56 வலையல்கள்
56 வளையல்கள்
குளியலறைக்குள், தனது அம்மாவுடன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள் லயா.
"எப்படி இந்த கல்யாணத்தை நீங்க நடக்க விட்டீங்க? ஏதாவது செஞ்சு இந்த கல்யாணத்தை நிறுத்துறேன்னு சொன்னிங்க இல்ல?"
"நான் ஏற்பாடெல்லாம் செஞ்சி தான் இருந்தேன். ஆனா, ரஞ்சித் நெருப்பு பத்த வைக்கும் போது ஸ்ரீராம் பார்த்துட்டதால, கடைசி நேரத்தில, நான் சொன்னதை செய்ய மாட்டேன்னு சொல்லிட்டான் ரஞ்சித்."
"ரஞ்சித்தை விட்டா வேற யாருமே உங்களுக்கு கிடைக்காம போயிட்டாங்களா?"
"நீ என்ன நெனச்சிக்கிட்டு இருக்க? அந்தத் தீ விபத்துக்குப் பிறகு, செக்யூரிட்டியை எவ்வளவு டைட்டா ஆக்கிட்டாங்கன்னு தெரியுமா உனக்கு?"
அதைக் கேட்டு வெறுப்படைந்தாள் லயா.
"அது மட்டும் இல்ல. நெருப்பை பார்க்கவிடாம, அந்த பொண்ணை ஸ்ரீராம் எப்படி காப்பாத்தினான்னு என்கிட்ட சொன்னான் ரஞ்சித். இந்த அளவுக்கு ஒரு பொண்ணை நேசிக்கிறவனோட காதல் உனக்கு கிடைக்கும்னு எனக்கு தோணல. அவன் அந்த பொண்ண அவன் மனசோட அடி ஆழத்திலிருந்து காதலிக்கிறான். அப்படிப்பட்ட ஆழமான காதலை மாத்தியமைக்க முடியாது"
அதைக் கேட்டு எரிச்சல் அடைந்தாள் லயா.
"அது எனக்கு தெரியாதா? அவன் யாரை காதலிக்கிறான்னு எனக்கு கவலை இல்ல. நான் அவனை காதலிக்கிறேன். அது தான் எனக்கு முக்கியம் "
"வாயை மூடு லயா. உன்னோட பைத்தியக்காரத்தனத்தை நிறுத்து. ஸ்ரீராம் ஸ்பெஷலானவன் தான். நான் அதை மறுக்கல. அதுக்காக, காதல் என்கிற பேர்ல உன்னோட வாழ்க்கை கெட நான் விடமாட்டேன். உன்னை பத்தி கொஞ்சம் கூட கவலை படாத ஒருத்தனுக்காக காத்திருக்கிறது முட்டாள்தனம்..."
"அம்மா..."
"நான் உனக்கு ஒரு நிலையான வாழ்க்கை கிடைக்கணும்னு நினைக்கிறேன். ஸ்ரீராமுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு இருந்தவன், ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் செஞ்சுகிட்டு இருக்கான். அந்தப் பொண்ணை பொத்தி பொத்தி பாதுகாக்கிறான்... இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? இதையெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா நீ?"
அவள் தான் ஸ்ரீராமை அடைய வேண்டும் என்ற வெறியில் யோசிக்கும் திறனையே இழந்து விட்டு இருக்கிறாளே...!
"நான் சொன்னா சொன்னது தான். நான் உன்னுடைய கல்யாணத்தை சுபாஷ் கூட நிச்சயம் பண்ணப் போறேன். உனக்கு அதுல சம்மதமா இல்லையான்னு எனக்கு கவலை இல்ல. நீ அமெரிக்காவுக்கு திரும்பி வா"
"இங்க இருக்கிறவங்க எல்லாரும் என்னுடைய கால் உடைஞ்சதா நினைச்சுக்கிட்டு இருக்காங்க. இப்போ எப்படி நான் வர்றது? அவங்க என்னை சந்தேகப் பட மாட்டாங்களா?" என்றாள் மெல்லிய குரலில்.
