64 அடி மேல் அடி

64 அடி மேல் அடி

தனது அறையில் லயாவை பார்த்து ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றான் ஸ்ரீராம். அவள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாள்? அவன் எதுவும் கேட்கும் முன் அவள் கத்தி கூப்பாடு  போட தொடங்கினாள்.

"என்னை விடுங்க... யாராவது என்னை காப்பாத்துங்க..." என்று கதவை ஓங்கித் தட்ட துவங்கினாள்.

அவளின் அந்த செய்கையை பார்த்து முகம் சுளித்த ஸ்ரீராம், அவன் அறையை நோக்கி வந்த சில காலடி ஓசையை கேட்டான் அவன். அவனது சப்த நாடியும் ஒடுங்கிப் போனது, மிதிலாவின் குரலைக் கேட்ட போது. அவளும் திருமண வரவேற்பில் இருந்து வந்து விட்டாள் போல் தெரிகிறது. அவள் அவனுக்காகத் தான் சீக்கிரம் வந்திருக்க வேண்டும். இங்கு இவன், அவர்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை குறைக்க படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால் இந்த லயா, அனைத்தையும் கெடுத்து குட்டிச்சுவராக்கி விடுவாள் போல் தெரிகிறது.

லயா கதவை திறந்தாள். சொல்ல முடியா குழப்பம் நிறைந்த முகத்துடன், அவனையும், லயாவையும் மாறி பார்த்தபடி தனது குடும்பத்தினர் உள்ளே நுழைவதை கண்டான் ஸ்ரீராம்.

பிரியாவை கட்டிப்பிடித்துக் கொண்டு ஓவென்று அழுதாள் லயா. எவர் முகத்தையும் ஏறெடுத்து பார்க்க முடியாமல் தலைகுனிந்தபடி நின்றாள் பிரியா.

"அக்கா, இவர் என்கிட்ட தப்பா நடந்துக்க பாத்தாரு... நல்ல காலம் அவர் எதுவும் செய்யறத்துக்கு முன்னாடி நீங்க எல்லாரும் வந்துட்டீங்க. இல்லன்னா என்னுடைய நிலைமை என்ன ஆகியிருக்கும்னு என்னால கற்பனை கூட பண்ணி பாக்க முடியல" என்று பிரியாவின் தோளில் சாய்ந்து கண்ணீர் சிந்தினாள்.

அங்கு நின்ற அனைவரும் பேயறைந்தது போல் ஆனார்கள். ஒவ்வொருவரின் முகத்திலும் பயம் தாண்டவமாடியது. அவர்கள் அனைவருக்கும் ஸ்ரீராமை பற்றியும் தெரியும்... லயாவை பற்றியும் தெரியும்... ஆனால், இந்த சூழ்நிலையில் அவர்களால் ஸ்ரீராமின் பக்கம் நிற்க முடியவில்லை.

ஸ்ரீராமின் கண்கள், மிதிலாவின் முகபாவத்தை கவனித்தபடி அவள் முகத்தில் வேரூன்றி நின்றது. அவன் தொண்டையை அடைத்த ஏதோ ஒரு கடினமான உருண்டையை மென்று முழுங்கினான் ஸ்ரீராம். இது கத்தி மேல் நடப்பது போன்ற மிக மோசமான சூழ்நிலை. அவனுக்கு தெரியும், இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்,  சமுதாயம் பெண்களின் வார்த்தையைத் தான் பெரும்பாலும் நம்புகிறது. ஏனென்றால், இந்த விஷயத்தில் பெண்கள் பொய்யுரைக்க மாட்டார்கள் என்பது அதன் கணிப்பு. ஏனென்றால், இது பெண்களின் மதிப்பு, மரியாதை, கௌரவம் சம்பந்தப்பட்ட விஷயம். அதுவும் கண்ணெதிரில் காணும் போது, யார் தான் ஆணின் பக்கம் இருக்கும்  உண்மையை ஆராய்வார்? மிதிலாவுடனான தனது காதல் கதை, முடிவை நெருங்கிவிட்டதை போல உணர்ந்தான் ஸ்ரீராம்.

