57 அக்கறை

57 அக்கறை

ஸ்ரீராம் உணர்ச்சிவசப்பட்டு, மிதிலா பார்ப்பது அது தான் முதல் முறை. அவள் தன்னையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்ததால் புன்னகைத்தான் ஸ்ரீராம்.

அப்பொழுது ஸ்ரீராமுடைய கைபேசி, ஒரு குறுஞ்செய்தியை சுமந்து வந்து குரல் கொடுத்தது. அந்த குறுஞ்செய்தி குகனிடம் இருந்து வந்தது. அதைப் படித்தவுடன், ஸ்ரீராமின் முகத்தில் குறுநகை பூத்தது.

மிதிலா அங்கிருந்து கிளம்ப முற்பட்ட போது,

"மிதிலா, ஒரு நிமிஷம்" என்றான் ஸ்ரீராம்.

தன் புருவங்களை உயர்த்தி, என்ன? என்பது போல் பார்த்தாள் மிதிலா.

"லக்ஷ்மனோட உதடு எப்படி வீங்கிச்சி?" என்று அவள் எதிர்பாராத கேள்வியை வீசினான் ஸ்ரீராம்.

மிதிலாவின் கண்கள் பாப்கார்ன் பொறிவது  போல் பொறிந்தது. இப்படி ஒரு கேள்வியை ஸ்ரீராமிடமிருந்து ஒரு நாள் தான் எதிர்கொள்ள கூடும் என்பதை அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவன் விரித்த வலையில் விழுந்து விடாமல் தன்னை சுதாகரித்துக் கொள்ள முயன்ற மிதிலா,

"அவன் கட்டிலில் இடிச்சிக்கிட்டானாம்" என்றாள் திக்கி திணறி.

"நான் உண்மையான காரணத்தை கேட்டேன்... லட்சுமண் மத்தவங்ககிட்ட சொன்ன பொய்யை இல்ல..." என்று மனதை அள்ளும் புன்னகை சிந்தினான் ஸ்ரீராம்.

"எனக்கு எப்படி தெரியும்?" என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

"உனக்கு தெரியும்னு எனக்கு தெரியும்"

"இல்ல... எனக்கு தெரியாது" என்றாள்.

"பொய் சொல்ல முயற்சி பண்ணாத. உண்மை என்னன்னு உன் முகமே சொல்லுது"

மென்று விழுகினாள் மிதிலா.

"நீ ஊர்மிளாவை பார்த்து பண்ண சேட்டையை நான் கவனிச்சேன்"

அங்கிருந்து  அவள் ஓடிச் செல்ல நினைத்த போது, தன் கரத்தை நீட்டி அவளை தடுத்தான் ஸ்ரீராம்.

"லட்சுமன் ரொம்ப லக்கி... தன்னோட ஒய்ஃப்கிட்ட இருந்து அப்படி ஒரு காயத்தை வாங்க... இல்ல?" என்றான் வெண்ணை போல் வழுக்கிச் செல்லும் குரலில்.

அவன் குரல் ஒலித்த விதம், அவள் வயிற்றை கலக்கியது. இது அவர்களுக்கு திருமணம் ஆன முதல் நாள். முதல் நாளே அவன் இப்படியெல்லாம் வம்பு செய்ய ஆரம்பித்தால், வரப்போகும் நாளில் அவள் என்ன செய்யப்போகிறாள்? அந்த எண்ணம் மேலும் அவளுக்கு கலக்கத்தை தந்தது. ஸ்ரீராமின் அடுத்த வரிகள் அவளை நடுங்கச் செய்தன.

"அதுக்காக நான் அதிர்ஷ்டம் இல்லாதவன்னு சொல்லல. எனக்கு இப்போ அப்படி நடக்காமல் இருக்கலாம்... எல்லா நாளும் அப்படியேவா போயிடப் போகுது?" என்றான்.

அவனது இந்த பக்கத்தை அவளால் தாங்கவே முடியவில்லை. இதன் மூலம் அவன் கூற வருவது தான் என்ன? இதற்கு மேல் அதில் கூற என்ன இருக்கிறது? அவர்களுக்குள் நடக்காத ஒன்றை பற்றி தான் அவன் இப்படி வெட்டவெளிச்சமாய் பேசுகிறான்...!