"அதை பத்தி நீ கவலைப் பட தேவையில்ல. நாளைக்கு நான் அங்க ஒரு டாக்டரை அனுப்புறேன். அவங்க சொல்றதை கேட்டு நீ நடந்தா போதும்"
"அம்மா, எனக்கு ஒரு கடைசி வாய்ப்பு கொடுங்களேன்" என்று கெஞ்சினாள்.
"உண்மையை சொல்லனும்னா, என்னோட மகள், இரண்டாம் தாரமா வாழ்க்கைப்படுறதுல எனக்கு விருப்பமில்ல. அந்த சாபம் என்னோட போகட்டும். நீ உன்னுடைய வாழ்க்கையை கௌரவமா வாழணும். அவ்வளவு தான்"
"இந்தியாவில் ஸ்ரீராமுக்கு ரொம்ப பெரிய கவுரவம் இருக்கு..."
"இப்போ அவன், வேற ஒருத்தியோட புருஷன். அவனோட கவுரவம் எவ்வளவு பெரிசா இருந்தாலும் அது உனக்கு தேவையில்ல" அழைப்பைத் துண்டித்தார் லயாவின் அம்மா.
மிகபெரிய ஏமாற்றமடைந்தாள் லயா. அவளுக்கு மிகப்பெரிய துணையாக இருந்த அவளுடைய அம்மா இப்படி பின்வாங்குவார் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. இந்த தோல்வியை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வெட்கமே இல்லாமல் அவள் ஸ்ரீரமின் பின்னால் அலைந்தாள். அவள் இந்தியா வந்தது அவனது கவனத்தைத் தன் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காக தான். அது ஒரு போதும் நிகழவில்லை என்பது வேறு விஷயம்... அவனுக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒரு பெண், அவனை தன் வலையில் விழுத்தி, அவனை தன்னிடமிருந்து பறித்துக் கொண்டு விட்டாள். இந்தியாவை விட்டு செல்லும் முன், அவர்கள் இருவருக்கும் சரியான பாடம் கற்பிக்க வேண்டும், என்று சபதம் மேற்கொண்டாள் லயா.
சமையலறையில்
உப்பில் கை வைப்பதோடு நிற்காமல், எந்தெந்தப் பொருட்கள் எங்கெங்கு இருக்கிறது என்று சுப்பிரமணியிடம் கேட்டு தெரிந்து கொண்டு, சமையல் வேலையை துவங்கினாள் மிதிலா.
ஊர்மிளா பதட்டத்துடன் சமையல் அறையில் நுழைந்த போது, கிட்டத்தட்ட சமையலை முடித்துவிட்டு இருந்தாள் மிதிலா. பாயாசத்திற்கு அவள் முந்திரியை வறுத்துக் கொண்டு இருந்ததை பார்த்து பெருமூச்சு விட்டாள் ஊர்மிளா.
"சாரி, பேபி... நான் தூங்கிட்டேன்" என்றாள்.
"பரவாயில்ல விடு. நீ சீக்கிரம் வந்திருந்தா மட்டும் என்ன செஞ்சிருக்க போறே?" என்று அவளைக் கிண்டல் செய்தாள் மிதிலா.
"அப்படி சொல்லாத, ஸ்வீட்ஹார்ட்... உன்கிட்டயிருந்து நான் ஏதாவது கத்துகிட்டு இருப்பேன்"
"அப்படியா? அப்படின்னா உன்னோட திறமையை மதிய சாப்பாட்டில் காட்டேன்..."
"என்னது....? மித்து செல்லம், இப்படி எல்லாம் என்னை தூக்கி நெருப்பில் போடாதே டா" என்றாள் அதிர்ச்சியுடன்.
மிதிலா அவளை பார்த்து சிரிக்க, அவளைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள் ஊர்மிளா.
"ஏய்... உன்னோட ஃபஸ்ட் நைட் எப்படி போச்சு?" என்றாள் ரகசியமாய் ஊர்மிளா.
"நல்லா போச்சி" என்றாள் சாதாரணமாய்.
