58 மனமுவந்த மன்னிப்பா?

58 மனமுவந்த மன்னிப்பா?

தன்னை சுற்றி வீசிக்கொண்டிருந்த காற்று நின்று போனதை போல் உணர்ந்தான் ஸ்ரீராம். சொர்க்கலோகத்து தேவதையை போல் அவனது மனைவி வந்து நின்றால் வேறு எப்படி அவன் உணர்வான்? மெஜந்தா நிற பார்டர் இட்ட வெளிர் மஞ்சள் நிற பட்டுப்புடவையில் கொள்ளை அழகாக இருந்தாள் மிதிலா. அவனது காதருகே தன் விரலை சொடுக்கினான் குகன். தன் கண்களை சுழற்றிய ஸ்ரீராம், தன் இட புருவத்தை உயர்த்தி அவனைப் பார்த்தான்.

"மிஸஸ் எஸ்ஆர்கே சூப்பரா இருக்காங்க இல்ல?" என்று புத்திசாலித்தனமாக கேள்வி கேட்டான் குகன்.

அவன் *மிஸஸ் எஸ்ஆர்கே* என்று கூறி இருக்காவிட்டால், அவன் மிதிலாவை புகழ்ந்தது நிச்சயம் ஸ்ரீராமுக்கு பிடித்திருக்காது. மிதிலா, *ஸ்ரீராமின் மனைவி* என்று அவன் கோடிட்டு காட்டியது தான் ஸ்ரீராமை புன்னகைக்க வைத்தது.

மிதிலாவும், ஊர்மிளாவும் அமர வைக்கப்பட்டார்கள். அங்கு வந்திருந்த உறவினர்கள் அவர்களுக்கு நலங்கு வைத்தார்கள். வந்தவர்கள் அனைவருக்கும் அந்த குடும்பத்தின் புது மருமகள்கள் தங்கள் கரங்களால் மஞ்சள், குங்குமம், பூ, பழம், புடவை, அளித்து ஆசி பெற்றனர். வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதிய உணவுக்கு பின்னர், வந்திருந்த அனைவரும் ஒவ்வொருவராய் புறப்பட துவங்கினார்கள், குகன் ஒருவனைத் தவிர. அவனுக்கு பூவனம் வர நேரமே கிடைப்பதில்லை என்பதால், கிடைத்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு அனைவரிடமும் அளவளாவிக் கொண்டிருந்தான்.

பூவனம் பழைய நிலைக்கு திரும்பியது. உடை மாற்றிக் கொள்ள தனது அறைக்குச் சென்றாள் மிதிலா. குகன் கேட்ட ஏதோ ஒரு மின்னஞ்சலை அவனுக்கு அனுப்ப தன் அறைக்கு வந்திருந்தான் ஸ்ரீராம். அவளைப் பார்த்தவுடன் அவனது விரல்கள் தட்டச்சுப் பலகையில் அப்படியே நின்றது. சோபாவில் சாய்ந்து கொண்டு அவளை பார்த்து புன்னகைத்தான். அவள் அவனை கடக்க முயன்ற போது, எழுந்து நின்றான் ஸ்ரீராம்.

"நம்மளோட அடுத்த ப்ரோஜெக்டுக்கான ஃபைலை கிரியேட் பண்ணி முடிச்சுட்டியா மிதிலா?" என்றான் அவள் முகத்தை படித்தபடி.

கேள்வியையும் அவனே கேட்டு, அவள் பதில் கூறும் முன், அவள் உதட்டில் தன் ஆள்காட்டி விரலை வைத்து அவளை பேச விடாமலும் தடுத்தான் ஸ்ரீராம்.

"உடனே, எனக்கு பர்சனல் மேட்டருக்கும், ப்ரொஃபஷனல் மேட்டருக்கும் இருக்கிற வித்தியாசத்தைப் பத்தி லெக்சர்  எடுக்க ஆரம்பிச்சிடாதே." என்றான் அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில்.

