6 மிதிலாவின் வருகை

6 மிதிலாவின் வருகை

வழக்கத்திற்கு மாறாக, அன்று அதித ஆர்வத்துடன் இருந்தான் ஸ்ரீராம். மிதிலா வேலையில் சேரப் போகிறாளா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள அவனுக்கு ஆவலாக இருந்தது. அவளைப் பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாது என்பதால், அவளுடைய முடிவு என்னவாக இருக்கும் என்று அவனால் கணிக்க முடியவில்லை. அவள் லட்சுமணனை காதலிக்கவில்லை என்பதால், இந்த வேலையை வேண்டாம் என்று கூற அதிக வாய்ப்பு இருக்கிறது. அவன் யார் என்று தெரியாமல் தான், அவனிடம் அவள் வாக்குவாதம் செய்திருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது, ஸ்ரீராம் யார் என்று தெரிந்த பின், அவளுக்கு இந்த வேலையில் சேரும் தைரியம் இருக்காது. அதுவும், அவனுடைய நேரடி உதவியாளராக சேர நிச்சயம் தைரியம் இருக்காது.

வழக்கமாய் வரும் நேரத்திற்கு சற்று முன்னதாகவே அலுவலகம் வந்து சேர்ந்தான் ஸ்ரீராம். சர்வ சகஜமாக தனது அறைக்கு சென்றான். ஒரு புது மனிதன் அவனுக்கு வணக்கம் தெரிவித்தான். லேசாய் தன் தலையசைத்துவிட்டு நடந்தான். அந்த புது மனிதன் யார் என்று அவனுக்கு தெரியவில்லை. சிறிது நேரத்தில், அவனது அறையின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.  அவனுக்கு வணக்கம் தெரிவித்த அதே மனிதன் உள்ளே நுழைந்தான்.

"குட் மார்னிங் சார்" என்றான் அவன்.

"யார் நீ?" என்றான் ஸ்ரீராம்.

"என் பேர் ஜீவா. பரத் சாரோட பிஏ வா நான் செலக்ட் ஆகி இருக்கேன், சார். இது என்னுடைய ஜாயினிங் ஆர்டர்"

ஸ்ரீராமுக்கு முன்னாள், மேஜையின் மீது அதை வைத்தான். ஒன்றும் கூறாமல் அதில் தனது கையொப்பத்தை பதிவிட்டான் ஸ்ரீராம்.

"தேங்க்யூ சார்" பணி சேர்க்கை ஆணையை கையில் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான் ஜீவா.

இப்பொழுது பொறுமை இழந்தான் ஸ்ரீராம். நேர்முகத் தேர்வில் இரண்டாம் இடம் பிடித்தவன், பரத்துக்கு உதவியாளனாக சேர்ந்துவிட்டான் என்றால், மிதிலா என்ன ஆனாள்? 

பரபரப்புடன் உள்ளே நுழைந்தான் லட்சுமணன். மிதிலா வேலையில் சேரப் போகும் விஷயத்தை லட்சுமணன் கூற, ஆச்சரியம் அடைந்தான் குகன். அவளுக்கு, ஸ்ரீராமுடன் ஏற்பட்டிருந்த வாக்குவாதத்தை கேள்விப்பட்டு, அவனும் கூட அவள் வேலையில் சேர மாட்டாள் என்று தான் நினைத்திருந்தான். அவளுக்கு ஸ்ரீராமை பற்றி ஒன்றும் தெரியாது போலிருக்கிறது என்று நினைத்தான் அவன்.

மிதிலா, ஸ்ரீராமுக்கு உதவியாளராக சேரப் போகும் விஷயம், அலுவலகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. அதில், விஷயம் தெரியாத ஒரே ஒருவன் ஸ்ரீராம் மட்டும் தான். அவன் தான் அவனது அறையில் இருக்கிறானே...!

