55 கடினமல்ல...

55 கடினமல்ல...

ஆனந்தனிடமும், சாந்தாவிடமும் கண்ணீருடன் விடைபெற்றாள் மிதிலா.   தனது கைக்குட்டையை அவளிடம் நீட்டினான் ஸ்ரீராம். அதை அவள் மறுக்கவில்லை. அவனிடமிருந்து அதைப் பெற்று, தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள். ஸ்ரீராமுடன் பூவனம் வந்து சேர்ந்தாள் மிதிலா. புதுமணத் தம்பதியர்கள் ஆலம் சுற்றி வரவேற்கப்பட்டார்கள்.

மணமகள்கள் இருவரும், விருந்தினர் அறையில் இருக்க வைக்கப்பட்டார்கள்.

"மித்து, எனக்கு செம்ம எக்சைட்டடா" இருக்கு என்றாள் ஊர்மிளா.

அவளைப் பார்த்து செயற்கையாய் புன்னகைத்தாள் பதட்டமாயிருந்த மிதிலா.

அங்கு வந்த நர்மதா,

"நான் டென் மினிட்ஸ்ல வந்து உங்களை லட்சுமணன் ரூமுக்கு கூட்டிகிட்டு போறேன்" என்று ஊர்மிளாவிடம் கூறிவிட்டு, மிதிலாவை ஸ்ரீராமின் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

அலங்கரிக்கப்பட்திருந்த ஸ்ரீராமின் கட்டிலில் அமர வைக்கப்பட்டாள் மிதிலா.

"குட் நைட் மிதிலா" என்று நர்மதா கூற அவளைப் பார்த்து தலையசைத்தாள் மிதிலா.

மிதிலாவின் இதயம், பந்தய குதிரை போல் கட்டுக்கடங்காமல் ஓடியது. அவளது கவனம், *க்ளிக்* என்ற கதவு திறக்கும் சத்தத்தின் மேல் திரும்பியது. அறையின் உள்ளே வந்து கதவை சாத்தி தாழிட்டான் ஸ்ரீராம். தன் கட்டிலில் அமர்ந்திருந்த மதிலாவை நோக்கி வந்த ஸ்ரீராம்,

"நீ இன்னும் இந்த புடவையை மாத்தலயா?" என்றான்.

ஆம் என்று தலையை அசைத்தபடி தனது பையில் இருந்த இரவு உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு சென்றாள் மிதிலா. அவள் வருவதற்கு முன், தானும் தனது உடைகளை மாற்றிக்கொண்டான் ஸ்ரீராம். சில நிமிடங்களில் மிதிலாவும் உடை மாற்றிக் கொண்டு வந்தாள். தனது கல்யாண புடவையை அழகாக மடித்து தனது பையில் வைத்துக் கொண்டாள்.

"உனக்கு என் கூட கட்டில்ல தூங்க சங்கடமா இருந்தா, நான் சோபாவில் படுத்துகிறேன்" என்ற ஸ்ரீராமை நம்ப முடியாமல் பார்த்தாள் மிதிலா.

அவன் உண்மையிலேயே சோபாவில் தூங்க தயாரா?

"எனக்கு சோபாவில் தூங்க எந்த பிரச்சனையும் இல்ல" என்றான், அவள் முகத்தில் தோன்றிய அதிர்ச்சி நிறைந்த முகபாவத்தை கண்டு புன்னகைத்த படி.

அவனுக்கு என்ன பதில் கூறுவது என்றே புரியவில்லை அவளுக்கு. இது அவள் எதிர்பாராதது. *நீங்கள் என்னுடன் தூங்குவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை* என்றா அவள் கூற முடியும்?

"இல்ல, வேண்டாம். அவசியமில்ல" என்றாள் வேறு எங்கோ பார்த்தபடி.

"நெஜமா தான் சொல்றியா?" என்றான் உதட்டோர புன்னகையுடன்.

"ம்ம்ம்"

"சரி, நீ படுத்துக்கோ. எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு" என்று கூறியபடி தன் மடிக்கணினியை கையில் எடுத்தான்.

