59 மிதிலாவின் மறு பக்கம்
59 மிதிலாவின் மறு பக்கம்
"என் மேல இன்டர்ஸ்ட் இல்லாத மாதிரி பேசாத மிதிலா... நீ என்னோட ஒய்ஃப். நான் யார்கிட்ட பேசுறேங்குறதை பத்தி நீ கவலைப் படனும்... நீ யார்கிட்ட பேசுறேங்குறதை பத்தி நான் நிச்சயம் கவலை படுவேன்... புரிஞ்சுதா உனக்கு?" என்றான் என் பல்லை கடித்துக்கொண்டு ஸ்ரீராம்.
அவனது கோபத்தை பார்த்து திகைப்படைந்தாள் மிதிலா. அவன் விருப்பப்படி எதை வேண்டுமானாலும் அவன் சுதந்திரமாய் செய்யலாம் என்று தானே அவள் கூறினாள்...? இவ்வளவு கோபப்பட அதில் என்ன இருக்கிறது? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
அவனை இவ்வளவு கோபத்துடன் அவள் எப்போதும் பார்த்ததில்லை. அவளது மருண்ட பார்வை, அவனுக்கு சங்கடத்தைத் தந்தது. தான் கொஞ்சம் அதிகப்படியாய் நடந்து கொண்டு விட்டதை புரிந்து கொண்டு, தான் பற்றியிருந்த அவளது கரங்களைப் விடுவித்தான் ஸ்ரீராம். அங்கிருந்து சென்று விட நினைத்த பொழுது, அவன் கையை பிடித்து நிறுத்தினாள் மிதிலா. அவள் பற்றியிருந்த தன் கரத்தை நோக்கி மெல்ல தன் கண்களைத் தாழ்த்திய ஸ்ரீராம், மீண்டும் தன் கண்களை, கலவரத்துடன் காணப்பட்ட அவள் முகத்தை நோக்கி உயர்த்தினான்.
"நான் அந்த அர்த்தத்துல சொல்லல" என்றாள் மென்மையாக.
அவன் செயலுக்கு அவள் பதில் அளித்த விதம் அவனை செயலிழக்கச் செய்தது.
"நான் உங்க சுதந்திரத்துக்கு ஒரு முட்டுக்கட்டையா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். ஏன்னா, இந்த கல்யாணத்தை ஒரு கால் கட்டா நீங்க நினைக்க வேண்டாம்னு தான். என்னோட விருப்பத்துக்கு ஏத்த மாதிரி நீங்க நடக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. ஏன்னா, எது சரி எது தப்புன்னு புரிஞ்சிக்க முடியாதவர் இல்ல நீங்க. ஒரு பெஸ்ட் கம்பெனியை ரொம்ப சக்சஸ்ஃபுல்லா நடத்திக்கிட்டு வர்ற ஒரு பிஸினஸ்மேன் நீங்க. உங்களை ஒருத்தர் வழிநடத்த வேண்டிய அவசியம் இருக்கிறதா எனக்கு தோணல. நீங்க எப்படி நடந்துக்கணும்னு நான் ஏன் உங்களுக்கு சொல்லணும்? எதையாவது சொல்லி உங்களை எரிச்சல் படுத்த வேண்டாமுன்னு நெனச்சேன். ஆனா, அதை நீங்க இந்த மாதிரி எடுத்துக்குவீங்கன்னு நான் எதிர்பார்க்கல." என்றாள் மனதை வருடும் வகையில்.
அவன் மீது அவள் கொண்டிருந்த மரியாதையும், நம்பிக்கையும் அவனை பேச்சிழக்கச் செய்தது.
"இல்ல... நான் நெனச்சேன்..." என்று தடுமாறினான்.
"நான் உங்களை கஷ்டப்படுத்தி இருந்தா என்னை மன்னிச்சிடுங்க" என்றாள் வருத்தமாக.
"இல்ல, நிச்சயமா இல்ல..." என்றான் அவசரமாக, அவள் வருத்தம் தோய்ந்த முகத்தை பார்க்க முடியாமல்.
"அப்போ, எதுக்காக என் மேல அவ்வளவு கோபப்பட்டிங்க?" என்றாள் கவலையாக.
ஏன் இப்படி நடந்து கொண்டோம் என்று வருத்தமாய் போனது ஸ்ரீராமுக்கு.
"வந்து மிதிலா...( என்று பெருமூச்சு விட்டவன் ) நான் இப்படித் தான், சில சமயம் சட்டுன்னு என்னோட டெம்பரை லாஸ் பண்ணிடுவேன்..."