அவனது எதிர்பாராத செயலால் மிதிலாவின் கண்கள் விரிவடைந்தது என்று கூறத் தேவையில்லை... உண்மையில் கூறப் போனால், அவன் கூறியது போல அவனுக்கு  பாடம் நடத்தும் எண்ணம் அவளுக்கு இருக்கவில்லை. உண்மையிலேயே அந்த ப்ராஜக்டை பற்றித் தான் அவள் அவனுக்கு பதில் கூற விழைந்தாள். அவள் முக பாவத்தை பார்த்து தன் விரலை மெல்ல விலக்கினான் ஸ்ரீராம். அவன் தன் விரலை எடுத்து விட்ட பின்பும் கூட, மிதிலா அவனையே தான் பார்த்துக்கொண்டு நின்றாள். விரலை சொடுக்கி, அவளை சுயநினைவுக்கு கொண்டு வந்தான் ஸ்ரீராம்.

"என்னை அப்படி பார்க்காதே மிதிலா... நீ என்னை ரசிக்கிறேன்னு நான் நினைச்சுக்குவேன்..." என்றான் புன்னகையும் அல்லாத, சிரிப்பும் அல்லாத இடைப்பட்ட ஒன்றை இதழில் ஏந்தி.

சங்கடத்துடன் தலை தாழ்த்தினாள் மிதிலா.

"நான் உன்கிட்ட ஏதோ கேட்டேன்..." என்றான்.

"நான் அந்த ஃபைலை முடிச்சிட்டேன். நாளன்னைக்கு சப்மிட் பண்ணிடுறேன்"

"தட்ஸ் குட்..."

அவள் அங்கிருந்து செல்ல ஒரு அடி எடுத்து வைத்த போது,

"மிதிலா, நீ இன்னமும் கூட, நம்ம பர்சனல் விஷயத்தையும், புரொஃபஷனல் விஷயத்தையும் கலந்து பார்க்க முடியாதுன்னு நினைக்கிறாயா?" என்றான் தீவிரமாய் யோசிப்பது போல முகத்தை வைத்துக்கொண்டு.

அவள் இல்லை என்று தலை அசைத்தாள்.

"குட்... அது தான் எனக்கு வேணும்"

அவள் மீண்டும் அங்கிருந்து செல்ல முயன்றாள். மறுபடியும் அவளை தடுத்தான் ஸ்ரீராம். தனது கைகளை கட்டிக் கொண்டு , தன் புருவத்தை உயர்த்தி என்ன? என்பது போல் நின்றாள், அவன் வேண்டுமென்றே தான் அவளை உடைமாற்ற விடாமல் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து. அவள் தைரியமாய் நின்றதைப் பார்த்து சற்று தடுமாறித் தான் போனான் ஸ்ரீராம்.

"இந்த புடவைல நீ ரொம்ப அழகா இருக்க..." என்றான் தன்னை சுதாகரித்துக் கொண்டு.

 மிதிலாவின் கட்டப்பட்ட கரங்கள், அனிச்சையாய் தாழ்ந்தன.

"உனக்கு நம்ம கல்யாண புடவை பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன்" என்று வேண்டுமென்றே அந்தப் புடவையைப் பற்றி பேசி அவள் முகத்தை கவனித்தான்.

ஆனால் அவன் எதிர் பார்க்காத வண்ணம், நேர்மையான பதிலை கூறினாள் மிதிலா.

"எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த ஸாரியை லைட் வெயிட்டா டிசைன் பண்ணதுக்கு தேங்க்ஸ்" என்றாள் அவனை ஆச்சரியப்படுத்தும் வகையில்.

"லிப்ஸ்டிக் வாங்கி கொடுத்ததுக்கு தேங்க்ஸ் சொல்ல மாட்டியா?" என்றான் கிண்டலாக.

"நான் யூஸ் பண்ற பொருளுக்கு மட்டும் தான் தேங்க்ஸ் சொல்லுவேன்" என்றாள் பயமில்லாமல்.

"அப்படின்னா, அதை நீ யூஸ் பண்ண போறது இல்லையா?" என்றான் முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு.

மிதிலாவின் இதயம் வேகமாய் துடிக்க துவங்கி விட்டிருந்தாலும், அவள் இல்லை என்று தலை அசைத்தாள்.

"ஃப்யூச்சர்ல கூட யூஸ் பண்ண மாட்டியா?"

"நான் அதை யூஸ் பண்ணா என்ன?" என்றாள் திடமாய்.

அவளுக்கு பதில் கூறாமல் பளிச்சென்று சிரித்தான் ஸ்ரீராம். அந்த சிரிப்பு அவள் வயிற்றை மத்தால் கடைந்தது. அதற்கு மேல் அங்கு நிற்காமல் தனது உடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் ஓடினாள் மிதிலா. தன் மனதில் நினைத்ததை, அவள் புரிந்து கொண்டு விட்டாள் என்று புரிந்து கொண்டு சிரித்தான் ஸ்ரீராம்.