உண்மையில் கூறப் போனால், அவனுக்கு எந்த வேலையும் இல்லை. வேண்டுமென்றே எதையோ வலைதளத்தில் தேடிக் கொண்டிருந்தான். மிதிலா தூங்கட்டும் என்று காத்திருந்தான். ஆனால் அவளோ அவ்வளவு எளிதில் தூங்குவதாக இல்லை. தனது முதலிரவில் ஒருவன் இவ்வளவு பண்புடன் நடந்து கொள்ள முடியும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை அவள். இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் எல்லாம் கதைகளில் மட்டும் தான் சாத்தியம் என்று அவள் நினைத்திருந்தாள். ஆனால் தன்னுடைய வாழ்நாளில் அப்படிப்பட்ட ஒருவனை சந்திப்போம் என்பது அவள் நினைத்து பார்க்காத ஒன்று. அதுவும் அவள் சந்தித்த அந்த நபர் வேறுயாருமல்ல அவளது கணவன்.

கண்களை மூடுவதும், மீண்டும் கண்ணை திறந்து அவனை பார்ப்பதுமாக இருந்தாள் மிதிலா. சிறிது நேரத்திற்கு பிறகு, கண்களை மூடி தூங்க முற்பட்டாள், மறுநாள் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற நினைப்புடன்.

தனது மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு மிதிலாவை பார்த்து புன்னகை புரிந்தான் ஸ்ரீராம். ஒரு வழியாக, தன் குடும்பத்தில், தன் மனைவியாய் அடியெடுத்து வைத்து விட்டாள் மிதிலா. மிதிலா, வீழ்த்துவதற்கு சற்று கடினமானவள்
தான்... ஆனால், வீழ்த்தவே முடியாத அளவிற்கு கடினமானவள் அல்ல... அன்பால் அவளை வீழ்த்திவிடலாம்.

கட்டிலுக்கு வந்து அமர்ந்தவன், அவளது வலகையில் இருந்த அவனது பெயரை கண்டான். தன் பெயரை உண்மையிலேயே அவள் மனதார எழுதிக் கொண்டாளா? அல்லது நர்மதா கேட்டதற்காக எழுதினாளா? *நான் சோபாவில் படுத்துக் கொள்கிறேன்* என்று அவன் கூறிய பொழுது, அவள் பார்த்த நம்ப முடியாத பார்வையை எண்ணி சிரித்தான் ஸ்ரீராம். அறையின் உள்ளே வந்தவுடன் அவள் மீது பாய்ந்து விடுவான் என்று எண்ணி இருந்தாளோ?

அவளை திருமணத்திற்காக கட்டாயப்படுத்தியது என்னவோ உண்மை தான். அவனுக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத ஒரு காரணத்திற்காக அவனை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று அவள் கூறினால், அவன் வேறு என்ன தான் செய்வது? அவன், அவளை ஒரு முறை கட்டாயப்படுத்தினான். அதை மறுபடியும் செய்ய அவன் விரும்பவில்லை. எதற்காகவும்...! மிதிலாவை போன்ற ஒரு புத்திசாலிப் பெண்ணை தன் வாழ்நாளில் கண்டதில்லை ஸ்ரீராம். அவளுக்கு, யாரும், எதையும், புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவளே அனைத்தையும் புரிந்து கொள்வாள். அவள் அவனுடன் இருக்க வேண்டும்... அவனுக்கு மனைவியாக... அது தான் அவனுக்கு வேண்டும். இதோ அவள் அவனுடன் இருக்கிறாள்... அவனுக்கு பக்கத்தில்... அவனது கட்டிலில்...!

அவளுக்குப் பக்கத்தில், அவளை பார்த்தபடி படுத்துக் கொண்டான் ஸ்ரீராம். அவனுக்கு தூங்க வேண்டும் என்று தோன்றவில்லை. நாளை அலுவலகம் செல்ல வேண்டும் என்று மிதிலாவுக்கு இருந்த எண்ணம் அவனுக்கு இல்லை அல்லவா...!

மறுநாள் காலை

தூக்கத்தில் இருந்து மெல்ல கண் விழித்த ஸ்ரீராமுக்கு, வாழ்நாளில் காணக்கிடைக்காத காட்சி அவன் கண் முன் விரிந்தது. மிதிலா யோகப் பயிற்சி செய்து கொண்டிருந்தாள். சட்டென்று தன் கண்களை மூடிக்கொண்டான், அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணி. அதற்காக அவன் அவளைப் பார்க்காமல் இருந்தான் என்று கூற இயலாது. லேசாய் திறந்த கண்களால் அவளுடன் ஊடலாடிக் கொண்டிருந்தான், இன்னும் அவன் தூக்கத்தில் இருந்து எழவில்லை என்பது போல் பாவனை செய்துகொண்டு. அவள் தன் உடலை ரப்பரை போல் வளைத்து கொண்டிருப்பதை பார்த்து, முழி பிதுங்கினான் ஸ்ரீராம். மூச்சு பயிற்சியை செய்து முடித்துவிட்டு, கண்களை மூடி சற்று நேரம் அமைதியாய் அமர்ந்திருந்தாள் மிதிலா. அவளது யோகம் முடிந்துவிட்டது போல் தெரிகிறது.