அவனைப் பார்த்து மென்று விழுங்கினாள்.
"முக்கியமா, என்னை இக்னோர் பண்றதை என்னால பொறுத்துக்க முடியாது... "
"நான் உங்களை இக்னோர் பண்ணலையே..." என்றாள் அவன் கண்களை சந்தித்தவாரு.
"நீ பண்ணல... ஆனா நீ பேசினது எனக்கு அப்படி தோணுச்சு..."
"நான் அதை வேணும்னு செய்யல"
"நீ என் மேல அப்செட் ஆயிட்டியா?" என்றான் மென்மையான குரலில்.
அவள் இல்லை என்று தலை அசைத்தாள்.
"ஏன்? ஏன் என்கிட்ட நீ அப் செட் ஆகல?"
அவனை விசித்திரமாய் பார்த்தாள் மிதிலா. என்ன கேள்வி இது?
"நான் தப்பு பண்ணும் போது என்கிட்ட அப்செட் ஆகு. உன்னோட உரிமைக்காக என்கிட்ட சண்டை போடு. தேவையில்லாம நான் உன்கிட்ட கத்தும் போது என் மேல கோவப்படு. உனக்கு இதெல்லாம் செய்ய உரிமை இருக்கு..."
களுக் என்ற சிரிப்பு மென்மையாய் அவள் தொண்டையிலிருந்து வெளிவந்தது. அவள் ஏன் சிரிக்கிறாள் என்ற அர்த்தம் புரியவில்லை ஸ்ரீராமுக்கு.
"எதுக்காக சிரிக்கிற?"
"எதிர்காலத்துல உங்க நிலைமை என்ன ஆகப்போகுதுன்னு நினைச்சு சிரிச்சேன்" என்றாள் புன்னகையுடன்.
"எனக்கு புரியல..."
"இப்போ என்னை எந்த விஷயத்தை எல்லாம் செய்ய சொல்றீங்களோ, அதே விஷயத்துக்காக ஃபியூச்சர்ல நீங்க எரிச்சலாக போறீங்க." என்றாள் சிரிப்பை அடக்கிக்கொண்டு.
"நீ அப்படியா நினைக்கிறே?"
ஆமாம் என்று தலையசைத்தாள்.
"ஏன் உனக்கு அப்படித் தோணுது?"
"ஆரம்பத்துல, ஆர்வக்கோளாறில் எல்லாரும், எல்லாத்தையும் பேச தான் செய்யுறாங்க... நாளாக ஆக, எல்லாம் வரம்பு மீறி போறதா நெனச்சி கோபப்படுவாங்க"
"எங்க அம்மாவும், அப்பாவும் இருபது வருஷம் ஒன்னா சேர்ந்து வாழ்ந்த பிறகு கூட எவ்வளவு ஒற்றுமையா இருந்தாங்கன்னு உனக்கு தெரியுமா?" என்றான் அமைதி தோய்ந்த குரலில்.
"அப்படியா? " என்றாள் ஆச்சரியமாக.
"ஆமாம்... எப்பவுமே ரெண்டு பேரும் ஒன்னாவே இருக்கணும்னு நினைப்பாங்க"
"ஸோ ஸ்வீட்..."
"அவங்க பிள்ளையா இருக்கறதால, நானும் அப்படித் தான் இருப்பேன். நீ அதை பார்க்க தான் போற" என்றான் நம்பிக்கையுடன்.
"பாக்கலாம்..."
"என்னை நீ சேலஞ்ச் பண்றியா?" என்றான் ஸ்ரீராம்.
ஆமாம் என்று தலையை அசைத்தபடி,
"அப்படித் தான் வச்சுக்கங்களேன்..." என்றாள் மிதிலா.
"என்னை குறைச்சு எடை போடாதே... "
"நீங்களும் என்னை குறைச்சு எடை போடாதீங்க. நான் உங்க அம்மா மாதிரி இல்ல" என்றாள் வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு.
"அப்படின்னா என்ன அர்த்தம்?" என்றான் முகத்தை சுளித்து.
"நான் உங்க அம்மாவை மாதிரி நல்ல பொண்ணு இல்ல. உங்களை தொந்தரவு பண்ணுவேன்... எரிச்சல் படுத்துவேன்... கோவப் படுத்துவேன்..."
அவள் பேச்சை துண்டித்து,
"...அப்செட் பண்ணுவ... ட்ராபிள் பண்ணுவ... டார்ச்சர் பண்ணுவ... அந்த லிஸ்ட் முடிஞ்சு போச்சா, இன்னும் வேற ஏதாவது இருக்கா?" என்றான் கிண்டலாக.