"நம்ம இதை பத்தி அப்புறம் பேசலாம். வா இங்கயிருந்து போகலாம்" என்றாள் பிரியா.

"இதுக்கு மேல பேச எதுவுமே இல்ல கா. எல்லாமே முடிஞ்சு போச்சு. இவரோட ரூமுக்கு வந்து என் தலையில் நானே மண்ணை அள்ளிப் போட்டுகிட்டேன். இவர் இவ்வளவு கீழ்த்தரமானவரா இருப்பார்னு நான் நினைச்சு கூட பாக்கல. இவ்வளவு தரம் கெட்டுப் போவார்னு நான் நினைக்கல கா"

அருமையாய் ஒரு கதையை ஜோடித்தாள் லயா. அப்பொழுது அவளை நோக்கி மிதிலாவின் கேள்விக்கணை பாய்ந்தது.

"எங்க ரூம்ல நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க? எதுக்காக நீ இங்க வந்த?" என்றாள்.

"ஸ்ரீராம் தான் கூப்பிட்டாரு" என்றாள் லயா.

"ஃபோன் பண்ணி கூப்பிட்டாரா இல்ல மெசேஜ் பண்ணி கூப்பிட்டாரா?"

லயாவுக்கு தெரியும், மிதிலா நிச்சயம் அவளது கைபேசியை காட்டச் சொல்லி கேட்பாள் என்று. அதனால் தன்னை சுதாகரித்துக் கொண்டு, தன் அழுகை நாடகத்தை தொடர்ந்தபடி, மிதிலாவுக்கு பதில் கூறினாள் லயா.

"இவர் ஆஃபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்த போது, நான் லிவ்விங் ரூமில் இருந்தேன். அப்போ தான் அவருடைய ரூமுக்கு வரச் சொல்லி கூப்பிட்டார்"

"அவரு என்ன சொன்னாரு? என்ன காரணம் சொல்லி உன்னை கூப்பிட்டாரு?"

"ஏதோ முக்கியமான விஷயத்தை என்கிட்ட சொல்லணும்னு சொன்னாரு" என்றாள் கண்ணீரைத் துடைத்தபடி.

"அப்புறம்?" என்றாள் மிதிலா வெகு சாதாரணமாய்.

"நான் அவர் கூட வந்தேன்"

"அப்புறம்? "

"அவர் கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டுட்டு என்னை பார்த்து சிரிச்சாரு"

"அப்புறம்"

"என் பக்கத்தில் வந்து என் கையைப் பிடிச்சார்"

"அப்புறம்?"

"அவர் அப்படி செஞ்சதை பார்த்து நான் பயந்துட்டேன்"

"ம்ம்ம்"

"அப்போ அவர் சொன்னார், நான் மிதிலா கூட சந்தோஷமா இல்ல. உன்னோட உண்மையான காதலை நான் மிஸ் பண்ணிட்டேன். நீ என்கூட இருந்தா நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன். நீ அமெரிக்காவுக்கு திரும்பிப் போறேன்னு சொன்ன போது தான், என் மனசுல உனக்கு ஒரு இடம் இருக்கிறதை நான் உணர்ந்தேன். நீ என்னை விட்டுட்டு போறதை என்னால தாங்க முடியல. நான் உன்னை போக விடமாட்டேன். அப்படின்னு சொன்னாரு"

"ம்ம்ம் "

"அது ரொம்ப தப்புன்னு நான் சொன்னேன்"

"ஓஹோ"

"தப்பு, சரி பத்தி யோசிக்கிற நிலைமையில நான் இல்லைன்னு சொன்னாரு..."

சற்று நிறுத்தியவள்,

"என்னை இறுக்கமாக கட்டிப்பிடிச்சிகிட்டாரு..."