"ஆனா, உன் முகத்துல எந்த வித்தியாசமும் இல்லையே... உதடு கூட வீங்கலையே..." என்றாள் அவளை மேலும் இறுக்கமாய் கட்டி அணைத்துக் கொண்டு ஊர்மிளா.
"உன் முகத்துல கூட தான் எந்த வித்தியாசத்தையும் காணோம்" என்றாள் மிதிலா புருவத்தை உயர்த்தி.
"ஆனா, லக்கி முகத்துல உன்னால வித்தியாசத்தை பார்க்க முடியும்..." என்று சிரித்தாள்.
அதை கேட்டு அதிர்ச்சியில் வாயைப் பிளந்த மிதிலா,
"அவனை என்னடி பண்ண?" என்றாள் பதட்டத்துடன்.
"நான் என்னென்னமோ பண்ணேன். ஆனா, உதட்டு காயம் மட்டும் தான் வெளியில் தெரியுது"
"அடிப்பாவி..." என்றாள் பட்டென்று அவள் தோளில் ஒரு அடி போட்டு.
"இப்போ அவன் என் புருஷன். அதை மறந்துடாத"என்றாள் உரிமையுடன்.
"கடவுளே, லக்கியை காப்பாத்து"
"வாய்ப்பில்ல ராஜா... அவன் என்கிட்ட மாட்டிக்கிட்டான்" என்று கண்ணடித்தாள் ஊர்மிளா.
தன் கண்களை சுழற்றினாள் மிதிலா.
"என் கதையை விடு... உன் வீட்டுக்காரர் நிலைமை என்ன?" என்றாள் ஊர்மிளா.
"அவர் எந்த சேதாரமும் இல்லாம, நல்லாவே இருக்கார். லக்கி மாதிரி இல்ல..."
"பாவம் அவரு" என்றாள் ஊர்மிளா பாவமாக.
தன் தலையை இடவலமாய் அசைத்தபடி பாயசத்தை ஒரு கிண்ணத்திற்கு மாற்றினாள் மிதிலா.
"இதையெல்லாம் டேபிளுக்கு கொண்டுவர எனக்கு ஹெல்ப் பண்ணு" என்றாள் ஊர்மிளாவிடம்.
"ஷ்யூர் பேபி..."
மிதிலா சமைத்த சிற்றுண்டியை, அவளுடன் சேர்ந்து உணவு மேஜைக்கு கொண்டு வந்தாள் ஊர்மிளா.
ஒவ்வொருவராக சிற்றுண்டி மேசையில் கூட ஆரம்பித்தார்கள். ஸ்ரீராம் கடைசியாய் வந்து அமர்ந்தான். மிதிலாவும், ஊர்மிளாவும் அனைவருக்கும் பரிமாறினார்கள்.
மற்ற அனைவருக்கும் பூரி, உருளைக்கிழங்கை பரிமாறிய மிதிலா, தனக்கு மிகவும் பிடித்த ரவா இட்லியை, தேங்காய் சட்னியுடன் தனக்கு பரிமாறியதை பார்த்து ஆச்சரியமாய் புருவம் உயர்த்தினான் ஸ்ரீராம்.
"வாவ், முதல் நாளே மச்சானுக்கு பிடிச்சதை சமைச்சு அசத்திட்டீங்க மிதிலா" என்றான் தினேஷ்.
"ரவா இட்லி மட்டும் இல்ல, எல்லாத்தையும் சமைச்சது மிதிலா தான்" என்றான் லட்சுமணன்.
"எல்லாம் உங்க கைவண்ணமா?" என்ற தினேஷை பார்த்து மெலிதாய் புன்னகைத்தாள் மிதிலா.
"அதுல பெருசா ஆச்சரியப்பட ஒன்னுமில்ல" என்ற குரல் கேட்டு அனைவரும் வாசல் பக்கம் திரும்ப, அங்கு நின்றிருந்தான் குகன்.
"குட்மார்னிங் எஸ்ஆர்கே"
"குட்மார்னிங்" என்றான் ஸ்ரீராம்.
"சாப்பிட வாங்க, குகா" என்றாள் மிதிலா.
