63 சூழ்ச்சி பொறி
63 சூழ்ச்சி பொறி
ஸ்ரீராமின் அறைக்கு வந்த மிதிலா, அவன் யாருடனோ கோபமாய் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து நின்றாள். அவன் ஏன் அப்படி கத்திக் கொண்டிருக்கிறான் என்று அவளுக்கு புரியவில்லை. அமைதியாய் நின்று அவன் பேசுவதைக் கேட்டாள்.
"நீங்க எப்படி இதை நடக்க விட்டீங்க? ஏன் இதைப் பத்தி என்கிட்டே முன்னாடியே சொல்லல?"
"...."
"சரி. நான் உடனே கோயம்புத்தூர் வரேன்" அழைப்பைத் துண்டித்துவிட்டு, மீண்டும் யாருக்கோ அழைப்பு விடுத்தான்.
"குகா, கோயம்புத்தூருக்கு ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணு." என்றான்.
"கோயம்புத்தூருக்கா?இன்னைக்கேவா?" என்றான் குகன்.
"ஆமாம், இன்னைக்கு தான்" என்றான் நிச்சயமாக.
"என்ன ஆச்சி, எஸ்ஆர்கே? எதுக்காக அவ்வளவு அவசரமா நீ கோயம்புத்தூர் போகணும்?"
"நம்ம கோயம்புத்தூர் பிரான்ச் மேனேஜர், நம்ம க்ளையன்ட்கிட்ட இருந்து 2 கோடி ரூபாயை கையாடல் பண்ணிட்டாராம். அதனால, அவங்க நம்ம பிரான்சுக்கு மெட்டீரியல் அனுப்புறதை நிறுத்திட்டாங்களாம். அடுத்த வாரம், ரெண்டு டெலிவரி கொடுக்க வேண்டி இருக்கு. அதோடு மட்டுமில்லாம அந்த பிரான்சுக்கு புது மேனேஜரை அப்பாயிண்ட் பண்ணி ஆகணும்." என்று பிரச்சனையை ஒரே மூச்சில் சொல்லி முடித்தான் ஸ்ரீராம்.
பிரச்சனை என்னவென்று மிதிலாவுக்கு புரிந்தது. அவளுக்கு மிகுந்த ஏமாற்றமாகிப் போனது. அவளது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவை அவள் எடுத்திருந்தாள். ஆனால், சந்தர்ப்பம் அவளுக்கு சாதகமாக இல்லை. விதி அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்று புரியவில்லை. இந்த பிரச்சனை எப்படி முடியப் போகிறது என்றும் புரியவில்லை அவளுக்கு.
"நானாவது, பரத்தாவது கோயம்புத்தூர் போறோம். நீ எதுக்குப் போகணும்?" என்றான் குகன்.
"இந்த இக்கட்டான சூழ்நிலையில் என்னால கையை கட்டிகிட்டு உட்கார்ந்து இருக்க முடியாது"
"ஆனா, எஸ் ஆர் கே..."
"இது நம்ம கம்பெனியோட கௌரவம் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் நான் ரிஸ்க் எடுக்க தயாரா இல்ல. நான் தான் போகப் போறேன். தட்ஸ் ஃபைனல்..." என்று அழைப்பை துண்டித்த ஸ்ரீராம், அங்கு மிதிலா நின்றிருந்ததை பார்த்து பெருமூச்சு விட்டான்.
"மிதிலா, இன்னைக்கு நான் கோயம்புத்தூர் போயாகணும்"
"நீங்க பேசிக்கிட்டிருந்ததை நான் கேட்டேன்"
"நான் திரும்பி வர ஒரு வாரம் ஆகலாம்"
சரி என்று தலை அசைத்தாள் மிதிலா.
"ஆஃபீசை கவனிச்சுக்கோ. குகன்கிட்ட எந்த ஹெல்ப் வேணும்னாலும் கேளு"
"சரி" என்று கூறிவிட்டு அவள் அங்கிருந்து செல்ல நினைத்த பொழுது,
"நீ இங்க என்ன விஷயமா வந்த, மிதிலா?" என்றான் யோசனையுடன்.
"சீரியஸா எதுவும் இல்ல"
அப்பொழுது அங்கு வந்த குகன்,
"உன்னோட டிக்கெட் கன்ஃபார்ம் ஆயிடுச்சு. நீ அஞ்சு மணிக்கு ஏர்போர்ட்ல இருக்கணும்" என்றான்.