"அப்புறம்?"

லயா முகம் சுளித்தாள். அவள் என்ன கதையா சொல்லிக் கொண்டிருக்கிறாள்? என்னமோ சுவாரஸ்யமான கதை கூறிக் கொண்டிருப்பதை போல *உம்* கொட்டிக் கொண்டு இருக்கிறாளே இந்த மிதிலா...!

"அவரைப் பிடிச்சி தள்ளிட்டு வந்து நான் கதவை திறந்தேன்"

"அவ்வளவு தானா?" என்ற மிதிலாவை  வினோதமாய் பார்த்தாள் லயா.

"இப்போ நீ சொன்ன விஷயத்துல எந்த மாற்றமும் இல்லையே?"

அவளுக்கு பதில் கூறாமல் அமைதியாக நின்றாள் லயா. ஏன் அவள் இதை கேட்கிறாள் என்று அவளுக்கு புரியவில்லை.

"ஒரு முக்கியமான விஷயத்தை நீ சொல்ல மறந்துட்ட... இதுக்கு நடுவுல அவர் எப்போ டிரஸ் மாத்தினாருனு நீ சொல்லல. ஏன்னா, அவர் எப்பவும் ஆஃபீசுக்கு கோட் சூட்டில் தான் போவாரு. இன்னைக்கு கூட அவர் லைட் கிரே கலர் சூட் போட்டிருந்தாரு"

ஸ்ரீராமின் முகம் ஒளிர்ந்தது. மிதிலா, லயாவை பிடித்து விட்டதை உணர்ந்தான் அவன். செய்வதறியாமல் திகைத்து நின்றாள் லயா. மற்றவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.

"இல்ல அவர் இந்த டிரஸ்ல தான் வீட்டுக்கு வந்தார்" என்றாள் லயா. 

"அப்படின்னா, அவர் போட்டிருந்த கோட் சூட்டை அவர் ஆஃபீஸ்லயே மாத்திட்டாருனு சொல்றியா?"

"அது எனக்கு தெரியாது"

"ஆனா எனக்கு தெரியும். இன்னைக்கு காலையில அவர் என்கூட கோட் சூட் போட்டுகிட்டு தான் ஆஃபீஸ் வந்தாரு. இப்போ, பேண்ட் ஷர்ட்டில் இருக்காரு. நீ தான் சொன்ன, அவர் ஆஃபீஸ்ல இருந்து வரும் போது உன்னை கூப்பிட்டார்னு... நீயும் அவரை பின்தொடர்ந்து வந்தேன்னு..."

"ஒருவேளை, அவர் முன்னாடியே வீட்டுக்கு வந்து, டிரஸ் மாத்திட்டு மறுபடியும் வெளிய போனாரோ என்னவோ..."

"வீட்டில் யாருமே இல்லைனு உனக்கு தெரியும். அப்படி இருக்கும் போது, எதுக்காக அவர் கூப்பிட்ட உடனே அவர் கூட போன?"

"அவர் நல்லவர்னு நினைச்சு நான் போனேன். என்னோட கல்யாணத்துக்கு எனக்கு வாழ்த்து சொல்வார்னு நினைச்சேன்... அவருக்கு வேல்யூஸ் இருக்கும்னு நெனச்சேன்..."

அவள் பேச்சை துண்டித்து,

"நீ சொல்ற கதையை நான் நம்பிடுவேன்னு நினைச்சே... அப்படித் தானே...?"

" இல்ல..."

"லக்கி, நம்ம பார்க்கிங் லாட்டில் இருக்கிற சிசிடிவி ஃபுட்டேஜை கொண்டு வா. அவர் என்ன டிரஸ் போட்டிருந்தாரு, எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தாருன்னு பார்த்துடலாம்" என்றாள் மிதிலா லட்சுமணனிடம்.

அதைக் கேட்ட லயாவின் முகம் வெளுத்துப் போனது.