"இல்ல மிதிலா. காபி மட்டும் போதும்"
"சரி, இருங்க கொண்டு வரேன்"
"இப்போ வேண்டாம். அப்புறமா சாப்பிடறேன்" என்றபடி அவர்களுடன் வந்து அமர்ந்தான் குகன்.
"அதுல பெருசா ஆச்சரியப்பட ஒன்னுமில்லைன்னு ஏன் சொன்னீங்க குகா?" என்றான் தினேஷ்.
"மிதிலாவை பத்தி உங்களுக்கு தெரியாது, மாம்ஸ். அவங்க ஏனோ தானோன்னு எந்த பொறுப்பையும் ஏத்துக்க மாட்டாங்க. எதுக்கு உள்ளேயும் காலெடுத்து வைக்கிறதுக்கு முன்னாடி, பக்காவா ப்ரிபேப்பர் ஆயிட்டு தான் வருவாங்க." என்றான் குகன்.
"அப்படியா?" என்றான் தினேஷ் ஆச்சரியமாக.
"ஆமாம்... எஸ்ஆர் ஃபேஷன்ஸ்ல சேர்றதுக்கு முன்னாடி, எஸ்ஆர்கேவைப் பத்தி தரோவா தெரிஞ்சிக்கிட்டு தான் வந்தாங்க"
சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஆச்சரியமாய் மிதிலாவைப் பார்த்தான் ஸ்ரீராம்.
"அப்படியா விஷயம்?" என்றாள் ஆர்வத்துடன் நர்மதா.
அவளைப் பார்த்து சங்கடத்துடன் சிரித்தாள் மிதிலா.
"ஆமாம் கா. ராமுவைப் பத்தி கூகுளில் சர்ச் பண்ணதோட மட்டுமில்லாம, அவனுடைய இன்டர்வியூவையும் மேகஸின்ஸ்ல தேடி தேடி படிச்சிட்டா" என்றான் லட்சுமன்.
அப்படியா விஷயம்? என்பது போல் ஸ்ரீராம் மிதிலாவைப் பார்க்க, அவள் அவன் பக்கம் திரும்பவேயில்லை.
"இந்த மேட்டர் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கே" என்றார் புஷ்பா.
"அது சரி, உன்னுடைய உதட்டுக்கு என்ன ஆச்சி, லக்கி? இப்படி வீங்கியிருக்கு?" என்றான் குகன், சிரித்து விடாமல் முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு.
பாயசத்தை கிண்ணத்தில் ஊற்றிக் கொண்டிருந்த மிதிலாவின் கைகள், அப்படியே நின்றதை கவனித்தான் ஸ்ரீராம்.
தன் விழிகளை பெரிதாக்கி, மென்று முழுங்கினாள் ஊர்மிளா. இந்த கும்பலின் நைய்யாண்டியை பற்றி மிதிலாவுக்கு தெரிந்தது தான். ஆனால், பாவம் ஊர்மிளாவுக்கு அதை பற்றி தெரியாதே...!
"நான் கட்டில் முனையில இடிச்சிக்கிட்டேன்" என்றான் லட்சுமணன்.
ஊர்மிளாவின் முகம் போன போக்கைப் பார்த்து, சிரித்து விடாமலிருக்க முயன்றாள் மிதிலா. தன் உதட்டை மடித்து, புருவத்தை உயர்த்தி, ஊர்மிளாவை பார்த்து,
*உண்மை காரணத்தை சொல்லட்டுமா?* என்பது போல் அவள் ஜாடை காட்ட, *வேண்டாம்* என்பது போல் அவசரமாய் தலையசைத்தாள் ஊர்மிளா. மெல்ல சிரித்தாள் மிதிலா. ஊர்மிளாவை கிண்டல் செய்யும் ஆர்வத்தில், தான் கண்காணிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம் என்பதை கவனிக்கத் தவறினாள் மிதிலா. அவள் முகத்தில் தவழ்ந்த புன்னகை காணாமல் போனது, ஸ்ரீராம் கள்ளப் புன்னகையுடன் தன்னை கவனித்துக் கொண்டிருந்ததை பார்த்த போது. உடனே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் மிதிலா.