விஷயத்தைக் கேள்விப்பட்ட எஸ்ஆர்  நிறுவன பணியாளர்களின் ஆச்சரியத்திற்கு அளவில்லை. ஸ்ரீராமுக்கு உதவியாளராக ஒரு பெண் சேர போகிறாள் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. முக்கியமாக, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மாலினியால் நம்பவே முடியவில்லை. பரத்துக்கு தேர்வு செய்யப்பட்ட அந்தப் பெண்ணை, தன்னுடைய உதவியாளராக நியமனம் செய்து கொண்டான் ஸ்ரீராம் என்பது அவளுக்கு பேரதிர்ச்சி அளித்தது. அவளை நாம் குறை கூற முடியாது. ஸ்ரீராமின் வாழ்க்கையில் தனக்கென்று ஒரு இடத்தை கைப்பற்ற போராடும் பல பெண்களில் அவளும் ஒருத்தி. ஸ்ரீராமை போல், பார்க்க லட்சணமாக, இளமையாக, வியாபார உலகை தன் விரல் அசைவில் சுழற்றி கொண்டிருக்கும் ஒரு பணக்கார ஆண்மகனை கண்டால், அனைத்து பெண்களும் அதைத் தானே விரும்புவார்கள்...! ஸ்ரீராம், பெண்களை வெறுப்பதற்கு, இவளும் கூட ஒரு காரணம். இந்தப் பெண்ணின் கண்ணியமற்ற நடவடிக்கை, அவனுக்கு சிறிதும் பிடிப்பதில்லை.

குகனுக்கு ஃபோன் செய்தான் ஸ்ரீராம்.

"குட் மார்னிங், எஸ்ஆர்கே" என்றான் குகன்.

"சின்ஹா ஃபேஷன்ஸ் ஃபைலை எங்க வச்ச?"

"அது உன்னோட கேபின்ல தான் இருக்கு"

"அது இங்க இல்ல. நீ அதை என்கிட்ட கொண்டு வந்து கொடுக்க போறியா? இல்ல, என்னோட பிஏ வர்ற வரைக்கும் நான் காத்திருக்கணுமா?" மிதிலா வருகிறாளா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் அவனுக்கு.

"நான் செக் பண்ணி பார்க்கிறேன்"

"குயிக்... "

அழைப்பை துண்டித்தான் குகன், அவனுடைய பிஏ, வருகிறாளா இல்லையா என்பதை கூறாமலேயே. அது ஸ்ரீராமை மேலும் எரிச்சலடையச் செய்தது. குகனுக்கு தெரியும், அந்த கோப்பு அவனுடைய அறையில் தான் இருக்கிறது என்பது. நேற்று மாலை, அவன் தான் அதை அங்கு வைத்திருந்தான்.

"மிதிலா, வேலையில சேரப் போறாளா இல்லையானு என்கிட்ட கேட்கலாம் இல்ல? இவனும், இவன் ஈகோவும்..." என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான் குகன்.

தனது நாற்காலியிலிருந்து எழுந்து, கண்ணாடி சுவரின் வழியாக பார்வையை ஓட விட்டான் ஸ்ரீராம். அந்த அலுவலகம் முழுவதும் நிறைய சிசிடிவி கேமராக்கள் இருந்த போதிலும், தனது அலுவலகத்தை அவ்வப்போது நோட்டமிட்டுக் கொண்டே இருப்பான் ஸ்ரீராம். அவனை சிசிடிவி கேமரா என்றும், ஹெட்மாஸ்டர் என்றும் அவனது அலுவலகத்தில் பெயரிட்டு அழைத்தார்கள். அவன், எப்போது எங்கு வந்து நிற்பான் என்று யாருக்கும் தெரியாது. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறையாவது அந்த அலுவலகத்தை வட்டமிட்டு விடுவான் அவன்.

அப்போது, அவனது பார்வை, அந்த அலுவலகத்துள் நுழைந்த மிதிலாவின் மீது விழுந்தது. நம்ப முடியாமல் தன் கண்களை சுருக்கினான் ஸ்ரீராம். அவள் முகத்தில் தவழ்ந்த புன்னகை அவனை மென்று விழுங்க செய்தது. அவளிடம் தெரிந்த கம்பீரத்தின் சாயல், ஸ்ரீராமை அசைத்து  தான் பார்த்தது.