கட்டிலில் எழுந்து அமர்ந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். கண்களைத் திறந்த மிதிலா, ஸ்ரீராம் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து சற்று சங்கடப்பட்டாள். எழுந்து நின்று, அவள் யோகம் செய்ய பயன்படுத்திய தரை விரிப்பை சுருட்டினாள்.

"ஜாகிங் போறதை விட யோகா செய்யறது பெட்டர்னு நினைக்கிறியா?" என்றான் ஸ்ரீராம்.

ஆமாம் என்று தலையசைத்தாள் மிதிலா.

"எப்படி?" என்றான் வேண்டுமென்றே அவளிடம்  பேச்சுக்கொடுத்து.

"நம்ம உடம்புக்கு மூச்சு தான் ஆதாரம். மூச்சு சீரா இருந்தா, உடம்பும் சரியா இருக்கும். நம்ம சொல்றதை கேட்கும்"

"ஓ..."

அந்த விரிப்பை கட்டிலுக்கு பின்னால் வைத்தாள் மிதிலா.

"அப்படின்னா எனக்கும் யோகா சொல்லிக் கொடேன்"

முகத்தில் எந்த பாவனையும் இன்றி அவனைப் பார்த்தாள், அவன் கேட்டதை அவள் எதிர்பார்திருக்காவிட்டாலும் கூட.

"சொல்லிக் கொடுப்ப இல்ல?"

ஆம் என்று தலையசைத்தாள்.

"நாளையில இருந்து...?"

அவள் மறுபடியும் சரி என்று தலையசைத்தாள்.

அப்பொழுது அவளுடைய கைபேசி, ஒரு குறுஞ்செய்தியை சுமந்து வந்து குரல் கொடுத்தது. தனது கைப்பேசியை எடுத்து, அந்த குறுஞ்செய்தியை படித்த அவள், சிலையாகிப் போனாள். அவளுடைய பார்வை, அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்த  ஸ்ரீராமிடம் அனிச்சையாய் சென்றது.

"சில காரணங்களுக்காக, எஸ்ஆர் ஃபேஷன்ஸ் அலுவலகத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது" - மேலாளர் குகன். என்று இருந்தது அந்த குறுஞ்செய்தியில்.

ஸ்ரீராமின் முகத்தில் தவழ்ந்த புன்னகை அனைத்தையும் வெட்ட வெளிச்சமாகியது. அவளை வீட்டில் இருக்க வைக்க வேண்டும் என்பதற்காக, வேண்டுமென்றே அவன் அலுவலகத்திற்கு விடுப்பு வழங்கியிருக்கிறான். தனது பையிலிருந்து ஒரு புடவையை எடுத்துக் கொண்டு, சிறு நடை நடந்து குளியலறையை நோக்கி சென்றாள் மிதிலா. குளியல் அறையின் வாசலில் நின்று அவனை திரும்பிப் பார்க்க, மாறாத புன்னகையுடன் நின்றிருந்தான் ஸ்ரீராம். அவன், எதையும் செய்யும் வல்லமை படைத்த ஸ்ரீராம்... வேறென்ன கூறுவது?

புன்னகைத்தபடி சோபாவில் அமர்ந்தான் ஸ்ரீராம். மிதிலா அவனிடம் பேசவே மாட்டாள் என்று அவன் எண்ணியிருந்தான். ஆனால் அவள் அப்படி இருக்கவில்லை. அவன் நினைத்தது சரி தான். அவள் கொண்டுள்ள புரிதல் அலாதியானது. வெகுவிரைவிலேயே அவனது வாழ்க்கைப் பயணம் சரியான பாதையில் பயணிக்கத் துவங்கி விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது அவனுக்கு.

அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தான் ஸ்ரீராம்.

"குட்மார்னிங், ராமு" என்றபடி உள்ளே நுழைந்தாள் நர்மதா

"மார்னிங் கா..."