அப்பொழுது பரத்தின் கைபேசி ஒலித்தது. அந்த அழைப்பு அவனுடைய மாமியாரிடம் இருந்து வந்தது. அதை எடுத்துப் பேசினான் பரத்.
"ஹலோ ஆன்ட்டி..."
"ஹலோ பரத், பிரியாவுக்கு ஃபோன் பண்ணப்போ அவ எடுக்கல. அதனால தான் உங்களை கூப்பிட்டேன்"
"அவளோட ஃபோன் ரூம்ல இருக்கு. நாங்க டிபன் சாப்பிட கீழ வந்தோம்"
"பரவாயில்ல. உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் ஃபோன் பண்ணேன். லயாவுக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு"
"அப்படியா... ரொம்ப சந்தோஷம்" என்றான் உண்மையான சந்தோஷத்துடன்.
"ஆமாம். சுபாஷ் தான் மாப்பிள்ளை"
"ரொம்ப நல்ல சாய்ஸ்"
"தேங்க்யூ. அவ சீக்கிரம் யூஎஸ் வரணும்னு நான் நினைக்கிறேன். நாளைக்கு லயாவை செக் பண்ண டாக்டர் வருவாங்க. பிரியாவை கொஞ்சம் பாத்துக்க சொல்லுங்க"
"நிச்சயமா சொல்றேன் ஆன்ட்டி"
புன்னகையுடன் அழைப்பை துண்டித்தான் பரத்.
"உன் தம்பியோட ஃப்ரண்ட் சுபாஷ் கூட லயாவுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்காங்க" என்றான் பரத்.
மற்ற எல்லோரையும் விட நிம்மதிப் பெருமூச்சுவிட்டான் ஸ்ரீராம். அதை கவனிக்க தவறவில்லை மிதிலா.
"அப்படியா?" என்றாள் சந்தோஷமாக ப்ரியா.
"லயா சீக்கிரம் யுஎஸ் வரணும்னு நினைக்கிறாங்க"
"ஆனா, அவளுக்குத் தான் கால் உடைஞ்சியிருக்கே"
"நாளைக்கு அவளை செக் பண்ண டாக்டர் வராங்களாம்"
"ஓஹோ"
அங்கிருந்த அனைவரும் அந்த செய்தியைக் கேட்டு சந்தோஷம் அடைந்தார்கள்.
சாப்பிட்டு முடித்துவிட்டு குகனுடன் வரவேற்பறையில் அமர்ந்தான் ஸ்ரீராம். அவர்களுடன் பரத்தும் இணைந்து கொண்டான். குகனுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள் மிதிலா. பரத்துக்கு சைகை செய்தான் குகன். புரிந்துவிட்டது என்று தலையசைத்தான் பரத்.
"விஷ் யூ ஹாப்பி மேரீட் லைஃப், மிதிலா" என்றான் குகன்.
"தேங்க்ஸ் குகா" என்றாள் மிதிலா.
"நீ அவங்களை நேத்தே விஷ் பண்ணி இருக்கணும்" என்றான் பரத்.
"விஷ் பண்ணணும்னு தான் நினைச்சேன். அவங்க ரொம்ப பிசியா அழுதுக்கிட்டு இருந்தாங்க. அதனால தான் இப்ப விஷ் பண்றேன்" என்றான் கிண்டலாய்.
அவனைப் பார்த்து முறைத்தாள் மிதிலா. அதை பார்த்து சிரித்தான் ஸ்ரீராம்.
"அண்ணனுக்கு விஷ் பண்ணலையா?" என்றான் பரத்.
"அவன் சந்தோஷமா தான் இருக்கான். மிதிலா மாதிரி அவன் சோகமா இருக்கல"
"கரெக்டா சொன்ன" என்றான் பரத்.
"மிதிலாவுடைய லிப்ஸ்டிக் கலர் ரொம்ப நல்லா இருக்கு இல்ல?" என்றான் குகன் வேண்டுமென்றே. அது ஸ்ரீராமின் முகத்தில் குறுநகையை கொண்டு வந்தது.