"நான் அவசர படல... ஆனா, காத்திருக்கேன்..." என்றான்.

அவனைப் பிடித்துத் தள்ளும் நோக்கத்துடன் தனது கரங்களை அவன் நெஞ்சில் பதித்தாள் மிதிலா. இதே சூழ்நிலையை ஏற்கனவே எதிர்கொண்ட அனுபவம் இருந்ததால், அவள் செய்ய வருவதை யூகித்துக் கொண்டான் ஸ்ரீராம். சட்டென்று அவளது இரண்டு கரங்களையும் பற்றிக்கொண்டான். அவனுடைய எந்த கேள்விக்கும் அவளிடமிருந்து பதில் கிடைக்கவில்லை... அவள் பதில் கூறாவிட்டால் என்ன? அவன் கேட்ட கேள்விகள் தான் அவளை சென்று சேர்ந்து விட்டதே. அவனுக்கு அவள் பதில் கூறாவிட்டாலும், தனக்குத் தானே பதிலைத் தேடிக் கொள்வாள்.

"பரத் உன்கிட்ட லிப்ஸ்டிக்கை கொடுக்கல?"

ஆஹா... இதோ வந்துவிட்டது வினை... குகனையும், பரத்தையும், தோசையை திருப்பி போட்டு வேக வைத்ததைப் போல் இப்போது செய்துவிட முடியுமா அவளால்? எதற்காக இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் கேட்டு அவளை சங்கடத்திற்கு ஆளாக்குகிறான் ஸ்ரீராம்?

"அந்த லிப்ஸ்டிக் உன்கிட்ட தான் இருக்குனு எனக்கு தெரியும்"

அவன் கூறியதை மறுக்க நினைக்கும் முன், அடுத்து அவன் கூறிய வார்த்தைகள் அவளை வாயடைக்கச் செய்தது.

"உன்னோட ஃப்ரண்ட் அருணாவுக்கு ஃபோன் பண்ணி, நீ லிப்ஸ்டிக்கை வாங்குன விஷயத்தை கன்ஃபார்ம் பண்ணிட்டான் குகன். இப்போ தான் எனக்கு மெசேஜ் பண்ணான்." என்று நமுட்டு புன்னகை வீசினான்.

"அதை நீங்க தானே வாங்கினீங்க...? என்னமோ நான் வாங்கின மாதிரி என்னை கிண்டல் பண்றீங்க?" என்றாள் சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.

"யார் வாங்கினா என்ன? அதை யூஸ் பண்ண போறது நீ தானே?"

"நான் அதை யூஸ் பண்ண மாட்டேன்"

"ரொம்ப நல்லதா போச்சு... எனக்கு ஆர்ட்டிஃபிஷியல் கலர் பிடிக்காது" என்றான் கள்ள புன்னகையுடன்.

இதற்கு மேல் முடியவே முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டாள் மிதிலா. இங்கிருந்து எப்படி செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவளை இரட்சிக்க அங்கு வந்து சேர்ந்தாள் நர்மதா. வெளியில் இருந்தபடியே நாகரீகமாய் குரல் கொடுத்தாள் நர்மதா.

"மிதிலா..."

ஒரு நொடி கூட யோசிக்காமல் உடனே குரல் கொடுத்தாள் மிதிலா.

"வாங்க கா"

அவள் கையை விட்டு இரண்டடி பின்னால் நகர்ந்தான் ஸ்ரீராம்.

"மிதிலா, எல்லாரும் வர ஆரம்பிச்சிட்டாங்க. நீங்க ரெடியாகுங்க"

"சரிங்க அக்கா"

"ஊர்மிளா என்னோட ரூம்ல தான் ரெடியாகுறாங்க. நீங்களும் வரிங்களா?"

சரி என்று தலையசைத்துவிட்டு பரபரவென ஓடி சென்று கட்டிலின் மீது வைக்கப்பட்டிருந்த புது துணியை எடுத்துக் கொண்டாள். அதைப் பார்த்து உள்ளுக்குள் நகைத்தான் ஸ்ரீராம்.