"மிதிலா எங்க?"

"குளிச்சிகிட்டிருக்கா"

மிதிலா குளியலறையிலிருந்து வெளியே வருவதைப் பார்த்தார்கள் அவர்கள்.

"குட்மார்னிங் மிதிலா" என்றாள் நர்மதா சந்தோஷமாய்.

"குட்மார்னிங் அக்கா"

"இந்தாங்க இது தான் இன்னைக்கு நீங்க போட வேண்டிய டிரஸ்"

"தேங்க்ஸ் கா" என்று அதை நர்மதாவிடம் இருந்து பெற்றுக் கொண்டாள் மிதிலா.

"நமக்கு நெருங்கின சொந்தக்காரங்க மட்டும் உங்களுக்கு நலங்கு வைப்பாங்க. அதுக்கு முன்னாடி நீங்க கிச்சனுக்கு வந்து உப்புல கை வைக்கணும். சமைக்கணும்னு அவசியமில்ல. உப்பை தொட்டால் கூட போதும்"

சரி என்று தலையசைத்தாள் மிதிலா. ஏதாவது சமைக்க வேண்டும் என்பதை கூற நர்மதா தயங்குகிறாள் என்பதை புரிந்து கொண்டு.

"நிதானமா செய்யலாம் இன்னைக்கு தான் உங்களுக்கு ஆஃபீஸ் இல்லையே" என்று சிரித்தாள் நர்மதா.

ஸ்ரீராமை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆமாம் என்று தலையசைத்தாள் மிதிலா.

"நான் தான் சொன்னேனே... நீங்க மிஸஸ் ஸ்ரீராம். எதுக்காகவும் நீங்க கவலைப்பட வேண்டாம்னு... "

லேசாய் புன்னகைத்தாள் மிதிலா.

"கிளம்பி கீழ வாங்க" என்று கூறிவிட்டு சென்றாள் நர்மதா.

நர்மதா கொடுத்த உடையுடன் குளியல் அறைக்கு செல்ல மிதிலா நினைக்க, ஸ்ரீராம் அவளுக்கு முன்னால் நின்றிருந்ததை பார்த்து அவளும் நின்றாள்.

"நீ ஒன்னும் கவலைப்படாதே... தேவைப்பட்டா, உன்னோட சார்பா,  உன்னோட பாஸுக்கு நான் லீவு லெட்டர் அனுப்பி லீவ் வாங்குறேன்" என்று ஆளைக் கொல்லும் புன்னகை உதிர்த்தான் ஸ்ரீராம்.

"என்னை வீட்ல இருக்க வைக்கணும்னு தான் ரெண்டு நாள் லீவு கொடுத்தீங்களா?"

தன் கையை கட்டிக்கொண்டு ஆமாம் என்று தலையசைத்தான் ஸ்ரீராம்.

"இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா?"

"ஏன்?"

"நம்ம ஆபீஸோட ரெண்டு நாள் டர்ன் ஓவர் வீணா போச்சு"

"போகட்டும்... யார் அதைப் பத்தி கவலைப்பட்டா?"

"உங்களுக்கு அதைப் பத்தி கவலை இல்லையா?"

"நான் என்ன செய்யட்டும்? என் பொண்டாட்டி இரண்டு நாள்... இல்ல இல்ல... நாலு நாள் சம்பளத்தை விட தயாரா இல்ல. அதனால நான் எல்லாருக்கும் சேர்த்து ரெண்டு நாள் லீவு கொடுத்துட்டேன்"

"எனக்கு சில பொறுப்புகள் இருக்கு. எங்க அக்காவுடைய கல்யாணத்துக்காக அப்பா நிறைய கடன் வாங்கி இருக்கார். போனா போகட்டும்னு பணத்தை என்னால வீணாக்க முடியாது. தயவுசெய்து புரிஞ்சிக்கோங்க"

"புரிஞ்சிகிட்டதால தானே எல்லாருக்கும் லீவு கொடுத்தேன்...!"

"இது சுத்த..." என்று கூறாமல் நிறுத்தி பெருமூச்சுவிட்டாள்.

"பைத்தியக்காரத்தனம்னு சொல்றியா?" என்றான் கிண்டலாய்.

"நான் என்னோட சம்பளத்தை அப்பாவுக்கு கொடுக்கிறத பத்தி உங்ககிட்ட பேசணும்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்" என்றாள் தயக்கத்துடன்.