சரி என்று தலையசைத்தான் ஸ்ரீராம்.
"அஞ்சு மணிக்கு நீங்க ஏர்போர்ட்ல இருக்கனும்னா, இப்போ நீங்க வீட்டுக்கு போனா தான் சரியா இருக்கும்" என்றாள் மிதிலா.
"ஆமாம். நீ சொல்றதும் சரி தான். நான் வீட்டுக்கு போய் என்னோட திங்ஸை பேக் பண்ணனும்"
"நானும் உங்ககூட வீட்டுக்கு வரட்டுமா?" என்று அவள் கேட்க, தனக்கு இருந்த அத்தனை பிரச்சனைகளையும் மறந்து சரி என்று புன்னகையுடன் தலையசைத்தான்.
பூவனம்
அவர்கள் இருவரும் பூவனம் வந்தார்கள். முந்தைய தினத்தை விட, இன்று லயா நன்றாக நடந்து கொண்டிருந்ததை கவனித்தாள் மிதிலா. இவ்வளவு சீக்கிரத்தில், அவளிடம் தெரிந்த இவ்வளவு பெரிய முன்னேற்றத்தை நம்ப முடியவில்லை மிதிலாவினால்.
ஸ்ரீராமை பார்த்து புன்னகைத்தாள் லயா. ஆனால் அவளைப் பார்த்து சிரிக்கும் நிலையில் அவன் இல்லை. தன் அறையை நோக்கி விறுவிறுவென நடந்தான். அவனை பின்தொடர்ந்தாள் மிதிலா.
"நீங்க போய் குளிச்சுட்டு ரெடியாகுங்க. உங்க திங்ஸ்ஸை நான் பேக் பண்றேன்" என்றாள் மிதிலா.
"சரி" என்று கூறிவிட்டு அவன் குளியல் அறைக்கு செல்ல, லயாவின் மின்னல் வேக முன்னேற்றம் பற்றி யோசித்தபடி அவனது துணிமணிகளை அடுக்க துவங்கினாள் மிதிலா.
குளித்து முடித்து வந்தான் ஸ்ரீராம்.
"இந்த விஷயத்தை எப்படி சால்வ் பண்ண போறீங்க?" என்றாள்.
"கையாடல் பண்ண மேனேஜரை பிடிக்கிற வரைக்கும் நம்ம சும்மா இருக்க முடியாது. நம்ம தான் கஸ்டமருக்கு பணத்தைக் கொடுத்து விஷயத்தை முடிச்சாகணும். இல்லன்னா நம்மளுடைய கஸ்டமரை நம்ம இழக்க வேண்டியிருக்கும்"
"முழு பணத்தையும் கொடுத்துடாதீங்க. பாதி பணத்தை கொடுத்து மெட்டீரியல் வாங்குங்க. பழைய மேனேஜரை பிடிக்கிற வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அவரை பிடிச்சா நமக்கு பணம் கிடைக்க வாய்ப்பிருக்கு. அதே நேரம், கஸ்டமரும் நம்மளை நம்புவாங்க"
சரி என்று புன்னகையுடன் தலையசைத்தான் ஸ்ரீராம். பையை எடுத்துக்கொண்டு அவன் அங்கிருந்து கிளம்பினான். கையசைத்து அவனை வழி அனுப்பினாள் மிதிலா.
விமான நிலையம் வந்து சேர்ந்தவுடன் மிதிலாவுக்கு ஃபோன் செய்தான் ஸ்ரீராம்.
"நான் ஏர்போர்ட்டுக்கு வந்துட்டேன். கோயம்புத்தூர் போய் சேர்ந்தவுடனே உனக்கு ஃபோன் பண்றேன்"
"சரி"
ஸ்ரீராம் அழைப்பைத் துண்டிக்க நினைக்க,
"உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு நினைச்சேன்"
சூழ்நிலை அவளுக்கு சாதகமாக இல்லாத பொழுதும் அவள் அதை கூறினாள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவள் அதை அவனிடம் கூறும் நிலையில் இல்லாத போதும் அவள் அதைக் கூறினாள். ஏனென்றால், அப்போது தான் கோயம்புத்தூரில் இருந்து திரும்பி வந்தவுடன் ஸ்ரீராம் அதை பற்றி அவளிடம் பேசுவான் என்று நினைத்தாள் மிதிலா. ஏனென்றால், அவளைக் கொன்று கொண்டிருக்கும் அந்த விஷயத்தை அவள் கொன்றுவிட நினைத்தாள்.