நேராக குகனின் முன் சென்று நின்றாள், காட்டன் சுடிதாரை உடலிலும்,  புன்னகையை முகத்திலும் அணிந்திருந்த மிதிலா.

"குட்மார்னிங், குகன் சார். இப்போ நான் என்ன செய்யணும்?" என்றாள்.

"நம்ப கம்பெனியோட அக்ரிமென்டில் சைன் பண்ணிட்டு, ஜாயினிங் ஆர்டர்ல நம்ம எம்டி கிட்ட சைன் வாங்கணும்"

"ஓகே"

எஸ் ஆர் ஃபேஷன்ஸுடனான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டாள் மிதிலா.
 
"இது உங்களோட ஜாயினிங் ஆர்டர். எஸ்ஆர்கே கிட்ட சைன் வாங்குங்க"

"ஓகே"

"ஆல் தி பெஸ்ட்"

"தேங்க்யூ"

புன்னகை மாறாமல் ஸ்ரீராமின் அறையை நோக்கி நடந்தாள். அவள் சிறிது கூட பதட்டமின்றி காணப்பட்டது, அதிசயமாய் இருந்தது குகனுக்கு. அவளைப் பார்க்கும் போதே ஜில்லென்ற உணர்வு ஏற்பட்டது. அந்த அலுவலகத்தில் இருந்த அனைவரது கண்களும் அவள் மீதே இருந்தது. ஏன் இருக்காது? ஸ்ரீராமை நேருக்கு நேர் நின்று சந்திக்கப் போகும் முதல் பெண் ஆயிற்றே அவள்...!
 
ஸ்ரீராமின் அறைக்கதவை தட்டினாள் மிதிலா. ஸ்ரீராமிடமிருந்து திடமான *கம் இன்* வந்தது. உள்ளே நுழைந்த அவள், அவன் கணினியில் எதையோ தட்டச்சு செய்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்.

"குட் மார்னிங் சார்" என்றாள் மிதிலா.

"டேக் யுவர் சீட்" என்றான் தன் கண்களை கணினியின் திரையில் இருந்து நீக்காமல்.

"பரவாயில்ல, சார். நான் நிக்கிறேன்"

"உக்காருங்க... இந்த ஒரு நாள் தான் நீங்க என் முன்னாடி உட்கார போறிங்க... இதுக்கு அப்புறம், என் முன்னாடி உட்கார்ற சந்தர்ப்பம் உங்களுக்கு எப்பவுமே கிடைக்காது..." என்றான் செருக்குடன்.

ஒரு நொடி முகத்தை சுளித்துவிட்டு அவன் எதிரில் அமர்ந்தாள், ஸ்ரீராம் என்றால் யார் என்று அறியாத அந்தப் பெண். தனக்கு முன்னால் இருந்த பேப்பர் வெயிட்டை லாவகமாய் உருட்டினான் ஸ்ரீராம்.

"நீங்க என்ன நினைக்கிறீங்க மிஸ் ஆனந்த்...? நம்ம இதுக்கு முன்னாடி ஒரு மோசமான சூழ்நிலையில சந்திச்சிருக்கோம்..."

அவன் முழுதாய் கூறி முடிக்கும் முன்,

"கருணாகரன் ஜூனியர், பர்சனல் விஷயத்தோட ப்ரொஃபஷனல் விஷயத்தை எப்பவுமே கலக்க மாட்டார்னு நான் கேள்விப்பட்டேன்" என்றாள் கூலாக.

சில நொடி ஸ்தம்பித்துப் போனான் ஸ்ரீராம். இப்படி ஒரு பதிலை, அவன் அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவனைப் பற்றி அவள் தெரிந்து வைத்திருக்கிறாள் போல் தெரிகிறது. அவள் கூறியதற்கு எந்த முக்கியத்துவமும் வழங்காதவனைப் போல அடுத்த கேள்வியைக் கேட்டான்.

"அக்ரிமென்டில் இருந்த கிளாசை படிச்சி பாத்திங்களா?"

"எஸ் சார்..."