"நான் சொன்னதை நம்பலையா நீங்க?"
இல்லை என்று தலையசைத்தான் ஸ்ரீராம் தன் உதடுகளை ஒன்றோடொன்று அழுத்தி.
"நான் எப்படிப்பட்டவள்னு நீங்க ரொம்ப சீக்கிரம் தெரிஞ்சுக்குவீங்க" என்று தெனாவெட்டாக கூறிவிட்டு அந்த அறையை விட்டு சென்றாள் மிதிலா, ஸ்ரீராம் முகத்தில் புன்னகையை தவழ விட்டு.
அவனுக்கு அப்பாடா என்று இருந்தது. அவளைத் தேவையில்லாமல் சத்தம் போட்டதற்காக வருத்தப்பட்டான் ஸ்ரீராம். ஆனால் ஒரு விதத்தில் அதுவும் கூட நல்லது தான். அதனால் தான் மிதிலா முதல்முறையாக அவனிடம் மனது விட்டு பேசினாள். அவள் பேசிய விதம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படியே சாதாரணமாய் அவர்களது உறவை தொடர்வது தான் சரி என்று பட்டது அவனுக்கு. அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடலை எண்ணி புன்னகைத்தான் ஸ்ரீராம்.
"நீ எப்படிப்பட்டவள்னு நான் பாக்க தானே போறேன் மிஸஸ் ஸ்ரீராம்..." என்று எண்ணிக்கொண்டான்.
ஆனால் ஸ்ரீராமுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, மிதிலா யார் என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பு, அவனுக்கு வெகு அருகில் காத்திருந்தது என்று... அதுவும் அதே நாளில்...
சில மின்னஞ்சல்களை அனுப்பி முடித்த பின், அறையில் தனியே அமர்ந்திருந்து வெறுப்பானான் ஸ்ரீராம். மிதிலாவை தேடிக்கொண்டு தரைதளம் வந்தான். ஆனால் வரவேற்பறையில் யாரும் இல்லை. சமையலறைக்குச் சென்று தேடி பார்த்த பொழுது அவள் அங்கேயும் இல்லை. எங்கு, யாருடன் மிதிலா பேசிக்கொண்டு இருக்கிறாளோ தெரியவில்லை என்று எண்ணி பெருமூச்சு விட்டான். வேறுவழியின்றி தன் அறையை நோக்கி நடந்தான்.
அவன் படிக்கட்டில் ஏற போன அதே சமயம், கைத்தடியை ஊன்றியபடி படிக்கட்டில் இருந்து மெல்ல இறங்க முயன்று கொண்டிருந்தாள் லயா. அவள் கைத்தடி சட்டென்று நழுவ, தடுமாறி கீழே விழ போனவளை, இரு மென்மையான கரங்கள் பாதுகாப்பாய் பற்றின. அவள் விழுந்து விடுவாளோ என்று பதறிய ஸ்ரீராம், மிதிலா அவளை தாங்கிப் பிடித்ததைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டான். ஒருவேளை, மிதிலா அவளைப் பிடிக்காமல் விட்டிருந்தால், லயா நிச்சயம் ஸ்ரீராமின் மீது விழுந்திருப்பாள்.
தன்னைத் தாங்கிப் பிடித்த மிதிலாவை ஏமாற்றத்துடன் பார்த்தாள் லயா. அவளுடைய திட்டமே வேறு. அதை பாழாக்கிவிட்டாள் மிதிலா. அவள் செயற்கையாய் மிதிலாவை பார்த்து புன்னகைத்தாள்.
"பார்த்து லயா... ஏற்கனவே கால் உடைஞ்சு போயிருக்கு... விழக் கூடாத இடத்தில விழுந்தா... (என்ற போது அவளது பார்வை ஸ்ரீராமை நோக்கிச் சென்றது) மூஞ்சி முகரை எல்லாம் பேந்துடும். ஏன்னா, எல்லா நேரமும் நான் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்..." என்றாள் அவளது இடது புருவத்தை உயர்த்தி எச்சரிக்கும் தொனியில்.
அவளது முக பாவத்தை பார்த்த லயாவுக்குப் வயிற்றை கலக்கியது. ஸ்ரீராமின் மீது விழ வேண்டும் என்ற அவளுடைய எண்ணத்தை மிதிலா புரிந்து கொண்டு விட்டாளோ...?