அப்பொழுது அவனது கைபேசி அழைக்கவே, அதை எடுத்துப் பார்த்தான். அந்த அழைப்பு, பூவனத்தில் இருந்த குகனிடம் இருந்து வந்தது.

"சொல்லு குகா"

"நான் கிளம்பறேன் எஸ்ஆர்கே"

"ஏண்டா?"

"எங்க பாஸ், அவரோட பிரியமான மனைவிக்காக எங்க ஆஃபீஸுக்கு லீவ் விட்டுட்டாரு. ஆனா, எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு தெரியுமா உனக்கு?"

"எனக்கு எந்த வேலையும் இல்லையா?" என்றான் சிரித்தபடி.

"உனக்கு என்னப்பா...? உன்னோட திறமைசாலியான பிஏ வை வச்சி எல்லா வேலையையும் முடிச்சிடுவ... என்னை மாதிரியா?" என்றான் கிண்டலாக.

"ஷட் அப், மேன்... நம்ம ஆஃபீஸுக்கு நாளைக்கு போகலாம்...  இப்போ இங்கே இரு"

"நாளைக்கா? நீ தான் ரெண்டு நாள் லீவு  கொடுத்திருக்கியே..." என்றான் குழப்பத்துடன் குகன்.

"நாளைக்கு காலையில மிதிலா அவங்க அம்மா வீட்டுக்கு போறா. அப்போ நான் ஃப்ரீயா தான் இருப்பேன். உனக்கு தான் தெரியுமே, என்னால வீட்டுல சும்மா உட்கார்ந்து இருக்க முடியாதுன்னு... அதனால, நாளைக்கு காலையில ஆஃபீசுக்கு போகலாம்னு இருக்கேன்"

"ஓ அப்படியா...? அது சரி, கேக்கறேன்னு தப்பா நினைச்சுக்காத. மிதிலா வீட்டில் இல்லாததால நீ ஃப்ரீயா இருப்பேன்னு சொன்னியே... அவங்க வீட்ல இருந்தா, அப்படி என்ன உன்னை பிஸியா வச்சிருப்பாங்க?" என்றான் கிண்டலாக.

"கண்டிப்பா நான் தப்பா தான் நினைப்பேன். ஏன்னா, என்னோட வைஃப் இருந்தா நான் ஏன் பிஸியா இருப்பேன்னு  உன்கிட்ட நான் சொல்லவேண்டிய அவசியமில்ல... புரிஞ்சுதா?"

"புரிஞ்சது"

"போகாதே, இரு..."

"அப்படின்னா நீ கீழ வா"

தன் கண்களை சுழற்றியபடி குளியல் அறையின் கதவை நோட்டமிட்டான் ஸ்ரீராம்.

"சரி, இரு வரேன்"

அழைப்பைத் துண்டித்து விட்டு அங்கிருந்து சென்றான். அவன் வெளியே வந்த போது, கைத்தடியின் உதவியோடு லயா மெல்ல நடக்க பழகிக் கொண்டு இருந்தாள். வழக்கம் போல அவளுக்கு எந்த முக்கியத்துவமும் வழங்காமல், கீழ்தளம் நோக்கி நகர்ந்தான் ஸ்ரீராம்.

அப்போது,

"ஐ அம் சாரி..." என்று லயா கூறியதைக் கேட்டு நின்றான்.

"நான் உங்களை ரொம்ப தொல்லைப்படுத்திட்டேன். தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க" என்றாள் அவள்.

சரி என்று தலையசைத்துவிட்டு அவன் அங்கிருந்து செல்ல நினைத்த போது,

"கங்க்ராஜுலேஷன்ஸ்... நீங்க விரும்பின பொண்ணே உங்களுக்கு லைஃப் பார்ட்னரா கிடைச்சிருக்காங்க" என்றாள் புன்னகையுடன்.

அவளிடம் தெரிந்த இந்த அதிரடி மாற்றத்தை நம்பவே முடியவில்லை ஸ்ரீராமால். அவள் உண்மையிலேயே மாறி விட்டாளா, அல்லது மாறியது போல் நடிக்கிறாளா? அவளது அடுத்த வார்த்தைகள் அவனுக்கு சற்று நம்பிக்கை அளித்தது.