"நீ சொல்றது சரி தான்னு நினைக்கிறேன். இப்ப தான் எனக்கு ஞாபகம் வருது. அவர் கோட்டு சூட்டில் தான் வீட்டுக்கு வந்தார்"

"தப்பா நடந்துக்கும் எண்ணம் இருக்கிற ஒருத்தர், டிரஸ்சை கழட்டாம, ட்ரெஸ் மாத்திக்கிட்டு இருந்ததைப் பத்தி இது வரைக்கும் நான் கேள்விப்பட்டதில்ல..." என்ற மிதிலாவின் குரலில் எகத்தாளம் தெரிந்தது.

"அது வந்து..." என்று திணறினாள் லயா.

அடுத்த நொடி, அங்கிருந்த யாரும் எதிர்பாராத வண்ணம், லயாவின் உள்ளுறுப்புகள் அனைத்தும் அதிரும் வண்ணம், அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தாள் மிதிலா. அந்த அறையின் மூலம், ஆணிவேர் முதல் கொண்டு ஆட்டம் கண்டாள் லயா. மிதிலாவை நம்ப முடியாத பார்வை பார்த்தாள் அவள். தன்னுடைய செய்கை, நம்ப முடியாததாய் இருக்கும் பட்சத்தில், அதை நம்ப வைக்க வேண்டிய பொறுப்பும் மிதிலாவுக்கு இருக்கிறது அல்லவா? அதனால் மீண்டும் ஒரு அறை கொடுத்தாள். பின்னால் இருந்த ஊர்மிளாவின் மீது லயா மோத, தொடக்கூடாததை தொட்டு விட்டதைப் போல், அருவருப்பான முகபாவத்துடன் அவளைப் பிடித்து தள்ளினாள் ஊர்மிளா.

"நீ உன் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்க? நீ சொல்ற குப்பையை நான் நம்புவேன்னு நெனச்சியா? என் புருஷனைப் பத்தி எனக்கு தெரியும். அவர் முகத்தைப் பார்த்தவுடனேயே அவர் தப்பு செஞ்சாரா இல்லையான்னு சொல்லிட என்னால முடியும். ஒருவேளை அவர் தப்பு செஞ்சிருந்தா, என் முகத்தை நிமிர்ந்து கூட அவர் பார்த்திருக்க மாட்டார். அடுத்தவ புருஷனை அபகரிக்க நினைக்க உனக்கு வெக்கமா இல்ல? வெட்கம் கெட்டவளே..." என்று சீறினாள் மிதிலா.

அதுவரை அமைதியாய் நின்றிருந்த புஷ்பா,

"இதுக்காகத் தான் நான் காத்திருந்தேன்" என்றார்.

அனைவரும் அவரை ஒன்றும் புரியாமல் பார்த்தார்கள்.

"மிதிலாவைப் பத்தி எங்க எல்லாருக்கும் தெரியும். ஆனா அவ ராமுவை எந்த அளவுக்கு நம்புறான்னு நான் தெரிஞ்சிக்க நினைச்சேன். அவ என்னை ஏமாத்தல. எங்க ராமு தனக்கு ஏதாவது வேணும்னு பிடிவாதமா இருந்தா, அதக்கு ஏதாவது ஒரு உறுதியான காரணம் இருக்கும். அவன் மிதிலாவை கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சதை போல...! அதே மாதிரி, அவன் தனக்கு ஏதாவது ஒன்னு வேண்டாம்னு சொன்னாலும் அதுக்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்" என்றார் லயாவை பார்த்தபடி.

எரிச்சலுடன் தலை குனிந்தாள் லயா.

"அவ செஞ்ச வேலையை எல்லாரும் பாருங்க" என்று தன் கைபேசியை ஓட விட்டார் புஷ்பா. அது லயா தனது தோழியுடன் பேசிய காணொளி.