"போலாம் கா" என்றாள்.

அவள் அங்கிருந்து செல்லும் முன் பின்னாலிருந்து அவள் கையைப் பிடித்தான் ஸ்ரீராம்.

"எப்பவும் அக்கா ரூமிலேயே இருந்திட முடியும்னு நினைக்கிறாயா?"

தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு முகத்தை இயல்பாய் வைத்தபடி கேட்டான் ஸ்ரீராம்.

"நீ மறுபடியும் இங்க தான் வரணும்... மறந்துடாத"

அவன் கையை உதறி விட்டு அங்கிருந்து ஓடினாள் மிதிலா. மறுபடியும் வரவேற்பறைக்கு சென்று குகனுடன் அமர்ந்துகொண்டான் ஸ்ரீராம்.

வரவேற்பறையில் அமர்ந்திருந்த அனைவரும் ஒரு பெண் உள்ளே வருவதை கவனித்தார்கள். அவரை தொடர்ந்து ஒரு ஆள், கையில் தூக்கி செல்லக்கூடிய வகையில் இருந்த, சிறிய அளவிலான  எக்ஸ்-ரே கருவியை தூக்கி வந்தான். லயாவின் அம்மா கீதா, அனுப்புவதாக கூறிய மருத்துவர்  இவர் தான் என்பது அவர்களுக்கு புரிந்து போனது. அவரை நோக்கிச் சென்றான் பரத்.

"நான் டாக்டர் ரோஹினி. கீதா மேடம் அனுப்பி வச்சாங்க. நான் லயாவை செக் பண்ணலாமா?" என்றார்.

"யா, ஷ்யூர்... நீங்க வருவீங்கன்னு ஆன்ட்டி சொல்லியிருந்தாங்க" என்று ப்ரியாவை தேடினான் பரத்.

பிரியா இல்லாமல் போகவே, லயாவின் அறைக்கு மருத்துவரை  அழைத்து சென்றான் பரத். அங்கு  லயாவுடன் அமர்ந்திருந்தார் புஷ்பா.

"அம்மா, லயாவை செக் பண்ண டாக்டர் வந்திருக்காங்க" என்றான் பரத்.

"நான் பார்த்துகிறேன். நீ போ"

சரி என்று தலையசைத்து விட்டு இடத்தை காலி செய்தான் பரத்.

அவர்கள் கொண்டு வந்திருந்த எக்ஸ்-ரே கருவியை வைத்து, அதன் மீது லயா, தன் காலை வைக்க உதவினார் மருத்துவர்.

"நீங்க நடக்க ஆரம்பிக்கணும்" என்றார் மருத்துவர், மருந்துகளை ஒரு சீட்டில் எழுதிய படி.

"நடந்தா ரொம்ப வலிக்கும் டாக்டர்" என்றாள் லயா போலியான பயத்துடன்.

"நடந்து தான் ஆகணும். இப்போ நடக்கலைன்னா, எலும்பு ஒன்னு சேராது"

அவர்கள் இருவரையும் அமைதியாய் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார் புஷ்பா.

"இங்க இருக்கிறவங்க என்னை ரொம்ப அக்கறையாக கவனிச்சிக்கிறாங்க. என்னை காலைக் கீழ வைக்கவே விடுறது இல்ல" என்று மறைமுகமாய் குற்றம் சாட்டினாள்.

"அவங்க இனிமே அப்படி செய்ய மாட்டாங்க" என்ற மருத்துவர் புஷ்பாவை நோக்கி திரும்பினார்.

"அவளை நடக்க விடுங்க. அவ நடக்கட்டும்"

சரி என்று தலையசைத்தார் புஷ்பா. அப்பாடா என்றானது லயாவுக்கு.

"உன்னோட கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறதா உங்க அம்மா சொன்னாங்க. நீ எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் யூஎஸ் வரணும்னு அவங்க விரும்புறாங்க." என்றார் மருத்துவர்.