"சொல்லு மிதிலா. நீ என்கிட்ட எதை பத்தி வேணும்னாலும் பேசலாம்"
"எனக்கு தெரியும். அதனால தான் உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன்"
"சொல்லு..."
"இப்போ இல்ல. அது ஃபோன்ல பேசற விஷயம் இல்ல. நீங்க திரும்பி வந்த பிறகு நேர்ல பேசலாம்"
"நான் வேணும்னா வீட்டுக்கு வரட்டுமா? கோயம்புத்தூருக்கு நாளைக்கு போயிக்கிறேன்" என்றான் அவளை திகைப்புக்கு உள்ளாக்கி.
என்ன மனிதன் இவன்? எவ்வளவு பெரிய பிரச்சினை அவனுக்கு முன்னால் இருக்கிறது. அதை உதறி தள்ளி விட்டு வீட்டுக்கு வருகிறேன் என்கிறானே! அவளுக்கு தொண்டையை அடைப்பது போலிருந்தது.
"இல்ல... நீங்க அந்த பிரச்சனையை முதல்ல முடிங்க. நான் எங்கேயும் ஓடிட மாட்டேன். நான் இங்க தான் இருக்கப் போறேன்..." என்றாள்
அழகான புன்னகை அவன் முகத்தில் படர்ந்தது.
"தேங்க்ஸ்... நான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பிரச்சனையை முடிச்சிட்டு வரேன்"
"பை..."
அவர்கள் அழைப்பை துண்டித்துக் கொண்டார்கள். கோயம்புத்தூருக்கு கிளம்பிச் சென்றான் ஸ்ரீராம். ஒவ்வொரு நாளும் இரவில் மிதிலாவுக்கு ஃபோன் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அவள் அவனிடம் பேசிய விதத்தை பார்த்து அவன் அசந்து போனான். மிக நல்ல புரிதல் கொண்ட மனைவியைப் போல், அவள் அவனிடம் மிகவும் சகஜமாகப் பேசினாள். அவளது அந்த நடவடிக்கை, அவளை சீக்கிரம் நேரில் சந்திக்க வேண்டும் என்று அவனுக்குள் ஆவலைத் தூண்டியது. அவள் சகஜமாக பேசிய போதும், வார்த்தைகளை கவனமாய் தேர்ந்தெடுத்து பேசினான் ஸ்ரீராம், கண்ணியத்தை கடைப்பிடித்து.
இந்த நாட்களில், லயா படிப்படியான முன்னேற்றம் கண்டாள். அவளது நடை ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருந்தது. அது மிதிலாவுக்கு சந்தோஷத்தை தந்தது. அவள் குணமான உடன் அமெரிக்கா சென்று விடுவாள் அல்லவா? அதன் பிறகு அவள் கவனமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
இதற்கிடையில், ஸ்ரீராம் இல்லாத இந்த நேரத்திலேயே, அவளது நண்பர்கள் கொடுத்த பார்ட்டியும் முடிந்து போனது. ஸ்ரீராம் இல்லை என்ற ஒரே ஒரு குறையைத் தவிர வேறு எதுவும் இல்லை மிதிலாவுக்கு. ஸ்ரீராமை அழைத்துச் சென்று, தன் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள் அவள். ஆனால் அவனோ கோயம்புத்தூர் செல்ல வேண்டியதாகிவிட்டது.
கோயம்புத்தூரில் நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். சரியான உறக்கமும் இன்றி எடுத்த வேலையை செய்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். கடின உழைப்புக்கு என்றுமே பலன் உண்டு. அந்தப் பலன் ஸ்ரீராமுக்கு கிட்டாமல் போய்விடவில்லை.