அவர்கள் செய்ய நினைப்பது என்ன என்பதை புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு ஒன்றும் மந்த புத்தி உடையவள் அல்ல மிதிலா. அவர்கள் தான், கிண்டல், கேலி என்று வந்து விட்டால், ஓடவிட்டு துரத்தி அடிப்பார்கள் என்பது அவளுக்கு தெரியுமே. சில நொடியில் தன்னை தயார் செய்து கொண்டாள்.
"தேங்க்ஸ் குகா" என்று சகஜமாய் கூறி அவர்கள் மூவரையும் வாயடைக்கச் செய்தாள்.
"இது உங்களுக்கு எஸ்ஆர்கே கொடுத்தனுப்பிய அதே லிப்ஸ்டிகா?" என்றான் குகன்.
அவன் எதை பற்றி பேசுகிறான் என்பது புரியாதது போல முகம் சுருக்கினாள் மிதிலா.
"லிப்ஸ்டிக்கா? என்ன லிப்ஸ்டிக்?" என்றாள் ஸ்ரீராமை பார்க்காமல்.
தனது இடது புருவத்தை யோசனையுடன் உயர்த்தினான் ஸ்ரீராம். குகனும், பரத்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"நேத்து நான் உங்ககிட்ட கொடுத்தேனே..." என்றான் பரத் பதட்டமாக
"நீங்களா? எப்போ பரா?" என்றாள் படு இயல்பாக.
"உங்க வீட்டுக்கு, நலங்கு சந்தனத்தை கொடுக்க வந்தேனே அப்போ..."
"ஓஹோ... சந்தனத்தை கொண்டு வந்தது நீங்க தானா?" என்றாள், முதல் நாள், அவள், அவனைப் பார்க்கவே இல்லை என்பது போல.
தன்னை கேள்விக்குறியுடன் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீராமை பதட்டத்துடன் பார்த்தான் பரத்.
"அண்ணா, தயவு செய்து என்னை நம்புங்க. நான் நிச்சயமாக அதை மிதிலாகிட்ட கொடுத்துட்டேன்"
"என்ன கொடுத்தீங்க பரா?" என்று தன் புருவத்தை நெறித்தாள் மிதிலா.
"மிதிலா ப்ளீஸ், விளையாடாதீங்க... அண்ணன் என்னை சந்தேகப்படுறாரு" என்று கெஞ்சினான் பரத்.
அவன் முகத்தைப் பார்த்து, வந்த சிரிப்பை அடக்க போராடினாள் மிதிலா.
அப்பொழுது, நர்மதா வந்து ஸ்ரீராமையும், மிதிலாவையும் பாட்டியின் அறைக்கு வர சொல்லி அழைத்தாள். தன் சிரிப்பை அடக்கியபடி அங்கிருந்து சென்றாள் மிதிலா. யாருகிட்ட? என்பதைப் போல.
"உன்கிட்ட நான் வந்து பேசிக்கிறேன்" என்று கூறிவிட்டு மிதிலாவை பின்தொடர்ந்தான் ஸ்ரீராம்.
"சத்தியமா நான் மிதிலாகிட்ட கொடுத்துட்டேன், குகா" என்றான் பரத் பரிதாபமாக.
"மிதிலா நம்மகிட்ட விளையாடுறாங்க" என்றான் குகன் சிரித்தபடி.
"எனக்கு தெரியும்" என்றான் பாவமாக.
"இந்த விஷயத்தை மிதிலா இவ்வளவு சாதாரணமா கையாள்வாங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல."
"நம்ம அவங்களை வச்சி *தோசை* சுட நினைச்சோம். ஆனா, அவங்க தோசையை திருப்பிப் போட்டு நம்மளை வேக வச்சிட்டாங்க" என்றான் பரத்.
அதைக் கேட்டு வாய் விட்டு சிரித்தான் குகன்.
.......
பாட்டியின் அறைக்குள் நுழைந்தார்கள் ஸ்ரீராமும், மிதிலாவும். தன் கையில் இருந்த சிறிய மர டப்பாவை திறந்து, அதிலிருந்து ஒரு ஜோடி தங்க வளையல்களை எடுத்தார் பாட்டி. அதைப் பார்த்தவுடன் உணர்ச்சிவசப்பட்டான் ஸ்ரீராம்.