தன் பயத்தை மென்று விழுங்கினாள் லயா. இந்த மிதிலா எங்கிருந்து வந்தாள்? சிறிது நேரத்திற்கு முன் அவள் இங்கு இல்லையே...? ஸ்ரீராமுக்கும், மிதிலாவுக்கும் இடையில் பிரச்சனையை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த லயா, ஸ்ரீராமை பார்த்தவுடன் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்தாள். கீழே விழப் போன அவளை, ஸ்ரீராம் தாங்கிப் பிடித்திருந்தால், மிதிலாவுக்கு நிச்சயம் சந்தேகம் தோன்றியிருக்கும். அவள் ஸ்ரீராமிடம் பேசிய போது, அதை பார்த்த மிதிலாவின் முகம் ஒரு நொடி மாறியதை அவள் கவனித்தாள். ஆனால், சரியான நேரத்தில் வந்து, காரியத்தை கெடுத்து விட்டாள் மிதிலா.
ஆனால், இந்த விஷயத்தில் மிதிலா நடந்து கொண்ட விதத்தை பார்த்தவுடன் ஸ்ரீராமின் முகம் ஒளிர்ந்ததை கவனிக்கவில்லை லயா. அவள் பேசியதை கேட்டு அவன் அசந்து போனான். அவள் உதிர்த்த வார்த்தையில் தான் என்ன ஒரு மிடுக்கு... அவள் எச்சரிக்கை செய்த விதத்தில் தான் என்ன ஒரு மிரட்டல்... மிதிலா கூறியது சரி தான். அவள், அவனுடைய அம்மாவை போல் இல்லை...! அவனுடைய அம்மாவுக்கு, இப்படியெல்லாம் யாரையும் மிரட்ட தெரியாது. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் ஸ்ரீராம். மேலும் அவனுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில்,
"என்னைத் தேடி தான் வந்தீங்களா?" என்றாள் மிதிலா.
தன்னை சுதாகரித்துக் கொண்டு, ஆமாம் என்று தலையசைத்தான் ஸ்ரீராம். தன் கையிலிருந்த கைப்பேசியை காட்டி,
"எனக்கு கால் பண்ணியிருந்தா, நானே நம்ம ரூமுக்கு வந்திருப்பேனே..." என்றாள் தனது தோள்களைக் குலுக்கியவாறு.
"நீ மொபைலை எடுத்துக்கிட்டு போனியா இல்லையான்னு எனக்குத் தெரியல" என்றான்.
"சரி வாங்க போகலாம்" என்றாள் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு.
முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல் அமைதியாய் அவளை பின்தொடர்ந்தான் ஸ்ரீராம். எப்பொழுதும் அவன் முகத்தில் எந்த பாவமும் இருப்பதில்லை தான்... ஆனால் அன்று, பாவனை இல்லாத முகத்தை வைத்துக்கொள்ள அவள் சிரமப்பட வேண்டியிருந்தது.
*நான் யார் என்பதை நீங்கள் சீக்கிரம் தெரிந்து கொள்வீர்கள்* என்று அவள் கூறியதன் அர்த்தம் இது தானோ?
அவர்கள் இருவரும் செல்வதை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு நின்றாள் லயா. மிதிலா அவளிடம் காட்டிய கண்டிப்பும், ஸ்ரீராமிடம் சகஜமாய் நடந்து கொண்ட விதமும் அவளுக்கு கலக்கத்தை தந்தது. அவர்கள் உண்மையிலேயே ஒத்துப் போய் விட்டார்களா...? அவர்களுக்கு நேற்று தான் திருமணம் நடந்தது... அதுவும் மிதிலாவுக்கு விருப்பமில்லாமல் நடந்தது... எப்படி அவளை சமாதானப்படுத்தினான் ஸ்ரீராம்? அவளுக்கு எரிச்சலாக இருந்தது.
ஸ்ரீராம் /மிதிலாவின் அறை
ஸ்ரீராம் இருந்த திசையின் பக்கம் கூட திரும்பாமல், தனது கைப்பேசியை சார்ஜருடன் இணைத்தாள் மிதிலா. அவளுக்கு சங்கடமாய் இருந்தது. அவள் இவ்வளவு நாளாய் ஒளித்து வைத்திருந்த மறு *பக்கத்தை* இவ்வளவு சீக்கிரம் வெளியில் காட்ட வேண்டிவரும் என்று எதிர் பார்த்திருக்கவில்லை. *என் கணவனை தொட்டால், மூஞ்சி முகரை எல்லாம் பெயர்ந்து விடும் என்றல்லவா கூறினாள்...!* சந்தோஷமாக இருந்தது ஸ்ரீராமுக்கு. அவனது சிரிக்கும் கண்கள், அவளை பின்தொடர்ந்து கொண்டிருந்தது. அது மிதிலாவுக்கும் தெரியும். அவளிடம் பேசவேண்டும் என்று தான் அவனுக்கு தோன்றியது. ஆனால், அவள் அறையை விட்டு சென்றுவிட்டால் என்ன செய்வது?