ஒரு வாரத்திற்கு பிறகு
மிதிலாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று யாரிடமும் எதுவும் கூறாமல் வீடு திரும்பினான் ஸ்ரீராம். மிதிலா அவனை ஏமாற்றி விடவில்லை. அவனைப் பார்த்ததும் அவள் உண்மையிலேயே இன்ப அதிர்ச்சி அடைந்தாள். அதை அவள் முகத்தை பார்த்தே தெரிந்து கொண்டான் ஸ்ரீராம். அவள் அலுவலகம் செல்ல கிளம்பிக் கொண்டிருந்த போது, அறையின் உள்ளே நுழைந்தான் ஸ்ரீராம். அவனைப் பார்த்தவுடன் மிதிலாவின் முகம், பூவைப் போல் மலர்ந்தது. அது ஸ்ரீராமின் முகத்தையும் மலரச் செய்தது.
"நீங்க வந்துட்டீங்களா?" என்றாள் புன்னகையுடன்.
தன் புருவத்தை உயர்த்தி ஆம் என்று தலை அசைத்தான் ஸ்ரீராம்.
"நீங்க என்கிட்ட எதுவுமே சொல்லலையே" என்றாள் அதிருப்தியுடன்.
"வேலை முடிஞ்சிருச்சு கிளம்பி வந்துட்டேன்"
அப்பொழுது, தன் கையில் ஒரு கருப்பு நிற புடவையுடன் உள்ளே நுழைந்தாள் ஊர்மிளா.
"மிதிலா, இன்னிக்கு ராத்திரி ரிசப்ஷனுக்கு, நீயும் கருப்பு புடவை கட்டிக்கோ" என்று கூறிய அவள், ஸ்ரீராமை பார்த்தவுடன் அப்படியே நின்றாள்.
அவளைப் பின்தொடர்ந்து வந்த லட்சுமணன்,
"நீ எப்ப வந்த ராமு? நீ வரப் போறேன்னு எங்களுக்கு தெரியதே" என்றான்.
"யாரோட ரிசப்ஷனுக்கு நீங்க போறீங்க?" என்றான் அவன் கேள்விக்கு பதில் கூறாமல்.
"எங்க காலேஜ் ஃபிரண்டோட ரிசப்ஷன். இன்னைக்கு சாயங்காலம் நாங்க போறோம்"
ஸ்ரீராமின் முகம் மாறியதை கவனித்தாள் மிதிலா.
"இல்ல லக்கி. நான் வரல. நீங்க போயிட்டு வாங்க" என்றாள்.
தன்னை நினைத்து தான் அவள் அப்படி கூறுகிறாள் என்று புரிந்துகொண்டான் ஸ்ரீராம்.
"மிதிலா, நீ போயிட்டு வா. எனக்கும் ஆஃபீஸ்ல முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு. நானும் இன்னிக்கு ராத்திரி வீட்டுக்கு லேட்டா தான் வருவேன்." என்றான்.
"இல்ல பரவாயில்ல..."
"சொல்றதை கேளு. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நீ போயிட்டு வா"
"நாங்க, சாயங்காலம் ஆஃபீஸ்ல இருந்து நேரா பார்ட்டிக்குப் போறோம்" என்றான் லட்சுமன்.
"சரி... இப்போ ஆஃபீஸ்க்கு நீ என்கூட வரியா, இல்ல லட்சுமன் கூட போறியா?" என்றான் ஸ்ரீராம் மிதிலாவிடம்.
"நீங்க கிளம்பி வாங்க. நான் வெயிட் பண்றேன்" என்றாள் யோசிக்காமல்.
"சரி" என்று குளியலறையை நோக்கி நடந்தான் ஸ்ரீராம்.
லக்ஷ்மணனும், ஊர்மிளாவும் அங்கிருந்து செல்ல, ஸ்ரீராமுக்காக காத்திருந்தாள் மிதிலா. பதினைந்து நிமிடத்தில் குளித்து முடித்து தயாராகி வந்தான் ஸ்ரீராம்.
"போகலாமா?" என்றான்.
சரி என்று தலையசைத்த மிதிலா, அவனுடன் கீழ்தளம் வந்தாள். வெகு இயல்பாய் நடந்து கொண்டிருந்த லயாவை பார்த்து ஆச்சரியப்பட்டான் ஸ்ரீராம். அவனைப் பார்த்தவுடன் புன்னகைத்தாள் லயா.
"ஹாய், எப்ப வந்தீங்க?" என்றாள்.
"இப்போ தான். நீ எப்படி இருக்க?"
"நல்லா இருக்கேன். நான் திரும்ப யூஎஸ் போறேன்"
"எப்போ?"