"எனக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு"

"கங்க்ராஜுலேஷன்ஸ்" என்று முதல் முறையாய் அவளுக்கு மதிப்பளித்து பேசினான் ஸ்ரீராம்.

"தேங்க்ஸ்... உங்க ஒய்ஃப் ரொம்ப அழகா இருக்காங்க"

மெல்லிய புன்னகையுடன் தலையசைத்தான் ஸ்ரீராம்.

"நான் அவங்ககிட்ட கூட மன்னிப்பு கேட்கணும்னு நினைச்சேன். ஆனா, எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு. நான் மன்னிப்பு கேட்டேன்னு அவங்ககிட்ட சொல்றீங்களா?"

சரி என்று தலையசைத்தான் ஸ்ரீராம்.

"நீங்களும், மிதிலாவும் என்னோட கல்யாணத்துக்கு வரணும். வருவீங்களா?"

அவளை ஆச்சரியமாய் பார்த்தான் ஸ்ரீராம். யாராவது இப்படி தலைகீழாக மாறி விட முடியுமா?

"நான் போறேன். எனக்கு கால் வலிக்குது" என்றாள் வலி நிறைந்த புன்னகையுடன்.

"எதுக்காக தேவையில்லாம அலைஞ்சுகிட்டு இருக்க?" என்றான் எதார்த்தமாய்.

"நடந்தா தான் கால் சரியாகும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. அப்போ தானே நான் சீக்கிரமா யுஎஸ் போய் கல்யாண வேலை எல்லாம் செய்ய முடியும்...?"

ஆமாம் என்று தலையசைத்தான் ஸ்ரீராம். தனது அறையை நோக்கி மெல்ல நடந்து சென்றாள் லயா. கீழ்தளம் செல்வதற்காக திரும்பிய ஸ்ரீராம், மிதிலா தன்னை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து திடுக்கிட்டான். அவளது முகபாவம் அவனுக்கு நல்ல அதிர்வலையை ஏற்படுத்தவில்லை. அவன் லயாவுடன் பேசிக் கொண்டிருந்ததை அவள் பார்த்து விட்டாள் என்பது அவனுக்கு தெள்ளத் தெளிவாய் புரிந்தது. அவள் அவனை  தவறாக நினைத்து விட்டாளோ? தன் முகத்தில் எந்த உணர்வையும் காட்டிக் கொள்ளாமல், ஸ்ரீராமை கடந்து, ஊர்மிளாவின் அறைக்கு சென்றாள், மிதிலா.

முதல்முறையாக தன் வயிற்றில் ஏதோ நிகழ்வதை உணர்ந்தான் ஸ்ரீராம். அவனுக்கு ஏதோ தவறாய் தோன்றியது. கீழ்தளம் வந்தவன், தன்னையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்த குகனை ஏறிட்டான். ஸ்ரீராம், லயாவுடன் பேசிக் கொண்டிருந்ததை குகனும் பார்த்திருந்தான்.

"பைத்தியக்காரி மாதிரி உன் பின்னாடி சுத்திகிட்டு இருந்த ஒரு பொண்ணுகிட்ட பேசணும்னு என்ன அவசியம்?" என்று உரிமையோடு அவனை கடிந்து கொண்டான்  குகன்.

"என்னை தொல்லை பண்ணதுக்காக மன்னிப்பு கேட்டா"

" ஓ..."

"ரொம்ப வருத்தப்பட்டு பேசினா"

"ஓஹோ"

"அவளுக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு"

"நிஜமாவா?" என்றான் குகன் சந்தோஷமாக.

"ஆமாம்"

"இது உண்மையிலேயே நல்ல விஷயம் தான்"

"சந்தேகமில்லாமல்..."

"நீ அவகிட்ட பேசிக்கிட்டிருந்ததை மிதிலா பார்த்தாங்க"

"அவ என்ன நினைச்சாளோ... எனக்கும் ஒன்னும் புரியலை"

"கவலைப்படாதே... அவங்க புத்திசாலி.. நம்மளை மாதிரி கிடையாது" என்று சிரித்தான் குகன்.

"அவ திடீர்னு வந்து மன்னிப்பு கேட்ட உடனே எனக்கு சங்கடமா போச்சு. இல்லன்னா நான் அவகிட்ட பேசியிருக்க மாட்டேன்" என்றான் பரிதவிப்புடன்.