அங்கு தட்டில் வைக்கப்பட்டிருந்த ஆப்பிளை எடுத்து, மிதிலாவின் மீது தனது பார்வையை ஓட்டியபடி அதை வெட்ட முயன்றான் ஸ்ரீராம். அவனுடைய கவனம் அந்த ஆப்பிளின் மீது இல்லாததால், அவன் வெட்டும் நேரம், அது அவன் கையில் இருந்து கீழே விழ, பழத்திற்கு பதிலாக தன் கையை லேசாய் வெட்டிக் கொண்டான். கத்தியைக் கீழே போட்டுவிட்டு, கையை உதறியபடி,
"இஸ்..." என்றான்.
அவன் கையில் ரத்தம் வழிவதை பார்த்து, பதறியடித்துக் கொண்டு அவனிடம் ஓடினாள் மிதிலா. அவன் தன் கையை உதறுவதை பார்த்து சட்டென்று அவன் கையை பற்றினாள்.
"ரத்தம் வரும் போது கையை உதறாதிங்க"
அலமாரிக்கு ஓடிச் சென்று முதலுதவி பெட்டி இருக்கிறதா என்று தேடிப்பார்த்தாள். அங்கு ஒன்று இருந்தது. அதை எடுத்துக்கொண்டு மீண்டும் ஸ்ரீராமிடம் ஓடிவந்தாள்.
"உட்காருங்க" என்றாள்.
அது ஒரு கட்டளை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. முதல் முறையாக, ஸ்ரீராம் கருணாகரன், ஒருவரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்தான், சந்தோஷமாக.
"உங்களால ஜாக்கிரதையா செய்ய முடியாதா?" என்றாள் பஞ்சினால் ரத்தத்தை துடைத்தவாறு.
அவளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதைப் பற்றிக் கவலைப்படாமல், மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பினாள்.
"உங்களுக்கு பழக்கமில்லாத வேலையை எல்லாம் ஏன் செய்யறீங்க?" என்றபடி, அவன் காயத்தில் வைத்துக்கட்ட மருந்தையும், மெல்லிய துணி சுருளும் இருக்கிறதா என்று தேடினாள்.
ஆனால், அதில் மருந்தும், அந்த மெல்லிய துணி சுருளும் இருக்கவில்லை.
"இதுல மருந்து, காஸ் எதுவுமே இல்லையே..." என்றாள் கவலையாக.
"எனக்கு இதுவரைக்கும் அடிபட்டதே இல்ல" என்று ஸ்ரீராம் கூற நினைக்க, அவளது அடுத்த செயலால் வயடைத்து போனான். அவன் சிறிதும் எதிர்பாராத வண்ணம், அவன் கையை வெட்டிக் கொண்ட கத்தியை எடுத்து, தனது துப்பட்டாவின் ஓரத்தை கிழித்து, அவன் கையில் கட்டினாள் மிதிலா.
குளியலறைக்குச் சென்று கை கழுவி கொண்டு வந்தவள், ஸ்ரீராம் வெட்ட நினைத்த ஆப்பிளை எடுத்து நறுக்கினாள்.
"இதை சாப்பிடுங்க. நான் இப்ப வரேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றாள்.
இது அனைத்தும் வெகு வேகமாய் நடந்து முடிந்துவிட்டது. தன் கையில் கட்டியிருந்த அவளது துப்பட்டா துணியை பார்த்தபடி அந்த ஆப்பிளை எடுத்து கடித்தான் ஸ்ரீராம் குறுநகையுடன். ஆனால், அவள் திடீரென்று அவனை விட்டு எங்கு சென்றாள் என்று அவனுக்கு தெரியவில்லை. ஒருவேளை மருத்துவருக்கு ஃபோன் செய்ய சென்றாளோ? இல்லை... அவளது கைபேசி இங்கு தான் இருக்கிறது. இல்லாவிட்டால் அவனுக்கு அடிபட்ட விஷயத்தை எல்லோரிடமும் கூறி, அனைவரையும் அழைத்து வரச் சென்றாளோ? அவனுக்கு திக்கென்றது. ஆனால் மிதிலா, வேப்பிலையும், மஞ்சளும் சேர்த்து, அரைத்து எடுத்துக் கொண்டு வந்த போது அவன் நிம்மதி அடைந்தான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top