"நாளைக்கு, இல்லன்னா, நாளன்னைக்கு... டிக்கெட் கிடைக்கிறதை பொறுத்து"
"சரி... "
மிதிலாவுடன் உணவு மேஜைக்கு வந்தான் ஸ்ரீராம்.
"சுப்ரமணி, எங்களுக்கு பிரேக்ஃபாஸ்ட் கொண்டு வா" என்ற ஸ்ரீராம், மிதிலாவின் பக்கம் திரும்பி,
"எங்க யாரையுமே காணோம்?" என்றான்.
"தினேஷ் அண்ணனோட அத்தைக்கு உடம்பு சரி இல்லாம ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க. எல்லாரும் நேத்து சாயங்காலம் கிளம்பி போனாங்க"
"என்ன ஆச்சு அவங்களுக்கு?"
"அவங்களால எதுவும் சாப்பிடவே முடியலையாம்..."
"ஓ... எல்லாரும் எப்போ திரும்ப வருவாங்க?"
"இன்னைக்கு சாயங்காலம் வந்துடுவேன்னு நர்மதா அக்கா சொன்னாங்க"
"ஓஹோ..."
"ஆமாம். நீங்க இல்லாததுனால, பரா ஆபீஸ்ல ரொம்ப பிசி ஆயிட்டார். அதனாலே பிரியாவும் அவங்க கூட கிளம்பி போய்ட்டாங்க."
"பரத் ஆஃபீசுக்கு இவ்வளவு சீக்கிரம் கிளம்பி போயிட்டானா?" என்றான் ஆச்சரியமாக.
"ஆமாம். பராவும், குகனும் சேர்ந்து நம்ம அடுத்த ப்ராஜெக்ட்காக வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க"
"தட்ஸ் கிரேட்" சாப்பிடத் துவங்கினான் ஸ்ரீராம்.
சாப்பிட்டு முடித்து இருவரும் அலுவலகம் கிளம்பினார்கள். கோயம்புத்தூரில் அவன் எப்படி பிரச்சனைகள் தீர்த்தான் என்று கேட்டு தெரிந்து கொண்டாள் மிதிலா. அங்கு நடந்தவற்றை அவளுக்கு விளக்கிக் கூறி முடித்தான் ஸ்ரீராம்.
அலுவலகம் வந்த இருவரும் அன்றைய வேலையில் கவனம் செலுத்த தொடங்கினார்கள். மிதிலாவும் அன்று மாலை திருமண வரவேற்பிற்கு சீக்கிரம் செல்ல இருந்ததால், வேலைகளை முடிக்க தொடங்கினாள். கடந்த வாரத்தின் வேலைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாய் பார்வையிட தொடங்கினான் ஸ்ரீராம்.
மிதிலாவின் அறைக்கு வந்தான் குகன்.
"ஒரு வாரமா களையிழந்து போயிருந்த ஒருத்தரோட முகம் இன்னைக்கு ரொம்ப ஓவரா ஜொலிக்குது" என்றான் கிண்டலாக.
ஒன்றும் கூறாமல் புன்னகைத்தாள் மிதிலா.
கடந்த ஒரு வாரமாக வழக்கமான சுறுசுறுப்பில்லாமல் காணப்பட்டாள் மிதிலா. இன்று அவள் பழைய நிலைக்கே திரும்பி விட்டதை பார்த்த அவன் சும்மா விடுவானா என்ன?
"இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?" என்றான் சிரிப்பை அடக்கிக்கொண்டு.
"நானும் லக்கியும் எங்க ஃப்ரெண்டோட மேரேஜ் ரிசப்ஷன் பார்ட்டிக்குப் போறோம்" என்றாள், அவன் கிண்டலை புரிந்து கொள்ளாதவள் போல.
"இதை என்னால நம்ப முடியல"
"ஏன்?"
"எப்படி எஸ்ஆர்கே உங்களை போக விட்டான்?"
"அதை உங்க எஸ்ஆர்கே கிட்டயே போய் கேட்டு தெரிஞ்சுக்கோங்க. என்னைப் போக விடுங்க. எனக்கு டைம் ஆகுது."
அங்கிருந்து நேராக ஸ்ரீராமின் அறைக்கு வந்தாள் மிதிலா.