"எனக்கு உன்னைப் பத்தி தெரியும்"

"மிதிலாவுக்கு? அவளுக்கு என்னை பத்தி தெரியுமா?"

"நல்லாவே தெரியும்"

"ஆனா, இதுவரைக்கும் நான் என்னோட நல்ல பக்கத்தை அவளுக்கு காட்டியதே இல்ல" என்ற பொழுது அவன் குரலில் சற்றே நடுக்கத்தை உணர்ந்தான் குகன்.

"நான் பெட்டு கட்டுவேன்... இதை மிதிலா சீரியஸா எடுத்துக்க மாட்டாங்க"

அப்பொழுது, மிதிலா, ஊர்மிளாவுடன்  வருவதைப் பார்த்த குகன், ஸ்ரீராமுக்கு சைகை செய்தான்.

"ஹாய் மிதிலா" என்றான் குகன்.

புஷ்பாவுடன் அமர்ந்திருந்த லக்ஷ்மணனை நோக்கி நகர்ந்தாள் ஊர்மிளா. லயா, ஸ்ரீராமுடன் பேசியதை புஷ்பாவும் கவனிக்கத் தான் செய்தார்.

"எத்தனை தடவை எனக்கு ஹாய் சொல்லுவீங்க குகா?" என்றாள் மிதிலா.

"ஆக்சுவலி, எஸ்ஆர்கே உங்ககிட்ட ஏதோ பேசணுமாம்" என்று அவனை கோர்த்து விட்டு பல்லை காட்டி சிரித்தான் குகன்.

மிதிலா, ஸ்ரீராமை கேள்விக்குறியுடன் பார்க்க, அங்கிருந்து நகர்ந்தான் குகன்.

"வந்து... அந்த பொண்ணு என்கிட்ட மன்னிப்பு கேட்டா"

"எந்த பொண்ணு?" என்றாள் புரியாமல்.

"ப்ரியாவோட தங்கச்சி"

"ஓஹோ"

"உன்கிட்டயும் மன்னிப்பு கேட்டதா சொல்ல சொன்னா"

சரி என்று தலையசைத்தாள் மிதிலா.

"நீ என்கிட்ட அப்செட்டா இல்லைன்னு நினைக்கிறேன்..."

"நான் எதுக்கு அப்செட்டா இருக்க போறேன்?"

"அந்த பொண்ணுகிட்ட பேசினதுக்காக..."

"நீங்க அதைப் பத்தி கவலைப்பட வேண்டியதில்ல. நீங்க, உங்க இஷ்டத்துக்கு யார்கிட்ட வேணும்னாலும் பேசுங்க... நான் அதுல தலையிட மாட்டேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள் மிதிலா.

அவள் அதை முழுமனதோடு கூறினாளா, அல்லது அந்தப் பெண்ணிடம் அவன் பேசியதை கண்ட மனவருத்தத்தில் கூறுகிறாளா என்று அவனுக்கு புரியவில்லை. பெண்களைப் புரிந்து கொள்வது என்பது முடியாது என்று தோன்றியது அவனுக்கு. முதல் முறையாக ஸ்ரீராம் கருணாகரன், ஒரு விஷயம் தன்னால் *முடியாது* என்று நினைத்தான்.

அதன் பிறகு தங்கள் அறைக்கு வரவே இல்லை மிதிலா. லக்ஷ்மணன், ஊர்மிளாவுடன் தீவிரமாய் எதையோ பற்றி பேசிக் கொண்டிருந்தாள். அது ஸ்ரீராமுக்கு எரிச்சலூட்டியது. அவள் வேண்டும் என்றே அதை செய்வதாய் நினைத்தான் ஸ்ரீராம். ஆனால் மிதிலா, தங்கள் கல்லூரி நண்பர்கள் இணைந்து அவர்களுக்கு ஒரு விருந்து கொடுக்க இருந்ததைப் பற்றி கான்ஃபரன்ஸ் காலில் கலந்து பேசிக் கொண்டிருந்தாள்.

"பார்ட்டியை சண்டேல வெச்சா மட்டும் தான் என்னால் வரமுடியும்" என்றாள் மிதிலா.

