியலறையை விட்டு ஸ்ரீராம் வெளியே வந்த போது கட்டிலை விட்டு எழுந்தாள் மிதிலா. முகத்தைத் துடைத்து விட்டு வந்து சோபாவில் அமர்ந்தான் ஸ்ரீராம். மிதிலாவை பார்த்துவிட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு தட்டையும் பார்த்தான் அவன். அவனை நோக்கி சென்ற மிதிலா, அந்த தட்டை தன் கையில் எடுத்துக் கொண்டாள். சப்பாத்தியில் உருளைக்கிழங்கு மசியலை தொட்டு, அவனது வாயருகே நீட்டினாள். அவனது உதட்டை தொட்டு விடக்கூடாது என்பதில் அவள் மிகவும் கவனமாக இருந்தாள். அதைப் புரிந்து கொண்டுவிட்ட ஸ்ரீராம், வேண்டுமென்றே அவள் விரலை தன் உதட்டால் தொட்டு அந்த சப்பாத்தியை உண்டான். மிதிலாவின் வயிற்றில் நிகழ்ந்த பூகம்ப அதிர்வு அவளை பாடாய் படுத்தியது. அதன் பிறகு, ஒவ்வொரு முறையும், அவளது விரல்கள், ஸ்ரீராமின் உதட்டின் கதகதப்பை உணர்ந்து கொண்டே இருந்தன. அவன் சாப்பிட்டு முடித்த பின், அந்த தட்டை சமையல் அறைக்கு எடுத்து சென்றாள் மிதிலா.
அவள் அறைக்கு திரும்பி வரும் வரை காத்திருந்த ஸ்ரீராம், அவள் வருவதைப் பார்த்தவுடன், கட்டிலுக்கு சென்று படுத்துக் கொண்டான். மிதிலாவின் பாவப்பட்ட இதயத்தின் துடிப்பு எக்குத்தப்பாய் எகிறியது. ஸ்ரீராமுக்கு முதுகை காட்டிக்கொண்டு, அவனுக்கு எதிர் புறமாய் படுத்து கண்களை மூடிக்கொண்டாள் மிதிலா.
அவனது வெதுவெதுப்பான கரம், அவள் மேற்கரத்தில் பட்டது. திடுக்கிட்டு அவனை நோக்கி திரும்பினாள் மிதிலா. அவள் இடையை சுற்றி வளைத்து, அவளை தன்னை நோக்கி இழுத்துக் கொண்டான் ஸ்ரீராம்.
"உன் கூட இந்த மாதிரி தூங்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. தூங்கலாம் இல்ல?" என்று அவளை அணைத்துக் கொள்ள அனுமதி கேட்டான், அவளை அனைத்து கொண்டபின்.
இப்படி சங்கடத்தைத் தரும் கேள்விகளை எல்லாம் இவன் ஏன் தான் கேட்கிறானோ? அவள் என்ன கூற முடியும்? நீ என்னை தாராளமாய் அணைத்துக் கொள்ளலாம் என்றா?
"நீ தேவையில்லாத எதையும் யோசிக்க வேண்டாம். சும்மா கட்டிப் பிடிச்சிக்கிட்டு தூங்க போறேன்... ஒரே போர்வைக்குள்ள... உன்னை என் நெஞ்சோடு சேர்த்துக்கிட்டு... அவ்வளவு தான்"
எந்த பதிலும் கூறாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள் மிதிலா.
"உன்னுடைய மௌனத்தை நான் சம்மதம்னு எடுத்துக்கிறேன்"
அதற்கும் அவனுக்கு பதில் கிடைக்கவில்லை. ஆனால் அவன் அதைப் பற்றி கவலைப் படவில்லை. அவளை அணைத்துக் கொண்டான்.
"தூக்கத்துல, தெரியாம என்னோட கை உன்னோட *பிரைவேட் ஏரியாவுல* பட்டா என்னை தப்பா நினைச்சுக்காதே" என்றான் இரகசியமாக.
மிதிலாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிவடைந்தன. அவள் முகத்தைப் பார்த்து சிரித்தான் ஸ்ரீராம். கண்களை மூடிக்கொண்ட மிதிலா, மீண்டும் கண் திறந்தாள் அவன் கூறிய,
"ஐ அம் சாரி" யை கேட்டு.
ஒன்றும் புரியாமல் அவனை திரும்பி பார்த்தாள்.
"ஆரம்பத்துல உன்னை மரியாதையா நடத்தாம இருந்தததுக்காக சாரி"
தான் எப்போதோ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட ஸ்ரீராமை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மிதிலா.
"நான் உன்னை காயப்படுத்தணும்னு அப்படியெல்லாம் நடந்துகல. நான் நடந்துகிட்ட விதம் ஒருத்தரை காயப்படுத்தும்னு எனக்கு அப்போ புரியலை. ஏன்னா, நான் எல்லார்கிட்டயும் அப்படித் தான் நடந்துகிட்டேன். நான் அப்படித் தான் இருந்தேன். நீயும் மத்த பொண்ணுங்களை மாதிரி தான் இருப்பேன்னு நினைச்சேன். நான் உன்கிட்ட ரொம்ப ஸில்லியா நடந்துகிட்டேன். ஐ அம் சாரி"
தனது சுயநினைவுடன் தன் மனதில் இருந்தவற்றை கொட்டித் தீர்த்தான் ஸ்ரீராம். அவன் கோரிய மன்னிப்பால் நெகிழ்ந்து போனாள் மிதிலா.
அவளைத் தன்னை நோக்கி திருப்பி, வசதியாய் அணைத்துக் கொண்டான். மிதிலா சிறிதும் எதிர்பார்க்காத வண்ணம் அவள் கன்னத்தில் அன்பாய் முத்தமிட்டான். கண்களை மூடி அவன் தோளை பற்றினாள் மிதிலா.
"குட் நைட் " என்ற ஸ்ரீராம்,
தன் கண்களை மூடி தூங்க முனைந்தான். ஆனால், மிதிலா அன்று தூங்கவில்லை. அவள் மனதில் எண்ணங்கள் அலையென எழுந்து தொடர்ச்சியாய் மோதி கொண்டிருந்தன. அவள் பேச முயற்சித்த போது ஏன் அவளை தடுத்தான் ஸ்ரீராம்? அவளை பேச வீட்டிருந்தால் இன்றோடு அனைத்தும் முடிந்துவிட்டிருக்குமே. ஏது எப்படி இருந்தாலும் நாளை இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். தூங்கிக் கொண்டிருந்த ஸ்ரீராமை பார்த்தாள் மிதிலா. எல்லாவற்றையும் கொட்டி தீர்த்துவிட்டு எவ்வளவு நிம்மதியாய் உறங்குகிறான்...! இது போன்ற தூக்கம் அவளுக்கும் வேண்டும். நாளை இரவு, அவளுடைய தூக்கம், இப்படிபட்ட அமைதியான தூக்கமாய் தான் இருக்கும். அவனிடம் நாளை எல்லவற்றையும் கூறிவிடுவது என்று தீர்க்கமான முடிவெடுத்த மிதிலா, கண்களை மூடி அவனை சுற்றி வளைத்துக் கொண்டு, அவன் நெஞ்சில் முகம் பதித்தாள்.
தொடரும்....
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top