"ஸ்ரீராமையும், மிதிலாவையும் நிம்மதியா நான் வாழவிட்டுட்டு இந்தியாவை விட்டு போக மாட்டேன். என்னை வேண்டாம்னு சொன்னதுக்காக ஸ்ரீராம் தண்டனையை அனுபவிச்சே ஆகணும்"

"......"

"நான் ஒரு பொண்ணு. ஸ்ரீராம் என்னை ரேப் பண்ண முயற்சி பண்ணான்னு சொன்னா, எல்லாரும் என்னைத் தான் நம்புவாங்க. அதுக்கப்புறம் மிதிலா அவனை திரும்பி கூட பாக்க மாட்டா. அவளுக்கு இந்த மாதிரி கேவலமான ஆளை பிடிக்காது. நானும் நிம்மதியா யூஎஸ் கிளம்பி போவேன்"

அந்தக் காணொளியை நிறுத்தினார் புஷ்பா.

"இந்த வீட்ல நீ காலடி எடுத்து வச்ச நாள்ல இருந்து நான் உன்னை கவனிச்சுக்கிட்டுத் தான் இருக்கேன்... உன்னை மட்டும் தான் கவனிச்சுக்கிட்டு இருக்கேன். ராமுவை பத்தி நீ எது சொன்னாலும் நாங்க நம்பிடுவோம்னு நெனச்சியா?" என்று சற்றே நிறுத்தியவர்.

"ஒரு விதத்துல நீ சொன்னது சரி தான். மிதிலாவுக்கு மோசமான ஆம்பளைங்கள பிடிக்காது. ஆனா எங்க ராமு மோசமானவன் இல்ல." என்றார் கோபம் கொப்பளிக்க.

மிதிலாவின் முகத்திலிருந்து ஸ்ரீராமின் கண்கள் அகலவே இல்லை.

"பிரியா, இந்த பொண்ணு இந்த வீட்ல வேண்டாம். அவ இனிமே ஒரு நிமிஷம் கூட இங்க இருக்கக் கூடாது" என்றார் பாட்டி.

லயாவின் கையை பிடித்து, தரதரவென கோபமாய் இழுத்து சென்றாள் பிரியா. அங்கிருந்த யாரும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. மிதிலாவைப் பார்த்து பெருமையாய் புன்னகைத்த பின் ஒவ்வொருவராய் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள். அவளை ஓடிவந்து அணைத்துக் கொண்டாள் நர்மதா. அந்த அணைப்பின் மூலம் தனது நன்றியறிதலைத் தெரிவித்தாள் அவள். அதை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாள் மிதிலா.

மிதிலாவை இருக்கமாய் கட்டி அணைத்து, அவள் கண்ணத்தில் அழுத்தமாய் முத்தம் கொடுத்தாள் ஊர்மிளா.

"நீ கலக்கிட்ட டார்லிங். அந்த டேஷ்க்கு சரியான பாடம் சொல்லிக்கொடுத்து நீ யாருன்னு புரூஃப் பண்ணிட்ட" என்று அவள் கன்னத்தில் மீண்டும் ஒரு முத்தம் கொடுத்தாள்.

தனது தோழியை பார்த்து கர்வத்துடன் புன்னகைத்தான் லக்ஷ்மன். அவனுடன் அங்கிருந்து துள்ளிகுதித்தபடி வெளியேறினாள் ஊர்மிளா.

மிதிலாவுக்கு தெரியும், சக்தி வாய்ந்த இரு விழிகள் நன்றியுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்று. ஸ்ரீராமை  பார்க்க பாவமாக இருந்தது அவளுக்கு. சிங்கம் போல் வலம் வந்த அவன், இன்று கையாலாகாமல் நிற்கும்படி நேர்ந்துவிட்டது. தன்னை சுதாகரித்துக் கொண்டு, புன்னகையுடன் அவனை ஏறிட்டாள்.

"உங்களுக்கு நான் காபி கொண்டு வரேன். இப்போ உங்களுக்கு அது தேவைன்னு நினைக்கிறேன்" என்றாள் புன்னகையுடன்.