"பாரு, மிதிலாவுக்கு அவங்க கம்பெனியோட டர்ன் ஓவர் மேல அவ்வளவு அக்கறை. அதனால தான் ஆஃபீஸுக்கு ஒரு நாள் கூட லீவு போட மாட்டேங்குறா" என்றாள் ஒரு பெண்.

"ஆமாம் எங்க பாஸ், அதாவது மிதிலாவுடைய ஹஸ்பண்ட் ரொம்ப ஸ்ட்ரிக்ட்" என்றான் லக்ஷ்மன்.

ஞாயிற்றுக்கிழமை அன்று பார்ட்டியை வைத்துக்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. அனைவரும் ஒரு மனதாய் ஒப்புக்கொண்டார்கள். ஏனென்றால், பெரும்பாலானவர்கள் வேலைக்கு செல்பவர்களாக இருந்ததால், ஞாயிற்றுக்கிழமை அனைவருக்கும் ஒத்துப் போனது.

தனது அறையில் தவித்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். அப்படி என்ன அவள் தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறாள்? இந்த லக்ஷ்மணனுக்கு கொஞ்சம் கூட விவஸ்த்தையே இல்லையா? திருமணத்திற்கு முன்பு தான், எப்பொழுது பார்த்தாலும் மிதிலாவுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான். அவளுக்கு திருமணம் ஆகி விட்ட பின்பு கூடவா அதையே செய்ய வேண்டும்?  இவர்கள் இப்படியே தொடர்ந்தால் அவன் கதி என்ன ஆவது?

தனது கைப்பேசியை எடுத்து லக்ஷ்மணனுக்கு ஃபோன் செய்தான். உடனே எடுத்து பேசினான் லக்ஷ்மன்.

"உனக்கு கொஞ்சமும் அறிவில்லையா?"

"என்ன ஆச்சி ராமு?"

"இவ்வளவு நேரமா அப்படி என்ன தான் டா பேசிகிட்டு இருக்கீங்க?"

"எங்க ஃபிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து எங்களுக்கு பார்ட்டி கொடுக்க போறாங்க"

"எப்போ பார்ட்டி?"

"வர்ற சண்டே"

"மிதிலா எங்க?"

"இப்ப தான் போனா"

"சரி" என்று அவன் அழைப்பை துண்டிக்க, அதே நேரம் அறைக்குள் நுழைந்தாள் மிதிலா.

"மிதிலா ஒரு நிமிஷம்"

அவனைப் பார்த்தபடி நின்றாள் மிதிலா.

"இங்க பாரு மிதிலா, நீ என்கிட்ட அப்செட்டா இருந்தா அதை என்கிட்ட சொல்லு. நீ முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு இருந்தா எனக்கு பிடிக்காது"

"நான் எப்போ முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு இருந்தேன்?" என்றாள் குழப்பமாக.

"அந்த பொண்ணு என்கிட்ட மன்னிப்பு கேட்டான்னு நான் உன் கிட்ட சொன்னேன்"

"ஆமாம் சொன்னிங்க..."

"அவ என்கிட்ட மன்னிப்பு கேட்டதால தான் நான் அவகிட்ட பேசினேன். இல்லனா நான் பேசி இருக்க மாட்டேன்"

"நான் தான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லிட்டேனே... அது உங்களோட விருப்பம்... நீங்க என்னைப் பத்தி கவலைப்பட...."

அவள் அந்த வாக்கியத்தை கூறி முடிக்கும் முன், அவள் மேற் கரங்களை பற்றி அவளைத் தனருகில் இழுத்தான் ஸ்ரீராம்.

"என் மேல இன்டர்ஸ்ட் இல்லாத மாதிரி பேசாத மிதிலா... நீ என்னோட வைஃப். நான் யார்கிட்ட பேசுறேங்குறதை பத்தி நீ கவலைப் படணும். நீ யார்கிட்ட பேசுறேங்குறதை பத்தி நான் நிச்சயம் கவலை படுவேன். புரிஞ்சுதா உனக்கு?" என்றான் என் பல்லை கடித்துக்கொண்டு.

அவனது கோபத்தை பார்த்து திகைப்படைந்தாள் மிதிலா. அவன் விருப்பப்படி எதை வேண்டுமானாலும் அவன் சுதந்திரமாய் செய்யலாம் என்று தானே அவள் கூறினாள்...? இவ்வளவு கோபப்பட அதில் என்ன இருக்கிறது? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top