"தெரியும் டாக்டர். அம்மா என்கிட்ட சொன்னாங்க"

"உன்னை இங்க இருந்து நல்லபடியா அனுப்பி வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. ஆனா, நான் சொல்றதை கேட்டு நீ நடக்கணும்"

"நிச்சயமா செய்றேன் டாக்டர்"

"அவளைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க டாக்டர். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம், அவளை நான் யுஎஸ் க்கு அனுப்பி வைக்கிறேன்" என்றார் புஷ்பா.

அவரைப் பார்த்து செயற்கையாய் புன்னகைத்தாள் லயா.

"உன்னோட கால் முழுசா குணமாகிற வரைக்கும் நீ காத்திருக்க வேண்டிய அவசியமில்ல. ஓரளவு நடக்க ஆரம்பிச்ச உடனே நீ கிளம்பலாம்" என்றார் மருத்துவர்.

மனதிற்குள் புழுங்கினாள் லயா.  எதற்காக தான் அவளுடைய அம்மா இப்படியெல்லாம் செய்கிறாரோ... இரண்டாவது மனைவியாய் இருந்தால் என்ன? அவளுக்கே அதில் எந்த பிரச்சனையும் இல்லாத பொழுது, அவளுடைய அம்மா எதற்காக இப்படி அடித்துக் கொள்கிறார்? ஸ்ரீராமை போல் ஒருவன் அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவானா? அவர்கள் பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளை, ஸ்ரீராமின் கால் தூசுக்கு ஆளாவானா? ஸ்ரீராமை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது, சுபாஷின் வசதிக்கு எந்த குறையும் இல்லை  தான்... ஆனால் அழகு? எவ்வளவு லட்சணமாய் இருக்கிறான் ஸ்ரீராம்...! அவனுடன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று அவள் கனவு கண்டு கொண்டு இருந்தாள்...! எத்தனை இரவுகள், ஸ்ரீராமை மனதில் நினைத்தபடி தலையணையை அணைத்துக் கொண்டு அவள் உறங்கி இருக்கிறாள். ஆனால் அவனை அணைக்கும் சந்தர்ப்பம் அவளுக்கு ஒரு முறை கூட கிட்டவில்லை...! ஸ்ரீராம், அவனது வாழ்க்கையை மிதிலாவுடன் வாழ போகிறான். நேற்று அவர்களுக்கு முதலிரவு. அவர்களுக்குள் எல்லாம் முடிந்து விட்டு இருக்குமோ...? அந்த எண்ணத்தை அவளால் பொறுக்கவே முடியவில்லை.

இதற்கிடையில்,

ஸ்ரீராமிடம் இருந்து தப்பித்தால் போதும் என்ற அவசரத்தில், தான் அணிய வேண்டிய நகையை எடுக்க மறந்தாள் மிதிலா. உடையை மாற்றுவதற்கு முன் அதை எடுத்து வரும்படி கூறினாள் நர்மதா. தங்களது அறைக்கு வந்த மிதிலா, அங்கு ஸ்ரீராம் இல்லாததை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள். தனது பையை திறந்து அதில் இருந்த மரத்தால் ஆன நகை பெட்டியை வெளியில் எடுத்தாள். அது அவளது அக்கா பிருந்தா, அவளுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்தது.  அதனால் அது அவளுக்கு மிகவும் பிடிக்கும். அந்த பெட்டியை எடுத்துக்கொண்டு திரும்பியவள், அவளுக்கு மிக அருகில் நின்றுகொண்டிருந்த ஸ்ரீராமை கவனிக்கவில்லை. தனது கைபேசியை சார்ஜ் செய்ய அப்பொழுது தான் அவன் உள்ளே நுழைந்திருந்தான். திடீரென்று அவனைப் பார்த்த அதிர்ச்சியில் அவள் திட்டுக்கிட, அவள் கையில் இருந்த நகைப்பெட்டி அவனது தாடையில் இடித்துக் கொண்டது. திடீரென்று ஏற்பட்ட கூர்மையான வலி, அவனை

"இஸ்ஸ்..." என்று குரல் எழுப்ப வைத்தது.

மிதிலாவுக்கு சப்தநாடியும் ஒடுங்கிப் போனது. தன் கையில் இருந்த நகை பெட்டியை கீழே வைத்துவிட்டு, அவன் முகத்தை கையில் ஏந்தி அவன் தாடையை தேய்த்துக் கொடுத்தாள்.