"நான் கிளம்பறேன்"
"ஓகே. என்ஜாய் த பார்ட்டி" என்றான் ஸ்ரீராம்.
சரி என்று தலையசைத்தாள் மிதிலா.
"அவசரப்பட்டு கிளம்ப வேண்டாம். டேக் யுவர் டைம்"
"சரி. ஆஃபீசை விட்டு கிளம்பறதுக்கு முன்னாடி எனக்கு ஃபோன் பண்ணுங்க" என்றாள்.
பொருள் நிறைந்த புன்னகை பூத்தான் ஸ்ரீராம். அவன் கோயம்புத்தூருக்கு கிளம்புவதற்கு முன் அவனிடம் ஏதோ முக்கியமாக பேச வேண்டும் என்று கூறினாள் அல்லவா மிதிலா? அவள் திருமண வரவேற்பில் இருந்து திரும்பி வந்த பின் அவளிடம் அதை பற்றி கேட்பது என்று தீர்மானித்தான் ஸ்ரீராம். அவன் லக்ஷ்மணனுக்கு ஃபோன் செய்தான்.
"சொல்லு ராமு"
"ரிசப்ஷன் எப்ப முடியும்?"
"நிச்சயம் ஒன்பது மணி ஆயிடும்"
"சரி, மிதிலாவை பார்த்துக்கோ"
"ஹலோ சார்... அவ எங்களுக்கு அஞ்சு வருஷமா ஃப்ரெண்ட். அதை மறந்துடாதே. நாங்க அவளைப் பாத்துக்குவோம்"
"தட்ஸ் ஃபைன். ஆனா, அவ இப்போ என்னோட வைஃப் அப்படிங்கறத நீயும் மறந்துடாத"
"மனுஷங்களை கொஞ்சமாவது நம்பு பா..."
"பை..." அழைப்பை துண்டித்தான் ஸ்ரீராம்.
திருமண வரவேற்பிலிருந்து மிதிலாவை அழைக்க செல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான் ஸ்ரீராம். அதனால், குளித்து விட்டு செல்லும் எண்ணத்துடன் ஏழரை மணிக்கே வீட்டிற்கு கிளம்பி சென்றான்.
அதேநேரம், மிதிலாவும் வரவேற்பில் இருந்து கிளம்பினாள். அவளுடைய மனம் திருமண வரவேற்பில் நிலைக்கவில்லை. அவள் மனம் ஸ்ரீராமை சுற்றி வந்தது. ஸ்ரீராம் வீட்டுக்கு வரும் போது, அவள் வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைத்தாள். அதனால் சீக்கிரமே கிளம்பி விட்டாள். அவளைப் பார்த்துக் கொள்ளும்படி ஸ்ரீராம் கூறியிருந்ததால், அவளுடனே லக்ஷ்மணனும் ஊர்மிளாவும் கூட கிளம்பி விட்டார்கள்.
ஸ்ரீராம் வீட்டுக்கு வந்த போது அங்கு ஒருவரும் இல்லை. தினேஷின் அத்தையை பார்ப்பதற்காக சென்ற யாரும் இன்னும் திரும்பி வரவில்லை போலிருக்கிறது. தனது அறைக்குச் சென்று குளித்து, அவன் வழக்கமாய் அணியும் கோட், சூட்டை தவிர்த்து, பேண்ட் ஷர்ட் அணிந்து தயாரானான்.
அவன் குளியலறையை விட்டு வெளியே வந்த போது, அவனது அறையில் லயா இருப்பதை பார்த்து முகம் சுருக்கினான் ஸ்ரீராம். அவனது அறையின் கதவு சாத்தி தாழிடப்பட்டிருந்தது. அவள் ஏன் அங்கு வந்திருக்கிறாள் என்று அவனுக்கு புரியவில்லை. அவளுடைய முக பாவம் அவனுக்கு நல்ல அதிர்வலையை தரவில்லை. அதேநேரம் வெளியில் இருந்து சில காலடித்தடங்களை கேட்டான் ஸ்ரீராம். அவன் குடும்பத்தார் திரும்பி வந்து விட்டதை உணர்ந்தான் அவன்.
லயாவை பார்த்து அவன் *கெட் அவுட்* என்று கூறுவதற்கு முன்,
"என்னை யாராவது காப்பாத்துங்க..." என்று கத்தி அழத் துவங்கினாள் லயா.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top