"நெக்ஸ்ட் சிக்ஸ் மந்த்ஸ், உங்களுடைய ப்ரொஃபிஷியன்சி பீரியட். நீங்க ஒரு நாள் கூட லீவு எடுக்க கூடாது. சண்டேஸ்லயும், கவர்ன்மென்ட் ஹாலிடேஸ்லயும் நீங்க வேலை செய்ய வேண்டிய அவசியமில்ல. 10 மணிக்கு முன்னாடி நீங்க ஆஃபீஸ்ல இருக்கணும். ஒரு நிமிஷம் லேட்டா வந்தாலும், ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். தவிர்க்க முடியாத காரணத்தால, நீங்க ஒரு நாள் லீவு எடுத்தா, ரெண்டு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். இந்த ஆறு மாசம் வரைக்கும், உங்களுக்கு வேலை செய்ய எந்த டைம் லிமிட்டும் கிடையாது. உங்களுக்கு அஸைன் பண்ண வேலையை, எவ்வளவு நேரமானாலும் நீங்க முடிச்சு தான் ஆகணும்... ஐ மீன், 24*7 நீங்க வேலை செய்யணும்"

அவன் பேச்சை வெட்டினாள் மிதிலா.

"24*6... சண்டே வேலை செய்ய வேண்டாம்னு நீங்க சொன்னீங்க சார்" என்றாள்.

அவளை, ஊடுருவும் பார்வை பார்த்தான் ஸ்ரீராம்.

"இது ஒரு ஃபேஷன் கம்பெனி... அதுவும் நம்பர் ஒன் ஃபேஷன் கம்பெனி... அதுல வேலை செய்ற நீங்க, இந்த மாதிரி சாதாரண டிரஸ்ஸில் வரக்கூடாது" என்றான் அவளை இக்கட்டான சூழ்நிலையில் இருத்தி விட்டதாக எண்ணி.

"நீங்க, உங்க கம்பெனிக்கு ஆளுங்கள, அவங்களுடைய திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறதா நான் நெனச்சேன். ஆனா நீங்க, திறமையை விட வெளித்தோற்றத்திற்கு தான் அதிக மரியாதை கொடுக்குற மாதிரி தெரியுது. நான் உங்க கம்பெனியோட சாதாரண எம்ப்ளாயி. நான் உங்க கம்பெனியோட *மாடலும்* கிடையாது, நான் உங்க கம்பெனியோட ஃபேஷன் ஷோவில் *கேட்வாக்கும்* பண்ண போறதும் இல்லன்னு நினைக்கிறேன்" என்றாள்.

தனது அதிருப்தியை வெளியில் காட்டிக் கொள்ளாமல்,

"நீங்க உங்க டிரெஸ்ஸிங்ஸை மாத்தி தான் ஆகணும்னு நான் சொன்னா என்ன செய்வீங்க?" என்றான்.

"என்னுடைய வேலையை நான் ரிசைன் பண்ணுவேன்... சிம்பிள்" என்றாள் தன் தோள்களைக் குலுக்கியபடி.

"அது சிம்பிள் இல்ல. நீங்க எங்க கம்பெனியோட அக்ரிமென்டில் சைன் பண்ணி இருக்கீங்க. அடுத்த ஒரு வருஷத்துக்கு உங்களால வேலையை ரிசைன் பண்ண முடியாது. உங்க ப்ரொஃபிஷியன்சி பீரியட் முடிஞ்ச பிறகு, அடுத்த ஆறு மாசம், நீங்க எங்க கம்பெனிக்காக வேலை செஞ்சு தான் ஆகணும்"

அந்த நிறுவனத்தில் அப்படிப்பட்ட விதிமுறை எதுவும் இல்லை. என்றாலும்,  யோசிக்காமல் கூறினான் ஸ்ரீராம்.

அதைக் கேட்டு திகைத்தாள் மிதிலா. அவள் தான் ஒப்பந்தத்தை படித்துப் பார்த்தாளே. அப்படி ஒரு விதியை அவள் படித்ததாய் ஞாபகம் இல்லையே. ஆனால், அவள் ஏற்கனவே கையெழுத்திட்டு ஆகிவிட்டது இனி அதைப் பற்றி யோசித்து பலனில்லை.