"மிதிலா, இந்த வளையல் ஸ்ரீராம் அம்மாவுடையது. இதை உன்கிட்ட கொடுக்கணும்னு நர்மதா விரும்புறா" என்றார் பாட்டி.
மிதிலா, நர்மதாவை பார்க்க, அவள் ஆமாம் என்று தலையசைத்தாள்.
"ஆனா அக்கா..." என்று மிதிலா ஏதோ கூற முயல,
தன் கையை நீட்டி அதை தன்னிடம் கொடுக்குமாறு கேட்டான் ஸ்ரீராம். அந்த வளையல்களை மீண்டும் அந்த பெட்டியில் வைத்து அவனிடம் கொடுத்தார் பாட்டி.
"ரொம்ப தேங்க்ஸ் கா" என்று நர்மதாவை பார்த்து கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் ஸ்ரீராம்.
அவன் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் மிதிலா.
"ராமுவுக்கு எங்க அம்மா மேல ரொம்ப பிரியம் அதிகம். நீங்க அவங்க வலையல்களை வேண்டாம்னு சொல்லிட கூடாதுன்னு தான், அவன் அதை வாங்கிக்கிட்டான். அதை உங்க கையில போட்டுக்கங்க மிதிலா" என்றாள் நர்மதா.
சரி என்று தலையசைத்த மிதிலா,
"உங்க அம்மாவுடைய நகையை போட்டுக்கணும்னு உங்களுக்கும் விருப்பம் இருக்குமே கா?" என்றாள் தயக்கத்துடன்.
"உண்மை தான்... ஆனா, எங்க ரெண்டு பேருக்கும் பொதுவான நீங்க அதை போட்டுக்கிட்டா நான், ராமு ரெண்டு பேருமே எங்க அம்மாவுடைய இருப்பை உணர்வோம்..." என்றாள் உணர்ச்சி பெருக்குடன்.
அதைக் கேட்டு அவளை விட அதிகமாய் உணர்ச்சி வசப்பட்டாள் மிதிலா. இது அவளுக்கு கிடைத்த மிகப்பெரிய அந்தஸ்தல்லவா...! அவர்களுக்குத் தான் அவள் மீது எவ்வளவு நம்பிக்கை...!
"தேங்க்ஸ் கா" என்றாள் தன்னை சுதாகரித்துக் கொண்டு.
அங்கிருந்து வெளியேறினாள் மிதிலா. வரவேற்பறையில் ஸ்ரீராம் இருக்கவில்லை. அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று தெரிந்துகொள்ள தங்கள் அறைக்குச் சென்றாள். அரைவாசி சாத்தி வைக்கப்பட்டிருந்த கதவின் இடைவெளியின் வழியாக மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தாள். அந்த வளையல்களை பார்த்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தான் ஸ்ரீராம். மெல்ல உள்ளே நுழைந்த மிதிலாவின் வருகையை அவன் உணர்ந்தான்.
"அக்கா, என்னை இந்த வளையலை போட்டுக்க சொன்னாங்க" என்றாள்.
கட்டிலை விட்டு எழுந்து நின்றான் ஸ்ரீராம். தனக்கு இருந்த அனைத்து தயக்கங்களையும் உதறித் தள்ளி விட்டு, அவனே அவள் கையில் அந்த வளையல்களை அணிவித்தான். அவனை அதை செய்யவிட்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மிதிலா.
"எங்க அம்மாவுக்கு அடுத்தபடியா நான் உன்னை ரொம்ப மதிக்கிறேன் மிதிலா. இந்த வளையலை கழட்டாத ப்ளீஸ்" என்றான்.
அவனது உடைந்த குரல், அவள் மனதை ஏதோ செய்தது.
"மாட்ட இல்ல?" என்றான்.
மாட்டேன் என்பது போல் தலையை அசைத்தாள் மிதிலா. அவள் ஏன் அதை கழட்ட போகிறாள்? அது அவள் மாமியாருடையதாயிற்றே...! அவளது கணவன் மிகவும் மதிக்கும் அவளது மாமியாருடையது...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top