"ஐ அம் சாரி... நீங்க வந்ததை நான் கவனிக்கல. ரொம்ப வலிக்குதா?" என்றாள் பதட்டத்துடன்.

வலியா? அப்படி என்றால் என்ன அர்த்தம்? என்ற நிலையில் இருந்தான் ஸ்ரீராம். அவள் கை பட்டவுடனேயே அவனது வலி காற்றில் பறந்தது. *கடைக்கண் பார்வை தனை கன்னியர் காட்டிவிட்டால், மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்...* என்றார் பாரதிதாசன். மாமலையே கடுகாகி போகும் போது, சாதாரண வலி எம்மாத்திரம்? பேச்சிழந்து போனான் ஸ்ரீராம். ஏன் இருக்காது? அவனது வாழ்நாளின் அற்புதமான தருணத்தில் அல்லவா அவன் நின்று கொண்டிருக்கிறான்...! மிதிலா அவன் மீது காட்டிக்கொண்டிருந்த அக்கறை, அவன் முன்பு எப்போதும் கண்டிராதது. அவளது முகத்தில் தான் எவ்வளவு வலி...! காயம்பட்ட அவனைவிட,  அவளுக்குத் தான் அதிகம் வலிக்கிறது போலும்...! தன்னையும், தனக்கு ஏற்பட்ட வலியையும், மறந்தான் ஸ்ரீராம். தனக்காக கவலைப்பட்ட அவனது மனைவியின் அழகிய முகத்தை தவிர வேறு எதுவும் அவனுக்கு தெரியவில்லை.

அவனது வலியை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த மிதிலா, அப்போது தான்  அவனது மூர்ச்சை நிலையை கவனித்தாள். அவனது பார்வை, மென்மையாக, ஆனால் ஆழமாக அவளை ஊடுருவியது. அவனது தாடையை அழுத்தமாய் பற்றியிருந்த அவளது கரங்கள் தளர்ந்தன. தலை குனிந்தபடி அவனை விட்டு மெல்ல விலகினாள். *இந்த நேரம், இன்னும் கூட கொஞ்சம் நீடிக்கக் கூடாதா?* என்று தோன்றியது ஸ்ரீராமுக்கு. அவளது முதல் அருகாமை அவனை என்னவோ செய்தது...

நகைப் பெட்டியை எடுத்துக் கொண்டு மெல்ல நடந்தாள் மிதிலா. அவள் தன்னுடனேயே இருந்துவிடக் கூடாதா  என்ற ஏக்கத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.  கதவருகில் சென்ற மிதிலா, அவன் எதிர்பாராத வண்ணம், திரும்பி நின்று சில நொடிகள் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் அவனைப் பார்த்த அந்த பார்வை, *அவளுக்கும் கூட அவனை பிடிக்குமோ?* என்று ஸ்ரீராமை முதல் முறையாய் எண்ண வைத்தது. தனது கணவனின் கூரிய பார்வையில் தன்னை இழந்து விடாமல் இருக்க அங்கிருந்து விடுவிடுவென நடந்தாள் மிதிலா.

கட்டிலில் படுத்து கண்ணை மூடினான் ஸ்ரீராம். அவனுக்கு மிதிலாவுடன் நெருங்கி பழக வேண்டும். அதற்காகத் தான், வலிய சென்று அவளுடன் பேசும்  சந்தர்ப்பங்களை தானாகவே உருவாக்கிக் கொண்டிருக்கிறான். அவளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டதற்காக, அவன் மீது அவள் கோபமாக இருப்பாள் என்று அவன் எண்ணியிருந்தான். ஆனால் அவன் மீது அவள் வெறுப்பை காட்டவும் இல்லை, அவன் மீது கோபப்படவும் இல்லை. சற்று நேரத்திற்கு முன்பு, அவளது முகத்தில் அவள் காட்டிய பாவத்தை என்னவென்று எடுத்துக்கொள்வது என்றே புரியவில்லை அவனுக்கு. அவள் கண்களில் தெரிந்தது நிச்சயம் கோபம் அல்ல, வேறு ஏதோ...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top