அவன் கூறியதை கேட்டு பெருமிதமாய் சிரித்தான் ஸ்ரீராம். அவனிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே அவனை தலை நிமிர்ந்து பார்த்தாள்.

"உன்னோட வாழ்க்கையில என்னை ஒரு பார்ட்டா நினைக்கிறதுக்கு ரொம்ப தேங்க்ஸ். உங்க அப்பா, அம்மாவை கவனிச்சுக்க என்கிட்ட நீ பர்மிஷன் கேட்க வேண்டிய அவசியமில்ல. உனக்கு என்ன வேணும்னாலும் நீ தாராளமா செய்யலாம்" என்றான்.

சரி என்று தலையசைத்துவிட்டு குளியலறையை நோக்கி ஓடினாள் மிதிலா. அவளது மனம் அவ்வளவு நிம்மதியாய் இருந்தது. ஸ்ரீராம்  அவளை எதற்காகவும் கட்டாயப்படுத்தாததும், அவளை விரும்பியபடி எது வேண்டுமானாலும் செய்து கொள்ள அனுமதி அளித்ததும் தான் அவளது நிம்மதிக்கு காரணம். ஏனென்றால், அப்படிபட்ட சுதந்திரம் எந்தப் பெண்ணுக்கும் அவ்வளவு எளிதாய் தன் கணவனிடமிருந்து கிடைத்து விடுவதில்லை.

குளியல் அறைக்குள் நுழைந்த மிதிலா, யோசித்தபடி நின்றாள். நர்மதா கூறியதை எண்ணிப் பார்த்தாள். இந்த உடை, நலங்கின் போது அவள் அணிய வேண்டியது என்று தானே நர்மதா கூறினாள்? அதற்கு முன், அவள் சமையலறையில் உப்பில் கை வைத்து ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினாளே... பிறகு எதற்காக அவள் உடைமாற்ற இங்கே வந்தாள்? தன் தலையில் அடித்துக் கொண்டு வெளியே வந்தாள் மிதிலா. சுவற்றில் சாய்ந்தபடி ஸ்ரீராம் நின்றிருப்பதைக் கண்டாள் அவள்.

"யாரோ ரொம்ப குழப்பமா இருக்கிற மாதிரி தெரியுது...!" என்று சிரித்தான் அவன்.

"இல்ல... வந்து..."

"ஓகே ரிலாக்ஸ்..."

அந்த உடையை கட்டிலின் மீது வைத்து விட்டு, ட்ரெஸ்ஸிங் டேபிளின் முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து, தனது நீண்ட கூந்தலை சீவ துவங்கினாள் மிதிலா. குளியலறைக்கு செல்லாமல் அங்கேயே நின்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். கண்ணாடியில் தெரிந்த அவனது உருவத்தை பார்க்காமல் இருப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது அவளுக்கு.

தலைவாரிக் கொண்டிருந்த அவளது கரம், அவன் கூறியதை கேட்டு நின்றது.

"உனக்கு ரொம்ப அழகான முடி... எனக்கு ரொம்ப பிடிக்கும். நீ அதை பின்னாமல் விடும் போது ரொம்ப அழகாக இருக்கும்..."

ஒன்றும் கூறாமல், என்ன சொல்வதென்றும் தெரியாமல், கண்ணாடியின் வழியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மிதிலா. அவளுடைய கூந்தலை அவனுக்கு பிடிக்கும் என்பது அவளுக்கு எப்படி தெரியும்? இது தானே முதல் முறை, அவன் அதைப் பற்றிக் கூறுவது...!

அதற்கு மேல் அங்கிருந்து அவளை சங்கடப்படுத்தாமல் குளியலறைக்குச் சென்றான் ஸ்ரீராம்.

வாழ்க்கையில் முதல் முறையாக, ஆசையாய் தன் கூந்தலை வருடிக் கொடுத்தாள். ஆர்வத்துடன் தலை சீவினாள் மிதிலா.  அவளது கூந்தல் அழகாக இருப்பதாய் பல பேர் கூற அவள் கேட்டிருக்கிறாள். ஆனால் இன்று, அவளுக்கு மிகவும் பெருமையாய் இருந்தது. அவளது கூந்தல், வாயை திறக்காத ஒரு சிடுமூஞ்சியையே பேச வைத்துவிட்டது அல்லவா...! சிரித்தாள் மிதிலா.

தொடரும்....

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top