அவளது முகத்தைப் படித்துக் கொண்டிருந்த ஸ்ரீராம், அவள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு, நமுட்டு புன்னகை பூத்தான். இப்பொழுது, அவன் பேச்சுக்கு அவள் அடிபணிந்து தானே தீரவேண்டும்?

ஆனால் தன்னை சமாளித்துக் கொண்டாள் மிதிலா.

"முடியாதுன்னு சொன்னா, என்ன செய்வீங்க சார்?" என்றாள்.

அவளை அதிர்ச்சியாய் பார்த்தான் ஸ்ரீராம். இந்தப் பெண்ணுக்கு இருந்தாலும் இவ்வளவு துணிச்சலாகாது. அவனிடம் யாரும் இது வரை இப்படி பேசியது இல்லை.

"நான் எந்த டிரசை போடணும்னு, நீங்க அக்ரிமென்டில், எந்த ரூல்ஸும்  எழுதலன்னு நினைக்கிறேன்...?"

அந்தக் கேள்வி ஸ்ரீராமை வாயடைக்க செய்தது. அவள், அவனை கேட்கிறாளா அல்லது கிண்டல் செய்கிறாளா என்பது அவனுக்குப் புரியவில்லை.

"ஆம் ஐ ரைட், சார்?"

மென்று விழுங்கியபடி மீண்டும் தனது கணினியில் எதையோ தட்டச்சு செய்யத் துவங்கினான்.

"உங்களுக்கு என்னுடைய ட்ரெஸ் பிடிக்கலன்னா, என்னை வேலையை விட்டு அனுப்பிடுங்க சார்" என்று அவள் கூறியதைக் கேட்டு தட்டச்சு செய்வதை நிறுத்திவிட்டு, தன் கண்களை அவளை நோக்கி திருப்பினான்.

"என்னுடைய டாஸ்க் என்ன, சார்?"

"எஸ் ஆர் ஃபேஷன்சோட, அஞ்சு வருஷத்துக்கானா சப்ளையர்ஸ் லிஸ்ட் எடுங்க. அதை ஒவ்வொரு வருஷத்துக்கும் தனித்தனியான டேட்டா பேஸ் ஃபைலா கன்வெர்ட் பண்ணுங்க. அதை சப்மிட் பண்ணிட்டு நீங்க வீட்டுக்கு போகலாம். சப்மிட் பண்ணிட்டு *தான்* ( என்பதை அழுத்தி) வீட்டுக்கு போகலாம்" என்றான்.

"எஸ் சார்" என்று கூறிவிட்டு அவனது அறையை விட்டு வெளியேறினாள் மிதிலா.

அவன் கடைசியாக கூறிய வார்த்தைகள் அவளை உறுத்தியது. அந்த வேலையை முடிப்பது அவ்வளவு கடினமா என்ன? என்று எண்ணினாள் மிதிலா.

தேவையான விவரங்கள் கையில் இருந்தால், நிச்சயம் டேட்டாபேஸ் ஃபைலை உருவாக்குவது கடினமான காரியமல்ல. ஸ்ரீராமுக்கு தெரியும், வெறும் மூன்று வருடங்களுக்கான விவரங்கள் மட்டும் தான் அவர்கள் கையில் இருக்கிறது என்பது. முதல் இரண்டு வருடங்களுக்கான விபரங்களும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால், அவை அனைத்தும் ஸ்டோர் ரூமில் கிடக்கும் பழைய கோப்பில் இருக்கும் விபரங்கள். அவற்றை சேகரித்து முடிக்கவே ஒரு நாள் ஆகிவிடும். பிறகு எங்கிருந்து அவள் அதை டேட்டாபேஸ் வடிவமாய் கொடுப்பது? மிதிலாவின் நம்பிக்கையை குலைத்தே தீருவது என்பதில் முழுமூச்சாய் இறங்கியிருக்கிறான் ஸ்ரீராம், மிதிலாவின் ஆற்றலை பற்றி சரியாய் தெரியாமல்...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top