அந்த வார்த்தைகளை அவள் கூறி முடிக்கும் முன், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை போல் அவளை நோக்கி வந்த ஸ்ரீராம், அவள் எதிர்பார்க்காத வண்ணம், அவளை இறுக்கமாய் கட்டியனைத்தான், மிதிலாவை திக்குமுக்காட செய்து. அதை சிறிதும் எதிர்பார்க்காத மிதிலாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

"தேங்க்யூ மிதிலா... என் மேல வச்ச நம்பிக்கைக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்றான் மெல்லிய குரலில், அவளை மேலும் இறுக்கிக் கொண்டு.

கண்களை மூடி அவன் அணைப்புக்குள் கிடந்தாள் மிதிலா. அவனைத் தழுவிக் கொள்ள வேண்டும் என்று அவள் கரங்கள் பரபரத்தன. ஆனால் அவள் அப்படிச் செய்தால், அது அவர்களை எங்கு கொண்டு சென்று நிறுத்துமோ...! அவள் அதற்கு தயாரா? அவள் எப்போதிலிருந்தோ தயார் தான்...! ஆனால் ஸ்ரீராமிடம் அவள் கூற நினைத்ததை கூறாத வரை, அவன் அதை ஏற்காத வரை, அவள் அதை எப்படி செய்ய முடியும்? பலவீனமடைந்து இருக்கும் ஸ்ரீராமின் நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அவள் விரும்பவில்லை.

அவன் அணைப்பிலிருந்து மெல்ல வெளிவந்த மிதிலா, அவனைப் பார்த்து இதமாய் புன்னகைத்தாள். மெல்ல அவனை விட்டுப் பிரிந்து அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.

சமையலறைக்கு வந்துவிட்ட போதிலும், அவளது மனம் ஸ்ரீராமை தனியாக விட்டு விடவில்லை. சுப்பிரமணி பாலைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். வேகவேகமாய் காபியைக் கலந்து எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்கு சென்றாள் மிதிலா.

தலைகுனிந்து சோபாவில் அமர்ந்திருந்த ஸ்ரீராமை பார்த்த போது, அவளது இதயம் கண்ணீர் விட்டது. அவனை நோக்கி காபி குவளையை நீட்டிய அவளை, தலைநிமிர்ந்து பார்த்த ஸ்ரீராமின் முகத்தில் தெரிந்தது எப்படிப்பட்ட உணர்வு? நம்மால் கூற இயலவில்லை.

சோபாவை விட்டு எழுந்து நின்ற ஸ்ரீராம், தன் கண்களை அவள் முகத்திலிருந்து அகற்றாமல் அவளிடமிருந்த குவளையை வாங்கி மேசையின் மீது வைத்தான். அவன் கண்களில் காதல் நிரம்பி வழிந்தது. அது மிதிலாவின் இதயத்தை தாறுமாறாய் ஓட செய்தது. ஸ்ரீராமின் அடுத்த வார்த்தைகள் அவளை மேலும் பலவீனம் அடைய செய்தது.

"இந்த சூடான காபியை விட, உன்னுடைய வெதுவெதுப்பான அணைப்பு தான் இப்போ எனக்கு வேணும், மிதிலா" என்ற போது அவனது குரல் குழறியது.

என்ன செய்வதென்று புரியாத மிதிலா, வேறு எங்கோ பார்த்தபடி மென்று முழுங்கினாள். எண்ணச் சுழலில் அகப்பட்டு சுழன்று கொண்டிருந்த ஸ்ரீராமின் மனம், அவளுக்கு யோசிக்க அதிக நேரம் கொடுக்கும் நிலையில் இல்லை. தனது கரங்களை அவளை நோக்கி நீட்டி, தன் தலையை அசைத்தான்,

*என்னிடம் வந்துவிடு என்பதைப் போல*

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top